Posted by: மீராபாரதி | August 18, 2012

“பிரக்ஞை: ஒரு அறிமுகம்” – ஒரு மீள்பார்வை – சுல்பிகா

மீராபாரதியின் “பிரக்ஞை: ஒரு அறிமுகம்” – ஒரு மீள்பார்வை – சுல்பிகா

பிரக்ஞை பற்றிய தனது தேடலை ஏறக்குறைய 200 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக மீராபாரதி எம்முன் வைத்திருக்கின்றார். இது ஒரு புதையல். இதில் பிரக்ஞை தொடர்பான பல விடயங்கைளை தொகுத்தளித்திருப்பதாக அவர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். “பிரக்ஞை” தொடர்பான அவரது தேடல் பத்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்திருக்கின்றது. எனினும் மனித குலத்தின் ஆரம்பத்திலிருந்தே இந்தத் தேடல் நிகழ்ந்து வந்துள்ளதாக மானுடவியலாளர்கள், கீழைத்தேய தத்துவவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது கிழைத்தேய நாடுகளில் ஆத்மீகத்தினுடான தேடலாகவும் மேலைத்தேய நாடுகளில், குறிப்பாக அண்மைய நூற்றாண்டின் வரலாற்றில் புலமைசார் தூறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, கோட்பாட்டுதுறைக்கூடாகவும் நிகழ்ந்து வந்திருக்கின்றது.   இந்த வகையில் உளம், உடல், ஆத்மா என்ற விடயங்கள் தொடர்பான ஒன்றாக விளங்கிக்கொள்ளப்பட்ட “பிரக்ஞை” குறிப்பாக ஆத்மீகம், தத்துவம், உளவியல், அண்மைக்காலங்களில் நரம்புயிரியல், உடற்தொழில் இரசாயணம், சக்திச் சொட்டுப் பௌதீகவியல், போன்ற துறைகளினுடாகவும் விளக்கம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வகையில் நோக்கும் பொழுது பிரக்ஞையானது ஒருவழிச் சிந்தனை விளக்கத்தினுடாக விளங்கப்படுத்தமுடியாத ஒரு வியடம் என்பது புலனாகின்றது. இதனடிப்படையிலையே மேற்குலகப் பார்வை, உயிரியல் விஞ்ஞான விளக்கம், சக்திக் சொட்டு கொள்கை விளக்கம், ஆத்மீக விளக்கம், என்ற வகைகளில் பிரக்ஞை பற்றிய விடையங்களை நூலின் ஆரம்ப அரைப்பகுதியில் மீராபாரதி தொகுத்தளிக்க முற்பட்டிருக்கின்றார். மேலும் தனக்குரிய “பிரக்ஞை” பற்றிய விளக்கத்தினையும் கோட்பாட்டினையும், தனது உள்நோக்கிய (interospection) பார்வைக்கூடாக   பல இடங்களில் முன்வைக்கின்றார். இவ்வகையில் நோக்கும் பொழுது, இந்த நூலை அவர் குறிப்பிடுவதுபோல் தொகுப்பு நூல் எனக் குறிப்பிடுவது எனக்குப் பொருத்தமானதாகப்படவில்லை. அவர் பிரக்ஞை பற்றிய வேறுபட்டதொரு அறிவித்தொகுதியை உருவாக்க முனைந்திருக்கிறார் என்றே நான் கொள்வேன்.

நூலின் உள்ளே செல்லுமுன் எனது மீளாய்வுக்கான ஒரு சட்டகத்தினையும் அதன் பரிமாணங்களையும் உருவாக்கும் பொருட்டு பிரக்ஞை, அதன் கோட்பாட்டுருவாக்கம் போன்றன தொடர்பான சில விடயங்களை முன்வைத்தபின் இந்த நூல் பற்றிய எனது பார்வைக்கு வருகின்றேன்.

இதுவரையான கடந்த ஆறு தலைமுறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பிரக்ஞை பற்றிய ஆய்வுத் தேடல்களையும் முயற்சிகளையும் தனித்தனியாகவும் தெளிவாகவும் மேற்குலகம் அடையாளப்படுத்தப்படுகின்றன. இது 1910ம் ஆண்டிலிருந்து புறொய்டின் உளப்பகுப்பாய்வுக் கொள்கை உருவாக்கத்தினுடன் ஆரம்பிக்கின்றது.

1)   1910 -1940 – வரையான புறொய்டின் கோட்பாடுசார்ந்த தேடல்கள். பெருமளவில் உளவியில், ஆத்மீகம், மற்றும் தத்துவத்துறை சார்ந்தவர்கள் இதில் ஈடுபட்டனர்.

2)   1940 – 1970 – வரையான முயற்சிகள் – பௌதீகவியல் மற்றும் சக்திசொட்டு காப்புகொள்கையின் அடிப்படையில் ஆத்மா, ஆத்மீகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன.

3)   1970 – 1990 – உளவியல், சமூகவியல் ஆய்வுகளில் ஏற்பட்ட விஞ்ஞான முறைமைகளின் விருத்தியின் பின்னரான பிரக்ஞை பற்றி தேடல்கள்.

4)   1990 – 2000 – நுண்ணறிவு – மூளைச் செயற்பாடுகள் – நுண்மூளைச் செயற்பாடுகள் – தொடர்பான அறிவு வளர்ச்சியுடன் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.

5)   2000 – 2009 – நரம்பியல் விஞ்ஞானம், உயிர் இரசாயண விஞ்ஞானம் போன்றவற்றின் வளர்ச்சி சார்ந்த பிரக்ஞை பற்றிய விளக்கமும் தேடல்களும்.

6)   2009ன் பிற்பாடு – மூளை விம்பத் தொழிற்நூட்ப வளர்ச்சி, உணர்வு, – மூளைத் தொகுதியின் நுட்பங்களின் கண்டுபிடிப்புகளுடன் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரக்ஞை பற்றிய ஆய்வுகள். இன்று விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் பல்துறை இணைப்புகளுடன் மேற்கொள்ளப்படவேண்டும் என உணரப்படுகின்ற நிலை இன்றுள்ளது.

எனினும் கடந்து நூறு வருடகால மேற்கத்தைய விளக்கங்கள், இதனுடன் தொடர்பான பல முக்கிய விடயங்களை சர்ச்சைக்குரியதாகவே நோக்குகின்றது. அதேவேளை சர்வதேச பிரக்ஞை கற்கை நிலையங்கள், ஆய்வு சஞ்சிகைகள் போன்றன கிழைத்தேய பிரக்ஞை கோட்பாடுகளை உரைத்துப்பார்ப்பதற்கும் இணைத்துக் கொள்வதற்குமான முயற்சிகளை மேற்கொள்கின்றன.

இந்தடிப்படைகளில் பிரக்ஞை தொடர்பான ஆய்வுகளை அணுகுவதில் பின்வரும் சவால்கள் உள்ளதாக கிரிஸ் நம் (Chris Num, 2009) குறிப்பிடுகின்றார்.

முதலாவது பிரக்ஞையின் வரைவிலக்கணம் தொடர்பானது.

1)   ஒருங்கிணைந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் ஒன்றை அடையமுடியாதுள்ளமை. இதன் காரணமாக பல ஆய்வாளர்கள் வரைவிலக்கணமப்படுத்துவதை தவிர்த்துவிடுகின்றனர்.

2)   வரைவிலக்கணம் மேற்கொள்ளப்பட்டாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று மிகவும் வேறுபட்டிருத்தல். இது ஏனையோர்களது பார்வைகளை முற்றிலும் மறுப்பதாகவும் புறக்கணிப்பதாகவும் அமைகின்றது.

3)   பகுதியாகவும் (incomplete) குறைப்பிரசவமாகவும் (early conclusion) வரைவிலக்கணங்கள் மேற்கொள்ளப்பட்டிருத்தல்.

4)   ஒருங்கிணைந்த ஒரு வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவிதமான பொதுத் தளங்களும் இல்லாதிருத்தல் (no recipe for agreements)

5)   வரைவிலக்கணம் குறிப்பானதாக இல்லாது பரந்ததாக அமைதல்.

தற்போது ஏறக்குறை ஒன்றில் ஒன்று சாராத 40க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் உள்ளதாகவும் அவற்றினை 7 வகைகளாக பிரிக்க முடியும் எனவும் கிரிஸ் (Chris Num) குறிப்பிடுகின்றார்.

பிரக்ஞையானது….

1)   உணர்ந்து செயற்படுதல் – அதாவது உணர்வு நிலையிலிருந்து நடத்தையாக மாறுதல்.

2)   சிலவகை ஞாபகங்களின் தொழிற்பாடும் அதனை செயற்படுத்துகின்ற தன்மையும்.

3)   அறிந்து செயற்படுகின்ற ஆழ்ந்து ஆராய்ந்த உணர்வுபூர்வமான தன்மை (intentional).

4)   குறிப்பிட்ட வகையான செயல் நெறி (phenomenal/ Acess).

5)    பரிசோதித்து பிரதிநிதித்துவம் செய்யும் தன்மை.

6)   உள்ளார்ந்த மறைவான உள உள்ளடக்கம் (inner hidden mental content) அல்லது வெளிப்படுத்தக் கூடிய உள உள்ளடக்கம் (repertable mental content).

7)   தனி நபரின் அந்தரங்கத்திலிருந்து இடம் மாறக்கூடிய தன்மை (transpersonal content – person -> environment).

இராண்டாவது பிரக்ஞை தொடர்பான ஆய்வு முறைகளிலுள்ள குறைபாடுகளும் சவால்களும்.

ஜோசே வைஸ்பேர்க் (Josh Weisberg, 2011) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

1)   நம்பகத்தன்மை குறைந்த தரவுகளின் பயன்பாடு.

2)   உள்நோக்கிய பார்வையைப் (introspection) பயன்படுத்தி தரவுகளை உருவாக்குவதிலுள்ள குறைபாடுகள்.

3)   உள்நோக்கிய பார்வைக்கூடாக அறிக்கையிடலிலுள்ள அகவயத்தன்மை

இந்த நிலைமைகள் பிரக்ஞை தொடர்பான ஆய்வுகளை போலியான நம்பகத்தன்மையற்ற விஞ்ஞான ஆய்வுகளுக்குள் வரையறை செய்துவிடுகின்றன.

மூன்றாவது பிரக்ஞையின் பல்துறைகளை ஊடறுக்கும் தன்மைகளைப் புறக்கணித்தல் அல்லது ஒரங்கட்டுதல் – இதனால் ஒரு ஒருங்கிணைந்த “பிரக்ஞை’ விஞ்ஞானத்தை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாதிருத்தல். இது “பிரக்ஞை” தொடர்பான ஒருங்கிணைந்த ஸ்கீமாவை (shema) உருவாக்குவதற்கு தடையாகவுள்ளது.

நான்காவது ஸ்கோவ் வோர்டன் (Scoh Forden) டோன் மக்பிரைட் (Dawn Mcbride, 2007) போன்றோர் குறிப்பிடுவது போல் பிரக்ஞையை நிலையான ஒரு விடயமாகக் கருதுவதால் ஏற்படுகின்றன விளைவுகள்.

மேற்குறித்த நான்கு அம்சங்களின் அடிப்படையில் மீராபாரதியின் பிரக்ஞை பற்றிய எனது பார்வையை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். மேற்கத்தையே புலமைசார் துறைகளுக்கூடாக மீராபாரதி முன்வைக்கும் கட்டுரைகளையே நான் இங்கு பிரதானமாக கருத்தில் கொள்கின்றேன்.

முதலாவது “பிரக்ஞை”யை வரைவிலக்கணம் செய்தல்.

நூலின் முன்னுரையில், மீராபாரதி இதற்கான ஒரு முயற்சியை செய்திருக்கின்றார். “பிரக்ஞை”யின் உள்ளடக்கமாக “விழிப்பு நிலையை” இனங்காண்கின்றார். “விழிப்புணர்வு” என்ற விடயத்திலிருந்து இது வேறுபட்டது எனத் திட்டவட்டமாக கூறும் அவர், வேறு சில இடங்களில் பிரக்ஞை, விழிப்பு நிலையிலிருந்து வேறுபட்டது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அது எவ்வகையில் ஒருமைப்பாட்டைக் காட்டுகின்றது? என்ன விடயங்களில் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றது? போன்ற கேள்விகளுக்கான விரிவான விளக்கங்களை அவர் முன்வைக்கவில்லை. இவ்வகையான தடுமாற்றம் அல்லது பகுதியான வரைவிலக்கணம் செய்யும் நிலை அவரது “உள்நோக்கிய பார்வைக்” கூடாக விழிப்பு நிலைக்கும் அப்பாற்பட்ட விடயங்கள் பிரக்ஞைக்குள் அடங்கலாம் என்பதை உணர்வதன் காரணமாக ஏற்படுவதாகவும் கொள்ளவேண்டியுள்ளது. ஏனெனில் வேறுபல இடங்களில் பிரக்ஞைபூர்வமான சிந்தனை, செயற்படுதல் பற்றி குறிப்பிடுகின்றார். குறிப்பாக சாதகமான சிந்தனை, ஆக்கபூர்வமான செயற்பாடுகள் போன்றனவாகவே பிரக்ஞையை இனங்காணுகின்றார். மேற்கத்தேய வரைவிலக்கணங்களின்படி உள உள்ளடக்கமும் வெளிப்படுத்தக்கூடிய உள உள்ளடக்கமும் என்ற நோக்குடன் இவ்வகையில் ஒருமிக்கின்றபோது “சாதகமான” “ஆக்கபூர்வமான” “ஆரோக்கியமான” விழிப்புநிலை எனக் கொள்ளமுற்படுவது மேற்கத்தைய நோக்கிலிருந்து முரண்படுகின்ற அம்சமாகவுமுள்ளது. மீராபாரதி, குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு பின்னுள்ள ஆய்வுகளில் பெருமளவில் தங்கியிருக்காததாலும், அவ்வாய்வுகளிலுள்ள தற்போதைய கண்ணோட்டங்களை இணைத்துக் கொள்ளாததாலும் அவரால் விரிவான வரைவிலக்கணப்படுத்தலுக்குச் செல்ல முடியவில்லை என்றே நான் கருதுகின்றேன்.

இரண்டாவது மரபுரீதியான “பிரக்ஞை” தொடர்பான ஆய்வுமுறைகளிலுள்ள சவால்களை எவ்வாறு மீராபாரதி கையாள்கிறார் அல்லது கடந்து செல்கிறார்? இந்த நூலில் பெருமளவில் பல்வேறு துறைகளிலுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க முயல்கின்றமை விஞ்ஞான ஆய்வு ஒன்றிக்கான சிறந்த இயல்பாக நான் பார்க்கின்றேன். எனினும் நம்பகத்தன்மை குறைந்த தகவல்கள் அல்லது கூடியளவு உரைத்துப் பார்க்கப்படாத ஆரம்பகால கருத்தாதிக்கங்களை இணைத்து ஆய்வு முடிவுகளை மேற்கொள்ள முயல்கின்றமை, தனது “உள்நோக்கிய பார்வையை” பொதுமைப்படுத்தி உணர்கின்றமை போன்றன அவரது இப்பாரிய, காத்திரமான தேடல் முயற்சியை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது. இதிலுள்ள அகவயதன்மைகள் அவரை அறியாமலேயே அவரது ஆக்கத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆத்மீக தத்துவவியல் பார்வைகள் பெருமளவு முனைப்புடன் வைக்கப்பட்டுள்ளமையை பல இடங்களில் நாம் காணலாம். மேலும், ஆய்வு ஊசாத்தூணைகளை மேற்கோள் காட்டுகின்ற விடயங்களில் குறிப்பான விஞ்ஞான முறைமைகளைப் பயன்படுத்துவதில் மேலும் கவனம் செலுத்துதல் முக்கியமானதாகும்.

மூன்றாவது மீராபாரதி, “பிரக்ஞை” தொடர்பான பல்துறை விடயங்களை திறந்த மனதுடன் உள்ளடக்க முனைகின்றாரா? அல்லது அவ்வாறான பல்துறைகளை உள்ளடக்கும் தன்மையைப் புறக்கணிக்கின்றாரா? இந் நூலில் “பிரக்ஞை” தொடர்பான எண்ணக்கருவிலுள்ள பல்அறிவுசார்துறையை உள்ளடக்கும் தன்மையை மிகத் தெளிவாகவே முன்வைக்கின்றார். அதாவது மீராபாரதி “பிரக்ஞை” யிலுள்ள பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்கின்றார். ஆத்மீகம், உளவியல், தத்துவவயில், சமூகவியல், உயிரியல்   போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களின் பரிமாணங்கள் “பிரக்ஞை” க்கு உண்டு என்ற விளக்கங்களை விரிவாக முன்வைக்கிறார். எனினும் இங்குள்ள பலவீனம் என்னவென்றால், ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியே முன்வைப்பதுதான். அவற்றினைத் தொகுத்து நோக்கி இணைகின்ற விடயங்களை (unity recipe) கண்டுகொள்ளவும் அவற்றினுடாக புதிய எண்ணக்கரு அல்லது கோட்பாட்டு உருவாக்கத்தையும் செய்ய முயன்றிருந்தால், அது அவரது தேடல் முயற்சிக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கும். குறிப்பாக தியானம் – உள ஒன்றிப்பும் குவிப்பும் போன்ற விடயங்கள் தொடர்பாக நரம்பியக்க மூளை விம்ப ஆய்வு முடிவுகள் பெருமளவு தற்போது வெளியாகியுள்ளன. அவற்றினடிப்படையில் பிரக்ஞை எவ்வாறு மீள்வரையறுக்கப்பட்டிருக்கின்ற போன்றன இதனுள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம்.

நான்காவது பிரக்ஞையை நிலையான ஒரு விடயமாகக் கருதுதல். “பிரக்ஞை” மாறுபடக்கூடியது. மாற்றியமைக்கப்படக்கூடியது. வளரக்கூடியது. உயிரியல் சுழல் காரணிகள் அவற்றில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பன போன்ற விடயங்கள் “பிரக்ஞையற்று” ஆங்கங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றபோதும் மீராபாரதி அதனை பிரக்ஞையின் பிரதான ஒரு இயல்பாக வலியுறுத்தவில்லை என்றே தோன்றுகின்றது.

பொதுவாக நோக்குமிடத்து மீராபாரதியின் இம் முயற்சி தமிழ் பேசும் சமூகத்தினைப் பொருத்தவரை ஒரு முக்கிய தொடக்க முயற்சியாகும். அறிவுசார் கலந்துரையாடலுக்கும் இது தொடர்பான அறிவாக்கத்திற்கும் இந் நூல் மிக முக்கியமான தளம் அமைத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரது முயற்சிகளும் கல்வித்தேடலும் தொடரவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

சுல்பிகா.

ரொரன்டோவில் நடைபெற்ற, “பிரக்ஞை ஒரு அறிமுகம்” என்ற நூல் அறிமுக நிகழ்வில் சுல்பிகா அவர்கள் நிகழ்த்திய உரையின் பதிவாகும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: