Posted by: மீராபாரதி | January 14, 2014

கேரளத்து….. ஒரு பயண அனுபவம்!

கேரளத்து….. ஒரு பயண அனுபவம்!
சேர நாட்டினம் பெண்களுடன் என்ற பாரதியின் பாடல் ஒன்றில் வரும் வரிகளே கேரளா தொடர்பான முதலாவது அறிமுகத்தை எனக்கு தந்தது என நினைக்கின்றேன். இதன் பின் உலகில் முதல்  முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று தேர்தலில் பங்கு பற்றி வெற்றி பெற்று ஆட்சி செய்கின்ற இடம் எனவும் அறிந்திருந்தேன். இதன் பின் அடூர் கோபாலகிஸ்ணன், சஜி காருண், அரவிந்தன்… போன்றவர்களின் திரைப்படங்களான எலியப்பத்தாயம், முகமுகம், பிறவி…. என்பன பார்க்க கிடைத்தன. இந்தப் படங்களைப் பார்த்து கேரளா பற்றிய கனவு எனக்குள் ஆழமாகப் பதிந்து விட்டது. குறிப்பாக இந்தத் திரைப்படங்களில் காட்டப்பட்ட உணவுகளும், அவை சாப்பிடுகின்ற முறைகளும், மனிதர்கள் நாளாந்தம் பயணம் செய்கின்ற இடங்களும், மனதுக்குள் பதிந்து கனவில் கிளைவிட்டு பரவ ஆரம்பித்தன. மேலும் கேரளா நெறியாளர்கள் மட்டுமல்ல பல நடிகர்களும் நடிகைகளும் எனது விருப்பத்துக்கு உரியவர் ஆனார்கள். இவற்றின் வெளிப்பாடாக கேரளாவிற்கு போகவேண்டும் என்ற எண்ணம் என் மனதின் ஒரு முளையில் வேர் விட்டு மரமாக வளர ஆரம்பித்த்து. இந்தக் கனவு மரத்தில் கனிகளாக காய்க்க ஆரம்பித்தன. 2002ம் ஆண்டு நமது இரண்டாவது இந்தியப் பயணத்தின் போது கேரளாவிற்கான பயணம் சாத்தியமானது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது வேறு ஒரு பதிவு. நேபாளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு அதன் இந்திய எல்லைக் கிராமமான கோரப்பூரில் இருந்து கேரளாவிற்கான பயணத்தை ஆரம்பித்தோம். வழமைபோல உறுதிசெய்யப்படாத புகையிரத சீட்டுடன் அதிகாலையில் ஆரம்பித்த பயணம் மேலும் இரவில் இரண்டு இரவுகள் இரண்டு பகல்கள் கொண்ட நீண்ட பயணமாக இருந்தது. இந்தப் பயணங்களின் போது பல பயணிகளுடன் அறிமுகமானோம். கேரளத்து மனிதர்கள் முன்னால் இராணுவத்தினர் அறிமுகமானர்கள். இவர்கள் எங்களை தங்கள் வீடுகளுக்கும் அழைத்தார்கள். புதிதாக மணம் முடிந்த ஜோடி ஒன்று தேன்நிலவுக்கு செல்வதற்கான புகையிரத நிலையத்திற்கு வந்திருந்தார்கள். இந்த ஜோடி புகையிரத்த்தில் ஏறுவதற்கு முதல் பொது இடம் ஒன்றில் தமது பெற்றோரின் காலில் அட்டாங்க நமஸ்காரம் போட்டு கும்பிட்டு ஆசி வாங்கியது ஆச்சரியமாக இருந்தது. அதிலும் அந்த கணவன் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவன் என்பதை பின்பு அறிந்தபோது மேலும் ஆச்சரியமாக இருந்தது.

நமது முதல் கேரள பயணத்தின் போது கோச்சின், ஆழப்புலா, கோவலம் கடற்கரை, திருவனந்தபுரம், மற்றும் வர்க்கலா போன்ற இடங்களுக்கு சென்றோம். நாம் சென்ற இடங்களில் எல்லாம் மனிதர்கள் அன்புடன் வரவேற்றார்கள். பிற இடங்களைப் போல ஏமாற்றவில்லை. ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நியாயமான விலை கூறினார்கள். இப்படி பல அனுபவங்கள்… ஆனால் கேளரத்து பெண்கள் மிக அழகானவர்கள் என கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நாம் பார்த்தபோது அவர்கள் நம் நாட்டுப் பெண்கள் போலவே அழகாக இருந்தார்கள். நமது கனவுகளில் வாழந்த அழகான(?) பெண்களை காணக்கிடைக்கவில்லை. ஆனால் தென்னாசியாவில் முதன் முதலாக கட்டிய தேவாலையத்தைப் பார்த்தோம். பழங்கால் மீன்பிடி முறையைப் பார்த்தோம். படகு வீட்டில் பயணம் செய்தோம். கடலில் குளித்தோம். இவ்வாறு எல்லாம் செய்தபோதும் நமது முதல் கேரளப் பயணத்தின் நோக்கம் இதுவல்ல. மாறாக அரசியலை விட்டு ஓதுங்கிய பின் என்ன தொழில் செய்வது என தெரியாது அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம் அது. கேரளாவில் ஒருவரிடம் மாசாஜ் கற்கலாம் என எனது நண்பர் ஒருவர் சிபார்சு செய்தார். இந்த நோக்கத்திற்காகத்தான் கேரளாவிற்கான நமது முதல் பயணம் இருந்தது. 

மசாஜ் பழக்குகின்றவர் வர்க்கலாவில் இருந்தார். இப்படித்தான் வர்க்கலா நமக்கு அறிமுகமானது. பத்து நாட்கள் தங்கியிருந்து பயிற்சி எடுக்க வேண்டும். ஆகவே கடற்கரைக்கு அருகில் மேடாக இருந்த ஒரு இடத்தில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினோம். இந்த இடம் ஒரு சிறிய சுற்றுலா தளமாக இருந்தது. ஆனாலும் மிகக் குறைவான உல்லாசப் பயணிகளே இங்கு இருந்தனர். மிக மிக குறைவான இந்திய உல்லாசப் பயணிகள் இருந்தனர். இது ஒரு அழகான சிறிய கடற்கரை. கடற்கரைக்கு அருகில் ஒரு மேடு. இந்த மேட்டில் பத்துக்கு மேற்பட்ட உணவகங்கள் இருந்தன. இங்கிருந்த பத்து நாட்களிலும் காலையும் மாலையும் இரண்டு இரண்டு மணித்தியாலங்கள் மசாஜ் பயிற்சி செய்ய வேண்டும்.

நாம் காலை எழுந்தவுடன் மலை மேட்டு நீளத்திற்கு நடப்போம். பின் ஒரு உணவகத்தில் சுவையான கேரளா புட்டு, இடியப்பம் மற்றும் உப்புமா தருவார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு உணவை உண்போம். மதியம் மற்றும் இரவுக்கு வேறு எதாவது ஒரு உணவகத்தை தெரிவு செய்து ஒவ்வொரு நாளும் விதவிதமாக உண்போம். பகல் வேலையில் கடற்கரையில் குளிப்போம். மீண்டும் இரவில் மின் விலக்குளின் வெளிச்சத்தில் நடப்போம். இந்தக் காலத்தை நமது முதலாவது தேனிலவு காலமாக கொண்டாடினோம். தேன்னிலவு அனுபவிக்க விரும்புகின்றவர்களுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கம் என்றால் மிகையல்ல. இந்த நாட்களில் வேறு ஒன்றுமே நாம் செய்யவில்லை. ஆனந்தமாகவும் ஆறுதலாகவும் உல்லாசமாகவும் இருந்தோம். வாழ்வில் வேறு என்ன வேண்டும்? கேரளா கடவுளின் நாடாக இருந்தபோதும் இந்தியாவின் வெனிசாக இருந்தபோதும் நமக்கு கிடைத்த அனுபவம் கேரளாவை குறிப்பாக வர்க்கலாவை நமது இதயத்திற்கு அருகில் கொண்டு வந்தது. நமது நாடு வீடு போன்ற உணர்வைப் பெற்றோம். பத்து நாட்களின் பின் விருப்பமற்று விடைபெற்றோம். அன்றிலிருந்து மீண்டும் கேரளாவிற்கு வரவேண்டும் வர்க்கலாவில் சில நாட்களாவது தங்க வேண்டும். கேரளா புட்டு இடியப்பம் உப்புமா என்பவற்றை மீண்டும் சாப்பிட வேண்டும்  ஆகிய எண்ணங்கள் மனதில் நிலைபெற்றன. இந்தக் கனவு பன்னிரென்டு வருடங்களின் பின்பு நமது மூன்றாவது இந்தியப் பயணத்தின் போது  மீண்டும் நிறைவேறியது.

இம் முறை கேரளாவிற்கான பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். வகை வகையான கேரள உணவுகள் உண்பது. நமது பயணத்தை பெங்களுரில் இருந்து பேருந்தில் ஆரம்பித்தோம். பேருந்துற்காக ஒரு இடத்தில் காத்திருந்தபோது எனக்கு வழமைபோல பசி எடுத்தது. பல நேரங்களில் நான் பசி தாங்க மாட்டேன். ஆனால் நான் சாப்பிடக்கூடிய வகையில் சாப்பாடுகள் உள்ள உணவகம் ஒன்றும் அருகில் தேடியும் கிடைக்கவில்லை. நாம் பசியுடன் இருப்பதையும் சாப்பாடு வாங்க இடம் தெரியாது இருப்பதையும் அருகிலிருந்த ஒரு தாயும் மகளும் கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். ஆனால் மலையாளம் கலந்த தமிழில் உரையாடிக் கொண்டிருந்தனர். தான் அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி வரப் போவதாகவும் எங்களுக்கும் வாங்கி வருவதாகவும் அந்த மகள் எங்களிடம் கூறினார். நாம் தயங்கினோம். வண்டி வந்துவிடும் என்றோம். வாங்கிய சாப்பாடு வீணாகி விடும் என்றோம். இல்லை நீங்கள் போனால் நான் சாப்பிடுவேன் என கூறிச் உணவை வாங்கச் சென்றார். சிறிது நேரத்தில் இரண்டு இட்லிகள் மற்றும் தேங்காய் சட்டினி கொண்ட இரு பெட்டிகள் கொண்டு வந்து தந்தார். ஆனால் அதற்கான பணத்தை வாங்க மறுத்துவிட்டார். சாப்பாடு தென்இந்தியாவில் மலிவானதுதான். ஆனாலும் அவர்களின் பண்பு அதைவிட உயர்வானதாக இருந்தது. சரி நாம் இதை வேறு யாருக்கும் செய்வது என்ற முடிவுடன் பணத்தை கட்டாயப்படுத்தி கொடுக்காது நன்றி மட்டும் கூறி விடைபெற்றோம். வாகனமும் வந்துவிட்டது. வண்டியில் ஏறி கர்நாடாக எல்லையில் பெரிய வண்டி ஒன்றுக்கு மாறினோம். நன்றாக நித்திரை கொண்டுவிட்டோம். நடுநசியில் கிர்ஸ்ணகிரியில் நிற்பாட்டினார்கள். இறங்கி பாலில்லா தேனீர் தேடினால் கிடைக்கவில்லை. சரி என மீண்டும் நித்திரை கொண்டுவிட்டேன்.

காலை ஒன்பது மணிக்கு ஆழாப்புலாவில் இறக்கிவிட்டார்கள். கேரளா உல்லாசப்பயணத்துறை அலுவலகம் பற்றி பயண நூலில் நன்றாக கூறியிருந்தார்கள். ஆனால் அவர்கள் காலை பத்து மணிக்குத்தான் திறப்பார்கள் எனக் காவல் காப்பவர் கூறினார். ஆகவே அருகிலிருந்த உணவகத்தில் காலை உணவாக இட்லி சாப்பிட்டேன். தங்குவதற்கான இடங்களைப் பார்ப்பதற்கு நூலைத் தேடினால் அதைக் காணவில்லை. அப்பொழுதுதான் வண்டியில் அதைத் தவறவிட்டுவிட்டோம் என்பது புரிந்தது. நூல் இல்லாமல் தனது ஒரு கை இழந்த்த்தைப் போல் Shirley உணர்ந்தார். கடந்த முறை படகு வீட்டில் பயணம் செய்தது பெரிய சந்தோசத்தைத் தரவில்லையாததால் இம் முறை அவ்வாறு பயணம் செய்வது இல்லை என முடிவு எடுத்திருந்தோம். ஆனால் கிராமத்திற்குள் வள்ளங்கள் படகுகள் பயணிக்கின்ற ஓடைக்கு அருகில் உள்ள உள்ளுர் வீடுகளில் சாப்பாட்டுடன் தங்கும் வசதி கொண்ட இடத்தில் தங்குவது என முடிவெடுத்தோம். உணவகத்திலிருந்து அலுவலகத்திற்கு வந்தபோது அது இன்னும் திறந்திருக்கவில்லை. காவலர் இரவு குடித்திருக்க வேண்டும். அல்லது அவர் அப்படித்தான் இருந்தார். ஆனால் தனது அறையில் நமது பொதிகளை வைக்கவும் நாம் இருக்கவும் இடம் தந்தார். பத்து மணிக்கு அலுவலகர் வர அவரிடம் எமது விருப்பத்தை கூறினோம். அவர் ஒரு இடத்தை சிபார்சு செய்தார். அவர் நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது தீடிரென ஒருவர் வந்தார். முதல் அலுவலர் திடிரென எழுந்து பக்கத்து கதிரையில் இருந்தார். வந்தவர் முதல் அலுவகர் இருந்த கதிரையில் இருந்தார். இவர்தான் உண்மையான அதிகாரி என அப்பொழுதுதான் நமக்கு விளங்கியது. ஆனால் அங்கிருப்பவர்களிடம் தனது தாமதத்திற்கு மன்னிப்பு கேட்காத்து மட்டுமில்லை சக ஊழியருடன் உரையாடாமலே அதிகாரத்துடன் நடந்து கொண்டது எனக்கு எரிச்சலை தந்தது. இருப்பினும் புதியவரிடம் மீண்டும் நமது விருப்பத்தைக் கூறினோம். வந்தவர் கட கட வென நமக்கான இடங்களை தீர்மானித்து விட்டு மற்ற பயணிகளுக்கும் கட கட வென பதிலளித்து விட்டு தனது கைதொலைபேசியினுள் புகுந்தார். அவருக்கு என்ன பிரச்சனையோ என்று நினைத்துவிட்டு அந்த அலுவலத்தை விட்டு நாம் அகன்றோம். ஆனால் அவரது பண்பு நமக்கு எரிச்சலை தந்தது.

ஓட்டோவில் முதல் அலுவலகர் குறிப்பிட்ட இடத்திற்குப் போனம். அது வாவியோரம் இருந்து தங்குமிட விடுதி. இங்கு ஒருவர் கேரளா சாப்பாடும் சமைத்து தருவதாக  கூறினார்கள். ஆனால் சமைப்பவர் அலுவலகாக நகரத்திற்கு போனதால் இப்பொழுது ஒன்றும் சமைக்க முடியாது என அங்கிருந்த பையன் கூறினான். ஆனால் சாப்பாட்டை நகரத்திலிருந்து வாங்கி வர சொல்லலாம் என்றார். இருவருக்கும் பசி. ஆகவே அங்கிருந்து இடியப்பம் வாங்கி வரும்படி கூறிவிட்டு நாம் குளிந்து ஆயத்தமானோம். நாம் குளித்து முடிய இடியப்பம் வந்தது. மதியம் மற்றும் காலையில் என்ன கேரளா சாப்பாடு கிடைக்கும் என விசாரித்தோம். பொறுப்பாக இருந்தவர் இந்த உணவக விடுதி இப்பொழுதுதான் ஆரம்பித்ததாகவும் தம்மிடம் வெளிநாட்டிவருக்கு ஏற்ற உணவுகள் தான் உள்ளன எனவும் கேரளா சாப்பாடுகள் செய்து தர வசதிகள் இல்லை என்றார். சரி இனி என்ன செய்வது என்று நாமே நமது உணவை சாப்பிடுவதற்கான உணவத்தை தேடினோம்.

ஆழப்புலாவில் நாம் விரும்பிய வகையில் உணவங்களும் கேரளா புட்டு இடியப்பம் உப்புமா இல்லாமல் வெறுத்துவிட்டது. கிடைத்ததை சாப்பிட்டோம். அடுத்த நாள் காலையில் எழும்பி எங்கு புட்டு இடியப்பம் சாப்பிடலாம் என விசாரித்தோம். வாவி அருகால் நடந்து சிறிய ஓடையைக் கடந்து போனால் அருகிலிருக்கும் ஒரு கடையில் சாப்பிடலாம் என்றார்கள். ஆனால் அங்கு செல்வதற்கு அரசாங்க வள்ளத்திற்கு ஒரு மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும். என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் சிறு வள்ளம் ஒன்றில் போய்க் கொண்டிருந்தார். அவரிடம் கையினால் சைகை செய்து பக்கத்து கடைசியில் விட முடியுமா எனக் கேட்டேன். அவர் தனது வள்ளத்தை எம்மை நோக்கி கொண்டு வந்தார். அவரது வள்ளத்தில் அருகிலிருந்த ஊர் பெட்டிகடை உணவகத்திற்குப் போனால் அங்கு புட்டு இல்லை. இடியப்பம் மட்டும் தான் இருந்தது. அதற்கும் முட்டைக்கறி மட்டும்தான் இருந்த்து. ஆகவே நான் மட்டும் சாப்பிட்டேன். ஆனால் அங்கிருந்த வாழைப்பழ பட்சி அல்லது பொறியலை பார்த்து Shirleyக்கு விருப்பம் வந்து விட்டது. வாங்கி சாப்பிட்டார். இப்படியான ஒரு கடையில் முதன் முதலாக இவர் வாங்கி சாப்பிட்ட சாப்பாடு இது என்றார். மிகவும் சுவையாக இருந்ததாகவும் கூறினார். சில நேரங்களில் இவ்வாறான பெட்டிக் கடைகள் பார்ப்பதற்கு சுத்தமில்லாமல் இருக்கும். ஆனால் அங்கு சமைக்கும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும்.

ஆழாப்புலாவில் தொடர்ந்தும் இருப்பதற்கு எமக்கு விருப்பமில்லை. நமது கனவு பூமியான வர்க்கலாவிற்கு போக முடிவெடுத்தோம். மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஒரு புகையிரதம் இருக்கின்றது எனக் கூறினார்கள். அதற்குப் பயணமானோம். ஆனால் புகையிரத நிலையைத்தில் மூன்று மணிக்குத்தான் வரும் என்றார்கள். ஆகவே பொதிகளை புகையிரநிலையத்தில் பணம் கொடுத்து வைத்துவிட்டு மதிய உணவு சாப்பிட சென்றோம். உறங்கிச் செல்கின்ற பற்றுச்சீட்டை வாங்கி அதற்கான பெட்டியில் ஏறினோம். வழமைபோல மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டு எறினார்கள். அதிசயமாக ஐரோப்பிய மனிதர்கள் சிலரும் முண்டியத்துக் கொண்டு ஏறி ஆட்கள் இல்லாது இருந்த மூன்றாவது தட்டு அதாவது மேல் படுக்கை இருக்கையில் கட கடவென ஏறி படுத்துக் கொண்டார்கள். அவர்களும் இந்த ஊருக்கு பழகிவிட்டார்கள். நமக்கு பொதிகள் அதிகமாக இருந்ததால் அவ்வாறு செய்ய முடியவில்லை. பொதிகளை இழுத்துக் கொண்டு இடம் தேடினோம்.

ஒரு இடத்தில் கேளரத்து இளம் பெண்கள் ஐந்து பேர் ஒரு புறம் இரண்டு பேரும் மறு புறம் மூன்று பேரும் இருந்தார்கள். அவர்கள் அருகில் அவர்களது சிறு பைகளும் இருந்தன. நாம் இருப்பதற்கான இடமும் இருந்தது. ஆகவே இதில் யாரும் இருக்கின்றார்களா எனக் கேட்டேன். அவர்கள் ஆம் என்றார்கள். ஆனால் Shirley ஆம் பைகள் இருக்கின்றன என பதிலளித்தார். நாம் இருப்பதற்கு இடம் தர அந்தப் பெண்களுக்கு விருப்பமில்லை. இந்தப் உறங்கிச் செல்லும் பயணப் பெட்டிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவை. இரவு நேரங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த இருக்கைகளில் படுத்துக் கொண்டு செல்லலாம். மற்றவர்கள் ஏற முடியாது. ஆனால் பகல் வேளைகளில் உறங்குகின்றவர்கள் மேல் தட்டில் மட்டும் உறங்க இரண்டாவது தட்டை மடித்து மூன்றாவது அதாவது கீழ் தட்டில் பயணிகள் இருப்பதற்கு வழிசெய்ய வேண்டும். அப்பொழுதுதான் பதிவு செய்தவர்கள் அல்லது காத்திருப்பவர்கள் ஆனால் இடையில் ஏறி இருக்கைகள் அற்றவர்கள் இருந்து செல்லலாம். ஆனால் இந்தப் பெண்கள் அந்தப் புரிந்துணர்வு இன்றி தாம் மட்டும் இருப்பதற்காக நமக்குத் தர மாட்டோம் என்றார்கள். கேரளத்து மனிதர்கள் நல்ல மனிதர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு கெட்டவர்களாக இருக்கின்றீர்கள் எனக் கேட்டேன். அவர்களிடம் அதற்குப் பதில் இல்லை. கேரளத்துப் பெண்கள் அழகானவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் நீங்கள் அழகாக இல்லை எனக் கூற வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் அதைச் சொல்லாமல் Shirley தடுத்துவிட்டார்.

இவர்களின் செய்கை பொது மனித புத்தியா அல்லது பெண்களின் புத்தியா என பொதுமைப்படுத்த முடியவில்லை. ஏனெனில் எமக்கு சாப்பாடு தந்த பெண்ணும் நம் நினைவில் வந்தார். பின்பு நாம் கிடைத்த இடத்தில் இருந்து பயணம் செய்தோம். நாம் பயணம் செய்ய வேண்டியது இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே. இந்தப் புகையிரதமும் மேலும் மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே பயணம் செய்து திருவனந்தபுரத்துடன் நின்று விடும். இந்தப் பெண்களும் இடையில் இறங்கிவிடுவார்கள். ஆனால் இந்தக் குறுகிய நேரத்திற்குள் தான் எத்தனை மனங்கள். போராட்டங்கள். மேலும் இந்த முறை கேளர பயணத்தின் போது பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த கேளர மனிதர்களை தரிசிக்க முடியவில்லை. அவர்களும் வியாபார போட்டிக்குள் உள்வாங்கப்பட்டு விட்டார்கள் போல…..

புகையிரத பயணம் முடிந்து ஆட்டோ ஒன்று பிடித்து நமது இடமான வர்க்கலா கடற்கரையோரத்திற்கு வந்தோம். அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தபின் பொதிகளை வைத்துவிட்டு மலை முகட்டில் ஒரு நடைபோட்டோம். கடல் புஸ்பங்களை எவ்வளவு அழகாக பார்வைக்கு வைத்திருந்தார்கள். Shirleyக்கு கடல் புஸ்பங்கள் மீது சின்ன சின்ன ஆசை இன்னும் உண்டு. குறிப்பாக இறால் பொறியல். மூன்றே மூன்று பெரிய இறால்களை தெரிவு செய்து அவற்றைப் பொறித்து தரும்படி கேட்டார். மூன்றையும் சாப்பிட்டார். இது அதிசயம். அடுத்த நாள் நண்டு வாங்கி கேரளா வகை தேங்காய் குழம்புடன் சாப்பிட்டார். காலை எழும்பி முகம் கழுவி விட்டு முதல் வேலையாக காலை உணவு சாப்பிட சென்றோம். இத் தொடர் கடைகள் ஆரம்பிக்கின்ற முதல் கடையில் உப்புமாவும் வெள்ளையரிசி மா புட்டும் வாழைப்பழம் தேன் என்பவற்றுடன் தருவார்கள். அதைச் சாப்பிட்டோம். மதியம் கடலில் குளித்துவிட்டு சோறும் பல்வேறு விதமான கறிகளும் கொண்ட தாளி சாப்பிட்டோம். இப்படி எல்லாம் செய்து விட்டு இந்த வெய்யிலில் நின்றால் அறையில் சென்று நன்றாகத் நித்திரை கொள்ளத்தான் மனம் விரும்பும். ஆனால் நாம் அதை விரும்பவில்லை.

கிராமங்களுக்குள் வள்ளத்தில் சென்று பார்க்க விரும்பினோம். ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் ஒரு கிராமத்தை நோக்கி காரில் பயணம் செய்தோம்.  இந்தக் கிராமம் கொல்லம் நகரிலிருந்து உள்நோக்கி இருந்தது. ஒரு இடத்தில் இறங்கி வள்ளத்தில் நமது பயணத்தை ஆரம்பித்தோம். வள்ளத்தின் சாரதி தன்னை குட்டன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். தனது முழுப் பெயர் ஓமக்குட்டன் என்றார். அவரைப் பார்த்தால் நன்றாக மது அருந்தியவர் போல் இருந்தார். அவரது கதையும் அப்படி இருந்தது. சரி இவ்வாறான வேலை செய்பவர்களுக்கு அவசியம் தானே என நினைத்துக் கொண்டு பயணம் செய்தோம். வள்ளம் தென்னம் தோப்புகள் மற்றும் கேரளாவின் கிராமங்களினுடாக பயணித்துக் கொண்டிருந்தது. பல நேரங்களில் அமைதி.. இடைக்கிடை கிராமத்து மனிதர்கள் கதைக்கும் சத்தம். அல்லது எங்கோ தூரத்தில் ஒலிபெருக்கியில் கோயில் ஒன்றிலிருந்து பக்திப்பாடல் அல்லது குருவிகளினதும் ஆடு மாடுகளினதும் சத்தங்கள் கேட்டன.

குட்டன் ஒரு இடத்தில் நின்று மிளகு மரம் பார்க்கப் போகின்றீர்களா எனக் கேட்டார். ஓம் என்றோம். வள்ளத்தை ஓரத்தில் நிறுத்திவிட்டு எம்மை மிக்க் கவனமாக அதிலிருந்து இறங்க உதவி செய்தார். இந்த மரங்களைப் பார்த்து முடிய தேநீர் குடிக்கப்  போகின்றீர்களா எனக் கேட்டார். நாங்கள் வேண்டாம் என்றோம். தான் குடித்தால் பரவாயில்லையா என்றார். தராளமாக குடியுங்கள் என்றோம். ஆனால் நம் மனதுக்குள் இது என்னடா இந்த ஆள் நன்றாக குடித்து விட்டு நம்மை சும்மா அலைக்கலைக்குது என நினைத்துக் கொண்டோம். .இவர்  இந்தக் கிராமத்து மனிதர்.  ஆகவே அனைவரையும் அறிந்திருந்தார். ஒரு சிறிய பெட்டிக் கடையில் தேநீர் அருந்த சென்றார். இறுதியாக நானும் அவருடன் தேநீர் குடிப்போம் என நினைத்து இஞ்சி தேசிக்காய் சாறு போட்ட பாலில்லாத வெறும் தேநீர் கேட்டேன். கடையில் இருந்தவர் மோளே எனக் கூப்பிட்டு வந்திருப்பவர்களுக்கு தேநீர் கொடுக்கும்படி கூறினார். கையில் புத்தகம் ஒன்றுடன் வந்த பெண் அதை வைத்து விட்டு தேநீர் தயாரிக்கும் வேலையில் இறங்கினார். அப்பொழுது அங்கிருந்தவர் தனது மகள் படிக்கின்றார் என்றார். நாம் என்ன படிக்கின்றார் என வினவ அவர் கூறியது விளங்கவில்லை. மகளிடம் கேட்க தான் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு கற்பதாக கூறினார். அவர் தேநீர் தயாரித்து எங்களிடம் தந்தபின் ஒருவர் கடையினுள் நூழைந்து பெண்ணின் கையில் ஒரு பையைக் கொடுத்தார். அப்பொழுது கடையில் இருந்தவர், வந்தவர் பெண்ணின் தகப்பன் என்றும் உடன் மீன் வாங்கி வந்திருக்கின்றார் எனவும் கூறினார். அவர் குறிப்பிட்ட இளம் பெணிடம் அந்த மீன்களை கொடுக்க, அவர் அதை துப்பரவு செய்வதற்காக எடுத்துக் கொண்டு வீட்டின் பின் புறம் சென்றார். நாம் தேநீருக்கான பணத்தை வழங்கிவிட்டு நமது பயணத்தைத் தொடர்ந்தோம்.

நாம் நமது பயணம் இப்படியே அலுப்படிக்கப் போகின்றதா என யோசித்துக் கொண்டு மீண்டும் வள்ளத்தில் ஏறினோம். வள்ளம் போய்க்கொண்டிருந்தது. குட்டன் வலித்துக் கொண்டிருந்தார். வலிக்கும் சத்தமும் பறைவைகளின் கீச்சுக் குரல்களும் காற்றில் அசையும் மரங்களின் ஒலிகள் மட்டுமே கேட்டன. சிறு ஓடை ஒன்றினுள் வள்ளத்தை செலுத்தினார். மறுபுறம் இருந்து இன்னுமொருவர் வள்ளத்தில் வந்து கொண்டிருந்தார். இந்த ஓடைகள் எல்லாம் ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த மனிதர்கள் தமது போக்குவரத்திற்காக பயன்படுத்தியவை. இன்று பாதைகள் அமைக்கப்பட்டதால் இவற்றின் பயன்பாடு அருகிவிட்டன. ஆகவே பல படகுகள் வள்ளங்கள் பாழடைந்து மூலைகளில் முழ்கிக்கிடந்தன. சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்றுபடி உல்லாசப்பயணத்துறைக்காக இந்த ஓடைகள் இப்பொழுது பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நாம் போகும் வழியில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை குட்டன் காட்டினார். ஒரு இடத்தில் அல்லி மலர் மொட்டைப் பிடுங்கி மாலை செய்து தந்தார். இன்னுமொரு இடத்தில் ஒரு இலையைப் பிடுங்கி அதனைப் பயன்படுத்தி  நமது கைகளில் அச்சுப் பதிவு செய்தார்.

இப்பொழுது நாம் பயணம் செய்த வள்ளம் ஒரு வீட்டிற்கு அருகில் அல்லது கேரளா கிராமம் ஒன்றிக்குள் நூழைந்தது. இளநீர் குடிக்கப் போகின்றீர்களா என்று கேட்டார். Shirleyக்கு இளநீர் குடிக்க விருப்பம். ஓம் என்றோம். அந்த வீட்டிலிருந்த பெண்மணி வெட்டித் தர அதைக் குடித்தோம். பின் கேரள உடையிலிருந்த அந்தப் பெண்ணின் தாயுடன் படம் ஒன்று எடுத்தோம். இப்பொழுது அவ்வாறு உடைகள் அணிவது அருகிவருகின்றன. குட்டன் தன் வீட்டுக்கு போவதற்கு விருப்பமா என நம்மிடம் கேட்டார். நாம் உடன்பட்டோம். நாம் வந்த ஓடையை பாலம் ஒன்றினால் கடந்து அவரது வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். ஒரு ஒழுங்கையின் முதல் வீட்டில் ஒருவர் சுளகு போன்ற ஒன்றை தனது மடியில் வைத்துக் கொண்டு ஏதையோ சுத்தம் செய்து கொண்டிருந்தார். குட்டன் அவரை தனது சகோதரி என அறிமுகம் செய்தார். நாமும் அறிமுகம் செய்து கொண்டு அவர் சுத்தம் செய்வது என்ன என வினவினோம். அவர் வறுத்த கஜூக்களிலிருந்து மேல் தோல்களை அகற்றிக் கொண்டிருக்கின்றேன் என்றார். நமக்கு கஜு விருப்பமானபடியால் அவரிடம் சாப்பிடக் கேட்டோம். அவர் இரண்டு துண்டுகள் மட்டுமே தந்தார். நாமும் அதற்கு மேல் கேட்கவில்லை. ஆனால் அவர் பப்பாசி பழம் ஒன்றை குட்டனிடம் கொடுத்தார். குட்டன் அதை வாங்கிக் கொண்டு நடந்தார். போகும் வழியில் அடுத்தடுத்து இருந்த இரு வீடுகளைக் காட்டினார். இவை தனது சகோதரியின் இரு மகன்மாரின் வீடுகள் எனவும் ஒரு இராணுவத்தில் இருக்கின்றார் மற்றவர் சவூதியில் வேலை செய்கின்றார் எனக் கூறினார். குட்டனுக்கு இரு மகள்மார். ஒருவர் எட்டாம் வகுப்பு படிக்கின்றார். மற்றவர் கலாசாலையில் ஒரு துறையில் கற்கின்றார் எனக் கூறினார். தனது வருமானத்திலையே படிப்பிக்கின்றேன் என்றார்.

இவ்வாறு உரையாடிக் கொண்டு ஒரு வீட்டை அடைந்தோம். இது குட்டனின் வீடு. அவர் வீட்டு வாசலில் குட்டனின் வயதான தாயரும் கஜுவைத் சுத்தம் செய்து கொண்டிருந்தார். இது தொடர்பாக மேலும் நாம் வினவ இது இக் கிராமத்தில் முக்கியமான ஒரு வீட்டுக் கைத் தொழில் என அறிந்து கொண்டோம். Shirleyக்கு மற்றவர்கள் கதைப்பதை கிரகிக்கும் ஆற்றல் அதிகம் என்பதால் அவர்கள் மலையாள மொழியில் கூறியதை என்னைவிட அதிகமாக புரிந்துகொண்டார். இந்தப் புரிதலிலிருந்து நாம் புரிந்து கொண்டது என்னவெனில்… கஜுவை பைகளில் அடைத்து விற்கின்ற கம்பனி இவர்களிடம் குறிப்பிட்ட நிறை கஜுவை கொடுக்கின்றார்கள். இவர்கள் இக் கஜூக்களை சுத்தம் செய்வதுடன் சுத்தமாக்கிய முழுக் கஜுவையும் உடைந்த சிறு கஜுக்களையும் மற்றும் அதிலிருந்து அகற்றிய தோல்களையும் தனித்தனியாக சேர்க்க வேண்டும். முழுக் கஜுவையும் உடைந்த கஜூக்களையும் சுத்தம் செய்வதற்கு வேறு வேறு விலைகள். சரியான விலையை நமது மொழிப் பற்றாக்குறையினால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இறுதியாக கம்பனி இவர்களிடம் இருந்து இதனைப் பெறும் பொழுது ஒவ்வொன்றையும் தனித்தனியாக நிறுத்து தாம் வழங்கிய முழு நிறையுடன் பொருந்துகின்றதா எனக் கவனித்துக் கொள்வார்கள். இதன் மூலம் சுத்தம் செய்யும் பொழுது கஜுக்களை இவர்களோ அல்லது இவர்களது குழந்தைகளோ சாப்பிட முடியாது தடுக்கப்படுகின்றனர்.  இப்பொழுது நமக்குப் புரிந்தது ஏன் குட்டனின் சகோதரி எமக்கு ஒன்றுக்கு மேல் கஜு தரவல்லை என. இறுதியாக சகோதரி தந்த பப்பாசியை வெட்டி எங்களுக்கு சாப்பிட தந்தாதார். அதை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது தனக்குப் நான்காம் வகுப்புரை படிப்பித்த ஆசிரியர் என வயதுபோன பெண் ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவருடனும் உரையாடிவிட்டு மீண்டும் நமது வள்ளத்தில் பயணத்தை ஆரம்பித்தோம்.

இந்தப் பயணம் நாம் விரும்பிய படி இறுதியாக இருந்தமை நமக்கு திருப்பதியாக இருந்தது. இதைக் கொண்டாட குட்டனிடம் கள்ளு கிடைக்குமா எனக் கேட்டோம். கள்ளுக்கு இது காலமில்லை என்றார். அப்ப நீங்கள் என்ன குடிப்பீர்கள் எனக் கேட்டோம். அவருக்கு அது எப்படி விளங்கியதோ தெரியாது. ஆனால் அவர் தான் தொழில் நேரத்தில் குடிப்பதில்லை என்றார். வேலை முடிந்தபின் கொஞ்சம் குடித்துவிட்டு படுப்பதாக கூறினார். அப்பொழுதுதான் நமது முன்அனுமானம் மதிப்பீடு எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொண்டோம். இதுபோன்ற ஒரு அனுபவம் நேபாள இந்திய எல்லையிலும் நடந்தது. இதை இன்னுமொரு பதிவில் எழுதுகின்றேன்.

இறுதியாக வர்க்கலா மேட்டுக்கு வந்து நமது இரவை சுவையான உணவை உண்டு கழித்தோம். கேரளத்து மக்களுடன் இனிமையான நேரங்களை கழித்தோம். காலையில்  மீண்டும் நாம் விரும்பிய உணவை உண்டு நடந்து கடலில் குளித்து விட்டு மாலை வேளையில் கன்னியாகுமரி நோக்கி சூரிய அஸ்தமனம் பார்க்க பயணமானோம். Shirleyக்கு இந்த இடத்தை விட்டுவர மனமில்லாது வெளிக்கிட்டார். அவருக்கு விருப்பமான சாப்பாடும் கடைகளும் சூழலும் நிறைந்த இடம் இது. இந்த இடம் நமது இதயத்திற்கு நெருக்கமான இடமானபோதும் சட்டரீதியாக நாம் தொடர்ந்து வாழ முடியாத ஒரு இடம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

மீராபாரதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: