Posted by: மீராபாரதி | March 25, 2014

சிறிலங்காவின் விமானம் கடத்தல்

சிறிலங்காவின் விமானம் கடத்தல்
காட்சி ஒன்று
Imageவிபூசிகாவை தாயிடம் இருந்து பிரித்தது…. தாயை பூசாவில் அடைத்தது… என பல கவலைகளுடனும் மற்றும் சரவதேச அரசுகள் தங்கள் நலனுக்காக ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளை பயன்டுத்துவது… வடக்கு கிழக்கில் பாரிய இராணுவ முகாம்களை சிறிலங்கா அரசு நிறுவகிப்பது போன்றவற்றின் மீதான கோவம்… ஒழுங்கான தமிழ் அரசியல் தலைமை இல்லையே என்ற விரக்தி போன்ற உணர்வுகளுடன் விமான நிலையத்தை நோக்கி நடந்தேன். சிறிது நேரத்தில் இலன்டன் செல்லும் சிறிலங்கன் ஏயர் லைன்ஸ் விமானத்தில் ஏறி இருந்தேன்…

முன்பு முகம் துடைப்பதற்கு சூடாக ஈரத் துணி ஒன்று கொடுப்பார்கள். அதனால் முகம் துடைப்பது இதமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் குளிரான சிறு பேப்பர் துண்டே தருகின்றார்கள். அதை வாங்கி வேண்டா வெறுப்பாக துடைத்து விட்டு உணவு வரும் வரை கருணாகரனின் வேட்டைத் தோப்பு சிறுகதைத் தொகுப்புடன் இருந்து விட்டேன். இதிலுள்ள கதைகள் 2009ம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டதா என்பதை நினைக்கும் பொழுது ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது. இக் கதைகள் அப்பொழுது எழுதி பிரசுரிக்காது நண்பர்களுக்குள் மட்டும் வாசிக்க பகிர்ப்பட்டது என்ற குறிப்பு நூலின் ஆரம்பத்தில் இருக்கின்றது.

உணவு வந்தது. என்ன வேண்டும் என்று கேட்டார். நான் மரக்கறி என்றேன். அவர்கள் தந்த உணவின் அடியில் இது என்ன வகை உணவு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் முஸ்லிம் என இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவ்வாறு ஏதுவும் குறிப்பிடவில்லையே. எவ்வாறு என்னை இவ்வாறு அடையாளப்படுத்தினர் என மனதுக்குள் கேள்வி எழுந்தது. அவர்களாகவே என்னை அப்படி மதிப்பிட்டது எனக்குள் கோவத்தை உருவாக்கியது. எனது தாடி தான் இதற்கான காரணமாக இருக்கும் என நினைத்தேன்..

நான் ஒரு முஸ்லிம் என நினைத்து பல முஸ்லிம்கள் என்னைப் பார்த்து முகமன் கூற முற்படுவார்கள். எனக்கு எந்த மத இன அடையாளங்களுடனும் என்னை அடையாளப்படுத்த விருப்பமில்லை.. ஆகவே அவற்றை ஏற்றுக்கொள்ளாது கடந்து சென்று விடுவேன்… அதேவேளை அடக்கப்படுகின்ற ஒரு இனத்தின் அடையாளத்தை அடக்குகின்ற அதிகாரத்திற்கு எதிராக வெளிப்படுத்த விரும்புவேன்… தாடியும் நீண்ட தலை மயிரும் எனக்கு விருப்பமான போதும்… அவை ஒரு வகையில் ஏகாதிபத்தியங்களின் எதிர்ப்பு சின்னமாக இருக்கின்றன… சமூக ஆதிக்க சிந்தனைகளுக்கு சவாலாக இருக்கின்றன… இந்த வகையில் இவை பயன்படுத்தப்படுவதை மனதார விரும்புகின்றேன்.
….
காட்சி இரண்டு

விமானம் இப்பொழுது ஐரோப்பிய நகரங்களுக்கு மேலாக பறந்து கொண்டிருக்கின்றது.
என்னைப் போலொருவன் தனது இருக்கையிலிருந்து எழும்பி செல்கின்றான். விமானப் பணி பெண்ணுடன் உரையாடுகின்றான். அவளிடம் ஒரு துண்டை கொடுக்கின்றான். அவள் அதைப் பார்த்து விட்டு கலவரப்படுகின்றாள். ஆனால் அதை பயணிகளுக்கு வெளிக்காட்டிக் கொள்ளாது விமான ஓட்டிகள் இருக்கின்ற இடத்தை நோக்கி செல்கின்றாள். இவன் அவள் பின்னால் சென்று வாசலில் இருக்கின்ற ஒலிபெருக்கியை எடுத்து உரையாற்ற ஆரம்பிக்கின்றான்.

“ஹலோ… நீங்கள் ஒருவரும் பயப்பிட வேண்டியதில்லை. நான் கூறுவதை சிறிது கேளுங்கள். என்னிடம் குண்டுகள் இருக்கின்றன. நீங்கள் என்னுடன் ஒத்துழைத்தால் இந்தக் குண்டுகளைப் பயன்படுத்தமாட்டேன். எனக்கு எந்த உயிர்களை அழிப்பதிலும் உடன்பாடில்லை. அவ்வாறு அழித்துதான் விடுதலை பெற வேண்டும் என்பதிலும் நம்பிக்கையில்லை. ஆனால் இன்று எனக்கு வேறு வழியில்லை. உண்மையிலையே வழி தெரியவில்லை. ஆகவே இந்த வழியை பின்பற்றுகின்றேன். இருப்பினும் நீங்கள் என்னுடன் ஒத்துழைத்தால் உங்கள் உயிருக்குப் பிரச்சனையில்லை. நான் ஏன் இவ்வாறு செய்ய வேண்டி இருக்கின்றது என்பதைக் கேளுங்கள்.

நான் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியை சேர்ந்தவன். எங்களை சிறிலங்கா அரசு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அடக்கி அழித்து விட முயற்சிக்கின்றது. எங்களது அப்பப்பாக்களையும் அம்மம்மாக்களையும் இலங்கையின் தென் பகுதிகளிலிருந்து அகதியாக விரட்டியது இந்த அரசு. பின் எங்கள் அப்பாக்களையும் அம்மாக்களையும் சொந்த நிலத்திலையே அகதிகளாக அலைய விட்டது. பின் எங்களது தலைமுறைய நாட்டை விட்டு வெளியேற்றி சர்வதேசம் எங்கும் அகதியாக அலைய விட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற முடியாத மக்கள் இராணுவ மற்றும் புலன்ஆய்வாளர்களின் கண்காணிப்புக்குள் வாழ்கின்றனர். இந்த அடக்குமுறைக்கு எதிராக மேற்கொண்ட நமது போராட்டமும் நமது தவறுகளாலும் மேலும் பல காரணங்களால் தோல்வி அடைந்து விட்டது. அல்லது அழிக்கப்பட்டு விட்டது.

இன்று போரில் தந்தையை தாயை தமையனை தமக்கையை தம்பியை தங்கையை இழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உரிமைக்காக குரல் கொடுக்க முடியாத இருண்ட தேசமாக இருக்கின்றது. இனியும் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் அடக்குமுறைக்குள் தொடர்ந்தும் வாழ முடியாது. ஆனால் இந்த மக்களின் விடுதலைக்காக என்ன செய்வது என்று தெரியாது உள்ளேன். ஆகவேதான் இந்த முயற்சியை மேற்கொள்கின்றேன்.

இந்த விமானத்தை ஜெனிவாவை நோக்கி திசை திரும்புகின்றேன். விமான ஓட்டிகளும் நீங்களும் இதற்கு உடன்படாவிட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். இப்பொழுது ஜெனிவாவில் சர்வதேசங்கள் தமது நலன்களுக்காக நம் மீதான அடக்குமுறையை பயன்படுத்துகின்றன. அவர்களுக்கு நம் மீதும் நமது விடுதலை சுதந்திரம் என்பவற்றின் மீதும் அக்கறை இல்லை. ஆனால் எங்களுக்கு உண்டு. ஆகவே பின்வரும் நிபந்தனைகளை அவர்கள் முன்வைக்கின்றேன். இவை ஜெனிவாவில் எதிர் ஒலிக்க வேண்டும். அவர்களுக்கு :உங்கள் உயிரின் மீது உண்மையிலையே அக்கறை இருந்தால் நான் சொல்வதைக் கேட்பார்கள். ஈழத் தமிழர்கள் சார்பாக நான் கேட்பது இதைத்தான்.

ஈழத் தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்திருக்கின்ற சிறிலங்கா இராணுவம் அந்த நிலத்திலிருந்து வெளியேற வேண்டும். சிறையிலிருக்கின்ற அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தணையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள்வதற்கு ஏற்ப அதிகார பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். இவை அமுலாக்கப்பட்டால் மட்டுமே ஈழத் தமிழ் மக்கள் இலங்கையில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும். இவ்வாறான சமத்துவமான நிலையிலையே சிங்கள மக்களுடன் நாம் சமாதானமாக வாழ முடியும். இவை நிறைவேற்றப்படாதபோது மீண்டும் மீண்டும் வன்முறைகளும் போர்களும் மனித இழப்புகளும் தவிர்க்கப்பட முடியாதவையாகும். அவை தவிர்க்கப்பட வேண்டுமாயின் ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.

ஆகவே மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விமானத்தை ஜெனிவாவை நோக்கி திசை திருப்புகின்றேன். ஏனெனில் இப்பொழுது ஜெனிவாவில் ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைப் பயன்படுத்தி அரசுகள் தமது நலன்களுக்காக பேரம் பேசுகின்றனர். இதை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. ஆகவே எனது கோரிக்கைகளை உங்களது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் வெளி உலகிற்கு அறிவிக்கவும்.
அந்த நபரின் உரை ஒலிபரப்பப்படுகின்றது. ஜெனிவாவில் குழுமியிருக்கின்ற தமிழ் மக்களும் சர்வதேசங்களில் அகதிகாக இருக்கின்ற தமிழ் மக்களும் இந்த உரையைக் கேட்டு கை தட்டுகின்றார்கள். ஆர்பரிக்கின்றார்கள்.

…..

காட்சி மூன்று

நான் கைதட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தேன்.
விமானத்திலுள்ள பயணிகள் கை தட்டி ஆர்பரிக்கின்றார்கள்.
“விமானம் இலன்டன் ஹீத்தூரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கி விட்டது. அடுத்த அறிவிப்பு வரும்வரை உங்கள் இருக்கைகளில் இருங்கள்” என விமானி அறிவித்துக் கொண்டிருந்தார்….

……

பி.கு – இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டி வரும் என்பதால் எவ்வாறு குண்டுகள் விமானத்திற்குள் கொண்டு வரப்பட்டது என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: