Posted by: மீராபாரதி | September 1, 2013

நான் ஒரு புலி…. உ…. தூ… ஒன்று – பகுதி 3

1987ம் ஆண்டு இரண்டாம் தரம் பரிட்சை எடுக்க  ஆரம்பித்தேன்…

இதற்கிடையில் அரசியல் மாற்றங்கள் பல நடை பெற ஆரம்பித்தன….

வடமாரட்சியை சிறிலங்கா இராணுவம் பிடித்து வைத்திருந்ததுடன்…

யாழ்  நகரை நோக்கி முன்னேறும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கின்றது என செய்திகள் தெரிவித்தன….

 

அதேவேளை நெல்லியடி மாகவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஒரு முகாமை  மில்லர் என்ற விடுதலைப் புலி போராளி முதன் முதலாக தற்கொலைக் தாக்குலை மேற்கொண்டு தாக்கியதுடன் தற்கொலைத் தாக்குதல் முறையையும் ஈழப் போராட்டத்தில் ஆரம்பித்து வைத்தார். …

 

ஈழ விடுதலைப் போராட்டம் இருந்த இந்த நிலையில்….

ஒரு நாள் இந்திய மிக் விமானங்கள் பயங்கரமான  சத்தத்துடன பறந்து வந்து சாப்பாட்டு பொட்டலங்கள் போட்டன….

சனங்கள் அதை எடுப்பதற்கு ஓடினார்கள்….

நமக்காக  இந்தியா தலையிடுகின்றது என்பதை நினைத்து மக்களுக்கு மிக மகிழ்ச்சி….

இலங்கை  இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது…..

 

 இந்திய இராணுவம் அமைதிப் படை என்ற பெயரில் பெரும் இரைச்சலுடன் விமானங்களில் வந்து பலாலியில் இறங்கின… காங்கேசன்துறை துறைமுகத்திற்கும்  கப்பலில் வந்து கனரக வாகனங்களுடன்  இறங்கினர்….

 

பிரபாகரனை இந்தியாவில் விட்டுக் காவலில் தடுத்து வைத்திருப்பதாக செய்திகள் வந்தன….

சனம் அல்லோப்பட்டது…. எங்கும் பல்வேறு வகையான உணர்ச்சிப்பிரவாகம் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது….

பரிட்சைகள் பிற்போடப்பட்டன….

 

பிரபாகரனை விடுதலை செய்யாது இந்திய இராணுவம் வெளியே வருவதை புலிப் போராளிகளும் மக்களும் விரும்பவில்லை…. ஆகவே  இந்திய இராணுவம் முகாம்களை விட்டு வெளியே வருவதைத் தடுத்து நிறுத்த படை படையாக பாலாலியையூம் கே.கேசையூம் நோக்கி போராளிகளும் மக்களும் தன்னிச்சையாக சென்று கொண்டிருந்தார்கள்….

 

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவோ அல்லது பிரபாகரன் மீது மரியாதையையோ கொண்டிருக்கவில்லை…

ஆனாலும்  இந்தியா இவ்வாறு தடுத்து வைத்து ஒப்பந்தத்தை ஏற்க நிர்ப்பந்தித்தது தவறு என உணர்ந்தேன்….

மக்களின் கோவம்…  உணர்ச்சிகள் சரியானது எனப் புரிந்து கொண்டேன்…. ஆகவே அவர்களுடன் நானும் வாகனங்களில் ஏறி இந்திய இராணுவம் வெளியே வருவதை தடுத்து நிறுத்த முகாம்களை நோக்கிச்  சென்றேன்….

பல வாகனங்கள் செல்ல விரும்புகின்ற மக்களை திரள் திரளாக ஏற்றிச் சென்று கொண்டிருந்தன….

 இப் போராட்டங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ பிரபாகரன் விடுவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது…..

பிரபாகரன் மக்கள் முன் முதன் முதலாகத் தோன்றி இன்றைய தமது இயக்கத்தினதும் மற்றும் தேசத்தினதும் நிலை மற்றும் தமது முடிவுகள் தொடர்பாகவும் அறிவிப்பார்  என பத்திரிகைகள் எழுதின…

 

இதற்கான கூட்டம் சுதுமலையில் நடந்தது….

மக்கள் திரள் திரளாக எல்லாப் பக்கமும் இருந்து வந்தார்கள்…

பெரும் கூட்டம்…  பெரும் பாதுகாப்பு…

 

புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் கோவம் வெறுப்பு எனப் பல உணர்வுகள் இருந்தபோதும்…. இன்றைய சுழலில் இந்தியா இவ்வாறு செய்வது சரியானதல்ல என்ற உணர்வே இருந்தது. இதற்கும் மேலாக  பிரபாகரனைப் பார்க்கின்ற ஆர்வமும் இருந்தது.

ஆகவே சுதுமலைக் கூட்டத்திற்கு  நானும் சென்றேன்.

 

பிரபாகரனும் அவரது அமைப்பான புலிகளும் கடந்த காலங்களில் செய்த பிற்போக்குத்தனமான செயற்பாடுகளையும் முன்வைத்த கொள்கைகளையும் போராட்ட விரோத செயற்பாடுகளையும் இந்தக் கணத்தில்   மறந்திருந்தேன். அல்லது ஓரம் கட்டி வைத்தேன். மக்களும் மறந்திருந்தார்கள் என்றே நினைக்கின்றேன்..

 

மேடையில் பிரபாகரன் மாத்தையா கிட்டு எனப் பலர் இருக்கின்றனர்…. கிட்டு ஊன்று கோலுடன் இருப்பதைப் பார்த்தபோதும் பிரபாகரன் அவர் இருப்பதற்கு உதவி செய்தபோதும்  எதை நம்புவது என்பது மனதுக்குள் கேள்வியாக இருந்தது….

பிரபாகரன்  தனது மழழைக் குரலால் ஆனால் உறுதியுடன் நாம் இந்தியாவை நம்புவதாகவும் ஆகவே ஆயூதங்களைக் கையளிப்பதாகவும் கூறினார். 

கூடியிருந்த மக்கள் கை தட்டி வரவேற்றனர்…

ஆம் இந்த நாள் பிரபாகரன் ஒரு தேசத்தின் தலைவராக முதன் முதலாக உரையாற்றிய நாள் என்றால் அது மிகையல்ல…

 

இதன் பின் இந்திய இராணுவம் முகாம்களை விட்டு வெளியே வந்தனர்…..

மக்கள் வீதிகள் தோறும் வாழை தோரணம் கட்டி கும்பம் வைத்து கை தட்டி  வரவேற்றனர்.

 

இவ்வாறு    அரசியல் நிலமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும்.  புலிகளுடன் சேர்வதற்கு பல இளம் சந்திதியினர் சென்றனர்.

நாம் யாழில் குடியிருந்த வீட்டின் அயல்வீட்டிலிருந்த இளம் பெண் ஒருவர்  வீட்டுக்கு சொல்லாமல் இயக்கத்தில் சேர்ந்தார்.

அவரது தாய் அவரை “ஒடுகாலி…  வேசை… ஆடப்போய்விட்டால்” என்று பலவழிகளிலும் திட்டித் தீர்த்தார்…

மறுபுறம் அவரை வெளியில் எடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இறுதியாக முக்கிய பொறுப்பாளர் ஒருவர் அந்தப் பொண்ணுடன் கதைத்து இப்பொழுது அவசியமில்லை எனவும்   தேவைப்படும் பொழுது மீள வாருங்கள் எனக் கூறி அனுப்பிவிட்டதாக ஒரு மாத்தின் பின் வீடு வந்து சேர்ந்தார். இப்பொழுது அவர் யார் யாரை சந்தித்தார் அவர்கள் என்ன கூறினார்கள் என அவரது தாய் மகளின் பெருமைகளைக் கூறத் தொடங்கினார்… ஆனால் சிறிது காலத்தில் அவர் புலம் பெயர்ந்தார். அவரது தம்பி போராட்டத்தில் இணைந்து மரணமானார்.

 

நானும் உயர்தரப் பரிட்சைகள் முடித்து எனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தேன்.

பலர் உயர்தரப்பரிட்சை எடுத்தவுடன் ஆங்கிலம் கற்பதற்குச் சென்றனர் … அல்லது இன்னுமொரு துறையில் தம்மை வளர்ப்பதற்காக தொழில்நூட்ப கல்லுரிக்குச் சென்றனர்.  இப்படியான விடயங்களிலையே மாணவர்கள் பெரும்பாலும்  ஆர்வமாக இருந்தனர்… இருப்பர்…  இப்பொழுது புதிதாக கணணி வேறு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது…  இதைக் கற்பவர்களின் தொகை ஒரளவு அதிகரித்து  காணப்பட்டது….. எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத  ஒரு சாதனம் என்றும் கூறிக்கொண்டார்கள்… எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இருக்கவில்லை… அப்படி இருந்தாலும் கற்பதற்கு முடியாத வீட்டின் சூழல். இருப்பினும் பரிட்சை எடுக்கும் பொழுதே அரசியல் செய்வது என முடிவெடுத்திருந்தேன். ஆனால் யாருடன் எப்படி எங்கே சேர்வது என்ன செய்வது என்பதில் தெளிவில்லாமல் இருந்தேன்.

 

இயக்கங்களை விட்டு பலர் விலகிய… விலகுகின்ற காலம். இயக்க அரசியல் முடங்கியிருக்கின்ற காலம். ஒரு இயக்கத்தில்  சேர்வதாக இருந்தாலும் புலிகள் இயக்கத்தில் சேர்கின்ற காலம் இது. இந்த சுழலில் நான் என்ன முடிவு எடுக்க முடியும்.

 

ஒரு நாள் ஈழநாடு பத்திரிகையின் முன் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில்  “வடக்கு கிழக்கில் நமது போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் மலையகத்தில் தொடரும்” என ஈரோஸ் தலைவர் பாலகுமார் அவர்கள் வழங்கிய  நேர்காணல் ஒன்று வந்திருந்தது.  இது என்னைக் கவர்ந்தது… ஏனெனில் நான் கரவெட்டியில் பிறந்தபோதும் மலையகத்தில் வளர்ந்தவன்.. எனது சிறு  வயதின் பெரும்பாலான காலங்கள் மலையத்திலையே கழிந்தன…. அந்த மக்களின் வாழ்வையும் கஸ்டங்களையும் பிரச்சனைகளையும் நன்கு  அறிந்திருந்தேன். உண்மையிலையே போராட்டம் அங்குதான் ஆரம்பித்திருக்கவேண்டும். ஏனெனில் அவர்களே “இருபாதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாக” வாழ்கின்றனர்.

எனது உணர்வுகள் சிந்தனைகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி நான் ஏன் உங்கள் இயக்கத்தில் சேர விரும்புகின்றேன் எனக் கடிதம் எழுதினேன். “டெம்பில் ரோட்”டில் இருந்த அவர்களது தலைமையகத்தில் கொண்டு சென்று பாலகுமாரை சந்திக்க வேண்டும் எனக் கேட்டேன். அவர்கள் அவர் சுன்னாகத்திலுள்ள முகாமில் இருப்பதாக கூறினார்கள். அந்த இடத்திற்கு சைக்கிளில் ஊழக்கிச் சென்றேன். நான் வந்த விடயத்தைக்  கூறினேன். எனது கடிதம் பலரின் கைகளுக்கு கை மாறியது. சிலர் என்னை ஒரு மாதிரிப் பாரத்தார்கள். அந்தப் பார்வைகளில் சந்தேகம் ஆச்சரியம் எள்ளன் என பலவகை இருந்தன. எனக்கு வெட்கமாக இருந்தது. சரி நான் என்ன களவா செய்கின்றேன்  நல்ல விடயம்தானே செய்கின்றேன் என நினைத்து பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தேன்.

தொடரும்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: