Posted by: மீராபாரதி | May 18, 2013

கருணையில்லா கடவுளின் படைப்பு – மனிதர்கள்

கருணை ரவியின் “கடவுளின் மரணம்” – ஒரு பார்வை

krunai ravi kdavulஈழத்தில் நடைபெற்ற போரின் போதும் அதன் பின்பும் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன், தீபச் செல்வன், கருணாகரன், நிலாந்தன், அப்பு, கருணை ரவி… என சிலரினது படைப்புகளை மட்டுமே கதைகளாக, நாவலாக, கட்டுரைகளாக தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம். இன்னும் பெண் படைப்பாளிகள் எழுத ஆரம்பிக்கவில்லை. அல்லது நம் பார்வைக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. போருக்குள்ளும் மரணத்திற்குள்ளும் வாழ்ந்து போராடி மீண்ட இவர்கள் இவ்வாறு தொடர்ந்து எழுத வேண்டும். தங்களின் வலிகளை எழுதவேண்டும். எந்த மக்களுடன் வாழ்ந்தார்களோ அவர்களின் வலிகளை எழுதவேண்டும். குரலற்றவர்களின் குரலாக இவர்கள் ஒலிக்கவேண்டும். இதற்கு இவர்களை முதலில் எழுத விடவேண்டும். நமது (புலம் பெயர்ந்த மற்றும் தமிழக செயற்பாட்டாளர்களின்) எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, மதிப்பீடுகளை இவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்கள் அனுபவித்ததை அதனுடாகப் புரிந்ததை அவர்கள் விரும்பியவாறு எழுத ஊக்குவிக்க வேண்டும். இதை வாசிப்பதன் மூலம் அதே அனுபவங்களைப் நாம் பெறலாமோ தெரியாது. ஆனால் அவர்களின் வாழ்வையும் நிலைப்பாடுகளையும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். அதுவே இன்று அவசியமானது.

ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்று இயக்கங்கள் உருவான ஆரம்பக் காலங்களில் வாழ்வில், போராட்டத்தில் நம்பிக்கை இருந்தது. ஆகவே யதார்த்த்திற்கு அப்பாலும் கனவு கண்டோம். அந்தக் கனவை அடையலாம் என மனதார முழுமையாக நம்பினோம். வாழ்ந்த சுழல் பெரும்பாலும் சிறிலங்கா அரச அடக்குமுறையால் சூழலப்பட்டிருந்தபோதும், சில காலம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தபோதும் யாரும் யாரையும் எதிர்த்து பயமின்றி குரல் கொடுத்த காலம் அது. அன்று ஆபத்து இருந்தபோதும் பயம் இருக்கவில்லை. போராட்டத்தைப் பொறுத்தவரை அது ஒரு நேர்மறையான காலம். அக் காலங்களில் வாழ்ந்த ஈழ மக்கள், படைப்பாளிகள் உணர்ந்தது வேறு. அப்பொழுது “மரணத்துள் வாழ்ந்து” மரணத்தை எதிர்கொள்கின்ற துணிவு இருந்தது. உண்ணதமான ஒரு எதிர்கால வாழ்விற்காக நம்பிக்கையுடன் மரணிக்க தயாராக இருந்தோம். இருப்பினும் பலர் இதற்கு முன்பும் இந்தக் காலங்களிலும் அதன் பின்பும் புலம் பெயர்ந்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக இயக்க முரண்பாடுகள், இலங்கை மற்றும் இந்திய இராணுவத்துடனான போர் நடைபெற்ற காலங்கள் எனப் பல காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்தார்கள். துரதிர்ஸ்டவசமாக இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் புலம் தொடர்பான சிந்தனையில் தாம் எந்தக் காலத்தில் புலம் பெயர்ந்தார்களோ அந்தக் காலத்திலையே இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் புலத்தில் இதன் பின் பல மாற்றங்கள் நடைபெற்றுவிட்டன. அதனைப் புலம் பெயர்ந்தவர்கள் உள்வாங்கிக் கொண்டவர்களாகத் தெரியவில்லை.

இன்று போராட்டம் தோல்வியடைந்த பின் வாழ்கின்ற காலம். பல்வேறு இழப்புகளையும் வலிகளையும் சந்தித்த மனிதர்கள் வாழ்கின்ற காலம் இது. ஒருவர் மீது ஒருவர் மட்டுமல்ல சுற்றியிருக்கின்ற சுழல் மீதும் பயமும் சந்தேகமும் நிறைந்து காணப்படுகின்ற காலம் இது. போராட்டத்தின் மீது மட்டுமல்ல வாழ்வு மற்றும் மனிதர்கள் மீதும் நம்பிக்கையற்ற காலம். இது எதிர்மறையான காலம். இன்று ஈழத்தில் வாழ்கின்ற மக்கள், படைப்பாளிகள் உணர்வது வேறு. போராட்ட காலத்தில்  வாழ்ந்த மக்கள் உணர்ந்ததுபோல் இன்று இவர்களால் உணர முடியுமா என்பது ஒரு கேள்வியே. ஏனெனில் மரணத்தையும் இழப்புகளையும்  மீள மீளக் கண்டு… கண்டு… வெறுத்துபோய் அதிலிருந்து தப்பித்து வாழுகின்ற காலம். இதற்கு மேலும் கவலைகளை வலிகளை தாங்க முடியாது, இழப்புகளை ஏற்கமுடியாது, தப்பித்து வாழ்கின்ற காலம்.

வாழ்வின் மீதான மதிப்பும் மனித உயிரின் பெறுமதியும் எவ்வளவு உயர்வானது என உணரும் காலம் இது. இன்று ஒரு நோக்கத்திற்காக மரணிப்பதற்கோ உயிரை கொடுக்கவோ யாரும் விரும்பவுமில்லை. அதற்குத் தயாராகவுமில்லை. இதுவரை கொடுத்தது போதும் என்ற மனநிலையே இருக்கின்றது. இதனால்தான் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரையும் தம் வாழ்வையும் காப்பாற்றுவதினுடாகவே உன்னதாமான ஒரு வாழ்வை சமூக மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்ற காலம் இது. அவ்வாறான ஒரு மாற்றத்தை எவ்வாறு எந்த நிலைப்பாட்டில் உருவாக்க முயற்சிக்கின்றோம் என்பதிலையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தடிப்படையில்தான் புலத்தில் (ஈழத்தில்) வாழ்கின்ற படைப்பாளிகள் பற்றிய மதிப்பீடு (புலம் பெயர்ந்த தேசங்கள் மற்றும் தமிழகம் போன்ற) வெளியிலிருந்து செய்யப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட வேறுபாடுகள் இதனால் ஏற்படும் அனுபவங்கள் அவர் அவர்களுக்கு உரியது. தனித்துவமானது. ஆகவே இந்த இரு காலங்களிலும் (அதாவது அன்றும் இன்றும்) கொண்டிருக்கின்ற அறம் சார்ந்த உணர்வும் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் வேறு வேறானது. இவற்றை ஒரே அளவு கோளைக் கொண்டு அளக்க முடியாது. இவ்வாறான ஒன்றை அளப்பதற்கான கருவியை உருவாக்குவதையோ அல்லது அதன் மூலம் அளப்பதற்கான அதிகாரத்தையோ இந்த அனுபவங்களை எதிர்கொள்ளாதவர்கள் கொண்டிருக்க முடியாது. மாறாக அவ்வாறு செய்வதுதான் அறமற்றது. ஏனெனில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தேசங்களில் கூட நாம் குறைந்தபட்ச அறத்துடன் நம் நாளாந்த வாழ்வில் வாழ்வதில்லை. செயற்படுவதில்லை. ஆகக் குறைந்தது நாம் குடும்பத்திற்குள் கூட ஐனநாயகத்தை மதிப்பதுமில்லை அறத்துடன் செயற்படுவதுமில்லை. இவ்வாறு வாழாத நாம் போரின் பின்பும் இராணுவ சுழலிலும் வாழ்பவர்களிடம் அறத்தை எதிர்பார்ப்பது அநாகரிகமானது. மேலும் தமக்கான அறம் என்ன என்பதை அவரவர்தான் தெரிவு செய்ய வேண்டும். வேண்டுமானால் நாம் கருத்துக் கூறலாம். இன்னும் ஒரு படிமேல் சென்று விமர்சிக்கலாம். ஆனால் இதுதான் அறம் என வரையறுத்துக் கூறமுடியாது.

பெரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் அரச ஆதிக்கத்தின் கீழ் மட்டும் வாழ்ந்தவர்கள் என த.அகிலன் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார். ஆனால் பிற்காலங்களில் புலிகளின் தலைமையும் ஆதிக்க (நிழல்) அரசு ஒன்றைக் கொண்டிருந்தது. ஆகவே போர் முடிவடைவதற்கு முன்பு வாழ்ந்த மக்கள் அக புற ஆதிக்கங்கள் என இரு ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தவர்கள் என்கின்றார் அவர். பலர் இதனுடன் முரண்படலாம். ஆனால் இதை புலம் பெயர்ந்து வாழ்கின்றவர்கள் கவனத்தில் கொள்வது அவசியமானது. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டே புலத்தில் இருந்து வருகின்ற படைப்புகளையும் படைப்பாளர்களையும் நாம் பார்க்கவும் அணுகவும் விமர்சிக்கவும் வேண்டும்.

தீபச் செல்வன்எழுநா வெளியீட்ட தீபச் செல்வனின் “போர் தின்ற நகரம்” என்ற நூலிலுள்ள கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் போரின் பின் ஏற்பட்ட பல இழப்புகளை துன்பங்களை துயரங்களை வலிகளை தகவல்களாக சுய அனுபவப் பதிவினுடாக கூறுகின்றன. இதனை தனது மற்றும் தான் அறிந்த நண்பர்கள் உறவுகள் ஆகியோரின் வாழ்வின் மூலமாக வெளிப்படுத்துகின்றார். உதாரணமாக கண், கால், முகம் இழந்த, மற்றும் தம் உறவுகளை இழந்தவர்களின் அனுபவங்களை, பிரச்சனைகளை, சாவால்களை குறிப்பிடுகின்றார். இதேபோல் வடலி வெளியீட்ட இரு நூல்களான “தேவதைகளின் தீட்டுத்துணி” மற்றும் “சேகுவேரா இருந்த வீடு” போன்றவற்றிலும் மற்றும் கட்டுரைகளிலும் போரிற்கு முன், போரின் போது, மற்றும் போரின் பின் நடைபெற்ற முரண்பாடுகளையும் எள்ளலுடன் கூறுகின்றார் யோ. கர்ணன். இவை பெரும்பாலும் இயக்கத்திற்குள் நடைபெற்றவற்றையும் போராளிகளுக்கு இடையிலான உறவையும் இவர்களின் தனிப்பட்ட உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மற்றும் சமூகத்திற்கும் இயக்கத்திற்கும் இடையிலான உறவுகளையும் வெளிப்படுத்துகின்றன. கருணாகரன் போரின் போதும் அதற்கும் முன்பும் என்னவிதமான அரசியல் இயக்கத்திற்குள் நடைபெற்றது என்பதை கோடிட்டு காட்ட முனைகின்றார். நிலாந்தன் கடந்த கால படிப்பினைகளிலிருந்து புதிய சூழலுக்கான அரசியல் கோட்பாடு ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றார் எனலாம்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஈழத்தில் போர் நடைபெற்ற காலங்களில் வாழ்ந்தபோதும் ஒவ்வொருவரும் பெற்ற அனுபவங்களும் அதைப்பற்றிய புரிதல்களும் இதனடிப்படையிலான நிலைப்பாடுகளும் வேறுவேறானவை. இதற்கு இவர்களது வயது, அனுபவம், அறிவு, புரிதல்… எனப் பல காரணங்கள் தாக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன. இருப்பினும் இவர்கள் வெளிப்படுத்துகின்றவை அல்லது படைக்கின்றவை ஒன்றைவிட ஒன்று குறைந்ததல்ல. அதனதன் தளங்களில் அதற்கான முக்கியத்துவம் இருக்கின்றது. இவர்களில் யார் சரியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை எதிர்காலம்தான் குறித்துச் செல்லும். நாம் காலத்திற்கு முந்தி அதைப் பற்றிய ஒரு முத்திரையைக் குறிக்கத் தேவையில்லை. ஆனால் கவனத்தில் கொண்டு ஆராயலாம்.

இவ்வாறான ஒரு புரிதலினடிப்படையில் வடலி வெளியீட்ட கருணை ரவியின் “கடவுளின் மரணம்” சிறுகதைத் தொகுப்பு தொடர்பான ஒரு குறிப்பு இது. ஒருநாள் வேலைக்குப் போகின்ற ஒரு காலைப் பயணத்தின் போது இதில் இருந்த முதலாவது கதையான “கடவுளின் மரணம்” சிறுகதையை வாசித்தேன். வழமையாக இவ்வாறான தொகுப்புகளிலுள்ள கதைகளைத் தொடர்ந்து அடுத்தடுத்து வாசித்துக் கொண்டு செல்வேன். ஆனால் இக் கதையை வாசித்தவுடன் அடுத்த கதையை வாசிக்க முடியவில்லை. என்  உணர்வு அவ்வாறு இருக்கவில்லை. இரண்டாவது கதையான “பிரிகை” யை வேலை முடிந்து மீண்டும் வரும் பொழுதுதான் வாசித்தேன். இதுவும் முதற் கதைபோல் இருக்கக் கூடாது என நினைத்துக் கொண்டு வாசித்தேன். ஆனால் அவ்வாறுதான் இருந்தது. அடுத்த கதையைத் தொடர முடியவில்லை. ஆகவே அடுத்த நாள் பயணத்தின் போது  “கப்பல் எப்ப வரும்” என்ற மூன்றாவது கதையை என்ன சொல்லப் போகின்றாரோ என்ற ஒரு வித பதைப்பு எதிர்பார்ப்பு உணர்வுகளுடன் வாசித்தேன்.

இந்த மூன்று கதைகளிலும் போரின் வலி, அதனால் ஏற்பட்ட இழப்பு மற்றும் வாழ்வின் மீதான நம்பிக்கை ….  என்பன தொடர்பாக எழுதியிருக்கின்றார். இந்த உணர்வுகளை வெளிப்படுத்த இவ்வாறு எழுதியதைவிட வேறு வகையில் இந்த தரத்திற்கும் எழுத முடியுமா என்பது சந்தேகமே. உண்மையிலையே என்னுள் எழுந்த உணர்வு தொடர்பாக எழுதுவதற்கு என்னிடம் சொற்கள் இல்லை. அல்லது எனக்கு எழுதத் தெரியவில்லை எனவும் கூறலாம்.  பெரும்பான்மையான கதைகள் ஆண் பார்வையில் சொல்லப்பட்டிருந்தபோதும் அதையும் மீறி போரின் வடுக்கள் நம்மைப் பாதிக்கின்றன. சிறு கதைதானே என்று அடுத்த கதைக்கு பக்கத்தைத் திருப்பிக் கடந்து போக முடியவில்லை.  தான் உணர்ந்த வலிகளை தனக்குள் இருக்கின்ற ஆறாவடுக்களை நாம் உணரும் வகையில் படைத்திருக்கின்றார். வாசகர் மீது எந்தக் கருணையுமில்லாது படைத்திருக்கின்றார் கருணை ரவி. எனது வாசிப்பு பரப்புக்குள் இலக்கியம் தொடர்பான எனது சிற்றறிவுக்குள் இந்த மூன்று கதைகளும் என் மீது ஏற்படுத்திய பாதிப்பு ஆழமானது. அந்த வகையில் இக் கதைகள் எனக்குள் பல வகைகளில் உயர்ந்து நிற்கின்றன.

முதலாவது கதையில் ஒரு கடவுள் (மனிதர்) இறந்துபோக,  இழந்தவர், தான் இழந்ததும் தெரியாது, இருண்ட தன் தேசத்தில் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார் இன்னுமொரு கடவுளுக்காக. அவரைக் காப்பாற்ற இன்னுமொரு கடவுள் வந்தாரா….? இரண்டாவது கதையில் மனிதர்களுக்குள் பல முரண்கள், குறைபாடுகள் இருந்தபோதும் சில நேரங்களில் அவர்கள் கடவுளாகவே வாழ்கின்றனர் என்ற நம்பிக்கையைத் தருகின்றார். அல்லது அப்படி இல்லாது மிக மோசமான மனிதராகவும் அவர் வாழலாம். அதைத் தெரிவு செய்வதை நம்மிடம் விட்டுவிட்டார். ஆனால் மூன்றவாது  கதையில் இழந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் எந்த நம்பிக்கையையும் கடவுள் தரவில்லை. போருக்குள் அவஸ்தைப்படுகின்ற மாண்டுபோகின்ற மனிதர்களைக் காப்பாற்ற ஒரு கடவுளும் இருக்கவில்லை. கடைசியாக மக்கள் அநாதரவாக கைவிடப்பட்டநிலையில் எல்லாக் கடவுளரும் மரணித்துப் போனார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலை இதனால் உருவாகின்ற  வெறுமை, பயம், இயலாமை எல்லாம் நம்மை உலுப்பி எடுக்கின்றது. நம் வாழ்வை கேள்விக்குள்ளாக்கின்றது. நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் எனக் கேள்வி கேட்கின்றது. வாசித்த எனக்கே இவ்வாறு எனின், இதை நேராக அனுபவித்தவர்களுக்கு…..?

நான்கவாது கதை முதுமையடைந்த ஒரு பெண்ணினது கதை. முதல் மூன்று கதையின் பாதிப்பால் எதிர்பார்ப்புடன் வாசித்த கதை. எதையும் தாங்குவதற்கு தயாராக இருந்த மனநிலை. அதனால் தானோ என்னவோ அதிர்ச்சியடையாது அமைதியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் ஒவ்வொருவரை இழந்து கடைசியாக எல்லாவற்றையும் இழந்து தனித்து நிற்கின்ற பெண்ணின் வாழ்வு. இவ்வாறு எல்லாம் முடிந்த பின்பும் அவருக்கு ஒரு விருப்பம் இருக்கின்றது. ஒரு பொறுப்பு இருக்கின்றதை உணர்கின்றார். முள்ளிவாய்க்காலில் அநாதையாக மரணித்த தனது கடைசி உறவின் இறுதிச் சடங்கை செய்கின்ற விருப்பம் அது.  அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றார். அது நிறைவேறியதா? மரணித்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்ற கதை. இந்தச் சடங்குகள் மரணித்தவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ தெரியாது. ஆனால் இழப்புகளை சந்தித்த பின்பும் வாழ்பவர்களுக்கு முக்கியமானது என்பதை வலியுறுத்துகின்ற கதை இது.

முதல் மூன்று கதைகளிலும் இருந்த வலி, வேதனை, துக்கம், முரண்பாடுகள் என்பவற்றுக்கான காரணங்கள் ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறையும் மற்றும் போராட்டத்தை ஒடுக்கவும் புலிகளின் தலைமைகளை அழிக்கவும் வல்லரசுகளின் ஆதரவும் இந்த அரசுக்கு இருந்தது எனலாம். இன்னுமொரு காரணம் ஈழத் தமிழ் சமூகத்திற்குள் இருந்த பல்வேறு வகையான அக முரண்பாடுகள். இதைத்தான் பின்னால் தொகுக்கப்பட்ட போரிற்கு முன்பான அல்லது இறுதிப் போருக்கு முன்பான கடந்த காலங்களிலும் அந்தக் கால அனுபவங்களின் அடிப்படையிலும் எழுதப்பட்ட கதைகள் கூறுகின்றன. இந்தக் கதைகள் பெரும்பாலானவை எழுதப்பட்டது மே 2009ம் திகதிக்கு முன்பு. அல்லது அங்கிருந்து ஆரம்பித்து போரின் பின்பு முடிகின்ற கதைகள். முதல் மூன்று கதைகளிலும் இருந்த இறுக்கம் அல்லது ஏதோவொன்று இவற்றில் இருக்கவில்லை எனலாம். இவை வழமையான சிறுகதைகளாகவே இருந்தன. ஆனாலும் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்த தவறவில்லை.

முதல் முன்று கதைகளையும் இறுதியாக சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் ஒரு நண்பர் கூறினார் முதல் மூன்று கதைகள் தரும் வெளிச்சம் பின்னால் தொகுக்கப்பட்ட கதைகளை புரிந்து கொள்ள உதவுகின்றது என்றார். நண்பர் கூறியபின் கதைகள் தொகுக்கப்பட்ட விதம் சரியான ஒழுங்கு முறை என்றே தோன்றியது. ஏனெனில் பின்னாலுள்ள கதைகள் நம் சமூகத்திற்குள் இருக்கின்ற பல்வேறுவகையான அக முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒருவகையில் இந்த முரண்பாடுகளின் விளைவுகள் தான் போரின் முடிவுகளுக்கு இருந்த பல காரணங்களில் ஒரு காரணம் எனலாம். இதில் சில கதைகள் போரின் நாயகர்களை உருவாக்கிய போதும் அவை வெளிவந்த காலங்களில் கருத்தில் கொண்டு அவற்றைப் புரிந்து கொள்ளலாம். அதேவேளை பல போராளிகள் மிக உயர்ந்த அர்ப்பணிப்புளை போராட்டத்தில் செய்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது வெளிப்படுத்துகின்றார்.

வன்னி யுத்தம்அப்பு என்ற புனைப் பெயரில் எழுதப்பட்ட “வன்னி யுத்தம்” என்ற நாவல் அல்லது சுய அனுபவப் பகிர்வும் வாசிக்க கிடைத்தது. (நன்றி இளங்கோ). இதில் புலிகளின் ஆதிக்கத்திற்குள் இருந்த வர்க்க முரண்பாடுகளை குறிப்பிட்ட மனிதர்களை சுட்டிக்காட்டி வரையறுப்பதன் மூலம் அவர்களைப் பிரித்து திட்டவட்டமாகவும் உறுதியாகவும் சொல்கின்றார். இது தொடர்பாக டிசே இளங்கோவும் தனது குறிப்பில் கூறியுள்ளார். ஆனால் கருணை ரவி வர்க்க முரணை கதைகளினுடாகவும் கதை பாத்திரங்களினுடாகவும் இயல்பாக வெளிப்படுத்தி படைத்துச் செல்கின்றார். இதன் மூலம் பல்வேறு சமூக முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பை வாசகரின் கைக்கு… மனதுக்கு சிந்தனைக்கு விட்டுவிடுகின்றார்.

கருணை இல்லாத கடவுள் இருந்தென்ன இறந்தென்ன வாழுகின்ற மனிதர்களுக்கு அவரால் எந்த நன்மையும் இல்லை என எழுதி முடித்து விடலாம். ஆனால் அவ்வளவு இலகுவாக கடவுள் மீது மனிதர்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை அழித்துவிடமுடியாது. இந்த நம்பிக்கை அழிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. மாற்றப்பட வேண்டி ஒன்று.

மீராபாரதி

18.05.2013

நன்றி குளோபல் தமிழ் நியூஸ்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91855/language/ta-IN/article.aspx

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: