Posted by: மீராபாரதி | May 15, 2013

வன்முறை: பிறர் என் மீதும்… நான் பிறர் மீதும்…

இளங்கோவின் “சாம்பல் நிறத்தில் மறையும் வைரவர்” சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் யாழினியால் ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறையும் எழுத்தும் என்ற நிகழ்வில் நடத்தப்பட்ட உரையின் விரிவான பதிவு இது.

வன்முறை தொடர்பான இப் பதிவை வாசிக்கு முன் நமது கடந்த காலத்தை பின்நோக்கிப் பார்த்து ஒரு கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

முதலாவது நம் உடல் மீது பெற்றோர்களால் உறவினர்களால் ஆசிரியர்களால் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதா? அவை எவ்வாறான வன்முறைகள்? இவர்கள் வன்முறை சார்ந்த சொற்கைளை (சனியன், நாய், எருமைமாடு... ) எம்மீது கோவத்தில் பயன்படுத்தினார்களா? நமது குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வன்முறை செயற்பாடுகள் நடந்தனவா? அவை எந்தளவில் இருந்தன? நாம் வாழ்ந்த சுழல் வன்முறையான சூழலாக இருந்ததா? அவை எவ்வாறு எம்மைப் பாதித்தன? தொடர்ந்து வாசிப்பதற்கு முதல் தயவு செய்து இக் கேள்விகளுக்கான பதில்களை சிந்தியுங்கள்.

...... ..... ....

இரண்டாவது இப்பொழுது நம்மைப் பார்த்தும் அதே கேள்வியை நாம் கேட்கலாம். நமது குழந்தைகள் மீது அல்லது அதிகாரம் குறைந்தவர்கள் மீது நாம் எவ்வாறான உடல் சார்ந்த வன்முறைகளைப் பிரயோகிக்கின்றோம்? இவர்கள் மீது எவ்வாறான வன்முறையான சொற்களைப் பயன்படுத்துகின்றோம்? நாம் வாழ்ந்த, வாழ்கின்ற சுழலில் வன்முறை உருவாவதற்கு எவ்வாறான பங்களிப்புகளை நாம் செய்தோம்? செய்கின்றோம்? தயவு செயது இதற்கான பதில்களையும் சிந்தியுங்கள்.

பொதுவாக மேற்குறிப்பிட்ட கேள்விகளை கேட்கும் பொழுது பெரும்பான்மையானவர்கள் தம் மீதான வன்முறைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் தாம் மேற்கொள்ளும் உடல் மற்றும் சொற்கள் சார்ந்த வன்முறைகள் தொடர்பாக வெளிப்படுத்துவதில்லை. இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படவேண்டும். முதலில் நமக்குளிலிருக்கின்ற வன்முறை வடிவங்களை அடையாளங் கண்டு கொள்வதும் அவற்றை எவ்வாறு நம்மிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக அக்கறை கொள்வதும் சிந்திக்கவூம் செயற்படவூம் வேண்டும். இதுவே சமூகத்தலிருந்து வன்முறை செயற்பாடுகள் இல்லாமல் போவதற்கு தனிநபர்கள் மேற்கொள்ளவேண்டிய பொறுப்பான செயற்பாடாகும். அதாவது ஒவ்வொருவரும் அகம் நோக்கி பார்ப்பதற்கு முதிலில் முயற்சிக்க வேண்டும்.

எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது ஒரு நாள் அப்பப்பாவினது பஞ்சாக்கத்தின் ஒரு பக்கத்தை தவறுதலாக கிளித்து விட்டேன். இவ்வாறு கிளித்ததை மறந்தும் போய்விட்டேன். ஒரு நாள் அப்பாச்சி, மாமி, ஆத்தை, தங்கச்சிமார் மற்றும் நான் என அனைவரும் ஓலைக் கொட்டில்களுக்கு இடையிலிருந்த முத்தத்திலிருந்து சந்தோசமாக கதைத்துக் கொண்டிருந்தோம். அப்பாச்சி உரலில் அரிசி இடித்துக் கொண்டிருந்தார். மாமி இடித்த அரிசியை அரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அப்பப்பா என் பின்னால் வந்து என்னை அடித்தார். என்றோ ஒரு நாள் நான் கிளித்த அவரது பஞ்ஞாங்கத்திற்காக அன்று அடித்தார். இவ்வாறு என்னை அடித்ததை அப்பாச்சியும் மாமியும் மறித்ததுடன் அவருடன் சண்டைக்குப் போனார்கள். இந்த அடி என் நினைவில் இன்றும் மாறாமல் “ஆறாவடு”வாக இருக்கின்றது.

நாம் குழந்தைகளாக இருந்தபோது அப்பா தனது அரசியல், குடும்ப பிரச்சனைகள் பலவற்றை எதிர்கொண்ட காலமது. இக் காலங்களில் கால நேரம் இல்லாது அப்பா எங்களை குறிப்பாக என்னை அடித்திருக்கின்றார். இதற்கு சில நேரங்களில் காரணம் ஏதுவும் இருக்காது. அல்லது நான் செய்த சிறு தவறுகள் காரணமாக இருக்கும். இப்படி பல காரணங்களுக்காக இவரிடம் எனது இருபது வயதுவரை அடிவாங்கி இருக்கின்றேன். அம்மாவும் எனது பதினைந்து வயது வரை என்னை அடித்திருக்கின்றார். எனது குழப்படிகளுக்காகவும் மற்றும் மற்றவர்கள் என் மீது சுமத்திய குற்றங்களை தான் ஏற்க விரும்மாமையினாலும் எனக்கு அடிப்பார். இதில் முரண் நகை என்னவென்றால் மற்றவர்கள் என்னைக் குற்றம் சுமத்தக் கூடாது என விரும்புகின்ற அம்மா மறுபுறம் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்கள் மீது இருக்கின்ற கோவத்தினால் எனக்கு அடிப்பதுதான். இந்த அடிகளும் எனது உடலில் நினைவாக பதிந்திருக்கின்றன. இவ்வாறு அடிவாங்கியது வீட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

எனது ஆரம்ப பாடசாலைக் காலங்களில் வகுப்பு பாடங்களை நான் நன்றாக செய்வதில்லை. இதற்காக ஆங்கில, தமிழ், கணித ஆசிரியர்களிடம் நன்றாக அடிவாங்கியிருக்கின்றேன். ஒரு முறை ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நெடும் பிரித்தல் ஒன்று தெரியவில்லை என்பதற்காக கரும்பலகைக்கு முன்னால் நீண்ட நேரம் ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டிருந்தேன். இதைப் பார்த்து பொறுமையிழந்த கணித ஆசிரியர் ஒருவர் என் பின்னால் வந்து ஒரு தடியால் நன்றாக அடித்து விட்டார். அவர் அடித்த அடியில் எனது கை வீங்கி கருப்பு நிறத்தில் தழும்பு ஏற்பட்டுவிட்டது. வீட்டில் போய் முறைப்பாடு செய்ய அப்பா வந்து அதிபருடன் உரையாடினார். இருந்தும் என்ன எனது வீக்கமும் தழும்பும் மாற நீண்ட நாட்கள் எடுத்தன. அதுவரை வலி குறையவில்லை. சில காலங்களில் பாடசாலையில் படிக்கவில்லை என அடி வாங்கியதற்காக வீட்டிலும் மேலதிகமா அடி வாங்கியதுண்டு. இந்த அடிகள் எல்லாம் என் ஆழ் மனதில் ஆறாவடுவாகப் பதிந்திருக்கின்றன.

சிறு வயதில் அட்டன் லிபர்ட்டி கட்டிடத்தில் வாழ்ந்தபோது அருகில் உள்ள டன்பார் விளையாட்டு மைதானத்திற்க்கு தனித்து விளையாட செல்வேன். இவ்வாறு மைதானத்தில் தனித்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிங்கள சிறுவர்கள் என்னை அடிப்பார்கள். நான் மீண்டும் அடிக்கப் பயந்து அழுதுகொண்டு அம்மாவிடம் வந்து முறையிடுவேன். அம்மா என்னை இழுத்துக் கொண்டுவந்து அவர்களுடன் சண்டைபோட்டு அவர்களைப் பயமுறுத்துவார். ஆனால் அவர்கள் அம்மாவிற்கும் பயப்பிட மாட்டார்கள். இவ்வாறு எனது சிறுவயதில் மிகவும் பயந்தவனாக இருந்தேன். ஆகவே வெளியாருடன் சண்டைக்குப் போக மாட்டேன். ஆனால் மற்றவர்கள் சண்டை பிடிக்கும் பொழுது ஆர்வமாகப் பார்ப்பேன். மலையக நண்பர் ஜெயராம் உடல் உறுதி கொண்டவர். பயமற்றவர். ஐந்தாம் வகுப்பு கற்கும் காலங்களில் சிங்கள சிறுவர்களுடன் சண்டை வரும். அப்பொழுது இவர் சிங்களப் பொடியன்களுடன் தனித்து சண்டை பிடிப்பார். அவருக்கு ஆதரவாக நாம் சுற்றி நின்று கைதட்டி ஆர்ப்பரிப்போம். எப்படியும் சிங்களப் பொடியன்களை அடித்து விடுவார். அதற்காக நாம் பெருமைப்படுவோம்.

நான் பயந்தவனாக இருந்தது என்னைவிட அதிகாரம் கொண்டவர்களிடம் மட்டுமே. ஆனால் வீட்டில் அதிகாரமற்று இருக்கின்ற தங்கைகளிடம் எனது அதிகாரத்தைக் காட்டுவேன். அவர்களைத் தேவையில்லாமல் அல்லது சின்னச் சின்ன காரணங்களுக்காக அடிப்பேன். பதினைந்து வயதின் பின் அம்மா மீது எனக்கிருந்த பயம் போக அவருடனும் சண்டை பிடித்தேன். அதன் பின் அம்மா எனக்குப் பயப்பிட ஆரம்பித்தார். இக் காலங்களில் நான் ஒரு கொதியனாக முரடனாக வன்முறையாளனாக இருந்தபோதும் அப்பாவிற்கு எதிராக கை ஓங்கும் அளவிற்கு வளரவில்லை. அவரை எதிர்த்து கேள்வி கேட்பதுடன் சரி. முரண்நகை என்னவென்றால் இந்தக் காலங்களில் (பதினாறு பதினெழு வயதுகளில்) தேசிய விடுதலைக்காக இயக்கம் ஒன்றில் முதன் முதலாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்ததுதான். விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றில் என்னைப் போன்று இளம் வயதுகளில் இணைந்து அன்று செயற்பட்டவர்களுக்கு சுய அறம் என ஒன்று இருந்ததா என்றால் அது கேள்விக்குறிதான்.

இதன் பின் இன்னுமொரு இயக்கத்தில் இணைந்தபோது அரசியல் பெண்ணியம் தொடர்பாக விரிவாகவும் ஆழமாகவும் அறியவும் பேசவும் ஆரம்பித்தேன். ஆகவே பெண்களுக்கு எதிரான எனது செயற்பாட்டில் கவனமாக இருந்தேன். ஆனால் என்னை நம்பி காதலித்து கைபிடித்த காதலருக்கு எதிராகவும் எனது வன்முறை செயற்பாடு தொடர்ந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு நாள் எனக்குள் நடைபெறும் முரண்பாட்டை உணர்ந்தேன். இதிலிருந்து வெளிவரவேண்டும் என தேடினேன். இதுபோன்று என்னுடன் செயற்பட்ட சக மனிதர்களின் எழுத்துக்கும் பேச்சுக்கும் செயலுக்கும் இடையிலான முரண்பாடுகள் எனக்குள் கேள்விகளை எழுப்பின. இவற்றின் விளைவாக எவ்வாறு என்னை பல்வேறு தளங்களில் மாற்றுவது எனவும் அதனுடாக வளர்வதும் எனவும் அறியவும் அதில் ஈடுபடவும் ஆரம்பித்தேன். இப் புதிய பாதை என்னை முற்றிலும் வன்முறை செயற்பாட்டிலிருந்து நீக்கி விட்டதாக கூறமாட்டேன். ஆனால் அவ்வாறான ஒரு பாதையில் பயணிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என்றால் மிகையல்ல. அதேவேளை இப் பயணம் அதிகமான அர்ப்பணிப்பையும் பொறுப்பையும் பொறுமையையும் வேண்டி நிற்கின்றது.

இவ்வாறான தேடல் எனது உடல் ரீதியான செயற்பாட்டிலிருந்து மட்டுமல்ல எனது பேச்சு, உரையாடல், உரை, எழுத்து என்பவற்றிலிருந்து வன்முறையை நீக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஏனெனில் நாம் வன்முறையைக் கற்றது நமது குடும்பம், சுழல், பாடசாலை என்பவற்றிலிருந்து மட்டுமல்ல. மாறாக ஒரு பகுதி நாம் பிறக்கும்போதே நமக்குள் வந்திருக்கின்றது. ஆகவேதான் நம்மையும் அறியாமல் சில நேரங்களில் வன்முறையாளர்களாக செயற்படுகின்றோம். நல்ல விடயங்களைக் கூட வன்முறை கொண்ட எழுத்துக்களை சொற்களைப் பயன்படுத்தி நம்மை அறியாமலே வெளிப்படுத்துகின்றோம். இது நாம் எதற்காக எழுதுகின்றோமோ செயற்படுகின்றோமோ அதற்குமாறாக இறுதியாக வன்முறையையும் அழிவையும் ஏற்படுத்திவிடுகின்றன. ஆகவே இதிலிருந்து எப்பொழுது விடுபடுகின்றோமா அப்பொழுதுதான் நாம் வன்முறையற்ற மனிதர்களாக வாழமுடிவதுடன் எதை விரும்பி கனவு காண்கின்றோமோ அதை உருவாக்கலாம் என நம்புகின்றேன்.

இந்தடிப்படையில்தான் சிலரது எழுத்துக்கள் மீது எனது விமர்சனம் தொடர்ந்தது. உதாரணமாக ஒருவன் கொன்றான், படுகொலை செய்தான் அல்லது ஒருவர் கொலை செய்தார் என எழுதுவது. இவ்வாறு எழுதுவது எழுதுகின்றவரின் நிலைப்பாட்டில் மதிப்பீட்டில் இருந்து வருகின்றது. அதேவேளை கொலை செய்பவர் தொடர்பான மதிப்பீடு அவரின் வாழ்க்கை காலத்துடன் மாறிச் செல்வதை நாம் அவதானிக்கலாம். நாம் சார்ந்த ஒருவர் கொலை செய்தால் அதை நியாயப்படுத்துவது மட்டுமல்ல கொலை செய்தவரை மரியாதையுடன் விளிப்போம். ஆனால் கொலை செய்தவர் எதிர் நிலையில் நின்றால் அவரை மரியாதை குறைவாக விளிப்பதுடன் செய்த கொலையை தவறு எனவும் வாதிடுவோம். பலர் இவ்வாறு புரியாமலே செய்கின்றனர். ஆனால் சிலர் புரிந்தும் உணர்ந்தும் செய்கின்றார்கள். இவர்கள் குறிப்பிட்ட நபரை பாதுகாப்பதை அல்லது தாக்குவதை குற்றவாளியாக்குவதை நோக்கமாகக் கொண்டு எழுதுகின்றனர். இவர்களுக்கு தாம் எழுதும் எழுத்தின் பண்பு தொடர்பான விளக்கம் அல்லது அக்கறை இல்லை எனலாம்.

அண்மையில் நடைபெற்ற இரண்டு உதாரணங்கள் இதை தெளிவாக வெளிப்படுத்தின. ஒன்று தென்னிந்திய தமிழ் சினிமாவுடன் ஈடுபாடுடைய பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் வரும் பொழுது எவ்வாறு ஆண் சமூகம் மட்டுமல்ல பெண்களும் இதற்கு எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பெண்களை பாலியல் ரீதியாக எந்தளவு கீழ்த்தரமாக சித்தரிக்க முடியுமோ அந்தளவு சித்தரிக்கப்பட்டது. பொதுவாக ஆண்களால் உருவாக்கப்பட்ட சமூகத்தில் கலாசாரத்தில் தான் பெண்கள் வாழ்கின்றனர். இந்தப் பெண்கள் ஒரு புறம் உயர் வர்க்க சாதி என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கலாம். மறுபுறம் ஒரு பெண்ணாக மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே ஆண்கள் எந்த நிலையிலிருந்தபோதும் ஆணாதிக்க அதிகாரத்தைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே குறிப்பிட்ட பெண்களுக்கு எதிரான விமர்சனமானது குறிப்பான விடயம் தொடர்பாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அதைக் கடந்து அவரது உடல் பாலியல் அடையாங்கள் மீது விமர்சனம் செல்கின்றபோது ஆண்களின் அதிகாரம் அங்கு வெளிப்படுகின்றது. இது இந்த ஆண்கள் நியாயமாக செய்கின்ற விமர்சனத்தையும் கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது.

இரண்டாவது விஸ்வரூபம் தொடர்பான முரண்பாட்டில் எவ்வாறு மத அடிப்படையில் ஆதரவாகவும் எதிராகவும் வன்முறையான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் தமக்குள் இருந்து இன மத அடிப்படைவாதத்தை தம்மை அறியாமலே இரு பகுதிகளிலும் இருந்த ஒவ்வொருவரும் வெளிப்படுத்தினர். இவை நமக்குள்ளிருக்கின்ற வன்முறை உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்றால் மிகையல்ல. அதேவேளை இவை பிறரிடமும் வன்முறையைத் துண்டவல்லன. இதன் மூலம் குறிப்பிட்ட திரைப்படத்தின் மீதான ஆரோக்கியமான விமர்சனம் முன்வைக்கப்படவில்லை. மாறாக இன மத அடிப்படையிலான சொற்களின் மூலமான வன்முறையான தாக்குதல்களே நடைபெற்றன. விஸ்பரூபத்தில் வெளிப்பட்ட வன்முறையைவிட இந்த சொற்களிலும் விவாதங்களிலும் வன்முறை நெருப்பாக பறந்தது.

இவ்வாறுதான் முன்பு போராளிகளாக இருந்தவர்கள் (உம்: கருணா) இன்று எதிர் தரப்பு அரசியல் நிலைப்பாடு எடுக்கும் பொழுது எவ்வாறு விளிக்கின்றனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதேபோல் ஒரு காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் (உம்: சிவராம்) பின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு பல்வேறு தரப்பினாரால் விளிக்கப்பட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இவற்றிலிருந்து வெளிப்படுவது நமக்குள் இருக்கின்ற கோவம் எழுத்தினுடாக வன்முறையாக வெளிப்படுகின்றன. இந்தடிப்படையில் ஒருவரை துரோகி எனக் கட்டமைப்பதும் வன்முறையான செயற்பாடு மட்டுமல்ல ஜனநாயக மறுப்புமாகும். ஒருவர் தனக்கான அரசியலை தனது புரிதலினாலோ அல்லது பிழைப்புவாத நோக்கத்தினாலோ தெரிவு செய்கின்ற உரிமை ஒருவருக்கு இருக்கின்றது. இத் தெரிவானது நமக்கு எதிரானதாக மட்டுமல்ல மக்கள் நலன்களுக்கு எதிரானதாகவும் இருக்கலாம். இதற்காக அவரை துரோகியாக நிலைநிறுத்துவது எதிர்மறையானது. மாறாக அவரது நிலைப்பாட்டை நாம் விமர்சிக்கலாம். அவரது செயற்பாட்டுக்கு எதிரான அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கலாம். நமது நோக்கம் எதிர்நிலையில் இருக்கின்றவரையும் நம் பக்கம் கொண்டுவருவதற்கான அணுகுமுறையாகவே இருக்கவேண்டும். மாறாக அவரது கருத்தையும் செயற்பாட்டையும் மறுப்பதல்ல. இதுவே நீண்டகால நோக்கில் நன்மையளிக்கும். ஆரோக்கியமான வழிமுறைகளே நாம் விரும்புகின்றதை அடைவதற்கான சரியா பாதையாகும்.

அதிகாரம் நம்மிடம் இருக்கின்ற பொழுது நாம் நம்மைப் பாதுகாப்பதையே முதன்மையாக கொள்ளவேண்டும். மாறாக எதிர் தாக்குதலில் ஈடுபடுவது வன்முறையை மேலும் துண்டும். இங்கு அதிகாரம் என்பது ஒவ்வொரு தளத்திலும் வேறுபடும். அரசும் அது சாரந்த அதிகார நிறுவனங்களும் மக்களும்; ஆண்களும் பெண்களும்; உயர் வர்க்கமும் சுரண்டப்படுகின்ற வர்க்கங்களும்; அடக்கும் சாதியும் அடக்கப்படுகின்ற சாதியும்; நிற வேறுபாடுகள்; ஏற்றுக் கொள்ளப்பட்ட பால்நிலைகளும் ஏற்றுக்கொள்ளப்படாதா பால்நிலைகளும். இவ்வாறு ஒருவரிடம் அதிகாரம் இருப்பது என்பது அவர் இருக்கின்ற நிலையைப் பொறுத்தது. இந்தடிப்படையில் ஒரு ஆணும் பெண்ணும் அவரவர் நிலைமைகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றனர். அதிகாரத்திலிருக்கின்ற பெண்கள் ஆண் மைய சிந்தனையுடன் அடக்குமுறையாளர்களாகத்தான் இருக்கின்றனர். இவர் மீதான விமர்சனம் மற்றும் எதிர்ப்பு என்பது இவரிடமிருக்கின்ற அதிகாரம் மற்றும் மக்கள் விரோத சிந்தனைகளுக்கு எதிரானதாகவே இருக்கவேண்டும். மாறாக பெண் அடையாளத்தை மையப்படுத்தி முன்வைக்கப்படும் விமர்சனங்கள் எதிர்ப்புகள் ஆணாதிக்க நிலைப்பாட்டின் அடிப்படையிலான வன்முறையான செயற்பாடே என்றால் மிகையல்ல. அதேவேளை குறிப்பிட்ட பெண்களும் தமது அதிகாரத்தை தம் மீது தாக்குதல் நடாத்தாதவாறு பாதுகாக்கவே முயற்சிக்க வேண்டும். மாறாக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர் தாக்குதல் நடாத்துவதல்ல. ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கூட நம்மிடம் அதிகாரமும் பலமும் இருந்த நேரம் நாம் நம்மைப் பாதுகாக்க முற்படவில்லை. மாறாக அதனைப் பயன்படுத்தி பண்பற்ற எதிர்தாக்குதலே செய்தோம். அதன் விளைவுகளை இன்று மக்கள் அனுபவிக்கின்றார்கள்.

ஒரு மனிதர் வன்முறையாளராக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று காமம் அடக்கப்படுவதும் மற்றும் காதல் செய்வதற்கான வெளி அல்லது வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றமையும் என்கின்றனர். ஆனால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் காமமும் காதலும் நதிபோல வெரு வெளியில் பாயந்து ஓடுகின்றது எனலாம். இருப்பினும் அங்கும் வன்முறை இருக்கின்றது என வாதிடலாம். இதற்கு காரணம் நம்மைச் சுற்றியிருக்கின்ற சுழலிலும் நம்மிலும் மாற்றம் ஏற்படாமை எனலாம். காமமும் காதலும் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இருப்பது அவசியமான நிபந்தனைகளில் ஒன்று. ஆனால் வன்முறை இல்லாதுபோவதற்குப் போதுமானதல்ல. ஏனெனில் காமமும் காதலும் சுதந்திரமாக இருக்கின்ற அதவேளை மனிதர்கள் உயர்ந்த பண்புள்ளவர்களாக வளர்வதற்கான வழிகளையும் உருவாக்க வேண்டும். ஆனால் மேற்குலகில் இது இன்னமும் குறைபாடாகவே இருக்கின்றது எனலாம். இவை வளர்ச்சியடைந்த நாடுகள் எனக் கூறியபோதும் மனிதர்கள் இன்னும் சதாரணமானவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார ஆதிக்கமே. மாறாக மனிதர்கள் உயரந்த பண்புள்ளவர்களாக மாறவில்லை. ஆகவேதான் வன்முறை இனவாதம் நிறவாதம் சுரண்டல் என்பன இன்னும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதேவேளை முரண்பாடான ஒன்றையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. ஈழத்தில் நடைபெற்ற போர் சுழலுக்குள் மே 2009 வரை வாழ்ந்தவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் மிகவும் பண்பானவையாக நிதானமானவையாக ஆரோக்கியமானவையாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால் போர் சுழலுக்குள் வாழாத புலம் பெயர்ந்து வாழ்கின்ற மனிதர்கள் மிகவும் வன்முறையான பண்பற்ற ஆரோக்கியமற்ற எழுத்துக்களை  எழுதுகின்றனர். இதை இரு எழுத்தாளர்களிடம் அவதானித்து அவர்களிடம் குறிப்பிட்டு கூறியிருக்கின்றேன். ஆகவே போர் சுழலுக்கு வாழ்ந்தவர்கள் நிச்சயமாக வன்முறையான பார்வையை செயற்பாட்டை கொண்டிருப்பார்கள் என்பதை விதியாக கொண்டிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இது ஆய்வுக்குரிய விடயம்.

சமூகங்கள் வன்முறையாளர்களாக இருப்பதற்கும் அதன்மீது விருப்பம் கொண்டிருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு மனிதரைச் சுற்றி பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இதை நான்கு வகைகளாக பிரிக்கலாம். முதலாவது வாழ்வு அல்லது ஆரோக்கியம். இரண்டாவது மனம் அல்லது சிந்தனை. மூன்றாவது செயல். நான்காவது உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள். இவை அனைத்தும் தமக்குள் ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டிருப்பதுடன் ஒரு மனிதரில் பலவேறு தாக்கங்களை பலமுனைகளில் நிகழ்த்துகின்றன. வாழ்வில் நடைபெறும் நிகழ்வு ஒன்று மனிதரின் சிந்தனையை மனதை உணர்ச்சியை செயற்பாட்டைப் பாதிக்கலாம். இவ்வாறு எதில் பாதிப்பு ஏற்பட்டதோ அதற்கமைய அவரின் சிந்தனை அல்லது உணர்ச்சி அல்லது செயற்பாடு வெளிப்படும். Image

இந்த நான்கும் நிகழ் காலங்களில் தாக்கத்தை நிகழ்த்திய போதும் அவை நீண்ட கால கடந்த கால வரலாறுகளை கொண்டிருக்கின்றன. இந்த வரலாறுகள் அனைத்தும் மனிதரின் பிரக்ஞையின்மையில் ஆழப் புதைந்திருக்கின்றன. இவை கூட்டுப் பிரக்ஞையின்மையாக மனிதரில் செயற்படுகின்றன. இதுவே ஒரு மனிதரின் பிரக்ஞையின்மையான செயற்பாட்டில் உரையாடலில் வெளிப்படுகின்றன. இதன் மூலம் ஒரு தனிமனிதர் மீண்டும் பிரக்ஞையின்மையாக பொது மனித வாழ்வில் சிந்தனையில் மனதில் உணர்ச்சிகளில் செயற்பாடுகளில் தாக்கத்தை செலுத்துகின்றார். இவ்வாறு மாறி மாறி ஒவ்வொருவரும் பிரக்ஞையின்மையாக எதிர்மறையான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து விடுபட மனிதர்கள் விழிப்பு நிலையில் உயர்ந்து பிரக்ஞையுடன் செயற்பட வேண்டி உள்ளது. அப்பொழுதுதான் நமது வாழ்வு, சிந்தனை, செயல் மற்றும் உணர்ச்சிகள் என ஒவ்வொன்று தொடர்பாகவும் விழிப்பு நிலையிலிருந்த பிரக்ஞையுடன் செயற்பட முயற்சிக்கலாம். இது மனிதர்கள் ஆரோக்கியமான பாதையில் பயணம் செய்ய வழிவகுப்பது மட்டுமல்ல மனித பரிணாம வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும். சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் இதற்கான முயற்சிகளிலும் சமாந்தரமாக ஈடுபட வேண்டும். இதுவே நாம் விரும்புகின்ற சமூகத்தை உருவாக்க வழி வகுக்கும் என்பது எனது புரிதல்.

இந்த நிகழ்வில் சேரனும் யாழியும் முக்கியமான உரைகளை ஆற்றியிருந்தார்கள். அதையும் கவனத்தில் கொள்க.

மீராபாரதி

28.04.2013

Advertisements

Responses

  1. […] முடிவுகள் என்பவற்றால் ஏற்படும் முரண்பாடுகள் சண்டைகள். இவை சிலவேளைகளில் நமது பயணத்தின் […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: