Posted by: மீராபாரதி | July 23, 2013

1983ம் ஆண்டின் நினைவாக – எனது நினைவுகள்

1983ம் ஆண்டின் நினைவாக – எனது நினைவுகள்

Image1980ம் ஆண்டு ஆரம்பத்தில் அட்டனிலிருந்த லிபர்ட்டி கட்டிடத்தின் ஒரு அறைக்கு குடிபெயர்ந்தோம். இந்த லிபர்ட்டி கட்டிடத்தைக் கட்டியவர் வி.கே.டி பொன்னுசாமி. இந்தக் கட்டிடத்தின் பிரதான பகுதி லிபர்ட்டி சினிமா அரங்கம். இதுவே கீழ் தளத்தில் இருந்தது. இதன் உரிமையாளரும் இவரே. இவர் இலங்கையின் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவர். ஏனெனில் “தெய்வம் தந்த வீடு” மற்றும் “ரத்தத்தின் ரத்தமே” என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களை எடுத்தவர். தெய்வம் தந்த வீடு படம் ஆரம்பிக்கும் பொழுது அட்டன் இந்துமகாசபை அல்லது மாணிக்கப்பிள்ளையார் கோயில் படிக்கட்டுகளில் இவர் கீழ் இறங்கி வருகின்ற காட்சியுடன் ஆரம்பிக்கும். இவரை 1983ம் ஆண்டு கலவரத்தினபோது சிங்கள இனவாதிகளால் வெட்டி கொலை செய்தனர்….

நாம் குடியிருந்த வீடும், சிறிய ஒரு அறை, லிபர்ட்டி திரை அரங்கின் திரை உள்ள பின் பகுதியின் மேல் தளத்தில், ஒரு மூலையில், மூன்றாவது (மாடியில்) தளத்தில் இருந்தது. இந்த வீட்டில் (அறையில்) குடியிருக்கும் பொழுதுதான் 83ம் ஆண்டு கலவரம் நடைபெற்றது. பக்கத்து வீட்டிலிருந்த தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தோம். அது குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் வெலிக்கடைச் சிறையில் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறியது. இவர்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தொடர்ச்சியாக வாசித்திருந்தேன். தமிழ் மக்களின் விடுதலைக்காக சிறை சென்றதாக தமிழ் பத்திரிகைகள் எழுதியிருந்தன. இவர்களுக்கு துhக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. குட்டிமணி தனது இறுதி ஆசையாக தனது இறப்பின் பின் தனது கண்களை தமிழர் ஒருவருக்கு தானம் செய்யூம் படி கேட்டிருந்தார். இதன் காரணமாக இவர்கள் மீது அனுதாபமும் மரியாதையூம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இவர் திட்டமிட்டு சிறையில் படுகொலை செய்யப்பட்டபோது இவரது கண்கள் பறிக்கப்பட்டன.

தமிழர்கள் மீதான இத் தாக்குதல்கள் நமது வாழ்வையும் முழுமையா மாற்றியமைத்தது. 1982ம் ஆண்டு தேர்தல் காலத்தில் ஜே ஆரின் ஐ.தே.கட்சி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சிகளின் கூட்டத்தில் அப்பா உரையாற்றினார். அந்த உரைகளில் தான் தமிழர் பிரச்சனைகளில் புலியின் பக்கம் என்றார். இதன் காரணமாக அப்பா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் பொலிசாரின் கவனம் இவர் பக்கம் இருந்தது. அதேவேளை 83ம் ஆண்டு இனக் கலவரத்தை காரணமாக வைத்து பலரை கொலை செய்தனர். தானும் கொலை செய்யப்படலாம் என்ற பயம் அப்பாவுக்கும் இருந்தது. ஆகவே ரொசல்ல தோட்டத்தில் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் சில வராங்களும் பின்பு முன்னால் கட்சித் தோழர் (தட்ட) சுப்பையா தோழரின் தோட்டப் பகுதியிலிருந்த வீட்டில் சில நாட்களும் தலைமறைவாக தங்கியிருந்தோம். அப்பாவும் அம்மாவும் இங்கு எம்மை விட்டுவிட்டு வேறு இடத்தில் இருந்தனர்.

தமிழர்கள் மீதான தாக்குதல்கள் முடிந்து மாயான அமைதி நிலவிய ஒரு நாளில் மீண்டும் நாம் குடியிருந்த அறைக்கு வந்தோம். ஆனால் அருகிலிருந்த சிங்கள குடும்பத்துடன் பிரச்சனை ஏற்பட்டது. நிலமை சீராக இல்லை என்பதை அப்பாவும் அம்மாவும் உணர்ந்தார்கள். ஆகவே மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி செல்கின்ற முடிவை எடுத்தனர். இதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. இந்த சுழலில் நாம் அகதியாக சென்றால் ஒரு துண்டு காணி இலவசமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. நம்மிடம் இருந்த உடமைகள் இலவச நூல்கள் உட்பட ஆறு பெட்டிகளுக்குள் அடங்கிவிடும். எல்லோரும் ஆளுக்கு ஒரு பெட்டியை தூக்க அப்பாவும் அம்மாவும் மாறி மாறி இரு பெட்டிகளை சுமந்தனர். அட்டனிலிருந்து நமது பயணம் கொழும்பை நோக்கி பஸ்லில் ஆரம்பமானது. பாடசாலை நண்பர்களுக்கும் அயல் வீட்டார்களுக்கும் பயணம் போவதைக் கூறாமலே வெளிக்கிட்டமை மனதுக்கு கஸ்டமாக இருந்தது. வழமையாக இப்படியான பயணங்கள் ஆனந்தமாக இருக்கும். ஆனால் சிங்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரங்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்த்தால் இந்த பஸ் பயணம் பயம் நிறைந்ததாகவே இருந்தது. ஒருவாறு எந்தப் பிரச்சனையுமின்றி கொழும்பை சென்றடைந்தோம்.

இலங்கையில் இனக் கலவரம் எனக் கூறப்படுவது உண்மையிலையே சிங்கள அரசாங்கத்தின் ஆதரவுடன் இனவாதிகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைகள் எனக் கூறுவதே பொருத்தமானது. இந்த வன்முறைகளின் அடையாளங்களாகவும் சாட்சிகளாகவும் முழுமையாகவும் அறைகுறையாகவும் எரிந்த கடைகள் நாம் நடந்து சென்ற கொழும்பு வீதிகளில் காணப்பட்டன. நம்மைக் கடந்து சென்ற தமிழர்கள் ஒருவித பயத்துடன் திரிந்ததுபோல தென்பட்டது. அப்பா கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போவதற்கான வழிகளைத் தேடினார். கப்பல் ஒன்று போவதாகவும் றோயல் கல்லுரியில் சென்று பதியும்படியும் சிலர் கூறினார்கள். நாமும் நமது பொதிகளை சுமந்துகொண்டு றோயல் கல்லுரிக்கு சென்றோம். ஆனால் அதற்கான பதிவுகள் ஏற்கனவே அங்கு முடிந்திருந்தது. இருப்பினும் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக நிறைய தமிழர்கள் மேலும் காத்திருந்தார்கள். இதனால் மூன்று புகையிரதங்களை பொறுப்பானவர்கள் ஒழுங்கு செய்தார்கள். இந்த மூன்று புகையிரதங்களும் தமிழர்கள் நிறைந்திருக்க சிங்களப் பொலிஸின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக புகையிரதங்கள் பயணத்தை ஆரம்பித்தன.

பஸ் பயணத்தை விட புகையிரத பயணம் அதிகம் ஆனந்தமானது. ஆனால் எந்தவிதமான உணர்வுகளுமின்றி அமைதியாக பயணித்தோம். இனி நமது வாழ்வைப் பற்றி பயம் கொள்ளத்தேவையில்லை என்பது மட்டுமல்ல வாழ்வதற்கு சொந்தமாக ஒரு துண்டு காணியும் பாதுகாப்பான வாழ்வும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணித்தோம்.  இருப்பினும் வவுனியா வரை அச்சத்துடன் அமைதியாகத்தான் பயணித்தோம். ஏனெனில் அந்தளவிற்கு அரசாங்க பாதுகாப்பில் நம்பிக்கை இருந்தது. வவுனியாவிற்கு வந்தவுடன் பயணிகளிடமிருந்த மரணப் பயம் பறந்து செல்ல வாழ்வின் துடிப்பு மீண்டும் ஏற்பட்டது. மனிதர்கள் மனம் விட்டு ஆனந்தமாக சத்தம் போட்டுக் கதைக்க ஆரம்பித்தார்கள். தாம் எதிர்கொண்ட கஸ்டங்களை இழப்புகளை சித்திரவதைகளை எல்லாம் விபரித்தார்கள்… புகையிரதங்கள் வ்வுனியாவிலிருந்து மெதுவாகவே சென்றன. பல இடங்களில் மக்கள் குழுக்களா குழுமியிருந்து கையசைத்தனர்.

யாழ் புகையிரத நிலையத்தை மூன்று புகையிரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தடைந்தன. அந்த இடம் மனித மனங்களுக்குள் கவலை இருந்தபோதும் ஏதோ திருவிழா நடப்பதுபோல் கலகலப்பாகவும் இருந்தது… பலரிடமிருந்து நிம்மதி பெரு மூச்சு வெளிப்பட்டது. அப்பா ஒருவரைக் காட்டி இவர்தான் யாழ். அரசாங்க அதிபர் தேவநேசன் நேசையா என்றார். அவர் புகையிரத நிலைய முன்வெளியில் இருந்து துடிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார். சிங்கள தேசத்திலிருந்து அகதிகளாக வந்த நம்மை யாழ்ப்பாணம் அன்புடன் வரவேற்றது. உச்சி வெய்யிலில் ஒளிர்த்துக் கொண்டிருந்த சூரியனைப்போல பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருப்பதாக தெரிந்தது. வீடு உள்ளவர்கள் அவர்கள் இடங்களுக்கு செல்ல ஒழுங்குகள் செய்யப்பட்டன. வீடற்றவர்கள் பல்வேறு அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். நாம் கைதடியிலுள்ள புலனற்றவர்கள் பாடசாலையில் இயங்கிய அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டோம். அங்கிருந்த பெரிய மண்டபத்தின் ஒரு முலையில் போய் குந்தியிருந்தோம். முதலில் வந்தவர்கள் மூலைகள் மற்றும் சுவர் ஓரமாக இருந்த இடங்களைப் பிடிக்க பிந்திவந்தவர்கள் மண்டபத்தின் நடுவில் இருக்க ஆரம்பித்தார்கள். கைதடி அறவழிப்போராட்டக்குழு நண்பர்களும் மேலும் சில நிறுவனங்களும் அகதிகளுக்கு தேவையானதைப் பூர்த்திசெய்ய ஆர்வமாகவும் துடிப்பாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இரண்டு மூன்று நாட்களின் பின்பு தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்கள் மட்டும் இன்னுமொரு இடத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் என கூறப்பட்டது. அதில் நாங்களும் இருந்தோம். எம்மை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் கடற்கரை ஒன்றை நோக்கி சென்று கொண்டிருந்தது. மாலை வேளையில் வீசிய கடற்காற்று மனதுக்கு இதமாக இருந்தது. கடற்கரையை ஒரமாக கட்டிடங்கள் பல இருந்த இடத்தில் வாகனம் நின்றது. இது பழைய குருநகர் இராணுவ முகாம் எனக் கூறப்பட்டது. வாசலின் இரு மருங்கிலும் இரண்டு கட்டிடங்கள் இருந்தன. நடுவில் பெரும் வெளி இருக்க சுற்றிவர கட்டிடங்கள் இருந்தன. கடற்கரை ஓரமாக இருந்த கட்டிடம் பழைய சிறைசாலை. இங்கு நடைபெறும் சித்திரவதைகளால் உருவாகும் சத்தம் கடலலை சத்தத்திற்கு கரைந்து போயவதற்காகத்தான் இந்த இடத்தில் சிறைச்சாலையை கட்டியிருக்கின்றார்களாக்கும். இதற்கு எதிர்புறமாக வெளிக்கு அப்பால் பெரும் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இருந்தது. இன்னுமொரு புறம் நான்கு கட்டிடங்கள் வரிசையாக இருந்தன.

இக் கட்டிடங்களில் (புளொக்கில்) ஒரு விராந்தையும் நான்கு அறைகளும் மற்றும் சமையலறை என சகல வசதிகளும் கொண்ட தனித்தனி வீடுகள். முதலில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு அறைகள் என பகிர்ந்தளிக்கப்பட்டன. காலோட்டத்தில் இவை நமக்குரியவையாகும் எனவும் கதைக்கப்பட்டது. ஆனால் காலோட்டத்தில் ஒரு அறைக்கு ஒரு குடும்பம் என்றாகி பின் ஒரு வீட்டில் ஐந்து குடும்பங்கள்  இருக்க வெளி எங்கும் கூடாராங்கள் அமைக்கப்பட்டு பல அகதிகள் குடியிருந்தார்கள். மேலும் மேலும் நாள்தொரும் அகதிகள் வந்துகொண்டே இருந்தார்கள். சிறைச்சாலை இருந்த கட்டிடம் தனிநபரான ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்தப் பழைய இராணுவ முகாமிற்கு பக்கத்தில் இருந்த தொடர் மாடிக்கட்டிடத்தில் சிறிலாங்கா இராணுவம் நிலைகொண்டிருந்தது. இந்த அகதிகள் முகாமுக்கு நாம் வந்த ஆரம்பத்தில் வீதியின் மறுபுறம் இருந்த யாழ் பீச் இன் விடுதி உரிமையாளர் சிலுவை (அங்கில்) நம்மை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் உபசரித்தார். முதல் இரண்டு இரவுகள் அவரது ஹோட்டலில்தான் எங்களுக்கு சாப்பாடு தந்தார்கள். இதன் பின் குருநகரைச் சேர்ந்த கள்ளக்கடத்தல் எனப்படும் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் அரசாங்க அனுமதியற்ற கடற்போக்குவரத்தினுடாக வியாபாரம் செய்கின்ற அன்டன் தலைமையில் நாள் தொரும் விதம் விதமான சாப்பாடுகள் தந்தார்கள். புட்டுடன் மீன் பொறியல் மீன் குழம்பு…. நீண்ட நாட்களுக்குப்பின் ருசியான சாப்பாடுகள் வயிறு நிறைய சாப்பிட்டோம். இதன்பின் யாழ் லயன்ஸ் கழகம் குருநகர் அகதிகள் முகாமை பொறுப்பெடுத்து நடாத்தியது. இக் காலங்களில் தொலைக்காட்சிகளை வாடகைக்கு எடுத்து இரவிரவாகத் திரைப்படம் பார்ப்பதுதான் நமது ஒரே பொழுதுபோக்கு. இப்படி ஒரு நாள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அதிகாலை இரண்டு மூன்று மணியளிவில் சிலர் ஓடித்திரிகின்ற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பெரிய குண்டு சத்தம் கேட்டது. குண்டு வைத்தவர்கள் முகாமிற்கு பின்னாலிருந்த வாய்காலினுள் விழுந்து தப்பித்து சென்றார்கள். அதிகாலை விடிந்தபோது அகதிகளுக்கான நிர்வாக வேலை நடாந்த கட்டிடம் ஒன்று தரைமட்டமாக இருந்தது. ஆனால் ஒடுக்குமுறையின் சின்னமாகவும் சித்திரவதைகள் நடந்த அடையாளமாகவும் இருந்த முன்னால் குருநகர் இராணுவ முகாம் சிறைச்சாலை மட்டும் அப்படியே நிமிர்ந்து நின்றது.

மீராபாரதி
23.07.2013

முன்பு எழுதிய சில கட்டுரைகளை வெட்டி ஒட்டி தொகுத்தது.

Advertisements

Responses

  1. Meera very good article. Thanks to you for bringing the 1983 incidents. Taken me back to 1983. Remembering the days of seeing films at Liberty theater whenever I visit Hatton to see R.R.Sivalingam and Thiruchenduran.I know V.K.T Ponnusamy very well. Presently his daughter and her family living in chennai.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: