Posted by: மீராபாரதி | January 21, 2013

மரணம்: இழப்பிலிருந்து முழுமையை நோக்கி…

மரணம்: இழப்பிலிருந்து முழுமையை நோக்கி…

குழந்தைகளும் மரணமும்

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் போராட்டம், வன்முறைகள்,மற்றும் போர் என்பன நடந்த காலங்களிலும் போரின் பின்பான இராணுவ சூழல்களினாலும் பல மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த மரணங்களினால் குறிப்பாக குழந்தைகள் தம் உறவுகள் பலரை (ஓரே நேரத்தில்கூட) இழந்துள்ளனர். வழமையில் தமது அன்புக்குரியவர் ஒருவரை இழந்தாலே குழந்தைகளது மனம் தாங்காது. இதில் பலரை ஒரே நேரத்தில் அதுவும் வன்முறையான சூழலில் இழக்கும் பொழுது எவ்வாறான மனநிலையைக் கொண்டிருப்பர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இவ்வாறான இழப்புகளினால்; இக் குழந்தைகள் பல வகையான மன நலப் பிரச்சனைகள் எதிர்நோக்குகின்றனர். ஆனால் தமக்கு ஏற்பட்ட இழப்புகளை குழந்தைகள் எவ்வாறு கடந்து செல்கின்றனர் என்பது பொதுவாக இது சமூகத்தின் அக்கறைக்கு உட்பட்ட ஒரு விடயமாக இருப்பதில்லை. உண்மையிலையே குழந்தைகள் தமக்கு ஏற்பட்ட இழப்பினால் உருவான தனிமை, சோகம், துக்கம் என்பவற்றை அனுபவித்துக் கொண்டும் தமக்கு ஏற்பட்ட இழப்பை பூர்த்தி செய்யவும் தம் வாழ்க்கைப் பயணத்தை சுயமாக தெரிந்த வழிகளில் மேற்கொள்கின்றனர். இவர்கள் இந்த பயணத்தைக் ஆரோக்கியமான வழிகளில் கடந்து செல்வதற்கும் தமது சொந்தக் கால்களில் மீள நிற்பதற்கு நாம் உதவலாம்.

உறவுகளும் சமூகமும் அரசாங்கமும் (உறுப்படியாக எதையும் எதிர்பார்க்க முடியுமா?) இவர்களுக்கு உதவ எவ்வாறான ஆதரவையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில்லை. ஏனெனில் குறிப்பாக உறவுகளும் சமூகமூம் தமக்கு நேர்ந்த இழப்புகளையே கடப்பதற்கு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது குழந்தைகளின் தேவைகளை கவனித்து அவர்களின் உணர்வுகளை புரிந்து மதித்திருப்பார்களாக என்பது சந்தேகமானதே. இவ்வாறு அவர்களிடம் குறிப்பிட்ட சூழலில் எதிர்பார்ப்பதும் அதிகமானதே. ஆனால் குழந்தைகளின் வளமான வாழ்வையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இவ்வாறான விடயங்களில் அக்கறை கொள்ளவேண்டியது அவசியமாகும். இது எமது பொறுப்புமாகும்.
மரணங்களினால் இழப்புகளை சந்தித்த குழந்தைகளுக்கு நல்லெண்ணங்களின் அடிப்படையில் பலர் உண்மையிலையே உதவ விரும்புவார்கள். ஆனால் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற அறியாமையினால்  தம்மை அறியாமலே (பிரக்ஞையின்மையாக) தமது பயங்களையும் பதட்டங்களையும் தவறான நம்பிக்கைகளையும் குழந்தைகளுக்கு கொடுத்துவிடுகின்றார்கள். அதாவது குழந்தைகள் மரணம் ஒன்று நடைபெற்றபோது பாதிக்கப்பட்டதைவிட  இந்த இழப்பிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக தவறான வழிகளில் பராமரிக்கப்படும்போது அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இழப்புகளை சந்தித்த குழந்தைகளையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்துகொள்வதனுடாகவே சரியான ஆரோக்கியமான வழிகளில் இவர்களுக்கு உதவ முடியும். இதன் மூலம் குழந்தைகளுக்கு மேலதிகமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முயற்சிக்கலாம்.
பொதுவாக ஒரு மரணத்தின் பின் குழந்தைகள் தமக்கு ஏற்பட்ட இழப்புகளினால் துக்கம் துயரம் கொள்கின்றமை இயல்பான ஒன்று. ஆனால் குழந்தைகளுக்கு இவ்வாறு ஏற்படுகின்ற துக்கங்கள் கவலைகள் என்பன தொடர்பாக சமூகங்கள் கவனத்தில் எடுப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது. இதனால் இவர்களுக்கு உருவாகின்ற தமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் யதார்த்தத்தில் கிடைப்பதில்லை. விளைவாக,  இவை பெரும்பாலும் மறக்கப்பட்ட துக்கங்களாக குழந்தைகளின் ஆழ்மனதில் புதைந்துபோய்விடுகின்றன. இது இவர்களது ஆளுமையையும் வளர்ச்சியையும் பாதிக்கலாம். ஆகவே இவ்வாறன குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையாக இருப்பவர்கள் இவ்வாறன பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து அவற்றை எதிர்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதற்கு தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவைப் பெரியவர்கள் பேணுவதன் மூலமே அவர்களுக்கு உதவ முடியும்.

இதை நடைமுறையில் சாத்தியமாக்க வேண்டுமாயின்; இது தொடர்பாக இவர்கள் மேலும் கற்கவேண்டும். அதேவேளை இவ்வாறு உதவி செய்ய விரும்புகின்றவர்களுக்கு இது மிகவும் சவாலான ஒரு விடயம் என்கின்றனர். இந்த சவாலை எதிர்கொண்டு கற்று உதவி செய்ய முடியுமாயின் இழப்பை சந்தித்த குழந்தைகள் தமது துக்கத்தை ஆரோக்கியமான வழிகளில் அனுபவிக்கவும் வெளிப்படுத்தவும் முடியும். இது இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் வெற்றிடத்தைப் பூர்த்தி செய்து கொண்டு இவர்கள் ஆரோக்கியமாக வளர உதவிபுரியும்.

முன்பு மனிதர்கள் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்தபோது பெரியவர்களுக்கு வயதாவதையும் மற்றும் நோய்,மரணம் ஏற்படுவதையும் குழந்தைகள் சந்தித்திருப்பார்கள். இப்பொழுதும் கிராமங்களில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு இவை பரிச்சயமானவையாக இருக்கும். ஒரு மரணம் நிகழும் பொழுது மரணித்தவரின் குடும்ப அங்கத்தவர்கள் மட்டுமல்ல உறவுகளும் அயலவர்களும் உராரும் குறிப்பிட்ட வீட்டில் கூடிவிடுவார்கள். மரணச் சடங்குகளும் வீடுகளிலையே நடைபெறும். இந்த சூழ்நிலையினால்  குழந்தைகள் மிக முக்கியமான இழப்பு ஒன்று தமக்கு நடைபெற்றுள்ளதாக புரிந்துகொள்வார்கள். அதேவேளை குடும்ப உறவுகளுடன் இணைந்து தமது கவலையும் துக்கத்தையும் அழுகையையும் வெளிப்படுத்தும் அனுபவத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் மரணம் என்பது சதாரணமாக நடைபெறுகின்ற ஒன்று என்பதை நாளடைவில் அறிந்துகொள்வார்கள். ஆகவே மரணம் என்பது இவர்களது வாழ்வில் புதிரான ஒன்றாக இருக்காது. இருப்பினும் குழந்தைகளுக்கு இழப்பினால் ஏற்பட்ட உள மனப் பிரச்சனைகள் பெரியவர்களின் அக்கறைக்குரியதாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியானதே.

இதேவேளை நகரங்களில் தனித் தனி குடும்பங்களாக வாழ்பவர்களுக்கு மரணம் ஒரளவு அந்நியமாக இருக்கின்றது. இந்த அந்நியத்தன்மை மேலும் மேலும் அதிகரித்து செல்கின்றது. உறவுகள் சிதறி பல இடங்களிலும் வாழ்கின்றார்கள். முதியவர்கள் பெரும்பாலும் கிராமங்களிலும்; அல்லது முதியவர் இல்லங்களிலும் தனித்து வாழ்ந்து இறக்கின்றனர். இதேவேளை நகரங்களில் மரணச் சடங்குள் மட்டுமல்ல உறவுகளின் சந்திப்புக்களும் மரண நிகழ்வுகள் நடைபெறுகின்ற பொது மண்டபங்களிலையே நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் மரணம் மற்றும் அந்த நிகழ்வு சடங்குகள் தொடர்பான அனுபவத்தை பெற முடியாது போகின்றனர். அதேவேளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் வன்முறை தொடர்பான செய்திகள்,விபத்துக்கள் மற்றும் இயற்கை அழிவுகளும் இதனால் ஏற்படும் இறப்புகளும் குழந்தைகளிடம் மரணம் தொடர்பான பல கேள்விகளை உருவாக்குகின்றன. இவ்வாறான கேள்விகள் தாம் பார்க்கின்ற கேட்கின்ற அறிகின்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் உருவாகும். இதற்கான பதிலை அவரவர் வயதுக்கு ஏற்ப நேர்மையாகப் பதிலளிக்காவிடின் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக குழப்பகரமான போக்கையும் பார்வையையும் குழந்தைகள் கொண்டிருப்பார்கள். இது வாழ்நாள் பூராவும் அவர்களுடன் இருப்பதுடன் மட்டுமல்லாமல் அவர்களிடம் பல உள மனப் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
தமது அன்புக்குரியவர்கள் இறந்த பின்பு ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் அதை எதிர்கொள்வார்கள். இவை ஒவ்வொன்றும் அக் குழந்தைகளைப் போலவே தனித்துவமானவை. ஆகவே ஒவ்வொறு குழந்தையும் தமது துக்கத்தை எவ்வாறு அனுபவிக்கவேண்டும் ,உணரவேண்டும் , அதற்காக என்ன செய்ய வேண்டும் அல்லது இவ்வாறுதான குழந்தைகள் புரிந்துகொள்வார்கள் அல்லது எப்பொழுது துக்கமாக இருப்பதை நிறுத்தவேண்டும் என்பவற்றை அறிவுறுத்தவோ கட்டளையிடவோ கட்டுப்படுத்தவோ கூடாது. மாறாக குழந்தைகளையே அவர்களுக்கான ஆசிரியர்களாக இருப்பதற்கு விடுவது நல்லது. இவ்வாறான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு கிடைக்கும் பொழுது தங்களது துக்கத்தின் அனுபவத்தையும் அதன் பயணத்தையும் பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஏனெனில் இவ்வாறு துக்கத்திலும் சோகத்திலும் இருக்கின்ற குழந்தைகளிடம் பகிர்வதற்கு நிறைய ஆழமான விடயங்கள் இருக்கின்றன. இதை அறிவதற்கு பெரியவர்கள் எவ்வாறு அவர்களிடம் கேட்பது என்பதைக் கற்கவேண்டும்.  கேட்பது என்பது ஒரு கலை. அதுவும் குழந்தைகள் கதைப்பதைக் கேட்பது என்பது மிகப்பெரிய கலை. அதேவேளை குழந்தைகள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான பாதுகாப்பான சூழலையும் உறுதி செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பயமின்றி துணிவாக தமது எண்ணங்களை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
குழந்தைகள் கதைப்பதைக் கேட்பதற்கும் அவர்களுடன் உரையாடுவதற்கும் பெரியவர்கள் சில பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். உதாரணமாக குழந்தைகளை மதிப்பது,ஏற்றுக்கொள்வது, அரவணைப்பது, புரிந்துகொள்வது போன்றன முக்கியமானவை. அதாவது குழந்தைகளை அவர்களது சுயநம்பிக்கைகும் ஆளுமைக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் தனித்துவமானவர்களாக மதிக்கவேண்டும். இவ்வாறு மதிப்பது என்பது அவர்களது செயற்பாடுகளை எந்தவிதமான மதிப்பீடுகளும் இல்லாது ஏற்றுக்கொள்வது என்பதாகும். இதன் அர்த்தம் அவர்களுடன் உடன்படுவதோ அல்லது மறுப்பதோ அல்ல. அரவணைப்பது என்பது குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பதுடன் உடல் மொழியால் உரையாடுவதாகும். ஏனெனில் உரையாடலில் மூன்றில் இரண்டு பங்கு வார்த்தைகளற்ற உடல் மொழி எனக் கருதப்படுகின்றது. இது உரையாடும் சொற்களைவிட அதிக வலுமிக்கவையாகும். குரலின் தன்மை, கண் பார்வை,இருப்பு, முகபாவனை என்பன பயன்படுத்தப்படும் உடல் மொழிகளில் சிலவாகும்.  இதைவிட குழந்தைகளின் உள்ளுணர்வுகளை அவர்களது பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முயற்சிக்கவும் வேண்டும். அதேவேளை இவற்றை குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் செயற்படும் பொழுதுதான் அவர்களுக்கு பெரியவர்களிடம் பாதுகாப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படும். இவ்வாறான பண்புகள் ஏதுவுமில்லாது வெறுமனே அறிவியல் பூர்வமாகவோ இயந்திரத்தனமாகவோ உரையாட முயற்சிப்பது எந்தவகையிலும் குழந்தைகளுக்கு உதவி செய்யாது. இவ்வாறான உறவு பெரியவர்களிடமிருந்து குழந்தைகளை அந்நியப்படுத்தவே வழிவகுக்கும்.


தமது அன்புக்குரியவர்களை இழந்த குழந்தைகள் பொதுவாக 12 வகையான தன்மைகளை அனுபவிப்பார்கள் எனக் கூறுகின்றனர். ஓவ்வொரு குழந்தையும் தனித்துவமான வெளிப்படுத்தும் ஆற்றல்களை உடையன என்றடிப்படையில் இந்தப் 12 வகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடாது. உதாரணமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத வகையில் குறைவாக இருக்கின்றமை, வித்தியாசமான பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துகின்றமை, உளவியல் மாற்றங்கள், பயம்,முறையற்ற பழக்கவழக்கங்கள், குற்றவுணர்வு, பெரிய மனிதர் நினைவு, விட்டு விடுதலையாகி (நிம்மதி),ஓழுங்கில்லாமையும் தடுமாற்றமும், இழப்பும் தனிமையும், உணர்ச்சிகள் ஆக்ரோசமாக வெளிப்படல்,உடன்பாட்டுக்கு வருதல் என்பனவாகும்.

மரண அல்லது இழப்பு செய்திகளை கேட்டவுடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத வகையில் குறைவாக இருக்கின்றமை அல்லது அதிர்ச்சியாக உறைந்துபோவார்கள். இதன் வெளிப்பாடாக இவ்வாறன செய்து கேட்ட சிறிது நேரத்தில் குழந்தைகள் விளையாட சென்றுவிடுவார்கள். இது பார்ப்பதற்கு பொறுத்தமற்ற பழக்கவழக்கமாக இருக்கும். ஆனால் இதுதான் குழந்தைகளின் இயல்பான பாதுகாப்பு பொறிமுறையும் அவர்களை இயற்கை ஆதரிக்கின்ற வழியுமாகும். இதுவே குழந்தைகள் மரணத்தின் வலியிலிருந்து விடுபட்டிருப்பதற்கான அவர்கள் நாடுகின்ற வழிமுறையாகும். இதைப் பார்ப்பதற்குப் பெரியவர்களுக்கு குழப்பமாக இருக்கும். ஆனால் இது குழந்தைகளின் வழிமுறை என்பதைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிக்கவேண்டும். குழந்தைகள் தமது துக்கத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்த தயார் இல்லாதவரை அவர்களை நமது வழிகளில் செயற்பட கட்டாயப்படுத்தக் கூடாது.

இவ்வாறன சூழ்நிலைகளில் குழந்தைகள் வித்தியாசமான பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துகின்றனர். அதாவது தாம் ஏற்கனவே செய்த சிறிய வேலைகளுக்கு கூட பெற்றோரில் தங்கியிருப்பது. பாடசாலைகளில் தனித்து சுதந்திரமாக செயற்பட முடியாதிருத்தல,இரவு நேரங்களில் திடிரெனப் பயம் கொள்ளல், பிறந்த குழந்தைகள் போல மழலை கதைத்தல் என்பனவாகும். இவை இயல்பான ஆனால் தற்காலிகமாக பழக்கவழக்கங்களே. இவ்வாறன வித்தியாசமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் தமது வலிகளை தமக்குள் புதைத்துவிடுவார்கள். இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. ஆகவே இக் காலங்களில் பெரியவர்களின் புரிந்துணர்விலும் அரவணைப்பிலும் கண்காணிப்பிலும் குழந்தைகள் இருப்பது  நல்லது. பொருத்தமான காலம் வரும் பொழுது, தம்மை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் பாதுகாப்பான சூழலும் கிடைக்கும் பொழுது, தமது துக்கத்தை வெளிப்படுத்தி மீளவும் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

பெரிய மனிதர் நினைவு என்பது மேற்குறிப்பிட்ட பழக்கவழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். இது குழந்தைகள் தாம் விரைவாக வளர்ந்துவிட்டதாக தம்மைக் காட்டிக்கொள்ளவதற்கான ஒரு முயற்சியாகும்;. உதாரணமாக  இறந்தவரை பிரதியீடு செய்து பெரிய மனிதர் போன்று வெளிப்படுத்துகின்ற செயற்பாடு குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியமான காரணம் பெரியவர்கள் தமது அறியாமையினால்  பிரக்ஞையின்மையாக இறந்தவரின் பொறுப்புக்களைத் குழந்தைகள் மீது திணிக்கின்றமையாகும். இதன் விளைவாக குழந்தைகள் தம்மை பெரியவர்களாக் கட்டாயப்படுத்தி வெளிப்படுத்துகின்ற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். உதாரணமாக“இனி இந்த வீட்டுக்கு  நீ தான் பொறுப்பான மனிதராக இருக்கவேண்டும்” எனக் கூறுவது. இதனைக்; குழந்தைகள் பிரக்ஞையின்மையாக உள்வாங்கிக்கொண்டு இறந்தவரை தமக்கூடாக மீண்டும் வாழவைக்கின்றனர். பெரியவர்கள் தம் குழந்தைகள் மீது இருக்கின்ற அக்கறையினால் நல்லெண்ணங்களின் அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் இது குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர். ஏனெனில்; இது குறிப்பிட்ட உறவினரின் இழப்பினால் தமது வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பை ஏற்றுக்கொள்ளாது விட்டுவிடுகின்றமைக்கு வழிவகுக்கின்றது. மேலும் குழந்தைகள் தம்மை இவ்வாறு பிரதியீடு செய்வதால் இவர்களது சுய அடையாளம், ஆளுமைகள், தன் நம்பிக்கைகள் மற்றும் சுய வளர்ச்சி என்பன மிக மோசமாக சிதைவடைகின்றன. ஆகவே இவ்வாறன செயற்பாடுகள் தொடர்பாக பெரியவர்கள் மிகவும் விழிப்புநிலையில் இருக்கவும் பிரக்ஞையுடன் செயற்படவும் வேண்டும்.

இழப்புகளை சந்தித்த குழந்தைகள் தமது சோகங்களையும் கவலைகளையும் துக்கங்களையும் மிகவும் ஆக்ரோசமாக,உணர்ச்சிபூர்வமாக செயற்பாடுகளினுடாக வெளிப்படுத்துவார்கள். ஏனெனில் குழந்தைகளிடம் இவற்றை வெளிப்படுத்த சொற்களின் போதாமையும் புரிந்துகொள்ளமுடியாமையும் காரணமாக இருக்கின்றன. அதேவேளை குழந்தைகளின் இவ்வாறான சிக்கலான உணர்ச்சிகளான கோபம், குற்றம் சுமத்தல், வெறுப்பு, பயங்கரம், பழிவாங்குதல்,பொறாமை மற்றும் தாக்குதல் என்பவற்றை எவ்வாறு முகம் கொடுப்பது  என்பது தொடர்பாக பெற்றோர்களும் பெரியவர்களும் நிச்சயமற்றவர்களாக இருக்கின்றார்கள். குழந்தைகளின் இவ்வாறான வெளிப்படுத்தல்களின் பின்னால் தமது அன்புக்குரியவர்களை இழந்ததினால் அவர்களுக்கு ஏற்பட்ட வலி, உதவியின்மை, வெறுப்பு, பயம், நோ என்பன அடிப்படையாக இருக்கின்றன. ஆகவே இந்த வெளிப்படுத்தல்கள் வாழ்கின்ற பெற்றோரை அல்லது ஆசிரியரை,நண்பர்களை, கடவுளை அல்லது உலகத்தை நோக்கி பொதுவாக திசைதிருப்படும். ஆனால் ஒரு குழந்தையைப் பொருத்தவரை இவ்வாறான வெளிப்படுத்தல்களை மேற்கொள்வது ஆரோக்கியமானது. இதற்குமாறாக குழந்தைகள் இவ்வாறான தமது உணர்ச்சிகைள வெளிப்படுத்த தாம்மை தாமே அனுமதிக்காதபோதும் அல்லது மற்றவர்கள் இவர்களை அனுமதிக்காத போதும் இவ்வாறான உணர்சிகள் அகம் நோக்கி திசைதிருப்பப்படுகின்றன. இதன் விளைவாக இக் குழந்தைகள் குறைவான தன்னம்பிக்கை உடையவர்களாக,மன அழுத்தம் கொண்டவர்களாக,குற்றவுணர்வு உடையவர்களாக உருவாகின்றார்கள். இது ஆரோக்கியமற்ற வளர்ச்சியை இவர்களிடம் ஏற்படுத்துகின்றது.

இதேபோல் பல குழந்தைகளின் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமற்றவையாக இருக்கும். திடிரென உணர்ச்சிவசப்பட்டு கத்துவார்கள்,எதைப் பற்றியும் அக்கறையோ பொறுப்பே இல்லாதவர்களாக இருப்பார்கள், மற்றவர்களுடன் வலிந்து சண்டைக்குப் போவார்கள், ஒரளவு வளர்ந்த குழந்தைகள் எனின் வீட்டைவிட்டு வெளியேறுவதாக கூறுவார்கள். இதற்கான காரணங்கள் பல. உதாரணமாக ஒருவரின் இறப்பின் பின்பு இக் குழந்தைகள் பாதுகாப்பின்மையாக, தாம் கைவிடப்பட்டமையாக, தண்டிக்கப்பட்டமையாக போன்ற உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வுகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள மேற்குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை மேற்கொள்வார்கள். இது இவர்களுக்கு பிரக்ஞையின்மையாக பலத்தையும் தம் மீதான கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் வழங்குகின்றது. சரியான வழகாட்டல்கள் இருக்கும் பொழுது நாளடைவில் இவை இல்லாமல் போய்விடும். ஆனால் வழிகாட்டல்கள் இல்லாதபோது இவை குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கலாம்.

குழந்தைகளுக்கு இழப்பினாலும் தனிமையினாலும் ஏற்படும் உணர்வுகள் மிகவும் கஸ்டமானவை. இது ஒருவரின் இழப்பின் பின் இவர்களுக்கு உடனடியாக தோன்றி முடிவடையும் விடயமல்ல. மாறாக இழப்பின் பயணம் ஆரம்பித்த பின் மாதங்கள் வருடங்கள் என நீண்ட காலத்திற்கு தொடரக்கூடியது. குறிப்பாக இறந்தவர் இனி திரும்பி வரமாட்டார் என எப்பொழுது குழந்தை புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது இவ்வாறான பிரச்சனைகளும் ஆரம்பிக்கின்றன. இதன் பின் தம்மிலும் மற்றவர்களிலும் ஆர்வம் குறைந்தவர்களாக தம்மைக் காட்டிக் கொள்வார்கள். உணவு, நித்திரை,கொண்டாட்டம் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றில் ஆரோக்கியமற்ற மாற்றங்கள் நிகழ்வதைக் காணலாம். இதன் விளைவாக இவர்கள் ஒருவரில்,குறிப்பாக இறந்தவரைப் போன்று இருக்கின்ற ஒருவரில், முழுமையாக தங்கியிருப்பார்கள். இவ்வாறன குழந்தைகளில் அக்கறையுள்ளவர்கள் இவ்வாறான பண்புகளை அடையாளங் கண்டு அவற்றை நிவர்த்தி செய்யக் கூடியவகையில் இந்தக் குழந்தைகளுடன் உறவை வளர்த்து ஆதரவையும் அன்பையும் வழங்கவேண்டும்.

ஒரு நிலையில் குழந்தைகள் இறந்தவர் இனிவரமாட்டார் என்பதையும், ஆகவே இனி தமது வாழ்வு பழையமாதிரி இருக்கப்போவதில்லை என்பதையும் எதிர்காலம் வித்தியாசமானதாக வேறுவிதமானதாக இருக்கப்போவதையும் உணர்ந்து தமது அறிவுக்கு ஏற்ப புரிந்து கொள்வார்கள். இந்த புரிதலின் காரணமாக மீண்டும் தமது வாழ்வில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். இவ்வாறான ஒரு நிலைக்கு இவர்கள் வரும் வரை இவர்களைப் பெரியவர்கள் ஆதரிக்க வேண்டும். ஓவ்வொரு குழந்தையும் தனது வயது, ஆளுமை,சூழல், இறந்தவருடான உறவு என்பதற்கமைய இந்த நிலைக்கு வருவதற்கான பயணத்தில் இருப்பார்கள். இப் பயணத்தின் காலம் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். இதற்கு மாறாக நேர அட்டவனைகள் வழங்கி குறிப்பிட்ட காலங்களில் இவற்றைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மேலும் குழந்தைகள் தமது இழப்பினால் துக்கப்படுவதோ சோகமாக இருப்பதோ வெட்கமான ஒரு விடயமல்ல என்பதை அறிந்து புரிந்துகொள்வது அவசியமானதாகும். அதேவேளை குழந்தைகள் இவ்வாறான சாதாரண நிலைக்கு மீண்டும் வருவதற்கு பெற்றோர் மற்றும் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் அவசியமானவை.
ஒரு குழந்தை தனக்கு ஏற்பட்ட இழப்பைக் கடந்து மீளவும் சதாரண வாழ்வுக்கு வருவதற்கும் தனது வாழ்வை வாழ்வதற்கும் சிலவற்றை ஏற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை அவரை பராமரிப்பவர்கள் ஆதரிப்பர்கள் செய்யவேண்டும். உதாரணமாக மரணம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. இனிமேல் இறந்தவர் திரும்பி வரமாட்டார். இதுவே யதார்த்தம் என்ற உண்மை மிகவும் கவனமாக அவதானமாக உணரச் செய்யப்படவேண்டும். குழந்தைகள் தாங்கள் அறிந்தவற்றுடன் இலகுவாக தம்மை இணைத்துக்கொள்வார்கள். ஆனால் அறியாதவற்றுடன் தம்மை இணைத்துக் கொள்ளமாட்டார்கள். மரணம் போன்ற சில விடயங்களை முழுமையாக புரிந்து விளங்கிக் கொள்வதற்கு குழந்தைகளுக்கு கஸ்டமாக இருக்கும். இதற்கு அவர்களுக்கு வயது போதாமல் இருக்கலாம். ஆனால் இழப்பை உணர்வதற்கு கஸ்டப்படமாட்டார்கள். இதை உணர்வதற்கு வயது ஒரு தடையாகவும் இருக்காது. அதேவேளை குழந்தையின் அன்புக்குரியவர்  இறந்து விட்ட செய்தியை குழந்தையுடன் மிகவும் நெருக்கமானவர் சொல்வதே பொருத்தமானது. இவ்வாறான செய்தியைக் கூறும் பொழுது கூறுபவரதும் குழந்தையினதும் கண்கள் சந்திப்பதையும் குரலின் ஒலியோ, உடல் மொழயோ குழந்தையைக் கஸ்டப்படுத்தாது ஆதரவான நிலையிலும் பாதுகாப்பானதாக உணரக்கூடியவகையிலும் இருக்குமாறும் பார்த்துக்கொள்வது அவசியமானது. இதற்கு மாறாக குழந்தை நித்திரை கொள்ளும் பொழுதோ அல்லது நடக்கும் பொழுதோ இவ்வாறான செய்திகளைக் கவனமின்றி அக்கறையற்றுக் கூறுவது குழந்தைகள் குழப்பதில் ஆழ்த்தும்.இந்தக் குழப்பத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பது கஸ்டமானதாகும்.
குழந்தைகளைப் போலவே அவர்களது கேள்விகளும் தனித்துவமானவை. “மரணம் என்றால் என்ன” என்ற ஒரு கேள்வி மூலமே ஒரு குழந்தை பெரியவர்களுக்கு பல விடயங்களைக் கற்பிக்கலாம். இதற்குப் பெரியவர்கள் நேர்மையான சாத்தியமான விரிவான பதில்களை அளிப்பது நல்லது. இறந்த மனிதரின் உடல் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. அந்த உடல் முன்பு இயங்கியதுபோல் இனியும் இயங்காது. அந்த உடலால் இனிப் பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ, அசையவோ, மூச்சு விடவோ முடியாது. இந்த உடல் இனி குளிரானதாகவோ, சூடானதாகவோ,துக்கமானதாகவோ,ஆனந்தமானதாகவோ இருக்காது. இனி எந்தவிதமான உணர்வுகளையும் உணராது. இவ்வாறான விளக்கம் இறந்தவர் இனி வரமாட்டார் என்பதை குழந்தைக்கு புரியவைக்கும்.
இதன் பின் குழந்தையானது இறப்பினால் தனக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணங்களாக உணர்வுகளாக வெளிப்படுத்துவதற்கு  ஊக்குவிக்கப்பட வேண்டும். இது ஒரு சிக்கலான விடயமே. அதேவேளை குழந்தையின் மீது இருக்கின்ற அக்கறையினாலும் நல்ல நோக்கத்தினாலும் தவறான தகவல்களை வழங்கக் கூடாது. இது குழந்தையின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும்; பாதிக்கலாம். மேலும் பெரியவர்கள் குறிப்பிட்ட இழப்பினால் தமக்கு ஏற்பட்ட வலியை மறைத்துப் பாதுகாப்பதற்காக குழந்தையின் வலியையும் பாதுகாக்க முற்படுவார்கள். இது இருவருக்கும் பயனற்றது மட்டுமல்ல பாதிப்பை தருகின்ற ஒரு முயற்சியாகும். குழந்தைகளின் கேள்விகளுக்கு பொருத்தமான சாத்தியமான பதில்களை அளிக்கும் பொழுது அவர்கள் தமக்கு ஏற்பட்ட இழப்பை புரிந்து கொண்டு மீண்டும் தம்மை முழுமைப்படுத்தும் பயணத்தை தொடர்வார்கள். இதற்குப் பெரியவர்கள் பல தளங்களில் கற்று தம்மை வளரவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அப்பொழுதுதான் இவ்வாறான குழந்தைகளுக்கு சரியான ஆதரவாளர்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயற்படமுடியும்.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களும் வழிமுறைகளும் சதாரணமாக ஒரு குழந்தை மரணத்தை எதிர்கொள்ளும் பொழுதும்  இதானல் ஏற்படும் இழப்பின் வேதனையை அனுபவிக்கும் பொழுதும் உதவக்கூடியன. சாதாரண சூழலில் வாழ்கின்ற குழந்தைகளைக் கவனிப்பதற்கே இந்தளவுக்கு நாம் தேடவும் கற்கவும் அறியவும் வேண்டியிருக்கின்றது. அப்படியெனின் வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளாலும் போர்களினாலும் ஏற்பட்டதும் மற்றும் இன்றைய இராணுவ சூழலில் நடைபெறுகின்றதுமான மரணங்களையும் அதனால் ஏற்பட்ட இழப்புக்களையும் அனுபவித்த குழந்தைகளைக் காப்பாற்றவும் ஆதரிக்கவும் வழிகாட்டவும் நாம் எவ்வளவு கற்க வேண்டி உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது கஸ்டமானதல்ல.

—————————————————-
பி.கு. இந்தக் கட்டுரைக்கான சகல தகவல்கள் பின்வரும் நூல்களில் இருந்து பெறப்பட்டவை. இவை மேற்குலக குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டவை. மேற்குலக விடயங்களை நாம் பரிமாறும் பொழுது அதனைப் பொதுமைப்படுத்துவதில் அவதானமாக இருக்கவேண்டும். குறிப்பாக குழந்தைகளின் பிரச்சனைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்குல ஆய்வாளர்களால் மேற்குலகில் வசிக்கின்ற குழந்தைகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பொதுவானதாக கட்டமைக்கப்படுகின்றது. ஆனால் உலக சனத்தொகையில் மேற்குலகின் குழந்தைகள் இருபது வீதத்திற்கும் குறைவானவர்களே. மேலும் குறிப்பிட்ட கலாசார பொருளாதார சூழலில் வாழ்பவர்கள். மிகுதி என்பது வீதமானவர்களும் வெவ்வேறு கலாசார பொருளாதார சூழலில் வாழ்பவர்கள். இதன் அர்த்தம் இவ்வாறன ஆய்வுகளைப் புறக்கணிப்பதல்ல. மாறாக இவற்றின் உதவியுடன் நமது குழந்தைகளை மையப்படுத்திய ஆய்வுகளை மேற்கொள்வதே நமக்கான வழிவகைகளைக் கண்டுபிடிப்பதற்கான வழியாகும்.

நன்றி – ஏதுவரை 08

http://eathuvarai.net/?p=2618

உசாத்துணைகள்.

Wolfelt, A.D. (2004). A Child’s View of Grief. A guide for Parents, Teachers and Counselors.

Goldman, L. (2009). Great Answers to Difficult Questions about Death.

Deits, B. (2004). Life after Loss.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: