Posted by: மீராபாரதி | November 22, 2012

ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும் – அகம் நோக்கிய (சுய)விமர்சனம் – பகுதி ஒன்று

ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும்

– அகம் நோக்கிய (சுய)விமர்சனம் – பகுதி ஒன்று

எனது அப்பாவின் சமூக அடையாளங்கள் பல.  ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டதுபோல், அவர் 60களின் புரட்சியாளர். மார்க்சியவாதி, 70களில் சிறையிலிருந்து வெளிவந்தபின் தொழிற்சங்கவாதி, இறுதியாக அரசியல்வாதி என அவர் வாழ்வு முடிந்தது. ஆனால் ஒரு கணவராக, துணைவராக, தந்தையாக எப்படி வாழ்ந்தார் என்பது நமக்கு – குடும்ப அங்கத்தவர்களுக்கு- மட்டுமே தெரிந்த உண்மை. கட்சியிலிருந்து வெளியேறியபின் அல்லது வெளியேற்றப்பட்டபின், தொழில் ஒன்றில்லாது குடிக்கு அடிமையாக இருந்த காலங்களில் அவர் குடும்பத்திற்குள் எவ்வாறு இருந்தார்?.

அம்மா பத்தாம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்தி, “கணவரே கண் கண்ட தெய்வம்” என வாழ்ந்தார். ஆனால் கணவரோ கடவுள் நம்பிக்கையில்லாதவர். சமூக, குடும்ப, அரசியல் நிகழ்வுகளால் அம்மா பாதிக்கப்பட்டபோதும், அரசியல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்குத்தான் அம்மாவின் பொது மற்றும் அரசியல் அறிவு. கடவுளான கணவரின் அரசியல் செயற்பாடுகளின் விளைவுகளினால் உருவான குடும்ப வறுமைமையில் சிக்குண்டார். அதற்கு முகம் கொடுத்தார். மேலதிகமாக இவரது கணவர், அவரது வாழ்க்கை மற்றும் அரசியலில் ஏற்பட்ட தோல்வி, அதன் விளைவாக ஏற்பட்ட விரக்தி, குடி, மற்றும் மனவழுத்தம், மனச் சோர்வு (இவற்றைப் பற்றிய விழிப்புநிலை அன்று இருந்ததா என்பது கேள்விக்குறியே) என்பவற்றினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றினால் அவருக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளின் விளைவாக அம்மா வாங்கிய அடிகளுக்கும் உதைகளுக்கும் அளவேயில்லை. ஆனாலும் அம்மாவுக்கு கணவர் கடவுளாகவே இருந்தார். இதேநேரம் வெளியுலகில் அப்பாவின் வாழ்வும் அடையாளமும் மேங்குறிப்பிட்டதற்கு முற்றிலும் வேறானதாகவே இருந்தது. இவ்வாறன நிலையில் இவரை விடுதலைப் போராளி, சமூக செயற்பாட்டாளர் என மதிப்பதா? இல்லை குடும்ப வன்முறையில் ஈடுபடுகின்றார் என குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனைக்குள்ளாக்கிப் புறக்கணிப்பதா? இதற்கான கோட்டை எங்கோ கிறுவது?

குடும்பத்திற்குள் நடந்த வன்முறையை அம்மா அன்று வெளியில் சொல்லவில்லை. அவருக்கு சொல்ல முடியவில்லை. சொல்லத் தெரியவில்லை என்பதே உண்மை. இதற்கு அவரது அறிவு, ஆற்றல்கள் என்பவற்றின் பற்றாக்குறைகள் எனப் பல காரணங்கள் இருக்கலாம். அன்று அம்மா இவற்றைச் சொல்லியிருந்தாலும், சமூகம் மட்டுமல்ல புரட்சிகர கட்சியும் அதன் தலைமையும் தோழர்களும் புரிந்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இவ்வாறான குடும்ப வன்முறைகள் தொடர்பாக 70களின் இலங்கையிலிருந்த விழிப்புநிலை மிகவும் குறைவானதே. தொழிலாளர்களின், இனங்களின் உரிமைகள் முக்கியத்துவமாக இருந்தளவிற்கு பெண்ணுரிமைகள் தொடர்பான விழிப்புநிலை இன்றுபோல் அன்று இல்லை என்றே கூறலாம். ஆகவே சமூகத்தில் மட்டுமல்ல புரட்சிகர கட்சி அங்கத்தவர் குடும்பங்களிலும் பெண்ணடிமைத்தனமும் பெண்கள் மீதான வன்முறையும் மற்றும் பொருளாதார, பாலியல் சுரண்டல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்ற காலம் அது என்றால் மிகையல்ல. (இப்பொழுதும் ஒன்றும் குறைந்து விடவில்லை). இக் காரணங்களுக்கா அப்பா அன்று முன்னெடுத்த அரசியல், அதனடிப்படையிலான செயற்பாடுகளுக்கான நியாயத்தன்மை இல்லாது போய்விடுமா? இந்த முரண்பாடுகள் அப்பாவின் தலைமுறையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. என் தலைமுறையிலும் தொடர்கின்றது.

சிறுவயதிலிருந்து எனக்குள் வன்முறை வளர்ந்தது. இந்த வன்முறை எங்கிருந்து வந்தது… எனது பரம்பரை மற்றும் தாய் தந்தையின் மரமணுவிலிருந்தா…? குடும்ப சுழலிலிருந்தா….? சமூகத்திலிருந்தா…? அல்லது இவை அனைத்திலுமிருந்தா…? என்பது தெரியாது… ஆனால் இவற்றின் பாதிப்புகள் எனக்குள் வன்முறையை வளர்த்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றால் மிகையல்ல. மிக சில சந்தர்ப்பங்களில் மட்டுமே எனது பலத்தை என்னை விட பலம் கூடியவர்களுடன் காட்டியிருக்கின்றேன். மற்றும்படி அதிகாரமற்ற, பலமற்ற சகோதரிகள் மீது ஆரம்பத்திலும்… சில காலத்தின் பின் அம்மா மீதும்… பின் துணைவியார் மீதும் எனது வன்முறை செயற்பாடுகள் தொடர்ந்தன… இதற்கான காரணங்கள் பெண்கள் பற்றிய சமூகத்தினதும் ஆண்களினதும் பார்வைகளும் மற்றும் ஆண்களிடம் இருப்பதாக நம்பப்படுகின்ற பலம், கிடைக்கின்ற அதிகாரம் போன்ற சலுகைகளும் காரணமாக இருக்கலாம். இந்தடிப்படைகளில் ஆரம்ப காலங்களில் பெண்கள் தொடர்பாக சமூகத்தின் ஆணாதிக்க பார்வையையே நானும் கொண்டிருந்தேன் என்பது ஆச்சரியமானதல்ல.

எனது (புரட்சிகர) அரசியல் தேசிய அரசியலுடன் இணைந்தே உருவானது. அரசியல் முக்கியமானது எனது உணர்ந்தளவிற்கு வர்க்க அரசியல் பற்றியெல்லாம் ஆரம்பத்தில் சிந்திக்கவில்லை. பெண்ணியம் தொடர்பான நிலைப்பாடும் இவ்வாறாகவே இருந்தது. ஆனால் 80களின் இறுதியில் உருவான பெண் உரிமைகள் தொடர்பான அறிதல், பெண்களை மதிக்கவேண்டும், ஏமாற்றக் கூடாது, அவர்களது வீட்டு வேலைகளுடன் பங்குகொள்ளவேண்டும் என மேலோட்டமானதாகவே இருந்தது. இதனால் நான் விரும்பிய குறிப்பிட்ட ஒரே ஒரு பெண்தான் என் வாழ்க்கைத் துணைவி. மணந்தால் அவள்தான். இல்லை என்றால் வேறு யாரும் இல்லை. திருமணத்திற்குப் பின்பே உடலுறவில் ஈடுபடுவது. அதுவும் அவளது விருப்பத்திற்கு மாறாக நடைபெறக்கூடாது. பாலியல் தொழிலாளர்களிடம் (அன்று அவர்கள் “வேசிகள்” அல்லது “விபச்சாரிகள்”) செல்லக்கூடாது, நீலப் படங்கள் பார்க்கக் கூடாது என பல பாரம்பரிய சமூக கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் தேசிய அரசியல் என்பவற்றின் அடிப்படையில் பல வரையரைகளை நானாகவே எனக்கு வகுத்துக்கொண்டு அதற்கு உண்மையாக இருந்த காலங்கள் அவை. இவ்வாறான இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் எவ்வளவு காலம் தான் வாழ்வது? என்பது மட்டுமல்ல இக் கட்டுப்பாடுகள் சரியானவையா என்ற கேள்விகளும் எனக்குள் எழும்பின.

வாழ்வின் யதார்த்தமும் வேறு ஒன்றாக இருந்தது. ஒரு பெண்ணிலிருந்து பல பெண்கள் மனதில் வந்தார்கள். சிலர் வாழ்க்கையில் உறவானார்கள். திருணமத்திற்கு பின்தான் பாலியலுறவு என்ற கொள்கை யதார்த்த வாழ்வில் காற்றில் பறந்து சென்றது. எனது விருப்பம் முதன்மையானது. பிரதானமானது. அவளது விருப்பம் இரண்டாம் பட்சமானது. ஆகவே நான் உடலுறுவு என நினைத்த்து அவளுக்கு வன்புணர்வானது. இது எனக்கு சர்வ சதாரணமானது. ஆனால் அவளுக்கு அது வலியானது. இது எனக்கு புரியாதுபோனது. மறுபுறம் இவ்வாறான பாலியலுறவின் அனுபவம் நீலப்படங்களுக்கு இழுத்துச் சென்றது. இங்கிருந்து பாலியல் தொழிலாளர்களிடம் சரணடையவும் வைத்தது. பாலுறவு ஒருவருடன் மட்டும்தான் என்ற கொள்கையும் காற்றோடு காற்றாக பறந்துபோய்விட்டது. திருமணம் என்ற பந்தம் முக்கியமற்றதாகியது. யாருடனும் அவர்களின் உடன்பாட்டுடன் உறவு கொள்வதில் தவறில்லை என்ற புதிய புரிதல் உருவானது. ஆனால் அவ்வாறு உறவு கொள்ள விரும்பும் பெண்களிடம் காதல் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. காமம் என்று உண்மை சொல்ல முடியவில்லை. ஆனாலும் மறுபுறம் நான் முன்பைவிட மேலும் ஆழமான பெண்ணிலைவாதியாக மாறிக் கொண்டு வந்தேன். இம் மாற்றம் எனக்குள் ஆழமாக வேருண்டியிருந்த ஆணாதிக்க வேர்கள் பலவற்றையும் வெளிக்கொண்டு வருகின்றது. (கோட்பாடுகளின் நன்மைகள் இதுதான் போல). இதனால் முரண்பாடுகளும் எனக்குள் வளர்ந்தன. ஆகவே என் மனசாட்சி ஒவ்வொரு கணமும் “எது சரி” என என்னைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றது. இது எனக்குள் தினந்தோறும் நடைபெறும் ஒரு அகப்போராட்டம். இப்படித்தான் இதை வாசிக்கின்ற ஒவ்வொரு ஆணுக்கும் இருக்குமா?

இவ்வாறன சூழலில்தான் எனது வாழ்வுமுறையும் வன்முறை பாதையும் தவறு என ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டேன்… அதற்கு செலவழியும் சக்தியை ஆரோக்கியமான வழிகளில் பிரக்ஞைபூர்வமாக செயற்படுத்த தியானத்தைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்…. இதனால் ஆழமான புரிதல் மற்றும் சிறு பயன் கிடைத்தபோதும், பல நேரங்களில் எனது பிரக்ஞையின்மை ஆதிக்கம் செலுத்த என்னையும் மீறி எனக்குள் இருந்த வன்முறையும் பெண்களுக்கு எதிரான போக்கும் வெளிப்படுகின்றன. இது எனக்குள் ஒரு பிரதான முரண்பாடாகவே இன்றுவரை இருந்துவருகின்றது. இவ்வாறு முரண்பாடுகளுடன் எனது வாழ்வின் ஒவ்வொரு கணங்களும் கடந்து செல்கின்றன. ஆனாலும் உண்மையான நேர்மையான வாழ்வை நோக்கிய தேடல் நம்பிக்கையுடன் தொடர்கின்றது.

இவ்வாறான வாழ்வின் ஓட்டத்தில் ஒரு பெண் வாழ்க்கைத் துணையானால். நான் கல்வி கற்றளவு அவரும் கற்றிருக்கின்றார். நிரந்தர(?) தொழில் செய்கின்றார். வருமானம் வருகின்றது அவருக்கு. ஆண்களுக்கு எதிரான விமர்சனங்களை நெற்றில்பொட்டில் அடித்தால்போல் தனிப்பட முன்வைப்பார். (இதன் விளைவுகள் தான் இக் கட்டுரையும் என்றால் மிகையல்ல.) இவைதான் என் அம்மாவிலிருந்து அவரை வேறுபடுத்தியது. ஆனால் அம்மாவைப் போல அரசியல் அக்கறை மட்டும் இல்லாதிருக்கின்றார். மேலும் தனது கருத்துக்களை பொது தளங்களில் முன்வைப்பதற்கு தயக்கமுள்ளவராக இருக்கின்றார். தமிழில் எழுதி வெளியிடும் ஆற்றலும் இல்லாதிருக்கின்றார். இதனால் தற்சமயம் வரை பொதுத்தளங்களில் கிடைக்கின்ற வசைபாடும் தண்டனைகளிலிருந்து தப்பித்து வாழ்கின்றேன் நான். இது எனக்கு அதிர்ஸ்டமாக இருக்கலாம். ஆனால்  இதுதான் நம் ஒவ்வொருவர்களதும் யதார்த்த வாழ்வின் முரண்கள்.

சில காலத்திற்கு முன்பு தமிழ் இலக்கிய, அரசியல், இணைய மற்றும் செயற்பாட்டு சுழல்களில் பிரபல்யமான இரு உறவுகளின் பல்வேறு முரண்பாடுகள் பொதுவெளியில் அலசி ஆராயப்பட்டன. ஒரு ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக நின்று வசை மொழிகளைப் பயன்படுத்தி வாதிட்டபோதும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து அதில் உறுதியாகவும் இருந்தனர். ஆனால் தொடர்ந்தும் தமது தளங்களில் செயற்படுகின்றனர். குறிப்பிட்ட பெண் இவ்வாறான சண்டைகளின் பின்பும் தொடர்ந்தும் பொதுவெளியில் செயற்படுவதற்கு மிகுந்த தைரியமும் உறுதியும் வேண்டும். இந்தப் பெண்ணுடன் முரண்பாடுகள் விமர்சனங்கள் இருந்தபோதும், இதற்காக மதிக்கப்படவேண்டியவர். ஆனால் இன்னுமொரு பிரபல்யமான உறவில் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் தொடர்ந்தும் பொதுவெளியில் இயங்குபராகவும் ஆண் காணாமல் போகவும் செய்யப்பட்டார். துரதிர்ஸ்டவசமாக அந்த ஆணின் பக்க நிலைப்பாடு வெளிப்படுத்தப்படவில்லை. அவர் தானாகவே காணாமல் போனார் அல்லது போகடிக்கப்பட்டார். குறிப்பிட்ட ஆண் தவறு செய்தவராக இருந்தபோதும் மற்றும் அவரின் அரசியலுடன் உடன்பாடு இல்லாதபோதும் அவரது அரசியல் மற்றும் எழுத்துச் செயற்பாடு இவ்வாறு முடக்கப்படவேண்டுமா அல்லது அவர் அவ்வாறு தன்னை முடக்கிக் கொள்ள வேண்டுமா என்பது கேள்விக்குட்படுத்தப்படவேண்டிய ஒன்று.

மேற்கூறப்பட்டவை பொது வெளியில் அறியப்பட்ட சில நிகழ்வுகள். ஆனால் சில சம்பவங்கள் அறியப்படாமலே இருக்கின்றன. புரட்சிகர, தேசிய, பெண்ணிய, சாதிய விடுதலை மற்றும் மனித உரிமைகள் பேசுகின்ற, சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்ற, தம்மைத்தாமே தலைவர்கள் என பட்டம் சூட்டிக்கொள்கின்ற பலர் சத்தம் போடாமல் தம் சுயநல நோக்கங்களுக்காகப் பெண்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளை அமைதியாகவும் வெளித்தெரியாதவாறும் முன்னெடுக்கின்றனர். இதனால் எழுத்து மற்றும் சமூக செயற்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்ட குறிப்பிட்ட பெண்கள் இந்தப் “புரட்சிகர தலைமை”களின் வாரிசுகளை பெற்று அவர்களை பராமரித்து வளர்க்கின்ற, பெண்களுக்கு சமூகத்தால் வழங்கப்பட்ட, பாரம்பரிய பொறுப்புக்களை விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இப்படி பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் “புரட்சிகர” சக்திகளுக்குள் சத்தமின்றி நடந்தேறுகின்றன. இதற்கு பெண்கள் கொடுக்கின்ற விலை அதிகமானது எனலாம். அதாவது தமது தெரிவுகளை, விருப்பங்களை, பன்முக படைப்பாற்றல்களை உறங்கு நிலையில் ஒதுக்கிவைத்து விட்டு அல்லது முடக்கிவிட்டே இதைச் செய்கின்றனர். இவ்வாறன ஆண்கள் பொதுவெளில் விமர்சிக்கப்படுவதேயில்லை. இந்த நிலையில் வாழ்கின்ற பெண்களின் குரல்களும் பொதுவெளிகளில் கேட்பதில்லை.

மேற்குறிப்பிட்டவாறு “புரட்சிகர” ஆண்கள் ஒருபுறம் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளை செய்தபோதும், மறுபுறம் இவர்கள் செய்கின்ற சமூக மாற்றத்திற்கான அல்லது தேசிய விடுதலைக்கான அல்லது மனித உரிமைகளுக்கான செயற்பாடுகள் தவறானவையல்ல. நியாயமானவை. மேற்குறிப்பிட்ட தவறுகளுக்காக இவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா? இவர்களது அரசியல் செயற்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டுமா? அல்லது ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்து வளர்த்து இணைத்துச் செல்ல வேண்டுமா? இதற்கான கோட்டைக் எங்கே கீறுவது?

மேற்குறிப்பிட்ட பெண்களைவிட அரசியல் அக்கறையும் பெண்ணிய சிந்தனையும் கொண்டவர்களும் தமது கருத்தைப் பொதுத்தளங்களில் முன்வைக்கின்ற ஆற்றல்களை கொண்ட பல பெண்கள் இன்று இருக்கின்றனர். இது வரவேற்கவும் ஊக்கப்படுத்தப்படவும் வேண்டிய ஒன்றே. இப் பெண்கள் வாழ்க்கைத் துணையாக வரும் பொழுது ஆண்களின் நிலை என்ன? இந்த ஆண்களின் பெண்ணியம் சார்ந்த புரிந்துணர்வும் பெண்களின் ஆண்கள் தொடர்பான புரிதல்களும் தான் இவர்களுக்கு இடையிலான உறவின் ஆழத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். அல்லது உறவு விரைவில் முறிவாகும் என்றால் மிகையல்ல. அல்லது இந்த ஆணினதும் பெண்ணினதும் புரிந்துணர்வுகளின் அடிப்படையில் இவர்களது உறவின் முறிவானது ஆரோக்கியமான வழிகளில் முன்னெடுக்கப்படும். அல்லது வசைபாடல்களாக ஆரம்பித்து தமது கடந்த கால அழகான உறவை கொச்சைப்படுத்துவதில் முடிவடையும். இதில் நாம் எவ்வாறான உறவுமுறையையும் வழிமுறைகளையும் தெரிவு செய்கின்றோம் என்பதற்கான சுதந்திரம் நமக்கு உள்ளது. தெரிவு நம்முடையது. அதைப் பொறுப்புடன் தெரிவு செய்(வோமா?)கின்றோமா?

மீராபாரதி

06.11.2012

நன்றி

ஏதுவரை – 06

http://eathuvarai.net/?p=2046

Advertisements

Responses

  1. […] நம்மையும் நமது வாழ்வையும் அகம் நோக்கிப் பார்க்க வேண்டும் என்பதே இந்த நாவல் எனக்கு […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: