Posted by: மீராபாரதி | June 11, 2012

பிறக்காத (நம்) கருவிற்க்கு ஒரு கடிதம்….

பிறக்காத (நம்) கருவிற்க்கு ஒரு கடிதம்….

எனது முட்டை முதன் முதலாக உருவானபோது… அல்லது எனது முதல் விந்து வெளியேறியபோது… அல்லது நம் முதல் பாலுறவின் போது… நீ ஒரு கருவாக உருவாகியிருந்தால்…. இன்று ஒரு மனிதராக நீ வளர்ந்திருக்கலாம்… எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்… அப்படியானால் உனக்கு இப்பொழுது எத்தனை வயதிருக்கும் என எப்பொழுதும் நாம் நினைப்பதுண்டு… உனக்கு வாலிப வயது இருந்திருக்கலாம்…ஆனால்… அந்த விந்துக்களுக்கும் முட்டைகளுக்கும் ஒரு கருவை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை… அல்லது நாம் அந்த சந்தர்ப்பத்தை வழங்கவில்லை எனவும் கூறலாம்… அதானால் அவை கழிவுகளுடன் கழிவாக இறந்து… அழிந்து போயின…

நீ இன்னும் கருவாக உருவாகாமலே இருக்கின்றாய்…

ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை உருவாகின்றது… இதில் ஒன்று கருக்கட்டினால் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தையையாவது ஒரு பெண் உருவாக்கலாம்… ஒரு ஆணிலோ ஆயிரக்கணக்கான விந்துக்கள் நாள் தோரும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன… இந்த விந்துக்ககளை எல்லாம் கருக்களாக தம் வயிற்றில் சுமப்பதற்கு உலகத்திலிருக்கின்ற பெண்களின் சனத்தொகையோ போதாது… ஆகவே இந்த முட்டைகளும் விந்துக்களும் வீணாகப் போகக் கூடாது என செயற்கையாக கருக்கட்டி  உருவாக்கினால்… அதானல் பிறக்கின்ற அவ்வளவு குழந்தைகளையும்…. மனிதர்களையும் தாங்குமான இந்த பூமி என்பது சந்தேகமே… ஆம்… ஏற்கனவே உலக சனத் தொகை அளவுக்கதிகமாக அதிகரித்திருக்கின்றன என்கின்ற குரல்கள் ஒலிக்கின்றன…  அவை நம் காதுகளுக்கு கேட்பதில்லை… பல்லாயிரக்கனக்கான குழந்தைகள் வறுமையில் வாடுகின்றன… அநாதைகளாக மரணிக்கின்றன… இவை நம் கண்களுக்கு தெரிவிதில்லை… பெண் குழந்தைகள் கருவிலையே கொல்லப்படுகின்றன… இவை நம்மை உணர்வுகளை உறுத்துவதில்லை … இவ்வாறு நடப்பதற்கு எல்லாம் பல காரணங்கள் இருக்கின்றன… முக்கியமானவை… அதிகார வர்க்கங்களின் தவறுகள்… அக்கறையீனம்… இலாபம் ஈட்டும் கொள்கைகள்… மற்றும் சமூகங்களின் காலங் கடந்த கலாசாரங்களும் நம்பிக்கைகளும் கட்டுப்பாடுகளும்…

ஒரு நாள் நமது அறியாமையினால்….அவசரத்தினால்…. நீ கருவுற்றாய்…

ஆனால் நாம் உன்னை இந்த உலகிற்கு வர அனுமதிக்கவில்லை…  உனது கருவை கலைத்து நீ இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையை நாம் மறுத்தோம்… இவ்வாறு செய்தமை உன் மீது விருப்பமில்லை என்பதனால் அல்ல… நாம் வாழ்வதற்கே உரிமை இல்லாத இந்த உலகில்… இன்னுமொரு உயிர் நம்மால் உருவாகி அடிமையாக வாழ்வதை நாம் விரும்பவில்லை… உன்னை ஒரு சதாரணமான ஆரோக்கியமான மனிதராக கூட வளர்த்தெடுக்க நம்மால் முடியாது என புரிந்ததினாலும்… நமது வாழ்வையும் உறவையும் பாதிக்கும் என்பதனாலும்… மற்றும் நமது இயலாமை… பொறுப்பெடுக்க முடியாமை… மனோபலம் இல்லாமை… நம்பிக்கை இல்லாமை… பொருளாதர ஆதரவும் அடித்தளமும் இல்லாமை… நமது சுய வளர்ச்சியில் அக்கறையாக இருக்கின்றமை… இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன… உன்னை இந்த உலகிற்கு வர நாம் அனுமதிக்காமைக்கு….

இவை மட்டுமல்ல… நமது பாலியல் மீதான விருப்பத்தின் இணைவினால் மட்டும் விபத்தாக உருவான ஒரு கருவாக நீ இருப்பதை… நாம் விரும்பவில்லை… நமது ஆரோக்கியமான உடலுறவினுடாகவே உனது கருவை உருவாக்க விரும்புகின்றோம்… ஆனால் அதை எவ்வாறு செய்வது என்பதை அறியாதிருக்கின்றோம்… ஒரு சுதந்திரமான மனிதராக உன்னை எப்படி வளர்ப்ப்பது என்பதற்கான அறிவும் நம்மிடமில்லை… நாமே இன்னும் ஆரோக்கியமான மனிதர்களாக இல்லாதபோது… உன்னை மட்டும் எப்படி நாம் ஆரோக்கியமாக வளர்ப்பது…  நாம் வாழ்கின்ற இந்த உலகில்… நமக்கான சுந்திரம் இல்லை… உரிமைகள் இல்லை… நமக்கான தொழில் இல்லை… இருக்கின்ற தொழிலும் நிரந்தரமில்லை… இதை எல்லாம் சிந்திக்காது நம்மை பெற்ற நமது பெற்றோர் விட்ட தவறை நாம் மீண்டும் விடுவதற்கு தயார் இல்லை… நாம் குழந்தைகளாக எதிர்நோக்கிய கஸ்டங்களை… பிரச்சனைகளை… வலிகளை… நீயும் எதிர்கொள்வதற்கு நாம் விரும்பவில்லை… ஆகவேதான் கருவிலையே தடுத்து விட்டோம்… உன்னை இந்த உலகத்திற்கு வர நாம் அனுமதிக்கவில்லை….

ஒரு நாள் நமது அறியாமையினால்….அவசரத்தினால்… நீ உருவானாய்… என் அனுமதியில்லாமல்… விருப்பு இல்லாமல் என் வயிற்றில் நீ உருவாக ஆரம்பித்தாய்…..

ஆனால் நாம் உன்னை கலைத்துவிட்டோம்… நாம் கொலைகாரர்கள் என்றது நம் மனம்…. மனதுக்குள் பல குரல்கள், பலமாகவும் உறுதியாகவும் உரத்து ஒலித்தன… அக் குரல்கள் எல்லாம் நம்மை கொலைகாரர்கள் என்றது… நம் ஆழ்மனதில் இருந்து வந்த இந்தக் குரல்கள் நம் சமூகத்தின் குரல்கள்;… நமது மூதாதையர்களின் குரல்கள்… அந்தப் பழங் குரல்களைக் கேட்டு… கேட்டு… நாம் குனிக் குறிகிப் போனோம்… குற்ற உணர்வினால்…

ஆனால் எங்களது குரல்களும்  எங்கிருந்தோ அசரீதியாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது… நாம் குற்றமற்றவர்கள் என… நமது வாழ்வை நாம் தீர்மானிப்பதற்கான உரிமை நமக்கு இருப்பதாக… ஆனால் அது பலவீனமாகவே ஒலிக்கின்றது… ஆனாலும் நாம் உறுதியாக நிற்கின்றோம் நமது முடிவில்… நம் வாழ்வை வாழ்வதற்காகவும்… உன் போன்ற பிறக்காத அல்லது பிறக்கப்போகின்றன குழந்தைகளின் எதிர்காலம் ஓளிமயமாக இருப்பதற்காகவும்… உனது கருவை நாம் கலைத்துவிட்டோம் அன்று…

அன்று நாம் கருக்கலைப்பு செய்திருக்காவிட்டால்… இன்று நீ வாலிப வயதில் இருந்திருப்பாய்… ஆனாலும் நீ கொல்லப்பட்டிருப்பாய்… இனம், மதம், சாதி என்பவற்றின் பெயரால்… நாமே உன்னைப் அதற்குப் பலி கொடுத்திருப்போம்… இல்லையில்லை… இந்த சமூகமே இவற்றின் பெயரால் உன்னைப் பலியெடுத்திருப்பார்கள்… கொன்றிருப்பார்கள்… உன்னை உனது வாலிப வயதில் இவர்கள் கொன்றிருப்பார்கள் … ஆனால் அது கொலை இல்லை என்கின்றார்கள்… அதற்குப் பெயர் நாட்டிற்கான… தேசத்திற்கான… மதத்திற்கான… சுதந்திரத்திற்கான தியாகமாம்… விடுதலைக்கான விதையாம்…

நீ ஒரு மனிதராக பல ஆற்றல்களுடன் வளர்ந்த பின் இவர்கள் உன்னை அழிப்பதைவிட…  நாம் உன்னைக் கருவிலையே கலைத்தது தவறில்லை… உனது நன்மைக்காகவும்… நமது நலத்திற்காகவும்… ஆனால் இவர்கள் நம்மைக் கொலைக்காரர்கள் என்கின்றார்கள்… உன்னைக் கருவிலையே நாம் கலைத்ததனால்…

நாம் கருக்கலைப்பு செய்யாவிட்டால்… நமது துறைகளில் கற்று நாம் முன்னேற முடியாது… அதுவும் ஒரு பெண்ணாக நான் இருந்துவிட்டால்… தாய் என்கின்ற புதிய பதிவியைத் தந்து… தாய்மை என்ற பண்புக்கு உதாரணம் என பட்டம் கொடுத்து… என் வாழ்க்கையை ஒரு வீட்டின் படுக்கையறைக்குள்ளும் சமையலறைக்குள்ளும் முடக்கியிருப்பார்கள்… அல்லது வேலைக்கு செல்கின்ற பெண்ணாக இருந்தாலும் வீட்டு வேலைகளை பங்குபோடக் கூட யாரும் வரமாட்டார்கள்… எல்லாவற்றையும் நான் மட்டுமே செய்யவேண்டும்… ஆம் இரட்டிப்பு வேலை நமக்கு… நாம் நாமாக வாழ முடியாத இந்த சமூகத்தில்… நமது பல்துறை ஆற்றல்களை வளர்க்க முடியாதபோது… அதை எல்லாம் அனுமதிக்காத இந்த சமூகத்தில் உன்னை மட்டும், நீ நீயாக இருக்கும்படியும் உனது பல்துறையாற்றல்களையும் வெளிக்கொண்டு வரும்படியும் உன்னை நாம் எப்படி வளர்ப்பது… அதனால்தான் உனது கருவை நாம் கலைத்துவிட்டோம்…

நாம் உனது கருவை கலைத்ததினால்… இன்று நமக்கு குழந்தை இல்லை… இதனால் நமக்கு வாரிசும் இல்லை… ஆனால் நாம் கவலைப்படவில்லை… ஆனந்தமாகவே நாம் வாழ்கின்றோம்… ஆனால் இந்த உலகத்தில் பலர் குழந்தை பெறுகின்றார்கள்… குழந்தை மீதான விருப்பத்தினால் அல்ல….

தமது பாலியல் உறவின் மீதான விருப்பத்தினால்… தமது அறியாமையினால்… தற்செயலாக…பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவள் வயிற்றில்…. விபத்தாகவே கருக்கட்டுகின்றன… நாம் கூட இந்த உலகில் பிறந்ததும் அவ்வாறான ஒரு விபத்தே… ஆனால் கடவுள் கொடுத்த பரிசு என பொய் சொல்லி கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிடுகின்றார்கள்… இதற்காக இவர்களுக்கு கிடைத்த பரிசு, தாம் மலடும் இல்லை…  மலடனும் இல்லை என சமூகத்திற்கு நிறுபிகின்றனர்… இச் சான்றிதழ் மூலம் பெற்றோர் என்கின்ற பதிவி உயர்வு கிடைக்கின்றது… இதன்மூலம் திருப்தியடைகின்றார்கள் இவர்கள் தம் வாழ்வில்… நமக்கு குழந்தை இல்லை என்பது நாம் பிரக்ஞைபூர்வமாக, சுயமாக சிந்தித்து எடுத்த முடிவாக கூட இருக்கலாம்… அல்லது நமது உடலில் அதற்கான ஆற்றல் கூட இல்லாது இருக்கலாம்… ஆனால் நம்மால் குழந்தை பெறமுடியாது எனக் குத்திக் காட்டி, குறை கூறி, நம்மைத் தாழ்த்தி தங்களை உயர்த்துவதில் இந்த சமூகத்திற்கு ஒப்பற்ற மகிழ்ச்சியே… அவர்களின் இந்த மகிழ்ச்சியை நாம் இரசிக்கவில்லை… குழந்தை பெற்றவர்களிடம் தான் தாய்மை இருக்கும் என்கின்றார்கள் இவர்கள்… தாய்மை என்பது பெண்ணின் பெருமை என பொய்யான புகழ் பாடுகின்றார்கள்… இவர்களுக்கு தாய்மை என்பது ஒரு உணர்வு எனத் தெரியாது….குழந்தை பெற முடியாத பெண்களிடம் மட்டுமல்ல… ஆண்களிடம் கூட தாய்மை உணர்வு சிலவேளைகளில் குழந்தை பெற்ற பெண்களையும் விட அதிகமாக இருப்பதை அறியாதவர்கள் இவர்கள்… ஆனாலும் (சமூகக்) கடமைக்காவும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் ஒரு கருவை நாம் உருவாக்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை… ஆகவேதான் உனது கருவைக் கலைத்துவிட்டோம்…

நீ இந்த உலகத்திற்கு வருவதை நாம் விரும்புகின்றோம்… ஆனால் நீ வரும்பொழுது… நீ நீயாக வாழ்வதற்கான ஒரு சூழல் வேண்டும் என விரும்புகின்றோம்… உனக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கவேண்டும் என விரும்புகின்றோம்… உனது உரிமைகள் மதிக்கப் படவேண்டும் என விரும்புகின்றோம்… நீ வறுமையால் வாடக் கூடாது என்கின்றோம்… உனது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம்… இவற்றுக்கு எந்த தடைகளும் இருக்கக் கூடாது என்கின்றோம்… நீ ஒரு விபத்தில் கருக்கட்டுவதை நாம் விரும்பில்லை என்கின்றோம்…

நமது கனவுகள் நிறைவு பெறும் ஒரு நாளில்… நாம் விரும்புகின்ற ஒரு சூழலில்… மீண்டும் கூடிக் குழாவுமோம்… பிரக்ஞையுடன்…..விழிப்புடன்….. நம் உடல் இன்பத்திற்காகவும்… நம் மனப்பூர்வமான விருப்பத்துடன்  உன் வரவிற்காகவும்… ஆனால் அவ்வாறன ஒரு சுழலை உருவாக்கி உன்னை வரவழைக்க… நாம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கின்றது… அதுவரை உன் வரவை உன் மீதான அன்பினால் அன்புடன் நிறுத்திவைக்கின்றோம்… தவறுகின்ற பொழுது… முடியாதபோது கலைத்து விடுகின்றோம்… நாம் அழைக்கும் வரை காத்திரு… இந்த உலகிற்கான வருகைக்காக… இதில் நம் சுய நலம் மட்டுமல்ல… உனது நலனும் இணைந்தே இருக்கின்றது என்பதை இப்பொழுது உன்னால் புரிய முடியாவிட்டாலும் இந்த உலகத்திற்கு வந்த பின்பு புரிவாய்… அல்லது அதைப் புரியாமலே… புரிவதற்கான தேவையில்லாமலே ஆனாந்தமாக வாழலாம் நீ… ஏனனில் நாம் அதற்காக ஏற்கனவே உழைத்திருப்போம்… சில வேளை நமது உயிரை கூட இழந்து….

மீராபாரதி

மே 26. 2012

நன்றி – கூர் 2012 – கனடா

Advertisements

Responses

  1. […] தொடர்பாக மீராபாரதியின் பதிவொன்றை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம். ஆனால் […]

  2. […] தொடர்பாக மீராபாரதியின் பதிவொன்றை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம். ஆனால் […]

  3. […] அடுத்த தவறையும் விடவில்லை. ஆம். குழந்தைகள் பெறவில்லை. (அல்லது […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: