Posted by: மீராபாரதி | September 5, 2013

நான் ஒரு புலி…. உ…. தூ… ஒன்று – பகுதி 4

சுன்னாக ஈரோஸ் முகாமில் சிலர் மேசைகளின் மேல் இருந்தும், சிலர் மூலைகளிலும் நின்றும் பல குழுக்களாக சிரித்தும் சீரியசாகவும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

ஒருவர் என்னிடம் வந்து    கொ… எனத் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு கொக்குவில் ஒழுங்கை ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு போய்   பண்டாரி  என்பவரைச் சந்திக்கவும் எனக் கூறினார். இவரது பெயர் ர. ஆனால் எல்லோரும் அன்பாக பண்டாரி என அழைப்பார்கள். இதற்கு வேறு ஏதாவது காரணகாரியங்கள் இருக்கின்றதா என நான் அறியேன்.

 

நான் மிகவும் ஆர்வத்துடன் அங்கிருந்து சைக்கிளை உழக்கிக்கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றேன். அங்கு நந்…  என்பரைச் சந்தித்தேன். அவரிடம் விடயத்தைக் கூற பண்டாரி இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார் எனக் கூறிவிட்டு அங்கிருந்த சிலபேருடன் தனது உரையாடலைத் தொடர்ந்தார். 

சிலர் சிங்கள மொழியில் தமக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர். இவர்கள் கொழும்பு பல்கலைக்கழத்தில் பிரதானமாக இயங்கிய சுதந்திர மாணவர் அமைப்பு (ISU) என பின்னர் அறிந்துகொண்டேன். இவர்கள் தமிழ் தேசத்தின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டவர்கள்…. இதனால்  ஜேவிபியுடன் முரண்பட்டார்கள். ஆகவே  ஜேவிபி இவர்களுக்கு கொலை மிரட்டல் செய்ததுடன் இவர்களது அங்கத்தவர்களை கொன்றனர். இது இவர்களது எதிர்காலம் தவறான பாதையில் செல்வதற்கு வழிவகுத்தது.

 

(எவ்வளவூதான் நாம் முன்னெறிய பிரிவினராக காட்டிக் கொண்டாலும் தெளிவான உறுதியான நிலைப்பாடுகள் இல்லாவிட்டால் அதிகார வர்க்கத்தின் கைதிகளாகிவிடுவோம் என்பதற்கு இவர்களும் நல்ல உதாரணம்.

இவர்கள் ஜேவிபியிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக பிரேமதாசாவிடம் இறுதியாக தஞ்சமடைந்து அனைத்து தலைவர்களையும் இழந்தனர். உயிரோடு இருந்தவர்கள்  அரசாங்கத்தின் உளவாளிகளாக கொழும்பு பல்கலைக்கழத்தில் வலம் வருகின்றனர் என ஜாதிக சிந்தனை என்ற இனவாதக் குழு சிங்கள மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது. இதனால் பெரும்பான்மை தென் பகுதி மாணவர்களிடமிருந்தும் அந்நியப்பட்டனர். மேற்குறிப்பிட்டது இவர்களது எதிர்காலம் எப்படி முடிந்தது என்பதை. ஆனால் இவர்களது கடந்தகாலம்…இன்று).

 

இன்று இவர்களைக் கண்டதும் கதைப்பதைக் கேட்பதும் பெரும் உற்சாகமாக இருந்தது… சிங்கள மாணவர்களில் இவ்வளவு முன்னேறிய பிரிவினரா என பார்த்து வியந்தேன்…..

 

பண்டாரி வந்தார்… உயரமான கொஞ்சம் உடம்பான இளம் மனிதர்…. பால்வடிகின்ற சிரித்த முகம்…. தன்னைப் பற்றிய அறிமுகம் செய்த பின் இன்று தாம் என்ன செய்கின்றோம் என்பதையும் கூறினார்…. இந்த சூழலில்  இயக்கத்தில் இணைவதற்கான காரணத்தைக் கேட்டார்…
 

அறிமுகம் முடிந்த பின்னர்…

” சமைத்திருக்கின்றார்கள்… சாப்பிடலாம்” என பண்டாரி அழைத்தார்…

எனக்கு சிறிது தயக்கம்…. வந்தவுடன் சாப்பிடுவதா என…. “இல்லை வேண்டாம்”  என்றேன்…

“தயங்காமல் சாப்பிடுங்கள்” என்றார்….

சிங்கள மாணவர்களையும் நந் சாப்பிட அழைத்தார்….

சர்வதேச மாணவர் அமைப்புகளுடன் தொடர்பாக இருந்த ராஜாவிற்கு உதவியாக நந் இருந்தார்…

ராஜா திருகோணமலையைச் சேர்ந்தவர். (பின் 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தெரிவாகி ஈரோசின் பாராளுமன்றக் குழுவிற்கு தலைவராக செயற்பட்டவர். இதன்பின் கனடாவிற்கு வந்தார். இங்கு அவரது அகதிக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பல முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.  கனடாவிலிருந்தபோதே மதுபானத்ததிற்கு அதிகம் பழக்கமானவராக இருந்தார்.  இலங்கை சென்று சிறுது காலத்தில் திருகோணமலையில் மரணமடைந்தார். )

 

  இந்த அமைப்பினுடாக புதிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள் தோழர்களாக…
சாள்… என்ற ஐங்.. ,குட்டி ரமே.., சிவே…, பாலமு.., கிளிநொச்சி லெனி, பி.எல், மதுர.., சாந்தீ.., மயூ.., சுரே..,  ஜோர்.., கண்.., வேலு, அன்ப.., மொசாட் என்கின்ற வர்தி…, திருகோணமலை ரம.., கண்.., சர்மா, பண்ணை.., சசி வடமாராட்சியிலிருந்து சில நண்பர்கள் லம்போ….  மலையகத்திலிருந்து சில நண்பர்கள்…. இப்படி நண்பர்களின் அளவு அதிகரித்து சென்றது….

 

இங்குதான் முதன் முதலாக ஆவணக்காப்பகம் என்ற சொல்லை அறிந்துகொண்டேன். இதற்குப் பொறுப்பாக ஐயா(?) என்று ஒருவர்  இருந்தார். அவருக்கு உதவியாக ஐங்… இருந்தார். பல ரஸ்சிய நூல்கள்  கிடைத்தன… ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன்….

தாய்..  விரம் விளைந்தது…   என தொடர்ந்தது…. 

அப்பப்ப கோட்பாட்டு தத்துவ நூல்களையும் வாசிக்க முயற்சித்தேன்…

இக் காலத்தில்தான் காந்தியின் சத்திய சோதனையை வாசித்து உடனடியாக மரக்கறி உண்ணுபவராக மாறினேன். ஆனால் வீட்டு நிலமை இதைத் தொடரச் செய்யவில்லை. இடையில் கைவிட்டுவிட்டேன்.

நாட்கள் உற்சாகமாகச் சென்று கொண்டிருக்கின்றன… நானும் ஆர்வமுடன் புதிய நண்பர்களைச் சந்திப்பதும் புதிய நூல்களை வாசிப்பதுமாக காலம் கடந்து செல்கின்றது…

 

வடக்கு கிழக்கு இடைக்கால சபைக்கு தலைமை தாங்க  மூன்று பெயர்களை சிபார்சு செய்யும் அதிகாரம் புலிகளின் தலைமைக்கு வழங்கப்பட்டு தெரிவும் செய்தார்கள். அதில் ஒருவரை அரசாங்கம் தெரிவு செய்தது. . மேலும் 15 பேர் கொண்ட சபையில் பெரும்பான்மையாக புலிகளின் அங்கத்தவர்களும் சக இயக்கங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் தலா ஒருவரும் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இறுதியாக இவற்றில் ஒன்றையும் புலிகளின் தலைமை ஏற்கவில்லை  என செய்திகள் வந்தன..

 

நான் இணைந்த மாணவர் அமைப்பின் கோசம் கற்பதற்காகப் போராடுவோம் போராடுவதற்காக கற்போம் என்பதே. மாணவர் அமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கின்றது.  நான் தென்மாராட்சியில் இருந்து வந்தபடியால் தென்மாராட்சியிலுள்ள பாடசாலைகளுக்கு சைக்கிளில் பயணம் செய்து மாணவர்களின்  கையெழுத்தைப் பெறுகின்றோம். மொசாட்.. ம் மயூ.. ம்  நானும் இந்தப் பயணங்களில் இணைந்து செயற்படுகின்றோம்…

பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாக சென்று பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகைள யாழ் கச்சேரியில் கைளித்தோம். மேடையில் பலர் உரையாற்றினார்கள் நண்பர் பாலமுயும் உரையாற்றினார்.

இந்த நாளில் தான் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலிபன் இலங்கை இந்திய ஒப்பந்தம் மற்றும் நடைமுறை முரண்பாடுகளால் பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். இந்த உண்ணாவிரதம் பெரும் அலையை கிளப்பியதோடு உணர்ச்சியையும் உருவாக்கி விட்டிருந்தது. 

 

 நாம் காரைநகரில்  இறால் பண்ணை வளர்ப்புத்திட்டத்திற்காக உதவி செய்யப் போனோம். கடற்கரையில் பாத்தி கட்டுவதே நமது பணி. காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து கசோனா கடற்கரையில் குளித்து இரவு  உணவு உண்டு நிம்மதியாக படுத்தோம்.

இரண்டாம் முறையும் காரைநகருக்குச் சென்று இறால் பண்ணனைக்காக கடற்கரையில் பாத்தி கட்டுகின்ற வேலையை காலையிலையே ஆரம்பித்தோம். இந்த முறை பாலகுமாரும் வந்து சகதி மண்ணில் கால் பதித்து எங்களுடன் வேலை செய்தார். இது எங்களுக்கு உற்சாகமாக இருந்து. பாலகுமார் தொடர்பாக பலர் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருந்து வந்ததை அறிந்திருக்கின்றேன். மிகவும் எளிமையானவர்… யாருடனும் பழகுவார்…முக்கியமாக அழுக்குகளை தானே சுத்தம் செய்பவர்… இதற்காக தண்ணி வாளியுடனும் தும்புத்தடியுடனும் செல்பவர் என்று அனைவரும் கூறுவார்கள்.

மதியமளவில் பாலகுமாருக்கு செய்தி ஒன்று இரகசியமாக தெரிவிக்கப்டுகின்றது. திலிபன் இறந்துவிட்டார் என்பதே அந்த செய்தி. உடனடியாக பண்ணை வேலைகளை நிறுத்திவிட்டு யாழ் நோக்கி அணைவரும் கிளம்புகின்றோம்.

 

அவர்கள் “டெம்பில் ரோட்”டில் இருக்கின்ற தலைமைக் காரியாலயத்திற்கு செல்வதால் என்னை இடைவெளியில் இறக்கிவிடும்படி கேட்கின்றேன். நான் திண்ணவேலி சந்திக்கு அருகாமையில் பாலாலி வீதியிலிருந்த அலுவலகத்திற்குச் சென்று சில நூல்களையும் எடுத்துக் கொண்டு நாவற்குழி வீட்டுக்குச் செல்கின்றேன். இந்தக் காலங்களில்  நாவற்குழி சந்தியில் இருந்த பெரிய பாழடைந்த வீடு ஒன்றில்  குடியிருந்தோம்.

 

எனக்கு ஏனோ திலிபன் உண்ணாவிரதம் இருந்ததிலும் அதன் பிறகு அவர் மரணிக்கும் வரை  விட்டதிலும் உடன்பாடிருக்கவில்லை. 

வீட்டிலும்  தங்கச்சி உண்ணாவிரதத்தில்  உணர்வுபூர்வமாக  பங்குபற்றினார்.  அல்லது இந்த அலையில்  அல்லுப்பட்டு சென்றிருந்தார். ஆனால் நான் அதைச் சுற்றியுள்ள வீதிகளில் பயணம் செய்கின்றபோதும் இந்த அலை என்னைப் பாதிக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. நான் தவறா சரியா என்றும் தெரியாது .  ஆனால் அவர்களுடைய செயற்பாடுகளுடன்   உடன்பாடில்லை என்பதை மட்டுமே நான் புரிந்திருந்தேன். ஆகவே நான் ஒருபோதும் அந்தப் பக்கம் போனதில்லை.

ஆனால் நான் தனித்திருப்பதாக உணர்ந்தேன்.

 

 

யாழ் நகரமே சோக மயத்தில் ஆழந்துபோனது….

எங்கும் சோக கீதங்கள்… மனதைப் பிழிந்தன…

திலிபனின் உடல் ஊர்வலமாக யாழ் குடாவைச் சுற்றி வந்தது…  மக்கள் வாசல்களில் குத்துவிளக்கு ஏற்றி மரியாதை செய்தனர்.

இறுதியில் மக்கள் அலை அலையாக சென்று அஞ்சலி செய்தனர்.

 

இதேவேளை புலிகளின் தலைவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் கடலில் வைத்து கைது செய்தனர். இவர்களைக் கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தம் செய்யப்பட்டது.  ஆனால் இவர்களுக்கு இரகசியமாக  சைனைட்டைக் கொடுத்து தற்கொலை செய்யப்பட்டார்கள். எனக்குத் தனிப்பட இவ்வாறன தற்கொலைகளில் உடன்பாடில்லை. நமது போராட்டம் வாழ்வதற்கான போராட்டம். வாழ்வதனுடாகத்தான் நமது நியாயங்களை நிறுபிக்கவும் உரிமைக்காக போராடவும் முடியும்.

இவ்வாறு இறப்பது ஆற்றலுள்ள தலைவர்களை இழப்பதாகும். நமக்குத் சாதகமான சாத்தியமான எல்லா வழிகளிலும் போராடுவதற்கு தயாராக இருக்கவேண்டும். ஆனால் தற்கொலை செய்வதன் மூலம் சாத்தியமான ஒருவழியை மட்டுமே  பின்பற்றுகின்றோம். இதனுடன் நமது வாழ்வு முடிந்து விடுகின்றது.

 

இதற்காக தற்கொலை செய்து கொண்டு (போராடி) மரணித்தவர்களை அவமதிக்கவில்லை. அவர்களைப் புரிந்து கொள்கின்றேன். இந்த சமூகம் ஒருவர் மீது கொடுக்கும் நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இவற்றுக்கு இறப்பதுதான் தீர்வு என் ஒவ்வொருவரும் முடிவெடுத்தால் போராட்டம் யாருக்காக என்பதே கேள்விக்குறியாகிவிடும். … போராட்டத்தில் தற்கொலையை நியாயப்படுத்த பல்வேறு காரணங்கள் கூறப்பட்டபோதும் அவை என்னால் ஏற்பதற்குரியவையல்ல. ஆகவே இவையெல்லாம் புலிகளின் தலைமை மீது வெறுப்பையும் எரிச்சலையும் எனக்கு உருவாக்கின. எனக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகளில் நம்பிக்கை இருக்கவில்லை…. பல போராளிகள் நேர்மையுடன் இணைந்து செயற்பட்டவர்கள் தான்..

ஆனால் தலைமையும் அதன் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்கள் விரோதமானவை என இப்பொழுதும் நம்புகின்றேன்.

அந்தவகையில் தீலிபனின் போராட்டம் என்னை ஈர்க்கவில்லை…

 

 

குமராப்பா புலேந்திரன் போன்றவர்கள் அந்த சூழலில் நீதிமன்றத்தை தமது நிலைப்பாட்டை நம் மீதான அடக்குமுறையை எடுத்துரைக்க பயன்படுத்தியிருக்கலாம்…. குட்டி மணி தங்கத்துரை ஆகியோர் அதனையே செய்தனர்…. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை மனித இறப்பில் தான் அதன் பலம் தங்கியிருந்தது….

மரணத்தை  முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கலாம் என நம்பியது….

ஏன் இப்பொழுதுகூட சில புலி ஆதரவாளர்கள்….

இறுதி யுத்தம் எனக் கூறப்படுகின்ற 2009ம் ஆண்டு நடைபெற்ற சில சம்பவங்களில் தலைவர் வேண்டுமென்றே மக்கள் மரணிப்பதை; விரும்பயிருப்பார் என்கின்றார்கள்….. இவ்வாறான இனப்படுகொலை நடப்பதன் மூலமாவது நமக்கு விடுதலை கிடைக்கும் என நம்பியிருக்கலாம் எனக் கூறுகின்றார்கள்… எனக்கு இவர்கள் இவ்வாறு கூறியது ஆச்சரியமாக இருந்தபோதும்….. அவ்வாறு கூறிவது நம்புவது அவர்கள் தப்பில்லை..

ஏனெனில்  அதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கட்டமைத்த அரசியல்.

 

அடக்கப்பட்ட மக்கள் அடக்கப்பட்ட மக்களையே நம்பவேண்டும்….

அந்தவகையில் நாம் இந்திய அரசைஅல்ல இந்திய மக்களையே நம்பியிருக்கவேண்டும்… அவர்களுடன் உறவை வளர்த்திருக்கவேண்டும்…. ஆனால் நமது விடுதலைப் போராட்டம் இந்திய அரசையும் தமிழக அரசியல் வாதிகளையும் நம்பியது…. அதன் விளைவு இன்றும் நம்மை நமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்…. 

 

இடைக்கால சபைக்கு தெரிவு செய்த தலைவரை நிராகரித்தமை மற்றவர்களின் பிரதிநிதித்துவத்தை நிராகரித்தமை மற்றும் புலித்தலைவர்களை தற்கொலை செய்ய அனுமதித்தமை அல்லது தூண்டியமை இவை எல்லாம் மீள்பார்வைக்கு உட்பட வேண்டியவை. இவ்வாறு மீள்பார்வைக்கு உட்படுத்தி விமர்சிப்பது என்பது புலிகளின் தலமையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கல்ல. இனிவரும் காலத்தில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது கடந்த காலத்தில் எங்கே என்ன தவறு செய்தோம்  என்பதை அறிந்து வைத்திருக்கவேண்டியது நம் பொறுப்பாகும்.

 

வெய்யில் கடுமையாக எறித்தபோதும் யாழ் நகரை நோக்கி கரு மேகங்கள் திரண்டு வருவதாக உணர்ந்தேன். அவை போர் மேகங்கள் என்பதை உணரவில்லை…

 

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: