Posted by: மீராபாரதி | February 27, 2014

தலைமையுரை – பிரக்ஞை மற்றும் சாவியல் பற்றிய கோட்பாட்டிற்கான உருவாக்கம் – கவிஞர் மேரா

மீராபாரதியின் இரு நூல்கள் -அறிமுக நிகழ்வின் தலைமையுரை.Imageஅனைவருக்கும் வணக்கம். என்னுடைய உரையில் நண்பர் மீராபாரதியைப் பற்றியும் அவரது இரு நூல்களைப்பற்றியும் சில குறிப்புக்களைப் பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன்.
முதலில் மீரா பாரதியைப்பற்றி….
கூந்தல் வளர்த்து நீண்டு சடைத்த தாடியுடன் தோற்றமளிக்கும் இவர் கொஞ்சம் பயங்கரமானவராக இருப்பாரோ என்று எண்ணுகின்ற அதே நொடியில் அவரது புன்னகை அவரை இனிமையான எளிமையான மனிதராக எம் மனதில் பதித்துவிடும். இத்தகைய நம் மீராபாரதியின் மிக அவசியமாக வாசிக்கவேண்டிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு தலைமை தாங்குவதில் மகிழ்வடைகிறேன்.

மீராபாரதி யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்து மலையகம்,கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் வாழ்ந்து தற்போது கனடாவில் வசித்து வருபவர். யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான துறைப்பட்டதாரி. உளவியலிலும் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது “நான் ஒரு கடவுள்” என்னும் நூல் 2003 ஆம் ஆண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பிரக்ஞை என்ற நூலும் 2013 ஆம் ஆண்டு மரணம்- இழப்பு – மலர்தல் என்ற நூலும் வெளிவந்துள்ளன. இவை தவிர தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஈழத்துக் கவிஞர்களின் சிறுவர்களுக்கான கவிதைகளைத் தொகுத்து 1995 ஆம் ஆண்டு “நான் ஒரு அரசன்” என்ற நூலையும் 1995 இல் “போர்க்கால சூழலும் குழந்தைகளின் உளவியலும்” என்ற நூலையும், சரிநிகரில் வெளிவந்த பெண்ணிய கட்டுரைகளைத் தொகுத்து 1997 இல் “நான் ஒரு பெண்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.

இப்போது இங்கே அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ள இரண்டு நூல்களும் ஏலவே கனடா, லண்டன், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் அறிமுகம் கண்டுள்ளன.
பிரக்ஞை – ஒரு அறிமுகம் என்ற நூல் மேற்குலக சிந்தனைத் தளத்தில் நின்று தனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கிய நகர்வாக – முன்வைப்பாக அமைந்துள்ளது. நண்பர் மீராபாரதியின் பத்து வருட தேடலாக – வாசிப்பாக இந்த நூல் எமக்குக் கிடைத்திருக்கிறது.

நம் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பிரக்ஞை அவசியமானது என்று மீராபாரதி அழுத்திக் கூறுகின்றார். “நாம் இன்று எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு அடிப்படை நம் கடந்த காலச் செயற்பாடுகள்.ஆகவே பிரக்ஞையான செயற்பாடுகள் அவசியம். நம் செயற்பாடுகளுக்கு அடிப்படை நம் சிந்தனைகள், எண்ணங்கள், ஆகவே பிரக்ஞையான எண்ணங்கள் அவசியம். நம் எண்ணங்களுக்கு அடிப்படை , நம் உணர்ச்சிகள், உணர்ச்சிகள் தொடர்பாக விழிப்பாக இருப்பது அவசியம். நம் உணர்ச்சிகளுக்கும் மற்றும் உணர்வுகளுக்கும் அடிப்படை , நமக்குள் இருக்கின்ற சக்திகள். ஆகவே மூச்சு தொடர்பான பிரக்ஞையும் விழிப்பு நிலையும் அவசியம். இவ்வாறு பிரக்ஞை என்னும் சாவியை திறவுகோலாகப் பயன்படுத்தி, நம்மை மட்டுமல்ல, இவ்வுலக பிரபஞ்ச உண்மைகளையும் அறிந்துகொள்ளமுடியும். இதற்கு தியானம் செய்ய வேண்டும்.” என்று எழுத்தாளர் நண்பர் மீராபாரதி கூறுகின்ற கருத்துக்கள் மிக ஆழமாக நோக்கத்தக்கனவாக உள்ளன.

இக்கருத்துக்களை விளக்கித் தெளிவுபடுத்தும் பொருட்டு அவரது சுய வாழ்வின் கடந்த கால நடப்புக்களையும் அனுபவங்களையும் இணைத்து சொல்லியுள்ள விதம் சிறப்பாக உள்ளது.

இவரது அடுத்த நூலான மரணம் – இழப்பு – மலர்தல் என்ற நூல் அதன் தலைப்புக்கு ஏற்ற வகையிலேயே தெளிவாக அமைந்துள்ளது. இந்நூலினை வாசிக்கும் போது இதுவொரு நாவல் என்ற நினைவினைவும் இடைக்கிடைஏற்படுகிறது. அதேவேளை கட்டுரையின் தன்மையினையும் கொண்டமைந்துள்ளது. அதேவேளை பின்நவீனத்துவ வாசிப்பினையும் நினைவுபடுத்துகின்றது. மரணம் புறத்தே இருக்கின்ற ஒன்றல்ல. நம்முடனே தொடர்ந்துவருவது. அதேவேளை
“…. அன்று பிறந்து
இன்று இறப்பதுள்
ஆயதன்று நம் மானிட வாழ்வுகாண்
அப்பனே மகனாகி வளர்ந்து
உயிர்
ஓய்தலற்று
உயர்வு ஒன்றினை நாடலே உண்மை…”
என்று மகாகவி ஒரு சாதாரண மனிதனது சரித்திரத்தில் கூறுவதுபோல மரணம் வாழ்வை முடித்து வைப்பதும் இல்லை. என்ற கருத்து இந்நூலில் உறுதிபடக் கூறப்பட்டுள்ளது. ஆகையால் மரணத்தின் மீதான பயத்தினைக் களைந்து மரணத்தை எதிர்கொள்ளத்துணிகின்றபோது மரண இழப்பிலிருந்து விடுபட்டுக்கொள்ளமுடியும் என்பதையும் நூலாசிரியர் கூறியுள்ளார். மரணச் சடங்குகள், நம்பிக்கைகள் பற்றியும், இறந்தவர்களுக்கான அஞ்சலிகள் பற்றியும் யுத்தகால மரணங்கள்- அவர்களுக்கான அஞ்சலிகள் பற்றிப் பேச முடியாமை பற்றியும் கூறியுள்ளார். நூலாசிரியர் இந்நூலில் அவரது சொந்த வாழ்வின் அனுபவங்களை முன் வைத்து கருத்துக்களை நகர்த்திச் சென்றுள்ளமை புதுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக உள்ளது. அனுபவ விபரிப்பினூடாக இதுவரை விரிவாக பேசப்படாத சாவியல் பற்றிய கோட்பாட்டினை நூலாசிரியர் உருவாக்க முற்பட்டுள்ளார்.

யுத்தத்திற்குப்பின்னரான சூழலில் பல்வேறு நூல்களும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் மீராபாரதியின் இவ்விரு நூல்களின் வரவும் அவசியமானதொன்றாகவே அமைகின்றது. வலியைச் சொல்ல வந்து அந்த வலியை ஆற்றுப்படுத்துவதற்குரிய வழியைச் சொல்லாது மேலும் வலியை ஏற்படுத்துகின்றதாகவும் தாங்களே மேதாவிகள் என்று கட்டியங் கூறி தங்கள் கருத்துக்களினூடாக பொதுவெளியை எட்டிவிடலாம் என்றும் அமைகின்ற நூல் வெளியீடுகள், நிகழ்வுகளை புறம் தள்ளி ஒவ்வொருவரும் தமது சுயத்தின் அடிப்படையில் சிந்தித்து நடந்துகொள்வதற்குரிய வடிகாலாக அமைகின்ற இரண்டு நூல்களை எமக்குத் தந்துள்ளமைக்காக மீராபாரதியைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. வாழ்த்துக்கள். ஒரிரண்டு நூற்பழக்கமுள்ள சாதாரண மக்களும் வாசித்து விளங்கத்தக்க மொழிநடையில் கீழைத்தேய சிந்தனைப்புலத்தை அடிப்படையாகக் கொண்டு பிரக்ஞை என்னும் இன்னுமொரு நூலினையும் இவரிடமிருந்து எதிர்பார்த்து அனைவருக்கும் நன்றிகூறி எனது உரையை இத்தோடு நிறைவு செய்துகொள்கிறேன். அனைவருக்கும் நன்றி வணக்கம்.

மேரா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: