Posted by: மீராபாரதி | February 2, 2013

“அத்தாங்கு” – அகப்பட்ட (ஈழத்) தமிழ் தேசம்…

“அத்தாங்கு” – அகப்பட்ட (ஈழத்) தமிழ் தேசம்…

மெலிஞ்சி - அத்தாங்குநெய்தல் நிலங்களில் உயிர்கள் மட்டும் பிறப்பதில்லை… படைப்பாளிகளும் படைப்புகளும் பிறக்கின்றன… அவ்வாறான ஒரு படைப்பாளியின் (மெலிஞ்சி) படைப்புத்தான் “அத்தாங்கு”.

இலங்கையின் வடபகுதி கரையோரக் கிராமத்தை சேர்ந்த மனிதர்களின் வாழ்வை மையமாகக் கொண்ட மெலிஞ்சியின் இன்னுமொரு (குறு)நாவல்  “அத்தாங்கு”. இந்த சிறிய வலைக்குள் அகப்பட்டது ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் சமூகம்… மனிதர்கள்…. இந்த மனிதர்களின் 1991-1995க்கு இடைப்பட்ட போர்க்கால மற்றும் போராட்டக் கால வாழ்வை சித்தரிக்கின்றது இது… இக் கதை(?)… இந் நிகழ்வின் களமாக கிளாலாலியும் அதன் புவியியல் சுழலும் அங்கு இடம் பெயர்ந்து வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும் அதன் பின்னனியும் இருக்கின்றது… இக் காலட்டங்களில் யாழ் குடா நாட்டில் வாழ்ந்தவர்களுக்கு கிளாலி முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு பிரதேசம். ஏனெனில் இவர்கள் வன்னிக்கோ கொழும்பிற்கோ போவதற்கு இருந்த ஒரே கடல் வழிப் பாதை இங்குதான் இருந்தது. இதனுடான பயணமும் பயணிப்பவர்களுக்கு மரணத்தையும் மரணப் பயத்தையும் ஏற்படுத்திய ஒன்று. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தரைவழிப் பாதைகளில் (ஆனையிறவு மற்றும் பூநகரி) இராணுவ முகாம்கள் தடைக் கற்களாகவும் கொலை களங்களாகவும் இருந்த காலங்கள் அவை. ஆகவேதான் ஈழத் தமிழர்களின் (போராட்ட) வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிலம் இது. மேலும் இக் காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் குறிப்பாக ஒப்பரசேன் யாழ்தேவி, புலோப்பளை சமர், தவளைப் பாச்சல், மற்றும் யாழ் இடப்பெயர்வு போன்றனவும் இந்தப் படைப்பில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.

யாழ். மையவாதத்தால் ஓதுக்கப்பட்டும் கீழானவர்களாகவும் கணிக்கப்பட்ட தீவுப்பகுதிகளிலும் அதன் கரையோரங்களிலும் வாழ்ந்த பல சமூகங்களின் ஒரு சமூகத்தையும் அதன் சில குடும்பங்களையும் அதிலும் சில மனிதர்களையும் பற்றிய வெறும் கதையல்ல இது…அவர்களது உயிரோட்டமான போராட்ட வாழ்வை இலக்கியமாக்கியிருக்கின்றார் மெலிஞ்சி. அல்லது ஒரு இலக்கிய படைப்பாக உருவாக்க முயற்சித்திருக்கின்றார். இவர்கள் ஆதிக்க சாதியினரால் வர்க்கத்தினரால் சமூகத்தினாரால் ஒடுக்கப்பட்டிருந்தாலும் தமக்குள்ளும் குறிச்சி, வட்டாரங்கள் எனப் பிரித்து பல ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டிருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டத் தவறவில்லை.

இவ்வாறானதொரு சமூகம் தாம் பிறந்து வளர்ந்த தீவுப் பகுதிகளில் இராணுவ கெடுபிடிகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்க ஆரம்பித்தது. ஆகவே இங்கு தொடர்ந்தும் வாழ முடியாது என முடிவெடுத்து இடம் பெயர்ந்து கிளாலிக்கு அருகிலுள்ள “பண்டிதர் குடியிருப்பு”க்கு எவ்வாறு வந்து சேருகின்றனர் என்பதையும் அங்கு எவ்வாறு தமது வாழ்வை கட்டமைக்கின்றனர் என்பதையும் இப் படைப்பில் விபரிக்கப்படுகின்றது. இக் குடியிருப்பு தீவுப்பகுதி கரையோ மக்களுக்காக புலிகள் இயக்கத்தால் “பண்டிதரின்” நினைவாக கட்டமைக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றது. இதேபோல் கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து அல்லது  அங்கு நடைபெற்ற இனவிரோத வன்செயல்களால் விரட்டியடிக்கப்பட்ட மலையக மக்களுக்காக “கேடில்ஸ்” குடியிருப்பும் இதனருகில் நிறுவப்பட்டிருக்கின்றது. மேலும் தென்மாரட்சியினதும் மற்றும் அதன் சிற்றுர்களினதும் வரலாறுகளையும் சுருக்கமாக குறித்துச் செல்கின்றார். இந்த வரலாறும் பல உண்மைகளை  அல்லது புதிய தரவுகளைத் தருகின்றது.

சதாரண வாழ்வில் மெலிஞ்சியுடன் உரையாடும் பொழுது எவ்வாறு வாழ்க்கையைப் பற்றி தத்துவ விசாரணை செய்வாரோ அதனை அவர் இங்கும் செய்திருக்கின்றார். ஆனால் கிரிஸ்தவப் பாதிரியார் அல்லது அருட்தந்தை என்ற பாத்திரத்தினுடாக அதனை ஆற்றுகின்றார். இவருக்கு எல்லாவற்றின் மீதும் கேள்வியுள்ளது.  இக் கேள்விகள் மற்றவர்களைப் பற்றிய புறம் நோக்கிய கேள்விகள் மட்டுமல்ல… தன்னைப் பற்றிய அகம் நோக்கிய கேள்விகளும் தான்…. இந்த தத்துவ விசாரணை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இந்தப் படைப்பில் நடைபெறுகின்றது.

குறிப்பிட்ட பாத்திரம் பாதிரியாராக இருக்கும்போது  அவருக்குள் உருவாகும் காமம், காதல் போன்ற உணர்வுகள்… பெண்கள் மீதான ஈர்ப்புகள்… அவற்றை எவ்வாறு எதிர்கொள்கின்றார்… அல்லது கடந்து செல்கின்றார்… என்பதை மிகவும் யதார்த்தமாக படைக்கின்றார். மறுபுறம் ஒரு பாதிரியாராக கொள்கையடிப்படையில் வன்முறைகளுக்கு எதிரானவராக இருந்தபோதும் … போர் மற்றும் போராட்ட சுழல்களில் அவற்றை எவ்வாறு எதிர்கொள்கின்றார் என்பது அலசப்படுகின்றது…. இதேபோல் சக மனிதர்களின் காமம், காதல், உறவுகள், வாழ்க்கை, விடுதலைப் போராட்டம், வறுமை என்பன தொடர்பான இவரது விசாரனைகள் இப் படைப்பிற்கு மேலும் உரம் சேர்க்கின்றன. இவ்வாறு  மனித மனதை, தத்துவங்களை, சாதியத்தை, யாழ். மையவாதத்தை, ஆதிக்க வர்க்கங்களை, விடுதலையை, போராட்ட இயக்கங்களை என ஒவ்வொன்றையும் கேள்விக்குட்படுத்தி விசாரணை செய்கின்றார்.  இதன் மூலம் தனிமனித மற்றும் சமூக அறங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றார். மேலும் சமூகத்திலிருக்கின்ற படைப்பாளர்களையும் இலக்கியவாதிகளையும் கூட இவர் விட்டுவைக்கவில்லை. அவர்களும் இவரது “அத்தாங்கு”க்குள் அகப்பட்டிருக்கின்றனர்.

மனிதர்களை ஆதிக்கம் செய்கின்ற எண்ணங்கள் மற்றும் சொற்களைப் பற்றி பல உண்மைகளை பின்வருமாறு கூறுகின்றார் இவர். “நாம் சொற்களின் சீடர்கள்” எனவும் “ஆயிரம் கருத்துக்களை உடல் மீது அள்ளிப் போர்த்திய” “கருத்துக்களின் பிள்ளைகள்” நாம் என்கின்றார். இதனால்தான் “கருத்தியல் ஆட்டு மந்தைகளாக” மனிதர்களாகிய நாம் திரிகிறோம். இவ்வாறு திரிகின்ற குறிப்பாக அருட்தந்தையர்கள் (மட்டுமல்ல மற்ற சாமியார்களும்) எவ்வாறு தாம் துறவு பூண்டதாக கூறுகின்றார்கள் எனக் கேள்வி கேட்கின்றார். ஆம் துறவு என்பது வெறுமனே வெள்ளை அங்கிகளையும் காவி உடைகளையும் மட்டும் அணிவதல்ல. இதையெல்லாம் கடந்து வேறு ஒன்று அது. ஆனால் மதங்களின் பயணம் அல்லது வழிகாட்டல் அதைநோக்கியதல்ல.

விடுதலை இயக்கம் எவ்வளவு அர்பணிப்புடன் போராடியது என்பதையும் பெருமை தரும் வெற்றிகள் பெற்றது என்பதையும் குறிப்பிடுகின்றார். அதேவேளை போர் மற்றும் போராட்ட சூழலில் எவ்வாறு மனிதர்கள் போராட்ட நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள், இளைஞர்கள் விருப்புடன் செல்வதையும், சிலர் முடியாது மீள ஓடிவருவதையும் இயல்பான ஒன்றாக குறிப்பிடுகின்றார். மேலும் இயக்கம் அதிகார மயமாக செயற்படுவதையும், அதைச் சிலர் சுட்டிக்காட்டும் பொழுது பொதுவில் மன்னிப்பு கேட்பதையும், ஆனால் அந்த மன்னிப்பு கேட்கும் கூட்டமே மீளவும் ஆட் சேர்க்கின்ற பிரச்சாரக் கூட்டமாக இருப்பதையும் நாம் இதில் தரிசிக்கலாம்.

“நண்பனின் நண்பன் உளவாளியாய் இருக்கலாம்” என்ற பாதகைகள் இந்த மனிதர்கள் வாழும் இடங்கள் எங்கும் தொங்கவிடப்பட்டிருந்தமை ஏவ்வாறு மனிதர்கள் மீதான நம்பிக்கைகள் இல்லாதுபோகச் செய்வதுடன் உறவுகளையும் சிதறடிக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். ஏனெனில் இது நாளை தன் நண்பனையே சந்தேகிக்கவும் அவரை உளவாளியாக அடையாளங்கானவுமான சூழ்நிலையை உருவாக்கும் என்கின்றார். இதனால்தான் அர்ப்பணிப்புள்ள ஆனால் இயக்கமில்லாத பொதுநல செயற்பாட்டாளர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றார். இதில் யார் சரி என்பது கேள்விக்குறி? ஆனால் இதையெல்லாம் அன்று கேள்விகேட்க முடியவில்லை. அதன்விளைவுகள் தானே இன்றைய ஈழத்தின் சுழல்.

இந்த (குறு) நாவலில் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை எவ்வாறு ஒரு போர் சூழலுக்குள்ளும் காமமும் காதலும் பிரிக்க முடியாது பாத்திரங்களாக வாழ்ந்ததைப் போல… மரணமும் முக்கியமான ஒரு பாத்திரமாக எப்பொழுதும் வருகின்றது. அது இயற்கை மரணமாகவோ, தற்கொலையாகவோ, கொலையாகவோ, படுகொலையாகவோ, வீரமரணமாகவோ வந்துபோகின்றது. குறிப்பாக அரசின் கண்முடித்தனமான தாக்குதல்களினால் ஏற்பட்ட மரணங்களையும் இந்த இழப்புகளையும் அதனால் ஏற்பட்ட வலிகளையும் பதிவுசெய்கின்றார். இருப்பினும் மரணம் எவ்வளவு பெரிய இழப்பைத் தந்தாலும் வலியை உருவாக்கினாலும் வாழ்க்கை தொடர்கின்றது…. வாழ்வின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு… என்பதையும் கூறத் தவறவில்லை.

மனிதர்களுக்கு இடையிலான புற முரணையும், மனிதர்களுக்குள்ளிருக்கும் அக முரணையும் தனது பாத்திரங்களினுடாகவும் நிகழ்வுகளினுடாகவும் மிக அழகாக வெளிப்படுத்துகின்றார். இதனுடாக வாழ்வின் உண்மையை, யதார்த்தத்தை, அறத்தை தரிசிக்க முயற்சிக்கின்றார். அதேவேளை இந்த முரண்பாடுகளை காலம் எவ்வளவு இலகுவாக மாற்றுகின்றது… மறக்கச் செய்கின்றது… அல்லது முடிவில்லாது தொடரச் செய்கின்றது என்பதையும் குறிப்பிடத்தவறவில்லை.  இறுதியாக இதை எல்லாம் எவ்வாறு தீர்ப்பது என்பதற்கான மருந்தையும் தருகின்றார். இந்த மருந்து வேலை செய்யுமா என்பதை மீளவும் பரிட்சித்துப்பார்த்தாலே அறியமுடியும் என்பது துர்ப்பாக்கியமானது.

ஆனால் மேற்குறிப்பிட்டதன் விளைவுகள் தான் இன்று முழு தமிழ் தேசமும் பெரிய “அத்தாங்கு” ஒன்றிக்குள் அகப்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றோம். இதுவும் நம் துரதிர்ஸ்டமே.

இறுதியாக நான் ஒரு இலக்கிய விமர்சகரோ அல்லது திறனாய்வாளரோ இல்லை. ஆகவே இந்தப் படைப்பு எந்தளவு இலக்கியத் தரம் வாய்ந்தது என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமையை இலக்கி விமர்சகர்கள் திறனாய்வாளர்களிடம் விட்டுவிடுகின்றேன். விமர்சனம் எனக் கூறவேண்டுமானால் இரண்டு விடயங்களை மட்டுமே குறிப்பிடலாம். ஓன்று மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெற்ற முஸ்லிம் இனத்தின் வெளியேற்றம் தொடர்பான குறிப்பு. இக் குறிப்பிட்ட படைப்பில் அதன் களத்தில் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக குறிப்பிடும் படைப்பாளி எவ்வாறு இந்த நிகழ்வைத் தவறவிட்டார்? இதற்கான பதிலை இலங்கையில் சந்தித்த ஒரு நண்பர் பின்வருமாறு கூறினார். “குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த தலைமுறையின் மனதிலிருந்து இந்த நிகழ்வானது எடுக்கப்பட்டுவிட்டது. அவ்வாறான ஒரு நிகழ்வு நடந்தாக அவர்களது மனதில் எந்தவிதமான பதிவும் இல்லை”. “உண்மையிலையே அவர்கள் திட்டமிட்டு அதை தவிர்க்கவில்லை.” என்றார். இதுவும் சாத்தியமானது என்றே உணர்கின்றேன். இப்படி எத்தனை நிகழ்வுகளை தவறவிட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன என யாருக்குத் தெரியும். இரண்டாவது இந்தப் படைப்பின் பிரதான பாத்திரங்கள் எல்லாம் ஆண்கள்தான். பெண்கள் வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் உப பாத்திரங்களே. விடுதலைப் போராட்டம் செய்த நன்மைகளில் ஒன்று அடுப்படிக்குள்ளிருந்த பெண்களை வெளியே கொண்டு வந்தது மட்டுமல்ல ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல அதற்கும் மேலாக செயற்படக் கூடியவர்கள் என்பதை நிறுபித்ததுதான். ஆனால் அதனை இந்தப் படைப்பில் தரிசிக்க முடியவில்லை.  இதுவும் தற்செயலானதா அல்லது ஆண் படைப்பாளர்களின் மனதிலிருந்து இதுவும் எடுக்கப்பட்டுவிட்டதா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டுவிடுகின்றேன்.

இந்தப் பதிவின் நோக்கம் என்ன என்பதற்கான உண்மையைக் கூறவேண்டுமானால் குறுகிய காலம் பழகிய நல்ல நண்பர் மெலிஞ்சி. இவர் ஒரு படைப்பைத் தந்திருக்கின்றார். இதற்கான ஒரு அறிமுகத்தை செய்யவேண்டும் என விரும்பினேன். அதன் விளைவுதான் இந்தப் பதிவு. இவர் பிறந்த சமூகங்களிலிருந்து பாடைப்பாளிகள் வருவது மிகவும் அரிது.  தமிழ் சமூகம் எது எதுக்கோ (அழிவுகளுக்கு) எல்லாம் ஆதரவளிக்கும். ஆனால் இவ்வாறன படைப்பாளிகளுக்கு ஆதரவளித்து உயர்த்திவிடுவதற்கான திட்டங்கள் ஒன்றையும் செய்ய முன்வராது. மு.தளையசிங்கத்தின் மெய்யுள் வாசித்தபோது (இது தொடர்பான ஒரு பதிவை விரைவில் எழுதுகின்றேன்) அவர் காலத்தில் வாழ்ந்த அறிவுஜீவிகளும் புலமைசார்துறையினரும் அவரைப் புரிந்துகொள்ளாது தவறுவிட்டுவிட்டனரே என்று கவலை கொண்டேன். அவருடைய கருத்துக்களை நாம் அன்று உள்வாங்கியிருந்தால் அல்லது பார்வையை கவனப்படுத்தியிருந்தால் சிலவேளைகளில் இன்று நாம் எதிர்நோக்கும் தோல்வியை சந்தித்திருக்க வேண்டிய தேவை இல்லாதிருந்திருக்கலாம்.  ஆனால் மெலிஞ்சி குறிப்பிடுவது போல் கருத்துக்களின் மந்தைகளாக வாழ்ந்த முன்னோர் தமது கருத்துக்களாலையே அவரை கொன்றுவிட்டனர். மு.த. பிறந்த மண்ணிலிருந்து வந்த மெலிஞ்சியின் இந்தப் படைப்பு உயர்தரம் வாய்ந்த இலக்கியமாக இல்லாதிருக்கலாம். ஆனால் அதற்கான ஆற்றலை உள்ளார கொண்டிருக்கின்றார் என நம்புகின்றேன். ஏனெனில் இது வெறுமனே வர்த்தகத்தனமான ஜனரஞ்சகமான ஒரு படைப்பல்ல. மாறாக மனித வாழ்வைப் பற்றிய கலாபூர்வமான ஒரு படைப்பு. இதனால் கலாபூர்வமான திரைப்படங்களைப் போல கண்டுகொள்லாமல் விடுபட்டுவிடுமோ என்ற பயம் உள்ளாற இருக்கின்றது. ஆகவேதான் இவர் போன்ற படைப்பாளர்களின் ஆற்றல்களும் இவ்வாறன படைப்புகளும் மேலும் வெளிவரவேண்டுமாயின் தமிழ் சமூகத்தின் ஆதரவு  தேவையானது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

மெலிஞ்சி – இந்தக் குறுநாவல் நீங்கள் வாழ்ந்த சமூகத்தைப் பற்றிய குறிப்பிட்ட காலத்தைப் பற்றிய அறிமுகம் மட்டுமே. ஆனால் இதனை அடிப்படையாகக் கொண்டு மாபெரும் இலக்கிய படைப்பொன்றை நீங்கள் உருவாக்கலாம் என நம்புகின்றேன். அதை எதிர்பார்த்து….

மீராபாரதி

31.01.2013

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: