Posted by: மீராபாரதி | September 18, 2012

இனியவனான – “இனி அவன்” வாழ்வு… இனியதல்ல…

இனியவனான – “இனி அவன்” வாழ்வு… இனியதல்ல…

“இனி அவன்” திரைப்படம் – ஒரு அரசியல் பார்வை…

சிங்கள திரைப்பட நெறியாளர் அசோக கந்தகமகவினது (Asoka Handagama), “இனி அவன் (இனியவன்) (him, hereafter)” என்ற தமிழ் திரைப்படத்தை ரொரொன்டோ திரைப்பட விழாவில் பார்க்க கிடைத்தது. தான் சிங்களவராக இருந்தபோதும் இத் திரைப்படத்தை எடுத்ததற்கு இரண்டு காரணங்களை தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார். முதலாவது இலங்கையில் தமிழ் திரைப்பட செயற்பாட்டை ஊக்கிவிப்பது . இரண்டாவது போரின் பின்னர் தமிழ் மக்களின் குறிப்பாக முன்னால் போராளிகளின் வாழ்வை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் என்கின்றார். இவ்வாறன அக்கறையை வெளிக்காட்டுகின்றமையால், ஒரு சிங்கள திரைப்பட நெறியாளர் என்றளவில், அவருக்கு நாம் நன்றிகள் கூறக் கடமைப்பட்டுள்ளோம். இப் பதிவானது இத் திரைப்படத்தைபற்றி மேலாட்டமாகவும் அது முன்வைக்கும் அரசியலையுமே பிரதானமாகவும் கலந்துரையாட முற்படுகின்றது.

இத் திரைப்படமானது புனர்வாழ்வு பெற்று தன் வாழ்வை மீள ஆரம்பிக்கின்ற முன்னாள் போராளி ஒருவரான “இவனின்” வாழ்வைப்பற்றியது. அந்தவகையில் இத் திரைப்படம் முக்கியமானது. இவ்வாறான ஒருவர் எத்தனை வகையான பிரச்சனைகளை தனது சமூகத்திற்குள் எதிர்நோக்குகின்றார் என்பதை நன்றாகவே காட்டியுள்ளார். இவன் பாத்திரம் தனது இயல்பான நடிப்பை ஒரளவே வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை இவனைப் போன்ற உடற் தோற்றமுள்ள இயக்கதிலிருந்த பொறுப்பாளர்கள் பலர் இறந்துவிட்டனர். அல்லது இன்னும் வெளியில் அறியப்படாது சிறையிலிருக்கின்றனர். அல்லது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். மேலும் இவனது தோற்றம் தமிழ் ஆணினது தோற்றமாக இல்லை. குறிப்பாக புனர்வாழ்விலிருந்து வந்தவன் போலவும் தோன்றவில்லை. சிறையில் அவன் அனுபவித்த சித்திரைவதைகள் பற்றிய சிறு குறியீட்டு அம்சங்கள் கூட திரைப்படத்தில் இல்லை. அவன் முதல் முதலாக வீட்டுக்கு வருகின்றபோது வழமையாக ஒப்பாரிகளுடன் தான் ஆகக்குறைந்த்து அழுகையுடன்தான் தாய்மார் வரவேற்பார்கள். அதுவுமில்லை. ஆகக் குறைந்தது தனது காதலியிடம் (சிறையில்) தானடைந்த  வேதனைகளை ஒருபோதும் குறிப்பிடுவதாக காட்டவில்லை. இப்படி முக்கியமான பல விடயங்கள் காண்பிக்கப்படாமைக்கு என்ன காரணம்?

இதேபோல் பிரதான பெண் பாத்திரம் சிங்களப் பெண்ணாக அல்லது தமிழ் மயப்பட்ட சிங்களப் பெண்ணாகவே இருந்தார். இப் பெண் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது இறந்துபோன தனது வயதான கணவரை விட்டுவிட்டு தாய் வீடு நோக்கி ஓடிவரும் காட்சி யதார்த்தமற்றதாகவும் நாடகத்தனமானதாகவுமே இருந்தது. அல்லது இதுவும் குறியீட்டாகத்தான் பயன்படுத்தப்பட்டதா என்றால் அதை விளக்குவதற்கான பொறுப்பை திரைப்பட விமர்சகர்களிடம் விட்டுவிடுகின்றேன்.

மேற்குறிப்பிட்ட இருவரையும் விட இவனின் தாய், அவளின் தாய் மற்றும் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்ற பெண் ஆகியோர் மிக நன்றாக, இயல்பான, யதார்த்தபூர்வமான நடிப்பையும் பேச்சு வழக்கையும் வெளிப்படுத்தியிருந்தனர். மற்ற கதாப்பாத்திரங்கள் நாடகத்தனமான நடிப்பையும் பேச்சு வழக்கையுமே வெளிக்காட்டினர். இவ்வாறான நாடத்தன்மையை ஈழத் தமிழ் திரைப்படங்களில் வெளிப்படுத்துவதை தமிழ் திரைப்படங்களை எடுக்கின்றவர்களும் மற்றும் பிற மொழி நெறியாளர்களின் திரைப்படங்களில் உதவி செய்கின்ற தமிழ் கலைஞர்களும் கவனிப்பார்களா?

ஈழத்து தமிழ் சமூகங்களில் சிறிலங்கா இராணுவத்திடமிருந்தும்  புலிகளிடமிருந்தும் தம் இளம் பெண்களை காப்பாற்றுவதற்காக வயதான கிழவருக்கும் திருமணம் செய்து வைக்க தயங்கமாட்டார்கள் . அதேவேளை வேறு சாதியைச் சேர்ந்த இவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதைவிட தமது சாதியைச் சேர்ந்த வயதானவருக்கு கலியாணம் கட்டிக் கொடுப்பதற்கு தயங்காத சமூகம் என்பதையும் குறியீடாக காட்டியுள்ளார். இக் குறியீட்டுக் காட்சிகளுக்கான இவ்வாறனதொரு விளக்கத்தை நண்பர்களுடனான உரையாடல் (குறிப்பாக சுமதி) மூலம் நாம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. மேலும் போராடுவதற்காக இவனால் இயக்கத்தில் இணைக்கப்பட்டு தமது குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும் இவனுக்குமான முரண்பாடுகளையும் நன்றாகவே காண்பிக்கப்படுகின்றது. அதாவது இத்திரைப்படத்தில் ஈழத்து தமிழ் சமூகங்களுக்குள் உள்ள அக முரண்பாடுகளை ஒரளவு நன்றகவே நெறியாளர் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்த விடயங்களில் திரைப்பட நெறியாளருடன் எந்தவிதமான முரண்பாடு இல்லை.

இக் கதைக்களமானது போரின் பின்னரான முன்னால் போராளி ஒருவரின் வாழ்வு பற்றியது. அந்தவகையில் “இனி அவனின்” வாழ்வு என்பது இரண்டு தளங்களில் அல்லது வகைகளில் இங்கு வெளிப்படுத்தப்படுகின்றது. முதலாவது இத் திரைப்படம் நடைபெறுகின்ற களம் மற்றும் காலம். அதாவது புனர்வாழ்வின் பின்னான இவனது வாழ்வு, அடுத்த களம் மற்றும் காலம் இத் திரைப்படக் கதையின் முடிவின் பின்னான இவனது வாழ்வு. இக் கதைக்கான களத்தை  பார்வையாளர்களான நம்மிடம் விட்டுச் செல்கின்றார் நெறியாளர் என்றே உணர்கின்றேன். இந்த இரண்டு களங்களிலும் இவன் எதிர் கொள்ளுகின்ற அல்லது எதிர்கொள்ளப்போகின்ற அக முரண்பாடுகள் நன்றாக வெளிப்படுகின்றன. ஆனால் இந்த அக முரண்பாடுகளுக்கு அப்பால், இன்று ஈழத்து தமிழ் சமூகங்களில் நிலவுகின்ற பிரதானமானதும் பாரியதுமான இன முரண்பாட்டை இன்னும் தெளிவாக கூறினால் இன ஒடுக்குமுறையை இத் திரைப்படம் கதைக்காமல் விட்டமையே இத் திரைப்படத்தின் முக்கியமான குறைபாடாகும்.

இன்றைய வடக்கு கிழக்கு சூழலில் இராணுவம் மக்களுடன் மக்களாக கலந்து இருக்கின்றார்கள். இராணுவ முகாம்கள் கிராமங்களுடன் கிராமமாக கலந்திருக்கின்றன. சில இடங்களில் இராணுவ முகாமா எனச் சந்தேகப்படுமளவிற்கு சாதாரண வீடுகள் போல வேலிகளுடன் வேலிகளான இராணுவ முகாம்கள் இருக்கின்றன. நகரங்களில் இராணுவம் சதாரணமாக திரிகின்றார்கள். ஆனால் இவ்வாறன காட்சி ஒன்றும் திரைப்படத்தில் காண முடியவில்லை. இவ்வாறு காண்பித்தால் இத் திரைப்படம் தடைசெய்யப்படலாம் என்ற எண்ணம் நெறியாளருக்கு இருந்து அதைத் தவிர்த்திருக்கலாம். அல்லது அவை தணிக்கை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கான காரணத்தை நெறியாளரிடம் பார்வையாளர்கள் கேட்டபோது அவை திரைப்படத்தில் (கதையில்) மறைந்திருப்பதாக கூறினார். ஆனால் அவ்வாறன ஒரு உணர்வையோ குறியீட்டையையோ திரைப்படத்தைப் பார்த்தபோது நம்மால் பெறமுடியவில்லை. இதுதான் இத் திரைப்படத்தின் தோல்வி எனக் கருதுகின்றேன்.

இவருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் தவறவிட்டுவிட்டேன். அவ்வாறன ஒரு சந்தர்ப்பத்தில் எனது கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கமான பதில்களை அவரிடமிருந்து அறிந்திருக்கலாம். அதேவேளை நமது கேள்விகளுக்கான சில பதில்களை அவர் நேர்காணல்களிலும் திரைப்பட முடிவிலும் கூறினார். ஆனால் திரைப்படம் என்றளவில் பார்வையாளர்களின் சில கேள்விகளுக்கான பதில்களை அவரது திரைப்படமே தந்திருக்கவேண்டும். ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் இத்திரைப்படத்தை பார்ப்பவர்களின் அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களை அளிப்பதற்கு திரைப்பட நெறியாளருக்கு சந்தர்ப்பம் இருக்காது. அதேவேளை நெறியாளர் எப்பொழுதும் தனது திரைப்படத்தின் பின் விளக்கமளித்துதான் படத்தை விளக்கப்படுத்த முற்படுகின்றார் எனின் அது திரைப்படத்தின் தோல்வி மட்டுமல்ல குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அவரது ஆழமான புரிதலின்மையையுமே குறிக்கின்றது. மேலும் அவர் திரைப்படமொழியை பயன்படுத்திய ஊக்தியில் இருக்கின்ற தவறாக அல்லது குறைப்பாடாகவே கருத முடியும். இக் குறைபாடுகளின் விளைவாக நெறியாளரின் விளக்கமில்லாது பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு, இத் திரைப்படம் தவறான ஒரு பார்வையை அளிப்பதுடன், இன்றைய தமிழ் சூழல் தொடர்பான தவறான விம்பத்தையுமே கட்டமைக்கின்றது. இதுவே இத் திரைப்படம் தொடர்பான அடிப்படையான ஒரு விமர்சனமாகும்.

இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் பின் சில பெண்களை அவர்களது வறுமை காரணமாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்துகின்றவர்கள் தமிழ் வியாபாரிகள் மட்டுமல்ல. இவ்வாறான வியாபாரிகள்   மூலமாக சிறிலங்கா இராணுவமும் பயன்படுத்துகின்றன என்பதே நாம் அறிகின்ற தகவல்கள். இது மட்டுமல்ல, அங்கு நடைபெறுகின்ற சம்பவங்கள் இதற்கு சாட்சிகளாவும் இருக்கின்றன. இந்த நிலையில் இயல்பான நடிப்பை வெளிக்காட்டிய குறிப்பிட்ட பெண் பாத்திரம் தமிழ் மற்றும் புலம் பெயர்ந்து மீள வந்திருக்கின்ற ஆண்களால் மட்டுமே இவ்வாறு பயன்படுத்துவதாக காண்பிக்கப்படுகின்றமையும் தமிழ் சூழலுக்குள் இருக்கின்ற அக முரண்பாடு மட்டுமே. இராணுவத்தால் நடைபெறுகின்ற சம்வங்கள் இங்கு குறியீடாகக் கூட காண்பிக்கப்படவில்லை என்பது இத் திரைப்படத்தின் போதாமையாகும்.

இறுதியாக இறுதிக் காட்சியில் சிங்களவர்கள் நல்லவர்களாகவும் தமிழர்களுக்கு உதவுவதாகவும் அவர்களுக்கு கை கொடுத்து தூக்கிவிட காத்திருப்பதாகவும் போன்ற குறியீடுகள் வருகின்றன. சிங்கள மனிதர்களில் மிகவும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏன் இத் திரைப்படத்தை உருவாக்கிய நெறியாளர் அசோக கந்தகமகவிற்கு நல்லதொரு மனம் இருப்பதால்தான் இவ்வாறன ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன்வந்துள்ளார். ஆனால் இங்குள்ள பிரச்சனை சிங்களவர்கள் எவ்வளவு நல்லவர்கள் எனக் காண்பிப்பதல்ல. எந்தளவிற்கு தமிழர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றார்கள் எனவும் காண்பிப்பதல்ல. மாறாக இலங்கையில் நிலவுகின்ற பிரதான முரண்பாடு அல்லது இன ஒடுக்குமுறை காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது தவறவிடப்பட்டது இன்றைய சூழலில் முக்கியமானது மட்மல்ல அதுவே இத்திரைப்படத்தின் பிரதான குறைபாடாகவும் இருக்கின்றது. பாதுகாப்பு மற்றும் தணிக்கை பிரச்சனைகள் எனின் குறியீடாகக் கூட அதைத் தெரிவித்திருக்கலாம். ஆனால் இவ்வாறு காண்பிக்க முடியாமைக்கு இவ்வாறன நெறியாளர்களிடமிருக்கின்ற அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான விளக்கமின்மை ஆழமின்மைதான் காரணம் என்றால் மிகையல்ல.

அண்மையில் லன்டனில் நடைபெற்ற உவிந்து குருகுல சூரியவுடனான பொது சந்திப்பிலும் இவ்வாறன ஒரு கேள்வியே எனக்குள் எழுந்தது. துவிந்து, பிரபாகரனின் மகனினது கொலையையும் ரோகணவின் மகன் கொல்லாப்படாமல் விடப்பட்டமையையும் அடிப்படையிலையே ஒரு இனவாத நிலைப்பாடு என்பதை மிக நன்றாக தனது கட்டுரை ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் மேற்குறிப்பிட்ட சந்திப்பில் சிங்களவர்கள் நல்லவர்கள் என்ற தொனிப்படவும் இன்றைய இலங்கை அரசாங்கத்தை மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற தொனிப்படவும் கருத்துரைத்தார். இவ்வாறுதான் 20 வருடங்களுக்கு முன்பு ஐ.தே கட்சி நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தபோது ஆட்சி மாற்றமே பிரச்சனையை தீர்க்கும் என நல்ல மனம் கொண்ட சிங்களவர்கள் மட்டுமல்ல ஐனநாயகவாத தமிழர்களும் நம்பினர். ஆனால் (கட்சி) ஆட்சி மாற்றத்தின் பின் நடந்தது என்பது நாம் அறிந்ததே. துரதிர்ஸ்டவசமாக நாம் வரலாற்றிலிருந்து பாடம் கற்பதில்லை. அதனால்தான் இப்பொழுதும் ஆட்சி மாற்றங்கள் தீர்வைத் தரும் என நம்பிக்கொண்டிருக்கின்றோம். உண்மையிலையே இலங்கையின் பிரதான முரண்பாட்டிற்கு அடிப்படையாக இருப்பது இலங்கை அரசு, அரசியலமைப்பு மற்றும் சிங்கள பௌத்த பேரினவாத   ஒடுக்குமுறையின் சித்தாந்த ஆதிக்கம். ஆனால் நல்ல சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழ் தேசியவாதிகளும் ஜனநாயகவாதிகளும் இதை இன்னும் புரியாமலிருப்பதுதான் கவலைக்கிடமானது.

சிங்கள திரைப்பட நெறியாளர்கள் பலர் உயர்ந்த அரசியல் நிலைப்பாடுகளுடன் உயிரோட்டமான சிறந்த சிங்களத் திரைப்படங்களை தந்துள்ளார்கள். தமிழக சினிமாக்கள் கூட அந்தளவு சிறந்த திரைப்படங்களைத் தரவில்லை என உறுதியாகக் கூறலாம். இவர்களது திரைப்படங்கள் மலையாளத் திரைப்பட நெறியாளரான அடூரின் படங்களின் சாயல்கள் போன்றுமட்டுமல்ல அவற்றைப்போல காத்திரமானவையாகவும் உயிரோட்டமுள்ளவையாகவும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இவர்கள் தமிழர்களைப் பற்றி அல்லது தமிழ் சிங்கள இன முரண்பாடுகள் தொடர்பான திரைப்படங்களை எடுக்கும் பொழுது பல விடயங்களை தவறவிட்டு அதன் உண்மைத்தன்மையையும் உயிரோட்டத்தை சிதைத்துவிடுகின்றார்கள். இத் திரைப்படத்திலும் அதுவே நடந்துள்ளது. இதற்கு காரணமாக நான் கருதுவது இவர்களது தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகள்தான். மற்றும்படி அசோக கந்தகம, பிரசன்ன வித்தானகே போன்ற இனிய மனிதர்களும் தமிழர்களில் அக்கறையும் அன்பும் கொண்ட சிறந்த திரைப்பட நெறியாளர்களும் சிங்கள சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

அசோக கங்கனகம இனிய மனிதர் – ஆனால் அவரது அரசியல் இனியதல்ல….

இனி அவனின் வாழ்வும் இனியதல்ல….

Vks மீராபாரதி

(இக் கட்டுரை ஒரு கூட்டு முயற்சி. ஆகவே தான் Vks)

இத் திரைப்படம் தொடர்பான மேலும் சில கட்டுரைகள் மற்றும் இணைப்புக்கள்

Ini Avan Review

http://www.tamilcanadian.com/article/6265

Interview with Asoka Handagama

http://groundviews.org/2010/12/24/interview-with-asoka-handagama/

http://www.youtube.com/watch?v=X5UFs3BT1JE

இனி அவன் ஒரு பார்வை – சுமதி – பூபாளம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: