Posted by: மீராபாரதி | December 30, 2012

நிலம்… காணி… குடில் தேடி…. நாடோடி வாழ்வு…. அப்பாவின் நினைவாக… பகுதி ஒன்று

நிலம்… காணி… குடில் தேடி….

நாடோடி வாழ்வு…. அப்பாவின் நினைவாக… பகுதி ஒன்று

புலம் பெயர்ந்த மற்றும் இடம் பெயர்ந்த நண்பர்கள் பலர் போர் முடிவுற்றதாக கூறிய பின் தாம் வாழ்ந்த தமது முதாரையர்களின் பெற்றோர்களின் அல்லது தமது வீடுகளை பார்க்க சென்றார்கள்… பலருக்கு இது நமது நிலம்… காணி…வீடு… கொட்டில்  என சொல்வதற்கு ஏதோ ஒன்று இருந்தது…. ஆனால் நமக்கு அப்படி ஒன்று என்றும் இருக்கவில்லை… இருந்தவையும் காணாமல் கை நழுவிப் போய்விட்டன… காலத்திற்கு காலம் சில இடங்களில் வாழ்ந்த நினைவுகள் மட்டுமே நமக்கு சொந்தமாக இன்றும் இருக்கின்றன… இந்த நினைவுகளையே இங்கு பதிவு செய்கின்றேன்…

1970களில் இருந்து நாம் வாழ்ந்த இடங்களை என் நினைவுகளில் மீட்டுப் பார்க்கும் ஒரு முயற்சி இது… அப்பா தனது குடும்பத்திற்கு சிறு நிலத்தையாவது காணியையாவது வாங்கி அதில் ஒரு வீட்டை கட்டி… ஆகக் குறைந்தது ஒரு குடிசையையாவது கட்டலாம் என கனவு கண்டார். இரண்டு பெண் பிள்ளைகள் தனக்கு இருந்ததை பொறுப்புடன் உணர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தன் கனவை நிறைவேற்ற எங்கிருந்து எவ்வாறு இறுதிவரை பயணித்தார் என்பதே இப் பதிவு. அப்பா படுகொலை செய்யப்பட்டு 18 வருடங்கள் முடிந்ததன் நினைவாக இது.

நாம் பிறந்தது கரவெட்டி கிராமத்திலுள்ள அம்பம் ஆஸ்பத்திரியில். அப்பா பிறந்த இந்த ஊர் எங்களினதும் பிறந்த ஊரானது. ஆனால் இங்கு நாம் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. இங்கு வாழ்வதற்கு நிலமோ காணியோ வீடோ எங்களுக்கு எப்பொழுதும் இருந்ததில்லை… கடந்த 45 வருடங்களில் கைவிரல்களால் எண்ணக்கூடிய அளவிற்கே இந்த ஊருக்கு சென்றிருக்கின்றோம்…. வறுமை வாட்டிய போதும்… பசி வயிற்றைப் பிடிங்கிய போதும்… தங்குதற்கு கூரை ஒன்று கிடைக்காதபோதும்… அப்பா கரவெட்டிக்கு மீண்டும் போய் வாழுகின்ற முடிவை ஒருபோதும் எடுத்ததில்லை… இதற்கான காரணம் அறிய முடியாது அது கேள்வியாகவே இருக்கின்றது…

father திருகோணமலை 1970ம் ஆண்டு ஆரம்பங்களில் திருகோணமலையில் வாழ்ந்த வீடுதான் நாம் வாழ்ந்த முதல் வீடாக எனது நினைவுகளில் உள்ளது. அப்பொழுது எனக்கு மூன்று வயது. திருகோணமலை என உச்சரித்தாலே ஒரு உற்சாகம் வந்துவிடும். தனது பெயரைப்போல அவ்வளவு அழகான ஊர் அது. அந்த ஊரில் நெல்சன் தியேட்டர் என்ற சினிமா அரங்கம் உள்ளது. இதற்கு எதிரே வீதியின் மறுபக்கம் சூசைப்பிள்ளை கடை என்ற ஒன்று இருந்தது. அதை ஒட்டினால்போல கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம். நமது வீடு கட்சி அலுவலகத்துடன் ஒட்டிக்கொண்டு பின்னாலிருந்த ஒரு வீடு. அறை ஒன்று. முன்விராந்தை. இடையில் வெளி. வெளிக்கு அப்பால் குசினி (சமையலறை). இந்த அமைப்புகளுடன் அருகாமையில் சிங்கள குடும்பத்தின் வீடு ஒன்றும் இருந்தது. எனது வாழ்க்கையின் முதல் (சிங்கள) நண்பர் விபுலா இங்குதான் இருந்தான். இந்த வீடு பெரிய வளவு ஒன்றுக்குள் இருந்தது. இதற்குள் பல வீடுகள் இருந்தன.

இந்த வீட்டில் நடந்த இரண்டு விடயங்கள் நன்றாக ஞாபகத்தில் உள்ளன. அதில் ஒன்று நெல்சன் தியேட்டருக்கு பெரிய இரு கம்பிக் கதவுகள் இருந்தன. அதில் தொங்கிக்கொண்டு முன்னால் பின்னால் சென்று வாகனம் ஓட்டி விளையாடுவோம். அல்லது இந்தக் கதவுகளை முடிவிட்டு கதவின் கம்பிகளுக்குப் பின்னாலிருந்து அப்பா சிறையிலிருப்பதுபோல நடிப்போம். ஏனெனில் இந்த வீட்டிலிருக்கும் பொழுதுதான் அப்பா மூன்று தடவைகள் பிடிபட்டு நீண்ட நாட்கள் சிறையிலிருந்தார். அப்பா இல்லாத இந்த நாட்களில் ஒன்றில்தான் கடைசித் தங்கையும் பிறந்தார். இக் காலங்களில் அம்மா ஒரு இளம் மனைவி மற்றும் தாயாக இராணுவத்தாலும் மற்றும் பொருளாதார பிரச்சனைகளாலும் எதிர்நோக்கிய கஸ்டங்கள் பல.

அப்பா சிறையிலிருந்து வந்த சில காலங்களில் இந்த வீட்டிலிருந்து மட்டுமல்ல இந்தப் பிரதேத்திலிருந்து மலையகத்திற்கு இடம் பெயர்ந்தார்… அங்கு அட்டன் நகருக்கு அருகிலுள்ள டிக்கோயாவில் ஒரு மாடி வீட்டில் சில காலம் இருந்தோம். மேல் மாடிக்கு அருகில் பாலர் பாடசாலை ஒன்று இருந்தது. இங்குதான் முதன் முதலாக பாலர் வகுப்புக்குப் படிக்கச் சென்றேன். ஒரு நாள் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நான் பெரியவர்களின் விளையாட்டு விளையாடிதாக அம்மாவிற்கு கோல்மூட்டியதால் (புகார் செய்ய) வாங்கிய அடி இன்னும் மறக்கவில்லை. குழந்தையாக என்னிடமிருந்த வெளிப்படைதன்மைக்கும் பயமின்மைக்கும் கிடைத்த முதல் அடி. தடை இது வெனலாம். நான் எனக்குள் ஒடுங்க ஆரம்பித்up country & Batti 2012 141த காலம்…

இங்கிருந்து 1974ம் ஆண்டு அட்டன் சேர்க்கில ரோட்டின் முடிவில் மலை உச்சியில் 50 வீடுகள் வரிசையாக இருந்த பேலி வீடுகள் ஒன்றில் வாழ்ந்தோம். இந்த வீடுகளில் அடைக்கப்பட்ட முன் விராந்தை, நடு அறை பின் குசினி என்றிருந்த்து… இந்த வீட்டின் பின்பக்கம் பள்ளத்தாக்கு. அதில் அப்பா படி படி யாக பாத்திகட்டி கோவா, போஞ்சி, லீக்ஸ் என பல மரக்கறி வகைகளை நட்டு தோட்டம் போட்டார்…. இங்கிருக்கும் பொழுதுதான் மலையக சமூகத்தைச் சேர்ந்த சுசிலா அக்கா என்பர் வீட்டில் வேலை செய்வதற்காக தங்கியிருந்தார். இங்கு வாழ்ந்த ஒரு பொழுதில்தான்… ஒருவர் மீது ஒருவர் அளவற்ற அன்பு மதிப்பு வைத்திருந்த அவரின் உறவினரான வித்துவான் கார்த்திகேசு அவர்களின் மரணம் நிகழ்ந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து அட்டனுக்கு வந்து அப்பாவைப் பார்த்துவிட்டுப் வித்துவான் கார்த்திகேசுபோகும் வழியில் மரணத்தை தழுவ அப்பா தேவையான ஒழுங்களை செய்து இறந்தவருடன் யாழ்ப்பாணம் வரை பயணம் செய்தார். நான் ஒரு நாள் பக்கத்துவிட்டுப் பெண் குழந்தை ஒருவருடன் அம்மா அப்பா விளையாட்டு விளையாடிதற்காக மீண்டும் ஒரு தரம் அம்மாவிடம் அடி வாங்கினேன். இத்துடன் நான் எனக்குள் ஓடுங்கி எனது விருப்பங்களை உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவனாக மாறினேன் எனலாம்.

Hatton 003இந்த வீட்டிலிருந்து மல்லியப்பு சந்தியிலிருக்கின்ற மலை உச்சியில் இருக்கின்ற ஒரு வீட்டிற்கு 1976ம் ஆண்டு இடம் மாறினோம். இதுவரை நாம் வாழ்ந்த வீடுகளிலையே பெரிய வீடு இது. வீட்டுக்கு கீழே பள்ளத்தில கொழும்பு பதுளை புகையிரதபாதை இருக்கின்றது. இந்தப் பாதையில் புகையிரம் செல்வதற்கான சைகை காட்டி ஒன்று மலை உச்சியிலிருந்த இந்த வீட்டுக்கு முன் இருந்த்து.  இந்த உச்சியிலிருந்து கீழே இருக்கின்ற மல்லயிப்பு சிறிய நகரையும் பிரின்சஸ் சினிமா அரங்கையும் பார்க்கலாம். வீட்டு வாசலில் திறந்த விராந்தை உள்ளது. அதிலிருக்கின்ற பெரும் கதவை திறந்து உள்ளே வந்தால் பெரும் நாட்சதுர கூடம். இதன் இரு பக்கங்களிலும் இரு அறைகள். நடுப்பக்கத்தில் குசினிக்கு சமையலறை செல்கின்ற வழி. ஒரு பக்கம் சமையலறை மறுபக்கம் மலசலக் கூடமும் குளியளறையும். குழந்தைகளான எங்களைப் கவனிப்பதற்கு எங்களைவிட இரண்டு மூன்று வயது கூடிய சூட்டி எனும் சிங்களச் சிறுமி ஒருவர் எங்களுடன் இருந்தார். இந்த வீட்டுக்கு வந்த புதிதில், இது முன்பு பல் டாக்டர் இருந்து வீடு என்றும் குடும்பமாக இருப்பதற்கு நல்லதல்ல, என்றும் அயலவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். இது உண்மையோ பொய்யோ தெரியாது ஆனால் வெகுவிரைவில் இந்த வீட்டிலிருந்து வெளியேறியபோது ஏழைகளாக சென்றோம். இதன் பின் ஒரு வீட்டின் சிறிய அறைகளிலையே பெரும்பாலும் குடியிருந்தோம்.

முதலில் ஒரு சிங்கள வீட்டின் ஒரு அறையில் இருந்தோம். இங்கிருக்கும் பொழுது நாளாந்த சாப்பாட்டிற்காக சுவர்களில் மாட்டுகின்ற (அப்பா அம்மாவினதும் மற்றும் நமது படங்கள் இருந்த) கண்ணாடிகள் தொடக்கம் வீட்டிலிருந்த பெருமதியான பொருட்கள் வரை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்த காலம் இது. இந்த வீடு… அறை நாம் வாழ்வதற்கு பொருத்தமானதாக இருக்கவில்லை. ஆகவே இங்கிருந்து விரைவில் இன்னுமொரு up country & Batti 2012 140வீட்டின் அறைக்கு 1978ம் ஆண்டு குடிபெயர்ந்தோம். இது ஒரு முஸ்லிம் வீட்டின் முன்னறைப் பகுதி. இந்த வீடு தொடர்பாக எனது முதல் பதிவில் (பசி… அல்லது நாகரிக பிச்சைக்காரர்கள்) ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். அதற்கான இணைப்பு (http://tinyurl.com/bjdqe97) இங்கு உள்ளது.

இங்கிருந்து 1980ம் ஆண்டி ஆரம்பத்தில் லிபர்ட்டி கட்டிடத்தின் ஒரு அறைக்கு குடிபெயர்ந்தோம். இந்த லிபர்ட்டி கட்டிடத்தைக் கட்டியவர் வி.கே.டி பொன்னுசாமி. இது மட்டுமல்ல இந்தக் கட்டிடத்தின் பிரதான பகுதி லிபர்ட்டி சினிமா அரங்கம். இதுவே கீழ் தளத்தில் இருந்தது. இதன் உரிமையாளரும் இவரே. இவர் இலங்கையின் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவர். ஏனெனில் “தெய்வம் தந்த வீடு” மற்றும் “ரத்தத்தின் ரத்தமே” என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களை எடுத்தவர். தெய்வம் தந்த வீடு படம் ஆரம்பிக்கும் பொழுது அட்டன் இந்துமகாசபை அல்லது மாணிக்கப்பிள்ளையார் கோயில் படிக்கட்டுகளில் இவர் கீழ் இறங்கி வருகின்ற காட்சியுடன் ஆரம்பிக்கும். இவர் 1983ம் ஆண்டு கலவரத்தினபோது சிங்கள இனவாதிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்….up country & Batti 2012 083

நாம் இங்கு குடியிருந்த வீடும் சிறிய ஒரு அறை. இது லிபர்ட்டி திரைஅரங்கின் திரை உள்ள பின் பகுதியின் மேல் தளத்தில் ஒரு மூலையில் மூன்றாவது (மாடியில்) தளத்தில் இருந்தது. நமது அறைக்கு ஒரு பக்கம் கொல்வின் ஆர்டி சில்வாவின் லங்கா சமசமாஜ கட்சியின் அலுவலகம் இருந்தது. ஒன்பதாம் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்தக் கட்சியின் அலுவலக அறையில் தான் இரவு வேளைகளில் படித்து அங்குள்ள வாங்கில் நித்திரை கொண்டு மீண்டும் காலையில் எழும்பி படிப்பேன். ஏனெனில் நாம் வாழ்கின்ற அறையில் மேசை இல்லாததாலும் மற்றும் இடவசதி மட்டுமல்ல படிப்பதற்கு இடைஞ்சலாகவும் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்து தந்தார் அப்பா.

up country & Batti 2012 158நாம் குடியிருந்த அறைக்கு முன்பாக நீண்ட மண்டபம். இங்கு தொழில் நீதிமன்றம் இயங்கியது. பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை சட்டரீதியாக அணுகி தீர்க்கின்ற இடமாக இது தொழிற்பட்டது. நமது அறைக்கு மறுபக்கம் வாசுதேவ நாணயக்காரவின் (உண்மையிலையே விக்கிரமபாகுவின் கட்சி ஆனால் அவர் தான் பிரபல்யமாக இருந்தார்) நவசமசமாஜ கட்சி அலுவலகம். அந்த அறையையும் தாண்டி சென்றால் இலங்கை தொழிலாளர் கழக அலுவலகம் இருந்தது. இவர்கள் வடபகுதி தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுடன் (முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சூசைதான்) தொடர்புகள் கொண்டிருந்தார்கள். இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு அறையில் அஸிஸின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகம் இருந்தது. அன்று இதன் உப தலைவர் வி.பி.கணேசன் அவர்கள். இவரும் இலங்கை திரைப்பட வரலாற்றில் முக்கியமானவர். இலங்கையின் எம்.ஜி.ஆர் என அழைப்பார்கள். (இந்த அலுவலகம் இப்பொழுது மனோ கணேசனின் கட்சி அலுவலகமாக இயங்குகின்றது.) இதற்குப் பக்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் இருந்தது. ஆனால் தேர்தல் காலங்களில் மட்டுமே இது இயங்கும் அலுவலகம். கடைசிக் கட்சி தவிர்ந்த மற்றக் கட்சி அலுவலகங்களில் வேலை செய்வோர் மற்றும் தொழில் நீதி மன்றத்தில் வேலை செய்வோர் எல்லோருடனும் நமக்கு பலவிதமான உறவுகள் இருந்தது. லிபரட்டி கட்டிடத்தில் இருந்து பார்த்தால் மேலே up country & Batti 2012 159இருக்கின்ற விஜிதா திரை அரங்கு தெரியும். இங்கு திரையிடுவதற்கு முதல் ஒலிபரப்பப்படும் பாடலும் சில காலங்களில் திரைப்பட கதை வசனமும் வெளியில் கேட்கும் வகையில் ஒலிபரப்புவார்கள். இப்படி திரை அரங்கங்களுக்கு இடையில் இருந்ததனால் பாடல் மீது விருப்பம் ஏற்பட்டாலும் பாடும் திறன் வளரவில்லை. ஆனால் படங்களில் நடிக்கும் ஆசையும் அதை இயக்கும் ஆசையும் இருந்தது அந்தக் காலங்களில்.

up country & Batti 2012 213

லிபர்ட்டி பிளிடிங் (கட்டிடம்) – அட்டன்

இந்த வீட்டில் (அறையில்) குடியிருக்கும் பொழுதுதான் 83ம் ஆண்டு கலவரம் நடைபெற்றது. இது நமது வாழ்வை முழுமையா மாற்றியமைத்தது. 1982ம் ஆண்டு தேர்தல் காலத்தில் ஜே ஆரின் ஐ.தே.கட்சி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சிகளின் கூட்டத்தில் அப்பா உரையாற்றினார். அந்த உரைகளில் தான் தமிழர் பிரச்சனைகளில் புலியின் பக்கம் என்றார். இதன் காரணமாக அப்பா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் பொலிசாரின் கவனம் இவர் பக்கம் இருந்தது. 83ம் ஆண்டு இனக் கலவரத்தை காரணமாக வைத்து பலரை கொலை செய்தனர். தானும் கொலை செய்யப்படலாம் என்ற பயம் அப்பாவுக்கும் இருந்தது. ஆகவே ரொசல்ல தோட்டத்தில் சில வராங்களும் பின்பு (தட்ட) சுப்பையா தோழரின் தோட்ட லயன் வீட்டில் சில நாட்களும் தங்கியிருந்தோம்.

மீண்டும் நாம் குடியிருந்த அறைக்கு வந்தபோது அருகிலிருந்த சிங்கள குடும்பத்துடன் பிரச்சனை ஏற்பட்டது. நிலமை சீராக இல்லை என்பதை அப்பாவும் அம்மாவும் உணர்ந்தார்கள். ஆகவே மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி செல்கின்ற முடிவை எடுத்தனர். இதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. இந்த சுழலில் நாம் அகதியாக சென்றால் ஒரு துண்டு காணி இலவசமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. நம்மிடம் இருந்த உடமைகள் இலவச நூல்கள் உட்பட ஆறு பெட்டிகளுக்குள் அடங்கிவிடும். எல்லோரும் ஆளுக்கு ஒரு பெட்டியை தூக்க அப்பாவும் அம்மாவும் மாறி மாறி இரு பெட்டிகளை சுமந்தனர். அட்டனிலிருந்து நமது பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பமானது.

மீராபாரதி

31.12.2012

Advertisements

Responses

  1. […] பங்காளியானார். (இது ொடர்பான இரண்டு பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்) இவ்வாறான […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: