Posted by: மீராபாரதி | August 18, 2012

பிரங்ஞை ஓர் அறிமுகம் – ஒரு பார்வை – மைதிலி தயாநிதி

பிரங்ஞை ஓர் அறிமுகம் – ஒரு பார்வை – மைதிலி தயாநிதி

“பிரக்ஞை ஓர் அறிமுகம்: தனி மனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி-மேற்குலக அறிஞர்களின் பார்வையில்” என்ற தலைப்புக் கொண்ட மீராபாரதியின் நூல் வாசகர் மனதில் நிறையக் கேள்விகளை எழுப்பும் ஒரு நூலாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். ஆன்மீகப் பயிற்சி ஒன்றிற்கு அறிவுரீதியான, நவீனஅறிவுத் துறைகளின் ஆய்வினூடாக, மேனாட்டுத் தத்துவ இயல் மூலமாக ஒரு பலமான அத்திவாரத்தினை, தத்துவ, உளவியற் துறைப் பின்னணியினை வழங்கும் ஒரு முயற்சியாகவே இவரின் நூலினை நான் பார்க்கின்றேன்.

இவரின் நூல் தமிழிலே அறிவுரீதியாக ஒரு விடயத்தை அணுகியுள்ளது எனும் வகையில் முக்கியமானது.  “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் பாடல் வரிகளை இவர் நூல் நினைவூட்டுகின்றது. இந் நூலிள்ள இருபத்து மூன்று கட்டுரைகளில் பெரும்பாலானவற்றில், நூற்தலைப்புக்கேற்ப, மேனாட்டு அறிஞர் கருத்துகள் எளிமையான நடையில் கூறப்பட்டுள்ளன. பிரக்ஞை என்ற கருத்துத் தொடர்பாக உளவியலாய்வாளர்கள், தத்துவவியலாளர்கள் என்பவர்களின் கருத்துகளைத் தொகுத்துத் தந்துள்ளார்.

எனினும், இவர் நூலினை, இவர் கூறுவது போன்று வெறும் தொகுப்பு நூலாக மட்டும் கருதிவிட முடியாது. தொகுப்பாளரின் உந்துசக்தியாக செயற்படுபவை, அவரின் தனிப்பட்ட உலக நோக்கு, அவர் வாழும் சமூகத்தின் உலக நோக்கு, இவை இரண்டுக்குமிடையிலான வேறுபாடுகள், முரண்பாடுகள் என்பன கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை ஆகின்றன. தொகுப்பு ஒன்றின் மூலமாகத் தொகுப்பாளர், தான் வாசித்தறிந்த கருத்துகளில் முக்கியமானதாகக் கருதுவனவற்றை, தான் வாழும் சமூகத்திற்கு ஏற்புடையதாகக் கருதி அத் தொகுப்பினைச் செய்கின்றார். இவ்வகையில் அவர் ஒரு படைப்பாளியை நிகர்க்கிறார். சமூகப் பொறுப்பினை இருவரும் எடுத்துக் கொள்வதுடன், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் விழைகின்றனர்.

மேற்குலக தத்துவஞானிகள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், புலமைசார் துறையினர் என்பவர்களின் பிரக்ஞை குறித்த கருத்துகளைக் கூறுகையிலும், தியானமுறைகளை மதிப்பீடு செய்வதிலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மன வடுக்களை ஆற்றவும், அரசியல் சமூக நிலைகளைச் சீர்ப்படுத்தவும் தியானத்தை சிபார்சு செய்வதிலும்  மீரா பாரதியின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. பிரக்ஞையினையும், தியானத்தினையும் இணைத்து அவர் பேசும்பொழுது அவர் நூல் எழுதியதன் நோக்கமும், அவர் நூல் மூலமாக விடுக்கும் செய்தியும் புலனாகின்றன.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழியில் ஆன்மீகத் துறையினை அறிமுகம் செய்து வைக்கும் நூலாக இவர் நூல் அமைகின்றது. கீழைத்தேய சமயங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேனாட்டில் மொழிபெயர்ப்பு நூல்கள் மூலமாக அறியப்பட்டன. அவற்றின் செல்வாக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேனாட்டில் தோன்றிய சமய இயக்கங்களில் காணப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக, தியோசொபிக்கல் இயக்கத்தைக் கூறலாம். மேனாடுகளில் ஆன்மிகத் துறை வளர்ச்சிக்கு இந்தியாவிலிருந்து வந்த சமயத் தலைவர்கள் முக்கிய பங்காற்றினர். இவற்றுள், 1893 இல் விவேகானந்தரால் தாபிக்கப்பட்ட வேதாந்த இயக்கம் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் மேனாடு வந்த இந்திய ஆன்மீகத் தலைவர்கள் பலர் மேனாட்டு அறிவுப் புலமைப் பின்னணியைக் கொண்டிருந்தனர்.  1963 இன் பின்னர் வட அமெரிக்கவில் புதிய ஆன்மீக இயக்கங்கள் வீறு பெற்று வளர்ந்தன.  தென்னாசிய அகதிகள், குடியேற்றவாசிகள், என்பவர்களின் வருகை இப் புதிய ஆன்மீக இயக்கங்களுக்கு உரமூட்டின. ஆங்கிலம் தவிர்ந்த பிற தென்னாசிய மொழிகளில் கைந்நூல்கள், பிரசுரங்கள் வெளியிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது. குறிப்பாக, பல்கலாசாரக் கொள்கையுடைய  கனடாவில் 1980 களின் பிற்பகுதியிலிருந்து பெருமளவிற் குடியேறிய இலங்கைத் தமிழ்ச் சமூகம் சமயம் சார்ந்த கோயில் வழிபாட்டில் மட்டுமன்றி, பல்வேறு ஆன்மீகத் தலைவர்களிடமும்,  ஆன்மீகப் பயிற்சி நெறிகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றது. இத்தகையதொரு சமூகப் பின்னணியில் வைத்தே மீராபாரதியின் நூலைப் பார்க்க வேண்டி உள்ளது.

ஆன்மீகம் என்பதைத் தன்னைத் தானே உணரல், தனக்கும், கடவுளுக்கும் இடையிலுள்ள பிணைப்பினை உணரல், தனக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பினை அறிதல், தனக்கும், சமூகத்தில் பிறர்க்கும் இடையிலுள்ள தொடர்பினை உணரல் என்று பலவகையாக அர்த்தப்படுத்தலாம். தியானம், பிரார்த்தனை என்பன இந்த உயர் ஆன்மீக நிலையினை எட்டுவதற்கு வழிகளாகக் கருதப்படுகிறன. தியான நிலையில் மனித மூளை அடையும் மாற்றங்கள் விஞ்ஞானபூர்வமாக ஆராயப்பட்டு வருகின்றன.  அதே சமயம் ஆன்மீக இயக்கங்கள் பல தமது தியான முறைகள் விஞ்ஞானபூர்வமானவை என்று நிறுவுவதில் பெரிதும் அக்கறை காட்டுகின்றன.  இவ்வகையிலே விஞ்ஞான, அறிவியற் பின்னணியில் ஓசோவின் தியான முறைகளைக் கூறவந்ததொன்றாக மீராபாரதியின் நூலினை நாம் அடையாளப்படுத்தலாம்.

இவர் நூலினை இரு பாகங்களாகப் பிரிக்கலாம்: முதலாம் பாகம்
பிரக்ஞை, பிரக்ஞையின்மை குறித்த மேனாட்டுப் புலமைசார் கருத்துகளைக் கொண்டது. இரண்டாம் பாகம் ஓசோவின் தியான முறைகளுடன் தொடர்புடையது. இவர் நூலினை முழுமையாக நோக்கும்பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழுகின்றன:

(அ) ஓசோவின் தியான முறைகளுக்கும், மேனாட்டு தத்துவ, உளவியல் தொடர்பான புலமைசார் கருத்துகளுக்குமிடையே உள்ள தொடர்பு என்ன? இத் தொடர்பு நூலில் சரியாக விளக்கப்படவில்லை. ஓசோ எந்த தத்துவ, உளவியல் அடிப்படையில் தமது தியான முறைகளை உருவாக்கினார் என்பது பற்றிய வாதம் அவசியம். ஓசோ பிரக்ஞை குறித்துக் கொண்டிருந்த கருத்துகள் யாவை, மேனாட்டு அறிவியலாளருடன் எவ்வகையில் ஒத்துச் செல்கிறார், எவ்வௌ; அம்சங்களில் முரண்படுகின்றார் என்பன பற்றிய ஆசிரியரின் அவதானிப்புகளை உள்ளடக்கிய ஒரு அத்தியாயம் இணைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

(ஆ) ப்ரொயிட், ஜுங், மார்க்ஸ், ஓசோ என்பவர்கள் பிரக்ஞை, பிரக்ஞையின்மை என்ற இரண்டு கருத்தாக்கங்களையும் ஒரே மாதிரியான அர்த்தத்தில் பயன்படுத்கிறார்களா என்பது இன்னொரு கேள்வி. ப்ரொயிட், ஜுங், மார்க்ஸ் என்பவர்களின் கருத்தியல் (னைநழடழபiஉயட) ரீதியான வேறுபாடுகள் நூலிற் கூறப்பட்டிருப்பினும், பிரக்ஞைபூர்வமாகச் செயற்படல் என்பதன் அடிப்படையில் இவர்களுக்கும், ஓசோவிற்குமிடையில்
ஒரு பொதுவான நிலைப்பாடொன்றினை எடுக்க ஆசிரியர் முயன்றுள்ளார் போல் தெரிகிறது. இது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்று தெரியவில்லை. ஒவ்வொரு சிந்தனைவியலாளரும், உளவியலாளரும் பிரக்ஞையினை வௌ;வேறு விதமாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்பதும், பிரக்ஞையுடன் செயற்படுவதற்கான அவர்களின் அணுகுமுறைகளும் வித்தியாசமானவை என்பதும் முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்படவேண்டியவை.

(இ) அடிப்படையான சமூக-பொருளாதார மாற்றங்கள் இன்றி, தியானமூலமான தனிமனித மாற்றம், சமூக மாற்றத்தைக் கொணரும் என்பது இலட்சியவாத நோக்காகப் படவில்லையா? சமூக பொருளாதார நிலைப்பாடுகளினால் வரையறுக்கப்பட்டிருக்கும் தனிமனிதனுக்குத் தியானமூலமாக உடலியல், உளவியல் நன்மைகள் கிடைக்கின்றன என்று விஞ்ஞான ஆய்வுகள் கூறலாம். ஆனால், இதன் மூலமாக சமூகத்தின் அத்திவாரமான சமூக-பொருளாதார உறவுகளை மாற்ற முடியுமா என்பது ஒரு முக்கிய கேள்வி.

(ஈ)  அடுத்ததாக, எல்லா சமூக தீமைகட்கும் தியான மூலம் உண்டாகும் பிரக்ஞை மூலமாகத் தீர்வு பெற்றுவிட முடியுமா?  முதலில், நன்மை, தீமை இரண்டையும் எவ்வாறு வரையறுப்பது என்பதே பெரும் பிரச்சினை. நல்லது, கெட்டது இரண்டுமே சநடயவiஎந வநசஅள. சமூக ஒழுக்காறுகள், ஒழுக்க விழுமியங்கள் காலத்துக் காலம் பல்வேறு சமூகங்களில் வௌ;வேறு விதமாக வரையறுக்கப்பட்டு வந்துள்ளன. அதன்படி நன்மை, தீமை, நல்லதுமன்றுஃதீயதுமன்று (நெரவசயடஃயஅழசயட) என்பன கணிக்கப்பட்டன. உதாரணமாக, பிராமண சிரேஷ்டர்கள் வர்ண தர்மத்தினை சமூகத்தின் அடிப்படை அமைப்பாகக் கருதினர். (மத்திய கால இந்தியாவில் முக்கியத்துவம் பெற்ற இச் சமூக அமைப்பு முறை இன்றைய உலகிற்குப் பொருத்தமற்றது.) ஒழுக்கவிதிகள் வர்ண தர்மத்திற்கு ஏற்றவகையில் அன்று நிர்ணயிக்கப்பட்டன.  வர்ணதர்மத்திற்கு முரண்படாதவை அனைத்தும் நல்லவை என்றும், அதற்கு மாறுபாடானவை தீயவை என்றும்  வகுக்கப்பட்டன. பகவத்கீதையின்படி ஆத்மபிரக்ஞையில் உறுதியாக மூழ்கியிருப்பவன் தன் வர்ணதர்மத்தினை விருப்பு, வெறுப்பின்றிச் செய்ய வல்லவனாகின்றான். எனவே, பிரக்ஞைபூர்வமான செயற்பாடு, நல்லது, தீயது என்ற வேறுபாடின்றி, எந்தவொரு கருமத்தையும் திறம்பட ஆற்றுவதற்கான மார்க்கமாகின்றது.

பிரக்ஞைபூர்வமான செயற்பாடு என்பது நல்லதொரு சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவும் இருக்குமெனில், அந்த நல்ல சமூக மாற்றம் என்ன என்ற கேள்வி எழுகிறது. சமூகம் பற்றிய பார்வையினை (ளழஉயைட எளைழைn) முன் வைக்காது, மீராபாரதி தந்நூலில் சமூக மாற்றம் குறித்துப் பேசுவது அவ்வளவு பொருத்தமானதாகப்படவில்லை.

எழுத்துப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்: உதாரணத்திற்கு மெய்ஞ்ஞானம், நினைவு கூருதல், சொற்பிரயோகம், சூனியம் , சூன்யதா என்ற சொற்கள் பிழையாக அச்சேறியுள்ளன.

இவரின் நூல் புலமைசார் நூலாகத் தோற்றமளிக்க முற்படும் அதே வேளயில் ஓசோவின் தியானமுறைகளைச் சந்தைப்படுத்தும் நூலாகவும் திகழ முற்படுவது ஒரு குறைபாடு.
எனினும், இவர் நூல் நான் ஏற்கனவே கூறியது போன்று வாசிப்போர் சிந்தனையைத் தூண்டும் நூல். இவர் கூறியுள்ள விடயங்கள் குறித்து மேலும் விரிவான வாசிப்பிற்கு ஒருவரை நிச்சயமாக இட்டுச் செல்லும் என்று நம்புகிறேன்.

மைதிலி தயாநிதி


Leave a comment

Categories