Posted by: மீராபாரதி | August 21, 2012

ஒரு நாள்….. ஒரு நகரம்…. கிளிநொச்சி….

ஒரு நாள்….. ஒரு நகரம்…. கிளிநொச்சி….

நடந்து முடிந்த போரில் அதன் முடிவினை முன்கூட்டியே அறிவித்த நகரம் கிநொச்சி…. ஆனால் அதைப் புரிந்திருக்க நாம் அன்று (இன்றும்) விழித்திருக்கவில்லை… விளைவு மே 18 முள்ளிவாய்க்கால்.

இது நடந்து மூன்று வருடங்களின் பின்…

சற்று முன் விழித்துக் கொண்ட நகரின் மத்தியில் கால் பதித்தேன்… இந்த நகரத்திற்கு இதற்கு முன்பு வந்ததுமில்லை… இங்கு யாரையும் தனிப்பட பழக்கமுமில்லை… முகநூலின் மூலமாக அறிமுகமான நண்பரின் அழைப்பினை ஏற்று வந்தேன்…

இந்த நகரம் இராணுவ முகாம்களால் சுழப்பட்டு இருந்ததை ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த நகரத்தைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணிக்கும் போது கவனித்திருந்தேன்…..

மக்கள் நடமாட்டம் குறைந்த அதிகாலைப் பொழுது… இராணுவத்தின் பிரசன்னம் அதிகமாக இருந்த சூழல் என் மனதில் பதட்டத்தை உருவாக்கியிருந்தது… மனிதர்களை இராணுவ உடையில் பார்க்கும் பொழுது அவர்கள் அந்நியமாகி விடுவது மட்டுமல்ல… பிற மனிதர்களில் பயத்தை உருவாக்குகின்றவர்களாகவும் ஆதிகாரமிக்கவர்களாகவும் தோன்றுகின்றார்கள்… சீருடையில் இல்லாதவர்களைப் பார்த்தாலும் புலனாய்வுப் பிரிவினரோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை… கடந்த கால வரலாறு கற்றுத்தந்த பாடம் இது… இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது தைரியமான மனிதராக அருகிலிருந்த தேநீர் கடை ஒன்றுக்கு சென்றேன்.. தேநீருக்கு வேண்டுகோள் விடுத்துவிட்டு என்னை அழைத்துச் செல்ல வரும் நண்பருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தேன்…  தேநீர் குடித்து முடியவும் நண்பர் வரவும் சரியாக இருந்தது…

யோகி வாழ்ந்த வீடு

கிளிநொச்சி நகரிலிருந்து கண்டி வீதிக்கு மேற்குப் பக்கமாக சென்ற வீதியில் பயணித்தோம்… நண்பரின் மோட்டார் வாகனத்தில்… போகும் வழிகளில் பாழடைந்த வீடுகள்… மீண்டும் ஊர்களின் நடுவேயும் இராணுவ முகாம்கள்… என நடந்து முடிந்த போரின் சாட்சிகள் காட்சிகளாக கடந்து சென்றன… ஆனால் முன்புபோல் இராணுவ முகாம்களின் முன்னுள்ள பாதைகளில் சென்றிகள் இல்லை… வழித் தடைகளோ… வலைந்து செல்லும் பாதை மறிப்புகளோ இல்லை… இராணுவ முகாம்கள் குடிகளுடன் குடிகளாக ஒன்றித்து இருப்பதாக தோன்றியது…

சிறிய கோயில் ஒன்றிலிருந்து பக்திப் பாடல் ஒன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது… இடைக்கிடையே ஒலிபரப்பியில் “உங்கள் குறைகளை போக்க அம்மன் அருள் புரிவார்… எண்ணை ஊற்றி அர்ச்சனை செய்யுங்கள்.. வரும் பொழுது எண்ணையையும் கொண்டுவாருங்கள்.” என மீள மீள தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டே இருந்தார்கள்… தமிழர்களை கடைசியில் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை(?) செல்வா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது… கடவுள் காப்பாற்றுவாரா என்பது கேள்விக்குறிதான்…?. ஆனால் இன்று கடவுளின் பாதுகாப்பில் தான் மக்கள் இருக்கின்றார்கள் போல தோன்றுகின்றது…

படம் அகிலன் நவரத்தினம்இந்த முறை பயணித்தின்போது சென்ற இடங்களில் எல்லாம் பல புதிய கோயில்கள் முளைத்திருந்தன… வெளிநாட்டுக் காசில் புதிதாக புனரமைக்கப்பட்ட பழைய கோயில்கள் பலவும் காணப்பட்டன… மறுபுறம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடந்த 30 வருடங்களாக அப்படியே இருக்கின்ற நகர நூலகங்களும் கிராம வாசிகசாலைகளும்….  கோயில்களிலிருந்து நம்பிக்கை தரும் பாடல்களும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன… ஒருபுறம் கடவுளை முன்நிறுத்திய

படம் அகிலன் நவரத்தினம்

வியாபாரமாக இருந்தபோதும்… மறுபுறம் போரில் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தலாகவும் இருக்கின்றமையை உணரக்கூடியதாகவும் அறியக்கூடியதாகவும் இருந்தது என்றால் பொய்யல்ல… தமது வாழ்வை நம்பிக்கையுடன் தொடர அவர்களுக்கு இன்று இருக்கின்ற கடைசி நம்பிகை அது… அந்த நம்பிக்கையை மூட நம்பிக்கை எனக் கூறவோ… அல்லது மாற்று நம்பிக்கைகளை அவர்களிடம் முன்வைப்பதற்கோ இப்பொழுது நம்மிடம் ஒன்றுமில்லை… நம்மிடம் இருக்கின்ற கருத்துக்களோ நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்பில்லாத பகுத்தறிவு வாதங்களும் கோட்பாடுகளும் மட்டுமே… இவை வலுவற்றனவாகப் போகின்றனவா என்ற கேள்வி எனக்குள் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை… இதற்கு வைத்தியரும் உளவியலாளருமான சிவதாஸின் “நலமுடனும்….” “மகிழ்வுடனும்…” ஆகிய இரு நூல்களும் சான்றாக இருக்கின்றன… இந்த நூல்கள் தொடர்பான ஒரு பதிவை விரைவில் பதிவிடுகின்றேன்….

மோட்டார் சைக்கிள் குண்டும் குழியுமான தார் ரோட்டிலிருந்து மண் ஓழுங்கை ஒன்றுக்குள் திரும்பி சிறிய வீட்டின் முன்னால் நின்றது…. வீட்டைச் சுற்றியும் முற்றத்திலும் பலவகையான மரங்கள் இருந்தன.. நண்பரின் அன்பான உபசரிப்பு… முதன்முதலாக சந்திக்கின்றோம் என்ற உணர்வே இல்லாது… நீண்ட காலம் பழகிய நண்பர்கள் இடையில் பிரிந்து மீண்டும் சந்திப்பது போல இருந்தது… மனிதர்களை எந்த முன்மதிப்பீடும் இல்லாது அணுகும் பொழுது… அவர்களது பலம் பலவீனங்கள் என அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பொழுது… அவர்களுடன் ஆத்மார்த்தமாக இணையமுடிகின்றதா?… உறவுகொள்ள முடிகின்றதா?… சிறிது நேர அறிமுக உரையாடலின் பின்… காலைக் கடன்களை செய்ய ஆரம்பித்தேன்… குந்தியிருந்து மலம் கழித்தேன்… கிணற்றிலிருந்து பம் மூலம் தொட்டியில் நிறைந்த தண்ணீரில் குளித்தேன்…… குளிக்கும் தண்ணீர் அருகிலிருந்து வாழை, பலா, பாக்கு மரங்களுக்கு செல்கின்ற அழகும்… மண்னும் தண்ணீரும் தொட்டதனால் உயிர் பெற்று வெளிவரும் மண் வாசனை…. பின் காலை உணவு சூடான தேநீருடன்… என என ஒவ்வொன்றும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதுடன் சுகமான அனுபவமாகவும் இருந்தது… ஆனால் இந்த நண்பருக்கும் வீடு இல்லாத ஒரு காலம் இருந்தது… தனது தாய் இறந்தபோது வீடு இல்லாது மரத்தடியில் பார்வைக்கு வைத்திருந்ததாகவும்… அதன் பின் இந்த சிறிய வீட்டை சிறிது சிறிதாக கட்டிமுடித்ததாகவும் கூறினார்.

த.அகிலனின் கதையில் வரும் முதியவர்

நண்பரின் நண்பர்கள் பலர் வீடு தேடி வந்தனர். கலந்துரையாடினோம். பல மனிதர்களை வழிகளில் சந்தித்தோம். கதைத்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு போர்க்கால கதை … வாழ்க்கை இருந்தது…. போரில் தப்பித்த அனுபவங்களும் உள்ளன… இதனால் அவர்கள் இழந்தது பல… தம் உறவுகளை மட்டுமல்ல தம் உடல் அவயங்களைக் கூட… குறைந்தது ஒரு இழப்பாவது இருந்தது… இந்த இழப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருந்தன… ஆனாலும் நம்பிக்கையுடன் மீண்டும் வாழ ஆரம்பித்திருக்கின்றார்கள்… தம்

புத்தகக்கடை மணியம் அவர்களின் சகோதரர்

நாளாந்த வாழ்வை… பல நண்பர்கள் உள்ளத்தில் உறுதியாக இருந்தபோதும் உடலில் ஒரு பகுதியாவது பாதிக்கபட்டவர்களாக… அங்கங்களை இழந்தவர்களாக இருந்தார்கள்….. இவர்கள் தங்கள் கதையை… கடந்து வந்த பாதையை பகிர்ந்துகொள்வதன் மூலம் மன ஆறுதலடைகின்றனர்…. ஆனால் இவர்கள் கதைகளைக் கேட்பதற்கு போரில் பாதிக்கப்படாத மனிதர்கள் சுற்றிவர இல்லை… இருக்கின்ற ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மனிதர்களாகவே இருக்கின்றனர்… போரில் பாதிக்கப்படாத மனிதர்கள் தேவைப்படுகின்றார்கள்… இவர்களின் கதைகளை… அதன் வலிகளை… வேதனைகளைக் கேட்பதற்கு… போவோமா இவர்களிடம்… நம் ஆடம்பர வாழ்க்கையை படம் காட்டுவதற்கல்ல மாறாக… இவர்களது மனமாவது ஆறுதலடைவதற்காக…

கிளிநொச்சி சந்தையில் காத்திருக்கும் பெண்…

மோட்டார் சைக்கிளில் வெளிக்கிட்டு ஊர் சுற்றினோம்… சந்தைகள் இன்றும் கூடுகின்றன… ஆனால் களையிழந்து காணப்படுகின்றன… சந்தைகளில் வியாபாரம்  செய்பவர்கள் பல வகைகளில் போரினால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது… அதில் ஒருவருக்கு இரண்டு கைகளுமே இல்லாது நம்பிக்கையுடன் மரக்கறி வியாபாரம் செய்கின்றார்… மதிய வேளை… மக்கள் அதிகமாக இருந்ததனால் காலையிலிருந்த பயம் இப்பொழுது இருக்கவில்லை… அதேயளவு இராணுவம் இருந்தபோதும் கூட…

நாம் சுற்றித் திரிந்த பகுதி முழுவதும் முன்பு புலிகளின் ஊடகத்தூறையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தவை… அவர்கள் பயன்படுத்திய பல கட்டிடங்கள் பாழடைந்து போயிருந்தன…. கவனிப்பாரற்று… போரின் சாட்சிகளாக… வைகோ, திருமாவளவன், நெடுமாறன் முதல் இன்றைய தமிழ் மக்களின் பாதுகாவலன் செந்தமிழன் சீமான் அண்ணன் வரை பல தமிழக அரசியல்வாதிகளும் திரைப்படத்துறையினரும் வருகை தந்தபோது தங்கியிருந்த கட்டிடங்கள்… அன்று அதிகார மையங்களாக இருந்த கட்டிங்கள் இன்றும் இருக்கின்றன…… ஆனால் இப்பொழுது அதிகாரம் இன்றி…. ஆளரவம் இன்றி…  அடைப்புகளின்றி… கதவு ஜன்னல்கள் இன்றி… வெறிச்சோடியிருக்கின்றன… இக் கட்டிடங்களை சுற்றி (தமிழ்ஈழ) மக்கள் இன்றும் வாழ்கின்றார்கள்… போரின் வடுக்களுடன்… மனச் சுமைகளுடன்… அரசியல் அநாதைகளாக… இவர்களைப் பார்க்க இப்பொழுது யாரும் வருவதில்லை…. இப்பொழுது வருபவர்கள் எல்லாம் தலைநகருடன் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புகின்றனர்… அதிகாரம் மையம் அங்குதானே இருக்கின்றது இன்று…

இக் கட்டிங்களுக்கு அருகாமையில்… அன்று வாழ்ந்தவர்களையும் வந்தவர்களையும் விமானக்குண்டுகளிலிருந்து காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட பதுங்குகுழிகள் (பங்கர்கள்) இன்னும் இருக்கின்றன……. வந்தவர்கள் பாதுகாப்பாக தப்பி சென்றுவிட்டார்கள்… வாழ்ந்தவர்கள் பலர் மடிந்துபோனார்கள் தப்பமுடியாது… தப்பியவர்கள்… கையில் பிச்சைப்பாத்திரத்துடன் நிற்கின்றார்கள் ஆதரவின்றி… மக்களை

தூர்ந்து போன பதுங்கு குழி

காப்பாற்ற முடியாத இந்த பங்கர்களும் தூர்ந்து போய் அநாதைகளாக காட்சியளிக்கின்றன… ஆனால் இவற்றுக்குத் தூணையாக பாம்பு புத்துகள் மட்டும் முளைத்திருக்கின்றன… இவை நாளை கடவுள்களின் அவதாரமாக நம்பப்பட்டு, இந்த இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை… ஆம்! வாழ்வதற்கு ஏதோவொரு நம்பிக்கை தேவைப்படுகின்றது இவர்களுக்கு…

இங்கிருந்து இரண்டு மூன்று ஒழுங்கைகள் கடந்து செல்லும் பொழுது ஒரு காணிக்குள் பல வகையான வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன… இந்த வாகனங்கள் எல்லாம் முள்ளிவாய்க்காலில்

முள்ளிவாய்க்காளில் கைவிடப்பட்ட வாகனங்கள்…

கைவிடப்பட்டவை… உரிமைகோர ஒருவரும் இன்னும் முன்வரவில்லை… அவ்வாறு வருவதற்கும் உரிமையாளர்கள் ஒருவரும் இல்லைப் போல… இதைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது பொலிஸ் அதிகாரி ஒருவர் வந்ததைக் கவனிக்கவில்லை… படம் எடுத்துவிட்டு திரும்பியபோது அவர் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார்… வழமையான விசாரணை… யார் நீ… ஏன் படம் எடுக்கின்றாய்… என சிங்களத்தில் கேட்ட கேள்விகளுக்கு நான் சிங்களத்தில் பதில் அளிக்க… மீண்டும் நக்கலான சிரிப்புடன் தனது தலையைசைப்பில் என்னைப் போகச் சொல்வதாக உணர்ந்தேன்… இந்த செய்கை “நீ எல்லாம் படத்தை எடுத்து என்னத்தைக் கிளிக்கப் போகின்றாய்… எல்லாவற்றையும் நாம் அடக்கிப்போட்டோம் தானே…” என தலைக்கணத்துடன் கூறுவதைப் போல இருந்தது… இது என் உள்ளத்தில் கவலையையும் கோவத்தையும் உருவாக்கிய போதும் ஒன்றும் செய்ய முடியாதவனாக… அந்தப் பொலிஸ்காரரிடமிருந்து தப்பித்தால் போதும் என எண்ணிக்கொண்டு நண்பரின் மோட்டார் வாகனத்தில் ஏறி அமர்ந்தேன்…

மதியம் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்விற்கு சென்றோம். டென்மார்க்கில் வாழ்கின்ற பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் இணைந்து கல்வி கற்க முடியாது வறுமையால்

டென்மார்க்கிலிருந்து வந்திருந்த பெண்

வாடுகின்ற குழந்தைகளுக்கு தனிப்பட வழங்கிய உதவியை நேரில் பார்க்க வந்தமைக்காக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு அது. இவர் இக் கல்லுரியின் ஆசிரியராக முன்பு இருந்தவர். பின்பு பலரைப்போல போர் உருவாக்கிய கால சூழ்நிலையால் புலம் பெயர்ந்து சென்றுள்ளார். போர் முடிவுற்றதாக அறிவித்த பின் இக் கல்லுரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு கல்வியைத் தொடர்வதற்கு வசதியற்ற மாணவர்களுக்கான பங்களிப்பை செய்து வருகின்றார். இதற்காக குறிப்பிட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சனிக்கிழமைகளில் மேலதிக வகுப்புகளும் மற்றும் உணவும் வழங்குவதற்கான பங்களிப்பைச் செய்கின்றார். இதற்காக கிழமைக்கு 6000ம் ருபாய்க்கள் இவருக்கு முடிகின்றது. தனது பங்களிப்பு சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்வதற்காக நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார். மேலும் தனது உதவி திட்டத்தின் மூலம் நன்றாக கற்கின்ற மாணவர்களுக்கு காலனிகளையும் அன்பளிப்பாக அளித்தார். போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு புலம் பெயர்ந்த மனிதர்கள் செய்யக்கூடிய பல பங்களிப்புகளில் ஒன்று, இவ்வாறு வறுமையால் வாடுகின்ற மாணவர்களுக்கு உதவுவது. இது இன்றைய சூழலில் முக்கியமானதும் அவசியமானதும் என்றால் மிகையல்ல. ஆனால் இதைப் பற்றி யார் சிந்திப்பார்கள். அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் பொருத்தவரை மாணவர்கள் கல்வி கற்காமல் இருப்பதே அவர்களுக்கு பயனுள்ளது. ஆகவே இவ்வாறன செயற்பாடுகளில் எல்லாம் அவர்கள் அக்கறை கொள்ள மாட்டார்கள். புலம் பெயர்ந்த மனிதர்களும் இச் செயற்காடுகளில் அக்கறையற்று இருப்பார்களேயானால் எதிர்காலத்தில் அறிவற்ற ஒரு தேசமாக நம் தேசம் உருவாகும் என்பதில் சந்தேகமேயில்லை.

நன்றி கூறும் மாணவி

மோட்டார் வானத்திற்கு பெற்றோல் நிரப்பினோம். அந்த நிலையத்திற்கருகில் வன்னியின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த வாய்க்கால் நீரை அதுபோகின்ற வழிகளில் எல்லாம் வாழ்கின்ற மக்கள் பல தேவைகளுக்காகப் பயன்டுதுகின்றனர். இதைப் பற்றிய எந்த அக்கறையுமின்றி இவ்வாறன நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இந்த நிலையத்திலிருந்து வெளிவரும் எண்ணைக் கழிவுகள் வாய்க்காலில் சேர்ந்து அதை மாசடையச் செய்கின்றன. இதனால் நீண்ட காலத்தின் பின்பு மக்களுக்கு பல பாதிப்புகள் வரலாம். இதைத் தடுப்பதற்கு இப்பொழுதே கவனம் செலுத்தவேண்டியுள்ளது. யார் இதைச் செய்வார்கள்?

மாலை பிரபல்யமான இளம் எழுத்தாள நண்பரின் வீட்டுக்கு சென்றோம். அவர்களது வீடு… ஒரு கொட்டில்… எனது குடும்பம் இருபந்தைந்து வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததை மீள நினைவுபடுத்தியது அது. சிறிய கொட்டில். அதற்குள் மூன்று பேர் சுந்திரமாக எழுந்து நிற்பதோ, கால் நீட்டிப் படுப்பதோ சாத்தியமில்லாத ஒன்று. இதற்கு முன்பாக இதைவிட இன்னும் சிறிய கொட்டில் ஒன்று இருந்தது. அது அவர்களது குசினி (சமையலறை). இதற்குள் தலையைக் குனிந்து சென்று குந்தியிருந்தவாறு மட்டுமே சமைக்கலாம். தந்தை இல்லாத குடும்பம். போராட்டத்தில் போராளியாக மரணித்த அண்ணனை இழந்த குடும்பம். குழந்தை இராணுவமாக  இணைக்கப்பட்டு மரணிக்காது காப்பாற்றப்பட்ட தங்கை. சமூக அக்கறையுடன் எழுதுகின்ற பட்டதாரியான இளம் எழுத்தாளர். போர் தந்த மனவடுக்கள் மற்றும் பொருளாதார சுமைகள் என்பவற்றை சுமக்க முடியாது… சுமந்து திரிகின்ற அவரது தாய்… அம்மா அனைவருக்கும் தேநீர் கொடுத்து வரவேற்றார். வறுமையிலும் வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் பஞ்சமில்லை நம் தேசத்தில்… இவர்களைப்போன்று வறுமையிலும் சிறிய கொட்டில்களிலும் பல குடும்பங்கள் அந்தப் பகுதிகளில் வாழ்கின்றன. சில குடும்பங்களுக்கு காணிகள் இருக்கின்றன… சில குடும்பங்களுக்கு காணிகளும் இல்லை… ஒரு புறம் அரசாங்கம் வீடு கட்டிக் கொடுக்கின்றது…. இந்தியா வீடு கட்டிக் கொடுக்கின்றது… பெரிய விளம்பரங்கள் மட்டும் செய்திகளில் வருகின்றன… அவ்வாறு வீடுகள் சில கட்டிக் கொடுப்பட்டபோதும் இவர்களுக்கு வீடு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன…?

வன்னியிலிருக்கின்ற வறுமையான குடும்பங்களும் மற்றும் மலையகத்திலிருந்து இங்கு வந்து குடியேறி வாழ்கின்ற குடும்பங்களும் யாராலும் கவனிப்பாரற்ற நிலையிலையே வாழ்கின்றனர் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது. இதன் விளைவாகத்தான் மேற்குறிப்பிட்ட எழுத்தாளரின் வீடும் கட்டப்படாது இன்னும் குடிசையாகவே இருக்கின்றது. இவ்வாறன பிரச்சனைகளுக்கு பல்வேறு அரசியல் மட்டுமல்ல வர்க்க பிரதேச சாதிய காரணங்கள் என பல இருக்கின்றன. இக் காரணங்கள் விரிவாக ஆதரங்களுடன் எழுதப்படவேண்டிய இன்னுமொரு கட்டுரையாகும்.

இசைப்பிரியாவும் அவரது தோழிகளும் வாழ்ந்த கட்டிங்கள்ரு கட்டுரையாகும்.

இசைப்பிரியாவும் அவரது தோழிகளும் வாழ்ந்த கட்டிங்கள்

இளம் எழுத்தாள நண்பரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நண்பரின் வீடு நோக்கி திரும்பினோம். இப்பொழுது நண்பரின் வாகனம் அவரின் வீடு இருந்த ஒழுங்கையால் சென்று கொண்டிருந்தது… அப்பொழுது நண்பர், “இந்த ஒழுங்கையால் தான் இசைப்பிரியாவும் அவரது தோழிகளும் ஒவ்வொரு நாளும் நடந்து வேலைக்குச் செல்வார்கள்…” எனக் கூறிக் கொண்டு அவரிருக்கின்ற வீட்டைக் கடந்து சென்று அருகிலிருந்த ஒழுங்கையில் நிற்பாட்டினார். அந்த ஒழுங்கைக்கு அருகிலிருந்த

காணியில் கதவு, ஜன்னல் மட்டுமல்ல அதன் சட்டங்களும் இல்லாத வெறுமையான கட்டங்கள் மட்டுமே இருந்தன. இங்கு தான் இசைப்பிரியாவும் அவரது நண்பர்களும் போருக்கு முன்பு வாழ்ந்தார்கள்.  அவர்கள் பயன்படுத்திய கிணறு, தொட்டி என்பன அதன்பின் யாரும் பயன்படுத்தாது பாழடைந்து போயிருந்தன.  இந்தக் காணியை இப்பொழுது அரசாங்கம் தனது அதிகாரத்திற்குள்

உட்படுத்தி புனர்நிர்மாண வேலைகளுக்காக புனரமைப்பு செய்கின்றது. இவ்வாறு புலிகளின் நிர்வாகப் பிரிவுகள் இருந்த பல கட்டிடங்களும் காணிகளும் இவ்வாறன விளம்பரப்படத்துடன் காட்சியளிக்கின்றன இப்பொழுது. மறுபுறம் புலிகளினால் உயர்தரமான நிலையில் பயன்படுத்தப்பட்ட கட்டிடங்கள் இப்பொழுது இராணுவ முகாம்களாக மாற்றியுள்ளன எனவும் அறியமுடிந்தது. இங்கிருந்து அருகாமையிலையே இருந்த நண்பரின் வீட்டுக்கு நடந்தே சென்றேன்…

இன்றைய பொழுதில் கிடைத்த அனுபவங்கள், தகவல்கள், கதைகள் மனதில் பெரும் சுமையாக இருக்க… இரவு உணவை உட்கொண்ட பின்… உரையாடிவிட்டு உறங்கச் சென்றோம்….

நண்பரின் வீட்டின் முன்னறையில நான் தங்கியிருந்தேன். இந்த அறை வீட்டுடன் இணைந்திருந்தாலும் தனியறையாகவே இருந்தது. இரவு வெட்கையை தனிக்க காற்று உள்ளே வருவதற்காக ஜன்னல்களை நன்றாக திறந்து விட்டு… மேலதிக காற்றுக்கு காற்றாடியையும் சூழறவிட்டுவிட்டு படுத்தேன்.

இரவு… நடு நசியை கடந்து இருக்கவேண்டும்…. ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன்…. மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அரசாங்கம் தான் நினைத்த நேரத்திற்கு மின்சாரத்தை நிறுத்துவதை இப்பொழுது வழமையாக கொண்டிருக்கின்றது…. நாய்கள் குரைத்தன…. நித்தரை கலைந்தது… இராணுவத்தினர் என் அறை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தனர்… போன்ற ஒரு உணர்வு… பிரமை….. என்னை ஆட்கொண்டது… என் உடல் வியர்த்தது…. உடல் நடுக்கம் எடுத்தது… கண்களைத் திறந்து ஜன்னல் பக்கமாக பார்க்கும் தைரியம் வரவில்லை… நடப்பது நடக்கட்டும் என ஜன்னல்களுக்கு முதுகை காட்டியபடியே கூனிக்குறுகிப் படுத்திருந்தேன்… அவர்களது குரல்கள் உயர்ந்து தாழ்ந்து மறைந்து போனன…

சிறிது நேரத்தில்… நாய்கள் குரைப்பது நின்றது… ஆனால் வேறு குரல்கள் புதிதாக ஒலித்தன… சில பெண் போராளிகள்…. ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு…  “எங்களை ஏன் விட்டுச் சென்றீர்கள்” என கதறி அழுது கொண்டிருந்தார்கள். அதில் இசைப்பிரியாவும் அவளது தோழிகளும் நின்றுகொண்டிருதனர்… என என் கனவு மனதில் காட்சிகளாக அவர்கள் தெரிந்தனர்…

அவர்கள் முகம் பார்க்காமல்…பார்க்க முடியாமால்… குற்றவுணர்வில்… நானும் அழுதேன்…

எங்களை மன்னிப்பீர்களா என அவர்களைப் பார்த்துக் கேட்க முடியவில்லை…

அவர்கள் காத்திருக்கின்றனர்…. நம் வருகைக்காக…

அவர்களின் ஆன்மா சாந்தியடைதவற்காக….

மீராபாரதி

20.08.2012

நன்றிகள் – குளோபல் தமிழ் செய்திகள்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81777/language/ta-IN/—-.aspx#.UDG6ojkqmNU.facebook

அகிலன் நவரத்தினம் – இரு படங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: