Posted by: மீராபாரதி | January 25, 2014

திருவண்ணாமலை (குகை)யில் தியானம்….

திருவண்ணாமலை (குகை)யில் தியானம்….

ஈரோட்டிற்கான பயணம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. குக்கூ குழந்தைகள் வெளி, சைலாத் சிலம்பாட்டம் மற்றும் கலைத்தாய் அறக்கட்டளை நண்பர்களை சந்தித்ததும் அவர்களது செயற்பாடுகளை பார்த்ததும் நிறைவாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. இதைவிட ஓசோ நண்பர்கள் சிலரை பத்து வருடங்களுக்குப் பின்பு சந்தித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு நண்பர் பாடசாலை பரிட்சையில் சிந்தியடையாதவர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் எட்டாம் பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு அரசாங்கப் பரிட்சைகளை சித்தியடைய வெற்றிகரமாக வகுப்புகள் நடாத்துவது இரட்டிப்பு மகிழ்ச்சி. இருபது வருடங்களா தூப்பரவு தொழிலாளியாக இருந்த ஒரு பெண் எட்டாம் வகுப்பு பரிட்சை சித்தியடைந்து அலுவலகம் ஒன்றில் வேலை செய்வதைக் குறிப்பிட்டார். இந்த நண்பரே நான் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து அதற்கான பணத்தையும் அளித்திருந்தார். நான் மறுத்த போதும் எங்கள் ஊருக்கு வந்திருக்கின்றீர்கள் நாம் தான் செய்யவேண்டும் என கட்டாயபடுத்தியதால் மறுக்க முடியாமல் போய்விட்டது. காலை உணவை பத்துமணியளவில் நானும் நண்பரும் சாப்பிட்டோம். இவற்றுடன் பெரியாரின் வீட்டையும் பார்த்ததும் அதை அழகாகப் பேணுவதும் மகிழ்ச்சியானதாக இருந்தது. தமிழர்களைப் பொறுத்தவரை பெரியார் முக்கியமானவர். ஆனால் இன்று நாம் பகுத்தறிவை மட்டும் நம்பி செயற்படமுடியாது. அதையும் கடந்து சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியவர்களாக உள்ளோம். எனது பயணம் ஈரோட்டிலிருந்து திருவண்ணாமலையை நோக்கித் தொடர்ந்தது.

திருவண்ணாமலையில் குக்கூ நண்பர்களையும் அவர்களது செயற்பாடுகளையும் பார்க்க விரும்பினேன். மற்றும்படி எனக்கு அங்கு வேறு வேலைகள் இருக்கவில்லை. Lonely planetடை நாம் கேரளாவிற்கு வந்தபோதே தவறவிட்டுவிட்டோம். உண்மையில் Lonely planet என்பது தவறான தலைப்பு என நினைக்கின்றேன். இந்த பூமி யாரையும் இழந்து தவிக்கவில்லை. அல்லது யாரையும் எதிர்பார்த்தும் காத்திருக்கவில்லை. உண்மையிலையே அது தனித்தும் பிரபஞ்சத்துடன் இணைந்தும் இசைவாக பயணிக்கின்றது. இந்த நூலுக்கு alone planet என பெயர் வைத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும். சரி.. விடயத்திற்கு வருகின்றேன். நான் திருவண்ணாமலைக்கு போகின்றேன் என ஒரு நண்பரிடம் கூறியபோது அவர் அங்கு இரமண மகரிஸி ஆஸ்சிரமம் இருக்கின்றது என்றார். நண்பர் நிலாந்தன் இரமணர் தியானம் செய்த குகை இருக்கின்றது. போய் அனுபவியுங்கள் என்றார். இரமணர் இந்து மதம் சார்ந்தவராக இருந்தபோதும் அவர் மீது மதிப்பும் விருப்பும் இருந்தது. அவரது தியான முறைகளில் “நான் யார்” என வினவுவது முக்கியமான செய்முறை ஒன்று. இது தொடர்பாக ஓசோவின் சொற்பொழிவுனடாக ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆகவே இந்த இடங்களுக்கு செல்வது என்பதையும் எனது பயணத்தில் இணைத்துக் கொண்டேன்.

பேருந்து சாப்பிடுவதற்காக தரித்து நின்ற இடத்தில் சாப்பிடத் தயக்கம். ஆகவே மதியம் சாப்பிடவில்லை. மாலையளவில் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தேன். மற்ற இடங்களை விட இங்கு மிக இலகுவாக தங்குவதற்கான இடம் ஒன்றை கண்டுபிடித்தேன். ஆட்டோவில் போகும் பொழுது இரமணா லொட்ஜைக் காட்டி விசாரிப்போம் எனக் கேட்டேன். அறுநூறு ரூபாய் சக வரியுடன் தந்தவர் நான் இலங்கையிலிருந்து வந்தேன் என்பதை அறிந்தபின் வரியை விலக்குவதாக கூறினார். இவர் வயதானவர். முன்னால் சட்டத்தரணி மட்டுமல்ல எம்ஜிஆரின் காலத்தில் சட்டசபை உறுப்பிணராக இருந்தவர் எனக் கூறினார். நமது போராட்டம் இப்படிபோனதைக் குறிப்பிட்டு கண்கலங்கினார். சோனியா பழிவாங்கிவிட்டதாகவும் கலைஞர் ஒன்றும் செய்யவில்லை எனவும் குறை கூறினார். இவருடன் உரையாடிவிட்டு அறைக்கு வந்தேன். தொலைக்காட்சியைப் போட்டேன். ஜெயா தொலைக்காட்சி சனல்கள் மட்டும் வேலை செய்தன. மற்ற சனல்களை தடுத்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டேன். குக்கூ நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மதியம் சாப்பிடாததால் ஆறுமணிக்கே சென்று சாப்பிட்டேன். முன்புபோல் அதிகம் சாப்பிடமுடிவதில்லை. இரவு சிறிது உலாத்தினேன். நான்கு புறமும் பெரும் கோபுரங்கள் உடைய அருணாச்சலம் கோவிலை சுற்றி நடந்தேன். பின் அறைக்கு வந்து குறிப்புகள் எழுதி குக்கூ படங்களை முகப்பு புத்தகத்தில் ஏற்றினேன். நாளை காலை எழுந்து இரமண மகரிஸி ஆஸ்சிரமத்திற்கு போவதாக நினைத்துக் கொண்டு நித்திரைகொண்டேன்.

அறைக்குள் வெளிச்சம் வராததால் எழும்புவதற்கு பிந்திவிட்டது. ஏழு மணியாகிவிட்டது. வீட்டுக்கு தொலைபேசியில் கதைத்துவிட்டு குளிக்க சென்றேன். இந்தியாவில் நாம் பயணம் செய்த இடங்களில் தண்ணீரும் அதனுடன் சுடு தண்ணிரும் நன்றாகவும் ஒன்றாகவும் வந்தது இங்கு மட்டும்தான். திருப்பதியாக குளித்துவிட்டு ஒன்பது மணிபோல் சாப்பிடுவதற்கு வெளியே சென்றேன். இரமணரின் ஆஸ்சிரமத்திற்கு அருகில் உள்ள கடையில் இடியப்பம் கேட்டேன். இல்லை என்றார்கள். இட்லி கேட்டேன். முடிந்துவிட்டது என்றார்கள். ஆகவே ஒரு தோசையையும் பாலில்லாத கோப்பியும் சாப்பிட்டு குடித்தேன். இப்பொழுதெல்லாம் அதிகம் சாப்பிடமுடிவதில்லை. ஆசைக்கும் கூட சாப்பிட முடிவதில்லை. இளமையில் எவ்வளவும் சாப்பிடுவதற்கு மனம் இருந்தது. ஆனால் பணம் இருக்கவில்லை. இப்பொழுது பணம் (ஒரளவாவது) இருக்கின்றது. விதவிதமாக உணவுகள் இருக்கின்றன. வாங்கவும் முடியும். ஆனால் சாப்பிட மனம் இல்லை. விருப்பமிருந்தாலும் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. சாப்பிட்டபின் ஆச்சிரமத்திற்கு சென்றேன்.

ஆச்சிரமம் மிகவும் சுத்தமாக இருந்தது. தமிழ் சன்னியாசிகள் தாடி நீண்ட பரட்டைத் தலைமுடியுடன் காவியுடன் முத்தத்திலிருந்த மரநிழலில் உட்காந்திருந்தார்கள். ஐரோப்பியர் பெரும்பாலும் வெள்ளை உடுப்புடன் உலாவிதிரிந்தனர். புத்தக கடையில் வழமைபோல் வியாபாரம் நடைபெற்றது. வாசலிருந்த ஆச்சிரமத்தின் வரைபடத்தைப் பார்த்தேன். இதற்குள் பெரிதாக எனக்கு ஒன்றும் இல்லை எனப் பட்டது. ஆகவே இரமணர் தியானம் செய்த மலைக் குகையை நோக்கி நடக்க முடிவு செய்தேன். ஆனால் ஆச்சிரமத்திற்குள் செருப்புடன் நடக்க முடியாது. செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு ஆச்சிரமத்திற்கு ஊடாக கடந்து சென்றேன். போகும் வழியில் பழைய மண்டபம் புதிய மண்டபம் என்பவற்றில் பல விதமான மனிதர்கள் அமைதியாக உட்காத்திருந்தார்கள். அல்லது தியானம் செய்தார்கள். மண்டபத்தின் நடுவில் கடவுள் சிலை ஒன்றிருந்தது. இந்த மண்டபங்களில் இரமணர் வாழ்ந்திருந்தமையே இதன் சிறப்பு. ஆச்சிரமத்தின் பின்பகுதியில் நூலகம் ஒன்றிருந்தது. இது பொதுப் பாவனைக்கு உரியதல்ல. இதன் கீழ் இருந்த மண்டபம் ஒன்றில் ஒருவர் உடல் முழுவதும் முக்குறியுடன் தீருநூறு பூசி உருத்திராச்சம் மாலைகள் அணிந்து ஆங்கிலத்தில் இரமணரின் கோட்பாடுகளை சொற்பொழிவாக ஆற்றிக் கொண்டிருந்தார்.

நூலகத்திற்கு அருகாமையில் இரமணருடன் வாழந்த துறவிகளினதும் மிருகங்களினதும் சமாதிகள் இருக்கின்றன. இவற்றுக்கு அருகில் இரமணர் நீண்ட காலமாக தாயுடன் வாழந்த ஸ்கந்தா ஆச்சிரமத்திற்கும் அவர் பதினேழு வருடங்கள் தியானம் செய்த விருபாக்சி குகைக்கும் போகின்ற வழி ஆரம்பிக்கின்றது. கால் நடையாக ஒரு மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டும். பயணத்தை ஆரம்பித்தேன். வழி முழுவதும் புதிய மரங்கள் நட்டிருக்கின்றார்கள். மரங்களை பாதுகாப்பது தொடர்பான அறிவித்தல்களும் இருந்தன. வழிகளில் சிலர் சிலைகளை செதுக்கிக் கொண்டிருந்தனர். சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். சிலர் உதவி கேட்டனர். தன்னைப் படம் பிடிக்கும்படி வயதான பெண் ஒருவர் கேட்டார். போகும் வழி முழுவதும் மேலே உள்ள மலைகளையும் கீழே உள்ள திருவண்ணாமலை நகரத்தையும் அதன் அழகையும் படம் பிடித்துக்கொண்டு சென்றேன்.

இரமணரின் ஸ்கந்தா ஆச்சிரமத்திற்கு வந்து சேர்ந்தேன். அழகான பசுமையான குளிர்மையான இடம். கற்பறையுடன் பெரும் மரங்களும் இருந்தன. இந்தியர்கள் வெளியில் நின்று தண்ணீர் போன்றவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே போனபோது பெரும் அமைதி நிலவியது. ஐரோப்பிய பெண்கள் பலரும் சில ஆண்களும் குந்தியிருந்தார்கள். சிலர் கண்முடி இருந்தார்கள். அனைவரும் தியான நிலையில் இருந்தார்கள். நானும் அவர்களுடன் சிறிது நேரம் சம்மணம் போட்டு குந்தியிருந்தேன். தியானம் செய்ய முயன்றேன்.

ஸ்கந்த ஆஸ்திரமத்திலிருந்து வெளியே வந்தபோது இரண்டு பாதைகள் இருந்தன. ஒரு பாதை குகைக்கு செல்கின்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே வெளியே இருந்த இந்தியர்களிடம் மற்றப் பாதை எங்கே செல்கின்றது எனக் கேட்டேன். அது மலைக்கு செல்கின்றது என்றனர். சரி முதலில் மலைக்குச் செல்வோம் என பயணத்தை ஆரம்பித்தேன். பயணம் ஆரம்பித்து சிறிது தூரத்திலையே வெறும் கற்பாறை ஒன்றின் மீது ஏறவேண்டியிருந்தது. கொஞ்சம் கஸ்டமாக இருந்தது. வழுக்குமோ எனப் பயமாகவும் இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குரங்குபோல் கைகளால் பிடித்துக் கொண்டு ஏறினேன். வழி நெடுகளும் அம்புக்குறிகளால் அடையாளம் போடப்பட்டிருந்ததால் ஏறுவதும் இறங்குவதும் பிரச்சனையாக இருக்கவில்லை. ஒவ்வொரு இடத்திலிருந்தும் மலைகளையும் நகரத்தையும் அதன் அழகையும் படம் எடுத்தேன். அரைவாசி தூரம் போவதற்கு முதலே மயக்கம் வருவது போல் இருந்தது. இவ்வாறு நடைபெறுவது இதுதான் முதல் தடவை. வழமையாக நான் உறுதியான மனிதர் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கும். எடுத்த காரியத்தை முடித்து விடுவேன். ஆனால் இன்று என்னையும் மீறி எனது உடல் இயங்கியது. நான் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தேன். மிகக் குறைவான பயணிகளே பயணம் செய்தனர். ஒருவர் என்னை கடந்து விரைவாக மேலே சென்றார். பயணத்தை இடையில் நிறுத்துவோமா என யோசித்தேன். பின்பு சரி முயற்சிப்போம் என நடந்தேன். எவ்வளவு நேரம் ஏறியிருப்பேன் எனத் தெரியாது. ஒரிடத்தில் இரு ஐரோப்பியர் கதைத்துக் கொண்டிருந்தனர். ஒருவர் என்னைக் கடந்து விரைவாக மேலே ஏறியவர். மற்றவர் மேலிருந்து கீழே வருகின்றவர். அவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் மேலே ஏற வேண்டும் எனக் கேட்டேன். மேலும் ஒரு மணித்தியாலங்கள் ஏற வேண்டும் என்றார். தனக்கு மேலே ஏறுவதற்கு மூன்று மணித்தியாலங்கள் பிடித்தன. சில நேரம் எனக்கு தொந்தி இருப்பதால் நிறைய நேரம் எடுத்திருக்கும் என்றார். மற்றவர் தான் மேலே ஏறவில்லை என்றார். நானும் என்ன செய்வது என யோசித்தேன். இவர்களின் பேச்சு எதிர்மறையாக இருந்ததாக உணர்ந்தேன். சில நேரங்களில் மன எண்ணங்களுக்கும் நம் உணர்வுகளால் ஏற்படும் எண்ணங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிவது கஸ்டமானது. ஆகவே இவர்களது பேச்சை உள்வாங்காது எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.

சிறிது தூரம் சென்றபின் நன்றாக களைத்துப் போயிருந்தேன். அடிக்கடி மயக்கம் வருவதுபோல் உணர்ந்தேன். வயது போகின்றதா அல்லது வேறு ஏதுவும் காரணமா எனப் புரியவில்லை. ஆகவே நிழலான இடத்தில் அமர்ந்தேன். இருவர் மேலே இருந்து வந்து கொண்டிருந்தனர். இன்னும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்று கேட்டேன். அரை மணித்தியாலங்கள் என்றனர். ஆணிடம் என்னை படம் எடுக்கும்படி கேட்டேன். பெண் நான் எந்த ஊர் என்றார். தான் பிரேசில் என்றார். தண்ணி குடித்துவிட்டு மேலும் சிறிது தூரம் ஏறினேன். மனமோ உடலோ இனிமேலும் முடியாது எனக் கூறியது அல்லது உணர்த்தியது. நன்றாக களைத்திருந்தேன். பசியும் எடுத்தது. இவ்வாறு மலை எறுவதாக இருந்தால் இன்னுமொரு தோசை சாப்பிட்டிருக்கலாம் என யோசித்தேன். சிலநேரம் தனியாக ஏறுவது அலுப்பாக இருந்ததோ தெரியாது. இனி ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே மேல் நோக்கிய பயணத்தை இடை நிறுத்தி கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் சில இந்திய தமிழக இளைஞர்கள் கூட்டம் ஒன்று மேலே ஏறிவந்து கொண்டிருந்தார்கள். இவர்களில் சிலர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள். சிலர் கிராமங்களிலிருந்து வந்தவர்கள். இவர்களைக் கூட்டிக் கொண்ட செல்கின்றனர் முன்னவர்கள். அவர்களிடம் விசாரித்ததில் மேலே செல்ல இன்னும் இருபது நிமிடங்கள் மட்டுமே இருக்கின்றன என்றனர். மேலும் கார்த்திகை மாதங்களில் பத்து நாட்களுக்கு மலை உச்சியில் விளக்கு எரிப்பார்கள். முதல் நாள் மிகவும் விசேசமாக இருக்கும். துறவி ஒருவர் மேலே வாழ்வதாகவும் கூறினர். இந்த மலைகளில் பல மூலிகைச் செடிகள் மரங்கள் இருக்கின்றன. ஆனால் பலருக்குத் தெரியவில்லை என்றனர். இளைஞர்களைக் கண்டது தெம்மைத் தந்தாலும் அவர்களுடன் இணைந்து மேலே செல்ல மனம் விரும்பினாலும் உடலால் முடியவில்லை. சரி இந்த முறை இவ்வளவுதான். அடுத்த முறை ஏறுவோம். என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

கீழே இறங்கி நேராக விருபாக்சி குகைக்கு சென்றேன். குகையும் மரங்கள் சூழ அமைதியான ஒரு இடத்தில் அழகாக இருந்தது. குளிர்மையாக உள்ளேயும் வெளியேயும் இருந்தது. மிகவும் களைத்துப் பசியாக இருந்த எனக்கு இந்த இடம் இதமாக இருந்தது. குகை கற்பாறை ஒன்றுக்குள் இருந்தது. இந்த இடத்தை அழகான அறையாக கட்டியிருக்கின்றார்கள். இவை இப்பொழுது இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானதாக இருக்கின்றன. உள்ளே சென்றபோது மிகவும் அமைதியாக இருந்தது. இந்த இடங்களில் மிகவும் பிடித்த விடயம் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் வரையறைகளும் வழிபாட்டு முறைகளும் இல்லை. கண்காணிப்பதற்கு ஒருவரும் இல்லை. அமைதியாக இருக்க வேண்டும் என்ற பலகை மட்டுமே இருக்கின்றது. ஆகவே ஒவ்வொருவரும் தாம் விரும்பியபடி தியானம் செய்யலாம். பசி தாங்க மாட்டாத எனக்குப் பசி பறந்தது. மறந்தது. தியானம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் வந்தது.

முழுமையான தியான நிலை என்பது பிரபஞ்சத்துடன் ஒன்றித்திருப்பது. இதுவே உயர் நிலை. இதற்கு கீழ் நிலையிலிருப்பது என்னை நானே கவனிப்பது அல்லது சாட்சியாக இருப்பது. இதற்கும் கீழே இருப்பது நமது மூச்சைக் கவனிப்பது. அல்லது இரமண மகரிஸியின் பிரசித்தி பெற்ற “நான் யார்” என வினவுவது. இவ்வாறான தியானங்களை செய்வதற்கு ஓசோவின் பல தியான முறைகளை ஏற்கனவே பயிற்சி செய்திருந்தால் நல்லது. அவை நம்மைத் தயார்படுத்தும். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே இருந்ததால் மூச்சைக் கவனிக்கும் தியானத்தை செய்வது இலகுவாக இருந்தது. ஆனால் அது அவ்வளவு இலுகுவானதல்ல. பல்வேறு எண்ணங்கள் வந்து அலைக்கழைக்கும். அதையும் கவனித்து கடந்துபோக முயற்சித்தேன். இவ்வாறு சிறிது நேரம் தியானம் செய்தேன். குகையின் உள்ளே இருப்பது புதிய அனுபவம். ஒருவிதமான சக்தி நம்மை ஆட்கொள்ளும். அதாவது ஒவ்வொரு இடத்திலும் மனிதர்களிலும் ஒவ்வொரு விதமான சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சில இடங்களுக்கு சென்றால் இந்த சக்திகள் மனிதர்களுடன் இசைந்து இணைந்து இயங்கும். இதுவே புதிய உணர்வுகளை அனுபவங்களைத் தரும். சிறிது நேரத்தின் பின்பு கீழே இறங்கி வந்தேன். நேரம் இரண்டு மணியாக இருந்தது. மீண்டும் பசிக்க ஆரம்பித்தது. சாப்பிட செல்லும் வழியில் ஒரு பழைய கொட்டிலுக்கு முன்னால் நான்கு வயோதிபர்கள் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பத்து வருடங்களாக பல்வேறு தியான பயிற்சிகள் செய்தபோதும் இன்னும் என்னால் எனது காமத்தைக் கடக்க முடியவில்லை. உணர்ச்சிகளை கவனிக்க முடியவில்லை. உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கோவத்தை வெளிப்படுத்துகின்றேன். மற்றவர்களை கஸ்டப்படுத்துகின்றேன். பேசும் வார்த்தைகள் மற்றவர்களை நோகடிக்கின்றன. இப்படி பல…. ஆகவே மேலும் தியானத்தில் ஆழமாக செல்ல வேண்டும் என்பதும் மட்டும் உறுதியாகிக் கொண்டு வருகின்றது. அப்பொழுதுதான் நான் மாறலாம். வளரலாம். எனது படைப்புகள் அர்த்தமுள்ளவையாக மாறும். புதிதாக வரும். புதிய சமூகத்தைக் கட்டியெழுப்ப புதிய மனிதர்கள் தேவை. தியானமே அதற்கான வழி….
மீண்டும் நகரத்தை அடைய வந்த வழியால் திரும்பி செல்ல வேண்டிய அவசியமில்லை. குகையிலிருந்து கீழே செல்லும் வழியால் தொடர்ந்தால் இருபது நிமிடங்களில் நகரத்தை அடையலாம். பெரும் கோயிலின் வடக்கு மேற்கு கோபுரங்களுக்கு இடைப்பட்ட பிரதான வீதியின் பகுதியை சென்றடையலாம். இதேபாதையை நகரந்திலிருந்து இந்த இடங்களுக்கு விரைவாக செல்லப் பயன்படுத்தலாம். அடுத்த நாள் காலை எழுந்து குளித்து சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு இந்தக் குகையை நோக்கி குறுக்கு வழியால் நகரத்திலிருந்து இருபது நிமிடங்களில் வந்தேன். மதியம் பின்னிரென்டரை மணி வரை குகையில் தியானம் நிலையில் இருந்தேன். மனதை எண்ணங்களைக் கடக்க முயற்சி செய்தேன். பயணம் தொடரும்….

குக்கூ நண்பர் விநோத்தை சந்தித்தேன். இவர் இரவு நேரம் என்னைக் கூட்டிச்சென்று புதிய நண்பர்களை அறிமுகப்படுத்தினார். நான் ஏறிய மலையைச் சுற்றி பதினாங்கு மையில் கொண்ட வீதி இருக்கின்றது என்றார். இந்த வீதியால் அதிகாலையிலையே மனிதர்கள் நடந்து செல்வார்கள். பல விதமான மனிதர்களை துறவிகளை சந்திக்கலாம். இந்தத் துறவிகளில் அனைவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தபோதும் பலவிதமானோர் உள்ளனர். சிலர் ஏமாற்றுகின்றவர்கள். சிலர் தமிழ் அறிஞர்கள். சிலர் ஞானிகள். இவர்களை அடையாளம் காணுவது நம்மைப் பொறுத்த விடயம். இவர் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டார். இந்த நகரத்தில் அதாவது மலையைச் சுற்றி 365 குளங்கள் உள்ளன என்றார்.

திருவண்ணாமலை (குகை) மீண்டும் வரவேண்டிய நகரம்.
தியானம் செய்வதற்கு….
மீராபாரதி
இந்தப் பயணம் தொடர்பான படங்களை எனது முகப்பு புத்தகத்தில் பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: