Posted by: மீராபாரதி | November 12, 2012

பிரக்ஞை – பன்முகத்தளங்களில் மாற்றங்களைக் கோரி….

பிரக்ஞை – பன்முகத்தளங்களில் மாற்றங்களைக் கோரி….

இலன்டன் நகரில் நடைபெற்ற பிரக்ஞை ஓர் அறிமுகம் என்ற நூலின் அறிமுக நிகழ்வில் முன்வைத்த கருத்துக்களின் திருத்திய பதிவு இதுவாகும்.

முதலில் எனது வேண்டுகோளை ஏற்று இந்த நூல் அறிமுக நிகழ்வை இலன்டனில் நடாத்துவதற்கு உடன்பட்டு, அதை ஒழுங்கு செய்த பௌசாருக்கும் மற்றும் தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் என்ற அமைப்பிற்கும் மனப்பூர்வமான நன்றி. மேலும் இந்த நிகழ்வை தலைமைதாங்கி நடாத்திய நா.சபேசன், கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்த சபேஸ் சுகுணா அவர்களுக்கும் நன்றி. இத்துடன் நிழற் படங்கள் எடுத்த கே.கே. ராஜா, ஹரி அவர்களுக்கும், வீடியோ ஒளிப்பதிவு செய்த ரஸ்மிக்கும் மற்றும் நிகழ்வில் பங்குபற்றி ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நூலில் முன்வைக்கபட்ட பல கருத்துக்கள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான சில பதில்களாகவே இப்பதிவில் முன்வைக்கும் கருத்துக்கள் இருக்கும். இப் பதில்கள் சரியானவை என நிறுவ முயற்சிக்கவில்லை. ஆனால் இவ்வாறுதான் எனது புரிதல்கள் இருக்கின்றன.

தனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்திற்கு என நூலின் முகப்பில் இருக்கின்ற வசனம் ஒரு ஆதிகால மத ரீதியான வசனமாக இருக்கலாம். ஆனால் இந்த நூலில் முன்வைக்கப்படுகின்ற விளக்கம் அதனடிப்படையிலானதல்ல. அதுவேளை தவிர்க்கமுடியாமல் அதன் கூறுகளைக் கொண்டிருக்கலாம். சமூக மாற்றம் முதன்மையானதும் அவசியமானது என்பதிலும், அதற்கு அடிப்படையாக இருக்கின்ற அடிக் கட்டுமானமான பொருளாதரா உறவுகளும், சமூக அமைப்பு முறைகளும் மற்றும் அரசும் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. இதேபோல் மேல்கட்டுமான தளங்களான கலாசாரம் மற்றும் கருத்தாதிக்கங்கள் என்பவற்றிலும் மாற்றக்களை ஏற்படுத்தவேண்டியதும் அவசியமானது என்பதிலும் முரண்பாடுகள் இல்லை. ஆனால் இவை மட்டும் போதுமானவையல்ல. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

இந் நூலில் முன்வைக்கப்படுகின்ற பிரக்ஞை மற்றும் தியானம் தொடர்பான கருத்துக்களை வெறுமனே மதரீதியான ஆன்மீகமாக மட்டுமே பொதுவாகப் பார்க்கின்றனர். ஆனால் இதில் இருவகையான வேறுபாடுகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள தவறிவிடுகின்றனர். இப் புரிதலானது அவசியமானது மட்டுமல்ல பயனுள்ளதும் கூட. நாம் இதுவரை புரிந்திருக்கின்ற ஆன்மீகம் என்பது மதஅடிப்படையிலானது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால் இன்னுமொரு ஆன்மீகம் இருக்கின்றது. அது ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி அறிகின்றமையை அல்லது புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இது வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையிலானதல்ல. மாறாக அது சுயஅனுபவத்தினுடான புரிதல் மற்றும் அறிதலாகும். இவ்வாறன நம்மைப் பற்றிய, அதாவது நமது உடல், மூச்சு, சக்தி, காமம், மனம்… என்பன தொடர்பான, அறிதலும் புரிதலும் மிகவும் மிகவும் அவசியமானதும் முக்கியமானதும் என்றால் மிகையல்ல. அதுவும் சமூகமாற்றம் தொடர்பாக சிந்திப்பவர்களுக்கும் செயற்படுகின்றவர்களும் தவிர்க்கமுடியாது கவனிக்கவும் அக்கறை கொள்ளவும் வேண்டிய ஒரு வியடம் இது. இதற்கான காரணங்களையும் மற்றும் சமூக மாற்றத்திற்கான பாதையில் இதன் முக்கியத்துவத்தையும் இனிப் பார்ப்போம்.

நாம் வாழ்கின்ற சமூகங்களிலிருக்கின்ற சமூக, காலாசார, மத, சாதிய, வர்க்க கட்டுப்பாடுகளும் சிந்தனைகளுமே நம்மை, குறிப்பாக நமது மனதை தொடர்ச்சியாக, ஆதிக்கம் செய்கின்றன. இதில் யாருக்கும் எந்த முரண்பாடும் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள இயற்கை, சக மனிதர்கள் மற்றும் நம்மையும் நமது உடலையும் பற்றிய கருத்துக்கள், அபிப்பிராயங்கள் எல்லாமே நாம் வாழ்கின்ற சமூகத்தால் கட்டமைக்கட்டவை. இவ்வாறு ஒன்றைப்பற்றிக் கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள் அல்லது குறியீடுகள் அதன் உண்மைத் தன்மையிலிருந்து வெகுதொலைவில் இருக்கின்றன என்றால் தவறல்ல. உதாணரமாக பால் அடையாளங்களான ஆண் பெண் என்ற கட்டமைவுகள் மற்றும் பாலுறுவு தொடர்பான கட்டமைவுகள். இவ்வாறு சமூகத்தால் கட்டமைத்தமைக்கப்பட்ட பல விடயங்களுக்கு மாறாக நாம் வேறுவிதமாக உணர்ந்தால் அல்லது புரிந்துகொன்றால் அவையெல்லாம் அசாதாரணமானவை எனவும் சமூக போக்குகளுக்கு எதிரானவை எனவும் முத்திரைகள் குத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றன. அல்லது அடக்கி ஒடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக அவை நமக்குள் மனப்பிறல்வுகளாக மாற்றப்படுகின்றன. மேலும் இவ்வாறன கட்டமைவுகள் நம்மை நமது உடலிலிருந்து இயற்கையிலிருந்து பிரித்துவிட்டன. இதன் மூலம் ஒவ்வொரு சமூகத்திலுள்ள மனிதர்களும் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஏற்றவகையில் மாற்றப்பட்டு இயந்திரங்களாக வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறே பல்வேறு பயிற்சிகள் மூலமாக மனிதர்கள் இயந்திரத்தனமான இராணுவப் படைகளாக மாற்றப்படுகின்றார்கள்.  இதுவே நாம் மனநோயாளிகளாகவும் பிரக்ஞையின்மையாகவும் வாழ்வதற்கும் சகலவிதமான தவறுகளையும் வன்முறைகளை மேற்கொள்வதற்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மனநோயாளிகள் என்பதை புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதன் அளவுகள் வேறுபடலாம். ஆனால் ஒருவரும் தாம் அவ்வாறு இல்லை என்பதை மட்டும் மறுக்கமுடியாது.

ஏற்கனவே கூறியதுபோன்று மனிதர்களாகிய நாம் நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் சமூகத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றோம் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. இவ்வாறன கருத்துக்கள் ஒரு மனிதர் பிறந்த பின் மட்டும் அவருக்குள் உருவானதல்ல. பிறக்கின்றபோதே நமது பெற்றோர்கள், முதாதையர்கள், இனம், மதம், சாதி, மற்றும் வர்க்கம் எனப் பலவற்றின் கருத்துக்கைளயும் சுமந்துதான் வருகின்றோம். அல்லது பிறந்தபின் நம்மையறியாமலே நமக்குள் ஏற்றப்பட்டுவிடுகின்றன. இதன்பின் ஒவ்வொரு மனிதர்களும் அவர்கள் சார்ந்த ஆதிக்க சமூகத்தின் கருத்துக்களுடன் தம்மை அடையாளப்படுத்துவதுடன் அதை சுமந்தும் திரிகின்றனர். இந்தக் கருத்துக்களை இவ்வாறு சுமந்து திரிவது மட்டுமல்ல, நமது அபிப்பிராயங்களை கருத்துக்களை முன்வைக்கும் பொழுதோ அல்லது எதிர்வினையாற்றும் பொழுதோ எங்களது சொற்களில், வசனங்களில், கருத்துக்களில் அவை எங்களையும் அறியாமல் பிரக்ஞையின்மையாக வெளிப்படுகின்றன. இதனால்தான் நம்மையும் அறியாது நமது இனவாத, மதவாத, ஆணாதிக்க மற்றும் பிற்போக்குக் கருத்துக்களை பிரக்ஞையின்மையாக வெளிப்படுத்துகின்றோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுவே கூட்டுப்பிரக்ஞையின்மையாகவும் வெளிப்படுகின்றன. இவ்வாறுதான் பாரம்பரிய மார்க்சியம் கதைப்பவர்களும் அவர்களை அறியாது  நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிய அதே கருத்துக்களை எந்தவிதமான சமூக மற்றும் விமர்சனப் பார்வைகளுமற்றும், அதை அப்படியே நம்பிக்கொண்டும், பிரக்ஞையின்மையாகவும், கிளிப்பிள்ளைகள் போலவும் மீளவும் முன்வைக்கின்றனர்.

மேற்கூறப்பட்ட பின்னையவர்களது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் காரணமாகத்தான், சமூகத்தை மாற்ற புறப்பட்டவர்களுடனான முரண்பாடு ஆரம்பிக்கின்றது. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல தேசியவாதிகள் கூட பிரக்ஞையின்மையாக கதைப்பதிலோ, செயற்படுவதிலோ அல்லது தன்முனைப்பு, போட்டி, பொறாமை என்பவற்றில் ஈடுபடுவதிலோ ஆட்சேபனை இல்லை. அவர்களைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் சமூகத்தை மாற்றப் புறப்பட்டவர்கள், தம்மை முன்னேறிய பிரிவினர்கள் எனக் கூறுகின்றவர்கள் பிரக்ஞையின்மையாக செயற்படுவதுடனும், மற்றும் தன்முனைப்பு, போட்டி, பொறாமை, வன்முறை மற்றும் கையாளுதல் என்பவற்றில் ஈடுபடுவதுடன்தான் உடன்பட முடிவதில்லை. இது ஏற்றுக்கொள்ளவும் முடியாத ஒன்று. இவர்களது நல்லெண்ணங்களைப் புரிந்துகொள்ளலாம். அதற்கான அவர்களது செயற்பாடுகளை மதிக்கலாம். ஆனால் உடன்படவோ ஆதரவளிக்கவோ முடியாது. ஏனெனில் இவர்கள் தாம் பிரக்ஞையின்மையாக செயற்படுகின்றவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளாதது மட்டுமல்ல பிரக்ஞைபூர்வமான செயற்பாடு என்பதை வெறுமனே தர்க்க மற்றும் பகுத்தறிவு அடிப்படையிலான தெரிவாகவே முன்வைக்கின்றனர். அல்லது தம்மைப் பற்றிய புரிதலுக்கான செயற்பாடு என்பது ஆன்மிகம் என வரையறுத்துப் புறக்கணித்துவிடுகின்றனர். ஆனால் உண்மையிலையே பிரக்ஞை என்பது இவ்வாறன புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஏனெனில் நாம் இவ்வாறு தெரிவு செய்கின்ற ஒரு சொல்லின் வரலாற்றையும் அதன் பன்முகப் பரிமாணங்களைப் நமக்குப் புரியவைப்பது பிரக்ஞை. மற்றும் நமது தன்முனைப்பு, போட்டிமனப்பான்மை, கையாளுதல் வன்முறை என்பவற்றையும் நமக்கு உணர்த்தி நிற்பதுவும் பிரக்ஞை எனலாம். அதாவது பிரக்ஞை நமது பரிணாம வளர்ச்சிக்கான படிக்கற்கலாக செயற்படுகின்றன என்றால் மிகையல்ல.

நமக்குள் நடைபெறுகின்ற, நம் செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற, மற்றும் சமூகத்தில் நடைபெறுகின்ற பல பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும், சமூக பொருளாதரா காரணங்களே பிரதானமானவை. இத்துடன், நமது பிரக்ஞையின்மையும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டி உள்ளது. இன்று புரிந்துகொள்ளாவிட்டாலும் வெகுவிரைவில் புரிந்துகொள்ளவேண்டி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறன பிரக்ஞையின்மையிலிருந்து நாம் ஒவ்வொருவரும் வெளியே வருவதற்கு, நாம் நமது பிரக்ஞையை வளர்ப்பதைத் தவிற வேறுவழியில்லை. அப்பொழுதுதான் நாம் எவ்வாறான சொற்களைப் பயன்படுத்துகின்றோம், என்ன கருத்துக்களை முன்வைக்கின்றோம், எவ்வாறு செயற்படுகின்றோம் என்ற புரிதல் நமக்கு இருக்கும். இதன் மூலம்தான் பழைய கருத்துக்களை நம்மிலிருந்து நீக்கி புதிய கருத்துக்களை முன்வைக்கவும் இயந்திரமயமான செயற்பாடுகளிலிருந்து விலகி முழுமையான ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் முடியும்.

மேலும் சமூகம் என்பது வெறுமனே கற்பனையிலிருக்கின்ற ஒரு அமைப்பு அல்ல. பல மனிதர்களுக்கு இடையிலான பல்வேறு அடிப்படைகளிலான உறவுகளின் கூட்டமைப்பே அது. இந்த மனிதர்கள் இல்லையெனின் சமூகம் அல்லது அதன் கட்டமைப்பு என்பது அர்த்தமிழந்த ஒன்றாகிவிடும். ஆகவேதான் சமூகமாற்றம் என்பது ஒவ்வொரு மனிதர்களிலும் தங்கியுள்ளது என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வாறு சமூகமாற்றத்திற்காக செயற்படுகின்றோமோ அதற்கு சமாந்தரமாக தனிமனித மாற்றத்திற்காகவும் நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும். ஆகக் குறைந்தது சமூகமாற்றத்தில் அக்கறையுள்ளவர்களும், அதற்காக செயற்படுகின்றவர்களும், முன்னேறிய பிரிவினர் என தம்மை அழைப்பவர்களும் தம்மை மாற்றுவதில் அக்கறை கொள்ளவேண்டும். வெறுமனே சமூகத்தையும், அதன் அமைப்பையும், சமூக பொருளாதார உறவு முறைகளையும் மாற்றுவதால் மட்டும் நமது நோக்கத்தை அடைந்துவிடமுடியாது என்பது நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.

மொழிக்கு பன்முக பரிமாணங்கள் இருந்தபோதும், அடிப்படையில் ஒரு தொடர்பாடல் ஊடகம். இதனைப் பயன்படுத்தி ஒன்றைப் பற்றிய விபரணமோ விளக்கமோ செய்வதன் மூலம் பல்வேறு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.. இவ்வாறு ஒரு மொழியின் அடிப்படையிலான ஒன்றைப்பற்றிய புரிதல் என்பது பகுதியானது. முழுமையானதல்ல. முழுமையான புரிதலையடைவதற்கு சொற்களுக்கு அப்பால் நாம் செல்லவேண்டும். சொற்கள் குறிக்கின்ற ஒவ்வொன்றினதும் உயிர்த்தன்மையுடன் ஒன்று கலக்கவேண்டும். அப்பொழுது உருவாகும் புரிதல் நிச்சயமாக வேறுவகையானதாகவும் உயர்ந்ததாகவும் உண்மைக்கு நெருக்கமானதாகவும் இருக்கும். ஒரு மரத்தை அல்லது பூவைப் பார்க்கின்றோம். பார்த்தவுடன் அதன் பெயரைக் கூறி அழைக்கின்றோம். அவ்வாறு அழைக்கும் பொழுதே நமக்கும் அந்தப் பூவிற்குமான இடைவெளி ஆரம்பமாகிவிடுகின்றது. ஏனெனில் அந்தப் மரம் அல்லது பூவைப்பற்றி உணர்வதற்குப் புரிவதற்கு முதலே அது தொடர்பான முத்திரை அல்லது மதிப்பிடல் ஒன்று நமது மனதில் உருவாகிவிடுகின்றது. இதற்கு மாறாக எந்த மதிப்பீடும் செய்யாமல் அந்த மரத்தை அல்லது பூவை நாம் எவ்வாறு நெருங்குகின்றோம் தொடுகின்றோம் என்பதிலையே அதைப் பற்றிய புரிதல் அனுபரீதியாக உருவாகின்றது. இந்தப் புரிதலுக்கும் நம் மனதால் அல்லது சொற்களால் கட்டமைப்பட்ட புரிதலுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருக்கின்றது.

இவ்வாறுதான் சக மனிதர்களுடனான நமது உறவுகளும் இருக்கின்றன. நாம் மனிதர்களைப் புரிந்துகொள்வதற்கு முதல் அவர்கள் பற்றி மதிப்பீடு ஒன்றை ஏற்கனவே நம் மனதிற்குள் உருவாக்கிக் கொள்கின்றோம். இந்த உருவாக்கம் குறிப்பிட்ட மனிதரைப் புரிந்துகொள்வதற்கு எப்பொழுதும் தடையாகவே இருக்கும். குறிப்பாக ஒரு மனிதருடன் நமக்கு ஒரு உறவு இருந்துள்ளது எனக் கொள்வோம். இந்த உறவினடிப்படையில் அவரைப்பற்றிய மதிப்பீடு ஒன்றைக் கொண்டிருப்போம். பின் பத்தாண்டுகள் கழித்து அவரை சந்திக்கின்றோம். இவ்வாறன சந்திப்புக்கள் தமிழ் பேசும் மனிதர்களிடம் மிக சதாரணமாக இப்பொழுது நடைபெறுகின்றன. இப்பொழுதும் குறிப்பிட்ட மனிதர் தொடர்பான மதிப்பீட்டை பத்தாண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த அதே மதிப்பீட்டின் அடிப்படையிலையே பிரக்ஞையின்மையாக மேற்கொள்வோம். ஆனால் இக் குறிப்பிட்ட கால இடைவெளி நமக்குள்ளும் குறிப்பிட்ட மனிதருக்குள்ளும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால் நமது மதிப்பீடும் மாறுவதற்கு இடமிருக்கலாம். ஆனால் வழமையாக இவ்வாறான புரிந்துணர்வுடன் நாம் செயற்படுவதில்லை. மாறாக பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து மதிப்பீட்டுடனையே இன்றும் குறிப்பிட்ட மனிதரை அணுகுவோம். எதிர்வினையாற்றுவோம். இதைத் தவிர்ப்பதற்கு, நமக்குள் இருக்கின்ற இந்தத் தடையைப் புரிந்துகொள்வதற்கு, நாம் நமது பிரக்ஞையை வளர்க்க வேண்டியது அவசியமானது.

பிரக்ஞை மற்றும் பிரக்ஞையின்மை தொடர்பாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு மேற்குலகத்திற்கு விரிவாக அறிமுகம் செய்தவர் சிக்மன் பிரட் ஆக இருக்கலாம். ஆனால் கௌதம சித்தார்த்தர் என்ற புத்தர் இவை தொடர்பாக ஆழமான பரந்த பார்வையையும் பிரக்ஞையின்மையிலிருந்து பிரக்ஞையாக மாறுவதற்கான வழிமுறைகளையும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்துள்ளார். உண்மையிலையே அவர்தான் உலகத்தின் முதலாவது உளவியளாலர் எனலாம். அவர் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்தியதன் மூலம் தனது அனுபவத்தின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்தவர். ஆனால் பிரட் ஒருபோதும் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தியவர் அல்ல. தனது கனவை ஆய்வுக்கு உட்படுத்த மறுத்தவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீதும் உள்ளது. ஆனால் மேற்குலகின் விஞ்ஞான அடிப்படைகளுக்கு அமைய மனிதர்களையும் அவர்களது மனதையும் கனவையும் புறவயமாக கொண்டு ஆய்வு செய்தவர். இதில் பல தவறுகள் இருக்கலாம். இதேபோல் சித்தார்த்தர் முன்வைத்தவற்றிலும் தவறுகள் இருக்கலாம். ஆனால் பிரக்ஞை மற்றும் பிரக்ஞையின்மை என ஒன்றும் இல்லை எனப் புறக்கணிப்பது என்பது நமது அறியாமையும் அதிகப் பிரசங்கித்தனமுமே. மாறாக ஒரு எடுகோளாக கருதி அதை அறியவும் பயன்படுத்தவும் முயற்சிப்போமேயானால் நாம் முன்னேறிய பிரிவினர் என்பதுடன் திறந்த மனதுடன் இருப்பவர்களாவோம்.

தியானம் மற்றும் யோகா என்பவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்று. ஆனால் வழிகள் வேறு. யோகா உடலை பல்வேறு வடிவங்களில் கஸ்டப்படுத்தி பல பயிற்சி முறைகளை தொடர்ச்சியாகப் பின்பற்றவேண்டும். தியானத்தில் இவ்வாறன கஸ்டங்கள் படத் தேவையில்லை. தியானம் யாரும் செய்யக்கூடியது. இது நமது செய்கைகளை, உணர்வுகளை, உணர்ச்சிகளை மற்றும் மனதைக் கவனிப்பதனுடாக செயற்படுத்தக் கூடியது. ஆனால் இதிலும் அதிக பயனை அடைய தொடர்ச்சியான பயிற்சி அவசியம்.

பிரக்ஞையை வரைவிலக்கணம் செய்வது என்பது பாரிய பிரச்சனை. ஏனெனில் பிரக்ஞையை ஒருவர் தனது அனுபவத்தினுடாகவே புரிந்துகொள்ளலாம். ஆகவே ஒவ்வொருவருக்கும் அதுவேறுபடுகின்றது. இதனால்தான் பிரக்ஞையை உறுதியாக இதுதான் என பொதுவான வரையறை ஒன்றைச் செய்யமுடியாதுள்ளது. ஆனால் அதற்குரிய பயிற்சிப்பட்டறைகளில் பங்குபற்றுவதனுடாக நாம் அனுபவித்து, உணர்ந்து, புரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் பயிற்சிப்பட்டறையை ஒழுங்கு செய்யவேண்டும். ஏனெனில் டொரன்டோவில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் போது பங்குபற்றியவர்கள் முன்வைத்த கருத்துக்களும் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றாது கருத்துக்களை முன்வைத்தவர்களுக்குமான இடையிலிருந்த வேறுபாடு பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. ஆகவே பிரக்ஞை தொடர்பாக வாசிப்பினுடாக அறிவதற்கும் மேலாக அனுபவபூர்வமாக அறிவதற்கு பயிற்சிப்பட்டறையை ஒழுங்கு செய்வதே அவசியமானது. ஆகவே பயிற்சிப்பட்டறை ஒன்றை நீங்கள் ஒழுங்கு செய்தால் உங்களை மீண்டும் சந்திப்பேன்.

நன்றிகள்

மீராபாரதி

23.06.2012

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: