Posted by: மீராபாரதி | March 11, 2013

என்.சண்முகதாசன் – தத்துவமும் கோட்பாடும் …? – பகுதி 2

சண்முகதாசன்3இன்றைய சூழலில் சண்முகதாசனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் என்ன கற்கின்றோம் என்பதே முக்கியமானது…. இவரது கருத்துக்களும் செயற்பாடுகளும் அதாவது தத்துவமும் நடைமுறையும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்தியும்… முரண்பட்டும் சென்றன…என்பதை அறிவது பயனுள்ளது. இதன் நேர் எதிர் மறை விளைவுகள் என்ன என்பதையும் குறிப்பாக இவரது கட்சியும், மக்களும், நாமும்  இழந்தவை என்ன…. என்பதையும் ஆய்வு செய்வது அவசியமானது. இவ்வாறான அறிதலின் அடிப்படையில் நமது இன்றைய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் திட்டமிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம்… ஆகவே இவர் என்ன கூறுகின்றார் என்பதை அறிய முற்படுவோம்… அதேவேளை இவை தொடர்பாக சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. அவற்றையே இங்கு முன்வைக்கின்றேன்…

பல்கலைக்கழக இராக்கிங்… பகிடி வதை….

இவரது நூலில் எனது கவனத்தை ஈர்த்த பல விடயங்களில் பல்கலைக்கழ இராக்கிங் எனப்படும் பகிடிவதை ஒன்று. இராக்கிங்  அக் காலத்திலிருந்து நமது காலத்தினுடாக இன்றைய காலம் வரை பாடசாலைகளில் சிறியளவிலும் பல்கலைக்கழங்களில் பெரியளவில் குறிப்பிடத்தக்க வகையில் தொடரும் ஒரு பிரச்சனை என்றால் மிகையல்ல… குறிப்பாக விடுதலைப் போரட்டம் முனைப்பு பெற்ற கால கட்டங்களில் மட்டுமல்ல மாபெரும் இனவழிப்பை அனுபவித்து அல்லது கண்ட பின்பும் கூட வடக்கு கிழக்கு பல்கலைக்கழங்களிலும் இது நடந்தேறுகின்றமை துரதிர்ஸ்டமானது…

மாணவர்களின் இவ்வாறான செயற்பாடுகள்  ஒன்றை வெளிப்படுத்துகின்றது. அதாவது நமது தேசிய விடுதலைப் போராட்டம் குறிப்பாக ஆகக் குறைந்தது பல்கலைக்கழ மட்டத்தில்கூட நம்மை பண்பு ரீதியாகவோ கருத்தியல் ரீதியாகவோ வளர்க்கவில்லை என்பதே. நாம் இன்னும் வளரவில்லை என்பதற்கு இருக்கின்ற பல சான்றுகளில் இது ஒன்று என்றால் மிகையல்ல… ஆகவே நாம் இராக்கிங் செயற்பாடுகள் தொடர்பாக பன்முக ஆய்வு செய்வதன் மூலம் நமது சமூகத்தின் சிந்தனையோட்டத்தையும் உளவியலையும் அதனடிப்படையிலான செயற்பாடுகளையும் அறிவதற்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நமது சமூகங்களில் இருக்கின்ற அதிகாரத்துவப் பண்புகளையும் மனநிலைப் போக்குகளையும் கண்டறியலாம். இதன் எதிர்மறைத் தன்மைகளை எவ்வாறு நேர்மறைத் தன்மைகளாக மாற்றுவது என்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் நடைபெறப்போகின்ற போராட்டங்கள் சரியானதும் ஆரோக்கியமானதுமான வழிகளில் செல்வதற்கு பங்களிக்கும் என நம்புகின்றேன்.

இலங்கை (சீனக்) கம்யூனிஸ்ட் கட்சி…marx

சண்முகதாசனுக்கு அவர் தலைமை தாங்கிய சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இலங்கையில் வரலாற்றில் மட்டுமல்ல உலக கம்யூனிச வரலாற்றிலும் முக்கியமான ஒரு இடம் இருக்கின்றது எனக் கூறுகின்றனர். இவர் மார்க்சிய லெனினிய குறிப்பாக மவோ சிந்தனைகளை இலங்கைக்கும் தமிழுக்கும் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர் எனப் பலரும் கருதுகின்றனர். இதைவிட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி பற்றி மட்டுமல்ல முக்கியமாக ரொஸ்கியவாத லங்கா சம சமாஜா கட்சி மற்றும் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி போன்றவற்றின் சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியலையும் அவர்களது வர்க்க குணாம்சங்களையும் மாவோவின் சிந்தனைகளின் துணையுடன் தெளிவாக விளக்குகின்றார் என பேராசிரியர் சண்முகரட்ணம் குறிப்பிடுகின்றார். இன்றைய சூழலில் இவற்றை நாம் மீளவும் அறிவது மிக முக்கியமானது.

இலங்கையின் பெரும்பான்மையான இடதுசாரிக் கட்சிகள் பேரினவாத கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்தது மட்டுமல்ல இனவாத சட்டங்களையும் உருவாக்கி பிழைப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்தனர். இவ்வாறன சூழலில் சிங்களத் தோழர்களும் இருந்த ஒரு இடதுசாரிக் கட்சிக்கு தமிழர் தலைமையாக இருந்தது முக்கியமானது. மேலும் ஒரு இடதுசாரி அல்லது மார்க்சியவாதி சமரசம் செய்யாது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் எனவும் கூறலாம். ஆகவே இடதுசாரிகள் அல்லது மார்க்சியவாதிகள் தவறு செய்துவிட்டார்கள் எனக் கூறுகின்றவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு தவறுவிட்டவர்கள் மார்க்சிய வாதிகளோ புரட்சிவாதிகளோ அல்ல. அவர்கள் அதிலிருந்து தடம்புறண்டு தம் வர்க்க தேசிய நலன்களை வெளிப்படுத்தியவர்களே என்றால் மிகையல்ல. ஆனால் விக்கிரமபாகுவின் என்எஸ்எஸ்பி மற்றும் விஜயடயஸ் ஆகியோரின் சிறிய கட்சிகள் ரொட்சிகியவாத கருத்தியலைக் கொண்டிருந்தபோதும் சண்முகதாசன் அவர்களுக்கு முதலே சுயநிர்ணைய உரிமையை அல்லது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்தவர்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். ஆகவேதான் சண்முகதாசன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆம்! இவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல.

சண்முகதாசன்2சண்முகதாசன் அவர்கள் மேற்குறிப்பிட்ட இடதுசாரிகள் மார்க்சிய லெனினிய ரொஸ்கியவாதக் கருத்துக்களை கிளிப் பிள்ளைகள் போல மீள மீள குறிப்பிடுவதாக குற்றம் சாட்டுகின்றார். ஆனால் இவரும் மாவோ சிந்தனைகளை அவ்வாறுதான் பயன்படுத்துகின்றார் என்பதையும் பேராசிரியர் சண்முகரட்ணம் குறிப்பிடுகின்றார். இதை சண்முகதாசன் அவர்கள் எவ்வாறு கவனிக்கத் தவறினார்? இதனால்தான் மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் ரஸ்சியாவில் லெனின் உருவாக்கிய லெனினிய கோட்பாடுகளைப் போன்றோ, அல்லது சீனாவில் மாவோ உருவாக்கிய மாவோயிச கோட்பாடுகள் போன்றோ இலங்கைக்கான “சண்னிஸக்” கோட்பாடுகளை இவரால் உருவாக்க முடியாமல் போனது எனலாம். இதைவிட இவரே சுயவிமர்சனமாக குறிப்பிடுகின்ற சீர்திருத்தவாத தொழிற்சங்க செயற்பாடுகளும் மற்றும் அதிகளவிலான பயணங்களும் இவர் கோட்பாட்டு ரீதியாக பங்களிக்க முடியாது போனதற்கான காரணங்கள் என நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டமையும் கவனத்தில் கொள்ளவேண்டியதாகும். இதன் விளைவுகள் தான் குறிப்பான சுழல்களில் சரியான முடிவுகள் எடுக்க முடியாது கட்சி செயலிழந்து போனதும் காரணமாக இருக்கலாம். இப்பொழுதும் இவரது கோட்பாடு கொள்கைகளின் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளை வழிநடத்துபவர்கள் அதே தவறைத்தான் மீளவும் செய்கின்றர் என்பது துரதிர்ஸ்டமானது.

அரசு மற்றும் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாக…

மார்க்சியத்தின் நடைமுறை தொடர்பான முக்கியமான ஒரு கோட்பாடு ஸ்துலமான நிலைமைகளைக் கணக்கில் கொண்டு நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது… 1970ம் ஆண்டு இன முரண்பாடுகள் வெளித் தெரியும்வகையில் ஸ்துலமான நிலைமைகளாகவே இருந்தன. இக் காலத்தின் பின் சிறிலங்கா அரசு ஆளுகின்ற ஆதிக்க வர்க்கத்தை மட்டும் பிரதிநித்துவப்படுத்தவில்லை. சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் அரசியலமைப்பில் இணைத்தன் மூலம் அவற்றையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர் ஒரு காலத்தில் “ஒரு மொழி இரண்டு நாடு இரண்டு மொழி ஒரு நாடு” எனக் கூறிய கொல்வின் ஆர் டி சில்வா என்பதுதான் முரண்நகை. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசு என்பது வெறுமனே அதிகார வர்க்கங்களை மட்டும் பிரதிநித்துவப்படுத்துவபை அல்ல. இது வேண்டுமானால் மேற்குலகிற்கு பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அங்குகூட பொருத்தமானதல்ல. மாறாக இது ஒரு வர்க்க குறுக்கள் வாதமே. ஆகவே இது தென்னாசிய சமூகங்களைப் பொருத்தவரை பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் இந்த அரசுகள் ஆதிக்க அல்லது பெரும்பான்மை இனத்தையும் அதன் மொழியையும் மதத்தையும் கூடவே பிரதிநிதித்துப்படுத்துவதாகவே இருக்கின்றன.

இலங்கையை உதாரணத்திற்கு கொள்வோமாயின் சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியல் என்பது ஒரு கருத்தியல் பொருளாக மாற்றமடைந்து செயற்படுகின்றது எனக் கூறலாம். இது சிங்கள தொழிலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை துரதிர்ஸ்டமானது. ஏனெனில் ஒரு புறம் தம்மை சுரண்டுகின்ற முதலாளித்துவ ஆளும் வர்க்க அரசு. இன்னுமொரு புறம் தம்மை இன மத ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இனத்துவ அரசு. இது ஆளும் வர்க்கத்தின் தந்திரோபாயமானபோதும் இங்கு அரசு என்பது வெறுமனே ஆளும் வர்க்கத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்த வில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அன்று புரட்சிகர கட்சியாக இருந்த சண்முகதாசன் அவர்களின் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அந்த சுழலில் இவ்வாறான ஸ்துலமான நிலைமைகளைக் கணக்கில் கொண்டு நிலைப்பாடுகள் எடுக்கவில்லை என்பது நாம் ஏற்கனவே அறிந்தது. இதற்கு காரணம் அல்லது தடையாக இருந்தது மார்க்சிய லெனினிய கோட்பாடுகளா? அல்லது அது தொடர்பான தவறான புரிதல்களா? அல்லது மத நம்பிக்கைகள் போல அதன் மீது வெறுமனே வைத்திருந்த நம்பிக்கையா? இது நாம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

இனம் மொழி சார்ந்த தேசிய விடுதலைப் போராட்டங்களை இடதுசாரிகள் முன்னெடுக்காமைக்கு காரணமாக இருந்தது மார்க்சிய லெனினிய கோட்பாடுகளிலில் இருந்த இறுக்கமான வரையறைகளே என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவதுண்டு. அதேவேளை வடபகுதியில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததில் இவரது கட்சி குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றயிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலவேளை சாதிகள் தொடர்பாக மார்ச்சியத்தில் எதுவும் கூறியிருந்தால் சாதிய எதிர்ப்பு போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விதான்… ஏனெனில் அதற்கும் பின்வருமாறு ஒரு காரணத்தைக் கற்பித்திருக்கலாம்… இது ஆதிக்க சாதிகளிலிருக்கின்ற தொழிலாளர்களைப் பிரித்து பாட்டாளி வர்க்க புரட்சியை சாத்தியமில்லாத்தாக்கிவிடும் எனவும் சிந்தித்திருப்பதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கலாம் அல்லவா. இவ்வாறான வர்க்க குறுக்கல் வாதத்தால் வர்க்க முரண்பாடுகளுக்கு  அப்பாற்பட்டு பல்வேறு காரணங்களால் அடக்கப்படுகின்ற மக்களின் விடுதலையையும் அவர்களது உணர்வுகளையுமே இங்கு நாம் தவறவிடுகின்றோம்

ஆனால் இவரது கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்த ரோகண விஜயவீர roganaகுறிப்பான சூழலில் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் சிந்தனையையும் உணர்வினையும் புரிந்து கொண்டிருந்தார் என்கின்றனர். இதனடிப்படையில், தவறான இருந்தபோதும், புரட்சிக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். இவர்களது பலத்தினை முதலில் கருத்தில் எடுக்காத சண்முகதாசன் அவர்கள் பின்பு தவிர்க்க முடியாமல் அவரைக் கவனத்தில் கொள்ளவேண்டி இருந்தது என்கின்றார் பேராசரியர் சண்முகரட்ணம். இதன் பின்னர் தான் ஜேவிபியின் அடிப்படை தத்துவார்த்த கோட்பாட்டு தவறுகள் தொடர்பாக தெளிவானதொரு விளக்கத்தை சண்முகதாசன் அவர்கள் முன்வைத்தார் என்கின்றார். சண்முகதாசன் மார்க்சிய லெனினிய மாவோயிச கருத்துக்களை இருந்து விலகாமல் இருந்தார். ஆகவே அன்றைய சூழலில் ஆயுதப் போராட்டத்தை முன்மொழிந்தபோதும் அதையும் முன்னெடுக்கவில்லை. சிங்கள பேரினவாத அரசின் தமிழ் தேசத்தின் மீதான அடக்குமுறையையும் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி எழுகின்றது.

இவரது கட்சியைச் சேர்ந்த ரோகண வீஜயவீர சிங்களப் (பேரினவாத) தேசிய வாதத்தை தனது கையில் எடுத்தது நடைமுறைப்படுத்தினார். ஆனால் இதுபோல் இவரது கட்சியைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற உறுப்பினர்கள் ஒருவரும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் முன்னெடுக்க வரவில்லை? இவர்களைத் தடுத்தது என்ன? காலம் சென்ற சண்முகலிங்கம் அவர்கள் ஒருதகவல் கூறினார். ரோகண விஜயவீரவும் கரவை கந்தசாமியும் இளைஞர் அணியின் இணைச் செயலாளர்களாக அப்பொழுது இருந்தவர்களாம். ரோகண வீஜயவீர மேற்குறிப்பிட்ட சிங்கள மக்களின் வழியால் சென்றபோது, கட்சிக்குள் இருந்த பலர் கரவை தமிழ் மக்களின் வழியில் செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாம் என்றார். ஆனால் அவர் அவ்வாறு செல்லவில்லை. மாறாக மலைலயகத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளுடன் முடங்கியிருந்தார். இவ்வாறான கட்சிக்குள் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்தவர்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்.

மாவோவின் கலாசாரப் புரட்சி

மாவோவின் கலாசாரப் புரட்சியின் அடிப்படை கோட்பாடு இன்றும் முக்கியமானது அவசியமானதுமாகும். சண்முகதாசன் அவர்கள் கலாசாரப் புரட்சியின் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாகவே இந்த நூலில் விளக்கிக் கூறுகின்றார். இதன் முக்கியத்துவம் மனிதர்களுக்குள்ளும் கட்சிக்குள்ளும் இருக்கின்ற முரண்பாடுகளின் போக்குகளை மாவோ சுட்டிக் காட்டுகின்றமையாகும் (306, 307, 309). பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிலைநாட்டினாலும் அந்த அரசில் உள்ளவர்கள் பழைய சமூகம் உருவாக்கிய மனிதர்களே (சண், 201). இவர்களது மனங்களின் ஆழங்களில் ஒடுவது அந்த சமூகம் உருவாக்கிய சிந்தனைகளே (201). ஆகவே நாம் புதிய அரசை உருவாக்கி இருந்தாலும் கட்சியிலிருக்கின்ற மனிதர்களின் சிந்தனைகள் மீளவும் பழையபடி அரசை முதலாளித்துவ பாதைக்கு மாற்றுவதற்கு முனையும். இதுதான் இறுதியில் சீனாவிலும் நடந்தது என்பது வேறுவிடயம். ஆகவேதான் மாவோ “பழைய கலாசாரம், சிந்தனை, பழக்கங்கள், வழக்கங்கள் என்பவற்றை அழித்து” (சண், 207) அதற்குப் பதிலாக புதிய கலாசராம், சிந்தனை, பழக்கங்கள், வழக்கங்கள் என்பவற்றை” (சண், 207) நிலைநாட்டுப்படி அறைகூவல் விட்டார். இந்தடிப்படைகளில் “ஆயிரம் பூக்கம் பூக்கட்டும் ஆயிரம் கருத்துக்கள் மலரட்டும்” (308) “தலமையை தகர்த்தெறியுங்கள்” (215, 302) போன்ற கோசங்களை முன்வைத்தார். இவை ஆரோக்கியமானவைதான். இது மனிதர் மற்றும் சமூகம் சார்ந்த சரியான மார்க்சிய அடிப்படையிலான இயங்கியல் பார்வையே எனக் கூறுகின்றனர்.

கலாசாரப் புரட்சியின் நோக்கமும் அதற்கான புரிதலும் சரியாக இருந்தது எனலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்திய விதம் முன்நோக்கிய பாதையை திசைதிருப்பிவிட்டது என்று கூறலாம். பழையதை அழிப்பது என்பதை மனிதர்களையே அழிப்பது என்பதாகவே கட்சித் தொண்டர்கள் கருதிவிட்டார்கள் என்றே கருதுகின்றேன். ஏனெனில் மாவோவே அவ்வாறான கருத்துப்பட “நச்சுக்களை பிடுங்கி எறியுங்கள்” என்றுதான் கூறியிருக்கின்றார். தவறு இங்கு தான் நடந்தாக கருதுகின்றேன். இது தொடர்பான பல ஆதாரங்களை போராசிரியர் சேரன் அவர்களும் கூட்டத்தில் முன்வைத்தார். ஆகவேதான் அது செயற்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன.

இப் புரட்சிக்கு எவ்வளவு நியாயத் தன்மையிருந்தபோதும் உண்மையிலையே நேர்மையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதலாம். ஏனெனில் ஒரு புறம் “ஆயிரம் பூக்கம் பூக்கட்டும் ஆயிரம் கருத்துக்கள் மலரட்டும்” என்ற கோசம். இதன் விளைவாக கட்சிக்குள்ளும் சமூகத்திலும் இருந்த மாறுபட்ட அல்லது பழைய சிந்தனை உள்ளவர்கள் தம் கருத்துக்களை முன்வைத்து வெளிவந்தனர். ஆனால் மறுபுறம் அவர்களை கட்சியின் இளம் தலைமுறை களை எடுத்தனர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறைமையே எதிர்ப்புரட்சிகர சக்திகளை ஒன்றுபடுத்தி மீளவும் ஆதிக்கத்திற்கு கொண்டுவந்தது எனலாம். ஆனால் சண்முகதாசன் அவர்கள் இக் கேள்விகளை எதிர்கொள்ளாமல் “சில தவறுகள் நடந்தன” எனக் கூறிக் கொண்டு கொண்டு கடந்து செல்கின்றார். இது அடிப்படையில் நேர்மையற்ற பக்கச் சார்பான விசுவாசமான ஒரு பார்வையே என்றால் மிகையல்ல.

மாவோமாவோ நமது மூளையில் ஒற்றைச் சிந்தனை (பட்டாளிவர்க்க அல்லது முதலாளித்துவ சிந்தனை) மட்டுமே இருக்கவேண்டும் என்கின்றார் (213). இது அராஜகமான ஒரு பார்வையே என்றால் மிகையல்ல. மனித மூளை அல்லது மனம் என்பது ஒரு இயந்திரமல்ல. உடனடியாக கலட்டிப் பூட்டுவதற்கு. மனிதர்களுக்குள் இருக்கின்ற பழைய சிந்தனைகளை அகற்றுவதற்கு வன்முறையான பாதையோ அல்லது தண்டனைகள் வழங்குவதோ சரியான தெரிவல்ல. இதுவே காலம் காலமாக ஆதிக்க சக்திகளால் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒன்று. இதற்கு மாறாக மனித மனதில் ஆழமாக புதைந்திருக்கின்ற சிந்தனைகளை மாற்றுவது என்பது ஆரோக்கியமான திட்டங்களினுடான படிப்படியான வளர்ச்சியினுடாகவே சாத்தியம் என்பது எனது புரிதல்.

இதைப் பின்வருகின்ற உதாரணம் மூலமாகப் புரிந்துகொள்ளலாம். நான் ஒரு பெண்ணிலைவாதி. இருப்பினும் இந்த சமூகத்தில் வளர்ந்த ஒரு ஆண். இந்த சமூகத்தில் ஆதிக்கத்திலிருக்கின்ற ஆணாதிக்க சிந்தனைகளால் வளர்க்கப்படவன். அவைதான் என்னை ஆட்சி செய்து வழிநடாத்தின. இந்த சிந்தனைகள் தவறு என ஒரு நேரத்தில் புரிந்துகொண்டபோதும் அதிலிருந்து உடனடியாக விடுபட முடிந்ததில்லை. நான் பெண்ணிலைவாதியாக என்னை உணர்ந்து கொண்டபின்பும் என்னையறியாமலே பல சந்தர்ப்பங்களில் எனக்குள் இருந்த ஆணாதிக்க சிந்தனைகள் பிரக்கஞையின்மையாக வெளிப்படுகின்றன. இப்படியான ஒரு நிலையில் பெண்ணாதிக்க சமூகம் ஒன்று உருவாகும் பட்சத்தில் நான் அழிக்கப்படவேண்டுமா அல்லது மாற்றப்படவேண்டுமா? அவ்வாறு ஆணாதிக்க சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்கள் இருப்பவர்களை அழிப்பதாக இருந்தால் சகல ஆண்களை மட்டுமல்ல பெண்களையுமே அழிக்கவே வேண்டி வரும். ஏனெனில் பெண்களும் ஆணாதிக்க சிந்தனைக்கு உட்பட்டவர்களே. அகவே இது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல தவறான ஒரு பாதையுமேயாகும்.

நடைமுறை தொடர்பாக…..

நோக்கம் சரியாக இருந்தபோதும் வழி முறை தவறானால் நமது நோக்கத்தை இறுதியாக அடையா முடியாது. ஆகவே நாம் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இன்னுமொரு இடத்தில் (சண், 307) ஒரு மனிதருக்குள் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் இரண்டு போக்குகள் நிலவும் எனவும் இவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளினுடாகத்தான் வளர்ச்சி ஏற்படுகின்றது என மாவோ கூறியுள்ளார். இது சரியானதொரு பார்யையே. இதையே நிலாந்தன் அவர்கள் வாழ்க்கை என்பது கருப்பு வெள்ளையல்ல. அவை சாம்பலாகவே பெரும்பாலும் இருக்கும் எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே நாம் எதை நோக்கி எவ்வாறு பயணிக்கின்றோம் என்பதில் நாம் பிரக்ஞையாக இருப்பதே முக்கியமானதாகும்.

இவ்வாறு பிரக்ஞையாக செயற்பட நாம் விரும்பியோ விரும்பாமலோ கீழைத்தேய சிந்தனைகளிடம் செல்லவேண்டும் என்றே கருதுகின்றேன். ஏனெனில் இதற்குப் பதில் மேலைத்தேய சிந்தனைகளில் தூரதிர்ஸ்டவசமாக இல்லை. மற்றும் நாம் இன்னுமொரு ஆதிக்க சமூகத்தை உருவாக்குவதற்காகவோ மனிதர்களை அழிப்பதற்காகவோ போராடவில்லை. மாறக ஒவ்வொரு மனிதர்களும், சக மனிதர்கள் யாரையும் அடக்கி ஒடுக்கமாமல் சுரண்டாமல், சகல உரிமைகளுடனும் வாய்ப்புகளுடன் அவர்களுக்கே உரிய தனித்துவங்களுடனும் ஆற்றல்களை வெளிப்படுத்தியும் ஆரோக்கியமாக வாழவேண்டும். இதுவே நமது இறுதி நோக்கம்.

 சுயவிமர்சனம் தொடர்பாக...

சசண்முகதாசன் அவர்கள் தனது சுய விமர்சனமாக சில தடவைகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். தான் “இதை அப்பொழுது உணரவில்லை…”… (உ.ம் 33ம் பக்). “பின்னர் தான் உணர்ந்தேன்” (பக்.55). இது மனிதர்களின் சதாரண இயல்புதான்… புரிந்து கொள்ளலாம்… ஆனால் மனிதர்களின் இவ்வாறன பண்புகளிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்வது… என்பதுதான் முக்கியமானது…. இன்று நமது விடுதலைப் போராட்டம் தோற்றபின் அல்லது முடக்கப்பட்டபின் பலர் இவ்வாறுதான் குறிப்பிடுகின்றனர்…  இவ்வாறான போக்கு குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழலில் மிகவும் ஆபத்தானது…. மக்களையே பலி கொடுக்கவேண்டி வரும்.. ஆனால் அதுதான் இறுதியாக நடந்தது…. ஆகவே இவ்வாறான தவறை மீளவும் செய்யாது அல்லது மிகவும் குறைந்தளவில் இவ்வாறான தவறுகள் இடம் பெறக்கூடியவகையில் எவ்வாறு செயற்படுவது என்பதில் அக்கறை கொள்ளவேண்டியது முக்கியமானது. அதேவேளை புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் பொழுது தவறுகள் தவிர்க்கப்பட முடியாதவைதான். ஆனால் அதற்குரிய பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமானது எனக் கருதுகின்றேன். அப்பொழுதுதான் தவறுகளை குறைக்கலாம் என நம்புகின்றேன். இவ்வாறு செயற்படுவதற்கான முயற்சி கூட ஒரு கலைத்துவமான செயற்பாடுதான். ஆனால் கடந்த காலங்களில் மட்டுமல்ல இப்பொழுதும் இவ்வாறான பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கின்றார்களா… செயற்பட்டிருக்கின்றோமா செயற்படுகின்றோமா… என்றால் அது கேள்விக்குறிதான்.

மீராபாரதி

10.03.2013

கனடா டொரன்டோவில் இயங்கும் தேடகம் சண்முகதாசன் அவர்கள் மறைந்து 20வது ஆண்டை நினைவு கூறுமுகமாக அவரின் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடாத்தியது. அதில் வாசிக்கப்பட்ட உரையின் திருத்திய வடிவம் இது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: