Posted by: மீராபாரதி | August 26, 2013

நான் ஒரு புலி…. உ…. தூ…ஒன்று – பகுதி 1

1984ம் ஆண்டு!

 நாம் உயர்தரம் படிக்க ஆரம்பிக்கின்றோம்.

 சுற்றியிருந்த கிராம, சமூக, பிரதேச, தேச.. சுழல் எதாவது ஒரு இயக்கத்தில்சேர நம்மை ஊந்தியது. ஆகவே ஒரு இயக்கத்தில் இணைந்து கிராம மட்டத்தில்செயற்பட ஆரம்பிக்கின்றோம்.

 ம்…இது இன்னுமொரு கதை…அதை விரிவாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்….

 1986ம் ஆண்டு ஆரம்பம்….

எனக்கு டெலோவிலும் புலிகளிலும் ஆரம்பம் முதலே விருப்பமில்லாமல் இருந்தது.

பொபி தாஸ் பிரச்சனையில் தாசுக்கு ஆதரவாக முத்திரச்சந்தியில் ஊர்வலம் சென்ற மக்கள் மீது டெலோ இயக்கம் சுட்டது. இது அவர்கள் மீது மேலும் வெறுப்பை உருவாக்கியது. இது போதாது என்று…

ஒரு நாள் யாழ் ஆஸ்பத்திரி முன்னாலிருந்த பொன்ட் தனியார் நிலையத்தில் வகுப்பு முடிந்து மதியம் இரண்டு மணிக்குப் பின் அதிலிருந்த உணவகம் ஒன்றில் இடியப்பமும் பருப்பு சாப்பிட்டு ஆஸ்பத்திரி வீதியால் நடந்து செல்கின்றேன்….

ஆஸ்பத்திரிக்குள் இருந்து தீடிரென வெடிச் சத்தங்கள் கேட்டன…

நெஞ்சு ஒருக்கா படக் படக் என்று அடித்து அமைதியானது. இவ்வாறு சத்தங்கள் கேட்பது வழமைதான்… ஆனால் ஆஸ்பத்திரிக்குள் இருந்து வந்ததே புதுமையாக இருந்தது… ஏனெனில் ஆஸ்பத்திரிக்குள் யாரும் ஆயுதங்களுடன் செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது… நான் நகரில் தொடர்ந்தும் நிற்காமல் வீட்டுக்கு சென்றேன். இப்படித்தான் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக வீட்டுக்கு செல்வதற்கான வழியைத் தேடுவோம். சிலநேரம் நின்று பார்ப்போம். என்ன நடக்கின்றது என்பதை அறிய…..

ஆஸ்பத்திரிக்கு தாஸ் குழுவினரை உரையாட அழைத்த பொபி குழுவினர் மறைத்து வைத்த ஆயுதங்களால் சுட்டனர் என்ற செய்தி அடுத்த நாள் வெளிவந்தது.

இதேபோல் நாம் செயற்பட்ட இயக்கத்திற்குள்  அக முரண்பாடுகள் மற்றும் அராஜகசெயற்பாடுகள் நடைபெறுவதை அறிகின்றோம்.சுதுமலையில் நான்கு புலிப் போராளிகளைக் கொலை செய்தது முக்கியமான முரண்பாடாக உருவெடுக்கின்றது.இதை ஏற்கனவே அறிந்திருந்த நமது பொறுப்பாளர் நாம் எவ்வளவு கேட்டும் நம்மை இந்தியப் பயிற்சிக்கு அனுப்ப உடன்படவில்லை.

நண்பர்கள் ம1, பி. ,சி, 1, 2, 2, மற்றும் நானும்இயக்க உள் முரண்பாடுகளாலும் அதன் தவறான போக்காலும் இயக்க செயற்பாடுகளிலிருந்துதுங்கிப் படிக்க ஆரம்பிக்கின்றோம்.

இதில் நண்பர்கள் ம1, பி, சி ஆகியோர் ஏற்கனவே பல்கலைக்கழத்தில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். நண்பர் ர 86ம் ஆண்டு உயர்தரப் பரிட்சையை எடுப்பதற்காகப் படிக்கின்றார். கடுமையாக படிக்கின்றார் என எழுத முடியாது. ஏனெனில் அவர் திறமையானவர்.

நண்பர்கள் அ1 உம் அ2 உம் 86ம் ஆண்டு பரிட்சையை எடுக்காது 87ம் ஆண்டு எடுப்பதற்காக படிக்க ஆரம்பிக்கின்றார்கள்.
நான்  முதலாம் தரம் சித்தியடைய மாட்டேன் எனத் தெரிந்தும் ஒரு அனுபவத்திற்காக 86ம் ஆண்டுப் பரிச்சையை எடுப்பதற்குப் படித்துக் கொண்டிருக்கின்றேன்.

நாவற்குழி பாலத்தடியில் இராணுவ முகாம் இருந்தபடியால்,   யாழ் நகரிலிருந்த மாஸ்டர்ஸ் இன்சிடிடீயூட் தனியார் வகுப்புக்குப் போவதற்காக, நாம் கைதடி வெளியால் கோப்பாய் சந்தி ஊடாக  சைக்கிளிலில் செல்வது வழக்கம்.

இன்றும் அவ்வாறே யாழ் நகர் சென்று கொண்டிருக்கின்றோம்.

புலிக்கும் டெலேவிற்கும் பெரும் மோதல் நடைபெறுகின்றது என காதுவழி செய்திகளை யாழில் இருந்து வருகின்றவர்கள் சொல்லிக் கடந்து செல்கின்றனர்….
நமக்கும் யாழ் நகர் பக்கமாக இருந்து சாராமாரியான சுட்டுச் சத்தங்கள் கேட்கின்றன..

நாம் யாழ்-பருத்துறை வீதியால் சென்று கொண்டிருக்கும் பொழுது கல்வியங்காட்டுக் பக்கமாகப் போக முடியவில்லை. போவதற்கு விடவில்லை… ஆகவே குறுக்கு வழியால் சென்று ராச வீதியால் யாழ் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்.

ஆடியபாதம் வீதிக்கு அருகில் வரும் பொழுது ஆங்கிலப்படம் பார்த்ததுபோல் இருந்தது.
புலிப் போராளிகள் அந்த சந்தியிலிருந்து  கல்வியங்காட்டில் இருந்த டெலோவின் முகாமைத்தாக்கிக் கொண்டிருந்தார்கள். நாம் அதனைப் பார்வையிட்டுவிட்டு அங்கிருக்கப் பிடிக்காமல் திண்ணவேலி சந்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். போகின்ற வழியில் சந்தி ஒன்றில் புலிப் போராளிகள் இரண்டு டெலோப் போராளிகளை டயர் போட்டு   உயிருடன் எரித்துக்கொண்டிருந்தார்கள்.
நம் மனதுக்குள் கோவம் இருந்தபோதும் ஒன்றும் கதைக்க முடியாது.  நாமும் சனங்களைப் போல அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி தடுக்காது அமைதியாகக் கடந்து செல்கின்றோம். யாழ் நகரை அடைந்தபோது, அங்கு வானத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் றெலியிலிருந்து   சுட்டுக்கொண்டிருந்தது. நாம் நமக்குள் அடிப்படுகின்ற செய்தியைக்  கேட்டு மகிழ்ச்சியில் மேலிருந்த சுட்டார்களா அல்லது தம்மைத் தான் தாக்குகின்றார்கள் எனத் தெரியாது பயத்தில் சுட்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் அவர்கள் சுட்டது பொதுமக்கள் மீது.

இதனால் தனியார் வகுப்புகள் மூடப்பட்டன.
வீதிகளில் புலிப் போராளிகளின் நடமாட்டம் மட்டுமே அதிகமாக இருந்தது.
இதைப் பார்ப்பதற்கு நம் மனதுக்குள் பயமாக இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்ட நம் தன்முனைப்பு விடவில்லை. ஏனெனில் அவர்களை நோக்கிய ஒரு எதிர்ப்புணர்வு நமக்குள் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.
பழைய பூங்கா வீதியில் ஒரு வாகனத்தில் தப்பி சென்று கொண்டிருந்த கிழக்கு மாகாண டெலோப் பொடியளை குண்டு வைத்து தாக்கியதில் அவர்களது தசைகள் அந்த அடர்ந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றதாம் என சனங்கள் கதைக்க ஆரம்பித்தார்கள்….
நாம் யாழ்  நகரில் நிற்பது நல்லது அல்ல என நினைத்து மீண்டும் வீடு நோக்கி சென்றோம்.

ஆனால் தொடர்ந்து படிப்பதை மட்டும் கைவிடவில்லை நாம்.

அப்பாவின் நண்பரும் ஈபிஆர்எல்எவ் ஆதரவாளருமான பொறியியளார் வேந்தனின் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்து  உயர்தரப் பரிட்சைக்காகப் படித்து 1986ம் ஆண்டு பரிட்சை எடுத்தேன்.

பின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றோம். ஒரு நாள் பரிட்சை முடிவுகள் வந்தன…..

நண்பர் ர நான்கு பாடங்களிலும் சித்தியடைந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவானார்.

நான்  எதிர்பார்த்ததுபோல் இரண்டு பாடங்களில் மட்டும் சதாரண சித்தியடைந்திருந்தேன். ஆனால் கவலைப்படவில்லை.
தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற விருப்பம்…. ஆனால் வீட்டில் கஸ்டம்….நாம் இப்பொழுதும் அகதிகளாக நாவற்குழி கடற்கரை ஓரமாக சுடலைக்கு அருகிலிருந்த கோயில் காணியில் கொட்டில் ஒன்று போட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்….

அப்பா இவ்வளவு காலமும் வேலை இல்லாமல் இருந்து இப்பொழுதான் ஈபிஆர்எல்எவ் இயக்கத்திடம் வேலைக்குச் செல்கின்றார்..
ஆகவே நானும் வேலை செய்து கொண்டு படிப்போம் என யோசிக்கின்றேன். ஆகவே நண்பர் மு விடம் ஒரு வேலை எடுத்து தரும்படி கேட்டேன். இவர் தனது நண்பரின் கடையில் விசாரித்து பில் கிளார்க் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

ரவி அன் ராஜ் கடை முதலாளிக்கு கஸ்துரியார் வீதியில் ஒரு சாப்பாட்டுக் கடை இருந்தது. அதில் ஒரு வெள்ளிக்கிழமை நான் வேலைக்குச் சேர்ந்தேன். பில் கிளாக் என்று தான் சேர்ந்தேன். ஆனால் சர்வர் வேலை செய்யும் படி கேட்டார்கள். மறுப்பின்றி செய்தேன். அன்று மாலை நான் கனவு கண்டபடி நான் (ஒரு தலையாகக்) காதலிக்கும் பெண் தனது நண்பியுடன் வந்தார். எனக்கு ஒரு பக்கம் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம். மறுபக்கம் தயக்கம்! வெட்கம்!. அதானல் ஒதிங்கி நின்று முதலாளியின் கண்ணுக்கும் படாமல் அவரைக் களவாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்..

மரக்கறி உணவகம் என்றபடியால் வாடிக்கையாளர்கள் நிறைந்த நாள். ஓடியாடி வேலை செய்து களைத்துப் போய்விட்டேன். இப்படி வேலை செய்து கொண்டு படிக்க முடியாது என உணர்ந்தேன். முதலாளியிடம் சென்று எனது பிரச்சனையைக் கூறினேன். அவர் தனது ரவி அன் ராஜ் புடவைக் கடையில் தனது மகனின் கீழ் வேலை செய்ய சேர்த்துவிட்டார். அங்கு ஒரு மாதம் வேலை செய்தேன்.

நாவற்குழியலிருந்து சைக்கிளில் வந்து வேலை செய்து கொண்டு பின் படிப்பது சாத்தியம் எனத் தோன்றவில்லை. இப்படியே தொடர்ந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என யோசித்து விட்டு ஒரு மாத சம்பளத்தையும் பெறாமல் முதலாளியிடம் சொல்லாமல் நின்று விட்டேன். இதன் பின் படிப்பதில் முடிழுமையாக கவனம் செலுத்தினேன்.

அப்பா ஈபிஆர்எல்எவ்வில் வேலை செய்ததால் நாம் யாழ் நகருக்கு குடிபெயர்ந்தோம். யாழ் கன்னியர் பாடசாலைக்கு அருகிலிருந்த பேக்கரி லேனில் ஒரு மாடிவிட்டின் மாடியில் குடியிருக்க ஆரம்பித்தோம். இக் காலங்களில் நாம் மூன்று நேரமும் ஒழுங்காக சாப்பிட உணவு கிடைத்தது.

ஆனால் கஸ்டத்திற்கு நாம் நன்றாக சாப்பிடுவது பொறுக்க முடியவில்லைப்போல. நமக்கு மீண்டும் கஸ்டம் வந்தது….

ஏன்?

தொடரும்….

மீராபாரதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: