Posted by: மீராபாரதி | December 6, 2012

மரணம்: இழப்புகள்..சோகம்…துக்கம்…அஞ்சலி…

மரணம்: இழப்புகள்..சோகம்துக்கம்அஞ்சலி

தேசிய துக்க நாள் ஒன்றின் அவசியம் குறித்து

மரimages1ணம் இவ்வளவு சாதாரணமாக வாழ்வில் போய்விடும் என்று ஒரு பொழுதும் நினைத்ததில்லை. அண்மைய வரலாற்றில் 1915, 1958, 1870, 1977 கலவரங்களைத் தவிர்த்து 83ம் ஆண்டுவரை ஈழத்திலுள்ள ஒரு வீட்டில் பல வருடங்களிற்கு ஒரு முறை ஏற்படுகின்ற இயற்கை மரணத்தையே கண்டிருக்கின்றோம். இவ்வாறான இயற்கை மரணங்களே மனிதர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. ஆனால் 83ம் ஆண்டின் பின் மரணம் என்பது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற ஒவ்வொரு மனிதர்களின் வீட்டு வாசல்களிலும் காவல் காத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் ஒரு மரணத்தைக் கூட சந்தித்திருக்காத வீடுகள், ஒரு நாளிலையே பல மரணங்களை சந்தித்தன. வழமையாக ஒரு வீட்டில் ஒருவர் மரணிக்க பலர் அந்த உறவை இழந்தவர்களாக இருப்பதே வழமை. ஆனால் பலர் இறந்து போக ஒருவர் மட்டும் தப்பிப்பிழைத்து அவர் தன் உறவுகள் பலரை அல்லது அனைவரையும் (ஓரே நாளில் கூட) இழந்தவராக தன் வாழ்வை தொடரவேண்டிய தூர்ப்பாக்கிய நிலைமை இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முதன்மையான காரணம் சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறையும் இனஅழிப்பு செயற்பாடுகளும் என்றால் மிகையல்ல. அதேவேளை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தவறான அணுகுமுறைகளும் இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளமை புறக்கணிக்கத்தக்கதல்ல.

தமிழ் பேசும் மனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் வன்முறை மற்றும் போர்களினால் ஏற்பட்ட மரணங்கள் சதாரண மரணங்கள் அல்ல. அவை அகோரமான அகால மரணங்களாகவே காட்சியளித்தன. இந்த மரணங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியாக அதன் உச்சம் 2009 ம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்தது. உலகில் போரை முகம் கொடுக்கின்ற ஒவ்வொரு மனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் இதுவே நிலைமை. மனம் மரணத்தை விரும்பாதபோதும் மரணம் யதார்த்தமானது என்பது வாழ்வின் உண்மை. ஆனால் இவ்வளவு (கோரமான) மரணங்கள் மனித மனம் தாங்குவதற்கு சற்றுக் கடினமானதே. இதனால்தான் போரில் அகப்பட்ட மனிதர்களின் மனங்கள் உணர்வுகளற்று மரத்துப்போய்விடுகின்றனபோல. ஆகவேதான் மனித மனம் போரில்லாத வாழ்வை விரும்புகின்றது.  அதற்காக அங்கலாய்க்கின்றது.

இவ்வாறான மிக நெருக்கடியான சூழலையும் இழப்புகளையும் சந்தித்த மனிதர்கள் தாம் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவர்கள் இந்த இழப்புகளினால் ஏற்பட்ட சோகத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆகவேதாimages3ன் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கடந்து செல்கின்ற குறிப்பிட்ட நாளில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கான கலாசார சமய சடங்குகளை தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் நிறைவேற்றுவதன் மூலம் தமக்கான ஆற்றுப்படுத்தல்களை உருவாக்கிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வது மரணம் நடைபெற்றுள்ளது என்பதையும் தமக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் புரிந்து ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறையே. மேலும் தமது துக்கத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்துவதினுடாக தங்களது மன சுமையிலிருந்தும் விடுதலை பெறுகின்றனர். ஆகவே இவ்வாறன சடங்குகளும் நினைவு கூறலும் அஞ்சலிகளும்  இவர்களது அடிப்படை (மனித) உரிமை என்று கூட கூறலாம். ஆனால் இந்த மக்கள் இவ்வாறன சடங்குகளையும் ஆற்றுப்படுத்தல்களையும் செய்யவிடாது தடுக்கப்படுகின்றனர். பெரும்பாலான மக்கள் செய்யமுடியாது தவிர்த்தும் விடுகின்றனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

இலங்கையில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் சமூகங்களுக்கு இவ்வாறன மரணச் சடங்குகளையும் ஆற்றுப்படுத்தல்களையும் செய்வதற்கான சந்தர்ப்பம் குறிப்பாக 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்பு வழங்கப்படவில்லை என்றே கூறலாம். ஏனெனில் சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம் மற்றும் இரகசியமாக திரிகின்ற அரச உளவாளிகள் என்பவர்களின் அச்சுறுத்தலுக்கு இவர்கள் உள்ளாகலாம். அதுவும் இந்த உளவாளிகள் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் செயற்பட்ட முன்னால் போராளிகளாக இருப்பது பாதுகாப்பற்ற தன்மையை மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறான இராணுவ மயப்பட்ட சுழலில் மறைமுகமான அச்சுறுத்தல்கள் இருப்பதாலும் பயத்துடன் வாழ்வதாலும் தமது உறவுகளுக்கு செய்ய வேண்டிய மரணச் சடங்குகளை தவிர்த்து விடுகின்றனர்.

குறிப்பாக போராடி இறந்தவர்களது படங்கள் பெரும்பாலும் போராளிகளது (புலி) சீருடைகளுடனையே இருக்கின்றன. ஆகவே இப் படங்களை இவர்கள் வீடுகளில் வைத்திருப்பதோ அல்லது அவ்வாறான படங்களை வைத்து தமது சமூக கலாசார அல்லது சமய சடங்குகளையோ செய்வதோ வாழ்பவர்களுக்குப் பாதுகாப்பானதல்ல. ஆகவே தமது பாரம்பரிய சடங்குகளை செய்வதில் மக்களுக்கு தயக்கம் மற்றும் பயம் இருக்கின்றது. இந்தப் பயம் நியாயமானதே. ஆகவே இந்த மக்கள் இவ்வாறான பயத்திலிருந்து விடுவிக்கப்படவும் தடைகள் நீக்கப்பட்டு சுதந்திரமாகவும் சுய தெரிவுகளுடனும் வாழ வேண்டும். இதற்கு இராணுவ மயப்பட்ட சூழல் இல்லாது செய்யப்படவேண்டும்.

தம் நம்பிக்கையினடிப்படைகளில் மரணித்தவர்களுக்கான இவ்வாறான சடங்குகளை செய்யாது விடுவது போரில் தப்பிப் பிழைத்து வாழ்கின்ற இந்த உறவுகளை மேலும் மேலும் புதிய மன நெருக்கடி, மன அழுத்தம், குற்றவுணர்வு என்பவற்றுக்குள் வைத்திருக்கவே வழிவகுக்கின்றது. போரினால் ஏற்பட்ட மனத்தாக்கங்களுக்கும் மேலாக இதுவும் இவர்களைப் பாதிக்கின்றது. இது வாழ்வின் மீது நம்பிக்கையினத்தை உருவாக்குகின்றது. (இது இன்று ஒரு முக்கிimages4யமான பிரச்சனை. ஆகவே இவை தொடர்பாக விரிவாகவும் தொடர்ச்சியாகவும் எழுதும் எண்ணம் உள்ளது). இதனால் இவர்கள் தமது வாழ்வு தொடர்பாக பல்வேறு எதிர்மறையான (தற்கொலை போன்ற) முடிவுகளை எடுப்பதற்கு தள்ளப்படுகின்றனர். ஆகவேதான் இவர்களை இவ்வாறன நெருக்கடிகளிலிருந்தும் சூழல்களிலிருந்தும் விடுவிப்பது நமது பொறுப்பு. குறிப்பாக இவர்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களினதும் அரசியல் பிரதிநிதிகளினதும் தமிழ் உரிமைகளை மதிக்கின்ற சிங்கள இடதுசாரிகளினதும் மிகப்பெரிய பொறுப்பு என்றால் மிகையல்ல. வாக்குகளுக்கு மட்டும் மக்களிடம் வருகின்ற இந்த அரசியல்வாதிகள் மக்களின் இவ்வாறான தேவைகளை உணர்ந்து அதற்கான வழிவகைகளை முன்னெடுப்பார்களா? அரசியல் உரிமைகைள் எந்தளவு முக்கியமோ அதேயளவு மனிதர்களின் உளவியல் தேவைகளும் முக்கியமானவை என்பது புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒன்று. இதை மறுக்கின்ற சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் தவறான பாதையில் பயணிப்பவர்கள் மட்டுமல்ல மனிதர்களின் மன உள உணர்வுகளையும் புரிந்துகொள்ளாதவர்களே என்றால் தவறல்ல.

முன்னால் எம் பியும் செயற்பாட்டாளருமான மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுவதுபோல் சிறிலங்கா அரசாங்கத்தால் 1970களிலும் 1980 களிலும் படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்களை வருடந்தோறும் இவர்களது கட்சி நினைவு கூறுகின்றது. இவர்களுக்கு இருக்கின்ற இந்த உரிமையை தமிழ் பேசும் மனிதர்களுக்கும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கும் கட்சிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் மறுப்பது என்பது அடிப்படையில் இனவாத செயற்பாடே என்கின்றார். அதேவேளை அவர்கள் அவர்களை அனுமதிப்பதும் இவர்களை அவர்கள் தடைசெய்வதும் ஆச்சரியமான ஒன்றல்ல. அவ்வாறுதான் செய்வார்கள். அவர்களது இவ்வாறான சிந்தனையையும் செயற்பாடுகளையும் முறியடிப்பதும் நம் வேலை திட்டங்களில் ஒன்றே. இதன் மூலம் தமிழ் தேசிய விடுதலைக்காக போராடி மரணித்த ஒவ்வொருவரையும் தமிழ் பேசும் சமூகங்கள் வடக்கு கிழக்கில் வருடா வருடம் நினைவு கூறுவதை உறுதி செய்வதற்கான உரிமைப் போராட்டத்தையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கவேண்டியது தவிர்கப்படமுடியாததும் அவசியமானதுமாகும்.

தமிழ் தேசிய விடுதலையை முன்னெடுத்த ஒவ்வொரு தமிழ் இயக்கங்களும் தம் இயக்கத்திலிருந்து போராடி மடிந்த போராளிகளை நினைவு கூறும் வகையில் ஒருimages2 நாளை தெரிவு செய்து கடந்த 40 வருடங்களாக அஞ்சலி செய்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலைப் புலிகள் இயக்கம் நவம்பர் மாதம் கடைசி கிழமைகளில் இவ்வாறன அஞ்சலியை செய்து வருகின்றது. இதேவேளை பிற இயக்கங்களின் தலைமைகளின் தவறுகளாலும் மற்றும் புலித் தலைமைகளின் ஒரே பிரதிநிதித்துவ ஏகபோக உரிமைக் கொள்கையாலும் பிற இயக்கங்கள் அல்லது போராளிகள் துரோகிகளாக கட்டமைக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டன. பல போராளிகள் (உட்)கொலை செய்யப்பட்டனர். இவ்வாறான ஒரு சூழலில்தான் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக புலிகளின் மாவீர்ர் நாளே தமிழ் தேசத்தின் போராடி மடிந்த போராளிகளை நினைவு கூறுகின்ற நாளாக மாற்றப்பட்டு பரவலாக கட்டமைக்கப்பட்டு வரப்பட்டது.

இந்தடிப்படையில்தான் போருக்கு முன்பு இலங்கையின் வடக்கு கிழக்கிலும் ஆனால் தொடர்ச்சியாக புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கின்ற பெரும்பான்மைத்(?) தமிழ் பேசுகின்ற சமூகங்களால் மாவீரர் தினம் நினைவு கொள்ளப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகின்றது. ஆனால் இது விடுதலைப் புலி இயக்கத்தில் இணைந்து போராடி இறந்த போரளிகளை மட்டுமே நினைவு கூறுகின்ற நாள் என்பதே பொருத்தமானது. ஏனெனில் இந்த நினைவு நாட்களில் பிற இயக்கங்களில் அர்ப்பணிப்புடன் விடுதலைக்காகப் போராடி மடிந்த போராளிகளை நினைவு கூறுவதில்லை. ஆகவே இது தமிழ் பேசுகின்ற சமூகங்களில் தேசிய நினைவு தினமாக இருக்க பொருத்தமானதல்ல.

இதேவேளை (வடக்கு கிழக்கில்) புலத்தில் உள்ளவர்கள் விரும்பினாலும் மரணித்தவர்களை நினைவு கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் இன்று வாழ்கின்றனர். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளிலோ இது மிகப் பெரும் வருமானம் தருகின்ற நிகழ்வாக ஆடம்பரமாக நடைபெற்று வருகின்ற ஒன்று. இந்த வருமானத்தைப் பெறுவதற்காக கொலைகளை கூட செய்யத் தயங்காதவர்களாகவும் இதன் ஒழுங்கமைப்பாளர்கள் இருக்கின்றமை மிகவும் வருத்தத்திற்கு உரியது மட்டுமல்ல வெட்கக்கேடான ஒரு செயற்பாடாகும். இது விடுதலைக்காக மரணித்த போராளிகளை அவமானப்படுத்துகின்ற செயல். ஆனால் இவர்கள் இவ்வாறு செய்வதும் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் விடுதலைப் புலிகள் இயக்கம் (மட்டுமல்ல அனைத்து இயக்கங்களும்) கட்டமைக்கப்பட்டு வந்த்தும் இவ்வாறான ஒரு பண்புகளின் அடிப்படையிலையே என்றால் மிகையல்ல. அதன் விளைவுகளைத்தான் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான வியாபாரிகளிலிருந்தும் மரணித்த போராளிகளை விடுவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

விடுதலைப் புலி அமைப்பை சார்ந்தவர்கள் அதிர்ஸ்டவசமாக மனம் மாறி பிற இயக்கப் போராளிகளையும் உள்ளடக்கி நினைவு கூறினாலும் அது பொருத்தமானதாக இருக்காது. ஏனெனில் விடுதலைப் புலி (தலைவர் பிரபாகரன் முதல் கிட்டு, அருணா வரை…) அங்கத்தவர்களால்  படுகொலை செய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையான சக மற்றும் பிற இயக்கப் போராளிகளின் உறவினர்களுக்கும் அங்கத்தவர்களுக்கும் இந்த நாளை தமது மரணித்த போராளிகளின் நினைவு நாளாக அனுஸ்டிப்பதற்கு பாரிய மனத் தடைimages5 இருக்கும். இதேபோல் பிற இயக்கங்களால் (உமாமகேஸ்வரன் முதல் மாணிக்கதாசன் வரை.. சிறிசபாரட்டனம் முதல் பொபி தாஸ் வரை..) குறிப்பாக இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலங்களிலும் அதன் பின்பும் (ஈபிஆர்எல் எவ், டேலோ, ஈஎன்டிஎல்எவ் அமைப்புகளால்) கொல்லப்பட்ட புலி இயக்கப் போராளிகளின் உறவுகளுக்கும் அங்கத்தவர்களிற்கும் இது முரண்பாடானதாகவே இருக்கும். இவர்களின் இவ்வாறான மனத்தடைகள் முரண்பாடுகள் புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றே.

அதேவேளை இவ்வாறான மனத்தடை மற்றும் முரண்பாடுகளை புரிந்தும் கடந்தும் நாம் ஒன்றினைந்து செயற்படவேண்டிய தேவையும் உள்ளது. ஆகவே தமிழ் தேசிய விடுதலைக்காகப் போராடி மரணித்த போராளிகளை நாம் ஒருமுகமாக ஒரு நாளில் நினைவு கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். அப்பொழுதுதான் பெரும்பான்மையான தமிழ் பேசும் சமூகங்களும் மனிதர்களும் உணர்வுபூர்வமாக பங்குபற்றுவதுடன் புதிய எழுச்சியையும் சக்தியையும் உருவாக்கவும் வழிவகுக்கும். இதுவே தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் சரியான திசைவழியில் பயணிப்பதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் மே 18ம் திகதி நாம் அனைவரும் ஒன்றுபடும் நாளாக இருக்கின்றது. அன்றைய நாள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமடைந்த நாளாக இருப்பினும் நமது (தவறான) ஆயுதப் போராட்ட வழிமுறைகள் முடிவுக்கு வந்த ஒரு நாளும் அதுவே. மேலும் கடந்த காலங்களை விட அதிகளவிலான தமிழ் பேசும் மனிதர்களும் போராளிகளும் மரணித்த ஒரு நாளுமாகும். இந்த நாளை தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் இணைந்து தமிழ் தேசத்தின் தேசிய துக்க நாளாகவும் அனைத்துப் போராளிகளை நினைவு கூறுகின்ற தேசிய நாளாகவும் ஏன் முன்மொழியக் கூடாது? இது தமிழ் தேசிய விடுதலைக்கான புதிய அரசியல் பாதைக்கான ஆரம்பமாகவும் அமையலாம்

பி.கு: புலிகள் இயக்கத்தில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் மரணித்த போராளிகளை கடந்த் நவம்வர் 27ம் திகதி நினைவு கூறியமைக்காக யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் தண்டிக்கப்பட்டும் சிறைப்படுத்தப்பட்டும் உள்ளனர். இவர்களது விடுதலைக்காக புலம் பெயர்ந்த மாணவர் சமூகம் எழுச்சி கொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த எழுச்சி விடுதலைப் புலிகள் இயக்கத்தை முதன்மைப்படுத்தாது கைது செய்யப்பட்ட மாணவர்களை முதன்மைப்படுத்துவதே அவர்களது விடுதலைக்கும் பாதுகாப்பிற்கும் நன்மையளிக்கும். இந்தடிப்படையில் இதற்கான போராட்டங்களின் போது புலிக்கொடிக்களை தவிர்ப்பது அவர்களுக்கு நன்மையானது. இதைப் புலம் பெயர் சமூகம் புரிந்துகொள்ளுமா?

மீராபாரதி

01.12.2012

தொடர்புகளுக்கு – meerabharathy@gmail.com

வலைப்பதிவிற்கு – https://meerabharathy.wordpress.com/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: