Posted by: மீராபாரதி | May 9, 2012

அடக்கப்படுபவர்களின் உணர்வுகள்: அடக்கும் சமூகத்தவர்களால் உணர்ந்து/புரிந்து கொள்ள முடியுமா?

அடக்கப்படுபவர்களின் உணர்வுகள்:

அடக்கும் சமூகத்தவர்களால் உணர்ந்து/புரிந்து கொள்ள முடியுமா?

இலங்கையில் தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே மாதம் 6ம் திகதி தேடகம், மே 18 இயக்கம் , புதிய திசைகள் மற்றும் அசை ஆகியோரால் ரொரன்டோவில் கண்டனக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இக்  கண்டனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டதன் திருத்திய பதிவு இது. கூட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக பல்வேறு திருத்தங்களையும் மாற்றங்களையும்  ஏற்படுத்தி மீளுருவாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது.

இக் கண்டனக் கூட்டத்தை ஒழுங்கு செய்த அனைத்து அமைப்புகளுக்கும் மற்றும் இக் கூட்டத்தில் எனது கருத்துகளை முன்வைக்க சந்தர்ப்பத்தை தந்ததமைக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

சிறுபான்மைகளாக இருக்கின்ற அதிகாரமற்ற அனைத்து தேசிய இனங்கள் மீதான அடக்குமுறைகளையும் அவர்களது உரிமைகள் மீறப்படுவதையும் கண்டிப்பது மட்டுமல்ல அதற்காக போராடுவதும் நமது பொறுப்பு. ஏனெனில் அதன் வலியை அடக்கப்படுகின்ற சமூகங்களைச் சேர்ந்த நாம் மட்டுமே நன்றாக உணர்வோம் அறிவோம். ஆகவேதான் இவ்வாறன கண்டனக் கூட்டங்கள் அவசியமானவையாக இருக்கின்றன. ஆனால் இச் செயற்பாடுகள் மட்டும் போதுமானவையல்ல. ஆகவே இது தொடர்பான சில கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைக்கின்றேன்.

அண்மையில் இலங்கையில் நடைபெறுகின்ற பள்ளிவாசல்களை இடித்தல், கோயில்களை இடம் பெயர்த்தல், புத்தர் சிலைகளை நிறுவுதல் போன்ற நிகழ்வுகள் நமது நித்திரையை கலைத்து நாம் மீண்டும் துடிப்புடன் செயற்படுவதற்கு உந்துசக்தியாக இருக்கின்றன. மேலும் சிங்கள பௌத்த இனவாதிகளின் அதிகாரத்தையும் அவர்கள் பிற இன மதங்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளையும் அதனால் உருவாகும் பிரச்சனைகளின் பன்முகப்பரிமாணங்களையும் நாம் புரிந்துகொள்ளவதற்கும் சர்வதேச சமூகம் அறிந்து கொள்வதற்கும் இன்னுமொரு சந்தர்ப்பத்தையும் இந்த நிழ்வு ஏற்படுத்தியிருப்பதால் வரவேற்கத்தக்கதே. அதேவேளை இவ்வாறான சம்வங்கள் மட்டும் நமது நித்திரையைக் கலைக்கக் கூடாது…ஆனால் துரதிர்ஸ்டமாக அவ்வாறுதான் நடைபெறுகின்றது. நமது வரலாற்றை திருப்பிப் பார்க்கும் பொழுது ஒவ்வொறுமுறையும் நாம் நமது விடுதலைக்காக போராடுவதற்கு, அரசாங்கத்தினதும் அதன் ஏவலாளர்களினதும் செயற்பாடுகளில் தான் காலம் காலமாக தங்கியிருந்திருக்கின்றோம் என்பதை கவனிக்கலாம். இது கவலைக்கிடமானது. இதனால்தான் நமது அரசியலும் அதனடிப்படையிலான செயற்பாடுகளும் எதிர்ப்புகளாகவும் எதிர்வினைகளாகவுமே எப்பொழுதும் ஆரம்பிக்கின்றன. இவ்வாறன எதிர்வினை செயற்பாடுகள் சிலநேரங்களில் அவசியமானது ஆனால் போதுமானவையல்ல. மாறாக  இவற்றுக்குச் சமாந்தரமாக,  நாம் முன்நோக்கி (pro-active) செயற்படவும் வேண்டியது அவசியமானதாகும். இவ்வாறான முன்நோக்கிய செயற்பாடின்மையால்தான் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரசு நடாத்தி மாபெரும் தமிழினப் படுகொலையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது என்றால் மிகையல்ல..

சிங்கள பௌத்த இனவாதிகள் பிற தேசிய இனங்கள் மீதும் அவர்களது மத நிலையங்கள், கல்வி கூடங்கள் மீது இவ்வாறான அழிப்பு செயற்பாடுகளையும் புத்தர் சிலைகளுடன்  திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் மேற்கொள்வது ஆச்சரியமானதல்ல. அவர்கள் அவ்வாறு தான் செய்வார்கள். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அதைத்தான் செய்து வருகின்றார்கள். ஏனெனில் சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்டம் இலங்கையை சிங்கள பௌத்த நாடாக பல ஆண்டுகளுக்கு முன்பே பிரகடனப்படுத்தி இருக்கின்றது என்பது நாம் அறியதாததல்ல. அதாவது சிறிலங்கா அரசு என்பது சிங்கள பௌத்த இனவாத அரசாகவே இருக்கின்றது. ஆனால் நாம் குறிப்பாக அடக்கப்படுகின்ற இனங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் இதைக் கவனத்தில் கொள்வதில்லை. ஆகவேதான் இந்த அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று ஆட்சிக்கு வருகின்ற சிங்கள பௌத்த பேரினவாத கருத்துக்களால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற ஒவ்வொரு அரசாங்கங்களுடனும் அதில் ஆட்சியமைக்கின்ற சிங்களக் கட்சிகளுடனும் தமிழ் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இன்றுவரை கூட்டுச் சேர்ந்த செயற்படுகின்றனர். இது இவர்களது அரசியலில் மிகவும் முரண்பாடான செயற்பாடாகும். தம்முள்ள பள்ளிவாசல்  இடிப்பதற்கு முன்பு சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்டத்திலும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் மனங்களிலும் இவ்வாறான எண்ணங்கள் தான் இருந்தன என்பது இவர்களுக்கு தெரியாதா? அதைப் புரிய முடியவில்லையா? அல்லது புரியாத மாதிரி தமது பிழைப்புவாத அரசியலை  நடாத்துகின்றார்களா? இந்த சம்வங்கள் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் மனங்களில் இருப்பவற்றின் வெளிப்பாடு என்பதை எப்பொழுது இந்த்த் தலைவர்கள் புரிந்து கொண்டு தமது உறுதியான அரசியல் நிலைப்பாடுகளையும் சரியான திசைகளில் செயற்பாடுகளையும் முன்னெடுக்கப் போகின்றார்கள்?

இவ்வாறன பிற இன மதங்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமாயின் அதற்கான தீர்வாகவும் இலங்கையில் வாழ்கின்ற சகல இன மத மக்களுக்கும் ஏற்றதாக சிறிலங்காவின் அரசியல் அமைப்பு சட்டமானது மாற்றப்பட வேண்டும். இது தவிர்க்க முடியாமல் முதலாவது நிபந்தனையாகவும் இருக்கவேண்டியது அவசியமானதாகும். இவ்வாறு அரசியல் சட்ட மூலமானது அனைத்து இலங்கை வாழ் மனிதர்களுக்கும் ஏற்றதாக மாற்றப்படுவதை நோக்கியும் அதனை வலிறுத்துவதாகவுமே அடக்கப்படுகின்ற இனங்களினதும் மதங்களினதும் அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்த இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் வரலாற்றில் அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஸ்டமானது.

தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், இது தொடர்பாக தமது உறுதியான அரசியல் நிலைப்பாடுகளை தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், கூட்டணிகள், போராட்ட இயக்கங்கள், புலிகள், ஊடாக இன்றைய கூட்டமைப்பு வரை, முன்வைக்காமலையே செயற்பட்டுவந்திருக்கின்றனர். ஆகவேதான் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் விமர்சித்து கேள்விக்குளாக்க வேண்டிய தேவை உள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்து தமிழ் தேசிய கட்சிகள் அரசாங்கத்தில் ஆட்சியமைக்கின்ற ஜக்கிய தேசிய மற்றும் சுதந்திர கட்சிகளுடன் மாறி மாறி கூட்டமைத்தும் இணைந்தும் செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரமேதாச காலத்தில் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் காரணமாக முன்வைத்த கூட்டு, சந்திரிகாவை சமாதான தேவதையாக வர்ணித்து ஜனநாயகவாதிகள் முன்வைத்த கூட்டு, மற்றும் ரனிலுடனான பேச்சுவார்த்தைக்கான கூட்டு, மகிந்தவை யதார்த்தவாதி எனக் கூறி ஆதரித்த கூட்டு, மகிந்தவை விழுத்துவதற்காக பொன்சேக்காவை ஆதரித்த கூட்டு, இறுதியாக ரனிலுடன் மேதினத்தில் இணைந்த கூட்டு என்பன ஒன்றைத் தெளிவாக காட்டுகின்றது. அதாவது தமிழ் தேசிய அரசியல் என்பது தனது அரசியல் நிலைப்பாட்டில் என்றும் உறுதியானதாக இருக்கவில்லை. மாறாக குழப்பமான நிலைப்பாடுகளையே கொண்டிருந்திருக்கின்றது என்றால் மிகையல்ல.

இதேபோலதான் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் தமது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான எந்தவிதமான கேள்வியுமின்றி சிங்கள பௌத்த பேரினவாத அரசை ஆட்சி செய்கின்ற ஒவ்வொரு அரசாங்கங்களுடனும் அதன் கட்சிகளுடனும் எந்தக் கேள்வியுமின்றி கூட்டு வைத்து வந்திருக்கின்றனர். அடக்கப்படுகின்ற இன மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் இவ்வாறான உறுதியற்ற அரசியல் நிலைப்பாடுகள்  சிங்கள் பௌத்த பேரினவாத அரசபீடத்திலிருந்து  ஆட்சி செய்கின்ற அரசாங்கங்களுக்கும் கட்சிகளுக்கும் எப்பொழுதும் சாதகமாகவே இருந்து வந்திருக்கின்ற என்பதை இன்றுவரை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

இலங்கை அரசிற்கும் அந்த நாட்டை நிர்வகிக்கிற அரசாங்கங்களுக்கும் இடையிலான ஒற்றுமையையும் வேறுபாட்டையும் மற்றும் சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளின் நோக்கங்களையும் புரிந்துகொண்டு, நமது அரசியல் நிலைப்பாடுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் முடிவுகள் எடுத்து செயற்படாதவரை அடக்கப்பட்ட தேசிய இனங்களினதும் மக்களினதும் விடுதலை என்பது சாத்தியமானதல்ல.

இலங்கையில் சிங்கள இனத்தினதும் பௌத்த மதத்தினதும் மேலாதிக்கத்தை இல்லாமல் செய்வதற்கு, சகல இன மதங்களின் உரிமைகளை மதிக்கின்ற ஒன்றாக இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுகின்றமையானது அடிப்படையான, முன்நிபந்தனையான, அவசியமான ஒரு செயற்பாடாகும். ஆனால் இச் செயற்பாடு மட்டும் இன மத முரண்பாடுகளையும் அதனால் உருவாகின்ற பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு போதுமானவையல்ல. உதாரணமாக இந்திய அரசு மத சார்பற்ற அரசியல் அமைப்பு சட்டத்தையே கொண்டுள்ளது. ஆனால் இங்கு ஆட்சி அமைப்பவர்கள் பெரும்பாலும் ஹிந்தி மொழி பேசுகின்ற இந்து மத பேரினவாதிகளாகவே பெரும்பாலும் இருக்கின்றனர். இதனால் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள், தாக்குதல்கள், பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணமே உள்ளன. ஆகவே மாற்றங்கள் என்பது எவ்வாறு அரசியல் அமைப்பு சட்டங்களை மாற்றுவதனுடாக மேலிருந்து கீழ் வரவேண்டுமோ, அதேபோல் கீழிருந்தும் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியமானதாகும்.

இன, மத தலங்கள் மீதான தாக்குதல்களுக்கும் மற்றும் இன, மத விரோத செயற்பாடுகளுக்குமான காரணங்களை நாம் நமது குழந்தை வளர்ப்பு முறைகளிலும் சமூக மேலாதிக்க கருத்துக்களிலும் கலாசார பண்புகளிலும் காணவேண்டும். இன்று உலகமாயமாதலில் விளைவாக பல நாடுகளில் பல்லினங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒரு சமூகத்தில் வாழ்கின்ற நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பல்லாண்டு காலமாக இவ்வாறுதான் வாழ்கின்றோம். இவ்வாறான சமூகங்களில் வாழ்கின்ற நாம், நமது குழுந்தைகளை எவ்வாறு வளர்க்கின்றோம்? நமது மதம், இனம், சாதி சார்ந்து ஒற்றைப்பரிமாண பார்வையின் அடிப்படையிலையே வளர்கின்றோம். இவ்வாறன வளர்ப்பு முறையானது அடிப்படையில் முரண்பாடானதாகவும் ஆரோக்கியமான சமூக தனி மனித பண்புகளுக்கும் எதிரானதாகவுமே இருக்கின்றது. ஒரு புறம் ஜனநாய பண்புகளை வலியுறுத்துகின்றோம். ஆனால் மறுபுறம் அதை குழந்தைப் பருவத்திலிருந்தே நடைமுறைப்படுத்தி வளர்ப்பதற்கு தவறிவிடுகின்றோம். இங்கிருந்தே பிற இன மதங்களுக்கு எதிரான உணர்வுகள் மனிதர்களின் ஆழ் மனங்களில் பதிய ஆரம்பிக்கின்றன. இதனுடன் காலம் காலமாக ஆதிக்கத்திலிருந்து வருகின்ற கருத்தாதிக்கங்களும் இதை ஊட்டி வளர்ப்பதற்கு வலுசேர்க்கின்றன.

குழந்தைகளுக்கு குறிப்பாக பல்வேறு மதங்கள் தொடர்பாகவும் அதன் தத்துவங்கள் கருத்தியல்கள் தொடர்பாகவும் ஆரம்பத்திலையே அறிமுகம் செய்வதில்லை. இதன் மூலம் அவர்கள் தாம் விரும்புகின்ற மதங்களை தேர்தெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதை மறுக்கின்றோம். அதாவது ஒரு மனிதரின் ஜனநாயக உரிமையை அவரது குழந்தைப் பருவத்திலையே மறுக்கின்றோம். ஆகவே குழந்தைகளுடனான உறவானது ஜனநாயக மறுப்பின்மையாகவே நமது சமூகங்களில் இருந்து வருகின்றன. இவ்வாறான பண்புகளுடன்  வளர்ந்து வரும் குழந்தைகள் பெரியவர்களானதும் பிற மதங்களை மதிக்கும் என எந்த அடிப்படையில் நாம் எதிர்பார்ப்பது? இக் குழந்தைகள் பெரியவர்களான பின் இன, மத, சாதி வாதிகளாகவும் வெறியர்களாகவும்  இருப்பதுடன் அவ்வாறுதான் செயற்பாடுவார்கள் என்பது ஆச்சரியமானதல்லவே. இதன் விளைவுகளையே காலம் காலமாக இன மத சாதிய முரண்பாடுகளாகவும் ஆதிக்கத்திலுள்ளவர்களின் தாக்குதல்களாகவும் அழிப்பு செயற்பாடுகளாகவும் கண்டு வருகின்றோம்.

ஒரு புறம் குழந்தை இராணுவத்தை எதிர்க்கின்ற நாம் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக மட்டும் புடம் போட்டு வளர்கின்றோம். இவ்வாறான வளர்ப்பு முறைகளை தவறானதாக நாம் பார்ப்பதில்லை. ஆனால் இவ்வாறு ஒரு மதம் சார்ந்து குழந்தைகளை வளர்கின்றவர்களுக்கும் குழந்தைகளை இராணுவத்தில் இணைத்து பயன்படுத்துபவர்களுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. ஒன்று வெளிப்படையான வன்முறை செயற்பாட்டை வளர்கின்றது. மற்றது ஒருவரது மனதிற்குள் வன்முறை செயற்பாட்டை வளர்க்கின்றது. இது குறிப்பான சுழல்களில் பிற மதங்கள் மீதான வன்முறையாக வெளிப்படுகின்றது. பள்ளி வாசலை இடிப்பதற்கு தலைமை தாங்கி செனற் பௌத்த பிக்கு இவ்வாறான ஒருவரே. இவர்கள் உண்மையிலையே புத்தரின் போதனைகளை அவமதிக்கின்றார்கள்.

சிறிலங்காவில் நிலவுகின்ற சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் விளைவாக பிற மதங்கள் மீதான தாக்குதல்களாக மேற்குறிப்பிட்டவை நடைபெறுகின்றன. இதேபோல் பிற நாடுகளில் (இந்தியா, பாக்கிஸ்தான்) எந்த மதங்கள் பெரும்பான்மையாகவும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்கின்றார்களோ, அங்கு பிற மதங்கள் மீதான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் நிகழ்கின்றன. நாடுகளில் மட்டுமல்ல குறிப்பாக ஒவ்வொரு நகரங்களிலும் ஊர்களிலும் (யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம், மற்றும் கிழக்கின் கிராமங்களில் நடைபெற்ற இன மதக் கலவரங்களும் படுகொலை சம்வங்களும்) எந்த இனம் மதம் பெரும்பான்மையாகவும் ஆதிக்கமாகவும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இவ்வாறுதான் நடைபெற்று வருகின்றன என்பது நாம் அறிந்ததே. ஆகவே நமது குழந்தை வளர்ப்பு முறைகளை நாம் கேள்வி கேட்காமல் பிற இன மதங்களுக்கு எதிரான போக்குகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்காமல் இவ்வாறான தாக்குதல்கள் எதிர்காலத்தில் மேலும் நடைபெறுவதை தடுத்து நிறுத்தவும் முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மதங்கள் தொடர்பாக மேற்குறிப்பிட்டவாறு கூறுகின்றமையானது மதங்கள் சரியானவை என்ற பார்வையையும் மதங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளதான தோற்றப்பாட்டைத் தரலாம். ஆனால் உண்மையதுவல்ல.  மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மத நிறுவனங்கள் விரோதமானவை என்பதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்பதைக் குறித்துச் செல்வது நல்லது. ஏனெனில் இவை தனி மனித உரிமைகளை மீறுவனவாக மட்டுமல்ல மனித வளர்ச்சியை தடுப்பனவாகவுமே இருக்கின்றன. ஆனால் சிலர் நான் தியான செயற்பாடுகளில் ஈடுபடுவதால் என்னை ஒரு மதவாதியாக பார்ப்பதை அறிவேன். இதுவும் நமது அறியாமையின் விளைவே. மேற்குலக நாடுகளில் , மதங்களுக்குள் சிக்குண்டிருந்த மேற்குலக தத்துவம் நீண்ட காலங்களுக்கு முன்பே பிரிந்து தனியாக தனது பதையை அமைத்ததுபோல் கிழக்கில் இன்னும் நடைபெறவில்லை.  அவ்வாறான ஒரு பிரிவினை கிழக்கில் ஏற்படும் பொழுது அதன் தத்துவார்த்து புலமை தொடர்பான வரலாற்றையும் அதன் ஆழமான அறிவுப் பரப்பலையும் அடையாளங் காணமுடியும். அதுவரை மக்களின் ஆழமான மத நம்பிக்கைகள் தொடர்பாக நாம் மிகவும் பிரக்ஞையுடன் கவனமாக செயற்படவேண்டி உள்ளோம். டொரோன்டோவில் நடைபெற்ற இலக்கிய சந்திப்புக் கூட்டத்தில் கலாநிதி மைதிலி அவர்கள் இது தொடர்பாக சில விடயங்களை குறிப்பிட்டமையும் கவனிக்கத்தக்கது. அவர் முன்வைத்து கருத்துக்களுடன் உடன்பாடும் முரண்பாடும் இருந்தபோதும் முக்கியமானது. இது தொடர்பான குறிப்பொன்றை நடராஜா முரளிதரன் அவர்கள் முகப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

இவ்வாறான முரண்பாடுகள் இன மதக் குழுக்களுக்கு இடையில் மட்டும் நடைபெறுவதில்லை. சமூகத்தை மாற்றும் நோக்கத்துடன் செயற்படுகின்ற கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் இடையிலும் கூட நடைபெறுகின்றமை தூர்ப்பாக்கியமானது. இக் குழுக்களும் கட்சிகளும் இயக்கங்களும் தமது நோக்கங்களை மறந்து தாம் அங்கத்தவர்களாக இருக்கின்ற குழுக்களுடன் தம்மை அடையாளப்படுத்தவும் நியாயப்படுத்தவும் முற்படுகின்றனர். இக் குழுக்கள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள் கூட அவர்களை பாதிக்கின்றது. இதனால் தம் நலன்களை முன்நிறுத்தி வைக்கப்படுகின்ற விமர்சனங்களைக் கூட புறக்கணித்துவிட்டு விமர்சனத்தை முன்வைப்பவர்களுடன் மல்லுக்கு நிற்கின்றனர். விரோதிகளாகப் பார்க்கின்றனர். இது தொடர்பான ஒரு பக்க பார்வையை ரமேஸ் தனது முகப்புபுத்தகத்தில் பதிவிட்டுள்ளார். (இப் பிரச்சனை தொடர்பான பொதுவான பார்வையில்லாது குறிப்பிட்ட குழு அல்லது அமைப்பு சார்ந்து தனது பார்வையை ரமேஸ் முன்வைத்தமையானது இவ்வாறான பிரச்சனைகளை விரிவாகப் பார்ப்பதற்குப் பதிலாக குறுக்கிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.) இவ்வாறன குழுக்களில் இவர்கள் ஆக்க் கூடியது 30 அல்லது 20 அல்லது 5 வருடங்களோ தான் இருந்திருப்பார்கள். இக் குழுக்களை பாதுகாக்கும் நோக்குடன் தனிமனிதர்களைத் தாக்குவதற்கு கூட தயங்க மாட்டார்கள். அதாவது மனிதர்களைவிட தமது குழுக்களும் அமைப்புகளும் அவற்றுடனான தமது அடையாளமும் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. ஆனால் இவர்களது நோக்கம் சமூக மாற்றம் ஜனநாயகம் என இருக்கின்றது. இவ்வளவு குறுகிய காலம் ஒரு குழுவில் இருந்ததற்காக இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு காப்பாற்றுகின்றார்களாயின் பரம்பரை பரம்பரையாக பல்லாண்டு காலமாக தமது இன மத சாதிய அடையாளங்களை நம்பி வருகின்றவர்களிடம் எந்தளவு ஆழமான நம்பிக்கைகளும் உணர்வுகளும் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவே இவ்வாறன நீண்டா கால அடையாளங்களினால் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு முதலில் நமது குறுகிய கால அடையாளங்களினால் ஏற்பட்ட முரண்பாடுகளை புரிந்துகொண்டு எவ்வாறு அவற்றை ஆரோக்கியமான வழிமுறைகளில் தீர்ப்பது என்பதில் நாம் அக்கறை காண்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் நமது உயர்ந்து நோக்கத்தை படிப்படியாகவேணும் அடையமுடியும்.

நாம் உயர்ந்த கோட்பாடுகளையும் நோக்கங்களையும் நமது வாழ்வில் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் இந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆகவே பல்வேறு வகையான பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் நாம். இந்தப் பாதிப்புகள் நாம் எவ்வளவுதான் உயர்ந்த கோட்பாடுகளை கொண்டிருப்பதாலும் நம்மிடமிருந்து பிரக்ஞையின்மையாக வெளிவரும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்தடிப்படையில் ஒருவர் இன மதங்களுக்கு இடையிலான சமத்துவத்தை ஏற்பதை மதிக்கவேண்டும். இவரை நட்பு சக்தியாகவே கருதவேண்டும். இதிலிருந்துதான் ஒருவர் பல்வேறு ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு ஊடாக வளர்ந்து வருவார். இதற்கு மாறாக ஆரம்பத்திலையே பல்வேறு நூல்களையும் ;வாசித்த நமது அறிவைக் கொண்டு அவரை கரடு முரடாக விமர்சித்து பயமுறுத்துவதி ஓடச் செய்வது நமது பிரதான நோக்கங்களுக்குப் பாதகமானதே. தந்திரோபாய அடிப்படைகளில் அதிகாரத்திலுள்ளவர்களை தனிமைப்படுத்துவது எவ்வாறு என்பதுதான் நமது பிரதான நோக்கமாக இருக்கவேண்டும். வெறுமனே இராணுவ தாக்குதல்கள் மட்டும் அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து நமக்கான விடுதலையைப் பெற்றுத் தந்துவிடாது. ஆனால் நாம் அதிகாரத்திலுள்ளவர்களை புறக்கணித்துவிட்டு நமக்குள் முரண்பட்டு நமது சக்தியை வீணாக்கிப் பலவீனப்படுத்துகின்றோம் என்பதையே காணக் கூடியதாக உள்ளது. இதை நாம் புரிந்துகொள்கின்றோம் இல்லை என்பது மிகவும் துன்பகரமானது.

 

வாழ்வின் மீது நம்பிக்கையளிப்பவை சிறு சிறு சம்பவங்களாகவே இருக்கின்றன. உதராணமாக இரண்டாவது சனல் நான்கு வெளியிட்ட காட்சிகளில் இரு சிறு பெண் குழந்தைப் போராளிகளை சுடுமாறு தளபதி ஒருவர் கட்டையிடுகின்றார். ஆனால் இராணு சிப்பாள் ஒருவர் சுடுவதற்கு தயங்குகின்றார். நிர்ப்பந்த்த்தின் விளைவாக இறுதியல் சுட்டபோதும் அந்த தயக்கம் முக்கியமானது. அதேபோல் தம்புள்ள பள்ளிவாசலை இடிப்பதற்காக ஹாமதுருமார் தலைமையில் செல்கின்றபோது பல பொதுமக்கள் தமது விடுகளிலிருந்து அந்த ஊர்வலத்தில் உணர்ச்சியுடன் பங்கு எடுக்காமல் விடுப்பு பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த மக்கள் எந்த பக்கமும் எந்தே நேரமும் போகலாம். இவர்களை சரியான திசைவழியில் வழிநடாத்துவது அல்லது செல்வதற்கான வழியைக் காட்டுதவற்கு நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. இவ்வாறு கிடைக்கின்ற சிறு சிறு நம்பிக்கைகளையே பெரிய நம்பிக்கைகளாக மாற்ற முயற்சிக்கவேண்டும். உதாரணமாக நம்மை அடக்குகினற் ;ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் அதிகாரமற்று அநாதவராவாக இருக்கின்றார் எனின் அந்த் சந்த்ரப்பத்தைப் பயன்படுத்தி அவரைத் தாக்குவதன் மூலம் நாம் ஏதற்காகப் போராடுகின்றோம் என்பதையே கேள்விக்குள்ளாக்குகின்றோம். தமிழகத்தில் பிரபாகரன் திரைப்படத்தை எடுத்த திரைப்பட நெறியாளருக்கும் அங்கு வருகின்ற சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களும் இவ்வாறன நிகழ்வுகளே. இது தொடர்பாக நாம் சிந்திப்பாதாகவே இல்லை.

தமிழ் தேசியவாதி ஒருவர் முஸ்லிம் இனப் பெண் ஒருவரைப் பார்த்து தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்களை கண்டித்து யாராவது குரல் கொடுத்தார்களா எனக் கேட்டார். குறிப்பிட் முஸ்லிம் இனப் பெண் டொரன்டோவில் நடைபெறுகின்ற பல கூட்டங்களில் பங்குபற்றி பல்வேறு ஆரோக்கியமான கருத்துக்களையும் தகவல்களையும் பகிரந்து கொள்பவர். அவர் கேட்ட கேள்விக்கு அதைக் கண்டிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் சிறுபான்மையாக இருக்கின்றனர் என்றார் அந்தப் பெண்மணி. ஆனால் தனது சமூகத்தால் அடக்கப்படுகின்ற ஒரு இனத்தைப் பார்த்து இவ்வாறு இந்த தமிழ் தேசியவாதி கேட்க முடியுமாயின், இவரைப் பார்த்து சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சாதாரண ஒரு மனிதர் ஒருவரும் இவ்வாறன கேள்வியை கேட்கலாம். அடக்கப்படுகின்ற சமூகத்தை நோக்கி அடக்குகின்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஒரு கேள்வியை கேட்பது தார்மிக அறத்திற்கு முரணானதாகவே இருக்கும். அதாவது அடக்கப்படுகின்ற சிறுபான்மை குழுக்களின் இன மத உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் மட்டுமே இவ்வாறு கேள்வி கேட்க முடியும். நாம் இவ்வாறான கேள்விகளை கேட்பதற்குப் பதிலாக எவ்வாறு ஒவ்வொறு சமூகத்திலும் இருக்கின்ற பல்லின சமூகங்களின் இன மத உரிமைகளை ஏற்கின்ற உணர்வுகளை மதிக்கின்ற இவ்வாறன சிறுபான்மை மனிதர்களின் கூட்டணி ஒன்றை அமைத்து படிப்படியாக பெரும் சக்தியாக உருவெடுப்பது என சிந்திப்பதே சிறந்த வழி.

மீராபாரதி

10.05.2012

Advertisements

Responses

 1. //தமிழ் தேசியவாதி ஒருவர் முஸ்லிம் இனப் பெண் ஒருவரைப் பார்த்து தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்களை கண்டித்து யாராவது குரல் கொடுத்தார்களா எனக் கேட்டார். குறிப்பிட் முஸ்லிம் இனப் பெண் டொரன்டோவில் நடைபெறுகின்ற பல கூட்டங்களில் பங்குபற்றி பல்வேறு ஆரோக்கியமான கருத்துக்களையும் தகவல்களையும் பகிரந்து கொள்பவர். அவர் கேட்ட கேள்விக்கு அதைக் கண்டிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் சிறுபான்மையாக இருக்கின்றனர் என்றார் அந்தப் பெண்மணி. ஆனால் தனது சமூகத்தால் அடக்கப்படுகின்ற ஒரு இனத்தைப் பார்த்து இவ்வாறு இந்த தமிழ் தேசியவாதி கேட்க முடியுமாயின், இவரைப் பார்த்து சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சாதாரண ஒரு மனிதர் ஒருவரும் இவ்வாறன கேள்வியை கேட்கலாம்//

  மீராபாரதி, அந்தக் கூட்டத்தில் கிழக்கிலங்கை இன முரண்பாடுகளும் மூலகாரணங்களும் என்கிற தலைப்பில் நடைபெற்ற உரையில் உரையை நிகழ்த்தியவர் தான் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் தனது உரையை நிகழ்த்துகிறேன் என்று சொல்லியே மேற்படி உரையை ஆற்றியிருந்தார். நிகழ்வில் கலந்துகொண்டவர் கேள்வி நேரத்தில் மேற்படி கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த இடத்தில் ஏன் “தமிழ்த்தேசியவாதி”, “முஸ்லீம் பெண்” என்று அடையாளப்படுத்திகின்றீர்கள் என்பது தெரியவில்லை. உரையை நிகழ்த்தியவர் தாம் நடிநிலையான அமைப்பின் சார்பாக அந்த கள ஆய்வை மேற்கொண்டனர் என்றே தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் மேற்படி உரை தொடர்பில் அவரை முஸ்லீம் பெண் என்று அடையாளப்படுத்தத் தேவையில்லை. தவிர, உங்களின் மேற்படி கருத்தில் கேள்வி கேட்டவர் மிக நீண்டகாலமாகவே அரசியல், இலக்கிய நிகழ்வுகளில் பங்காற்றிவருபவர். அவரை ஏன் தமிழ்த் தேசியவாதி என்ற அடையாளத்துடன் இங்கே முன்னிறுத்துகின்றீர்கள் என்றும் தெரியவில்லை. தமிழ்த் தேசியவாதிகள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்கிற உங்களின் ஊகத்துக்கு அல்லது முன் முடிவிற்கே உங்களின் கருத்து இட்டுச்செல்லுகின்றது.

  அது போலவே தமிழர்களை சிங்களவர்கள் ஒடுக்குவது போலவே தமிழர்கள் முஸ்லீம்களை ஒடுக்குகின்றனர் என்கிற பொருள்படும் உங்கள் வார்த்தைகளும் மிக மிக பொருத்தமில்லாதவை

 2. “குழந்தைகளுக்கு குறிப்பாக பல்வேறு மதங்கள் தொடர்பாகவும் அதன் தத்துவங்கள் கருத்தியல்கள் தொடர்பாகவும் ஆரம்பத்திலையே அறிமுகம் செய்வதில்லை. இதன் மூலம் அவர்கள் தாம் விரும்புகின்ற மதங்களை தேர்தெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதை மறுக்கின்றோம். அதாவது ஒரு மனிதரின் ஜனநாயக உரிமையை அவரது குழந்தைப் பருவத்திலையே மறுக்கின்றோம். ஆகவே குழந்தைகளுடனான உறவானது ஜனநாயக மறுப்பின்மையாகவே நமது சமூகங்களில் இருந்து வருகின்றன. இவ்வாறான பண்புகளுடன் வளர்ந்து வரும் குழந்தைகள் பெரியவர்களானதும் பிற மதங்களை மதிக்கும் என எந்த அடிப்படையில் நாம் எதிர்பார்ப்பது?

  ஒரு புறம் குழந்தை இராணுவத்தை எதிர்க்கின்ற நாம் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக மட்டும் புடம் போட்டு வளர்கின்றோம். இவ்வாறான வளர்ப்பு முறைகளை தவறானதாக நாம் பார்ப்பதில்லை. ஆனால் இவ்வாறு ஒரு மதம் சார்ந்து குழந்தைகளை வளர்கின்றவர்களுக்கும் குழந்தைகளை இராணுவத்தில் இணைத்து பயன்படுத்துபவர்களுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. ஒன்று வெளிப்படையான வன்முறை செயற்பாட்டை வளர்கின்றது. மற்றது ஒருவரது மனதிற்குள் வன்முறை செயற்பாட்டை வளர்க்கின்றது. இது குறிப்பான சுழல்களில் பிற மதங்கள் மீதான வன்முறையாக வெளிப்படுகின்றது.”
  This is inevitable when you are a minority and under threat and discrimination. More than political reasoning it is a mechanism built in our brain through evolutionary process.
  Please check this web. Even though it deals with belief, same can be said to preserving and promoting religious and cultural identity.
  http://www.csicop.org/si/show/why_bad_beliefs_dont_die
  Because beliefs are designed to enhance our ability to survive, they are biologically designed to be strongly resistant to change.
  Can this biological programming be controlled? Or should it be? The external factors need to be corrected and it has to come from the majority who need to assure the minority that there will not be any discrimination. Canada is a good example, where multiculturalism has achieved this to a good extent. You can see the new immigrants upholding their traditions and beliefs whereas once they are comfortably settled they willingly mix and accept with cross cultures. Democracy was a long process in the west and we are not mentally, culturally ready to accept and adapt to that. It comes from the majority, the stronger accepting and respecting the minority the weaker.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: