Posted by: மீராபாரதி | March 12, 2013

நா.சண்முகதாசன் – விடுதலை… சமூக மாற்றம்… நடைமுறை – பகுதி 3

ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து சோசலிச முன்னணி தொடர்பாக…

சண்முகதாசன்  அவர்கள் ஜேவிபி தொடர்பான தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன் அடிப்படையில் இன்றைய சோசலிச முன்னணியினர் மற்றும் சம உரிமை இயக்கத்திடம் சில கேள்விகளை முன்வைக்கலாம். உண்மையிலையே ரோகண விஜயவீர செய்தது இலங்கையில் புரட்சி ஒன்று நடைபெறுவதற்கும் சண்முகதாசனுக்குமான “துரோகம்” எனக் கூறலாம். ஆகவே இன்றைய முன்னணியினர், அடக்கப்பட்ட மக்களின் சார்பாக செயற்படுகின்றவர்கள் எனின் முதலாவது ரோகண விஜயவீரவிற்கு துரோகம் செய்யவேண்டும். இதன் மூலம் ஆகக் குறைந்தது சண்முகதாசன் அவர்களின் இறுதிக்கால கருத்துக்களின் அடிப்படையிலாவது செயற்பட முன்வரவேண்டும். இரண்டாவது சிங்கள மக்களின் மனதுக்குள் புதைந்திருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதக் கருத்தியலை களைவதற்கான செயற்பாட்டுகளுக்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். இதன் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசின் சிங்கள பௌத்த பிரதிநிதித்துவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் மீது ஈழத் தமிழர்களுக்கு ஒரளவாவது நம்பிக்கை ஏற்படும்.

roganaஇதன் பின் வேண்டுமானால் இவர்கள் தமிழ் மக்களிடம் வந்து அரசியல் வேலை செய்வதில் ஒரு நியாயம் இருக்கும். இவ்வாறு செய்யாமல் தொடர்ந்தும் ரோகண விஜயவீரவின் கருத்துக்களைத்தான் முன்னெடுத்து செல்வார்களெனின் இவர்களுடன் உரையாடல்களை மட்டுமே நடாத்தலாம். மற்றுபடி வெறுமனே இன்றைய அரசாங்க (அரசுக்கு எதிரானதல்ல) எதிர்ப்புக்கான கூட்டணி மட்டுமே அமைக்கத் தகுதியானவர்கள் இவர்கள். இன்றைய அரசாங்கத்தை விழுத்துவதற்கு இவ்வாறான கூட்டணி அவசியமானது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. இதற்கு மேல் இவர்களிடம் ஒன்றும் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் இன்றைய அரசாங்கத்தை விழுத்துவதன் மூலம் மாற்றம் ஏதுவும் ஏற்படப்போவதில்லை. குறிப்பாக இதனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மற்றது இவர்கள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு மாற்றாக எவ்வாறான அரசை முன்வைக்கின்றார்கள் என்பதில் தெளிவான நிலைப்பாடுகளில்லை. ஆகவே ஈழத் தமிழர்கள் இவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டியது அவசியமானது. மேலே “தூரோகம்” என்பதை அரசியல் அர்த்தத்திலையே பயன்டுத்துகின்றேன். மாறாக நமது சமூகத்தில் வழமையாக பயன்படுத்தப்பட்ட தூரோகி என்ற அர்த்தத்தில் அல்ல.

சிங்கள மக்களிடமிருக்கின் பயம் சந்தேகம் தொடர்பாக….

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் சிங்கள மக்களின் மனங்களில் ஆழமாகப் புதைந்திருக்கின்ற பயம் மற்றும் சந்தேகம் தொடர்பாக புரிந்துகொள்வதற்கான சில விடயங்கள் இருப்பதையும் சண்முகதாசன் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார் (131). இதைத்தான் சிங்கள பேரினவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது சிங்கள தேசத்தின் பிரச்சனையாக இருப்பினும் தமிழ் தேசத்தின் விடுதலைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றவையாகவும் இருக்கின்றன. ஆகவே கவனிக்கப்படவேண்டியவையே.

முதலாவது கடந்த காலங்களில் நடைபெற்ற தென்னிந்திய படையெடுப்புக்கள். இரண்டாவது பிரிந்தானிய ஆதிக்கத்திலிருந்த நேரம் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இன்றைய மலையக மக்கள். இன்றும் இவர்களை இந்திய விஸ்தரிப்பு வாத்தின் ஒரு பகுதியாகவே சிங்கள இனவாத சக்திகள் பரப்புரை செய்கின்றன. ஆனால் இந்திய அரசுக்கும் இவர்கள் வருகைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது கவனிக்கப்படுவதில்லை என எங்கோ வாசித்த ஞாபகம். மூன்றாவது மிசனரிகளினால் வடபகுதியில் உருவாக்கப்பட்ட கல்வி வசதிகளும் அதனால் அதிகமான அரச தொழிலில் தமிழர்கள் இருந்தமையும். நான்காவதாக இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தபோதும் தாம் பெரும்பான்மை என எண்ணுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற தமிழகம். இதனால் இலங்கையில் தாம் பெரும்பான்மையாக இருந்தபோதும் பிராந்தியளவில் சிறுபான்மை என உணர்கின்ற சிங்கள தேசம். இது தொடர்பாக அண்மையில் நிலாந்தன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஐந்தாவது தமிழ் மொழியின் பழைமை காரணமாக சிங்களவர்களுக்கு இருக்கின்ற தாழ்வுச் சிக்கல்.

தமிழக தமிழ் தேசிய உணர்வாளர்கள் தொடர்பாக…

சண்முகதாசன் அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பே மேற்குறிப்பிட்டவாறு இவ்வளவு தெளிவாக தனது கருத்துக்களை முன்வைத்தபோதும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது இதனைக் கருத்தில் எடுத்து தனது தந்திரோபாயங்களை வகிக்காமை தூர்ப்பாக்கியமானது. இந்தடிப்படையில் இன்றும் கூட தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக தமிழக சக்திகள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் எதிர்மறைவான விளைவுகளையே ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை தமிழக செயற்பாட்டாளர்கள் கவனிக்க தவறுகின்றார்கள். உதாரணமாக இலங்கையிலிருந்து  பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்திற்கு வருகை தருகின்ற சாதாரண சிங்கள மனிதர்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் மேற்குறிப்பிட்ட விடயங்களை அவர்களுக்கு உறுதி செய்கின்றன. இது இலங்கையில் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு தொடர்ந்தும் தடையை ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்பதை உணர்ச்சிகரமான தமிழகத் தலைமைகள் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை என்பது துரதிர்ஸ்டமானது.

ஆயுதப் போராட்டம் தொடர்பாக….

சமூக மாற்றத்திற்கான வழிமுறையாக சண்முகதாசன் அவர்கள் தலைமறைவான இயக்கத்தையும் ஆயுதப் போராட்டத்தையுமே முன்மொழிந்திருக்கின்றார். மார்க்சிய அடிப்படையிலும் பகுத்தறிவு  ரீதியாகவும் அதை அணுகும் பொழுது இது சரியானதாகவே தோன்றும். ஏனெனில் ஆதிகார வர்க்கங்கள் ஆயுதம் மூலமும் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் பொழுது அதை எதிர்ப்பதற்கு ஆயுதப் போராட்டமே சரியான வழிமுறை என நிறுவலாம். ஆனால் சில கேள்விகள் எழுகின்றன. முதலாவது இன்றும் இனிவரும் காலங்களிலும் தலைமறைவான இயக்கங்கள் சாத்தியமா என்பது ஒரு கேள்வி. ஏனெனில் இன்றைய அதிநவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளை எல்லாம் இன்றைய அரசுகளும் அதிகாரவர்க்கங்களும் தமக்கு சாதகமாகவும் புரட்சியாளர்களுக்கு எதிராகவுமே பயன்படுத்துகின்றன. மிக நல்ல உதாரணங்கள் அண்மையில் கொல்லப்பட்ட பின்லாடன் மற்றும் கடாபி ஆகியோர்.

இரண்டாவது ஆயுதப் போராட்டம் என்ற சிந்தனை எங்கிருந்து வருகின்றது என்பது தொடர்பாகவும் ஆராய வேண்டிய தேவை உள்ளது. இது ஒரு ஆணாதிக்க சிந்தனையா? மேற்கத்தைய சிந்தனையா? என்பது அறியப்படவேண்டும். அதேவேளை அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது அவசியமாக ஆயுதப் போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயுதப் போராட்டம் இல்லாமலே பெண்களின் விடுதலைப் போராட்டம் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உண்மையிலையே பெண்கள் தான் உலகதிலையே முதன் முதல் அடக்கப்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல இன்றும் கூட தம் உழைப்பிற்கு எந்த வருமானமும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு மனித இனம். இவர்கள் ஒவ்வொருவரும் தம் விடுதலைக்காக ஆயுதம் தூக்கினால் மனித வாழ்வுக்கு என்னாகும் என்பது பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மூன்றாவது ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்காமைக்கும் அதனுடன் உடன்படாமைக்கு இன்னுமொரு காரணம் உண்டு. இன்றைய மனித வளர்ச்சி என்பது ஒரு வகையில் இயந்திரமயமான பிரக்ஞையின்மையான வளர்ச்சியே. இவ்வாறான மனிதர்கள் எவ்வளவுதான் கோட்பாட்டு ரீதியாக முன்னேறியிருந்தாலும் தம் கையில் ஆயுதம் ஏந்தியவுடன் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. பெரும்பாலும் எதிர்மறையாகவே இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த வரலாறு. ஆகவே நாம் இயந்திர மயமான வாழ்விலிருந்து விடுபட்டு பிரக்ஞைபூர்வமாக செயற்படுகின்றபோது வேண்டுமானால் ஆயுதம் தூக்குவது தொடர்பாக சிந்திக்கலாம். அதுவரை எனக்கு இந்த வழிமுறையில் உடன்பாடில்லை என்பதை இன்றைய புரிதலுக்கு ஏற்ப உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

தலைவர்கள் சுயவிமர்சனம் செய்வது தொடர்பாக….

தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலங்களிலிருந்து செயற்படுகின்ற தலைவர்கள் பலர் இன்றிலில்லை… இருப்பவர்களிலும் செயற்படுகின்றவர்கள் மிகக் குறைவு… அந்தவகையில் நம் மத்தியில் இருக்கின்றவரும் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் செயற்படுகின்ற ஜான் மாஸ்டர் முக்கியமானவர்…. இது அவரது பொறுப்பை காட்டுகின்றது. அதேவேளை இவர் தனது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக சுயவிமர்சனத்தை முன்வைப்பதுடன் அல்லது பலரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் அவருக்கு உண்டு. ஏனெனில் பல முனைகளிலும் அவரை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவர் தன் மீதான சுயவிமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்கு சில தடைகளை இருக்கின்றன என்கின்றார்…

உதாரணமாக ஒரு கட்சிக்குள் மட்டுமே தான் சுயவிமர்சனத்தை முன்வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக கூறுகின்றார். இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் கொண்டுள்ளதற்கு அடிப்படையாக இருக்கின்ற தத்துவ கோட்பாட்டு விளக்கம் என்ன என்பதை அவர் முன்வைக்கவேண்டும். நாம் என்னதான் தத்துவ கோட்பாட்டு விளக்கங்களை முன்வைத்தாலும் இன்றைய நிலைமையில் தமிழர்களிடம் புரட்சிகர தலைமை ஒன்று இல்லை. ஏன் மக்களின் பிரச்சனைகளைப் பேசுகின்ற அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உருப்படியான கட்சி கூட இல்லை. இந்த நிலைமையில் நாம் நமது பாதைகளை நிதானமாகவும் சரியாகவும் அமைக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இவ்வாறான ஒரு பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, 1970ம் ஆண்டு சண்முகதாசன் அவர்களுக்கு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு கோட்பாடுகள் தடையாக இருந்ததைப் போல, இன்று நாம் நம்புகின்ற புரிந்து வைத்திருக்கின்ற கோட்பாடுகள் செயற்படுவதற்கு தடையாக இருக்கக் கூடாது. நாம் புதியவற்றை கண்டடைய பழையவற்றை கடக்கவோ உடைக்கவோ வேண்டியது தவிர்க்க முடியாதது. ஆகவே ஜான் மாஸ்டர் அவர்களும் எந்தக் கோட்பாடுகளுக்காக தனது சுயவிமர்னத்தை முன்வைக்க தவறுகின்றாரோ அதை கடந்து உடைத்தெறிந்து வரவேண்டும் என கேட்கின்றேன். இதுவே அவர் மீது தோழர்களுக்கு மீளவும் நம்பிக்கையை ஏற்படுத்தும். நாம் மீளவும் ஒரு குழுவாக கட்சியாக செயற்படுவதற்கான வழிகளைத் திறந்துவிடும். இது எனது புரிதல். அதேவேளை இவ்வாறான சுயவிமர்சனங்கள் என்பவை அரசியல் அகதியாக இருக்கும் எங்களுக்கு குறிப்பாக இவர் போன்றவர்களுக்கு பல நடைமுறை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதை நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும். ஆனால் ஏதாவதொரு வழிகளில் கடந்தகாலம் தொடர்பான சுயவிமர்சனம் நேர்மையாக முன்வைக்கப்படும் எனின் இவர்கள் மீது மீளவும் நம்பிக்கை உருவாகலாம்.

சமூக மாற்றம் மற்றும் கூட்டுறவு வாழ்வு குறித்து….

இதை வாசிப்பவர்கள் மார்க்சிய சிந்தனைகளிலும் சமூகமாற்றங்களிலும் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள்  என ஒரு எடுகோளாக எடுத்துக் கொண்டு உங்கள் முன் ஒரு முன்மொழிதலை வைக்கின்றேன். ரொட்ஸ்சி அவர்கள் முன்வைத்த உலப் புரட்சி என்பதும் இன்றுரை கனவாகவே இருக்கின்றது. ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் மக்களையே ஒன்றினைக்க முடியாதபோது உலக மக்களை ஒன்றினைப்பது எவ்வாறு சாத்தியம் என்பது நம் முன்னுள்ள பெரும் கேள்வி? இதேபோல் ஒரு நாட்டில் சோசலிசம் என்பது தொடர்ந்தும் சிதைந்து போகின்ற கனவாகவே இருக்கின்றது. இருப்பினும் நாம் தொடர்ந்தும் ஏகாதிபத்தியங்களும் முதலாளித்துவ அதிகாரங்களும் பரந்திருக்கின்ற, முதலாளித்துவ நாடுகள் நிறைந்திருக்கின்ற இந்த உலகத்தில் ஒரு நாட்டில் சோசலிச சமூகத்தைக் கட்டமைக்கப் போராடிக்கொண்டுதான் இருக்கின்றோம். அல்லது இருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை நம்புகின்றோம் எனின், இவை சாத்தியம் எனின், முதலாளித்து நாடு ஒன்றில் வாழ்ந்து கொண்டு சோசலிச அல்லது கம்யூனிச சமூகம் ஒன்றை அல்லது ஆகக் குறைந்தது கம்யூன் முறைமையிலான கூட்டுறவு வாழ்வு முறைமை ஒன்றை நாம் நமக்குள் (நண்பர்களுக்குள்) கட்டமைத்து வாழ ஏன் முயற்சிக்கக் கூடாது?

நாம் விரும்புகின்ற புதிய சமுதாயம் ஒரு கூட்டுறவூ சமூகமாகவே இருக்கும். இங்கு ஒவ்வொருவரும் அவர்களது ஆற்றலுக்குரிய பங்களிப்பை செய்து வாழ்வார்கள். இதற்கு இவ்வாறன சமூகத்தில் தான் முழுமையான ஆதரவு இருக்கும். எங்கள் முன்னோர்களும் சண்முகதாசன் அவர்களும் போராடியதும் வழிகாட்டியது இதற்காகவே. இவ்வாறன ஒரு சமூகத்தையே  நாம் கனவு காண்கின்றோம். அதை நோக்கியே செயற்படுகின்றோம் என்றால் மிகையல்ல. இவ்வாறன ஒரு சமூகத்தை புரட்சி ஒன்றின் மூலமாகத்தான் கட்டமைக்கலாம் என்றே நம்புகின்றோம். ஆனால் கடந்த கால அனுபவங்கள் இந்த முயற்சிகள் மட்டும் போதாது என்பதையே நமக்கு கூறுகின்றன. ஆகவே நாம் வாழ்கின்ற இந்த முதலாளித்துவ சமூகத்திற்குள் அதற்கு மாற்றாக பரிசோதனை முயற்சியாக கம்யூன் வாழ்க்கை முறையை எவ்வாறு கட்டமைத்து வாழ்வது என்பதை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதே என் முன்மொழிவு. இவ்வாறு செய்யும் பொழுது தனியே கலாசார புரட்சிக்கான அவசியம் ஆகக் குறைந்தது ஒரு கட்சிக்குள்ளாவது நடைபெற வேண்டிய அவசியமிருக்காது.

பங்களிப்பும் ஈடுபாடும் தொடர்பாக…..

மேற்குறிப்பிட்ட முன்மொழிவு நாம் விரும்புகின்ற இவ்வாறன வாழ்வு முறைக்கூடாக எங்களுக்கு பல விடயங்களை நடைமுறை அனுபவங்களுக்கு ஊடாக கற்றுக் கொடுக்கும். அதேவேளை நாம் இன்று வாழ்கின்ற முதலாளித்துவ சமூகத்திலிருந்தும் நூகர்வு கலாசாரத்திலிருந்தும் விடுபட்டு புதிய சமூகத்தை கட்டுவதற்கு பல அர்ப்பணிப்புகளை செய்யவேண்டியவர்களாக உள்ளோம். முதலாவது கோட்பாட்டு மற்றும் தத்துவார்த்த ரீதியாக செய்வதற்கு பல வேலைகள் இருக்கின்றன. மார்க்சுக்கு ஒரு ஏங்கள்ஸ் இருந்ததால் தான்  அவரால் தன் பணியில் நோக்கத்தில் ஒரளவையாவது நிறைவேற்ற முடிந்தது. லெனினுக்கும் மாவோவுக்கும் கட்சியின் முழுமையான ஆதரவு இருந்தது. இதனால்தான் அவர்களாலும் தமது தேச விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்குமான அவசியமான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் உருவாக்க முடிந்தது. ஆனால் இன்று  இவ்வாறான பணிகளில் செயற்படுகின்றவர்களுக்கு ஆதரவளிக்க ஏங்கல்ஸ் போன்ற ஒரு பணக்காரர் இல்லை. புரட்சிகர கட்சிகள் இல்லை. மறுபுறம் இவ்வாறான துறைகளில் செயற்பட ஆர்வமுள்ளவர்களிடமும் பணம் இல்லை. ஒரு சிலருக்குத்தான் முதலாளித்துவ சமூகத்தில் பணம் உழைப்பதற்கான ஆற்றல்கள் இருக்கின்றன. அதேபோல் ஒரு சிலருக்குத்தான் கோட்பாட்டுரீதியாகவும் இதுபோன்ற வேறு தளங்களிலும் பங்களிப்பதற்கான ஆற்றல்கள் இருக்கின்றன. மேலும் ஒரு சிலருக்குத்தான் கலைபூர்வமான படைப்புகளை உருவாக்கின்ற ஆற்றல்கள் இருக்கின்றன. ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு உறவும் பஸ்பர ஆதரவும் இல்லை. இது மிக தூர்ப்பாக்கியமான ஒரு நிலை.

நாம் உண்மையிலையே புதிய உயர்ந்த புரட்சிகரமான கருத்தாங்களையும் கோட்பாடுகளையும் கலை இலக்கிய படைப்புகளையும் உருவாக்க விரும்புகின்றோம். இதற்கு நாம் திறந்த மனதுடன் இருப்பது மட்டுமல்ல அதில் முழுமையாகவும் முழு நேரமும் ஈடுபட வேண்டும். அவ்வாறுதான் முதலாளிகளும் விஞ்ஞானிகளும் தம் நோக்கங்களை நிறைவேற்ற செயற்படுகின்றனர். அப்பொழுதுதான் குறிப்பிட்ட விடயத்தில் ஆழத்திற்கு செல்வதனுடாக உயர்ந்த படைப்புகளை கொண்டுவரலாம். இதன் மூலம் நாம் விரும்புவதை நிச்சயமாக சாத்தியமானதாக்கலாம்.

ஆனால் இவ்வாறான ஆற்றல்களும் விருப்பமுள்ளவர்கள் தமது நாளாந்தா வாழ்வை கொண்டு செல்வதற்காக தமது ஆற்றல்களை வருமானம் ஈட்டுகின்ற வேலை ஒன்றில் பயன்படுத்த வேண்டியவர்களாக உள்ளார்கள். இதனால் தாம் விரும்புகின்ற கோட்பாட்டுக்கான உழைப்பையோ அல்லது சிறந்த படைப்புகளையோ உருவாக்க முடியாதவர்களாகவும் தம் ஆற்றல்களைப் பயன்படுத்த முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். அல்லது பகுதிநேரமாகவே செய்கின்றனர். இவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் விரும்புவதை அடையவோ மாற்றத்தை ஏற்படுத்தவோ முடியாது. சமூக மாற்றம் மற்றும் விடுதலை நோக்கி செயற்படவேண்டுமாயின் முதலாளிகளை விடவும் விஞ்ஞானிகளை விடவும் பல மடங்கு ஆர்வமாகவும் முழுமையான பங்களிப்புடனும் நாம் செயற்படவேண்டும். ஆகவேதான் மேற்குறிப்பிட்டவாறான கூட்டு சமூக வாழ்வு முறை  ஒன்றை புலத்திலும் புலம் பெயர்ந்த சமூகங்களிலும் நாம் உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதன் மூலம் பல தளங்களில் தம் ஆற்றல்களைப் பயன்படுத்த விரும்புகின்றவர்களுக்கு இது ஆதரவாக அமையும்.  ஆகவே இவ்வாறான ஒரு முயற்சியை நோக்கி செயற்படுவோமா?

ஒரு புறம் முதலாளித்துவத்தை விமர்சிப்பது…. மறுபுறம் முதலாளித்துவ ஊடகங்களுக்கு அடிமையாக இருந்து…. முதலாளித்துவ உற்பத்திகளுக்கு ஆதரவளித்து…. நூகர்வு கலாசாரத்தின் அடிமைகளாக இருக்கின்றோம்…
இவ்வாறு இருந்து கொண்டே முதலாளித்துவத்தை விமர்சிக்கின்றோம்…
ஆகவே புரட்சி மட்டும் சமூக மாற்றத்தை சாத்தியமாக்கப் போவதில்லை….
என்னைப் பொறுத்தவரை சமூகமாற்றம் என்பது…. ஒரு “தவம்”….கூட
அதற்கு நாம் இன்னும் தயார் இல்லயா…?.

மீராபாரதி

10.03.2013

கனடா டொரன்டோவில் இயங்கும் தேடகம் சண்முகதாசன் அவர்கள் மறைந்து 20வது ஆண்டை நினைவு கூறுமுகமாக அவரின் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடாத்தியது. அதில் வாசிக்கப்பட்ட உரையின் திருத்திய வடிவம் இது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: