Posted by: மீராபாரதி | August 12, 2012

மீண்டும் இலங்கையில்… ஒரு நாள்… ஒரு பயணம்…

மீண்டும் இலங்கையில்….ஒரு நாள் … ஒரு பயணம் …

22 வருடங்களுக்குப் பின் மீண்டும் யாழ் நோக்கி ஒரு பயணம்…

வவுனியாவைத் கடந்து செல்கின்ற ஒரு பயணம் …

இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொள்வேன் என கனவு கண்டிருக்கின்றேன்… ஆனால் நடைமுறையில் இடம்பெறும் என்பதை ஒருபோதும் நம்பவில்லை… அந்த நம்பிக்கையீனம் இன்று பொய்த்துப் போனது….ஆனால் கனவு பலித்தது… அதுவும் பாதிக்கனவுதான்… ஆம் அந்தக் கனவில் இந்த நிலையில்லை… சூழலில்லை… அது ஒரு வேரொரு உலகம்… சூழல்…

இருட்டிய ஒரு பொழுது…. கொழும்பிலிருந்து யாழ் நோக்கிய பயணம் ஆரம்பமாகின்றது… இரவு பத்து மணி… பஸ்ஸில் ஏறி அமர்கின்றேன்… உண்மையிலையே பகல் பயணம் ஒன்றையே விரும்பியிருந்தேன்… அப்பொழுதுதான் வெளிச் சூழலை பார்த்துக் கொண்டு செல்லலாம்… ஆனால் அது சாத்தியப்படவில்லை…

முரட்டு மனிதன் ஒருவன் ஒரு அடியில் பலரை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தான்… ஆம்! தமிழ் திரைப்படம் ஓளிபரப்பாகிக் கொண்டிருந்தது… பயணிப்பவர்கள் நித்திரை கொள்ளாது இருப்பதற்காக…. ஆனால் அது நமக்குள் வன்முறையை விதைத்துக் கொண்டிருந்தது…… நம்மையும் அறியாது….

அதேவேளை… போரின் பின்னான அபிவிருத்தியின் பெயரால் அழகாக அமைக்கப்பட்ட புதிய தார்ப் பாதையில் அமைதியாக ஆனால் அதிவிரைவாக ஓடிக் கொண்டிருந்தது பஸ்… பேருந்து…

வீதிகளை அகலமாகவும் புதிதாகவும் திருத்துவது முக்கியமான ஒரு அபிவிருத்தியாக மேற்கொள்ளப்படுகின்றதுபோல… இலங்கையில் எந்தப் பாகத்திற்கு சென்றாலும் வீதி அபிவிருத்திகள் வேகமாக நடைபெற்று வருகின்றன… கூலித் தொழிலாளர்களுக்கு வேலை ஒன்று கிடைக்கின்றமை என்னவோ உண்மைதான்… ஆனால் இதையே தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் முரண்பாடுகளுக்கான தீர்வாக முன்மொழியும் பொழுதுதான்  முரண்பாடு எழுகின்றது…

ஒரு நண்பர் கூறினார்… வெளிநாடுகள் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு மட்டுமே நிதி வழங்க விரும்பின்றனவாம்… ஆகவே அரசாங்கம் யாழிலிருந்து கொழும்புக்கு, கண்டிக்கு, மாத்தறைக்கு, அம்பாறைக்கு, நுவெரெலியாவுக்கு… என நாட்டின் அனைத்து நகரங்களுக்குமான பாதைகளை புனரமைப்பு செய்கின்ற திட்டங்களை வரைந்து நிதி பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்கின்றன… போரின் பின்னான வடக்கு கிழக்கு அபிவிருத்தி … வடக்கின் வசந்தம் என்ற பெயரில்…  ஆனால் யாழிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்களுக்கான பாதை ஒரு வழிப்பாதை, அதாவது ஏ 9, மட்டும்தான் என்பது நிதி வழங்குபவர்களுக்குத் தெரியாததா…?

பஸ்ஸில் காட்டிய திரைப்படம் முடிந்த பின்… பாடல்கள் ஒலிபரப்பானது… ஆனால் சிங்களப் பாடல்கள்….

யாழ்ப்பாணத்தை நோக்கிய பயணத்தில் அந்த சிங்களப் பாடல் அபசுரமாகவே என் மனதிற்குள் ஒலித்தது …. 22 வருடங்களுக்கு  முன்பு யாழை நோக்கி பயணம் செய்யும் பொழுது இவ்வாறான ஒரு அனுபவம் கனவும் காண முடியாத ஒன்று….

என்னுடன் பயணம் செய்த நண்பரிடம் …. “ஏன் சிங்களப் பாட்டு போடுகின்றார்கள்… பொருத்தமாகவில்லையே… கேட்பதற்கு அந்தரமாக இருக்கின்றது…” என்றேன்….

என் கேள்விக்குப் பதிலாக அவர்… “ஓட்டுனர் சிங்களவர் … அவருக்கு நித்திரை வராது ஊசாராக இருப்பதற்காக போடுகின்றார்கள்… … இந்த பஸ்ஸில் பயணம் செய்யும் அதிகமானர்வர்கள் சிங்களவர்கள்.. வட பகுதியில் வேலை செய்வதற்காக செல்பவர்கள்” எனப் பல காரணங்களை சமரசமாகக் கூறினார்….

என் தமிழ் உணர்வை மனதிலிருந்து தள்ளிவைத்துவிட்டு கேட்டால் பாடல்கள் நன்றாகத்தான் இருந்தன… ஆனால் என்னால் தான் ஒட்டமுடியவில்லை… அந்த பாட்டின் நல்ல இசையையும் மீறி எனக்குள் அது அபசுரமாகவே ஒலித்துக் கொண்டிருந்தது… நான் ஒரு தமிழ் இனவாதியா என்ற சந்தேகம் எனக்குள் வந்தது…

பேருந்து போகும் பாதையில் இருந்த சிங்கள நகரங்களும் கிராமங்களும் ஆழ்ந்த அமைதியில் இருந்தன…அந்த நடு நசியில்….

அதிகமான சந்திகளில் ஆழமரங்கள் இருந்தன… அதன் நிழல்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன…  இதன் மூலம் தமது மத விசுவாசத்தை வெளிக்காட்டுகின்ற சிங்கள சமூகம்கள்… அல்லது சிறிலங்கா அரசாங்கம்… அல்லது அரசு…

கண்களை மூடி ஆழ்ந்த நித்திரையில் சிலையாகவே இருந்ததன புத்தர் சிலைகள் … எந்தவிதமான பிரக்ஞையோ, விழிப்போ இல்லாது…  இதனால்தான் இந்த புத்தர் சிலைகளுக்கு எல்லாம் தன்னைச் சுற்றி நடப்பது தெரிவதில்லைப்போல…

மதவாச்சியை பஸ் கடந்த போது…. வெளிச் சுழல் மாறியது…

இராணுவ முகாம்கள் மிகப் பெரியளவில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருந்தன…..

ஒவ்வொன்றின் வாசலிலும் மாபெரும் புத்தர் சிலைகள் அமைதியாக இருந்தன… வருவேரை வரவேற்றுக் கொண்டு…. இராணுவத்தினருக்கும் பாதுகாப்பாகவும்…

ஒவ்வொரு இலக்கங்களைக் கொண்ட பல்வேறு இராணுவப் பிரிவுகளின் தலைமையங்கள் இருந்தன… அவற்றைப் பார்க்கும் பொழுது கோவம்  வந்தது…. கவலை வந்தது…

இவ்வாறு ஏ 9 வீதியிலிருந்த பல இராணுவ முகாம்களை வீதிப் புனரமைப்பு வேலைகளினால் குன்றும் குழியுமாக இருந்த பாதையில் கடந்து சென்றது வாகனம்…

ஆனால் எனக்குள் எழுந்த கோவத்தை அமைதியாக்கியது… வீதிகளில் தடுப்புகளோ சோதனைகளோ இல்லாமல் இருந்தமை…

ஓமந்தையைத் தவிர…

இங்கு மட்டும் அடையாள அட்டை இல்லாதவர்கள் (வெளிநாட்டவர்கள்) மட்டுமே இறங்கிப் பதிவு செய்யவேண்டும்… இவர்கள் தமது கடவுச்சீட்டின் பிரதி ஒன்றை அவர்களிடம் கையளிக்கவேண்டும்….  மற்றவர்கள் பஸ்ஸில் இருக்க இராணுவத்தினர் ஒருவர் பஸில் ஏறி அவர்களது அடையாள அட்டையை பரிசோதித்த பின் குறிப்பிட்ட வாகனம் தொடர்ந்தும் பயணம் செய்ய அனுமதிப்பார்….

முறிகண்டியை சென்றடைந்தது பஸ் ….. முக்கியமான சந்தி… கடந்த காலங்களில் அனைத்து வாகனங்களும் இங்கு தரித்துச் செல்லும்… கடவுள் தரிசனம் செய்பவர்களுக்கும்… மலசல கூடங்கள் செல்பவர்களுக்கும்… தேநீர் மற்றும் கள்ளத்தீணிகள் உண்போருக்கும்… என பலருக்கும் முக்கியமான ஒரு இடம் இது…

ஆனால் இப்பொழுது வாகன ஓட்டுனரின் விருப்பத்தையும் தேவையைப் பொருத்து மட்டுமே வாகனத்தை நிறுத்துவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகின்றது…

முறிகண்டியில் பழைய தமிழ் மணம்.. அல்லது சைவத் தமிழ் மணம் வீசவில்லை…

ஆனால் சத்தமாக இந்து அல்லது சைவ பக்திப்பாடல் மட்டும் முறிகண்டி கோயிலிருந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது…

அருகில் புதிதாக கட்டப்பட்ட பெரிய கட்டிடம் ஒன்றில் சிங்களவர்கள் நடாத்தும் ஒரு பேக்கரியும் தேநீர் கடையும் முளைத்திருந்தது…அதற்குள் இருந்து தொலைக் காட்சிப் பெட்டியொன்றிலிருந்து பௌத்த போதனை ஒன்றை பௌத்த மதகுரு ஒருவர் சிங்கள மொழியில் உரத்து நடாத்திக் கொண்டிருந்தார்….இது இன்னமும் வெளியில் ஒலித்த தமிழ் அல்லது சைவ பக்திப் பாடலை  மேவி ஒலிக்கவில்லை… ஆனால் அதற்கான விடா முயற்சி நடைபெறுகின்றமை மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது…

என்னுடன் பயணம் செய்த நண்பர் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்… ஆனால் அங்கிருந்து கோயிலுக்கு சென்று மற்ற தமிழ் சைவர்கள் போல் தானும் தனது நெற்றியில் மூன்று பட்டைகளில் திருநூறும் பூசி சந்தனம் பொட்டும் வைத்துக்கொண்டு வந்தார்….

எனக்குள் எழுந்த ஆச்சரியத்திற்கான விடையைக் காண, “இது என்ன புதுக் கோலம்” எனக் கேட்டேன்….

“இந்த இடத்தில் (இருந்தாவது) நமது தமிழ் அடையாளத்தை பயமின்றி வலுறுயுத்தவேண்டி உள்ளது …அதற்கு இந்தக் குறியீட்டைவிட்டால் வேறு வழி இல்லை” என்றார்…

எனது பகுத்தறிவு அந்த வாதத்தை ஏற்றுக்கொண்டது… ஆனால் மீண்டும் தவறு இழைக்கின்றோமோ என ஏழாம் அறிவு உணர்த்தியது….. ஒன்றை வலியுறுத்துவதற்காக தவறான பாதையை தெரிவு செய்கின்றோமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை…. ஆனாலும் ஒரு தேசத்தின் அடையாளத்தை அடக்கி சிதைக்கும் பொழுது, அதற்கு எதிராகப் போராடி தம்மை நிலைநாட்ட, இவ்வாறான உணர்வையும் அடையாளத்தையும் வெளிப்படுத்த வேண்டிய இவர்களது உரிமை. அதை நாம் புரிந்து கொள்ளவும் மதிக்கவும் வேண்டும் தானே….

கிளிநொச்சி நகரை கடக்கின்றபோது, போரின்போது விழுத்தப்பட்ட தண்ணீர்தாங்கி இப்பொழுது கண்காட்சிக்கு ஏற்றவகையில் பாதுகாக்கப்படுகின்றது… நாம் விழுந்து, தோற்றுப்போனோம் என்பதன் சாட்சியாக மிகப் பிரமாண்டமாக காட்சி தருகின்றது…. அவர்களும் இவ்வாறான அடையாளமாகத்தான் அதனைப் பயன்படுத்துகின்றார்களோ….?

ஆனையிறவைத் தாண்டுகின்றோம்… சிறிலங்கா இராணுவம் போரில் இறந்த தனது இராணுவத்தினருக்காக மிகப் பெரிய நினைவுச் சின்னம் எழும்பியிருந்தது… அந்த இடத்தைச் சுற்றி நன்றாக நீருற்றிக் கொண்டிருந்தார்கள் சிறிலங்கா இராணுவத்தினர்… நடப்பட்ட புற்கள் அழகாகவும் வாடாதும் பச்சைப்பசேலாக இருப்பதற்கா மட்டுமல்ல… சிங்கள பௌத்த பேரினவதா ஆக்கிரமிப்பு வேருன்றீ வளர்வதற்காவும்… எதற்காக செய்கின்றார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சமானது…

ஆனால் தமிழ் தேசத்தை அடக்குகின்ற பல சின்னங்களின் முக்கியமான ஒரு சின்னமாக இருந்தது இந்த ஆனையிறவு சிறிலங்கா இராணுவ முகாம். அப்படியான ஒரு இராணுவ முகாம் மீண்டும் நிலைகொண்டுள்ளதை பார்த்தமை வருத்தத்தை ஏற்படுத்தியது… இந்த முகாமை, அடிமைச் சின்னத்தை தாக்கி அழிப்பதற்காக இறந்த ஆயிரம் ஆயிரம் (சிறுவர்) போராளிகள் கண்முன் வந்து சென்றார்கள்…

இப்படி எத்தனை இராணுவ முகாம்களை அழித்தார்கள்… இன்று…?

என் கண்கள் என்னையுமறியாது குளமாகின….

எவ்வளவு இழப்புகள்… எத்தனை குழந்தைகள்… எல்லாம் வீணாகப்போனனவே…

இந்த மனச்சுமையை சுமந்தவாறு… பளையை கடந்து செல்லும் பொழுது….

பளைக்கும் முகமாலைக்கும் இடையில்… நீண்ட துரத்திற்கு… இன்னும் அகற்றப்படாத கண்ணிவெடிகள் இருப்பதற்கான எச்சரிக்கைப்பலகைகள் இருமருங்கிலும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன….

நம் தேசத்தை ஊனமாக்கியதில் முக்கிய பங்கு இந்த கண்ணிவெடிகளுக்கு உண்டு…

இதற்கு அவர்கள் மட்டுமல்ல நாமும் பொறுப்பு எடுக்கவேண்டும்…

வவுனியாவிலிருந்து யாழ் செல்லும்வரை பல பெரிய மற்றும் சிறிய இராணுவ முகாம்கள்… சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் இருவராக நடந்தோ, சைக்கிளிலோ மிக சர்வசாதாரணமாக செல்கின்றனர்…

முன்பு புலிகள் தமது சீருடையில் இவ்வாறுதான் சென்றார்கள்….

ஆனால் இந்த இராணுவம் மக்களுடனோ அல்லது மக்கள் இவர்களுடனோ உரையாடுவதை வழிகளில் எங்கேயும் காணமுடியவில்லை…. ஆனாலும் இராணுவம் எந்தவிதமான பயமுமின்றி நடமாடுவதை பார்ப்பதற்கு சகிக்கவும் முடியவில்லை… நம்பவும் முடியவில்லை….

சிறு வயதில்… யாழ் நோக்கி … யாழ் தேவி புகையிரத்தில் வந்த அனுபவம் இப்பொழுதும் பசுமையாக மனிதில் பதிந்திருக்கின்றது…

வவுனியாவை புகையிரதம் நெருங்கும் பொழுது சிங்கள மண்ணின் வாசனை மறைய… புதிய அல்லது வேறு மண்ணின் வாசனை வீசு ஆரம்பிக்கும்…. அது நம் மூக்கை ஊடறுத்துச் சென்று உடலில் ஒரு உல்லாசத்தை… புத்துணர்ச்சியை… பரவசத்தை ஏற்படுத்தும்….

நம் உடலை வருடிச் சென்று மனதை அமைதியாக்கும் மென்மையான இளம் தென்றல் அது….

அது ஒரு இன்ப உணர்வு… இப்பொழுதும் நமக்குள் வாழ்கின்றது….

இதுதான் தேச உணர்வோ….?

ஆனால் இன்று வானத்தில் ஒலித்த அந்த சிங்களப் பாடலின் ஒலியும்… வாகனம் குளிருட்டப்பட்டமையால் வெளி மண் வாசனை உள்வராது அடைக்கப்பட்டிருந்தமையும் அந்த உணர்வை உணர முடியாது தடைசெய்தன….

ஆனால் அந்த நிலங்களில் தம் வாழ்வைப் பாதுகாக்க ஓடிய மனிதர்கள் வழி நெடுகிலும் தோன்றினார்கள்… என் மனக் கண்ணில்….

சிலநேரம் பேருந்தின் ஜன்னல்கள் திறந்திருந்தால் “மரணத்தின் வாசனை”யும் அதன் அவலக்குரல்களும் உள் வந்திருக்குமோ…..

மீராபாரதி

01.08.2012

நன்றி ஏதுவரை -இதழ் 4 – ஆகஸ்ட் 2012

http://eathuvarai.net/?page_id=1239

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: