Posted by: மீராபாரதி | October 18, 2012

தற்கொலை: தடுக்க முடியுமா?…

தற்கொலை: தடுக்க முடியுமா?…

தற்கொலை தொடர்பாக மனிதர்கள் தம் வாழ்வில் ஒரு தரமாவது சிந்தித்திருப்பார்கள் எனக் கூறப்படுகின்றது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சனைகளுக்காக தற்கொலை செய்வதற்கான எண்ணங்களை நான் கொண்டிருந்தேன். இன்று அவற்றை மீளப் பார்க்கும் பொழுது எந்தளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் அன்று அக் கணத்தில் அது மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கின்றது. இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல இதை வாசிக்கின்ற உங்களின் பல பேருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அன்று அவ்வாறு செய்யாது தப்பித்து இன்றுவரை வாழ்வுடன் போராடிக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கின்றோம். அதேவேளை பலர் அக் கணத்தில் எடுத்த முடிவால் தம் வாழ்வை முடித்திருக்கின்றனர். இவ்வாறு வாழ்வை முடித்தவர்களது மனநிலை மற்றும் எவ்வாறு இத் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதை மாற்ற அல்லது தடுத்து நிறுத்த உதவலாம் என்பது தொடர்பானதே இந்தப் பதிவு. இதனுடாக தற்கொலையற்ற ஒரு சமூகத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை நோக்கி நாம் சிந்திக்கலாம்.

தற்கொலை என்பது உலகத்தில் பொதுவாக காணப்படுகின்ற ஒரு அம்சமாகும். ஆனால் பிற பிரச்சனைகள் போல இதற்கு அந்தளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உலகத்திலுள்ள சமூகங்களால் மிகவும் தவறாகவும் குறைவாகவும் மதிப்பிடப்பட்ட சமூக நலப் பிரச்சனைகளில் தற்கொலையும் ஒன்றாகும். ஆயுத முரண்பாடுகளாலும் மற்றும் வீதி விபத்துக்களாலும் உலகத்தில் இறப்பவர்களுக்கு சமனாக அல்லது அதற்கும் அதிகமாக தற்கொலையினால் இறப்பவர்கள்  இருக்கின்றனர். அதேவேளை தற்கொலையால் ஒருவர் இறக்கின்றபோது நூற்றுக்கு அதிகமானவர்கள்  பிழைத்துப் போன தமது தற்கொலை முயற்சிகளால் காயப்படுகின்றனர். எந்த ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டாலும் முழுச் சனத்தொகையில் ஆறு விதமானவர்கள் தற்கொலை செய்வது தொடர்பாக சிந்தித்திருக்கின்றனர். ஐந்து வீதமானவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் என்கின்றன தரவுகள். ஆனால் நம்மில் பலர் இது மிகப் பெரியதொரு பிரச்சனை என்பதனையும் இதைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் எந்தளவு முக்கியமானவை என்பதனையும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மிகச் சிலரே இப் பிரச்சனையின் முக்கியத்துவத்தினைப் புரிந்துகொண்டு அதைத் தடுப்பதற்கான வழிவகைகளைத் தேடுவதுடன் தமது பங்களிப்பையும் செய்கின்றனர்.

இன்றைய இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக சூழல்களில் தற்கொலைகள் சதாரணமாக நடைபெறுகின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக மனநல வைத்தியர் எஸ். சிவதாஸ் அவர்கள் தனது நலமுடன் நூலிலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்பவர்களுக்கு வறுமை, பாலியல் வன்புணர்வு, பாலியல் தொந்தரவுகள், சித்திரவதைகள், வேலையில்லாமை, கல்வி கற்கமுடியாமை, மற்றும் பல்வேறு தோல்விகள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இக் காரணங்கள் குறிப்பிட்டவர்களைப் பொறுத்தவரை வலுவானவை. ஆகவே புறக்கணிக்க கூடியவை அல்ல. அதேவேளை இக் காரணங்களுக்கான காரணிகளை நிவர்த்தி செய்யக் கூடிய வழிமுறைகள் அரசியல் செயற்பாடுகளினால் மட்டுமே சாத்தியமானது. இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இவர்கள் வாழவேண்டும். ஆகவேதான் தற்கொலை செய்வதிலிருந்து இவர்களைத் தடுப்பது முக்கியமானதாக இருக்கின்றது.

தற்கொலை செய்யாத ஒரு சமூகத்தை உருவாக்கவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது. இதற்கு எவ்வாறு தற்கொலைகளைத் தடுப்பது, அதற்கான காரணங்களை நிவர்த்தி செய்வது, மற்றும் அதற்கான மருத்துவ, உள, மன, வள சிகிச்சைகளை அளிப்பது என்பது தொடர்பாக நாம் சிந்திக்கவும் அதற்காக செயற்படவும் வேண்டும். மேலும் ஒருவரை தற்கொலை செய்வதிலிருந்து காப்பாற்றுவதற்கான அவசர முதலுதவி வழிமுறைகளையும் அறிந்திருக்கவேண்டும். தற்கொலை செய்யாத ஒரு சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான வேலைதான். இருப்பினும் வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய தாங்குதிறனை மனிதர்களில் வளர்ப்பதற்கான சமூகநல ஆதரவு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதனுடாக தற்கொலை முயற்சிகளை குறைக்கலாம்.

தற்கொலை முயற்சி ஒன்று நடைபெறும் பொழுது அதைத் தடுப்பதற்கு பெரும்பாலும் நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது. அவை திட்டமிட்டதாகவோ அல்லது திட்டமிடப்படாத உடனடி செயலாகவோ இருக்கலாம். ஆனால் அவ்வாறான எண்ணங்கள் குறிப்பிட்ட மனிதர்களில் இருப்பதை ஏற்கனவே இனங்கண்டு கொள்வதனுடாக தற்கொலை செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு தடுக்க முயற்சிக்கலாம். நமது நண்பர்கள், உறவுகள், சக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள்   தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அல்லது அவ்வாறன எண்ணங்கள் இருப்பதாக பல வழிகளில் குறிப்பால் நமக்கு உணர்த்தியிருப்பார்கள். உணர்த்துவார்கள். உண்மையிலைலே தம்மை மற்றவர்கள் பாதுகாப்பதற்கும் அதற்கான உதவிகளைப் பெறுவதற்குமான சைகைகளை பல சந்தர்ப்பங்களில் அறிவிப்பார்கள். இதனைப் புரிந்து கொண்டால் மட்டுமே நாம் அவர்களுக்கு உதவ முடிவதுடன் அவர்களைப் காப்பாற்றவும் முடியும்.

குறிப்பாக தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவது தொடர்பான தமது எண்ணங்களை மறைமுகமாக வெளிப்படுத்துவோரிடம் வெளிப்படையாகவும் நேரடியாகவும் கதைப்பது ஆபத்தானது என்கின்ற தவறான நம்பிக்கை வழக்கத்திலிருக்கின்றது. மேலும் இரகசியமாக பிறருடன் உரையாடுவதோ அல்லது அறிந்தும் அறியாதவாறு அமைதியாக இருப்பதோ, அல்லது புறக்கணிப்பதோ ஆரோக்கியமானதல்ல. இவை ஏதுவும் தற்கொலை செயல்கள் நடப்பதை தடுத்து நிறுத்தாது.  மாறாக இவர்களுடன் நேரடியாகவும் வெளிப்படையாகவும் தற்கொலை தொடர்பாக கலந்துரையாடுவதே ஆரோக்கியமானது பயனுள்ளதுமாகும்.

ஒரு புறம் தற்கொலை நடைபெறாது தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை, அது தொடர்பான கருத்தியல் வரலாற்றில் எவ்வாறு மாற்றமடைந்து வந்திருக்கின்றது என்பதை அறிவதும் பயனுள்ளதாகும். இது நாம் உருவாக்கும் கருத்தியல்கள் எவ்வாறு சமூகத்தில் தாக்கத்தை செலுத்துகின்றன என்பதை புரிவதற்கு வழிவகுக்கும். இது மட்டுமல்ல, ஒரு கருத்திலை உருவாக்கும் பொழுது எந்தளவு பொறுப்புணர்வுடனும் பிரக்ஞையுடனும் செயற்படவேண்டும் என்பதையும் புரியவும் உணரவும் வைக்கும் என்றால் மிகையல்ல. அடுத்த பகுதி தற்கொலை தொடர்பான கருத்தியல் வரலாறு தொடர்பானதாக இருக்கும்.

Suicide Prevention Day Spl – NDTV Hindu – 13-09-2012 – http://youtu.be/-4O0oz-P9Q8

http://www.iasp.info/wspd/

மீராபாரதி

18.10.2012

பி;கு: இப் பதிவில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் Suicide Intervention Handbook (1997, LivingWorks) என்ற நூலை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

Advertisements

Responses

  1. தற்கொலை தொடர்பான பல விடயங்களை
    மிகவும் சிறப்பாக அலசியுள்ளீர்கள்
    நன்றாக இருக்கிறது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: