Posted by: மீராபாரதி | September 16, 2012

நலமுடன்…. மகிழ்வுடன்… – மனிதர்கள் வாழ…

நலமுடன்…. மகிழ்வுடன்… –  மனிதர்கள் வாழ…

வன்னியில் செயற்படும் உள மன நல வைத்தியர் எஸ்.சிவதாஸின்  நூல்கள் அறிமுகம்…

வைத்தியரும் உளவியல் நிபுணருமான எஸ். சிவதாஸ் அவர்கள் 2009ம் ஆண்டு போர்க்கால சுழலில் சுயவிருப்பின் பேரில் வன்னிக்கு சென்று வேலை செய்கின்ற ஒருவர். இக் காலங்களில் போரில் பலவகைகளிலும் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்தது மட்டுமின்றி பலருக்கு உளநல மருத்துவ சிகிச்சைகளும் செய்துள்ளார். இவ்வாறு பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அவர் “நலமுடன்…” “மகிழ்வுடன்…” என இரு தலைப்புகள் கொண்ட நூல்களை வெளியீட்டுள்ளார். இதில் நலமுடன் ஐந்து முறைகள் மறுபதிப்பு செய்யப்பட்டு ஐயாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. அந்தளவிற்கு இந்த நூலின் தேவை முக்கியத்துவமானதாக இருக்கின்றது. இந்த நூல்கள் தொடர்பான ஒரு அறிமுகமே இக் கட்டுரையாகும். இவர் ஒரு புகைப்படக் கலைஞராக இருப்பதாலும் தான் வன்னியில் எடுத்த புகைப்படங்களையும் இந்த நூல்களில் இணைத்துள்ளார்.

“நலமுடன்” நூலிற்கு உளவியல் வைத்தியர் கடம்பநாதன் அவர்கள் முன்னுரையும், வைத்தியர் உமாகரன் அவர்கள் கருத்துரையும் வழங்கியுள்ளனர். இந்த நூலில், உளப் பேரதிர்வு, சிக்கலான அவசர நிலை, மனநலமும் சமூக ஆதரவும், நெருக்கீட்டினை எதிர்கொள்ளல், தீவிர நெருக்கீட்டு எதிர்தாக்கம், நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய், இழவிரக்கம், மெய்பாடு, பதகளிப்பு, மனச்சோர்வு, உதவும் வழிமுறைகள், உளவளத் துணை, அரங்கச் செயற்பாடு, சாந்த வழிமுறைகள் என பதினேழு தலைப்புகளின் கீழ் தனது அனுபவத்தையும் கற்ற அறிவையும் பகிர்ந்துள்ளார். இவற்றில் பல விடயங்களை இவர் ஆய்வுக்கும் கேள்விற்கும் உட்படுத்துகின்றார். அதேவேளை, போரில் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து, அவர்களது மன நோய் மற்றும் உளப் பாதிப்புகள் தொடர்பாகவும் விளக்குகின்றார். போரினால் பாதிக்கப்பட்ட இந்த மனிதர்கள் நலமுடன் வாழ்வதற்கான பல வழிகளையும் முன்மொழிகின்றார்.

இன்று வன்னியில் வாழும் மனிதர்களின் மனநிலையையும் அவர்களது மன, உள நோய்களையும் அறிந்து கொள்வதற்கு இவ்விரு நூல்களும் உதவி செய்யும். அந்தவகையில் முதலில் நலமுடன் நூல் தொடர்பான அறிமுகத்தை பதிவு செய்கின்றேன். மனநல வைத்தியர் எஸ்.சிவதாஸ் அவர்கள் நூலிற்கான அறிமுகத்தில் “அனர்த்தம் என்பது தேவைக்கும் அதைப் பூர்த்தி செய்யக்கூடிய தகமைக்கும் இடையேயுள்ள சமநிலைக் குழப்பமாகும்… குறிப்பாக போரின் பின்பான சமூகத்தில் வளங்கள் குன்றிய நிலையில் அழிவு ஒன்றினால் ஏற்படும் தாக்கம் அதிகமானதாக இருக்கும்…” எனக் குறிப்பிடுகின்றார். ஏனெனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்ததாக கூறப்படுகின்ற போரினால் மட்டுமல்ல அதற்கு முன்  நடைபெற்ற ஆழிப்பேரலையினாலும் இவர்கள் தமது உறவுகளின் உயிர்களை மட்டும் இழக்கவில்லை. இவர்கள் தமது  உடமைகளையும் இழந்துடன், இவர்கள் வாழ்ந்த சமூக கட்டமைப்புகளும் நிலைகுலைந்துள்ளன என்கின்றார். ஆகவே இந்த மனிதர்கள் மன நலமுடன் வாழ வளங்களை பெருக்குவதுடன் சமூக கட்டமைப்பையும் சீராக்க வேண்டிய தேவை அவசியமானதாக உணரப்படுக்கின்றது.

போரினால் நிர்க்கதிக்குள்ளான இந்த மக்களை “பாதிக்கப்பட்டவர்கள் வலுவிழந்தவர்கள் என்ற தோற்றப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்”. இதற்கு “பாதிக்கப்பட்ட சமூகம் என்ற நிலையிலிருந்து வலுவுள்ள சமூகம் என்ற நிலையை நோக்கி நகர வேண்டும்”. இதை நடைமுறைப்படுத்த முதலில் “வெளியிலிருந்து வரும் தீர்வுகளை திணிக்காமல் சமூகத்தின் உட்கூறுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மேலானது” எனக் குறிப்பிடுகின்றார். ஏனெனில் இந்தப் போரினால் முழு சமூகமுமே பாதிக்கப்பட்டிருக்கின்றது. “ஆகவே தனிமனிதர்களுக்கான சிகிச்சை முறைகள் மூலம் ஆற்றுப்படுத்துவது என்பது மிகச் சிரமமானது. எனவே முழுச் சமூகத்திற்குமான உள மன மேம்பாட்டிற்கான சமூகப் பணியினை மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படுகின்றன” என்கின்றார்.

“பொதுவாகவே மனக்காயங்கள் ஏற்பட்டதற்குப் பின்னர் பாதுகாப்பான அச்சமற்ற சூழ்நிலைகள் நிலவுமாயின் அவை இயல்பாகவே குணமடையக் கூடியவை.” ஆனால் போரின் பின் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நிலவுகின்ற சுழல், போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் தமது, மனவடுக்கள் மற்றும் உளநோய்களிலிருந்து குணப்படுவதற்கு வழி செய்யாது என்றே தெரிகிறது. இதனால் இந்த நோய்கள் தொடர்ந்தும் நீடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக கூறுகின்றார்.

மூன்று ஆண்டுகளின் பின்பு கோயில் விழாக்களில் பல வகையான (தூக்கு) காவடி எடுப்பவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்திருக்கின்றது. இவ்வாறன நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள், தமது உள மன பிரச்சனைகள் மற்றும் நோய்களை கடந்து வர முயற்சி செய்பவர்களாக இருக்கின்றார்கள். மறுபுறம் தமது உறவுகள் இன்னும் தடுப்பு முகாமிலிருப்பதாலும் உறவுகளை இழந்திருப்பதாலும் கோயில் மற்றும் பொது நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்கு அருகிலிருந்தும் கலந்து கொள்ளாதவர்கள் அதிகம் பேர் இருகின்றார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றாதவர்கள் அதிகளவான உள மன நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். அதேவேளை இவர்களுக்கு உதவி செய்கின்ற சமூக சேவகர்களான களப்பணியாளர்களுக்கும் உள மனப் பாதிப்புகள் ஏற்படலாம். ஏனெனில் தாங்குதிறன் புள்ளி எல்லோருக்கும் உள்ளது போல் இவர்களுக்கு உள்ளது.” ஆகவேதான் பல்வேறு தளங்களில் சமூக உள மன பணியாளர்கள் பணியாற்றவேண்டி உள்ளது என்கின்றார்.

“போரில் பங்கு பற்றியவர்களும் பங்கு பற்றாத சதாரண மனிதர்களும் ஒரே மாதிரியான உளப் பேரதிர்வுக்கு ஆளாவதில்லை. இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. அதேவேளை ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் இப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளும் அதன் விளைவான அவர்களின் வெளிப்பாடுகளும் வேறுபடுகின்றன”. மறுபுறம் நமது கீழைத்தேய சமூகங்களிலிருக்கின்ற வெளிப்படையற்ற தன்மையால் இவ்வாற உள மன நோய்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளவோ உணரவோ மறுத்துவிடுகின்றமை தூரதிர்ஸ்டமானது. இதன்விளைவாக இவ்வாறன உள மன நோய்கள் வேறுவழிகளில் அதாவது உடல் நலக் குறைப்பாடாகவும் பாலியல் இடர்களாகவும் வெளிப்படுகின்றன என்கின்றார். ஆகவே, உளப் பேரதிர்வு தொடர்பான விழிப்புநிலையையும் அதன் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்த வேண்டும் எனக் கோருகின்றார்.

உள மனநோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து இவ்வாறன பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் பொழுது அவர்களது மனப்பரப்பில் அடுக்கடுக்காக மனப்பாதிப்புகள் பதியப்படுகின்றன. இவ்வாறான பாதிப்புகளினால் தமது சுயத்தையும் சுய ஆளுமையையும் இந்த மனிதர்கள் இழந்துவிடுகின்றனர். விளைவாக பிற மனிதர்களில் நம்பிக்கையில்லாது போய்விடுகின்றது. இதனால் சக மனிதர்களின் உதவிகள் கிடைக்கப்பெறாமல் தனிமைப்பட்டுவிடுகின்றனர். இதனை வெறுமனே மருத்துவ மாதிரியை மட்டும் கொண்டு சீர் செய்யமுடியாது. மாறாக சுய நம்பிக்கை, ஆளுமை, மற்றும் பிறர் மீதான நம்பிக்கை என்பவற்றை ஆராய்ந்தே தீர்க்கலாம் என்கின்றார். இதற்கான பல வாழ்வியல் உதாரணங்களை தனது அனுபவங்களுக்கு ஊடாக முன்வைக்கின்றார். முக்கியமாக பலர் எந்தவிதமான மாத்திரைகளையும் பயன்படுத்தாமலே நலமடைந்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.

போர்களும் வன்முறைகளும் முரண்பாடுகளும் நிறைந்த சிக்கலானதொரு சுழலில் ஒரு சமூகத்தின் மனித வலு, சமூகச் சூழல், கலாசாரம் மற்றும் அதன் விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன என்கின்றார். இவ்வாறன நேரங்களில் தாங்குதிறன் உடையவர்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதுடன் அதை ஏற்றுக்கொண்டும் நன்நலத்துடன் இருக்கின்றார்கள்.  ஆனால் தாக்குதிறன் குறைந்தவர்கள் உள மன நலப்பாதிப்பிற்கு உள்ளாகின்றார்கள். இவ்வாறானவர்களில் குறிப்பாக பெண்களில் கர்ப்பிணிகள், துணையற்றவர்கள் (விதவைகள் அல்லது கைம்பெண்), தனியான தாய்மார், பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டவர்கள், ஆண்களில் போரில் பங்குற்றியவர்கள் மற்றும் வெட்டிப்பொழுது கழிப்பவர்கள், சிறுவர்களில் அநாதைகள், படையனியில் சேர்க்கப்பட்டவர்கள், போசாக்கு குறைந்தவர்கள்,  பராமரிப்பினை இழந்த முதியவர்கள், வறுமையானவர்கள், இழப்புகளையும், சித்திரவதைகளையும் சந்தித்தவர்கள், மனநலக் குறைபாடு உடையவர்கள் மற்றும் சமூகத்தில் சாதியின் பெயரால் அடக்கப்பட்ட “தாழ்த்தப்பட்டவர்கள்” எனக் கூறப்படுகின்ற மக்கள், எனப் பலவகையினர் காணப்படுகின்றனர். இவ்வாறான மனிதர்கள் தம்மீதான பாதிப்புகளிலிருந்து வெளிவர, சமூகத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுகளுக்கு மதிப்பளிக்கும், ஏவரும் உதவலாம் என்கின்றார்.

இவ்வாறான நெருக்கடிகளின் விளைவால் உருவாகும் உள மனம் பாதிக்கப்பட்டவர்கள் பின்வருகின்றனவற்றை வெளிப்படுத்துவார்கள். சினம், அவதி, அதிகரித்த இயத்துடிப்பு, தசை இறுக்கம், வாய் உலர்தல், பசியின்மை, துக்கம், செயில் ஆர்வமின்மை குறிப்பிட்ட வெளிப்பாடுகளில் சிலவாகும். இதைவிட மனச் சோர்வுக்கு உட்பட்டவர்களை பின்வரும் வெளிப்பாடுகளின் மூலம் இனங்காணலாம். அதிக கவலை, அதிக களைப்பு, ஆர்வமின்மை, மிகை குற்ற உணர்வு, தற்கொலை எண்ணம், கண்ணீர் சிந்துதல், தன்னலத்துறவு, நித்திரையின்மை, மனதை ஒன்றுகுவிக்க முடியாமை, நம்பிக்கையின்மை போன்றவற்றை வெளிப்படுத்துவர். இவ்வாறான உள மனப் பாதிப்புகளுக்கு உட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது முக்கியமான ஒரு பிரச்சனையாக நமது சமூகங்களிலில் இருக்கின்றது எனக் குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக தனியாக விரிவான ஒரு கட்டுரையாக எழுதுவது அவசியமானது எனக் கருதுவதால், விபரமாக எழுதுவதை இங்கு தவிர்க்கின்றேன்.

இவ்வாறன உள மன நோய்கள் வெறுமனே தனிமனிதர்கள் சார்ந்த ஒரு பிரச்சனையல்ல. ஏனெனில் இவ்வாறான பிரச்சனைகளுக்கு சமூக பொருளாதார சூழல்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. இதற்கு சுமுகமான சூழலை உருவாக்காமல் விட்டதிலும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்புகளும் நேர்மையுடன் நடாக்காமையும் ஒரு காரணம். இதற்கு இரண்டு தரப்புகளும் பொறுப்பேற்கவேண்டும் என்கின்றார். மேலும் போரின் பின்னராவது இவ்வாறான பிரச்சனைகளை தொடராதிருக்க இவ்வாறன உள மனப் பாதிப்புகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதனையும் செய்யவில்லை என தனது விசனத்தை வெளிப்படுத்துவதுடன் அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைக்கின்றார்.

மகிழ்வுடன் நூலில், துயர் களைதல், மனதைச் சமைத்தல், மகழ்ச்சியின் பரிமாணம், நெருக்கீடும் ஆரோக்கியமும், மன வளர்ச்சியும் மன நலமும்,  திறன்களைப் படைத்தல், சுய கணிப்பும் நிறைகாண் மனப்பாங்கும், சமூக இணைவும் கூடிவாழ்தலும், நெகிழ்ச்சியும் கட்டுப்பாடும், தகைமையும் பொறுப்பும், சிந்தனையும் உணர்ச்சியும், உழைப்பும் ஒய்வும், உந்துதல், பெறுமானங்கள், பரிவு, ஆத்மீகம், மற்றும் மகிழ்ச்சியைப் பரிமாறல் போன்ற தலைப்புகளின் கீழ் பல தகவல்களை, விளக்கங்களை, வழிகளை முன்வைத்துள்ளார். இது போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் துயரமான சூழலிலும் மகிழ்வாக வாழ்வதற்கான வழிகளைக் காட்டுகின்றது.

இந்த நூல்கள் இருட்டைப் பழித்துக்கொண்டிராமல் ஒரு மெழுகுவர்த்தியையேனும் ஏற்றி வைக்க முயல்கிறது என்கின்றார். குறிப்பாக புகலிட நாடுகளிலிருந்து புலத்திற்கு செல்கின்றவர்கள் இந்த இரு நூல்களையும் வாசித்துவிட்டு செல்வது நல்லது. ஏனெனில் போரினால் பல வகைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் எவ்வாறு உறவு கொள்வது, உரையாடுவது, ஆற்றுப்படுத்துவது என்பனவற்றைப் பற்றிய ஒரு புரிதலை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு உதவியாக எதைச் செய்யலாம் ஏதைச் செய்யக் கூடாது என பட்டியலிட்டிருக்கின்றார். இது மிகவும் பயனுள்ளதாகும். இது மட்டுமின்றி நமது சமூகத்தில் போரின் பின் மனிதர்கள் எவ்வாறன மனநிலையிலும் உள மன நலத்துடனும் வாழ்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நூல்கள் உதவலாம். புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்படுகின்ற அமைப்புகள் இந்த நூல்களைப் பெற்று தங்கள் நாடுகளில் அறிமுக நிகழ்வை ஒழுங்கு செய்வார்களாயின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் இதில் கூறப்பட்டுள்ள அனுபவங்களை, கருத்துக்களை பரவலாக்கும் அதேவேளை விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உட்படுத்தி மேலும் வளர்த்துச் செல்லலாம்.

இக் கட்டுரை இந்த நூலின் மீதான விமர்சனமல்ல. விமர்சனங்கள் வேறு ஒரு கட்டுரையாக எழுதப்படவேண்டும் என்பதால் இங்கு தவிர்க்கின்றேன்.

ஆர்வமுள்ளவர்கள் உள நல மருத்துவர் எஸ்.சிவதாஸுடன் தொடர்பு கொள்ள…. sivathas28@gmail.com

மீராபாரதி

15.09.2012

உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள meerabharathy@gmail.com

நன்றி – குளோபல் தமிழ் நீயூஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: