Posted by: மீராபாரதி | December 13, 2012

மரணித்தவர்களுக்கான மரியாதையும் இழந்தவர்களின் வாழ்வை மேம்படுத்தலும்

மரணித்தவர்களுக்கானமரியாதையும்இழந்தவர்களின்வாழ்வைமேம்படுத்தலும்

நவம்பர் மாதத்தின் கடைசி வாரம் இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்ந்தவர்கள் போராட்டத்தில் அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி மரணித்தவர்களை நினைவு கூறுகின்ற வாரமாகும். இது கடந்த முப்பது வருட காலமாக புலத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் மாவீரர் வாரமாக நினைவு கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக புலம் பெயர்ந்த சமூகத்தில் வழமையைப் போல பெரியளவில் வியாபாரமாகவும் புலத்தில் சிறியளவிலுகளிலும் நடைபெற்று வந்தன. போராட்டத்தில் மரணித்தவர்களை வருடா வருடம் இவ்வாறு நினைவு கூறுவதுடன் நமது பொறுப்பு முடிந்துவிடவில்லை. ஏனெனில் அவர்கள் வாழ்ந்தபோது அவர்களுக்கு ஒரு கனவு இருந்தது. அவர்கள் அந்த நோக்கத்திற்காகவே இறந்தனர். இவர்களில் பெரும்பான்மையோரின் நோக்கமானது மனிதர்களினது குறிப்பாக ஈழத் தமிழர்களினது தேசிய விடுதலை என்றால் மிகையல்ல. குறைந்தளவினராவது சமூகமாற்றத்தைக் கனவாக கொண்டிருந்திருப்பர். இந்தக் கனவுகளை நிறைவெற்ற நாம் என்ன செய்கின்றோம்? கனடா தேடகம் ஜெயகரன் அவர்கள் தனது முகநூல் பதிவில், “நினைவுகூறல் என்பது இறந்தவர்களுக்கானது மட்டும் அல்ல அதிலும் மேலாக இருப்பவர்களுக்கானது. இருப்பவர்களின் அரசியலுக்கானதும்” எனக் குறிப்பிட்டார். இது மிகவும் உண்மையானதும் சரியானதுமான ஒரு கூற்று என்றால் மிகையல்ல. ஆகவே இன்று போரில் தப்பிபிழைத்து வாழ்பவர்கள் தொடர்பாக நம் முன் பாரிய பொறுப்பு உள்ளது.. முக்கியமாக வடக்கு கிழக்கு மனிதர்கள் எதிர்நோக்கும் சமூக அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எவ்வாறு உதவுவது மற்றும் முன்னால் போராளிகளாக இருந்தவர்கள் இன்று சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பானதே அது.

அண்மையில் கனடாவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேராசிரியர் சேரன் அவர்கள் மேற்குறிப்பிட்ட நோக்கத்திலமைந்த ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்மாதிரியையும் சில முன்மொழிதல்களையும் கூறியிருந்தார். இதை பின்வரும் http://www.youtube.com/watch?v=KB6WjWqA3fI  இணைப்பில் கேட்கலாம். இவரது உரை அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று. அவர் கூறியது போன்று வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மனிதர்கள் தமது முன்னேற்றத்திற்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் முழுமையாக தங்கியிருக்க முடியாது. அதேவேளை சிறிலங்கா அரசங்கமும் உருப்படியாக ஒன்றும் செய்யாது என்பது நாம் அறிந்ததே. ஆகவே வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மனிதர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக நாம் கவனம் செலுத்துவதுடன் அதற்காக என்ன செய்யலாம் என சிந்திப்பதும் செயற்படுவதும் இன்றைய சூழலில் அவசியமானது. இதனை நோக்கமாகக் கொண்டே “மீண்டும் ஈழம் நோக்கி செல்லுவோம்…” (http://tinyurl.com/97cz7r9) என்றகட்டுரை ஒன்றை ஏற்கனவே எழுதியிருந்தேன்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மனிதர்கள் இன்று பிரதானமாக முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் பல. இங்கு குறிப்பான சில பிரச்சனைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அவையாவன, தமது நாளாந்த வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்கான வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரப் பிரச்சனைகள். இதை எதிர்கொள்ள முடியாதவர்கள் தற்கொலை செய்கின்றனர். சிலர் நிவாரணங்களில் தங்கியிருக்கின்றனர். சிலர் பிச்சை எடுக்கின்றனர். இன்னும் சிலர் பாலியல் தொழிலை நாடிச் செல்கின்றனர். அல்லது அவ்வாறு செய்வதற்கு ஊக்கிவிக்கப்படுகின்றனர். இவ்வாறான செய்திகள் அடிக்கடி பரவலாக ஊடகங்களிலும் இணையங்களிலும் அடிபடுகின்றன. இந்த முடிவுகளை இவர்கள் எடுப்பதற்கு வேறு பல காரணங்களும் நிர்ப்பந்தங்களும் இருக்கின்ற போதும் நாளாந்த வாழ்வை கடப்பதற்காக எதிர்கொள்ளப்படுகின்ற பொருளாதாரப் பிரச்சனை முக்கியமான ஒரு காரணம்.

இவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்ற பலர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவே இருக்கவேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் எடுப்பது நல்லது. இவர்களது பிரச்சனைகள் கஸ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் பொதுவெளிகளில் அதிகமாக அலசப்படுவதில்லை. ஏனெனில் ஊடகங்களையும் இணையத்தளங்களையும் பிரதானமாகப் பயன்படுத்துகின்றவர்கள் உயர் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரே. இதனால் இவர்களது கருத்தியல்களும் பிரச்சனைகளுமே ஊடகங்களிலும் இணையங்களிலும் ஆதிக்கம் செய்யப்படுவதால் பிரதானப்படுத்தப்படுகின்றன. ஆகவே இவ்வாறான வர்க்க மேலாதிக்கங்களை கடந்து பெரும்பான்மையான மக்களின் உண்மையான நிலைமைகளையும் பிரச்சனைகளையும் கண்டறிவதற்கு விஞ்ஞானரீதியான ஆய்வு முறைகளை நாம் முன்னெடுக்கவேண்டி இருக்கின்றது.

முதலாவது முன்னால் போராளிகளும் போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வின் மீது நம்பிக்கையிழந்தவர்களும் சமூக ஆதரவற்றவர்களும் அதிகமானளவில் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர். இவர்களின் தற்கொலைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? இவர்கள் தொடர்ந்து வாழ்வதற்கான ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்கவேண்டியது நமது பொறுப்பு. அதை எவ்வாறு செய்வது?

தற்கொலை தொடர்பான பிரச்சனைகளை மேலும் அறிவதற்கு உளவியல் நெருக்கடி சிகிச்சைகள் போன்றவற்றில் புலமைசார் துறைகளில் கல்வி கற்றவர்களும் செயற்படுகின்றவர்களும் இதற்குப் பங்களிக்கலாம். குறிப்பாக இத் துறைகளில் செயற்படுகின்ற புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புடன் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யலாம். இதன் மூலமாக இலங்கையிலுள்ள தமிழ் பேசும் பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு தற்கொலையை தடுக்கின்ற வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கலாம். நகரங்கள் கிராமங்கள் தோறும் இருக்கின்ற (இருக்கின்றனவா?) தமிழ் தேசிய கட்சிகளில் அலுவலகளிலும் மற்றும் வைத்தியசாலைகளின் ஒரு பகுதியில் இவ்வாறு பயிற்சி பெற்றவர்களை வேலைக்கு அமர்த்தலாம்.

இதேவேளை மேற்கு நாடுகளில் நடைமுறையிலுள்ளது போன்ற, “தற்கொலை செய்யும் எண்ணமுள்ளதா? தற்கொலைக்கு முயற்சிக்கின்றீர்களா? அவ்வாறான எண்ணங்கள் இருப்பின் அல்லது முயற்சிப்பின் முதலில் பின்வரும் எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்” என விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை செய்து மேற்குறிப்பிட்ட பயிற்சியளிக்கப்பட்டவர்களின் தொலைபேசிகளை வழங்கலாம். அல்லது இப் பயன்பாட்டிற்காக பொதுவான தொலைபேசி எண் ஒன்றை உருவாக்கலாம். இவ்வாறான தகவல்கள் மற்றும் செய்திகளைக் கொண்ட  விளம்பரங்கள் சுவரொட்டிகள் என்பவற்றை பொது இடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீதிகள், பேருந்துகள், சந்திகள் போன்றவற்றிலும் மற்றும் ஒலி, ஓளி, அச்சு ஊடகங்களிலும் நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் விளம்பரப்படுத்தலாம் அல்லது காட்சிப்படுத்தலாம். இது இவ்வாறன தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களின் கவனத்தைப் பெறுவதுடன் அவர்களது தற்கொலை முயற்சிகளை திசைதிருப்பவும் தடுத்து நிறுத்தவும் உதவலாம். தற்கொலையை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பான ஒரு அறிமுகத்தை “தற்கொலை: தடுக்க முடியுமா… ?” (http://tinyurl.com/c4rmyqp) என்ற கட்டுரையை வாசிப்பதன் மூலம் அறியவும்.

இரண்டாவது இன்று பிரதானமாகப் பேசப்படுகின்ற பல விடயங்கள் இருப்பினும் முக்கியமாக அலசப்படுகின்ற ஒரு விடயம் முன்னால் பெண் போராளிகள் பலர் பாலியல் தொழிலாளர்களாக செயற்படுகின்றார்கள் என்பதே. ஒரு புறம் பிற்போக்கு அல்லது கடும்போக்கு தமிழ் தேசியவாதிகள் தமது மரபாந்த பிற்போக்கான கலாசார பண்பாட்டு கற்பிதங்களை தூக்கிப்பிடிப்பதனுடாக இதை மறுக்கின்றனர். இன்னுமொரு புறம் பிழைப்புவாதிகள் இவ்வாறன நிகழ்வுகளையும் தகவல்களையும் மூன்றாம் தர எழுத்துகளினுடாக விற்பனை செய்கின்றனர். ஆனால் உண்மையான கள நிலமை என்பது யோ. கர்ணன் அவர்கள் தனது “இராமர்கள் தேடும் சீதைகள்” (http://yokarnan.com/?p=376) கட்டுரையில் குறிப்பிடுவதற்கு ஒப்பானதாகவே இருக்கின்றமையை புரிந்துகொள்ளலாம்.

நமது பிற்போக்கான (ஆணாதிக்க) தமிழ் கலாசார கூறுகளையும் கட்டமைக்கப்பட்ட புனிதமான (தமிழ்) தேசிய தன்மையையும் பாதுகாப்பதற்காக இவ்வாறன சம்பவங்கள் நடைபெறுவது மறுக்கவும் மறைக்கவும்படுகின்றன. ஆனால் துரதிர்ஸ்டவசமாக இவ்வாறன செயற்பாடுகள் மேற்குறிப்பிட்ட தொழில் செய்பவர்களை தொடர்ந்தும் பாதிப்பதுடன் அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் மறைவாக தொடர்ந்தும் நடைபெறுவதற்கும் கஸ்டங்களை அனுபவிப்பதற்கும் சுரண்டப்படுவதற்கும் வழிவகுக்கும். அதேவேளை இவ்வாறான தொழில்கள் இரகசியமாக பல்கிப் பெருகி நிறுவனமயப்படுவதாகவே இருக்கும். இவ்வாறான “மறைப்பும் மறுப்புமே” நமது விடுதலைப் போராட்டத்தையும் காவுகொண்டது என்பதை மறக்கலாகாது. ஆகவே விடயங்களை வெளிப்பட்டையாகவும் ஆரோக்கியமாகவும் உரையாடுவது நன்மையானதே.

சில ஊடகங்கள் குறிப்பிடுவதுபோல் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் பெண்களும் சிங்கள இராணுவத்தினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அல்ல. ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை ஒவ்வொரு கணமும் எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் மிகையல்ல. அதேவேளை சில பெண்கள் பலவந்தமாக இந்த தொழிலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும் சிலர் தவிர்க்க முடியாமலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்கள் தாமே விரும்பியும் செய்கின்றனர் எனவும் கூறலாம். இதற்கு வெறுமனே சிங்கள இராணுவத்தை மட்டும் குறை கூறி தப்பிக்க முடியாது. தமிழ் ஆண்களுக்கும் இதில் ஈடுபடுகின்றமை பொய்யல்ல. மேற்குறிப்பிட்டவாறு எல்லாம் கூறுவது ஒரு அனுமானம் மட்டுமே. இந்த அனுமானம் தொடர்பான உண்மையான கள நிலவரத்தையும் அதற்கான காரணங்களையும் அறியவேண்டுமாயின், நாம் கள ஆய்வு ஒன்றைச் செய்யவேண்டும்.

உதாரணமாக உலகில் போர் நடந்த நாடுகளில் குறிப்பாக போரில் ஒரு சமூகம் தோற்றபின் குறிப்பிட்ட சமூகத்திற்கும் மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் என்ன நடந்தது என்பதை பலதரப்பட்ட ஆய்வுகள் செய்து அறிந்துகொள்வது. இவ்வாறு அறிந்து கொண்டதை வெளியீடுகள் மூலம் பரவலாக்குவதும் கலந்துரையாடுவதும் ஆரோக்கியமானது மட்டுமல்ல நமது பார்வைகளையும் விரிவுபடுத்தும். இவ்வாறு பெறப்படுகின்ற அறிவினடிப்படையில் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஒரளவாவது அறிந்து கொள்ளலாம். அதேவேளை பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் இவர்களுக்கான மாற்று வழிகளை ஏற்படுத்தவும் அது தொடர்பாக சிந்திக்கவும் முயற்சிகள் செய்யலாம். அல்லது நமது போராட்டத்தைப் போல் மாயையான விம்பத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நம் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கவேண்டியதுதான். இதனால் தொடர்ந்து பாதிக்கப்படப் போவதும் கஸ்டத்தில் வாழப்போவதும் முன்னால் (பெண்) போராளிகளும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுமே.

இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற பல்கலைக்கழகங்களில் வேலைசெய்கின்ற பேராசிரியர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடனும் மற்றும் அரசுசார நிறுவனங்களின் உதவியுடனும் பல்வேறு தளங்களில் களங்களிலும் பலதரப்பட்ட சமூக பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஏன் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்? முன்னால் பெண் போராளிகள் எத்தனைபேர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்? ஏதற்காக ஈடுபடுகின்றனர்? இவ்வாறான தொடர்புகளை ஏற்படுத்தியவர்கள் யார்? மற்றும் இதற்கான மாற்று வழிகள் என்ன என்பன தொடர்பாக ஆய்வுகளின் அடிப்படையில் பிரச்சனைகளை அறிந்து வெளிப்படுத்துவதுடன் அதற்கான தீர்வுகளையும் காணலாம். இதன் மூலம் வடக்கு கிழக்கில் நிலவுகின்ற உண்மையான சுழல் தொடர்பாகவும் முன்னால் பெண் போராளிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆதாரபூர்வமான தரவுகளுடன் முன்வைக்கலாம். இது இவர்கள் தொடர்பான எல்லாவிதமான ஊகங்களையும் கற்பனைக் கதைகளையும் கற்பிதங்களையும் தடுத்து நிறுத்த உதவலாம்.

மேற்குறிப்பிட்டவாறு தற்கொலைகளிலும் பாலியல் தொழில்களிலிருந்தும் மனிதர்களைக் காப்பாற்றிய பின் அவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ந்தும் வாழ்வதற்கு ஆதாரமாக தொழில் ஒன்று அவசியமாகத் தேவைப்படும். இதற்கு வடக்கு கிழக்கில் தொழில்களை உருவாக்குவதற்கான, எவ்வாறான பொருளாதார கனிம வளங்கள் இருக்கின்றன? போன்ற ஆய்வுகளையும் எவ்வாறன தொழில்களை மேற்கொள்ளலாம்? என்பதையும் இவ்வாறன தொழில்களை செய்வதற்குரிய தொழில் வல்லுனர்கள் இருக்கின்றார்களா? என்பதையும் வாழ்கின்ற மனிதர்கள் எவ்வாறான தொழிலை செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள்? என்பதுபோன்ற ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பொருளாதார திட்டங்களை மேற்கொள்ளலாம். இது ஒரளவாவது நிலவுகின்ற வறுமையை ஒழிக்க உதவுவதுடன் மேலும் புதிய மனிதர்கள் தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பதையும் பாலியல் தொழில்களில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்தலாம். இதைவிட வடக்கு கிழக்கின் பொருளாதார நிலைமைகளை உயர்த்துவதுடன் கையேந்தி நிற்காது சொந்தக்காலில் நிற்பதாற்கான வழிகளையும் ஏற்படுத்தலாம்.

இவ்வாறன செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைகழங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு நிதிவசதிகள் மற்றும் துறைசார்ந்த புலமைத்துவ அறிவுகள் தேவைப்படும். இதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் புலமைசார் துறையினர் பங்களிக்கலாம். இதுபோன்ற பல்வேறு செயற்திட்டங்கள் தான் இதுவரை தமிழ் தேச விடுதலைக்காக மரணித்த ஒவ்வொரு போராளிக்கும் நாம் செய்கின்ற அஞ்சலியாகும். அவர்களை மதித்து மரியாதையுடன் நினைவு கூறுவது எனலாம்.

இவற்றையெல்லாம் செய்யாமல் ஆரோக்கிமற்ற திட்டங்கள் ஏதையும் முன்வைக்காமல் வசை மொழிகளில் மாறி மாறி வாதங்கள் செய்து கொண்டிருப்பதில் எந்தவிதமான பயனுமில்லை. மாறாக (முகப்புபுத்தக) திண்ணைப்பேச்சுகள் வெறுமனே வம்பளப்பதற்கும் மற்றவர்கள் மீது வசைபாடுவதும் கிடைக்கின்ற சிறிய ஓய்வு நேரத்தையும் ஆரோக்கியமற்ற வழிகளில் கழிப்பதற்குமே உதவும். இதன் அர்த்தம் நகைச்சுவை எழுத்துக்களை தவிர்ப்பதல்ல. நகைச்சுவை நம்மை மேலும் ஆற்றுப்படுத்துவதுடன் ஆரோக்கியமாக வாழவும் செயற்படவும் உதவவேண்டும்.

புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து திட்டமிட்ட வகையிலும் ஆரோக்கியமான வழிகளிலும் மேற்குறிப்பிட்ட மற்றும் இதுபோன்ற திட்டங்களுக்கும் புலத்தில் வாழ்கின்றவர்களுக்கும் உதவ பக்கசார்பற்ற சர்வதேச தமிழ் அமைப்பின் தேவை ஒன்று உள்ளது. இந்த அமைப்பானது ஏற்கனவே இருக்கின்ற புலி சார்பு புலி எதிர்ப்பு என்ற வகைகளுக்குள் இருக்கின்ற ஒரு பக்க சார்பானதாக இல்லாமல் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஜனநாயகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வமான சர்வதேச அமைப்பாக இருப்பதும் நல்லது. மேலும் புலத்தில் (இலங்கையின் வடக்கு கிழக்கில்) வாழ்க்கின்ற மக்களினதும் அரசியல் அபிலாசைகளையும் தேவைகளையும் பிரதானமாக முன்வைப்பதாகவும் மற்றும் முன்னால் போராளிகளினதும் தேவைகளையும் அவர்களது எதிர்கால வாழ்வையும் மேம்படுத்துவதையும் அடிப்படையான நோக்கமாக கொண்டதாக இருக்கவேண்டும். ஏற்கனவே புலம் பெயர்ந்த தேசங்களில் செயற்படுகின்ற அமைப்புகள் இவ்வாறன நோக்கங்களை தமது அறிக்கைகளில் கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்ற செயற்படுகின்றனவா என்பது கேள்விக்குறியானதே. மேலும் இவை மக்கள் நலனை விட தாம் சார்ந்த இயக்க அல்லது கட்சி அரசியல் நலன்களையும் கொள்கைகளையுமே முதன்மைப்படுத்தி நாடகப் பாணியில் செயற்படுகின்றனர் என்றால் மிகையல்ல. இதனால் யாருக்கு நன்மை என்பது அவர்களுக்கே வெளிச்சமானது.

இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பானது தனது செயற்பாடுகள் மற்றும் வரவு செலவுகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையைப் பேணுவதுடன் புலத்தில் (இலங்கையின் வடக்கு கிழக்கில்) செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் உறவுகளைப் பேணி அவர்களினுடாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். புலத்திலுள்ள தமிழ் அமைப்புகளும் கட்சிகளும் இதற்கான ஒரு பிரிவை உருவாக்கி தமது செயற்திட்டங்கள் மற்றும் நிதி தொடர்பான விடயங்களில் வெளிப்படைத்தன்மையைப் பேணலாம். அதேவேளை தமது பிரசேங்களிலிருக்கின்ற பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மாணவர்களை இவ்வாறான வேலைதிட்டங்களில் இணைத்துக் கொள்ளலாம். இதுபோன்ற செயற்திட்டங்களே இனிவரும் காலங்களில் புலத்தில் வாழ்கின்ற மனிதர்களுக்கு புலம் பெயர்ந்த தேசங்களில் வாழ்கின்ற மக்களின்மேல் நம்பிக்கையை உருவாக்கும். மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் நிறுவன அமைப்பிற்கு உட்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும். இது பற்றி சிந்திப்போமா?

மீராபாரதி

06.12.2012

நன்றி – ஏதுவரை இதழ் 7 டிசம்பர் 2012

http://eathuvarai.net/?p=2324

தொடர்புகளுக்கு – meerabharathy@gmail.com வலைப்பதிவிற்கு – https://meerabharathy.wordpress.com/

Advertisements

Responses

 1. புத்தி பூர்வமான, நடைமுறை சாத்தியமுள்ள நல்லதொரு கட்டுரை. உங்கள் பிரக்ஞை என்ற புத்தகத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம்?

  • நட்புடன் மேகலாவிற்கு…
   உங்கள் கருத்துக்கு நன்றிகள்…
   இந்த நூல் இலங்கையில் அச்சடிக்கப்பட்டது…. Techno print உரிமையாளரும் நிர்வாகியுமான தியாகு கேசவனை தொடர்பு கொண்டால் பெற்றுக் கொள்ளலாம்.
   நன்றி

 2. அறிவுபூர்வமாக அணுகியிருக்கறீர்கள்
  நூலில் படித்தேன்.
  நன்றாக இருக்கிறது


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: