Posted by: மீராபாரதி | December 31, 2012

நிலம்… காணி… குடில் தேடி…. நாடோடி வாழ்வு…. அப்பாவின் நினைவாக… பகுதி இரண்டு

1983 இனக் கலவரம் எனக் கூறப்படுகின்றது உண்மையிலையே சிங்கள அரசாங்கத்தின் ஆதரவுடனான இனவாதிகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைகள் எனக் கூறுவதே பொருத்தமானது. இந்த வன்முறைகளின் அடையாளங்களாகவும் சாட்சிகளாகவும் முழுமையாகவும் அறைகுறையாகவும் எரிந்த கடைகள் நாம் நடந்து சென்ற கொழும்பு வீதிகளில் காணப்பட்டன. நம்மைக் கடந்து சென்ற தமிழர்கள் ஒருவித பயத்துடன் திரிந்ததுபோல தென்பட்டது. அப்பா இங்கிருந்து யாழ்ப்பாணம் போவதற்கான வழிகளை தேடினார். கப்பல் ஒன்று போவதாகவும் றோயல் கல்லுரியில் சென்று பதியும்படியும் கூறினார்கள். ஆனால் அதற்கான பதிவுகள் ஏற்கனவே முடிந்து விட்டது. யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக நிறைய தமிழர்கள் மேலும் இருந்ததால் மூன்று புகையிரதங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்த மூன்று புகையிரதங்களும் தமிழர்கள் நிறைந்திருக்க சிங்களப் பொலிஸின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக புகையிரதங்கள் பயணத்தை ஆரம்பித்தன.

நாமும் நமக்கு இனிப் பயமில்லாதது மட்டுமல்ல வாழ்வதற்கு சொந்தமாக ஒரு துண்டு காணியும் பாதுகாப்பான வாழ்வும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணித்தோம்.  இருப்பினும் வவுனியா வரை அச்சத்துடன் அமைதியாகத்தான் பயணித்தோம். ஏனெனில் அந்தளவிற்கு அரசாங்க பாதுகாப்பில் நம்பிக்கை இருந்தது. வவுனியாவிற்கு வந்தவுடன் பயணிகளிடமிருந்த மரணப் பயம் பறந்து செல்ல வாழ்வின் துடிப்பு மீண்டும் ஏற்பட்டது. மனிதர்கள் மனம் விட்டு ஆனந்தமாக சத்தம் போட்டுக் கதைக்க ஆரம்பித்தார்கள். தாம் எதிர்கொண்ட கஸ்டங்களை இழப்புகளை சித்திரவதைகளை எல்லாம் விபரித்தார்கள்…

யாழ் புகையிரத நிலையத்தை மூன்று புகையிரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தடைந்தன. அந்த இடம் மனித மனங்களுக்குள் கவலை இருந்தபோதும் ஏதோ திருவிழா நடப்பதுபோல் கலகலப்பாகவும் இருந்தது… பலரிடமிருந்து நிம்மதி பெரு மூச்சு வெளிப்பட்டது… அப்பா ஒருவரைக் காட்டி இவர்தான் யாழ். அரசாங்க அதிபர் தேவநேசன் நேசையா என்றார். அவர் புகையிரத நிலைய முன்வெளியில் இருந்து துடிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார். சிங்கள தேசத்திலிருந்து அகதிகளாக வந்த நம்மை யாழ்ப்பாணம் அன்புடன் வரவேற்றது. உச்சி வெய்யிலில் ஒளிர்த்துக் கொண்டிருந்த சூரியனைப்போல பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருப்பதாக தெரிந்தது. வீடு உள்ளவர்கள் அவர்கள் இடங்களுக்கு செல்ல ஒழுங்குகள் செய்யப்பட்டன. வீடற்றவர்கள் பல்வேறு அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். நாம் கைதடியிலுள்ள புலனற்றவர்கள் பாடசாலையில் இயங்கிய அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டோம். அங்கிருந்த பெரிய மண்டபத்தின் ஒரு முலையில் போய் குந்தியிருந்தோம். முதலில் வந்தவர்கள் மூலைகள் மற்றும் சுவர் ஓரமாக இருந்த இடங்களைப் பிடிக்க பிந்திவந்தவர்கள் மண்டபத்தின் நடுவில் இருக்க ஆரம்பித்தார்கள். கைதடி அறவழிப்போராட்டக்குழு நண்பர்களும் மேலும் சில நிறுவனங்களும் அகதிகளுக்கு தேவையானதைப் பூர்த்திசெய்ய ஆர்வமாகவும் துடிப்பாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இரண்டு மூன்று நாட்களின் பின்பு தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்கள் மட்டும் இன்னுமொரு இடத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் என கூறப்பட்டது. அதில் நாங்களும் இருந்தோம். எம்மை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் கடற்கரை ஒன்றை நோக்கி சென்று கொண்டிருந்தது. மாலை வேளையில் வீசிய கடற்காற்று மனதுக்கு இதமாக இருந்தது. கடற்கரையை ஒரமாக கட்டிடங்கள் பல இருந்த இடத்தில் வாகனம் நின்றது. இது பழைய குருநகர் இராணுவ முகாம் எனக் கூறப்பட்டது. வாசலின் இரு மருங்கிலும் இரண்டு கட்டிடங்கள் இருந்தன. நடுவில் பெரும் வெளி இருக்க சுற்றிவர கட்டிடங்கள் இருந்தன. கடற்கரை ஓரமாக இருந்த கட்டிடம் பழைய சிறைசாலை. இங்கு நடைபெறும் சித்திரவதைகளால் உருவாகும் சத்தம் கடலலை சத்தத்திற்கு கரைந்து போயவதற்காகத்தான் இந்த இடத்தில் சிறைச்சாலையை கட்டியிருக்கின்றார்களாக்கும். இதற்கு எதிர்புறமாக வெளிக்கு அப்பால் பெரும் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இருந்தது. இன்னுமொரு புறம் நான்கு கட்டிடங்கள் வரிசையாக இருந்தன.

இக் கட்டிடங்களில் (புளொக்கில்) ஒரு விராந்தையும் நான்கு அறைகளும் மற்றும் சமையலறை என சகல வசதிகளும் கொண்ட தனித்தனி வீடுகள். முதலில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு அறைகள் என பகிர்ந்தளிக்கப்பட்டன. காலோட்டத்தில் இவை நமக்குரியவையாகும் எனவும் கதைக்கப்பட்டது. ஆனால் காலோட்டத்தில் ஒரு அறைக்கு ஒரு குடும்பம் என்றாகி பின் ஒரு வீட்டில் ஐந்து குடும்பங்கள்  இருக்க வெளி எங்கும் கூடாராங்கள் அமைக்கப்பட்டு பல அகதிகள் குடியிருக்க நாள்தொரும் வந்துகொண்டே இருந்தார்கள். சிறைச்சாலை இருந்த கட்டிடம் தனிநபரான ஆண்களுக்கு ஓதுக்கப்பட்டது.

இந்த பழைய இராணுவ முகாமிற்கு பக்கத்தில் இருந்த தொடர் மாடிக்கட்டிடத்தில் சிறிலாங்கா இராணுவம் நிலைகொண்டிருந்தது. இந்த அகதிகள் முகாமுக்கு நாம் வந்த ஆரம்பத்தில் வீதியின் மறுபுறம் இருந்த யாழ் பீச் இன் உரிமையாளர் சிலுவை (அங்கில்) நம்மை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் உபசரித்தார். முதல் இரண்டு இரவுகள் அவரது ஹோட்டலில்தான் எங்களு சாப்பாடு தந்தார்கள். இதன் பின் குருநகரைச் சேர்ந்த கள்ளக்கடத்தல் எனப்படும் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் அரசாங்க அனுமதியற்ற கடற்போக்குவரத்தினுடாக வியாபாரம் செய்கின்ற அன்டன் தலைமையில் நாள் தொரும் விதம் விதமான சாப்பாடுகள் தந்தார்கள். புட்டுடன் மீன் பொறியல் மீன் குழம்பு…. நீண்ட நாட்களுக்குப்பின் ருசியான சாப்பாடுகள் வயிறு நிறைய சாப்பிட்டோம். இதன்பின் யாழ் லயன்ஸ் கழகம் குருநகர் அகதிகள் முகாமை பொறுப்பெடுத்து நடாத்தியது.

இங்கு ஒருவருட காலம் இருந்தபின் இங்கிருந்து போகவேண்டிய சுழல் ஏற்பட்டது. எங்குபோவது என்று தெரியவில்லை. அப்பாவுக்கு தான் பிறந்து வாழ்ந்த கரவெட்டிக்கு போகும் நோக்கமோ விருப்பமோ இருக்கவில்லை. போனாலும் அங்கு நாம் வாழ்வதற்கு நிலமோ காணியோ வீடோ இருக்கவில்லை. ஆகவே தற்காலிகமாக யாழில் நல்ல நிலையிலிருந்த சொந்தக்கார்ர் வீட்டில் தற்காலிகமாக தங்குவதற்கு சென்றோம். அங்கு நாம் வரவேற்கப்படவில்லை. ஆகவே அப்பா யார் யாருடனோ தொடர்புகொண்டார். கடைசியாக அண்டனின் ஓட்டியாக இருந்தவரின் குருநகர் வீட்டின் ஒரு அறையில் அவர்களுடன் தங்கினோம். சில காலம் குருநகரை அலைந்து திரிந்தேன். இக் காலங்களில் தொடர்மாடிக் கட்டிடத்தில் இருந்து இராணுவம் வெளியேறியிருந்தது. ஒரு நாள்  இந்த வீட்டிலிருந்து புதிய இடத்தை நோக்கி பயணமானோம்.

நாம் அகதிகளாக வந்த பின் அகதி சமான்கள் நிறைய கிடைத்ததால் நமது உடைமைப் பெட்டிகள் சிறிது கூடின. இவற்றுடன் புதியதொரு கிராமத்தில் வசிப்பதற்காக சென்றோம். நமது வாகனம் செம்மணி கடந்து யாழ் நல்வரவினுடாக புகுந்து நாவற்குழி சந்தியில் கைதடி பக்கம் போகாது கேரத்தீவு வீதிக்கு திரும்பியது. நாவற்குழி சங்கக்கடை அருகிலிருந்த ஒழுங்கையால் திரும்பி சுப்பையா மாஸ்டர் வீட்டு வாசலில் நின்றது. இவரும் இவரது குடும்பமும் நம்மை அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்று உபசரித்தார்கள். எங்களுக்கு ஒரு துண்டு காணி கிடைத்துள்ளதாக அப்பாவும் மாஸ்டரும் கதைத்தன் மூலம் அறியக்கிடைத்தது. மாஸ்டரின் பக்கத்துக் காணியில் குடியிருக்கின்ற சொக்கநாதரின் அறிமுகமும் கிடைத்தது. இவரும் இவரது துணைவியாரும் சிறு குடிசையில் வாழ்கின்றனர். குழந்தைகள் இல்லை. மாஸ்டரும் இவரும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் துடிப்புடனும் நம்பிக்கையுடனும் இருப்பார்கள். எங்கள் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என நிறைய நம்பிக்கையை தந்தவர்கள். இவ்வளவு வறுமையிலும் நாம் தொடர்ந்தும் கல்வி கற்பதை நிறுத்தவில்லை என்பதால் எம் மீது மதிப்பும் அக்கறையும் கொண்டிருந்தனர்.

சித்தாத்தன் 004சுப்பையா மாஸ்டரின் வீட்டிலிருந்து நமது மூட்டை முடிச்சு சமான்களை எடுத்துக்கொண்டு மீண்டும் கேரத்தீவு வீதியிலிருந்த தச்சன்தோப்பு கிராமத்தை நோக்கி சென்றோம். இக் கிராமத்தில் பெரும்பாலும் சாதியால் அடக்கப்பட்டு ஓதுக்கப்பட்ட மனிதர்களே வாழ்கின்றனர். நமது வாகனம் பிரதான வீதியிலிருந்து இந்தக் கிராமத்தை ஊடறுத்து செல்கின்ற ஒழுங்கையினுடாக திரும்பி இக் கிராமத்தையும் அதன் பின் வயல் வெளிகளையும் கடந்து சென்றது. இறுதியாக கடற்கரைக்கு அருகாமையில் பெரும் ஆழமரமும் அம்மன் கோயிலும் இருக்கின்ற மணல் நிறைந்த பிரதேசத்தில் நின்றது….

சித்தாத்தன் 006அம்மன் கோயில், இக் கோயிலுக்கு பூசை செய்கின்ற ஐயரின் வீடு, இந்த வீட்டுக்கு அருகில் தென்னோலையால் வேயப்பட்ட முழுமையாக முடிக்கப்படாத சிறிய கல்வீடு என்பன நம் கண்களில் பட்டன. இதைவிட நம்மைச் சுற்றி தென்னை மற்றும் பனை மரங்கள் மட்டுமே இருந்தன. நாம் வாகனத்தை விட்டு இறங்கி கால்கள் மணலில் புதைய இந்த சிறிய கல் வீட்டை நோக்கிச் சென்றோம். வீட்டின் நிலம் மணலாகவே இருந்தது. ஒரு அறையும் அருகில் சமையலறையும் இருந்தது. மின்சாரம் இல்லை… இரவில் விளக்கு வெளிச்சம் தந்தது… மணலை நிலமாக கொண்ட தளத்தில் பாயை விரித்து படுத்தோம். கடற்கரை அருகிலிருந்து கத்தாலைப் பற்றைகள் நம்  காலைக் கடன்களை கழிக்கும் கூடமாக இருந்தது. கடற்கரை காற்றும் நமக்கு துணையாக இருந்தது…

அடுத்த நாள் காலை நம்மை பார்க்க வந்த சுப்பையா மாஸ்டரும் சொக்கநாதரும், நாம் தற்காலிகமாக இருந்த காணிக்கு அருகிலிருந்த ஒரு காணிக்கு நம்மை அழைத்துச் சென்றனர். அது பனை மரங்கள் மற்றும் பற்றைக் காடுகளாக நிறைந்து இருந்தது. இந்த காணியில் தான் உங்களுக்கான கொட்டில் கட்டப்போகின்றோம் என்றார். நாளை நல்ல நாள் என்றார் சொக்கநாதர். காலையில் வந்து பால் காச்சி முதல் நிலையை நடுவோம் என்றார். அடுத்த நாள் காலை அவர்கள் வந்தார்கள். சகல சடங்குகளும் செய்து கொட்டில் ஒன்றுக்கான முதல் மர நிலையை நாட்டினார்கள். நாட்கள் கடந்தன… அந்த ஒரு மர நிலையைத் தாண்டி கொட்டில் முன்னேறவில்லை…

பக்கத்துவிட்டு ஐயருக்கு நாம் அருகில் இருப்பதிலும் கோயில் கிணற்றில் தண்ணி எடுப்பதிலும் விருப்பமில்லை… அப்பா தன் வேலை தேடியும் நாம் பாடசாலைக்கும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவர மாலையாகிவிடும். அதுவரை அம்மா தனிய இருப்பதற்கு பயந்தார்…. எது நடந்தாலும் அவசரத்திற்கு கூப்பிடுவதற்கு அருகில் ஒருவரும் இல்லை… தச்சன்தோப்பு கிராமத்தில் நண்பர்கள் இருந்தார்கள்… ஆனால் அவர்கள் அவசரத்திற்கு கூப்பிடும் தூரத்தில் இருக்கவில்லை… அருகில் ஐயரின் குடும்பம் மட்டுமே இருந்தது… ஆனால் அவர்கள் தமது தந்தையான ஐயரை மீறி நம்முடன் கதைக்கவோ நமக்கு உதவவோ மாட்டார்கள்…  ஆகவே இந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை…. நாவற்குழி பாடசாலைக்கு முன்னால் இருந்த தனது வீட்டில் தற்காலிகமாக நம்மை தங்க வைக்க சுப்பையா மாஸ்டர் முன்வந்தார்…. இவரும் சொக்கநாதரும் எந்த நிலமையிலும் நமக்கு எப்பொழுதும் நம்பிக்கை தருபவர்களாக இருந்தார்கள்….

Jaffna 2012-navatkuli 017இப்பொழுது எங்களுக்கு புதிய ஒரு இடத்தில் நிலத்தில் ஒரு துண்டுக் காணி வழங்கப்பட்டது… இது நாவற்குழியிலிருந்த சித்திவினாயகர் வீதியினுடாக சென்று அவ் வீதியின் இருந்த கோயிலையும் குளத்தையும் வயல்களையும் வீடுகளையும் கடந்து கடற்கரையை நோக்கி செல்ல வேண்டும்…இந்த வீதி கடற்கரையில் இருக்கின்ற இறந்த மனிதர்களை எரிக்கின்ற சுடலையில் முடிவடைகின்றது…. சுடலைக்கு செல்வதற்கு முன்பாக பற்றைக் காடாகவும் ஆங்காங்கே தென்னை மற்றும் பனை மரங்களை கொண்டிருந்த கோயில் நிலத்தில் நமக்கான ஒரு துண்டுக் காணி ஒதுக்கப்பட்டது…. இந்தக் காணியில் நமக்கான கொட்டிலை கட்டும் வரை அங்கிருந்த கட்டிமுடிக்கப்படாத பழைய கல் வீடு  ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டோம்…

Jaffna 2012-navatkuli 006நாம் இங்கு குடியேறிய சிறிது காலத்தில் இலங்கையின் பல இடங்களிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு இந்த நிலங்களில் காணிகள் வழங்கப்பட்டன… ஒவ்வொருவரும் தமது வசதிகளுக்கும் உதவிகளுக்கும் ஏற்ப தமக்கான குடிலைக் கட்டினார்கள்…. நாமும் மீண்டும் சுப்பையா மாஸ்டர் மற்றும் சொக்கநாதரின் உதவியுடனும் முதல் நிலையை நாட்டி விரைவில் நமக்கான கொட்டிலை கட்டி குடியேறினோம்… இந்த நிலத்தை நமது கனவு சோலையாக மாற்ற விரும்பினோம்… சித்திவினாயகர் கோயிலடி நண்பர்களும் நமக்கு உதவினார்கள்… ஆனாலும் நமது வறுமை உயரந்து சென்று கொண்டே இருந்தது…. நமது கொட்டிலுக்கு அருகில் சீலனின் (சார்ள்ஸ் அன்டனியின்) அக்காவும் அவரது குழந்தைகளும் குடியேறினார்கள்…. இயக்கம் அவர்களைப் பராமறித்தது…. நாம் முதலில் குடியிருந்த பழைய கட்டிடத்தை இன்னுமொரு இயக்கம் தனது பாவனைக்காக எடுத்திருந்தது….. இந்த இயக்கத்துடன் சித்திவினாயகர் கோயிலடி நண்பர்களும் நானும் இணைந்து சில காலம் பணியாற்றினோம்…. இதுவே நமது முதல் இயக்கம்… இது தொடர்பான விரிவான பதிவை விரைவில் எழுதுகின்றேன்…

Jaffna 2012-navatkuli 019அப்பாவுக்கு நீண்ட காலத்திற்கு பின்பு ஒரு இயக்கத்தில் வேலை கிடைத்தது… இதனால் அவரது வசதிக்காகவும் நான் உயர்தர பரிட்சைக்குப் படிப்பதற்காகவும் யாழ்ப்பாணத்தில் மார்ட்டின் ரோட்டுக்கு அருகிலிருந்த பேக்கரி லேனில் இருந்த மாடி வீட்டில் மேல் மாடியில் குடியேறினோம்… 1980ம் ஆண்டிற்குப் பின் முதன்முறையாக மின்சாரமும் வசதிகளும் நிறைந்த ஒரு வீட்டில் வாழ்ந்தோம்… ஆனால் இந்த வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை… அப்பா வேலை செய்த இயக்கம் இன்னுமொரு இயக்கத்தால் தடைசெய்யப்பட்டது… அப்பா தன்னுடன் செயற்பட்ட சில தோழர்களையும் அழைத்துக் கொண்டு போய் சரணடைந்த பின் தான் தடை செய்த இயக்கத்திடமே வேலைக்கு சேர்ந்தார்… இந்திய இராணுவம் வந்திருந்தது… நிலமைகள் மாறின… நான் உயர்தரம் படித்து முடித்திருந்தேன்… பரிட்சை முடிந்த அடுத்த நாள் தொடர்ந்தும் அரசியிலில் ஈடுபடுவதற்காக ஒரு இயக்கத்துடன் சேர்ந்தேன்…  அதேவேளை என்ன நடந்ததோ தெரியாது அப்பா யாழ்ப்பாணத்திலிருந்த வீட்டை விட்டு மாறும் முடிவை எடுத்தார்…..Jaffna 2012-navatkuli 040

இப்பொழுது நாம் நாவற்குழி சந்தியிலிருந்த ஒரு பழைய கல் வீட்டில் குடியேறினோம்… இது பார்ப்பதற்கு பாழடைந்த வீடு போல் இருந்தது…. இல்லை பாழடைந்த வீடுதான்… ஆனாலும் பல அறைகள் இருந்தன… மின்சாரம் இருந்தது… கிணறு இருந்தது…. ஆனால் அயல் வீடுகள் இல்லை… நாம் அநாதரவாக இருந்தோம்… இந்திய இராணுவம் தமிழ் மக்கள் மீது போர் தொடுத்தது… நாம் வசித்த வீட்டின் உரிமையாளரான ஒரு பொறியியளாலர். நாம் வாழ்ந்த வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் கைதடி நோக்கி செல்லும் வழியில் அவரது இன்னுமொரு சொந்த வீடு இருந்தது. அந்த வீட்டில் வைத்து இந்திய இராணுவம் அவரைச் சுட்டுக்கொண்டார்கள்… காரணம் ஏதுவும் இல்லாமல்…

Jaffna 2012-navatkuli 048அதேவேளை இன்னுமொரு இராணுவக் குழு நம்மைப் பாரத்து கவலைப்பட்டது… உண்ண உணவு கொடுத்தது… நம்மை இந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடம் தேடி வெளியேறும்படி பணித்தது… இதனால் ஒரு நாள் நாம் கண்டி வீதியைக் கடந்து கடற்கரைப் பக்கமாக இருந்த பள்ளத்துக் காணியை நோக்கிச் சென்றோம்.. இங்கு குடியிருந்தவர்கள் சாதியால் அடக்கி ஓதுக்கப்பட்ட மனிதர்கள்… இவர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்த சிறு கொட்டில் ஒன்றில் ஒரு நாள் இருந்த பின் அங்கு இருப்பது பாதுகாப்பனதல்ல என்பதால் மீண்டும் கண்டி வீதியைக் கடந்து சித்திவினாயகர் கோயிலடியை நோக்கி செல்ல முடிவெடுத்தோம்… காலை வேலை கண்டி வீதியைக் கடக்கும் பொழுது மரணத்தையும் கடந்தே சென்றோம்…. ஆம் இராணுவத்திற்கும் இயக்கத்திற்கு சண்டை நடந்து கொண்டிருந்தது… குண்டுகளும் சன்னங்களும் தாறுமாறாக பறந்து கொண்டிருந்தன… இதற்குள் தப்பித்து பழைய நாவற்குழி புகையிரத நிலையத்திற்கூடாக நூழைந்து மாதிரிக் கிராமத்திற்கூடாக நடந்து சித்திவினையாகர் கோயிலடிக்கு சென்றோம்……

பள்ளத்துக் காணியில் இருக்க முடியாது என்பதால் ஏதோ ஒரு நம்பிக்கையில் அங்கிருந்து வெளிக்கிட்டு வந்துவிட்டோம்… ஆனால் இனி எங்கே இருப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டது… நாம் முன்பிருந்த கோயில் காணியிலிருந்த கொட்டிலும் இல்லாமல் போய்விட்டது… ஆனால் சொக்கலிங்கம் மாஸ்டர் தனது வீட்டுக்கு அருகில் தாம் பயன்படுத்தாது வைத்திருந்த தனது சிறு வீட்டை தற்காலிகமாக நாம் வாழ்வதற்கு தந்தார்… இங்கும் நீண்ட நாட்கள் இருக்க முடியவில்லை… இந்திய இராணுவம் நாவற்குழி சந்தியில் முகாமிட்டது… அங்கிருந்து கேரத்தீவு வீதி வழியாக அங்குள்ள கிராமங்களுக்கு வரப்போகின்றது என்ற பயத்தின் காரணமாக மக்கள் அணைவரும் வீடுகளை விட்டு வெளியேறினர்… பலர் நாவற்குழி மாகாவித்தியாலயத்தில் தஞ்சமடைந்தனர்…

இறுதியாக இந்திய இராணுவம் பள்ளிக்கூடத்திற்கு வர… அப்பா இராணுவத்திற்கும் சனங்களுக்கும் இடையிலான தொடர்பாளராக மாறினார்… இது நாவற்குழி புலிகளின் பொறுப்பாளர் அருளுக்கு பிடிக்கவில்லை… அதனால் அவர் அப்பாவிற்கு மரண தண்டனை கொடுப்பதற்காக அலைந்தார்… இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அருளின் நடமாட்டம் குறைந்த பகுதியான நாவற்குழி சந்தியிலிருந்த பள்ளக் காணியில் வாழ்வதற்காக மீண்டும் சென்றோம்… அங்கு நாம் வாழ்வதற்கு ஒரு குடும்பம் தாம் பயன்படுத்தாத ஒரு கொட்டிலை தந்தது… ஆனால் இங்கும் அப்பாவால் நீண்ட காலம் வாழ முடியவில்லை… ஏனெனில் ஒரு நாள் அப்பாவை சந்திப்பதற்காக அருள் அழைத்திருந்தார்… அவரை சந்திப்பது தனக்கு ஆபத்தானது என்பதை அறிந்த அப்பா இங்கிருந்து ஏதோ ஒரு வழியாக தப்பித்து கொழும்புக்கு சென்றார்….

இதேவேளை தமக்கு நாம் வாழ்ந்த கொட்டில் தேவை என்றார்கள் அதன் உரிமையாளர்கள்…. ஆனால் பதிலாக சிறு கொட்டில் ஒன்றை அமைத்துத் தருவதாக கூறி…. அவர்கள் வாழ்ந்த காணியில் நடுவில் மட்டும் ஐந்தடி நீளம் அகலம் உயரம் கொண்ட மிகச் சிறிய கொட்டிலை அமைத்துத் தந்தார்கள்… இதற்குள் தான் சமையலும்… ஒரு முறை அப்பா கொழும்பிலிருந்து வந்தபோது இந்தச் சிறிய கொட்டிலுக்கும் நாம் ஐந்துபேரும் சில நாட்கள் வாழ்ந்தோம்…. அப்பா மீண்டும் கொழும்பு பயணமானார்…  எனக்கு யாழ் பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கிடைத்தது… ஆகவே பல்கலைக்கழகத்திற்க்கு அருகில் ஒரு வீட்டைத் தேட ஆரம்பித்தேன்…

பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியில் இரு பக்கமும் ஒவ்வொரு கோயிலை கொண்ட ஒரு இடம் இருக்கின்றது… இந்தக் கோயில்களுக்கு முன்பாக ஆரம்பிகின்ற சிறிய வீதி முருகன் வீதி. இது பருத்துறை வீதியை சென்று சந்திக்கும்… இந்த வீதியில் ஓலையால் வேயப்பட்ட கல்லாலும் தகரங்களாலும் கட்டப்பட்ட இரண்டு அறைகளும் சமையலறையும் கொண்ட கொட்டில் போன்ற வீடு ஒன்று மின்சார வசதியுடன் குறைந்த வாடகைக்கு கிடைத்தது…. இந்த வீட்டின் பின்புறம் கந்தன் கருணை வீடு இருந்தது… இந்த வீட்டில் சில காலம் வாழ்ந்தோம்…

இப்பொழுது இந்திய இராணுவம் வெளியேற புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்…. இதேவேளை கொழும்புக்கு சென்ற அப்பா இன்னுமொரு இயக்கத்தில் இணைந்து தேர்தலில் நின்றார்… இதனால் நமது குடும்பம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இருப்பது பாதுகாப்பானதல்ல என உணர்ந்தோம்… ஆகவே மீண்டும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற தீர்மானித்தோம்… அம்மாவும் தங்கைகளும் 1990ம் ஆண்டு மேமாதம் கடைசியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற யாழ் தேவியில் பயணம் செய்தார்கள்…. இப்பொழுது பழைய இயக்க நண்பர்களுடன் நான் உறவாக இருந்தபோதும் அனைத்து இயக்க அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் ஒதுங்கியிருந்தேன்… எனது அரசியல் வேறு… ஆகவே எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை… மேலும் சில மாதங்கள் சில காரணங்களுக்காக தனிய யாழில் தங்கியிருந்தேன்… ஆனால் நானும் இறுதியாக யாழை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது…. இது பற்றிய விரிவான இன்னுமொரு பதிவை எழுதுகின்றேன்…

இப்பொழுது நமது குடும்பம் கல்கிசையில் ஒரு வீட்டில் தற்காலிகமாக தங்கியது…. நான் வந்த பின் களுபோவிலவில் ஒரு சிங்கள வீட்டில் சில காலம்… இதன் பின் வெள்ளவத்தை ராஜசிங்க வீதியில் கூட்டுக் குடும்பம் என மூன்று நான்கு குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்தோம்… மேலும் யாழிலிருந்து அடிக்கடி வந்துபோகும் உறவினர்களும் கூட இருந்தார்கள்… இதன் பின் டபுல்யுஏ சில்வா மாவத்தையில் இருந்த ஒரு வீட்டுக்கு மாறினோம்…. இறுதியாக தெகிவளை ரொபோட் வீதியில் ஒரு வீட்டில் இருந்தோம்… இங்குதான் முதன் முதலாக எனக்கும் தங்கைக்கும் அம்மா அப்பாவிற்கும் தனித் தனி அறைகள் கிடைத்தன… இருப்பினும் வீட்டில் எப்பொழுதும் நண்பர்கள் உறவினர்கள் என மனிதர்கள் நிறைந்து இருந்தார்கள்… இது மட்டுமல்ல நமது வாழ்வில் மூன்று நேரமும் சாப்பிடுவதற்கு உணவு கிடைத்த மூன்று வருடங்கள் இவை… ஆனால் அப்பாவால் இறுதிவரை தனது குடும்பத்திற்காக தான் பிறந்த நிலத்தில் ஒரு துண்டு காணி வாங்கி கல் வீடு…. மட்டும் இல்லை…. ஒரு கொட்டில் கூட கட்ட முடியவில்லை…

1970ம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டுவரை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் நிரந்தரமான வீடு இல்லாது அலைந்து திரிந்து வாழ்ந்தோம்… பொது வாழ்வில் மட்டுமல்ல குடும்ப வாழ்விலும் தோற்று போய்விட்டதைப் பொறுக்க முடியாமலோ என்னவோ… இறுதியாக தனது குடும்பத்தை சொந்த நாட்டை விட்டு புலம் பெயர செய்தார்… இதற்கு அவர் கொடுத்த விலை அவரது மரணம்….

இன்று முக்கியமான நாள்…. http://tinyurl.com/d4axf2p

அப்பாவின் இறந்த தின (31ஃ12…) நினைவாக இந்தப் பதிவு.

மீராபாரதி

31.12.2012

Advertisements

Responses

  1. […] (இது ொடர்பான இரண்டு பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்) இவ்வாறான வாழ்வுக்கு […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: