Posted by: மீராபாரதி | October 1, 2012

நாடகப் பயிற்சிப்பட்டறை: ஒரு அனுபவம்….

நாடகப் பயிற்சிப்பட்டறை: ஒரு அனுபவம்….

மனித அக விடுதலையும் ஆளுமை வளர்ச்சியும்…

அரங்காடல் நண்பர்கள் குழு

பொன்னி அவர்களின் வழிகாட்டலில் நாடகப் பட்டறை ஒன்றை மனவெளி அரங்காடல் அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. அன்றிருந்த மனநிலையில் இவ்வாறன ஒரு பட்டறைக்குச் சென்றால் மன ஆறுதல் மட்டுமல்ல அக மாறுதலும் கிடைக்கும் என நம்பிச் சென்றேன். கடந்த காலங்களில் இவ்வாறன பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியபோது அவ்வாறான நேர்மறையான அனுபவமே கிடைத்தது. எனது  நம்பிக்கை வீண்போகவில்லை. மாற்றம் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் திருப்தியுடன் வீடு திரும்பினேன். இதன் விளைவாக எனது வாழ்வில் நாடகப் பட்டறைகள் எனது ஆளுமை வளர்ச்சிக்கும் அக மாற்றத்திற்கும் செலுத்திய பங்களிப்பினை ஒரு தரம் திரும்பி பார்க்க வைத்தது. அதன் வெளிப்பாடாக இப் பதிவை எழுதுவதுடன் மனவெளிக்கும் பொன்னிக்குமான நன்றி கூறலாகவும் இருக்கின்றது.

பொன்னியின் நாடகப் பயிற்சிப் பட்டறை

நாடகங்களின் மீதான ஆர்வம் எனக்கு எப்படி வந்தது எனத் தெரியாது. அப்பா தனது மாணவப் பருவங்களில் பல்வேறு நாடகங்களின் பங்குபற்றியிருக்கின்றார் எனவும் சிறந்த பேச்சாளர் என்று அறிந்திருக்கின்றேன். ஆனால் நான் அவ்வாறான ஆற்றலுள்ள ஒருவனல்ல. சிறுவயதில் கொன்னை பெரும் தடையாக எனக்கு இருந்தது. இத் தடையைக் கடந்து முன்னேறுவது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருந்தது. என்னிடம் இருந்த ஒரு அசட்டுத் துணிச்சல் மற்றும் செய்து முடிக்கவேண்டும் என்ற மனஉறுதி போன்றன சிலநேரங்களில் இவ்வாறான தடைகளை கடக்க உதவியிருக்கின்றது. இதன் முடிவுகள் தோல்வியானபோதும், தடைகளை கடந்து செல்கின்ற அனுபவம் வாழ்க்கையில் முக்கியமானதொரு படிப்பினையாக இருந்தது.

கரவெட்டியிலுள்ள பல பாடசாலைகளில் மகா சிவராத்திரி நாட்களில் இரவிரவாக பல நாடக நிகழ்வுகள் அந்த நாட்களில் நடைபெறும். என் சிறுவயதில் கரவெட்டியில் வாழ்ந்த குறுகிய காலங்களில் ஒரு நாள் இவ்வாறன நிகழ்வொன்றிக்கு செல்வன் சித்தப்பா (இவர் தொடர்பான கதையை தனியாக ஒரு நாள் எழுவேண்டும்) என்னைக் கூட்டிச் சென்றார். அந்த நாடகங்கள் என்ன என்பது ஞாபகம் இல்லை. ஆனால் ஒன்றன் பின் ஒன்றான பல திரைகளைப் பயன்படுத்தி முப்பரிமாண காடுகளையும் வீடுகளையும் அரங்கில் அமைத்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கின்றேன். பின்பு அட்டனில் படிக்கும் பொழுது சிறு வயது நண்பர் ஜெயராமுடன் கிழவித் தோட்டத்தில் நடந்த காமன் கூத்தை இரவிரவாக கூத்துக்கார்களின் பின்னால் திரிந்து பார்த்ததும் ஒரு இனிமையான அனுபவம். மலையக தோட்டக் கிராமங்கள் அனைத்திலும் காமன் கூத்து இரவிரவாக நடைபெறும். இதன் அரங்காக தோட்ட கிராமங்களே இருக்க வீதிகள் தோறும் பயணம் செய்து அரங்காடல் நடைபெறும். இதுபோன்று முன்னால் மன்னார் எம்பி சூசைதாசன் அவர்களின் தலைமையில் மன்னாரிலிருந்து வந்த கூத்துக் கலைஞர்களின் நிகழ்வொன்றும் இரவிரவாக கொட்டக்கலையில் என்பதுகளின் ஆரம்பத்தில் பார்த்த நினைவுள்ளது. பின் அட்டன் ஹைலன்ஸ் கல்லுரியில் ஆங்கில ஆசிரியர் இரத்தினசிங்கம் அவர்கள் ஆங்கில தின நிகழ்விற்கு மேடையேற்றிய சேக்ஸ்பியரின் நாடகத்தையும், கணித ஆசிரியர் கணேசன் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த நாடகங்களையும் பார்த்து வியந்திருக்கின்றேன். இதன் பாதிப்பால் நான் ஒரு நடிகனாக நடிப்பதாக கனவும் கண்டிருக்கின்றேன். இவை அனைத்தும் நாடகத்தின் மீதான ஆர்வத்தை என்னுள் உருவாக்கியிருக்கலாம். ஆகவே கொன்னை, வெட்கம், என்பன தடையாக இருந்த போதும் இதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.

என்பதுகளின் ஆரம்பத்தில் சிறுவயதில் அட்டன் இந்துமாகா சபை கோயில் மண்டபத்தில் ஒருவர் நாடகம் பழக்கினார். இந்தப் பயிற்சிகளில் பங்கு பற்றிய போதும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அப்பொழுது திருசெல்வம் என்ற பால்ய கால நண்பர் சிறந்த சிறுவர் நடிகராக அட்டனில் விளங்கினார். இன்று இவர் ஒரு நடன இயக்குனராக அட்டனில் செயற்படுவதாக அறியக் கிடைக்கின்றது. எனது தயக்கம், வெட்கம், கொன்னை காரணமாக நண்பர்களும் தங்கள் நாடகங்களில் என்னை சேர்க்கவில்லை. ஒரு முறை நண்பர் பத்மராஜா எழுதிய பகிடியை வாசிக்க மேடையேறி நான் சிரித்தது தான் மிச்சம். கடைசியாக நண்பரே மேடையேறி வாசித்தார். இன்னுமொரு முறை ஒரு நாடகத்தை மேடையேற்றுவதற்கான கருத்தொன்றை பகிர்ந்து பிரதான பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தேன். ஆனால் நண்பர்கள் என்னைப் பார்த்த பார்வையும் பேசிய கேலிகளும் அதற்கெல்லாம் தகுதியான ஆள் நானல்ல என்பதாக இருந்தன. ஆகவே பாடசாலை நாட்களில் நாடகங்களில் நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஒழுங்காகப் பாடவோ பேசவோ தெரியாதபோதும் இதற்கான போட்டிகளில் சுயமாக முயற்சிகள் செய்து மேடையேறிருக்கின்றேன். விளைவுகள் தோல்வியானபோதும் அவை மற்றவர்களைப் பாதிக்காத (?) எனது சொந்த அனுபவங்கள். தடைகளைத் தாண்டுவதற்கான முயற்சிகள், பயிற்சிகள், படிப்பினைகள்.

குழந்தை சண்முகலிங்கம்

குழந்தை சண்முகலிங்கம்

1983ம் ஆண்டு குருநகர் பழைய இராணுவ முகாம் அகதிகள் முகாமாக மாற்றப்பட்டு, அங்கு நாம் அகதிகளாக இருந்தோம். அப்பொழுது சிறுவர்கள் சிலர் இணைந்து மேடையமைத்து நாடகம் நடித்தோம். துயரத்துடன் இருந்த அகதிகளுக்கு அது சில கண நேர இன்பம் கொடுத்திருக்கலாம். இதேபோல் நாவற்குழி சித்திவினாயகர் சனசமூக நிலைய நிதிக்காக 1984ம் ஆண்டில் நடன நிகழ்வு ஒன்றிற்காக நண்பர் ஈசனும் நானும் மேடையேறினோம். இதன்பிறகு 1988ம் ஆண்டு ஈரோசின் கைஸ் மாணவர் அமைப்பில் இணைந்தபோது நண்பர் பி. எல் அறிமுகமானார். இவர் அரங்க செயற்பாடுகளில் மிகவும் ஈடுபாடுடையவர். ஆனால் அரங்க செயற்பாடுகளின் மீது எனக்கு ஆர்வம் இருக்கின்றது என இவருக்கு எப்படித் தெரியும் என நான் அறியேன். ஒரு நாள் யாழ்ப்பாண பிரதான வீதியும் கோயில் வீதியும் சந்திக்கின்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடமொன்றில் நடைபெற்ற நாடகப்பட்டறை ஒன்றில் இணைத்துவிட்டார். இதனை யாழ். திருமறை கலாமன்ற ஆதரவுடன்  குழந்தை சண்முகலிங்கம் மற்றும் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் வழிநடாத்தினார்கள். இங்குதான் இவர்களையும் எனது புதிய நண்பர்கள் குழாம் ஒன்றையும் முதன் முதலாக சந்தித்தேன். இதில் இருபது பேருக்கு மேல் பங்குபற்றியபோதும் சரிநிகர் சிவக்குமார், குளோபல் தமிழ் குருபரன், கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயசங்கர், கொலை செய்யப்பட்ட செல்வி போன்றவர்களே நினைவில் உள்ளார்கள். மற்றும் அகிலன், சக்தி, என்பர்களின் பெயர்கள் நினைவிலுள்ளன. நான் புலிகளின் உளவாளியாக இருந்திருக்கலாம் என இவர்களுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம் என பின் நாட்களில் நினைத்ததுண்டு. அன்றைய சூழல் அப்படி. என் மீதான மற்றவர்களின் சந்தேகம் தொடர்பாகவே ஒரு பதிவை விரைவில் எழுத வேண்டும்.

நாங்க எக்க பமிலி மும்மொழி நாடகத்திற்காக தமிழ் சிங்கள நண்பர்கள்

இந்த நாடகப் பட்டறை என்னைப் புடம் போட்டு வெளியேற்றியது என்றால் மிகையல்ல. இங்கு நாம் பெற்ற பயிற்சிகள் எமது உடல் மொழியில், அதன் இறுக்கத்தில், அசைவில், நமது குரலில், சக மனிதர்களுடனான தொடுகையில் என பல விடயங்களில் மாற்றங்களை செய்தன. ஒரு அரங்கிற்கான நமது உடல் உழைப்பினதும் கூட்டுமுயற்சியினதும் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியது. இதனுடாக எனது ஆளுமையில் என்னையறியாமலே பல மாற்றங்கள் நடைபெற்றன. பிற்காலங்களில் எனது செயற்பாடுகளில் இதன் தாக்கம் வெளிப்பட்டதை கண்டுகொண்டேன். எனது கொன்னை, தயக்கம், வெட்கம் என்பன மிகவும் குறைந்து சென்றதை அவதானித்தேன். இது முக்கியமான முன்னேற்றகரமான மாற்றம்.

பேராசிரியர் மௌனகுரு

பேராசிரியர் மௌனகுரு

1990களில் கொழும்பு வந்தபோது அரசியல் ரீதியாக ஏதாவது செய்யவேண்டும் என தேடியலைந்த காலங்கள் அவை. ஆனால் ஒன்றும் நம்பிக்கை தருவதாக அமையவில்லை. ஆரம்பத்தில் நாம் ஒன்றிரண்டு பேரே யாழை விட்டு வெளியேறியிருந்தோம். ஆகவே தொடர்புளின்றி ஊதரிகளாக இருந்தோம். பின் ஏதோ ஒரு வகையில் வைஎம்சியேயில் (எஸ்சிஎம்மில்) வேலை செய்த நண்பர் வாசுகியின் தொடர்பு கிடைத்தது. (இவர் ராஜினி மற்றும் நிர்மாலா அவர்களின் சகோதரி) இவர் அவுஸ்ரேலிய திரைப்பட நெறியாளர் கிரிஸின் வழிகாட்டலில் இன ஒற்றுமைக்கான அரங்கப் பயிற்சி ஒன்றை ஒழுங்கு செய்தார். இந்தப் பயிற்சிப் பட்டறையில் தமிழ் சிங்கள இனங்களைச் சேர்ந்த இளம் ஆண்களும் பெண்களும் பலர் ஒரு வருடங்களுக்கு மேலாக பங்குபற்றினோம். சர்வதேச பண்டாராநாயக்க நினைவு மண்டபத்திற்கு (பீஎம்ஐசிஏச்) முன்னாலுள்ள திறந்த வெளிஅரங்கில் ஆழமர நிழலில் பல்வேறுவிதமான உடல் அசைவுகள் மற்றும் குரல்  பயிற்சிகளும் பெற்றது இன்னுமொரு புதிய இனிமையான அனுபவமாக இருந்தது. இதுவும் நமது ஆளுமைகளில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. இப்பயிற்சிப்பட்டறை ஊடாக நாங்க எக்க பமிலி என்ற மும்மொழியில் அமைந்த வீதி மற்றும் அரங்கம் இணைந்த நாடகம் ஒன்றை உருவாக்கிப் பல இடங்களில் மேடையேற்றினோம். இங்கு நமது நட்பு வட்டம் மேலும் பெருகியது. நண்பர்கள் ஜீவா, போல், ஆதவன், பாலநந்தகுமார், கார்த்திகா வாசுகி, சியா, மட்டக்களப்பைச் சேரந்த ராதா கிர்ஸ்ணன் மற்றும் சிவக்குமார், குருபரன் என விரிந்தது.

இப்போதைக்கு ஏது வழி நாடகத்தில்

இந்த அனுபவங்கள் நம்மை கூட்டாக செயற்படவைத்தன. இதன் பயனாக அரங்காடல் என்ற அமைப்பை உருவாக்கினோம். இதில் அ.இரவி சோ.தேவராஜா மற்றும் சிவக்குமார், ஜீவா, குருபரன், பாலநந்தகுமார், போல் என பல நண்பர்கள் பங்குற்றினார்கள். இதற்காக பௌத்தலோ மாவத்தையிலுள்ள கிரிஸ்தவ ஆலய மண்டபத்தில் வாரயிறுதி நாட்களில் தவறாது சமூகமளித்தோம். இதனுடாக நமது முதலாவது அரங்க நிகழ்வை பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில் மண்டபத்தில் விபவியின் ஆதரவுடன் மேடையேற்றினோம். சோ. தேவராஜாவின் நெறியாள்கைளில் சுந்திரலிங்கத்தின் “அபசுரம்” நாடகம் மேடையேற்றப்பட்டது. அ.இரவியின் நெறியாள்கையில் “இப்போதைக்கு ஏது வழி” நாடகம் மேடையேற்றப்பட்டது. இதன் மூலம் ரமேஸ், விஜி போன்ற புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். மண்டபம் நிறைந்த இந்த நிகழ்விற்காக, நாம் படி ஏறாத தமிழர்கள் வசித்த உயர் மாடிக்கட்டிடங்களே கொழும்பில் இல்லை எனலாம். அந்தளவிற்கு முழுமூச்சுடன் செயற்பட்டோம். ஆனால் கிடைத்த பணம் மண்டபத்திற்கான கட்டணத்திற்கு செலவழிந்துபோனதில் சிறு மனவருத்தம் தான். இவ்வாறு பல நாடகங்களை பலரின் நெறியாள்கைகளில் தொடர்ந்து அரகேற்றினோம். இதனை வழிநடத்தும் முகாமையாளராக நமக்கு அன்று இருந்தவர் மனோரஞ்சன். வாசுகின் சகோதரி பேராசிரியர் சுமதியும் ஒரு நாடகத்தை அரகேற்றுவதற்காக பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஆனால் அதில் சில தடவைகளே பங்கு பற்றினேன்.

அபசுரம் அபத்த நாடகத்தில்

இதன் பின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்த பின் விஜித்சிங்கின் உறவு எவ்வாறு கிடைத்தது என்பது நினைவில் இல்லை. முதலில் விபவி நடாத்திய மனித உரிமை நாளுக்கு இவரின் நெறியாள்கையில் ஒரு நிகழ்வை நடாத்தினோம். பின் இவரின் நெரியாள்கைளில் பல பீடங்களைச் சேர்ந்த குறிப்பாக சட்டபீட தமிழ் சிங்கள மாணவர்களும் நானும் பல வீதி நாடகங்கள் போன்ற அரங்க செயற்பாட்டில்  ஈடுபட்டோம். பொதுவாக மதிய இடைவேளையின் போது பல்கலைக்கழகத்திலிருக்கின்ற வெளிகளில் அரங்கேற்றுவோம். இவரின் நெறியாள்கையே வித்தியாசமானது. கையில் எந்தவிதமான எழுத்துப் பிரதியுமில்லாமல் அரங்க செயற்பாட்டாளார்களின் சொந்த வசனங்களைக் கொண்டே உருவாக்குவார். அரங்காடலுக்காக “கொள்கரி” என்ற ஒரு நாடகத்தை இவரின் நெறியாள்கையில் பிரதியில்லாது நாடகப்பற்றை ஊடாகப் பயிற்சிப் பெற்று மேடையேற்றினோம். அன்று பலரின் வரவேற்பை பெற்ற நாடகமாக இது விளங்கியது.

index

சோமலாதா சுபசிங்க

பின் சிங்கள நண்பர் சத்தியஜித்தின் அறிமுகத்தினுடாக சோமலத்தா சுமசிங்கவின் (இவர் முன்னால் யாழ் அரசாங்க அதிபரின் துணைவியாரும் சிறந்த சிங்கள நடிகையான கௌசல்யா பெனான்டோவின் தயாரும் ஆவார்) நாடகப் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நாடகப் பட்டறையூடாக, ஆபிரிக்க எழுத்தாளரான வோல் சொய்ன்கா அவர்களின் ஒபேரா வொன்யோசி என்ற நாடகப் பிரதியின் அடிப்படையில், மும்மொழி நாடகம் ஒன்றை மேடையேற்றினார். இதில் சகல பீடங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள மாணவர்கள் பங்களித்தோம். இதன் பின் ஜயவர்த்தனபுர கோட்டைக்கு அருகாமையில் இருந்த இவரது வீட்டில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளுக்கு வாரா இறுதிகளில் சென்றுவந்தேன். இதற்காக தெகிவளையிலிருந்து 176 பஸ் பாதையூடாக நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்வது வழமையாக இருந்தது. இவை எல்லாம் புதிய புதிய அனுபவங்களை மட்டும் தரவில்லை என்னை உருவாக்குவதிலும் பங்குவகித்தன.

கௌசல்யா

கௌசல்யா

இறுதியாக நண்பர் சுரேன் ராகவனின் சிபார்சில் திரைப்பட நெறியாளர் தர்மசிறி பத்திராஜாவின் நாந்தன புத்துன் என்ற சிங்கள தொலைக்காட்சி தொடர் நாடகத்தில் சிறு பாத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சோமலாதா சுபசிங்கவின் மகள் கௌசல்யாவுடன்  இணைந்து நடித்திருந்தேன். இக் கதை என் எம் பேரேராவின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டது என நினைவு.  எனது காட்சியை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக பல நாட்கள் பல மணிநேரம் காத்திருந்தது நினைவு வருகின்றது.

முடிவாக நாடகங்கள் சமூக மாற்றங்களை உருவாக்குவதில் போதிய பங்களிப்பை வழங்காது என்பதாலோ அல்லது பிரதான செயற்பாடு இதுவல்ல எனக் கருதியதாலோ அல்லது பல்வேறு காரணங்களினாலோ ஒவ்வொருவரும் இவ்வாறன அரங்க செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொண்டோம். நமது அரசியல் நிலைப்பாடுகள் நம்மை எதிர் எதிர் நிலைக்கு கொண்டு சென்றன. 2000ம் ஆண்டுகளின் பின் தியானப் பயிற்சிகளிலும் உளவியல் பயிற்சிகளிலும் ஈடுபட்டபோது அரங்க பயிற்சிப்பட்டறைகளின் முக்கியத்துவத்தினையும் மற்றும் உடற் செயற்பாடு, மூச்சு, பிரக்ஞை, விழிப்புநிலை போன்றவற்றின் முக்கியத்துவத்தினை மேலும் ஆழமாக விளங்கிக் கொண்டேன். அதேவேளை நாடகப் பட்டறைகளிலிலும் அரங்க செயற்பாட்டாளர்களினதும் குறைபாடுகளையும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.

நெறியாளர்களும் அரங்க செயற்பாட்டாளர்களும் பல்வேறு சமூக அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தபோதும் கூட்டுறவின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும். மேலும் ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் பொழுது குறிப்பிட்ட பாத்திரத்திற்குள் நாம் வாழ்ந்து அந்த உணர்வினை உள்வாங்கி பிரக்ஞைபூர்வமாக நடிக்கவேண்டும். இது வெறுமனே நடிப்பது மட்டுமல்ல சக மனிதர்களைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையான அனுபவமாகவும் இருக்கின்றது. இதுவே ஒரு மனிதரின் அக மாற்றத்திற்கும் விடுதலைக்கும் பன்முக ஆற்றல்களை நம்மில் வளர்ப்பதற்கும் வழி செய்கின்றது. அந்தவகையில் சமூகத்திற்கு முன்மாதிரியானவர்களாக அரங்க செயற்பாட்டாளர்கள் திகழவேண்டும். ஆனால் நடைமுறையில் இவ்வாறானதொரு முன்னேறிய அனுபவ வெளிப்பாட்டை அரங்க செயற்பாட்டாளர்களிடம் இன்றுவரை காணமுடியவில்லை. இவ்வாறான வெளிப்பாடு ஏன் அவசியமானது எனவும் ஆனால் நடைமுறையில் ஏன் கஸ்டமானதாக இருக்கின்றது எனவும் எனது சுய அனுபவத்தின் அடிப்படையில் இன்னுமொரு பதிவினுடாக முன்வைக்கின்றேன்.

இலங்கையிலிருந்தபோதே அரங்க செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிவிட்டேன். கனடா வந்தபின்பும் அரங்க செயற்பாடுகளிலிருந்து ஒதிங்கி இருப்பதே நல்லது என முடிவு செய்திருந்தேன். ஆகவே கனேடிய தமிழ் அரங்க செயற்பாடுகளில் எனது பங்களிப்புகளை செய்ய முன்வரவில்லை. ஆரம்பத்தில் நாடக பார்வையாளராக சென்றேன். பின் அதிலிருந்தும் விலகிக்கொண்டேன். இரு வருடத்திற்கு முன்பு நண்பர் சக்கரவர்த்தி அரங்க செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை தந்தபோதும் சில காரணங்களால் பங்காற்ற முடியவில்லை. இன்று மனவெளியின் ஒழுங்குபடுத்தலில் பொன்னி அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நாடகப் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றியமை இது தொடர்பான எனது நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டது. அதன்விளைவே இதன் பதிவு. இது பயன்மிக்க ஒரு பதிவு எனின் அதற்கான நன்றி அவர்களையே சேரும்.கொள்கரி

இது எனது நினைவுகளிலிருந்தும் பார்வையிலிருந்தும் எழுதப்பட்டது. ஆகவே பல தகவல்கள் மற்றும் நண்பர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். இதனை நினைவில் வைத்திருக்கின்ற நண்பர்கள் பூர்த்தி செய்ய முன்வருவார்கள் என நம்புகின்றேன்.

மீராபாரதி

01.10.2012

படங்கள் நன்றி: சிவக்குமார், சர்வேசன்

Advertisements

Responses

  1. உங்கள் அனுபவங்கள் சுவைக்கின்றன.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: