Posted by: மீராபாரதி | July 11, 2012

சிந்தனை வட்டங்கள்: சிறைக் கம்பிகளாக…….

சிந்தனை வட்டங்கள்: சிறைக் கம்பிகளாக…….

சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியங்களை ஆதிக்கம் செய்கின்ற கருத்தாதிக்க சிந்தனை வட்டங்கள் என்ன?

சிங்கள தேசியவாதத்திற்குள் இருக்கின்ற கருத்தாதிக்கங்கள் என்ன? இது ஏன், பேரினவாதப் போக்கை எடுத்தது? எப்பொழுது எடுத்தது? இதேபோல் தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள் என்ன? இவை எப்பொழுது தம்மை தனியொரு தேசமாக உணர ஆரம்பித்தன? அதேவேளை இவை ஒவ்வொன்றுக்குள்ளும் எவ்வாறு இன, மத அடிப்படைவாதக் கூறுகள் உள்வாங்கப்பட்டன? அல்லது எவ்வாறான கருத்துக்களின் அடிப்படையில் இத் தேசியங்கள் கட்டமைக்கப்பட்டன? இக் கேள்விகளுக்கான விடைகள் விரிவான ஆழமான ஆய்வுகள் மூலம் தேடப்படவேண்டியவை. இது தொடர்பான சில குறிப்புகளை இங்கு பதிவிடுகின்றேன்.

ஒரு கட்டுரை சமூக அக்கறையுடன் தமிழில் எழுதப்படும் பொழுது, அதை எழுதுகின்ற ஒவ்வொருவருக்கும் பல நோக்கங்கள் இருக்கின்றன. இந்த நோக்கங்கள், தமிழினதும் மற்றும் தழிழ் இனத்தினதும் பெருமைகளை எந்த விமர்சன ஆய்வுமின்றி எழுதுவது. அல்லது தமிழ் பேசும் சமூகங்களுக்குள் இருக்கின்ற பிற்போக்குத்தனங்களை சுட்டிக்காட்டி விமர்சிப்பது. இதைவிட நம்மை அடக்குகின்ற சுரண்டுகின்ற அழிக்கின்ற அரசுகள், அரசாங்கங்கள் மற்றும் பிற இனங்கள் போன்றவற்றின் மேலாதிக்க கருத்தாதிக்கங்களையும் செயற்பாடுகளையும் தெளிவாக்குவதன் மூலம் அது பற்றிய விழிப்பை அடக்கி ஒடுக்கப்படுகின்ற பொது மனிதர்களிடம் உருவாக்குவது. அல்லது விளக்குவதன் மூலம் அடக்குமுறையாளர்களுக்கு அல்லது குறிப்பிட்ட இன மதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வை உருவாக்குவது. இவ்வாறன எதிர் எதிர் நிலைகளிலிருந்து விடயங்களை அணுகுவதையோ பார்ப்பதையோ விட, எல்லாவற்றையும் புறநிலையிலிருந்து கவனித்தும் நம் அகநிலையை கருத்தில் கொண்டும் எழுதுவது. இவ்வாறு பல தளங்களிலான செயற்பாடுகளில் நாம் எதைச் செய்யப்போகின்றோம் என்பது நமது புரிதல்கள், நிலைப்பாடுகள் மற்றும் தேவைகள், நோக்கங்கள் என்பவற்றின் அடிப்படையிலையே தீர்மானிக்கப்படுகின்றன. தமிழ் மொழியில் எழுதுகின்றவர் என்றடிப்படையில் “எனது பொறுப்பு என்ன?” என்பது நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்கவேண்டிய கேள்வி.

நண்பர் சுவிஸ் ரவி தனது முகப்பு புத்தகத்தில் பின்வரும் வகையில்  ஒரு கருத்தை எழுதியிருந்தார். நாம் எந்த இன, மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றோமோ அந்தப் பக்கத்தை நியாயப்படுத்தியே நமது கருத்துகளை முன்வைக்கின்றோம். அதேவேளை இன்னுமொரு சாராரோ தாம் இனவாதி இல்லை எனக் காண்பிப்பதற்காகவோ அல்லது முற்போக்குவாதி என நிறுபிப்பதற்காகவோ தாம் சார்ந்த இனத்திற்கு எதிரான நிலையில் நின்று கருத்தை முன்வைக்கின்றனர். இவற்றால் எந்தப்பயனும் இல்லை என்பது மட்டுமல்ல இவை மேலும் பல முரண்பாடுகளை வளர்க்கவே உதவும் என்ற கருத்துபடக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் தமது இன, மத, மொழி அடையாளங்கள் போன்ற எல்லாவற்றுக்கும் வெளியில் நின்று பார்ப்பதனுடாக தமது கருத்துக்களை முன்வைப்பதே ஆரோக்கியமானதாகும். ஏனெனில் இதுவே அவர்களை உண்மைக்கு அருகாமையில் கொண்டு செல்வதற்கும் சரியான திசையில் வழிகாட்டவும் கூடியதாக இருக்கும்.

தமிழில் எழுதப்படுகின்ற பெரும்பாலான கட்டுரைகள் சிங்கள மக்களுக்கு எதை நாம் கூற விரும்புகின்றோமோ அதையே தமிழில் எழுதி தமிழ் மக்களுக்கு கூறுகின்றோம். தமிழ் மக்களுக்கு எதைச் சுட்டிக் காட்டி  எழுத வேண்டுமோ அதை எழுதாமல் தவிர்த்து விடுகின்றோம். இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்கள் இன்று தோற்றுப் போன ஒரு இனம். ஆம்! தமிழ் இனத்தின் தன்முனைப்புக்கும் அதன் தற்பெருமைகளுக்கும் மாபெரும் அடி விழுந்துள்ளது. இதனால் நாம் நொந்துபோயிருக்கின்றோம் என்பது உண்மை. இதன் விளைவாக உருவான வெப்பியானத்தை மறுக்கும் விதமாக நமது எழுத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் உணர்ச்சிகரமாக எதிர்வினையாற்றுகின்றன. இதற்கு மாறாக சற்று நின்று, நிதானித்து கடந்த காலத்தையும் நம் மீது ஆதிக்கம் செலுத்தும் கருத்தாதிக்கங்களையும் அலசுவதுதான் பொருத்தமான சரியான செயற்பாடாகும். ஆகவேதான் எனது எழுத்துக்கள் நம்மை, தமிழ் பேசும் மனிதர்களை, நோக்கிய விமர்சனங்களாக எப்பொழுதும் இருக்கின்றன. தமிழில் நான் எழுதுபவை தமிழ் வாசகர்களுக்கானபோதும் அது அவர்களது உணர்ச்சிகளை சுரண்டி பிழைப்புவாத அரசியல் நடாத்துவதற்கானதல்ல. மாறாக எவ்வாறு நமது உணர்ச்சிகளை ஆரோக்கியமான வழிகளில் பயன்படுத்தலாம் என்பதற்கான முயற்சியே எனது எழுத்துக்களின் நோக்கம்.

தமிழ் நண்பர்களுடன் கதைப்பதையோ தமிழில் எழுதுவதையோ சிங்கள நண்பர்களுடன் கதைக்கும் பொழுது கூறப்போவதில்லை.  அவர்களுடன் கலந்துரையாடும் பொழுது அது அவர்கள் மீதான விமர்சனமாகவே அது இருக்கும். இவ்வாறுதான் கொழும்பில் இருந்த காலங்களில் சிங்கள நண்பர்களுடனான கலந்துரையாடலில் செயற்பட்டிருக்கின்றேன். ஆகவேதான், அவர்களுக்கு நான் ஒரு புலி. தமிழ் இனவாதி. இதனால் தமிழ் நண்பர்களுக்கு எழுதும்போது, நான் ஒரு புலியாகவோ தமிழ் தேசியவாதியாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற பிற்போக்குத்தனங்களை விமர்சித்தும் தவறுகளை சுட்டிக்காட்டுபவராகவுமே இருக்க விரும்புகின்றேன். இதுவே ஆரோக்கியமான பயணத்திற்கு தேவையானது. இதனால் நான் துரோகி பட்டம் பெற்றாலும் கவலையில்லை. ஆனால் பலர் தாம் இருக்கின்ற இடத்தில் எது ஆதிக்கமாக இருக்கின்றதோ அதனுடன் இசைந்துபோவர் அல்லது உடன்பாடு இல்லை எனின் மௌனமாக இருப்பர். இவ்வாறான இரட்டைநிலைத் தன்மை அல்லது பிழைப்புவாதம் அல்லது தப்பிப்பிழைத்தல் போன்ற நிலைப்பாடுகளை எடுப்பதற்கு அவரவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கும். ஆனால் இவ்வாறன நிலைப்பாடுகள்தான் நமது விடுதலைப் போராட்டத்தை இன்றைய நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்வது சிறந்தது. (இந்த (சுய)விமர்சனம் என்னையும் உட்படுத்தியதே).

சிங்கள பௌத்தப் பேரினவாத கருத்தியிலினதும் அதன் வழியிலான அடக்குமுறைச் செயற்பாடுகளினதும் விளைவாகவே தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் தோற்றம் பெற்றது. இதில் நமக்குக் சந்தேகமோ கருத்து முரண்பாடுகளோ இல்லை. அதாவது சிங்கள தேசத்தின் ஜனநாயகமின்மையும் ஏதேச்சதிகாரமும்தான் தமிழ் தேசம் ஒன்றின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணமாகின்றன. அதேவேளை சிங்கள தேசியவாதமானது சிங்களப் பௌத்த பேரினவாதமாக ஏன் வளர்ச்சியுற்றது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டியும் உள்ளது.

காலனியாதிக்கத்திலிருந்து நேரடியாக விடுபட்டு நவகலானியாதிக்கத்திற்கு உட்படுவதற்கு (1948) முன்னர் சிங்கள தேசியவாத கருத்தாக்கமானது கிரிஸ்தவர்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் எதிரான கருத்தியலையே வெளிப்படையாகக் கொண்டிருந்தது.  அதேவேளை தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிரான கருத்தியல் இவர்களது ஆழ்மனங்களில் தூயில் கொண்டிருந்திந்தது. ஆனால் 1948ம் ஆண்டின் பின்னர் இவ்வாறு தூயில் கொண்டிருந்த அவர்களது ஆழ்மன சிந்தனைகள், எண்ணங்கள் விழிப்புறத் தொடங்கின. இதனை சிங்கள தேசியவாதிகள் ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொண்டதிலிருந்து பல்வேறு வடிவங்களில் மேற்கொண்ட செயற்பாடுகளினுடாக வெளிப்பட்டமையை கவனிப்பதனுடாக உறுதிசெய்யலாம். இவ்வாறு இவர்களின் ஆழ்மனங்களில் தூயில் கொண்டிருந்த தமிழர் மற்றும் இந்திய விரோதக் கருத்தானது வெறுமனே மாகாவம்சம் என்ற நூலினால் மட்டும் கட்டமைக்கப்பட்டதா என்பது கேள்விக்குரியது. மாறாக மகாவம்சம் நூல் எழுதப்பட்டதற்கு முன்பிருந்த மக்களின் குறிப்பாக சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் இருந்த எண்ணங்களின் வெளிப்படாக அல்லது சாட்சியாக இந்த நூல் இருக்கின்றதா? என்பதும் சிந்தனைக்குரியது. அதாவது இந்த நூல் வெளிவருவதற்கு முந்திய வரலாற்று சம்பவங்களும் சிங்கள மக்களிடம் தொடர்ந்தும் இருக்கின்ற இந்திய மற்றும் தமிழ் எதிர்ப்புணர்வுகளும் இந்த இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். இது தொடர்பான விரிவான ஆய்வுகளும் புரிதல்களுமே நாம் மேலும் முன்னேறிச் செல்வதற்கான வழிகளை திறக்கும்.

வரலாற்றின்படி பௌத்தமதம் இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒன்று என்பது நாமறிந்தது. இரண்டாவது இந்திய மற்றும் தமிழக அரசர்கள் இலங்கை மீது தொடர்ச்சியாக படைஎடுத்து ஆட்சி செய்திருக்கின்றனர். ஆகவே சிங்கள மக்கள் மனதில் பின்வரும் எண்ணங்கள் ஆழமாகப் பதிந்திருக்கலாம். இந்தியர்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்கள். ஆகவே தமிழர்கள் சிங்கள இனத்திற்கும் மொழிக்கும் பெளத்தத்திற்கும் எதிரானவர்கள். ஏனெனில் இந்தியாவில் வாழ்கின்றவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என பெரும்பாலான சிங்கள மக்கள் நம்புகின்றனர். அதேவேளை உலகத்தில் சிங்கள மொழி பேசப்படுகின்ற ஒரே ஒரு நாடு இலங்கை மட்டுமே. ஆகவே சர்வதேசளவில் பார்க்கும் பொழுது சிங்கள பௌத்தர்கள் உலகத்தில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்களில் ஒன்று என்றால் மிகையல்ல. இதனால் தம்மையும் தமது இனத்தையும் மொழியையும் மதத்தையும் பாதுகாக்கவேண்டிய தேவையை உணர்ந்திருப்பர். ஆகவே சிங்கள பௌத்தர்களுக்கு இந்தியா மற்றும் தமிழர்கள் தொடர்பான பயம் உள்ளார்ந்து தொடர்ச்சியாக இருந்திருக்கலாம். மேலும் ஆபிரிக்க மற்றும் அரபிய நாடுகளில் சிறுபான்மைத் தலைவர்கள் பெரும்பான்மையினங்களை அடக்கி ஆண்டு வந்தமையும் இவர்களது பயத்தை மேலும் இரட்டிப்பாக்கி இருக்கின்றன. இதைவிட இனங்களுக்கு இடையிலான பொருளாதராப் போட்டிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையே. ஒரு இனத்தின் இவ்வாறான பயங்கள் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. ஆனால் இக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் என்ன செய்தனர் என்பதும் அதனை நியாயப்படுத்துவதும் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்குமுரியது.

இந்த வரலாறுகள், ஆதராரங்கள், பயம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படைகளிலையே சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியல்கள் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. இக் கருத்தியல்கள் இலங்கைத் தமிழர்களுக்கும் மற்றும் சைவ, இஸ்லாமிய, கிரிஸ்தவ மதங்களுக்கும் இந்தியர்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானவையாகவே இருக்கின்றன. சிங்கள மக்களிடம் ஆதிக்கத்திலிருக்கின்ற இந்த பொதுக் கருத்தியலை பயன்படுத்தியே சிங்கள அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைபிடிக்கின்றனர். மேலும் இதனையே தமக்கு சாதகமாக தொடர்ந்தும் வளர்த்து வருவதுடன் பயன்படுத்தியும் வருகின்றார்கள். இவ்வாறு இவர்கள் சிங்கள மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் எவ்வாறெல்லாம் சுரண்டுகின்றார்கள் என்பது புறக்கணிக்கத்தக்க ஒன்றல்ல. மேலும் இவர்கள் உருவாக்கிய சிங்கள பேரினவாத அரச இயந்திரம் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு உறுதுணையாகவும் சாதகமாகவும் இருக்கின்றது. ஆகவே இந்த அரசும் மற்றும் சிங்கள மக்களின் மனங்களிலிருக்கின்ற இவ்வாறன தவறான நம்பிக்கைகளும் பயமும் மாற்றியமைக்கப்படாதவரை இலங்கையில் இன மத நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை. இந்த மாற்றத்தை சிங்கள மக்களிடம் ஏற்படுத்துவதற்கான பொறுப்பு சிங்கள முற்போக்காளர்களையே சேர்ந்ததாகும்.

மறுபுறம் தமிழ் பேசும் மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு என்று ஒரு நாடும் இல்லை. அரசும் இல்லை. தமிழ் நாடு என பெயரைக் கொண்ட ஒரு மாநிலம் மட்டுமே தமிழர்களுக்கென இந்தியாவில் இருக்கின்றது. இந்திய தேசியத்திலிருந்த தமிழுக்கும் தழிழர்களுக்கும் எதிரான செயற்பாடுகளும், இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத்தின் செயற்பாடுகளும், இரு (தமிழக மற்றும் தமிழீழ) மக்களையும் தேசிய விடுதலைப் போராட்டத்தை நோக்கித் தள்ளின என்றால் மிகையல்ல. பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் மந்தப் போக்கைப் பெற, தமிழீழ விடுதலைப் போராட்டம் விறுகொண்டு எழுந்தது. அதேவேளை தமிழ் பேசும் மக்களிடம் ஏற்கனவே இருந்த பல பிற்போக்கான மற்றும் தவறான கருத்துக்களின் மேலாதிக்கம் தமிழ் தேசியவாதத்தையும் பற்றிப்பிடித்துக்கொண்டது.  அதாவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது வர்க்க, சாதிய, ஆணாதிக்க, இனவாத கருத்தியல்களின் அடிப்படையிலேயே பிரக்ஞையின்மையாக கட்டமைக்கப்பட்டது என்றால் மிகையல்ல. இக் கருத்தியல் மேலாதிக்கத்தின் உருவாக்கத்திற்கும் கடந்த கால வரலாறுகளே அடிப்படையானதாக இருக்கின்றன.

குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடமிருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தியலுக்கு மத்திய கிழக்கிலிருந்து வந்த அக்கால இஸ்லாமிய அரசர்களின் ஆக்கிரமிப்புகளும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கட்டாய மத மாற்றங்களும் காரணமாகலாம்.   இதைவிட இவர்களுக்கு இடையிலான பொருளாதார போட்டிகளும் ஒருவருக்கு எதிரான கருத்துக்களை விதைப்பதற்கு காரணமாகலாம். இதேபோல் சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான கருத்தியலும் பல்வேறு காரணங்களால் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக முஸ்லிம்களை “தொப்பிபிரட்டி” எனவும் சிங்கள மக்களை “மோடையா” எனவும் தமிழ் மக்கள் தமது நாளாந்த வாழ்வில் சதாரணமாக விழிப்பதற்கான வரலாற்றுக் காரணங்கள் என்ன என்பது ஆய்வுக்குரிய வியடம். இவை அறியப்பட்டு களையப்பட வேண்டியவை. ஏனெனில் இக் காரணங்களினால்தான் தமிழ் மக்களின் ஆழ் மனங்களில் இவ்வாறான கருத்துக்கள் குடிகொண்டிருக்கின்றன. இவை தேவையானபோது பல்வேறு வடிவங்களில் வெளிக்கிளம்புகின்றன.

நாம் வர்க்க, சாதிய மற்றும் ஆணாதிக்க அடக்குமுறைகளுக்கு எதிரானவர்களாக இருந்தபோதும் பல சந்தர்ப்பங்களில் நம்மக்குள்ளிருக்கின்ற இக் கருத்தாதிக்கங்கள் நம்மையும் அறியாது வெளிப்படுகின்றன. இதைப் போலவே முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தியல் நம்மிலிருந்து வெளிப்படுகின்றன. நல்ல உதராணம் ரகுமான் ஜானுக்கு எதிராக பின்னுட்டங்களாக முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் தமிழ் தேசியவாதத்திற்குள் ஆழ்ந்திருக்கும் முஸ்லிம் விரோதப் போக்கையே காண்பிக்கின்றன. இதேபோல் தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புக்கு எதிரான கண்டன அறிக்கைக்கு ஆதரவாக எத்தனை தமிழர்கள் கையொப்பம் வைத்துள்ளார்கள் என்பதும் இதற்கு நல்ல சாட்சியாக இருக்கின்றது. மேலும் முகப்புபுத்தகத்தில் ஆதி ஆதித்தன் என்பவருடனான ரமணிதரன் மற்றும் வளர்மதி ஆகியோரின் விவாதங்களும் விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களும் கவனத்திற்குரியவை. தமிழினத்திற்குள் இருக்கின்ற இவ்வாறன இனவாதப் போக்குளை நாம் களையாதவரை, அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் இன விடுதலைப் போராட்டத்தின் நியாயமானது எப்பொழுதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதை நாம் மறந்து விடலாகது.

மறுபுறம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் உருவாக்கப்படுகின்ற சிந்தனைகளும், அரசியல் செயற்பாடுகளும் வன்முறைகளும் குறிப்பிடத்தக்களவில் நடைபெற்றுவருகின்றன. இவற்றுக்கு எதிரான குரல்கள் தமிழ் சமூகத்தில் மிகவும் மந்தமாகவும் பலவீனமாகவுமே எப்பொழுதும் ஒலித்தன. இதன் விளைவுகள்தான் முஸ்லிம் மக்கள் தம்மை தனியான ஒரினமாக அடையாளங் கண்டதுடன் தம்மை ஒரு தேசமாக உணரத்தலைப்பட்டனர். ஆகவே ரகுமான் ஜான் குறிப்பிடுவதுபோன்று இனி இலங்கையில் பல் தேசங்களுக்கு இடையிலான ஐனநாயக அடிப்படையிலான சமத்துவமான ஒருமைப்பாடே சாத்தியமானது. மாறாக ஒரே நாட்டிற்குள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கீழான ஒற்றையாட்சியின் கீழ் சமாதான சக வாழ்வு என்பது கனவு மட்டுமே. மேலும் இது பிற தேசிய இனங்களினதும் மொழிகளினதும் மதங்களினதும் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதை சிங்கள, தமிழ், முஸ்லிம் முற்போக்காளர்கள் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டிய காலமிது.

இதேவேளை முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களும் தமது வன்முறை செயற்பாடுகளை தமிழ் மக்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற பிரசேதங்களில் முன்னெடுத்துள்ளனர். உதாரணமாக ஊர்காவற்கடை மற்றும் ஜிகாத் என்பவற்றின் மூலமாக குறிப்பாக கிழக்குப் பகுதிகளில் மேற்கொண்டனர். ஆனால் இவ்வாறன ஒரு பழிவாங்களை சிங்கள மக்கள்களுக்கு எதிராக இவர்கள் மேற்கொள்வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆகவே முஸ்லிம் மக்களிடமும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்தியல் ஒன்று நீண்ட காலமாக ஆதிக்கத்திலிருக்கின்றதா என்பது கேள்விக்கும் ஆய்வுக்கும் உரிய வியடம். இவை தொடர்பாக முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களே தமது சமூகத்தை சுயவிமர்சனம் செய்வதனுடாக கண்டறிய வேண்டியவர்களாவர்கள். இதுவே தமது இனவாத மதவாத கருத்தியல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவதற்கான வழிவகைகளை உருவாக்கும். இது அவர்களுக்கு உரிய பொறுப்பாகும்.

பௌத்த, சைவ அல்லது இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இவர்கள் ஒருவரும் கிரிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துக்களையோ செயற்பாடுகளையையோ பிரதானமாக மேற்கொண்டவர்களாக இல்லை. இது ஏன்? நாம் இன்னும் காலனித்து அடிமைகளாக இருப்பதா இதற்கு காரணம்? இவ்வாறு கேட்பது கிரிஸ்தவர்களுக்கு எதிராக வாளெடுத்து சண்டை பிடிக்க கோருவதல்ல. மாறாக நமது சிந்தனைகளை கேள்விக்குட்படுத்தி அதனை அடிவேரை பிடிங்கி எறிவதையே கோருகின்றது.

இறுதியாக ஒவ்வொரு தனி மனிதர்களும், பால்களும், சாதிகளும், சமூகங்களும், மதங்களும், தேசங்களும், நாடுகளும் மேற்குறிப்பிட்டவாறான பல்வேறு சிந்தனை வட்டங்களால் பல்வேறு தளங்களில் கட்டுண்டு கிடக்கின்றனர். இந்த சிந்தனை வட்டங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு எண்ணங்களாலான வளையங்களால் சிக்குண்டு நம்மைச்சுற்றி ஆழமாகவும் உறுதியான தடுப்பு சுவர்களாகவும் இருக்கின்றன. அதாவது தனிமனிதர்களினதும் சமூகங்களினதும் தேசங்களினதும் சிறைக் கம்பிகளாகவே இவ்வளையங்கள் இருக்கின்றன. அதாவது எண்ணங்களின் வளையங்கள் சிறைக் கம்பிகளாக இருக்க சிந்தனை வட்டங்கள் சிறைகளாக இருக்கின்றன. ஒரு எண்ணத்திலான வளையத்தை அல்லது சிந்தனை வட்டத்தைக் கடந்து அல்லது உடைத் தெறியும் பொழுது இன்னுமொரு வளையம் அல்லது வட்டம் தடுத்துக் கொண்டிருக்கும். இதனல்தான் மரபுவாத மதவாதிகள், தேசியவாதிகள், மார்க்சியவாதிகள் தமது சிந்தனை வட்டங்களைக் கடந்து சிந்திக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இதைத்தான் மேற்குறிப்பிட்ட சிங்கள பௌத்த பேரினவாத தேசியவாதத்திலும் தமிழ் (இனவாத) தேசியவாதத்திலும் முஸ்லிம் அடிப்படைவாதங்களிலும் காணுகின்றோம். மற்றும்படி தேசியவாதம் என்பது தன்னளவில் நடுநிலையானது. எவ்வாறன சிந்தனைகள் அதனை ஆதிக்கம் செய்கின்றதோ அதற்கமைய தனது போக்கைத் தீர்மானிக்கின்றது. இந்த சிக்கலான சிந்தனை வளையங்களையும் வட்டங்களையும் எப்பொழுது முழுமையாக கடக்கின்றோமோ அன்றுதான் நாம் சுதந்திரமாகவும் புதிதாகவும் சிந்திக்க ஆரம்பிப்போம். அவ்வாறு சிந்திப்பதற்கான பயணத்தை நாம் இன்று ஆரம்பிக்கவேண்டும்.

இது தொடர்பாக கருணாகரனின் பின்வரும் கட்டுரையும் கவனத்திற்கு உரியது.

வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் எப்படிப் பெருக்கமடைகின்றன?

http://naalupakkam.blogspot.ca/2012/06/blog-post_7855.html

மீராபாரதி

நன்றி –  ஏதுவரை – யூன் மாத இணைய இதழ்

 சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியங்களை ஆதிக்கம் செய்கின்ற கருத்தாதிக்க சிந்தனை வட்டங்கள் என்ன?

http://eathuvarai.net/?p=818

06.06.2012

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: