Posted by: மீராபாரதி | December 15, 2013

சுற்றுலா விசா – சட்டங்களும் நமது உரிமையும் பொறுப்பும்.

சுற்றுலா விசா - சட்டங்களும் நமது உரிமையும் பொறுப்பும். மீராபாரதி

ஒரு நாட்டிலிருந்து மக்கள் கூட்டம் ஒன்று புலம் பெயர்வதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பொருளாதார காரணங்கள். இரண்டாவது அரசியல் காரணங்கள். ஈழத் தமிழ் தேசத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே சென்றனர். சிறுபான்மையினரே பொருளாதார காரணங்களுக்காக சென்றனர். எம்மைப் போன்ற சில குடும்பங்கள் அரசியல் காரணங்களினாலும் அதேவேளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தமையினாலும் புலம் பெயர்ந்தார்கள். அவ்வாறான ஒரு சூழல் கிடைத்திருக்காவிட்டால் நம்மைப் போன்றவர்கள் புலம் பெயர்வதைப்பற்றி கற்பனையே செய்திருக்க முடியாது.
இதேபோல் மீளவும் நாட்டிற்கு திரும்பிவருகின்றவர்களில் இருவகையினர் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கோடைகால சுற்றுலா மற்றும் தாம் விட்டுவிட்டுச் சென்ற காணிகள் வீடுகள் தோட்டங்கள் என்பவற்றை மீளப் பார்க்கவும் மற்றும் உறவுகளின் முக்கியமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வருகின்றனர். சிலரே அரசியல் சமூக காரணங்களுக்காகவும் அந்த தளங்களில் செயற்படவும் வருகின்றனர். சிலர் பாதுகாப்புடன் வருகின்றனர். சிலர் பாதுகாப்பற்ற நிலையிலும் வருகின்றனர். சிலர் கைதாகின்றனர். சிலர் கைது செய்யப்படுவதில்லை. இவற்றுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இக் காரணங்களின் அடிப்படைகளில் நாம் ஒருவர் மீது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ முத்திரை குத்துவதை தவிர்ப்பது ஆரோக்கியமானது. தனிப்பட்ட முறையில் எனக்கு இலங்கையில் எந்தவகையான சொத்துக்களும் இல்லை. எனது தந்தை அவ்வாறு ஒன்றையும் தனது குடும்பத்திற்காக இறுதிவரை சேர்த்து வைக்கவில்லை. ஒரு சில நெருங்கிய நண்பர்களும் தூரத்து உறவுகள் சிலருமே இலங்கையில் எனக்கு இருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலையில் இலங்கைக்கான எனது பயணத்தின் நோக்கம் வெளிப்படையானது.
இலங்கையில் தமிழ் தேசம் அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பெரும்பாலானவர்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்றார்கள். இந்தடிப்படைகளில் பல்வேறு காரணங்களுக்காக திரும்பி வருகின்றவர்களின் பிரச்சனைகளைப் பொதுப் பிரச்சனையாகவே பார்க்க வேண்டும். அதாவது அரசியல் பிரச்சனையாக அணுகப்படவேண்டியவை. இன ஒடுக்குமுறைகளும் அழிப்புகளும் சிறிலங்கா அரசால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால் பலர் புலம் பெயர்ந்திருக்க மாட்டார்கள். ஆகவே தமிழர்கள் புலம் பெயர்ந்தமைக்கான காரணம் சிறிலங்கா அரசையே சாரும். இன்றுகூட சிறிலங்கா அரசானது ஒழுங்கான தீர்வை முன்வைத்து ஜனநாயகத்தை மதிப்பார்களாயின் சிலராவது மீளவும் நாட்டிற்கு வரலாம். ஆனால் அந்த அக்கறை சிறிலங்கா அரசுக்கு இல்லை. ஆகவே சுற்றுலா விசாவில் வந்து இங்கு தாம் விரும்பியதை செய்பவர்கள் குற்றவாளிகள் அல்ல. சட்டரீதியாக வேறு ஒரு நாட்டின் பிரஜையான போதும் இதுவே புலம் பெயர்ந்தவர்கள் பிறந்த நாடு. அதை எந்த சட்டங்களாலும் மாற்ற முடியாது. ஏனெனில் இது பிறப்புரிமை.
ஒருவர் தான் பிறந்த தாய் நாட்டில் மற்றவர்களின் உரிமைகளை பறிக்காமல் ஒடுக்காமல் வன்முறைகளற்ற வழிகளைப் பயன்படுத்தி தான் விரும்பிய எதையும் தனக்காகவும் பொது மக்களின் நன்மைகளுக்காகவும் செய்கின்ற உரிமை உண்டு. அந்தவகையில் பல இழப்புகளை கடந்த காலங்களில் சந்தித்த ஈழத்து மனிதர்கள் ஆகக்குறைந்தது தமது தாய் அல்லது தந்தையின் சமாதிக்கோ மகன் அல்லது மகளின் சமாதிக்கோ அல்லது சகோதரர்களின் சமாதிக்கோ சென்று அஞ்சலி செய்வதற்கான அடிப்படை உரிமைகளை உடையவர்கள். அஞ்சலி செய்வது என்பது மிகச் சாதாரண ஒரு விடயம். ஆனால் அதற்கான அனுமதி இலங்கையில் இல்லை. ஏனெனில் சமாதி இருக்கின்ற இடத்தில் அஞ்சலி செய்ய முடியாதவகையில் இராணுவம் தனது முகாமை அமைத்துள்ளது. இது யார் செய்த தவறு?
சமாதிகள் இருக்கின்ற இடத்தில் மட்டுல்ல மக்கள் வாழ்கின்ற அன்றாடம் சமைக்கின்ற இடங்களிலும் பாரிய இராணுவ முகாம்களை அமைத்து தொடர்ச்சியாகப் பேணி வருவகின்றனர். இது யாருடைய தவறு? ஆகவே இழப்புகளை சந்தித்தவர்கள் அஞ்சலி செய்வதையும் தம் மண்ணில் சமையல் செய்து வாழ்வதையும் யார் தடுக்கின்றார்களோ, அல்லது தடுப்பதை ஆதரிக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராக செயற்படுவதும் குரல் கொடுப்பதும் ஒருவரது அடிப்படை உரிமை. இதேபோல் ஜனநாயகமற்ற சூழலில் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் செயற்படுவதும் தவிர்க்க முடியாது. மேலும் இராணுவ மயமாக்கப்பட்ட சூழலை அகற்றவும் சுதந்திரமான சூழலை உருவாக்கவும் செயற்படுவதும் அவசியமானது. இந்த உரிமைகளை யார் எதிர்க்கின்றார்களோ அவர்கள் மக்கள் விரோத சக்திகளும் ஆளும் குழுமத்திற்கு ஆதரவளிப்போரும் ஆவர்கள்.
அரசியல் காரணங்களுக்காக புலம் பெயர்ந்தவர்கள் சிலராவது தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் இலங்கையில் மீளவும் செயற்படுவதற்கான சூழல் இல்லை. இதற்கான வெளிகள் இன்றும் அரிதாகவே காணப்படுகின்றன. இருப்பினும் செயற்படவேண்டிய தேவை இருக்கின்றது. அந்தவகையில் புலம் பெயர்ந்த மிகச் சிலரே பல தளங்களில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்காக மீள இந்த நாட்டிற்கு வருகின்றனர். இது இவர்களின் அடிப்படை உரிமை. ஆனால் இவ்வாறு வருகின்றவர்களில் பலருக்கு தடைகள் பல இருக்கின்றன.
முதலாவது தடை புலம் பெயர்ந்தவர்கள் இலங்கை நாட்டின் பிரஜா உரிமையை இழந்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே சுற்றுலா பயண விசாவினுடாகவே மீளவும் இங்கு வருவதற்கான சாத்தியமுள்ளது. ஏனெனில் உண்மையான காரணங்களைக் கூறி வருவது சாத்தியமற்ற ஒன்று. அவ்வாறு கூறினால் இவர்கள் நாட்டிற்குள் வருவதற்கு முதலே தடைசெய்யப்பட்டுவிடுவார்கள். இரண்டாவது தடை இலங்கை அரசானது இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதை தடைசெய்திருக்கின்றது. இந்த நிலையில் சுற்றுலா விசா மட்டுமே சுதந்திரமாக இந்த நாட்டிற்கு இவர்கள் வருவதற்கான வழிமுறையாகும். ஆனால் அரசில் அங்கம் வகிக்கின்ற பலர் அல்லது சிங்கள தேசத்தைச் சேர்ந்தவர்கள் வேறு நாட்டின் பிரஜா உரிமையை வைத்திருந்தபோதும் அவர்கள் இந்த நாட்டில் செயற்படுவதற்கும் பதவிகள் வகிப்பதற்கும் சலுகைகள் இருக்கின்றன. அவர்களுக்கு இதுவொரு பிரச்சனையல்ல. ஆகவேதான் உரிமைகள் சலுகைகள் அற்றவர்கள் சட்டங்களை மீற வேண்டியது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.
தனிநபர்கள் இவ்வாறு சட்டங்களை மீறுவதை குறிப்பிட்ட தனிநபர் பலவீனங்களை முதன்மைப்படுத்தி குறுக்குவதும் அரசியல் நீக்கம் செய்வதும் தவறான அரசியல் நிலைப்பாடாகும். மேலும் குறிப்பிட்ட தடைகளை தனிநபர் சார்ந்து பார்த்து நியாயப்படுத்துவது ஜனநாயக விரோத செயற்பாடாகும். மாறாக இவ்வாறான தடைகளை முகம் கொடுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை அகற்றுவதற்கு செயற்படுவதுதான் இலங்கையில் ஜனநாயக வெளியை மேலும் திறப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
பொதுவாக சுற்றுலா விசாவிற்கான வரையறைகள் எல்லா நாடுகளிலும் பொதுவான சில அம்சங்களைக் கொண்டுள்ளன. இதற்குக் காரணம் இந்த விசாவைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான அல்லது நாட்டிலிருந்து விடயங்களை சட்ட விரோதமாகவோ எடுத்துச் செல்கின்ற செயற்பாடுகளைத் தடுப்பதாகும். அதேநேரம் யார் யார் என்ன நோக்கத்திற்காக நாட்டிற்குள் வருகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதுமாகும். ஆனால் இந்த சட்டங்கள் ஒரு நாட்டிற்குள் வர்க்கம் இனம் மதம் பால் எனப் பல்வேறு வகைகளில் அடக்கி ஒடுக்கப்படுகின்ற (தமிழ் தேசிய இனம், முஸ்லிம்கள், மலையக மக்கள் போல…) மனிதர்களுக்கு குறிப்பாக செயற்பாட்டாளர்களுக்கு எதிரானவையாக இருக்கின்றன. ஏனெனில் இவர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்த பின் தாம் செயற்படுகின்ற காரணங்களை காண்பித்து அதற்கான விசாவைப் பெறமுடியாதவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே புலம் பெயர்ந்தவர்கள் இங்கு வந்து தாம் விரும்பிய செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் புதிய வகையிலான விசாவை அறிமுகப்படுத்த வேண்டியது இந்த அரசின் பொறுப்பாகும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்காது. ஆகவே அரச எதிர்ப்பாளர்கள் இந்தக் கோரிக்கையையும் முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி உள்ளது.
ஒருவர் அரசியல் வேலை செய்யப் போகின்றேன் என எந்த ஒரு நாட்டிற்கும் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது. அரசியல் வேலை மட்டுமல்ல சதாரண சமூக சேவை வேலை செய்யப் போகின்றேன் எனக் கூறி விசா பெறுவதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உத்திரவாதங்கள் கையளிக்க வேண்டும். அவ்வாறு கையளித்தாலும் பத்தாயிரம் கேள்விகள் முன்வைக்கப்படும். இவற்றுக்குப் பதிலளித்து விசா பெறுவது என்பது முயற்கொம்பே. ஆகவே சமூக தேசிய விடுதலை நோக்கம் கொண்டு செயற்படுகின்றவர்கள் இவ்வாறன சட்ட மீறல்களை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் சுற்றுலா விசா சாதகமானது. இந்த அடிப்படையில்தான் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை சுற்றுலா விசாவிற்கான கட்டுப்பாடுகளை மீறினார்கள் எனக் கைது செய்யப்படுகின்றவர்கள் (… குமார் ரட்னம் முதல்…., அ.மார்க்ஸ், … ஜெயபாலன்… வரை)  எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைப் பார்க்க வேண்டும். இது ஒரு அரசியல் பிரச்சனை.
மனிதர்களின் செயற்பாடுகளையும் பலவீனங்களையும் ஒன்று கலப்பது ஆரோக்கியமானதல்ல. தனிமனித பலவீனங்களை வேறு தளங்களில் விமர்சிக்கவும் உரையாடவும் வேண்டும். ஆகவே மேற்குறிப்பிட்ட விடயங்களை தனி மனித நோக்கில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதர்களிடமும் பல்வேறு பலம் மற்றும் பலவீனங்கள் காணப்படுகின்றன. மற்றவர்களின் பலவீனங்களை முதன்மைப்படுத்துகின்றவர்கள் அதே பலவீனங்களை தாமும் கொண்டிருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. ஆகவே தமது பலவீனங்களை மறைத்துக் கொண்டு மற்றவர்களின் பலவீனங்களை முதன்மைப்படுத்துகின்றவர்கள் நேர்மையற்றவர்கள். மேலும் தமக்கு சாதாகமாகவும் மற்றவர்களுக்கு எதிராகவும் குறிப்பிட்ட பலவீனங்களை காரணம் காட்டி சமூக அரசியல் பிரச்சனைகளைத் திசை திருப்புகின்றார்கள். இவர்கள் பிரச்சனைகளின் பொதுதன்மையை அதன் சமூக அரசியல் காரணங்களை மூடி மறைப்பவராவர்கள் என்றால் மிகையல்ல.
நாம் அனைவரும் பல்வேறு பலம் பலவீனங்களைக் கொண்டவர்கள். இவற்றை அறிந்தோ அறியாமலோ வெளிப்படுத்துகின்றோம். ஆகவே இதனை வெறுமனே தனிநபர் சார்ந்த பிரச்சனையாக மட்டும் குறுக்க முடியாது. ஏனெனில் இவ்வாறுதான் சமூகத்தால் நாம் உருவாக்கப்பட்டிருக்கின்றோம். ஆகவே இது ஒரு சமூகப் பிரச்சனையும் கூட. இதனால்தான் சமூகமாற்றத்திற்கான தேவையும் உள்ளது. இவற்றை வெறுமனே தனிநபர் சார்ந்த பிரச்சனைகளா குறுக்கிவிடுவதன் மூலம் அதனை அரசியல் நீக்கம் செய்துவிடுவது தவறானதாகும். இவ்வாறு செய்வது எதிர்புரட்சிகர அல்லது மக்கள் விரோத அரசியல் நிலைப்பாடாகும் என்றால் மிகையல்ல. இவ்வாறு கூறுவது தனிநபர்களின் பொறுப்பற்ற தன்முனைப்பான செயற்பாடுகளை நியாயப்படுத்துவதல்ல. மாறாக தனிநபர்கள் குறிப்பாக செயற்பாட்டாளர்கள் தமது பலவீனங்களை வெறுமனே சமூகப் பிரச்சனைகளாக கருதி தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொறுப்பற்று செயற்பட முடியாது. இவர்கள் தம்மை மாற்றுவதற்கான தனி மனித மாற்றங்களுக்கான செயற்பாடுகளையும் பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டும். ஆகவேதான் சமூக மற்றும் தனி மனித மாற்றங்களுக்கான செயற்பாடுகள் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
பொதுவாக சட்டங்கள் ஆளும் குழுமங்களை காப்பாற்றுபவையே. அவர்களுக்கு சாதகமானவையே. ஆகவே பெரும்பாலான சட்டங்கள் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு எதிரானவையாகவே இருக்கின்றன. இதன் விளைவாக இந்த சட்டங்களை மீறுவது ஒடுக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை தவிர்க்கமுடியாதது. அதேவேளை இவ்வாறு மீறுவதன் மூலமே இவ்வாறன சட்டங்களில் மாற்றங்களையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்க முடியும். இது சமூகத்தில் மேலும் ஜனநாயக வெளி அதிகரிப்பதை ஊக்குவிக்கும். அல்லது புதிய சட்டங்கள் மூலம் மேலும் ஜனநாயகம் மறுக்கப்பட்டு ஒடுக்குமுறை அதிகரிக்கப்படுகின்ற சாத்தியங்களும் உள்ளன. இவ்வாறான வேளைகளில் இதனைப் பயன்படுத்தி ஆகக் குறைந்தது ஜனநாயகத்திற்கான போராட்டங்களை மேலும் ஊக்கிவித்து வலுப்படுத்தலாம். இவை எல்லாம் எவ்வாறான அரச ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதிலும் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எவ்வாறு மக்கள் குறிப்பாக தலைமைகள் போராடுகின்றார்கள் என்பதிலுமே தங்கியிருக்கின்றன.
ஈழத் தமிழ் தேசத்தின் மீது அக்கறையுள்ள பாதுகாப்பு பிரச்சனைகளற்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் பெருவாரியாக இங்கு வந்து செயற்பட வேண்டும். தாம் விரும்புகின்ற தளங்களில் செயற்பட வேண்டும். பல்வேறு தளங்களில் அதற்கான தேவைகள் இங்கு உள்ளன. அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கமானது மறுப்பதுடன் அவ்வாறு செயற்படுகின்றவர்களை கைது செய்கின்றனர். ஆகவே நாம் பெருவாரியாக இங்கு வந்து செயற்பட்டு கைதாவதன் மூலம் இங்குள்ள சிறைகளை நிறப்ப வேண்டும். இவ்வாறு பெருவாரியாக கைது செய்யப்படுவது காலோட்டத்தில் அரசாங்கத்திற்கு  பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பிரச்சனைகள் ஏற்படாதவிடத்து இவ்வாரான பிரச்சனைகள் உருவாவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே ஈழ விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல இலங்கையில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தையும் அடுத்த கட்டத்திற்கு நோக்கித் தள்ளும்.
அரசுடனான முரண்பாடுகள் அரசியல் அடிப்படையிலையே பார்க்கப்பட வேண்டும். எந்த சிறிய பிரச்சனைகளுக்கும் அதன் சமூக அரசியல் காரணங்களை கண்டறிய வேண்டும். தேட வேண்டும். அப்பொழுதுதான் பொதுவான விடயங்களிலாவது அரசுக்கு எதிராக சகல இன மக்களையும் ஒன்றினைத்துப் போராட முடியும்.
மீராபாரதி

நன்றி தினக்குரல்
நன்றி குளோபல் தமிழ் நியூஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: