Posted by: மீராபாரதி | May 20, 2013

மரணம்- இழப்பு- ஒரு அனுபவம் – செழியன்

chiliaynஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

மீராபாரதி இரண்டுவாரங்களுக்கு முன்னர் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.

மரணித்தவர்களை நினைவு கூரல்…

அஞ்சலி செய்வதற்கான உரிமையை வலியுறுத்தல்…

இழந்தவர்களை ஆற்றுப்படுத்தல்…

இவர்கள் வாழ்வை மேப்படுத்தல்

போன்ற கருத்துக்களை வலுயுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு “மரணம் இழப்பு மலர்தல்” என்ற நூல் வெளியீட்டை மே மாதம்  19ம் திகதி நிகழ்த்த விரும்புகின்றேன். அதில் கலந்து கொண்டு உரையாற்ற முடியுமா என்று?

புத்தகத்தை வாசிக்க முன்னரே எனக்குள் இந்த விடயங்கள் பெரிய உற்சாகத்தை… ஒரு வித நம்பிக்கையை … பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பேசப்பட வேண்டிய பொருள்… இன்னமும் நமக்குள் பேசப்படாத பொருள். அதனால் உடனடியா சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

புத்தகத்தை முழு மூச்சில் வாசித்து முடித்தேன். வாசித்து முடித்து விட்டு புத்தகத்தை தூக்கி ஒரு மூலையில் போட்டு விட்டு போய்விடலாம். ஆனால் இந்தப் புத்தகம்  ஏற்படுத்திய தாக்கத்தை தூக்கிப் போட்டுவிட்டு போகவே முடியாது.

நாம் எல்லோருமே பிறந்தில் இருந்து மரணத்தை நோக்கியே பயணம் செய்கின்றோம். அது இயற்கையாகவும் வரும்… செயற்கையாகவும் வரும்.

முதன் முதலாக யாருடைய மரணம் உன்னைப் பாதித்தது? என்ற கேள்வி இந்தப் புத்தகத்தை வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் வரும்.

எனக்கு முதன் முதலாக கவலை வந்தது அப்பா கவலைப்பட்டதைப் பார்த்து. சமர்செட் தோட்டத்தில் ஆசிரியர் அவர்.

பள்ளி முடிந்து நானும் தம்பிமாரும் குளிப்பதற்காக பீலி என்று சொல்லப்படுகின்ற இயற்கையான நீர் விழுகின்ற இடத்திற்கு புறப்பட்ட போது அப்பா எங்களை எல்லாம் கவணிக்காமல் அன்றைய வீரகேசரியை எடுத்து தலையங்கத்தை பார்த்து விட்டு “ஓ” என்று சொல்லி கவலையோடு உச்சிகொட்டினார்.

அப்பா ஏன் கவலைப்பட்டார் என்று மனம் துடிதுடித்தது. குளித்து விட்டு வந்து வீரகேசரியை எடுத்து தலையங்கத்தைப் பார்த்தேன்.

“அறிஞர் அண்ணாவுக்கு மீண்டும் புற்று நோய்” என்று தலைப்பு செய்தியாக இருந்தது.

அன்று தான் முதன் முதலாக நான் பத்திரிகை வாசித்தது. பிறகு அது அப்பா வாசிக்கின்ற கல்கி, சுதந்திரன் பத்திரிகை என்று ஆகியது.

யார் இந்த அறிஞர் அண்ணா? என்று அம்மாவிடம் கேட்டேன். வீட்டில் மாட்டியிருந்து ஒரு பெரிய படத்தின் நடுவில் நின்று கொண்டிருந்தவரைக் காட்டி இவர்தான் பேரறிஞர் அண்ணா என்று சொன்னார்கள். சுற்றிவர பல பேருடைய படங்கள் இருந்தன. பிறகு பிறகு தெரிந்து கொண்டேன். கருணாநிதி, நெடுஞ்செழியன்…. என்று ஒரு படையே இருந்தது.

பிறகு ஒரு நாள் அப்பா அழுதார். அறிஞர் அண்ணா இறந்து விட்டார் என்று. அவருக்கு அந்த உரிமை அன்று இருந்தது.

மலைய தோட்டமான சமர்செட்டில் எங்கள் வீடு தனிமைப்பட்டு இருந்தது. கூக்குரல் போட்டாலும் யாருக்கும் கேட்காது. எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தது எங்கள் செல்லப் பிராணியான செல்வம் என்ற நாய். (செல்வம் அண்ணை தயவு செய்து மன்னிக்கவும்)

நாங்கள் குளிக்க போனாலும் கூடவரும். எமது முதல் நண்பர்களான ஐஸ்டின் அம்முண்டி வீட்டுக்கு விளையாடப் போனாலும் வரும். எங்கள் அப்பா இரவில் செல்லும் போதும் போகும்.

அப்படி ஒரு நாள் இரவு அப்பாவுடன் எங்கள் நாய் சென்றது.

சென்ற நாய் வரவில்லை…. அப்பா மட்டும் பதட்டதுடன் வந்தார்.

நான் நித்திரைக்காக சென்றிருந்தேன்.

அம்மாவுடன் கதைத்து விட்டு “தம்பி” என்று அப்பா என்னைக் கூப்பிட்டார். ஏதோ பிரச்சனை என்று எனக்கு தெரிந்தது.

“வாங்கோ ஒருக்கா… செல்வத்தை வேகமாய் போன கார் அடிச்சுப் போட்டுது. அதை தூக்கித்தான் கொண்டுவர வேண்டும்…”

உடனேயே நானும் அப்பாவும் அந்த இடத்திற்குச் சென்றோம். ஒரு மோட்டு சாரதியால் அடிபட்டு பேச்சு மூச்சில்லாமல்…இரத்தம் சிந்த அமைதியாக கிடந்தது எங்கள் அன்புக்குரிய நாய்.

அப்பா இரண்டு மூன்று தடவை பெயர் சொல்லிக் கூப்பிட்டார். பிறகு தொட்டுப்பார்த்தார்.

“தம்பி செத்துப் போச்சுதடா” என்றார்.

எனக்கு அழுகை அழுகையாக வந்து. ஒரு உயிருக்காக நான் அழுத முதல் அழுகை அது.

அப்பா எனது அழுகையை தடுக்கவில்லை. ஒரு உயிருக்காக அழுகின்ற உரிமை எனக்கு அப்போது இருந்தது.

எங்கள் நாயை ஒரு சாக்கில் தூக்கி வளர்த்தி இரண்டு பேருமாக தூக்கிக் கொண்டு வீடு வந்தோம்.

அடுத்த நாள் காலை எப்படியோ விடயம் அறிந்து ஐஸ்டினும் அம்முண்டியும் வந்து நாய்க்கு முன்னால் குந்தி இருந்து அழுது கொண்டிருந்தார்கள்.

ஒரு நாய்காக தமிழன் நானும் சிங்கள நண்பர்கள் இரண்டு பேரும் அழுவதற்கான உரிமை அன்று இருந்தது.

இன்று இருக்கிறதா?

போரில் இறந்து போன தன்னுடைய மகளுக்காக ஒரு தாய்க்கு அழுகின்ற உரிமை அவளுக்கு இருக்கின்றதா?

மகளுக்காக, மகனுக்காக ஒரு விளக்கை, ஒரு மெழுகுதிரியை கொழுத்திவைக்கும் உரிமை ஒரு தாய்க்கு இருக்கின்றதா?

இறந்து போன பிள்ளைக்காக உறவினர்களை கூட்டி ஒரு நினைவஞ்சலி செய்கின்ற உரிமை தமிழர்களுக்கு இருக்கின்றதா?

இந்தக் கேள்விகளை எழுப்பிச் செல்கின்றது இந்த நூல்.

என்னை மிகவும் உணர்வு ப10ர்வமாக இந்த நூல் பாதித்துள்ளது. நிச்சயமாக எல்லாரையுமே பாதிக்கும்.

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் போராட்டம் பற்றிய பல புத்தகங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் வந்தது தான் இது. ஆனால் இது புதிது. நண்பர் மீராபாரதிக்கு எனது வாழ்துக்கள்.

மீராபாரதிக்கு இந்த விதையை விதைத்தவர் அவருடைய அப்பா என்றே என்னால் கருதமுடிகின்றது.

இன்று கனடாவில் குடும்பத்தில் நாலு பேர் இருந்தால் நால்வருமே…. நான்கு கிரகங்களில் வாழ்வதைப் போல வாழுகின்றோம்.

ஒரு பிள்ளை தொலைக் காட்சியில் வாழும். மனைவி இந்திய நாடகங்களில் வாழ்வார். இன்னொரு பிள்ளை தொலை பேசியில் வாழும். அடுத்த பிள்ளை இன்டநெட்டில் வாழும்.

மீராபாரதி…. மற்றும் எமது காலங்களில் எங்கள் அப்பா, அம்மா தான் எமது தொலைக் காட்சி, தொலை பேசி, நாடகம், இன்டநெட்.

அதனால் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம். அவர்கள் பாதையை இன்னமும் செப்பனிட்டு தொடர்கின்றோம்.

அன்பான நண்பர்களே மீராபாரதி சொல்வது போல நீங்கள் எதற்காக முதல் அழுதீர்கள் என்று சிந்தியுங்கள். பின்னர் இன்றைய சமூகத்தில் அழுவதற்கான உரிமை இருக்கின்றதா? என்று உங்களுக்குள் ஒரு கேள்வியை கேளுங்கள். கூடவே இந்த புத்தகத்தை வாசியுங்கள்.

அன்புடன்

செழியன்

19.05.2013

செழியன் படம் – நன்றி – Tamil News ekuruvi

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: