Posted by: மீராபாரதி | April 27, 2014

மலையகம் – கந்தலோயா – விடியல் நோக்கி ஒரு பயணம் – பகுதி 2

Kanthaloya 116

எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடசாலைக்கு ஏழு மணிக்கே வந்து தானாகவே துப்பரவு செய்யும் மாணவன் ஒருவன்.

மலையகத்தின் பின் தங்கிய பிரதேசத்தில் பின் தங்கியி நிலையில் இருக்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு பங்களிப்பதற்காக உதவி நண்பர்கள் 2010ம் ஆண்டு வந்தார்கள். இவர்கள் புலம் பெயர்ந்த மனிதர்களிடம் சேர்த்த நிதியை மலையக மாணவர்களின் தேவைகளுக்கு பங்களிக்க விரும்பினார்கள். இதற்கான தேடலை இவர்கள் மேற்கொண்ட போது கந்தலோயா தமிழ் பாடசாலை எந்த நிலையில் இருக்கின்றது என்பதையும் அதன் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் எந்த நிலையில் கல்வி கற்பிக்கின்றார்கள் கற்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொண்டனர். ஆகவே உதவி நண்பர்கள் இந்த இடத்திற்கு வந்து இப் பிரதேசத்திலுள்ள பெற்றோர் மாணவர்கள் இணைந்திருக்கின்ற கல்வி அபிருத்திக் குழுக்களுடன் கலந்துரையாடினர். மாணவர்கள் கல்வியை இடையில் விடாது தொடர்ந்து கற்பதற்கு என்ன வேண்டும் எனக் கேட்டனர். இதன் மூலம் இவர்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து கொண்டனர்.

Kanthaloya 111

மின்சாரம் இல்லாதபோதும் விளக்கு வெளிச்சத்தில் நடைபெற்ற மாணவர் பெற்றோர் ஆசிரியர்கள் கலந்துரையாடல்

மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலில் ஒவ்வொரு பெற்றோரும் மாணவர்களும் பலவிதமான பொருட்களைக் கூறினர். ஆனால் தோட்டத்தில் தொழில் செய்கின்ற மதுவுக்கு அடிமையான கணவரையும் பத்து பிள்ளைகளையும் கொண்ட தாய் கேட்ட ஒரு விடயம் முக்கியமானதாக இருந்தது. எனது கணவர் குழந்தைகளின் கல்வியில் அக்கறையில்லாமல் இருப்பது மட்டுமல்ல கிடைக்கின்ற வருமானத்தில் பெரும் பகுதியை தானே குடிப்பதற்கு செலவு செய்துவிடுவார். நானும் எனது மகனும் உழைக்கின்ற வருமானமே நமது குடும்பத்திற்கு கிடைக்கின்றது. இந்த வருமானத்தைக் கொண்டு எனது குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடியாது. முக்கியமாக இன்னும் இரண்டு வருடங்களில் எனது மகன் சதாரண தரப் பரிட்சை எடுக்கவேண்டும். ஆனால் இந்தப் பாடாசாலையில் ஒன்பதாம் பத்தாம் தரம் இல்லை. ஆகவே அவனை அடுத்த வருடம் நகரத்திலிருக்கின்ற பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புவதற்கு என்னிடம் வசதி இல்லை. உங்களால் முடிந்தால் தரம் ஒன்பது மற்றும் தரம் பத்து வகுப்புகளை இங்கு ஆரம்பிக்க ஏதாவது முயற்சியும் உதவியும் செய்யுங்கள் எனக் கேட்டார். இந்தக் கோரிக்கை இந்தப் பாடசாலையில் மாணவர்களிடமும் சமூகத்திலும் பல மாற்றங்கள் நடைபெற வித்திட்டன. உதவி நண்பர்கள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனும் கலந்துரையாடினர். இதன் விளைவாக இரண்டு ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு கொடுக்க முடியுமாயின் மாணவர்களைப் படிப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டது. உதவி நண்பர்கள் உடன் பட பெற்றோர்களின் பங்களிப்புடன் 2012ம் ஆண்டு தரம் ஒன்பதும் 2013ம் ஆண்டு தரம் பத்தும் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன.

முதன் முதலாக சதாரணதரப் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

முதன் முதலாக சதாரணதரப் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

உதவி நண்பர்களினதும் பெற்றோர்கள் ;ஆசிரியர்களின் பங்களிப்புடன் கடந்த வருடம் 2013யில் இந்தப் பாடசாலையில் கல்வி கற்று முதன் முதலாக பதினொரு மாணவர்கள் சதாரண தர பரிட்சைக்கு தோன்றினார்கள். இப்பொழுது இவர்கள் தமது கல்வியை தொடர்ந்தும் பின்பற்றும் வகையில் விடியல் 2013 என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இதனால் பரிட்சை முடிந்த பின்னரும் இந்த மாணவர்கள் பாடசாலைக்கு வந்து பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் பல இலக்கிய நூல்களைக் கற்று அது தொடர்பான குறிப்புகளை எழுதி கலந்துரையாடல்களை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். விடியல் 2014 மாணவர்களுக்கு பங்களிக்கின்றனர். இந்த மாணவர்களில் ஏழு பேர் சதாரண தரப் பரிட்சையில் சித்தியடைந்துள்ளனர். இப்பொழுது இவர்கள் இருபது மைல் தூரத்திலுள்ள நகரத்திற்கு சென்று கல்வி கற்க வேண்டும். மாணவர்கள் உயர்தரம் கற்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் சில பெற்றோர்கள் தமது குழந்தைகளின் கல்வியில் அக்கறையில்லாது இருக்கின்றனர். சில பெற்றோர்கள் மாணவிகளுக்கு திருமணம் சிறுவயதிலையே செய்து வைக்க முயற்சிக்கின்றனர். சிலர் வேலைக்கு அனுப்பு முயற்சிக்கின்றனர். அதேவேளை சில மாணவர்களின் கல்விக்கு பங்களிக்க சில பெற்றோர்களிடம் அக்கறையும் ஆர்வமும் இருந்தும் வசதி இல்லை. இதனால் இந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது.

பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள். எதிர்காலம் கேள்விக்குறியாக?

பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள். எதிர்காலம் கேள்விக்குறியாக?

இந்த மாணவர்கள் ஒவ்வொருக்குப் பின்னாலும் மிகவும் வேதனையான வாழ்க்கைப் புலம் உள்ளது. ஒரு தாய் தோட்டத்தில் வேலை செய்பவர். இவரது ஒரு மகனுக்கு உள மனப் பிரச்சனை உள்ளது. ஆனால் அதைப் பற்றி தெரியாமல் மந்திரம் மாந்தரீகம் என நம்பிக்கொண்டு மருந்தோ உளநல சேவையை நாடாமல் இருக்கின்றார். அப்பா இல்லை. மகளைக் தானே தனித்துக் கஸ்டப்பட்டு படிப்பிக்கின்றார்.

இன்னுமொரு மாணவியின் பெற்றோர் வேறு வேறு திருமணங்கள் செய்துள்ளனர். அதேவேளை மகளைப் பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்துகின்றனர். “முறை மாமனுக்கு” திருமணம் செய்து வைக்க தாய் முயற்சிக்கின்றார். மாமனும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்றார். ஆனால் இவரது பாட்டி இந்த மாணவிக்கு உறுதுணையாக இருந்து கல்வி கற்க ஊக்குவிக்கின்றார்.

வேதனையில் மிகவும் வேதனையானது ஒரு மாணவனின் வாழ்வு. அப்பா வேறு திருமணம். அம்மா வேறு திருமணம். தமது குழந்தையில் அவர்களுக்கு அக்கறை இல்லை. அதேவேளை இவனில் அக்கறையே இல்லாத அப்பப்பாவுடனும் சித்தப்பாவுடனும் வளர்கின்றான். இவர்களுக்கு இவன் படிக்கப்போவது விருப்பமில்லை. வேலைக்கு போ எனக் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் இவன் படிக்க வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பாடசாலைக்கு ஆர்வமுடன் வருகின்றான். பல்துறை செயற்பாடுகளில் பங்களிக்கின்றான். இந்த மாணவர்களுக்கு சந்தர்ப்பங்களும் வசதிகளும் வாய்ப்புகளுமே இல்லை. அல்லது இவர்களும் நாளை இந்த சமூகத்தில் குறிப்பிடத்தக்க நிலையில் இருப்பார்கள்.

காலையிலையே பாடசாலைக்கு சமூகமளித்த மாணவன் ஒருவன். பின்னனியில் உதவி நண்பர்கள் பங்களித்த பரிசோதனை உபகரணங்கள்.

காலையிலையே பாடசாலைக்கு சமூகமளித்த மாணவன் ஒருவன். பின்னனியில் உதவி நண்பர்கள் பங்களித்த பரிசோதனை உபகரணங்கள்.

இன்னுமொரு பெற்றோர் தோட்டத்தில் வேலை செய்கின்றவர்கள். நான்கு பெண்கள். இவர்களது உறவுகளும் சமூகத்திலுள்ளவர்களும் இந்தப் பெற்றோரை நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றதற்காக தொடர்ச்சியாக எதிர்மறையாக கதைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நால்வரையும் கல்வி கற்க அனுப்புவதற்கு எதிராக கதைக்கின்றனர். ஆனால் இந்தப் பெற்றோர் தமது பெண் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதில் மட்டுமே அக்கறையாக இருக்கின்றனர். இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய பெற்றோரே தமது மகனோ மகளோ மேற்கல்வி கற்க வேண்டும் என்பதில் பல்வேறு பொருளாதார சமூக கலாசார கஸ்டங்களுக்கும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அக்கறையாகவும் ஆர்வமாகவும் உறுதியுடனும் இருக்கின்றனர். தமது மிகச் சிறு உழைப்பிலும் பெரும் பங்களிப்பை செய்கின்றனர்.

மேல் மலையிலிருந்து கல்வி கற்க பல சிரமங்களுக்கு மத்தியிலும் வருகின்ற மாணவர்கள் சிலர்.

மேல் மலையிலிருந்து கல்வி கற்க பல சிரமங்களுக்கு மத்தியிலும் வருகின்ற மாணவர்கள் சிலர்.

மேல் மலைக்கு அப்பாலுள்ள தோட்டத்தில் வசிக்கின்ற மாணவர்கள். மொத்தமாக இருபது பேர் இந்தப் பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு வருவதில்லை. இதற்குக் காரணம் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு மணித்திலாயத்திற்கு மேலாக நடந்து கீழே இறங்கி பாடசாலைக்கு வரவேண்டும். இந்த மலைப் பாதை ஒரு காட்டுப்பாதை. மிருங்களும் குறிப்பாக மழைக்காலங்களில் அட்டைகளும் நிறைந்த பாதை. இவற்றுக்கு மத்தியில் நடந்து வரவேண்டும். மாலையில் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்து மலை மேலே ஏறி செல்லவேண்டும். இதனால் ஏற்படும் உடல் அலுப்பினால் கிழைமையில் மூன்று நான்கு நாட்கள் தான் பாடசாலைக்கு வருவார்கள். இவர்களுடன் பாலர் வகுப்பு படிக்கின்ற குழந்தைகளும் வருவார்கள். ஆகவே தமது சிரேஸ்ட மாணவர்களின் வகுப்புகள் முடியும் வரை மாலை நான்கு மணி வரை பாடசாலையில் நிற்கவேண்டும். இது இந்தக் குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம். ஆகவேதான் இந்தக் குழந்தைகள் தொடர்ந்தும் கல்வி கற்பிப்பதற்கு மாற்றுவழிகள் உதவி நண்பர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

மேல் மலையிலிருந்து கல்வி கற்க வருகின்ற பாலர் வகுப்பு குழந்தைகள்.

மேல் மலையிலிருந்து கல்வி கற்க வருகின்ற பாலர் வகுப்பு குழந்தைகள்.

மேற்குறிப்பிட்ட மாணவர்கள் பாடசாலைக்கு அருகிலுள்ள கட்டிடங்களில் தங்கி நின்று கல்வி கற்பதற்கான செயற்பாடுகளை மாணவர்கள் அபிவிருத்திக் குழுவுடன் இணைந்து உதவி நண்பர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பாடசாலைக்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்தை திருத்தி மாணவர்கள் தங்கி கற்பதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. இந்த வேலைகள் முடிய ஐந்து நாட்களும் மாணவர்கள் இங்கு தங்கலாம். இந்த நாட்களில் அவர்களுக்கான உணவுகள் மற்றும் பாதுகாப்புகள் வழங்க ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இதைவிட உதவி நண்பர்கள் பல்வேறு பங்களிப்புகளை வழங்குகின்றனர். உதாரணமாக ஆசிரியர்கள் கற்பதற்கான சம்பளம், விஞ்ஞான உபகரணங்கள் என்பன வழங்கப்படுகின்றன.

இந்த மலைக்கு அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் உள்ள அடிவாரத்திற்கு கல்வி கற்க மேலே உள்ள இரு படங்களிலுமுள்ள சிறுவர்கள் நடந்து வருகின்றார்கள்.

இந்த மலைக்கு அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் உள்ள அடிவாரத்திற்கு கல்வி கற்க மேலே உள்ள இரு படங்களிலுமுள்ள சிறுவர்கள் நடந்து வருகின்றார்கள்.

இந்தப் பாடசாலையில் மாணவர்கள் பெற்றோர்கள் ;ஆசிரியர்களுடன் இணைந்த சந்திப்பு நடைபெற்றது. மாலை ஆரம்பித்த சந்திப்பு இருட்டிலும் விளக்கு வெளிச்சத்திலும் தொடர்ந்தது. மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனம் திறந்து தமது பிரச்சனைகளை குறைபாடுகளை மட்டுமல்ல மற்றவர்கள் தொடர்பான விமர்சனங்களை நேரடியாக கூறினர். மாணவர்கள் பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் குறைபாடுகளை கூறினர். தம்மைப் புரிந்து கொள்ளாமை, தம் மீது நம்பிக்கை வைக்காமை, வேலைக்கு ஆனுப்ப முயற்சிக்கின்றமை எனப் பல குறைகளைக் கூறினர். இதேபோல் பெற்றோரும் மாணவர்கள் படிக்கின்ற வயதில் காதல் செய்வது தொடர்பாகவும் கற்பிப்பதற்கு தாம் எதிர்கொள்கின்ற கஸ்டங்கள் தொடர்பாகவும் சில மாணவர்கள் வெளியீடங்களுக்கு சென்று வரும் பொழுது மது அருந்துவது தொடர்பாகவும் பல விமர்சனங்களை முன்வைத்தனர். இவற்றுக்கு மத்தியிலும் அதிகம் கல்வி கற்காத சில பெற்றோர் ஆச்சரியப்படும் வகையில் ஆழமான பரந்த புரிந்துணர்வுள்ளவர்களாக இருந்தமை மகிழ்சியாக இருந்தது. தமது குழந்தைகளுடன் நண்பர்களாக இருப்பதும் அவர்களை நம்புவதும் குறிப்பிட்ட வயதுக்கு உரிய பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதும் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதும் என பல விடயங்களைக் குறிப்பிடலாம். மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என ஒவ்வொருவரும் மற்றவரை புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முயற்சிக்கின்றமையும் அதற்கான திறந்த மனமும் இருப்பதைக் காண மகிழ்வாக இருந்தது.

விடியல் 2013 குழு மாணவர்கள் மலையக நாட்டார் பாடல்களை பாடுகின்றனர்.

விடியல் 2013 குழு மாணவர்கள் மலையக நாட்டார் பாடல்களை பாடுகின்றனர்.

அதிபர் கருணாகரனும் ஆசிரியர் சக்தியும் அழிந்து செல்கின்ற, மறைந்து செல்கின்ற மலையக மக்களின் நாட்டார் பாடல்களை சேகரித்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பாடல்கள் மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து வரும் பொழுதும், இங்கு வந்தபின்பும் தமது கஸ்டங்களை காதல்களை வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வெளிப்படுத்தி வந்தவையாகும். இந்த நாட்டார் பாடல்களை தம்மிடமிருக்கின்ற உபகரணங்களான பிளாஸ்டிக் கொள்கலன், தேங்காய் சிரட்டை,, குடம், தகரத் தட்டுகள் என்பவற்றைப் பயன்படுத்தி மாணவர்களைக் கொண்டு இசையமைத்து பதிவு செய்கின்றனர். இதைக் கேட்கும் போது இசை உபகரணங்கைளப் பயன்படுத்தி கேட்பதுபோல் இனிமையாக இருந்தது. உயர்தர வகுப்பில் நாடகமும் அரங்கியலும் பயில மாணவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் ஆசிரியர்கள் இல்லாமல் என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்களிடமுள்ள வீட்டு உபகரணங்களைக் கொண்டு நாட்டார் பாடல்களுக்கு இசையமைக்கின்றனர்.

தங்களிடமுள்ள வீட்டு உபகரணங்களைக் கொண்டு நாட்டார் பாடல்களுக்கு இசையமைக்கின்றனர்.

இதேபோல் மலையக ஆசிரியர்கள் ஆர்வல்கள் எனப் பலர் இணைந்து பல்வேறு அமைப்புகளை உருவாக்கி தம் சமூகத்தின் எதிர்காலம் வளர்ச்சி பெற பங்களிப்பதுடன் தம்மையும் வளர்க்கின்றனர். குறிப்பாக பெருவிரல் என்ற அமைப்பு குறிப்பிடத்தக்கது. இவர்கள் பல்வேறு நூல்களை தாம் வாசிப்பதுடன் தாம் வாசித்தவற்றை மாதம் தோறும் சந்தித்து பகிர்ந்து கொள்கின்றனர். பின் குறிப்பிட்ட நூல் தொடர்பான ஆழமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதேவேளை குறிப்பிட்ட நூலாசிரியர் அல்லது முன்னோடி எழுத்தாளர்களை அழைத்து அவர்களது அனுபவங்களைக் கேட்பதுடன் தமது விமர்சனங்களை முன்வைத்து ஆரோக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர். இந்த செயற்பாடுகளை பல ஆசிரியர்கள் இணைந்து மேற்கொண்டாலும் கண்டியைச் சேர்ந்த சுதர்ம மாகாராஜா பல ஆசிரியர்களுக்கு ஊக்க சக்தியாகவும் முன்னோடியாகவும் செயற்படுகின்றார். இவருடன் சட்டத்தரணி கருணாகரன். ஆசிரியர்கள் தினகரன், சிவக்குமார், சசி, என பல ஆசிரியர் கூட்டமே இருக்கின்றது. இதேபோல் மலையகத்தைச் சேர்ந்த கொழும்பை மையமாகக் கொண்ட லெனின் மதிவானம் மற்றும் திலகர் போன்றவர்களும் பல் வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இவர்களைவிட பலர் வெளியே தெரியாதவாறு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

முன்னேற்றங்களும் அபிவிருத்த்திகளும் காணாத லயங்களும் மலையக வாழ்வும்

முன்னேற்றங்களும் அபிவிருத்த்திகளும் காணாத லயங்களும் மலையக வாழ்வும்

மலையகம் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் விடியல் நோக்கி நம்பிக்கையுடன் நடைபோடுகின்றது. மேலும் இவர்கள் புறம் மட்டுமின்றி அகம் நோக்கியும் பார்த்து செயற்படும் பொழுது இவர்களது பயணம் குறைகள் பல நீங்கிய நீவர்த்தி செய்கின்ற ஆரோக்கியமான பயணமாக அமையலாம். இதற்கு நம்மாலான பங்களிப்புகளையும் வழங்க முயற்சிப்போம்.

மலையக மக்களின் விடியல் நோக்கிய பயணத்தில் நம்பிக்கை ஒளி வீசுமா?

மலையக மக்களின் விடியல் நோக்கிய பயணத்தில் நம்பிக்கை ஒளி வீசுமா?

மீராபாரதி

நன்றி தினக்குரல் 27.04.2014

உதவி நண்பர்களுக்கு பங்களிக்க விருப்பமாயின் பின்வரும் இணையத் தளத்துடன் தொடர்பு கொள்க.
பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து ஒரு கடிதம்….
http://uthawi.net/ta/vidiyal2013/

மாணவர்களின் மலையக நாட்டார் பாடல்களின் தொகுப்பு… உங்கள் பார்வைக்கு…
http://youtu.be/vQ5NVC3ITsc

http://youtu.be/f3WixCgqsBo

http://youtu.be/ofPCUlaRpYg

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: