Posted by: மீராபாரதி | February 3, 2014

இரு நூல்கள் – எனது பிரதிபலிப்புகள் – வைத்திய கலாநிதி சா. சிவயோகன்

யாழ்ப்பாணத்தில் மீராபாரதியின் இரு நூல்களின் அறிமுக விழாவின் போதான உரை
வணக்கம்.
Imageநீண்ட நாட்களுக்குப் பின்பு ஒரு புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒன்று இன்று நண்பர் மீராபாரதி அவர்களின் மூலம் கிடைத்துள்ளது. நூல் தேட்டம் மற்றும் புத்தக வாசிப்பு என்பவற்றில் ஆர்வம் குறைந்து காணப்படும் ஒரு சூழமைவில் இங்கு நாம் இரண்டு நூல்களை அதுவும் ஆறுதலாக மனங்கொண்டு வாசிக்க வேண்டிய இரண்டு நூல்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றோம். இந்த இரண்டு நூல்களும் வாசகர் ஒவ்வொருவருக்கும் தந்துள்ள, தரப்போகின்ற அனுபவங்கள் தனித்துவமானவை. அந்த அனுபவங்களை அதிகம் குழப்பாத வகையில் இந்த நூல்கள் என்னில் ஏற்படுத்திய பிரதிபலிப்புகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

முதலாவதாக இந்த நூல்கள் இரண்டும் மிகுந்த காலப்பொருத்தத்தோடு வெளிவந்திருக்கின்றன. பொதுவாக நல்ல படைப்புகள் என அறியப்பட்ட எல்லாமே காலத்தைக் கடந்து நிற்பவையாயினும் அப்படைப்புகள் யாவுமே ஒரு படைப்பாளி தான் வாழும் காலம் தந்த அனுபவத்தினால் உந்தப்பட்டு அதற்குரிய எதிர்வினையாகவே அவற்றைப் படைத்திருப்பதனை அவதானிக்கலாம். மீராபாரதி அவர்களும் செழுமையானதொரு காலத்தின் ஊடாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து மிகவும் செறிவான அனுபவங்களைப் பெற்று அவற்றிற்கான தனது எதிர்வினைகளை அறிவுப் புலத்தினூடாகவும் ஆத்ம விசாரத்தின் ஊடாகவும் சுயம் கொண்டு தேடி அவற்றைத் தனது என்னும் தள நிலையிலிருந்து பொது என்னும் தள நிலைக்குக் கொண்டுவந்து இந்த நூல்களின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இவரது மரணம் இழப்பு மலர்தல் என்னும் நூல் அந்தத் தலையங்கத்தோடு நேரடியான தொடர்புகளைப் பேணியவாறு மரணம் தொடர்பாகவும் அது ஏற்படுத்துகின்ற இழப்பின் தன்மை பற்றியும் அந்த இழப்பிற்கு நாம் காட்டுகின்ற எதிர்வினையாகிய இழவுத் துயரம் பற்றியும் அதனை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும்; பேசுகின்றது.

“சாதல்” என்பது தவிர்க்க முடியாதது என உணரப்பட்டபோதும் அது எமது நாளாந்த வாழ்வியலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளபோதும் அது முன்பு எப்போதும் இருந்ததைவிட இப்போது மிகவும் ‘சர்வ சாதாரணமாய்’ ஆகிவிட்டபோதும் எமது சமுதாயத்தில் தமிழ் சமுதாயத்தில் சாதல் பற்றி அதிகம் திறந்த மனதோடு கதைத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக நாங்கள் பல சமயங்களில் சாவோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறோம். எமது சமூகத்தில் மிகப் பெரும்பான்மையோர் சாதலுக்கு அஞ்சுபவர்களாகவே இருக்கின்றனர். மரணபயம் என்பது மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒன்றாகவே தொடர்கிறது. ஏதோவொரு கணத்தில் மரணத்தினைத் தவிர்க்க முடியாதபடி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதொரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாலும் அதனைப் பின்னோக்கிப் போடவே பலரும் விரும்புவார்கள்.

இதனைவிட பொதுவாக நாங்கள் சாவினைப் பற்றிக் கதைப்பதனைத் தவிர்த்துக் கொள்கிறோம். சாதல் பற்றி யாரும் படிப்பிப்பதில்லை. அது பற்றி ஆராய்வதுமில்லை. எழுதுவதுமில்லை. ‘சாவியல்’ எமது சமூகத்தில் இன்னமும் பிறக்கவேயில்லை. எனவே ‘சாதல்’ என்றால் என்ன என்பது பற்றிப் பலரும் பலவிதமான விளக்கங்களையே கொண்டிருக்கிறோம். இதனால் மரணம் பற்றிய கருத்துருவாக்கங்களை உருவாக்குவதிலும் அவற்றைத் தலைமுறைகளுக்கூடாகக் கடத்துவதிலும் எம்மால் வெற்றிபெற முடியவில்லை. மரணம் தொடர்பாக எம்மிடம் தற்பொழுது பொதுமையாக இருக்கின்ற கருத்தேற்றங்கள் எனது பார்வையில் மேலோட்டமானவையே.

ஒரு மரணம் எமது மனங்களில் ஏற்படுத்தும் அதிர்வுகளானது மிகவும் இயல்பானவை. எனவே பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அவை இயல்பாகவே கையாளப்பட்டு காலஓட்டத்தினூடு எமது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிசமைக்கின்றன. ஆயினும் பல்வேறுவிதமான அக மற்றும் புறக் காரணிகள் இழப்பின் துயரை இயல்பாகக் கையாண்டு வளர்ச்சி பெறுவதற்குத் தடங்கலாக அமைந்து விடுகின்றன.

மீராபாரதி தனது மரணம் இழப்பு மலர்தல் எனும் நூலில் இந்த விடயங்களை பல பிரிவுகளாகப் பிரித்து ஆராய விழைந்திருக்கின்றார். ஆயினும் அவரது குவியப் புள்ளிகளாக இழப்பிற்காக வருந்துதல் என்பதுவும் இழப்பினைச் சந்தித்த சிறுவர்களைப் புரிந்து வழிநடத்துதல் என்பதுவும் இருக்கின்றன. பேரிழப்புகளைச் சந்தித்த சமூகம் ஒன்றிற்குப் பிரதானமாகத் தேவைப்படும் இரண்டு விடயங்களாக அவர் இவற்றைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். இவற்றை அவர் தனது இயல்பான அமைதியில் எளிமையான நடையில் அளிக்கை செய்கின்றார். இந்தவிதமான எழுத்துக்கள் வாசகரை இலகுவாகச் சென்றடையும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்கமுடியாது.

இந்த நூலில் மீராபாரதி எடுத்து ஆராய்ந்த மரணம் தொடர்பான மேலும் இரு விடயங்களாகத் தற்கொலையும் பிறர் கொலையும் அமைந்திருக்கின்றன. தற்கொலையை ஓர் அறிமுகத்தோடு விட்டுவிடும் அவர் கொலை செய்வது தொடர்பில் குறிப்பாக அரசியல் – இயக்கம் சார்ந்த கொலைக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதில் தனது சுயசரிதத்தையே முன்னிறுத்தி அதனை ஆய்விற்கும் உட்படுத்துகின்றார். இது சற்று ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டி ஒன்றாகும். தமது சொந்த அனுபவங்களையே ஆய்வுக்கான தரவுகளாக்கி அவற்றைச் சற்றுப் புறவயமாக நின்று ஆய்வு நோக்கில் அவதானித்து விளங்குகின்ற – விளக்குகின்ற ஓர் ஆய்வு முறையியலாக இதனை நாங்கள் கொள்ளலாம். இவ்வாறான ஆய்வு முறைமைகள் தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரபல்யமாகி வருகின்றன.

நூலின் பிற்பகுதியில் நடந்து முடிந்த இழப்புகளை ஏற்றுக் கொண்டு அவற்றைப் புரிந்து கொண்டு இழப்புகளிலிருந்து மீண்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதின் அவசியம் பற்றியும் அதற்கான சில வழிமுறைகள் பற்றியும் மீராபாரதி தனது கருத்துக்களை முன்வைக்கின்றார். இந்தக் கருத்துக்கள் எமது சமுதாயத்தின் தற்போதைய கள யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதோடு அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான சில அணுகுமுறைகளையும் முன்வைக்கின்றன.

எனது பார்வையில் மீராபாரதியின் மரணம் இழப்பு மலர்தல் எனும் இந்நூல் தற்போதைய சமுதாயத்தின் தேவைகளுள் ஒன்றை நிறைவேற்ற விழைகிறது. இது பேரழிவொன்றின் சாட்சியாக நின்று உயிர் தப்பிப் பிழைத்தவர்களுக்கும் அதனது இரண்டாவது வட்டத்திற்குள் அகப்பட்டு – அல்லலுற்று இருப்பவர்களுக்கும் தள்ளி நின்று சாகசம் செய்பவர்களுக்கும் காத்திரமான சில செய்திகளை முன்வைக்கின்றது. பரிவோடு புரிதல் உயிர்ப்பிற்காய் உதவல்ää விருத்தி மற்றும் வளர்ச்சிக்காய் அக புற விமர்சனப் பண்புகளை வளர்த்தல் போன்ற பல விடயங்கள் இதில் முனைப்புப் பெறுகின்றன.

ஆயினும் இந்த விடயங்களை இன்னமும் சற்று ஆழமாகப் பார்த்திருக்கலாமோ என மனம் ஏங்குகின்றது. தொடர்ச்சியாக நீண்டு நிலைத்திருந்து துயர்தருகின்ற முற்றுப்பெறாத இழவிரக்கங்கள் பற்றியும் அவற்றைக் கையாளக் கூடிய எளிமையான வழிமுறைகள் பற்றியும் காணமற் போன உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களில் காணப்படுகின்ற தெளிவற்ற இருமை இழப்பு நிலை பற்றியும் தற்கொலை செய்பவர்கள்  பற்றி மட்டுமல்லாது தற்கொலை புரிந்த ஒருவரது குடும்பங்கள் காட்டுகின்ற எதிர்வினைகள் பற்றியும் கொலை செய்யப்படுபவர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் எதிர்வினைகள் பற்றியும் இன்னமும் ஒருபடி மேலே சென்று கொலை செய்பவர்களது மனநிலை பற்றியும் புரிதல்களை ஏற்படுத்தி சில பரிகாரங்களை முன்வைத்தல் தொடர்பாக அவர் இன்னமும் அண்மையாவும் ஆழமாகவும் உணர்வுகளை உள்வாங்கி எழுதியிருக்கலாம். ஏனெனில் இங்கு நான் குறிப்பிட்ட நிலைமைகளில் அகப்பட்டு அல்லலுற்ற பலர்  இன்று எமது சமூகத்;தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை மீராபாரதி அவர்கள் தனது அடுத்த பதிப்பில் கவனித்துக் கொள்வார் என நம்புகிறேன்.

மீராபாரதியின் அடுத்த நூலான பிரக்ஞை: ஓர் அறிமுகம் என்பது தற்காலத்துக்கு மிகவும் தேவையான ஆனால் சவாலாகவிருக்கும் ஒரு பணியைச் செய்கின்றது. அவர் தனது எழுத்துக்களில் அடிக்கடி குறிப்பிட்டிருப்பதுபோல் பெரும்பாலும் அனுபவம் ஒன்றினால் மட்டுமே அறியக் கிடைக்கின்ற ஓர் அரூபமானதொரு விடயம் பற்றி அவ்விடயத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் மயக்க நிலைகள் பற்றி மேற்குலக அறிஞர்களின் பார்வைகளை அடியொற்றி ஆங்காங்கு தனது புரிதல்களையும் அனுபவங்களையும் அள்ளித் தெளித்து அவர் இந்நூலை ஆக்கியிருக்கின்றார்.

பிரக்ஞை எனப்படும் சொல்லாடல் கொண்டிருக்கும் அர்த்தம் பற்றியும் தனிமனித நிலைப்பட்ட பிரக்ஞை – பிரக்ஞையின்மை பற்றியும் கூட்டுநிலைப்பட்ட பிரக்ஞை – பிரக்ஞையின்மை பற்றியும் இந்நூலின் பல அத்தியாயங்கள் விளக்கி நிற்கின்றன. இவற்றைப் பற்றிய புரிதல் எமது வளச்சிப் பாதையில் மிகவும் அவசியமானது.

உளமருத்துவத் துறையிலும் நாம் மனதின் பிரக்ஞை – பிரக்ஞையின்மை நிலைகள் பற்றியும் அவை தனிமனித நடத்தைகளில் செலுத்தும் செல்வாக்குகள் பற்றியும் கவனம் செலுத்துவதுண்டு. மீராபாரதி தனது நூலில் குறிப்பிட்டிருப்பதுபோல் எமது நடத்தையின் பெரும்பாலான பகுதிகளை தனிமனித மற்றும் கூட்டுப் பிரக்ஞையின்மை நிலைகளே தீர்மானிக்கின்றன. நாங்கள் பொதுவாக எங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது அடிக்கடி பாவிக்கின்ற “நான்” என்கின்ற வார்த்தைப் பிரயோகமும் “எனக்கு” என்கின்ற வார்த்தைப் பிரயோகமும் மிகவும் மேலோட்டமாக எமது பிரக்ஞையில் நாம் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு கற்பனையான கருத்துருவாக்கத்தின் பிரதிபலிப்புகளே. ஆயினும் நாம் எம்மைப் பற்றிப் பிரக்ஞை நிலையில் கொண்டிருக்கும் கருத்துருவாக்கம் ஆனது மிகவும் சிறிய பல சந்தர்ப்பங்களில் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதென நாம் கருதுகின்ற ஒரு கருத்துருவாக்கமே. ஆனால் நாம் எம்மைப் பற்றி எமது விருப்பு வெறுப்புகள் மற்றும் நடத்தைகளைத் தீர்மானிக்கின்ற காரணிகள் பற்றி அறிய விரும்பினால் எம்முள் புதைந்து கிடக்கின்ற எமது பிரக்ஞைக்குள் வராது இருக்கின்ற பிரக்ஞையின்மையான விடயங்கள் பற்றி அறியவும் ஆய்ந்துணரவும் தலைப்படவேண்டும்.

இந்த நூலில் அழகாகக் குறிப்பிட்டிருப்பதுபோல் எமது பிரக்ஞையின்மை நிலையானது காலாதி காலத் தொடர்ச்சியாக வருகின்ற கூட்டுப் பிரக்ஞையின்மையின் ஆதிக்கத்துக்குட்பட்டதாக இருக்கின்றது. இந்தக் கூட்டுப் பிரக்ஞையின்மையானது எமது எண்ணங்களிலும் உணர்வுகளிலும் செயல்களிலும் தனது வலுவான செல்வாக்கையும் பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. குறிப்பாக எமது சமுகத்தின் நடத்தைக் கோலங்களைப் புரிந்து கொள்வதற்கு இந்தக் கூட்டுப் பிரக்ஞையின்மை பற்றித் தெரிந்து கொள்வது அல்லது தெரிந்து கொள்ளத் தலைப்படுவது மிகவும் முக்கியமானது.

இவ்வாறு ‘என்னைப்’ பற்றியும் ‘எம்மைப்’ பற்றியும் தெரிந்து கொள்வது அறிந்து கொள்வது பிரக்ஞையின்மையான விடயங்களைப் பிரக்ஞைக்குள் கொண்டுவருவது என்பன ஒரு செயன்முறை சார்ந்த அனுபவம் சார்ந்த விடயமாகவே இருக்கின்றன என மீராபாரதி உறுதிபடக் கூறுகின்றார். சில நாட்களுக்கு முன்பு கூட நான் அவருடன் கதைக்கும் பொழுது பிரக்ஞையுடன் தொடர்புடைய ஒரு சொல் குறித்து நிற்கும் அர்த்தம் பற்றி வினவினேன். அப்பொழுது அவர் அதை விளங்கப்படுத்த முயற்சித்துவிட்டு பின்பு அதை அனுபவம் மூலமே உணரமுடியும் எனப் பதிலிறுத்தார்.

இந்த விடயம் மிகவும் முக்கிமானது. எம்மால் ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியது. மேலைத்தேயத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போதும் அவர்களால் தொடராதிக்கம் செலுத்தப்பட்டு வருகின்ற எமது கல்வி முறைமையானது புரிதல் விளங்குதல் அல்லது உணர்தல் என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட படித்தல் மனனஞ் செய்தல் ஒப்புவித்தல் என்பவற்றிற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகமானது. அதுபோல் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு எம்மை விழுங்கியிருக்கும் ஆய்வு முறைமைகூட – அதனை நாங்கள் விஞ்ஞான ஆய்வு முறை என்று பெருமையுடன் கூறிக் கொண்டாலும் – பெரிதும் எல்லைப்படுத்தப்பட்ட வரையறைகளுக்குட்பட்ட புள்ளிவிபரவியலினூடாகச் சித்து விளையாட்டுச் செய்கின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் படித்து இவ்வாறான கருத்துருவாக்கங்களினால் சாயமிடப்பட்டு வளர்ந்த எங்களுக்கு சற்று நிதானித்து அகவயமாகப் பார்வைகளைத் திருப்பி தேடல் எனும் பொறிமுறை மூலம் அறிதல் என்பதனை அடையும் பொறுமையும் மனப்பாங்கும் மனப்பக்குவமும் இருக்காது போனதில் விந்தையேதுமில்லை.
ஆனால் அவ்வகைப்பட்ட ஒரு பண்பை ஒரு சிந்தனையை நாங்கள் பெற்றுக் கொண்டு சிலவிடயங்களை அனுபவம் மூலம் ஆத்மார்த்தமாக உணரத் தலைப்படவேண்டும் என்று மீராபாரதி அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகின்றார். அவ்வகையான ஒரு சாதகமே பயிற்சியே எம்மையும் எமது சமூகத்தையும் மீண்டெழ வைத்து வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என அவர் கருதுகின்றார். அதற்கு இலகுவான எளிதில் கைவரக் கூடிய ஒரு பயிற்சியாக அவர் தியானம் செய்தல் என்பதனை அறிமுகப்படுத்துகிறார். தியானம் அல்லது மனஒருமைப்பாடு என்பது யோகிகளுக்கும் துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் உரிய ஒன்றல்ல. மறுதலையாக தியானமானது ஒருவரை யோகியாகவும் துறவியாகவும் ஞானியாகவும் ஆக்கிவிடக் கூடிய வல்லமை படைத்தது. அதனை குறைந்தது அதனது அடிப்படையான பயிற்சிகளையாவது நாம் கற்றுக் கொள்வதுடன் எமது சிறுவர்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டியது எமது காலத்தின் தேவையாகும் என்னும் மீராபாரதியின் கருத்தானது எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கின்றது.

மீராபாரதி தனது நூலில் ஒவ்வொரு விடயத்திலும் பிரக்ஞையோடிருத்தல் என்பதனைத் தாண்டிய ஒரு நிலையை அறிமுகப்படுத்தி அதனை விழிப்பாயிருத்தல் என விளங்கப்படுத்துகிறார். இது எனது தற்போதைய புரிதலில் பிரக்ஞையின் இன்னுமொரு தளமாகும். விழிப்பாயிருத்தல் என்பதனை மானுட வாழ்வின் அதி உச்ச நிலையாகக் கொள்ளமுடியும். அவ்வாறு ஒரு நிலை இருப்பதனை அறிந்து கொள்வதுவும் அதனை நோக்கிய பாதையில் எங்களை வளர்த்துக் கொள்வதும் மிக முக்கியமானது. அதனை நாங்கள் அடையாது போனாலும்கூட அதனை நோக்கிய வளர்ச்சியும் அதற்குத் தெரிவு செய்து கொள்ளும் பாதையும் எங்களைப் புடம் போட்டுக் கொள்ள உதவும் என்பது எனது நம்பிக்கை.

மாறிவரும் உலக ஒழுங்கொன்றில் மாயைகளாலும் சாத்தான்களாலும் உருமறைப்புச் செய்யப்பட்ட சிந்தனைகளோடும் உணர்வுகளோடும் நடத்தைகளோடும் இருக்கின்ற எமது சூழலில் மீராபாரதி ஒரு மாற்றுச் சிந்தனையொன்றை இன்னுமொரு தளத்தில் நின்று முன்வைத்திருக்கின்றார். அவரது முயற்சி மிகவும் போற்றத் தக்கது. ஆயினும் அவரது பிரக்ஞை பற்றிய நூலின் உரைநடையானது எனக்கு பட்டப்பின்படிப்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் புலமையாளர்களின் உசாத்துணை நூல் விபரிப்புப் பகுதியை நினைவுபடுத்துகிறது. மறுபுறத்தில் இந்த மனிதர் இவ்வளவு உசாவல்களை மேற்கொண்டிருக்கின்றார் என்ற நினைப்பே என்னைப் பிரமிக்க வைக்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இவரது மரணம் இழப்பு மலர்தல் என்கின்ற புத்தகத்தின் உரைநடையானது இதிலிருந்து விலகி அதிகளவு சுயத்தோடு காணப்படுகின்றது. இது ஒரு குறை அல்ல – ஓர் அவதானம். அவ்வளவே!

இறுதியாக இந்த இரண்டு நூல்களை வாசித்ததன் மூலம் எனது பார்வையிலும் புரிதலிலும் சில மாறுதல்கள் ஏற்பட்டதனை நான் உணர்ந்து கொள்கிறேன். எனது இந்தக் கருத்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்து அல்ல என்பதனை நீங்கள் இந்நூல்களை வாசிக்கும்போது மட்டுமே புரிந்து கொள்வீர்கள்.
வாழ்த்துக்கள். வணக்கம்.

சா. சிவயோகன்
உளமருத்துவ நிபுணர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: