Posted by: மீராபாரதி | August 28, 2013

நான் ஒரு புலி…. உ…. தூ….. – ஒன்று – பகுதி 2

நான் ஒரு புலி – ஒன்று – பகுதி 2

1986ம் ஆண்டு மார்கழி மாதம்…

அடுத்த அடி இபிஆர்எல்எவ்க்கு விழுந்தது… ஒருவரும் நம்பவில்லை ஈபி இப்படி பின்வாங்கும் என… எல்லோரும் நினைத்தார்கள்… நம்பினார்கள்… டெலோவை அழித்ததுபோல் ஈபியை அவ்வளவு இலகுவாக அடித்து அழிக்க முடியாது என… தமது மோட்டர்களால் புலியை  அடித்து விடுவார்கள் என… ஆனால் டெலோ நின்றளவு கூட ஈபி தாக்குப்பிடித்து நிற்கவில்லை…..  ஏதோ கிழக்கில் மட்டும் சிறிது சண்டை நடந்ததாக செய்திகள் கூறியது.

 

இந்த நிகழ்வால் அப்பாவிற்கு மீண்டும் வேலைபோனது….

எங்கள் குடும்பத்திற்கு மீண்டும் வறுமை வந்தது….

இப்பொழுது கஸ்டத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது….

  
அப்பா புலிகளிடம் சரணடைந்து அல்லது கதைத்து அல்லது இரண்டையும் செய்து விட்டு வீட்டுக்கு வந்தார்…. இவருக்கு நெருக்கமாக இருந்த இரு ஈபி போராளிகளையும் சரணடையச் செய்து வெளியே எடுத்தார். ஆனால் சிலரை மட்டும் வெளியே எடுக்க முடியவில்லை. அப்பாவால் இதுவெல்லாம் எப்படி சாத்தியம் என்பது ஆச்சரியமாகவே இருக்கும்.   அப்பாவிற்குத் தெரிந்ததெல்லாம் மும் மொழிப் புலமையும் அரசியலும் தான். இவற்றை வைத்துக் கொண்டு தன் வாழ்வை எப்படியோ ஓட்டினார்.
 

இதற்கிடையில் புளொட்டும் தன் செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் தானே நிறுத்துவதாக பத்திரிகையில் அறிவித்தது.   இதன் பின் யாழ் நகர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது….

ஒரு நாள்…
நாம் குடியிருந்த பேக்கரி லேன் பகுதிக்கு அருகாமையில்  இரவு ஏழுமணிக்குப் பின் சில  சுட்டுச் சத்தங்கள் கேட்டன.. பின் வாகனங்கள் விரைந்து செல்லும் சத்தங்கள் கேட்டன…அதன் பின் பெரும் மாயான அமைதி நிலவியது… இது வழமைக்கு மாறான அமைதியாக இருந்தது…

“கிட்டு அவரது காதலி வீட்டுக்குப் போகும் பொழுது யாரோ சுட்டுப் போட்டாங்களாம்… அவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார்” என அயலவர்கள் சிறிது நேரத்தில் வந்து செய்தியைப் பரிமாறிச் சென்றனர்…….

சிலர் “ஈபியிலிருந்த போராளிகள் கிட்டுவைப்  பழிவாங்கியிருக்கலாம்” என்றனர்….
சிலர் “பிரபாகரன் இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வரும் பொழுது கிட்டு பெரும் புகழ் அடைந்திருப்பதை  பிரபாரகன் விரும்பவில்லை என்றும் அதனால் அவர் இப்படி செய்திருக்கலாம்” என்றும் பல வதந்திகள் பரவின…
என்ன நடந்தது? எது உண்மை? என்று ஒருவருக்குமே தெரியவில்லை….

“கிட்டுவை சுட்ட கோவத்தில் அருணா என்ற புலிப் போராளி “டெம்பில் ரோட்டி”லிருந்த கந்தன் கருணை வீட்டில் தாம் பிடித்து வைத்திருந்த 53 ஈபி போராளிகளை சுட்டுக்கொன்றார்” என்ற இன்னுமொரு தகவல் பரவியது… இதில் எங்கள் வீட்டுக்கு  வருகின்ற மலையகத்தைச் சேர்ந்த வைத்தியர் பென்சமினும் கொல்லப்பட்டதாக  அறிந்தோம். இது எமக்கு மிகவும் கவலையாக இருந்தது….  அப்பாவிற்கு அவரை வெளியில் எடுக்க முடியவில்லை என்று  கவலைப்பட்டார்…. அழுதார்…..

 (ஆனால் சிறிய குழுவான தீப்பொறி தான் கிட்டுவை தாக்கியது என  காலம் கடந்து இப்பொழுது  உரிமை கோருகின்றனர்).

அப்பா  மீண்டும் வீட்டில் வேலை இல்லாமல் இருந்ததால்…..
எனக்கும் அவருக்கும் முரண்பாடுகள் வந்தன… சண்டை பிடித்தோம்…

“நான் படிக்கவேண்டும்… ஆனால் வீட்டில் சாப்பாடு இல்லை… டீயூசனுக்கு கட்ட பணம் இல்லை….. எப்படி படிப்பது….” என சிந்தித்தேன்…
அப்பாவிற்கு   நான் படிக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாத நிலை…
அவரது நிலையைப் புரிந்து கொள்ள முடியாத இளம் வயது எனக்கு …

வீட்டை விட்டு போய் எதாவது தேவாலயத்தில் தங்குவோம் என நினைத்தேன்… எனது சாமான்ககளை ஒரு பெட்டியில் கட்டி சைக்கிளை எடுத்துக் கொண்டு பெரிய கோயிலில் போய் ஒரு மரத்திற்கு  கீழ் இருந்த சிமேந்து கட்டில் குந்தியிருந்தேன்…
இரவு  8 மணி…இருள் கவ்வியிருந்தது…. ஆனாலும் மின்விளக்குகளின் ஒளி தன்னைச் சுற்றி இருந்த  இருளை ஒரு வட்டத்திற்கு  அப்பால்   விரட்டி… ஒளி ஏற்றியிருந்தது…….
அப்பொழுது சில இளைஞர்கள் என்னை நோக்கி வந்து “இஞ்ச என்ன செய்கின்றீர்” என வினாவினார்கள்… நான் வீட்டில் நடந்ததையும் எனது விருப்பத்தையும் கூறினேன். அவர்கள் என்னை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்… அப்பாவுடனும் ஏதோ கதைத்து விட்டு சென்றார்கள்…. மீண்டும் அடுத்த நாள் வந்து என்னை அழைத்து நான் பிரச்சனையில்லாமல் இருக்கின்றேனா என அக்கறையுடன் விசாரித்தார்கள்.
 
 இவ்வாறான ஒரு நிலையில் நானும் என்ன கஸ்டம் வந்தாலும்  கற்பதைக் கைவிடுவதில்லை என முடிவு எடுத்திருந்தேன்…. ஆனால் தனியார் வகுப்பு கட்டணத்திற்கு காசு கட்ட பணம் இல்லை.   தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் சிவத்தம்பி “சேர்” தலைவரா இருந்தார். அவரிடம் போய் எனது நிலையை கடிதம் ஒன்று எழுதி தெரிவித்தேன். அவர் தனது உதவியாளர் முருகையாவை அனுப்பி தனியார் வகுப்பு நிர்வாகியுடன் கதைத்து கட்டனம் இல்லாது படிக்க அனுமதி வாங்கித்தந்தார்.  இதேவேளை முதல் தரமே சித்தியடைந்த நண்பர் ர யாழ் நகரில் இருந்தார். அவர் வீட்டிலும் போய் படித்தேன். அவர் என்னிடம் பணம் வாங்கவில்லை..
 
மீண்டும் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன்…..
அதேநேரம் 1987ம் ஆண்டு…. வடமாரட்சி “ஒப்ரேசன் லிபரேசன்” ஆரம்பித்தது……..
பல மாணவர்கள் வடமாராட்சியிலிருந்து இடம் பெயர்ந்துகொண்டிருக்கின்றார்கள்….
பல இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் பூசாவிற்கு  அள்ளிக் கொண்டு சென்றனர்..
உயர்தரப் பரிட்சை எடுக்க முடியாது அந்த மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்…

இப்பொழுது புலிகளின் அதிகாரம்  மட்டுமே குடா நாட்டில் இருந்தது.. அவர்கள் வைத்ததே சட்டம்… ஒழுங்கு எல்லாம்.. இந்த நிலையில்
வடமாராட்சி மாணவர்கள் பரிட்சை எடுக்க முடியாததால் உயர்தரப் பரிட்சையைப் பகிஸ்கரிக்ககோரி விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பான சோல்ட்டின் பொறுப்பாளர் முரளி அறிவித்தார். இதற்காக  யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்கின்றார்.
 
நான் உயர்தரப் பரிட்சைக்கு இரண்டாம் தரம் முயற்சி செய்து கடுமையாகப் படித்துக்கொண்டிருக்கின்றேன்..
 
நாம் செயற்பட்ட இயக்கத்தின் செயற்பாடுகளாலும் மற்றும் சக இயக்கங்கள் செயற்பட்ட முறைகளாலும் இயக்க அரசியலில் வெறுப்படைந்திருந்தோம். மேலும் கடந்த வருடம் விடுதலைப் புலிகள் டெலோவை அழித்த முறையிலும் ஈப்ஆர்எல்எவ்வை தடை செய்த முறையிலும் உடன்பாடின்மையால் இயக்க அரசியலில் இருந்து விலகியிருந்தோம். ஆகவே கற்பதில் மட்டுமே எமது கவனம் இருந்தது… அதில் அக்கறையுடனும் செயற்பட்டோம்.

அப்பா இப்பொழுது புலிகளில் வேலை செய்து கொண்டிருந்தார்.  இருப்பினும் நாம் ஏழைக் குடும்பம்.  வறுமையில் இருந்தது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால் நான் படிக்கவேண்டும். மேலும் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதாக இருந்தாலும் கற்பது முக்கியம் எனக் கருதியிருந்தேன்.

இப்படியான ஒரு சுழ்நிலையில் புலிகளின் மாணவர் அமைப்பு உயர்தரப் பரிட்சையை பகிஸ்கரிப்பதை நான் விரும்பவில்லை. ஆகவே அதற்கு எதிராகப்  பேசுவதற்காக குறிப்பிட்ட கூட்டத்திற்கு சென்றேன்.

கைலாசபதி அரங்கம் முழுவதும்  இந்த வருடம் உயர்தர பரிட்சை எடுப்பவர்கள் நிறைந்திருக்கின்றார்கள். மேடையிலும் மேடைக்கு அருகிலும் சோல்ட் உறுப்பினர்களும் அவர்களது பல்கலைக்கழ ஆதரவு மாணவர்களும் இருக்கின்றனர். ஒவ்வொருவராகப் பேசுகின்றனர். பொதுவாக மாணவர்கள் பரிட்சை பகிஸ்கரிப்புக்கு எதிராகப் பேச. சோல்ட் மாணவர்கள் திட்டமிட்டவகையில் ஒவ்வொரு எதிர்ப்புக்கும் மறுப்புத் தெரிவித்து ஆதரவாகவும் அதன் முக்கியத்துவத்தையும் மற்றும் வடமாரட்சி மாணவர்களின் பிரச்சனைகளையும் கூறினர்.
 
இவ்வாறு திட்டமிட்டு சோல்ட் மாணவ உறுப்பினர்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க பொறுக்க முடியாமல் நான் ஒரு கட்டத்தில்  மேடைக்குச் சென்று பேசினேன். புலிகளைப் பற்றி தெரிந்திருந்தும் ஒரு அசட்டு தைரியத்தில் மேடையேறினேன். “கல்வியை நாம் கைவிடமுடியாது” எனவும் “நாம் சிறீலங்கா அரசாங்கத்தின் செல்களுக்கும் குண்டுகளுக்கும் மற்றும் பல்வேறு கஸ்டங்களின் மத்தியிலும் கற்கின்றோம்” … “ நாம் கல்வி கற்காமல் விடுவதும்… பரிட்சை எடுக்காமல் விடுவதும் தான் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிடைக்கின்ற வெற்றி” என்றும் “அதுவே அவர்கள் விருப்பம்” எனவும் “ஆகவே நாம் பரிட்சையைப் பகிஸ்கரிக்க கூடாது” எனக் கூறினேன்.    மேலும் “கிழக்கு மாகாண மாணவர்கள் நீண்ட காலமாக தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புள்ளுக்கும் பிரச்சனைகளுக்குள்ளும் வாழ்பவர்கள்.  அப்பொழுதெல்லாலாம் பரிட்சையை பகிஸ்கரிக்காத நாம் இப்பொழுது பகிஸ்கரிப்பது நியாமில்லை” எனப் பகிஸ்கரிப்புக்கு எதிராகப் பேசினேன்.
 
ஆனால் சோல்ட் பொறுப்பாளரும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் விடுவதாக இல்லை. ஏதோ மாணவர்களின் ஏகோபித்த குரலாக பரிட்சை பகிஸ்கரிக்கப்படுகின்றது என்ற முடிவை நோக்கி திட்டமிட்டவகையில் மெதுவாக சென்று கொண்டிருந்தனர். இந்தப் போக்கு எனக்குள் கோவத்தை உருவாக்கியது.  மீண்டும் மேடைக்கு ஏறி “நீங்கள் பகிஸ்கரிப்பற்கு ஆதரவாகவும் அவ்வாறான முடிவையே இறுதியாக எடுப்பதாக இருந்தால், பரிட்சையைப் பிற்போடச்சொல்லி அரசாங்கத்தை நிர்பந்தித்து உண்ணாவிரதம் இருப்போம். அதை நான் இப்பொழுதே ஆரம்பிக்கின்றேன்” எனக் கூறி மேடையின் நடுவில் அமர்ந்துவிட்டேன். இதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் “சோல்ட்” அமைப்பு இதைத் தமக்கு சாதகமா பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மேடையில் வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியாக ஊர்வலம் ஒழுங்கு செய்வது என்றும் தாம் பகிஸ்கரிக்கப் போவதாக மகஜர் அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. எனக்கு அதனுடன் உடன்பாடில்லாதபோதும் சிலர் என்னை சமாதானப்படுத்தி மேடையிலிருந்து வெளியே கொண்டு சென்றனர். 

 ஆனால் நான் அத்துடன் விடவில்லை. எனது நிலைப்பாட்டுக்கு ஆதரவான நண்பர்களுடன் கலந்துரையாடினேன்.  ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று உயர்தர வகுப்பு மாணவர்களுடன் கதைப்பது என முடியாயிற்று. இருப்பினும்  வீட்டுக்கு கவலையுடன் சென்றேன்.  விடியும் வரை காத்திருந்தேன்.  விடிந்தவுடன் வெளிக்கிட்டு ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்றோம். முதலில் சென்றது பெண்கள் பாடசாலை என்பதில் சந்தேகமில்லை. பரிட்சையைப் பகிஸ்கரிப்பதற்கு எதிராக நாம் எதாவது செய்யவேண்டும் என உரையாடினோம். மேலும் பல மாணவர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் “சொல்ட்” அமைப்பு பரிட்சையைப் பகிஸ்கரிப்பதில் உறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இன்று காலை ஊர்வலம் நடைபெற  இருந்தது. நான்  காலையிலையே  அப்பா வேலை செய்த  மாம்பழ்ச் சந்திக்கும் பரமேஸ்வரா சந்திக்கும்  இடையில் இருந்த புலிகளின் அலுவலகத்தற்குச் சென்றேன்.. அங்கு சென்று அப்பாவுடன் கோவமாகக் கத்தினேன். அங்கு வேலை செய்த அரசியல் பிரிவிலுள்ள உறுப்பினர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  நான் பயப்பிடவில்லை. “இவர்கள் என்ன செய்கின்றார்கள்… இன்று ஊர்வலத்தை நடாத்த விடமாட்டேன்” எனவும் “இவர்கள் என்ன செய்கின்றார்கள் பார்ப்போம்” எனக். கூறிவிட்டு அங்கிருந்து சென்றேன். அப்பாவுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஊர்வலத்திற்கு உயர்தர மாணவர்கள் மிகவும் குறைவாகவே வந்திருந்தனர். வந்தவர்களில் “சோல்ட்”டின் ஆதரவாளர்கள் அதிகமானவர்கள். மற்றும்படி கீழ் வகுப்பு மாணவர்களையும் சிறுவர் சிறுமிகளையும் வாகனங்களில் அள்ளிக் கூட்டிக் கொண்டுவந்திருந்தனர்.
 
அங்கிருந்த சில நண்பர்களுடன் கதைத்தேன். ஒரு புறம் எதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு. மறுபுறம் சிறிது தயக்கம். அல்லது பயம். ஊர்வலத்திற்கு முன் படுத்து தடைசெய்வதற்குதான் வந்தேன். ஆனால் செய்ய முடியவில்லை.
இறுதியாக ஊர்வலத்துடன் நடந்து போனேன். ஊர்வலத்திற்கு உயர்தர மாணவர்களின் ஆதரவின்மையால் வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகியது. 
இதன் விளைவாக  ஒரு வாரத்தின் பின் மீண்டும் கைலாசபதி அரங்கில் இது தொடர்பான கூட்டம் நடந்தது. ஆனால் இம் முறை இதற்குத் தலமை தாங்கியவர் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திலிபன்.
“சோல்ட்” பொறுப்பாளர் முரளி பரிட்சையைப் பகிஸ்கரிக்க வேண்டும் என வாதிட்டார்.  ஆனால் திலிபன் மேடையிலையே “உயர்தர மாணவர்களின் ஆதரவைப் பெற முடியுமா” என முரளியைப் பார்த்துக் கேட்டார்.  அவரிடம் பதில் இல்லை.  ஆகவே மாணவர்களின் ஆதரவில்லாமல் பரிட்சையைப் பகிஸ்கரிக்க முடியாது என்று திலிபன் அறிவித்தார். 

எனக்கு பெரும் நிம்மதியாக மகிழ்வாக இருந்தது….
இந்த நிகழ்வு  பொதுவெளியில் என்னை அறிமுகப்படுதியது. ஆனால் எனது மொழி யாழ்பாண மொழியாக இல்லாதிருந்ததால்….பலருக்கு குழப்பம்….” புலி என்னை பயன்படுத்தி நாடகமாடியதா..” எனவும் “நான் புலியா அல்லது புலி எதிர்ப்பாளனா” என மாணவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவியது.
 
ஆனால் நான் மீண்டும் பரிட்சைக்கு நிம்மதியாகப் படிக்க ஆரம்பித்தேன்.

தொடரும்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: