Posted by: மீராபாரதி | November 18, 2013

சிறுவர் இல்லங்கள் ஏன்?

சந்திவெளி மாணிக்கவாசகர் 003சிறுவர் இல்லங்கள் ஏன்?

வடக்கு கிழக்கில் போரின் பின்னர் தாய் தந்தை மற்றும் தமது சகோதரர்களை இழந்து தனித்து விடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். இந்த சிறுவர்களை அவர்களது உறவினர்களும் கைவிட்ட நிலையில் இவர்கள் சிறுவர் இல்லங்களில் வளர்ந்து வருகின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான சிறுவர் இல்லங்கள் காணப்படுகின்றன. இந்த சிறுவர்கள் இவ்வாறு வாழ்வதற்கு போரினால் பாதிக்கப்பட்டதைவிட பல்வேறு சமூக பொருளாதார அரசியல் காரணங்களும் இருக்கின்றன. இவை ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

பெரும்பான்மையான சிறுவர்கள் பொருளாதார பிரச்சனைகளாலும் மற்றும் பல்வேறு கஸ்டங்களாலும் சிறுவர் இல்லங்களில் வாழ்கின்றனர். இவர்களது பெற்றோர் நாட் கூலிக்கு வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்வோராக இருக்கின்றனர். நாட் கூலி என்பது மிக மிகக் குறைவான வருமானம். அதிலும் நிச்சயமற்ற தொழில். ஆகவே நிச்சயமற்ற வருமானம். இவ்வாறான நிலையில் தமது குழந்தைகளுக்கு ஒழுங்கான உணவையோ கல்வியையோ வழங்க முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலமாவது நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக இவ்வாறான சிறுவர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர்.சந்திவெளி மாணிக்கவாசகர் 002

இந்த சிறுவர்கள் தமது பெற்றோர்களையும் சகோதரர்களையும் உறவுகளையும் பிரிந்து வாழ்வது கஸ்டமானதே. சிலர் பெற்றோர்கள் இல்லாததால் வாழ்கின்றனர். சிலர் பெற்றோர் உறவுகள் இருந்தும் யாருமற்றவர்களாக இந்த இல்லங்களில் தமது வாழ்வைக் கழிக்கின்றனர். சிலர் பெற்றோரில் ஒருவர் மட்டும் இருப்பதாலும் அவரால் கவனிக்க முடியாததாலும் இங்கு வாழ்கின்றனர். அதாவது தகப்பனோ தாயோ போரினால் அல்லது வேறு காரணங்களினால் இறந்து இருக்கலாம். அல்லது தந்தை அல்லது தாய் இவர்களை விட்டுவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டு சென்றிருக்கலாம். ஆகவே சிறுவர்களை வளர்க்க முடியாத தனிப் பெற்றோர் தமது குழந்தைகளின் நலன் கருதி இந்த சிறுவர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர்.

சந்திவெளி மாணிக்கவாசகர் 004சிலர் தமது பெற்றோரினதும் உறவுகளினதும் பொறுப்பின்மையாலும் அக்கறையின்மையாலும் இங்கு வாழ்கின்றனர். உதாரணமாக தந்தை குடிக்கு அடிமையாக இருத்தல் முக்கியமான ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. இவர்கள் கிடைக்கின்ற சிறிய வருமானத்திலும் குடித்து செலவழித்து விடுகின்றார். மேலும் வீட்டிற்கு வந்தபின் வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். துணைவியாரையும் குழந்தைகளையும் அடிக்கின்றனர். இதனால் குழந்தைகள் பட்டினி இருப்பதுடன் கல்வி கற்க முடியாத சூழலிலும் வாழ்கின்றனர். ஆகவே தாய்மார் தமது குழந்தைகளை இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். சில சிறுவர்களின் தாய் அல்லது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாலும் தமது குழந்தைகளை இல்லங்களில் சேர்த்துவிடுகின்றனர்.

சில தாய்மார் தாம் கூலி வேலைக்கு செல்வதால் அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதாலும் தமது குழந்தைகளை சிறுவர் இல்லங்களில் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்கின்ற பலர் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதில்லை என அறியப்படுகின்றது. சில தாய்மார் தமது துணைவர் அல்லது உறவினர்களின் பொறுப்பில் குழந்தைகளை விட்டு விட்டு செல்ல அவர்களோ இந்தக் குழந்தைகளை இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். இது தொடர்பான பல முரண்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. இது மேலும் ஆய்வுக்கும் விசாரணைக்கும் உரிய ஒரு விடயமாகும்.சந்திவெளி மாணிக்கவாசகர் 005

சிறுவர் நலன் பேணுகின்ற அரசாங்க நிறுவனங்கள் நல்ல நோக்கத்துடன் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களது நல்ல நோக்கங்கள் மட்டும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்காது. பல்வேறு சமூக பிரச்சனைகளை எதிர்நோக்குகின்ற, கல்வி கற்க முடியாத, தனியாக விடப்பட்ட குழந்தைகளை அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இது அவர்களின் பொறுப்பாகும். இவர்கள் இவ்வாறு பொறுப்பெடுப்பது இந்தக் குழந்தைகள் பல வழிகளில் பயனடைவதற்கு பங்களிக்கின்றது. ஆனால் சிறுவர் பாதுகாப்பு ஊத்தியோகத்தர்கள் சில நேரங்களில் இந்தப் பிரச்சனைகளில் பன்முகத்தன்மைகளை ஆராயாது வெறுமனே இயந்திரமயமாக செயற்படுகின்றனர். தமக்கு கொடுக்கப்பட்ட தொழில்சார் கட்டளைகளைப் பின்பற்றும் அதேவேளை பொறுப்பற்று வெறுமனே கடமையாக மட்டுமே செய்கின்றனர் என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. அதாவது பெற்றோருக்கு வழிகாட்டாது அல்லது பெற்றோரின் வலுவற்ற வேண்டுகோளிற்கு இணங்க குழந்தைகளை இல்லங்களில் சேர்ப்பிக்கின்றனர். சிலநேரங்களில் குழந்தைகள் கிராமங்களில் அல்லது குறிப்பிட்ட குடும்பங்களில் இருந்தால் கற்க மாட்டார்கள் அல்லது ஒழுங்கான பழக்கவழக்கங்களை பின்பற்ற மாட்டார்கள் என்ற முன்அனுமானத்துடன் சிறுவர்களை பலவந்தமாக இல்லங்களுக்கு அழைத்து வருகின்றனர். இதனால் பல சிறுவர்கள் இந்த இல்லங்களிலிருந்து மீண்டும் தமது வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். ஏனெனில் இந்த சூழல் அவர்கள் வாழ்வுக்கு பொருத்தமானதாக இல்லை என உணர்கின்றனர். இது ஒரு பக்க பார்வை. சிறுவர் பாதுகாப்பு ஊத்தியோகத்தர்களின் பார்வை இதில் உள்ளடக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது.

அரசாங்கம் இந்தக் குழந்தைகளில் உண்மையான அக்கறை கொண்டதாக இருப்பின் பெற்றோரின் பொருளாதார கஸ்டங்களையும் அவர்கள் மீதான சுமைகளையும் நீக்குவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். வெறுமனே அபிவிருத்திகள் மட்டும் செய்வது முன்னேற்றமல்ல. மறுபுறம் அபிவிருத்திகள் நடைபெறுகின்ற அதேவேகத்திற்கு உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துச் செல்கின்றன. இது வறுமையில் வாழ்கின்ற குடும்பங்களை மேலும் வறுமைக்குள் தள்ளுகின்றது. அடுத்ததாக அரசாங்கம் ஒரு பெற்றோர் குழந்தைகள் பெறுவதற்கு முன் பெற்றோராக வருவதற்கான தகமைகள் அவர்களுக்கு இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆகக் குறைந்த்து பெற்றோராக இருப்பதன் பொறுப்புகள் என்ன என்பதை உணர்த்துவதற்கான வழிவகைகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோரும் குழந்தைகளைப் பெறும் முன்னர் அதற்கான அடிப்படைத் தேவைகளை உருவாக்கவும் தம்மை வளர்க்கவும் முடியும். இவ்வாறன பெற்றோரின் குழந்தைகளே ஆரோக்கியமாக வளரவும் நன்றாக கல்வி கற்கவும் முடியும்.

இவ்வாறு இல்லங்களில் வாழ்கின்ற சிறுவர்களின் பிரச்சனைகள் பன்முகத்தனமானவை. அனைத்து சிறுவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. ஒரு வரையறைக்குள் அடக்கவும் முடியாது. ஒவ்வொரு சிறுவர்களும் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் அவரவருக்கு தனித்துவமானவை. ஆகவே தனித்தனியாக அனுகப்படவேண்டியவை. மேலும் பல வகையான ஆற்றல்களைக் கொண்டவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள். ஆகவே இவர்களது பிரச்சனைகளை முழுமையாக அறிய வேண்டுமாயின் கிழக்கு பல்கலைக்கழகம் இந்த இல்லங்கள் தொடர்பான ஆய்வுகளை களப்பணியாக முன்னெடுத்து காரணங்களை கண்டறியலாம். பேராசிரியர்களின் வழிகாட்டலுடன் மாணவர்கள் தமது நான்காம் ஆண்டுக்கான அல்லது பட்டப்பின் படிப்புக்கான ஆய்வுப் பொருளாக இதனை மேற்கொள்ளலாம். இதனுடாக இந்தக் குழந்தைகள் எதிர்நோக்குகின்ற பன்முக பிரச்சனைகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வருவதுடன் இதைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கண்டறியலாம். அதேவேளை இந்த சிறுவர்கள் ஒவ்வொருவரினதும் ஆற்றல்களை கண்டறிந்து அதை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். இது இந்த சிறுவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்றலாம்.

மேற்குறிப்பிட்ட அக்கறையுடன் உதவி நண்பர்கள் இந்த இல்லங்களிலும் கிராமப்புற பாடசாலைகளிலும் கதைசொல்லல் நிழ்வுகளையும், உலக சினிமா அறிமுகப்படுத்தல்களையும் மற்றும் இந்த சிறுவர்களின் படைப்புகளை தொகுத்து “சின்னஞ் சிறிய பூக்கள்” என்ற தொகுப்பாகவும் வெளியீடுகின்றனர். உதவியின் பங்களிப்புடன் பட்டிப்பளை கலை இலக்கிய ஒன்றியம் பல்வேறு வேலைத்திட்டங்களை தமது பிரதேசங்களில் முன்னெடுகின்றது. இந்த நிகழ்வுகளில் சிறுவர்கள் ஆர்வமாக பங்குபற்றுவதை காணக்கூடியதாக இருந்தது. இது உண்மையிலையே சிறுவர்களுக்கு அக்கறையும் ஆர்வமும் இருப்பதைக் காட்டுகின்றது. ஆனால் இவ்வாறான சிறுவர்கள் மீது அக்கறை கொண்டு செயற்படுகின்றவர்கள் தான் அரிதாக இருக்கின்றனர்.

சந்திவெளி மாணிக்கவாசகர் 091அம்மா அப்பா இல்லாது சிறுவர் இல்லங்களில் வளர்ந்து பல்கலைக்கழங்களில் கல்வி கற்கின்ற இளைஞர்களை இதுவரை தமிழ் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருக்கின்றேன். ஆனால் மட்டக்களப்பிலுள்ள சந்திவெளி மாணிக்கவாசகர் இல்லத்தில் அவரை நேரில் கண்டேன். மேற்குறிப்பிட்ட காரணங்களினால் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டு நன்றாக கல்வி கற்று வருகின்ற ஒருவர் குகேந்திரன். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கற்கின்றார். இவரது தகப்பனார் 1990 ஆண்டு இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். தயார் மிகவும் கஸ்டப்பட்டு நெல் குத்தி இவரையும் இவரது அண்ணனையும் அக்காவையும் 1998ம் ஆண்டுவரை வளர்த்து வந்துள்ளார். அதற்கு மேலும் தன்னால் வளர்க்க முடியாது என முடிவெடுத்து அண்ணனையும் தம்பியையும் சிறுவர் இல்லத்தில் சேர்த்துவிட்டார். இவர் 2000ம் ஆண்டு நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இந்த இளைஞன் தனது 8 வயதிலிருந்து இந்த சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வருகின்றார். அண்ணனும் தம்பியும் இங்கிருந்தவாறே கல்வி கற்று பல்கலைக்கழத்திற்கு தெரிவாகினர். அண்ணன் பல்கலைக்கழ படிப்பை முடித்து இப்பொழுது திருமணம் செய்து வாழ்கின்றார். குகேந்திரன் இப்பொழுதும் பல்கலைக்கழத்தில் தனது கல்வியைத் தொடர்கின்ற அதேவேளை சிறுவர் இல்லத்தை பராமறிப்பதிலும் அங்கு வாழ்கின்ற சிறுவர்களினது நலத்திலும் கல்வியிலும் அக்கறையுடனுடம் பொறுப்புடனும் செயற்படுகின்றார்.

இந்தக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எதிர்கலாம் ஒளிமயமானதாக இருப்பதற்கு அனைவரினதும் பல்வேறு வகையான பங்களிப்புகள் அவசியமானதாகும். அக்கறை கொள்வோமா….?

மீராபாரதி

18.11.2013

Advertisements

Responses

  1. மிகவும் பரிதாபமான நிலை.
    சில சிறுவர் இல்லங்கள் நன்றாக நடந்தாலும். பல அவ்வாறு இல்லை.
    உங்கள் ஆதங்கம் புரிகிறது


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: