Posted by: மீராபாரதி | November 22, 2012

ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும் – புறம் நோக்கிய விமர்சனம் – பகுதி இரண்டு

ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும் – புறம் நோக்கிய விமர்சனம் – பகுதி இரண்டு

பகுதி இரண்டு – புறம் நோக்கிய விமர்சனம்

உலக சனத் தொகையில் ஆண்களும் பெண்களும் எண்ணிக்கையடிப்படியில் பருமட்டாக சரிசமானமாகவே இருக்கின்றார்கள். ஆனால் பொதுவெளிகளில் ஆண்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றார்கள். அவர்களிடம் தான் பெரும்பான்மையான அதிகாரம் உள்ளது. இதில் யாருக்கும் முரண்பாடோ சந்தேகமோ இல்லை என நம்பலாம். ஆகவேதான் சமூக மாற்றத்தை நோக்கி செயற்படுகின்றவர்கள் தாம் பயன்படுத்துகின்ற மொழியைப் பயன்படுத்துவதில் மிகவும் ஆழமான விழிப்புநிலை உடையவர்களாகவும் பிரக்ஞையுடன் செயற்படவேண்டியவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது. ஏனெனில் நம் குரல்களிலிருந்து ஒலிப்பது ஆண்களின் குரல். நாம் பேசுவது, எழுதுவது ஆண்களின் மொழி. இந்தக் குரல்களும் மொழிகளும் ஆதிக்கம் செய்கின்ற ஆண்களின் உலகத்தில் தான் நமது வாழ்வு. எங்கும் எதிலும் ஆண்களின் தலைமைத்துவம் மற்றும் அதிகாரம் பரந்து ஆழ்ந்து வேருன்றியிருக்கின்றது. இவர்கள் உருவாக்கிய சமூக நிறுவனங்கள் மற்றும் ஆண்களின் கலாசாரம் நிலவுகின்ற சமூகத்திற்க்குள்தான் ஆண்களினது மட்டுமல்ல பெண்களினது வாழ்வும் இருக்கின்றது. இவ்வாறான சூழலுக்குள் வாழ்வது ஆண்களுக்கு ஒப்பிட்டளவில் பிரச்சனையில்லாது இருக்கலாம். ஆனால் நிச்சயமாக பெண்களுக்கு பிரச்சனையானதே.

பெண்கள் இன்னும் தமது குரல்களை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் தமது மொழியைக் கண்டுபிடிக்கவில்லை. தாம் பயமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கான தமது சமூகத்தையோ கலாசாரத்தையோ உருவாக்கவில்லை. ஆனால் அதைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுவரை அவர்கள் ஆண்கள் உலகத்தில் வாழ்ந்து, ஆண்களின் மொழியைத்தான் பேசவேண்டியுள்ளது.

யதார்த்தம் என்பது மேற்குறிப்பிட்டவாறு அல்லது இதற்கு அண்மையாக இருக்கின்ற ஒன்று. அதேவேளை, ஆண்களும் பெண்களும் தமது வர்க்க, சாதிய, இன, நிற, கல்வி மற்றும் சுழ் நிலைகளுக்கு ஏற்ப அதிகாரமுள்ளவர்களாகவும் அதிகாரமற்றவர்களாகவும் ஒவ்வொரு தளங்களில் இருகின்றார்கள் என்கின்ற இன்னுமொரு யாதார்த்தமும் உள்ளது. இதற்கேற்ப ஒருவரது குரல் உரத்தும் மற்றவரது குரல் தாழ்ந்தும் ஒலிக்கும். அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகாரங்கள் சலுகைகள் மாறுபடும். பொதுவாக இந்திய சமூகத்தில் பிராமணிய உயர் வர்க்கத்தினருக்கும், மேற்குலகில் உயர் வர்க்க வெள்ளையினத்தவர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அதிகமாக கிடைக்கின்றன. ஒரு அடக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணைவிட பிராமணிய பெண்ணுக்கும் புலம் பெயர்ந்து வாழ்கின்ற வெள்ளை நிறமல்லாத ஆணைவிட வெள்ளையினப் பெண்களுக்கும் சலுகைகளும் வாய்ப்புகளும் அதிகாரமும் செல்வாக்கும் அதிகமாகத்தான் இருக்கின்றன. இருப்பினும் ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் அவர்கள் சுந்திரமாக தனித்து பயமின்றி நடமாட முடியாது. அந்தளவிற்கு பல்வேறு தளங்களில் பலவகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள்.

ஆகவே இவ்வாறான பிராமணிய அல்லது வெள்ளையினப் பெண்களுக்கு எதிராக சாதி, இன, நிற மற்றும் பலவகையான காரணங்களை அடிப்படையாகக்கொண்டு பாலியல்ரீதியாக வசைபாடுகின்றமை அவர்களுக்கு எதிரான ஆண்களின் இன்னுமொருவகையான ஆணாதிக்க அடக்குமுறைதான். இந்த ஆண்கள், சாதி, மத, இனரீதியாக அடக்கப்படுகின்ற பெண்களுக்கு எதிராகவும் இவ்வாறன பாலியல் வசைகளை நாளைக்கு முன்வைக்க தயங்கமாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதற்கான எந்த உதரவாதமுமில்லை. ஆனால் இவ்வாறு முன்வைப்பதற்கான காரணங்கள் மட்டுமே வேறுபடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சாதி, மத, இன ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட பெண் பலதளங்களில் அடக்குமுறைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். இதன் விளைவாக பெண்களின் குரல் தொடர்ந்தும் அடக்கப்படுதவற்கே வழிவகுக்கும். ஆகவேதான் ஒவ்வொருமுறையும் அடக்குமுறைகள் குறிப்பாக சமூகத்தில் ஏற்கனவே அடக்கப்படுகின்றவர்களுக்கு எதிரான எந்த வடித்தில் எங்கிருந்து வந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியிருக்கின்றது. அதேநேரம் இவ்வாறு எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் மற்றும் நடைமுறை செயற்பாடுகள் தொடர்பாக பிரக்ஞை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது.

மேற்குறிப்பிட்டவாறான ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த, அவர்களது கலாசாரம் பேணப்படுகின்ற ஒரு சூழலில் பெண்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கு பொதுவாக முன்வருவதில்லை. ஆனால் கடந்த காலங்களில் நடைபெற்ற பெண்விடுதலை தொடர்பான போராட்டங்களும் அது உருவாக்கிய கருத்து நிலைகளும் மற்றும் இன்றைய பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் தவிர்க்கப்பட முடியாத பங்குபற்றல்களும் மேற்குறிப்பிட்ட நிலையில் சிறிது சிறிதாக மாற்றங் கண்டு வருகின்றது. ஆகவே இவ்வாறான சூழல்களில் தைரியமாக முன்வருகின்ற பெண்களை வரவேற்கவேண்டும். ஊக்குவிக்க வேண்டும். அதேவேளை இந்தப் பெண்களும் தமது கருத்துக்களைக் கூற ஆணாதிக்க சமூகத்திலிருந்து கற்ற வசை மொழிகளை அறிந்தோ அறியாமலோ பயன்படுத்துகின்றார்கள். ஆனால் சமூக அக்கறைகொண்டு தமது சாதிய தேசிய வர்க்க அரசியல் நிலைப்பாடுகளினடிப்படையில் இவற்றை எதிர்க்கின்ற பெரும்பான்மையான ஆண்கள் மேற்குறிப்பிட்ட பெண்களைவிட மேலும் கீழிறங்கி பாலியல் வசை மொழிகளை இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். இது பெண்கள் தமது கருத்துக்களைக் கூறுவதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்காமல் விடுவதுடன் அவர்களது கருத்துக்களைக் கூறுவதற்கான சுதந்திரத்தையும் தடுத்து நிறுத்திவிடுகின்றது. ஆகவேதான் இவ்வாறான வசைபாடல்கள் ஆரோக்கியமற்ற விவாத முறையாக இருக்கின்றது. இதற்கு மாறாக வசை மொழியை விமர்சிப்பதுடன் அதிலிருந்து மேல் சென்று அவர்கள் முன்வைத்த கருத்தை கருத்தியல்ரீதியாக மட்டுமே விமர்சிக்கின்ற பண்பு அனைவருக்கும் வரவேண்டும். அப்பொழுதுதான் தவறாகவும் வசைகளுடனும் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் தமது தவறை உணரவும் அவர்கள் மேலும் வளரவும் வழிவகுக்கும். இவ்வாறன ஒரு சூழலில்தான் பல பெண்கள் நம்பிக்கையுடன் விவாதங்களில் பங்கேற்றக முன்வருவார்கள். அவர்கள் அவ்வாறு முன்வருவதும் ஆண்களுக்கும் நன்மையானதே. ஏனெனில் பெண்களின் முழுமையான விடுதலையில்தான் ஆண்களின் முழுமையான விடுதலையும் தங்கியிருக்கின்றது என்ற கூற்றை இங்கு நினைவு கூறுவது பொருத்தமானது. ஆனால் நாம் வாழும் சூழல் தமது கருத்துக்கள் தவறானதாக இருந்தபோதும் அதை முன்வைப்பவர்களை தடுத்து நிறுத்துவதாகவே உள்ளது. இது ஆரோக்கியமானதல்ல.

ஒரு தனிநபர் குறிப்பிட்ட சாதி, வர்க்கம், இனம் என்பவற்றில் பிறந்தது என்பது தற்செயலானது. இதனால் ஒருவரது கருத்துக்களுக்காக அவரை எதிர்ப்பதும் மறுப்பதும் ஆரோக்கியமற்ற ஒரு போக்கு. ஏனெனில் ஒரு சமூகத்தில் வளர்ந்தவர் தனது நம்பிக்கைகளுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப குறிப்பிட்ட சமூகத்தின் கருத்துக்களையே பிரதிநிதித்துவப்படுத்துவார். நாம் அறிகின்ற கருத்துக்களையும் பார்க்கின்ற நிகழ்வுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற பண்போ கல்வியுட்டலோ நமது சமூகங்களில் இல்லை. ஆகவே ஒருவரது கருத்துக்கள் ஆரோக்கியமான தளத்தில் விமர்சிக்கப்படவேண்டும். குறிப்பிட்ட தனிநபரல்ல மாறாக அவர் சார்ந்து நிற்கின்ற கருத்தியலும் நிறுவனமும்தான் விமர்சனத்திற்கு உட்படவேண்டும். அப்பொழுதுதான் நாம் நம்புகின்ற சரியான பாதையில் பயணிப்பதற்காக குறிப்பட்ட நபரையும் வென்று எடுக்கலாம். இது வன்முறையற்ற பாதையில் அதிகாரத்துவ கருத்துக்களையும் அதன் நிறுவனங்களையும் செயலிழக்கச் செய்யக்கூடிய ஒரு வழிமுறையாகும். ஆனால் நாம் அதைச் செய்யாது நமது வசைபாடல்கள் மூலம் தனிநபர்களை விரோதிகளாக்கிவிடுகின்றோம். இவ்வாறன வழிமுறை நீண்டகால நோக்கில் எந்தவகையிலும் பயனளிக்கப்போவதில்லை. மாறாக அடக்கப்படுகின்றவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படவும் பலமின்றி பிரிந்திருக்கவும், அதிகாரத்திலுள்ளவர்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கவுமே வழிவகுக்கும். ஆகவே பல தளங்களில் அடக்கப்படுகின்ற நாம் பொறுப்புடன் செயற்படுவதுடன் சில பொதுவரையறைகளையும் நமக்குள் உருவாக்கவேண்டும்.

இந்த அடிப்படைகளில்தான் அண்மையில் நடைபெற்ற தம்மீதான வசைபாடல்களுக்கு எதிரான முறைப்பாடுகளை கவனிக்கவேண்டியுள்ளது. ஒரு (பிரபல்யமான ஆனால் சமூக மாற்ற மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாத) பெண் தன் மீது ஆண்கள் பொதுத்தளங்களில் முன்வைத்த பாலியல் வசைகளுக்கு எதிரான முறைப்பாட்டை தனது புரிதலுக்கு உட்பட்ட, தெரிந்த, தான் பாதுகாப்பானது என நம்புகின்ற வழிமுறைக்கூடாக முன்வைத்தார். ஒரு சதாரண பெண்ணின் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது இவரது இச் செயற்பாடு புரிந்துகொள்ளப்பட கூடியதே. இதற்கு மாறாக இப் பெண்ணிடம் ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளருக்குரிய பண்பையும் புரிதலையும் எதிர்பார்ப்பது எந்தவகையிலும் நியாயமற்றது. ஆனால் சமூக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலும் பரந்த அறிவும் கொண்ட, சமூக அரசியல் மாற்றங்களை நோக்கமாகக் கொண்டு புரட்சிகரமாக செயற்படுகின்ற பிரபல்யமான ஒருவர் தன் மீதான வசைகளுக்காக இவ்வாறன ஒரு முறையிடலை ஆதிக்க சமூக நிறுவனங்களிடம் முன்வைக்கும் பொழுதுதான் முரண்பாடு உருவாகின்றது. இவர்களின் இவ்வாறன செயற்பாடு நமக்கு கவலையும் மற்றும் சமூக மாற்றத்தின் மீதான நம்பிக்கையினத்தையுமே தருகின்றது. அதேவேளை நமது புரிதலுக்கும் எழுத்துக்கும் யதார்த்த வாழ்விற்கும் இடையிலான முரண்பாடுகளை கேள்விக்குட்படுத்துவதுடன் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.    இதை நாம் புரிந்துகொள்ளதாவரை நமது நிலைப்பாடுகளும் விமர்சனங்களும் தனிநபர் சார்ந்ததாகவே இருக்கும் மாறாக கருத்துநிலைகள் சார்ந்தவையாக இருக்காது. இது எந்தவகையிலும் சமூக மாற்றத்தை உருவாக்க உதவப்போவதில்லை.

பொது இணையத்தளங்களான வலைப்பதிவுகள், முகப்புபுத்தகம், டூவிட்டர்கள் போன்றவற்றில் எழுதுகின்ற ஒவ்வொருவரும் இணைய ஊடகவியளாளர்களே என்றால் மிகையல்ல. ஆகவே இவ்வாறு எழுதுகின்ற கருத்துத் தெரிவிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஊடக அறத்தைப் பேணுகின்ற பொறுப்பு உள்ளது. ஆனால் பொறுப்புடன் இருக்கவேண்டிய பிரபல்யமான ஊடகங்களே இவ்வாறன அறங்களை மீறி செயற்படும் பொழுது இணையத்தளங்களில் குப்பைகளைக் கொட்டும் எழுத்தாளர்களைப்  பற்றி என்ன தான் கூறமுடியும். ஆனால் நம் மனதுக்குள் அடக்கிவைக்கப்பட்டிருக்கின்ற மனவக்கிரகங்களான இந்தப் குப்பைகள் ஆண்களின் கழிப்பறைகளில் எழுதுவதைப் போல் இருக்கின்றபோதுதான் வருத்தமாக இருக்கின்றது. இதுவே அவசியமற்ற பிரச்சனைகளையும் ஆரோக்கியமற்ற சுழல்களையும் உருவாக்குகின்றது. ஆகவேதான் இவ்வாறு நாம் கழிப்பறைகளில் கொட்டுகின்றதைப்போல பொதுவெளிகளிலும் கொட்டவேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறன விமர்சனங்கள் எந்தளவிற்கு சக மனிதர்களை வளர்க்க உதவி புரியும்? ஆகவேதான் இந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த இணைய மற்றும் வலைப்பதிவு வாய்ப்புக்களை எவ்வாறு பயனுள்ளவகையில் பொறுப்புடனும் ஆரோக்கியமாகவும் நம் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்போகின்றோம் என்பது நம்முன்னுள்ள மிகப்பெரிய கேள்வியாகும். இதற்கு சுதந்திரம் என்பது பொறுப்புடன் கூடியது என்ற புரிதல் இருந்தால் மட்டுமே சாத்தியமானது. ஆனால் இவ்வாறன புரிதல் இணைய எழுத்தாளர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் தூரதிர்ஸ்டமானதாகும்.

மீராபாரதி

06.11.2012

நன்றி ஏதுவரை – 06

http://eathuvarai.net/?p=2046

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: