Posted by: மீராபாரதி | March 11, 2012

பிரக்ஞையும் இலக்கியமும்: சாம்பல் இலக்கியத்திலிருந்து…சாம்பல் அரசியலை நோக்கி…

 

அண்மையில் வாசித்த சயத்தனின் ஆறாவடு என்ற குறுநாவலுக்குள் பல சிறு கதைகளும்  மெலிஞ்சியின் பிரண்டையாறு சிறுகதைத் தொகுதியில் வருகின்ற சிறுகதைகளுக்குள் ஒரு குறுநாவலும் இருப்பதான உணர்வினை வெளிப்படுத்துகின்றன. இந்த இரண்டுமே இரு ஈழத் தமிழர்களின் இலக்கியப் படைப்புகள். இருவரும் தமது சம கால நிகழ்வுகளை அதன் பாதிப்புகளை பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஆறாவடு நாவலாக பரவலாக கதைக்கப்பட்டும் பலாராலும் வியந்து போற்றப்படுகின்றது. ஆனால் இதே காலத்தில் வெளியான பிரண்டையாறு அவ்வாறான ஒரு கவனிப்பை பெறவில்லை. என்ன காரணம்? சில நண்பர்கள் ஆறாவடு ஒரு நாவல் என்றும், ஈழத்தில் இருந்து நீண்ட காலத்திற்குப் பின்பு அண்மைய கால நிகழ்வுகளை அடிப்படையாக்க் கொண்டு ஒரு படைப்பாக வந்துள்ளது எனக் குறிப்பிட்டனர். இது உண்மையாக இருக்கலாம். ஆனால் எனக்கு இதில் வேறு ஒரு பார்வையும் உள்ளது.

சயந்தனின் ஆறாவடு மற்றும் மெலிஞ்சியின் பிறண்டையாறு ஆகிய இரண்டு இலக்கியப் படைப்புகளும் எனக்கு நெருக்கமாக இருக்கின்றன. ஆறாவடு இன்றைய சுழலில் அதன் முக்கியத்துவத்துவத்திற்காகவும் பிறண்டையாறு தன்னையறிதழுக்கான ஒரு தேடலை கொண்டிருப்பதும் இதற்கான காரணங்கள் ஆகும். இதைவிட இவை இரண்டினுடாகவும் உரையாடப்படுகின்ற அரசியலினாலும் நெருக்கமாக இருக்கின்றன. ஆனால் இக் கட்டுரையானது ஏன் ஒரு படைப்பு பலராலும் பிரபல்யமாக முக்கியத்துப்படுதிப் பேசப்படுகின்ற அதேவேளை இன்னுமொரு படைப்பு அந்தளவு கவனிப்பை பெறாமலிருக்கின்றது என சிந்தித்தேன். இதற்கு சமூக, வர்க்க, சாதிய, அரசியல் மற்றும் உளவியல் என பல காரணங்கள் நம்மையறியாது ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் அந்தளவு விரிவாக இக் கட்டுரையில் ஆராயப்போவதில்லை. இந்த இரண்டு படைப்புகளையும் வாசித்தளவில் எனது கேள்விக்கான பதில்களாக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்ற என உணர்ந்தேன். ஒன்று இந்தப் படைப்புகள் வெளிப்படுத்தும் மனநிலையும் வாசகர்களுடனான அடையாளப்படுத்தலும். இரண்டாவது இவை முன்வைக்கும் அரசியலும் அதன் வெளிப்பாடும். இவை தொடர்பாகவே இங்கு எனது கருத்துக்களை பதிவு செய்கின்றேன்.

ஒரு நதியானது தன்னளவில் ஊற்றெடுத்து வழிந்தோடி பள்ளங்களில் நீர் விழ்ச்சியாக விழ்ந்து ஆறாக உருவாகி சமுத்திரத்தில் சங்கமிக்கின்றது. இந்த நதிகள் போலவே இலக்கியப் படைப்புகள் ஒவ்வொன்றும் தம்மளவில் தனித்துவமானவையும் புதுமையானவையும் ஊற்றெடுத்து வருபவையுமாகும் என்றால்மிகையல்ல. இப் படைப்புகள் தாம் வழிதோரும் சந்தித்த மனிதர்களையும் தாம் உறவாடிய மண்ணின் மணத்தையும் மனதையும் நமக்கு அறிமுகம் செய்வதுடன் அதனை உணரவும் வைக்கின்றன. மேலும் இது தன்னை அறிவதற்கான உள்நோக்கிய தேடலையும் மற்றவர்களை புரிந்துகொள்வதற்கான முயற்சியையும் மற்றும் பிரபஞ்ச உண்மையை உணர்வதற்கான பாதையையும் என பல உள்ளார்ந்த தன்மைகளைக் கொண்டிருக்கும். இந்தடிப்படையில், ஒரு படைப்பைப் படைக்கின்றவருக்கு தன்னளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த பயன்படுகின்றது. அதேபோல் வாசகர்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த இவ்வாறன படைப்புகள் பயன்படுகின்றன எனலாம். ஆகக்குறைந்தது தன்னையும், தன்னைச் சூழவுள்ள சமூகத்தையும், மற்றும் பிரபஞ்ச உண்மையையும் பற்றிய பல கேள்விகளையாவது இவ்வாறன படைப்புகள் உருவாக்கிவிடுகின்றன.

மேற்குறிப்பிட்டவாறு ஒரு படைப்பானது எந்தளவு உண்மைக்கு அருகில் இருக்கின்றது என்பதை, ஒரு படைப்பாளர் என்ன (மன) நிலையிலிருந்து படைக்கின்றார் என்பதன் அடிப்படையிலையே இருக்கின்றது. இதுவே குறிப்பிட்ட படைப்பின் தரத்தைக் கூட்டுவதுடன் அது காலம் கடந்தும் வாழ்கின்றதற்கான தன்மைகளைக் கொண்டிருக்கும். அவ்வாறான பல இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன என்பதை (என்னைவிட) அதிகம் வாசிக்கின்ற வாசகர்களாகிய உங்களுக்குத் தெரியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆகவே இங்கு இரண்டு விடயங்கைள புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம்.  ஒரு படைப்பின் தரத்தினை புரிந்துகொள்ள அது படைப்பாளரின் எந்தவகையான ஒரு மனநிலையில் படைக்கப்பட்டிருக்கலாம் என்பதை அறிவது. இதற்கு மனிதர்களது மனம் தொடர்பான புரிதல் அவசியமானதாகும். இரண்டாவது உண்மையின் பன்முகத்தன்மை எந்தளவு அது வெளிப்படுத்துகின்றது என்பது தொடர்பானது. இவைகளே ஒரு இலக்கிய படைப்பின் தரத்தினையும் வாழ்வையும் தீர்மானிக்கின்றன என்பது எனது புரிதல்.

பொதுவாக மனிதர்களது, நமது, மனம் இருவகையான மனத் தளங்களைக் கொண்டுள்ளது. மேல் தளம் பிரக்ஞையின்மையைக் கொண்டது. இது அண்மைக்கால நிகழ்வுகளையும் மற்றும் சம கால நிகழ்வுகளையும் சொல்லத் துடிப்பவற்றையும் கூறுவதற்கான சுழ்நிலைக்காகவும் காத்திருக்கின்ற எண்ணங்களின் கூட்டு. கீழ்த் தட்டு மனம் கூட்டுப்பிரக்ஞையின்மையைக் கொண்டதாக இருக்கின்றது. இது வெளியே கூறவே முடியாத, மற்றவர்களுடன் பகர்ந்து கொள்ள முடியாத, காலம் காலமாக அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பலவகையான எண்ணங்களின் இறுக்கமான கூட்டமைப்பாகும். இவை இரண்டுக்கும் இடையில் ஊடாட்டம் நடைபெற்றபோதிலும் பிரக்ஞையின்மையில் இருக்கின்ற எண்ணங்கள் சமகால நிகழ்வுகளால் தாக்கப்படும்போது மிக இலகுவாக வெளிவருகின்றன. ஆனால் கூட்டுப்பிரக்ஞையின்மையை அவ்வளவு இலகுவாக எதனாலும் தாக்குதலுக்கு உள்ளாக முடியாது. மாறாக, அது நம்மை உள்ளிருந்து ஆதிக்கம் செய்கின்றது. மனதிற்குள் நடைபெறும் இவ்வாறன இயக்கத்தை தன்முனைப்பானது முகாமைத்துவம் செய்கின்றது. ஒருபுறம் தேவையானவற்றை வெளிப்படுத்துவதன் மூலமும் மறுபுறம் சமூகத்தில் சாதராணமாக வாழ்வ்வதற்கு பொருத்தமற்றவற்றை அடக்குவதன் மூலமும் சமரசம் செய்கின்றது. இவ்வாறன மனத்தின் செயற்பாடுகளை அறிவதற்கு, நாம் நமக்குள், உள்நோக்கிப் பார்க்க வேண்டும்.  இதற்குத்தான் பிரக்ஞை என்பது பயன்படுத்தப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட விளக்கத்தினடிப்படையில் சாதாரணமாக மூன்றாம் தர எழுத்துக்கள் என்பவை அதாவது மனிதர்களது அடக்கப்பட்ட காமம், கொலை வெறி அதாவது மிருகக்குணம் போன்றவற்றினால் உருவான மனவக்கிரங்கள் தொடர்பான எண்ணங்களை பிரக்ஞையின்மையாக வெளிப்படையாக முன்வைப்பவையாகும். இவ்வாறான எழுத்துக்கள் மனிதர்களுக்குள் இருக்கின்ற அடக்கப்பட்ட காமத்தையும் வன்முறையையும் மீண்டும் கிளரிவிடுபவையாகும். இவற்றுடன் வாசர்கள் தமது மறைவான பக்கங்களை அடையாளங் காண்பதுடன், தமக்குள்லிருக்கின்ற மனவக்கிரங்களுடன் திருப்பதி கொள்வதற்கான ஒரு வடிகாலாகவும் இவை செயற்படுகின்றதன. இவை வாசகர்களை எந்தவகையிலும் வளர்த்துச் செல்வதில்லை. மாறாக அவர்களது உணர்வுகளை உணர்ச்சிகளையும் சுரண்டி வியாபாரம் செய்கின்ற செயற்கையான படைப்புகளாகும். இன்னுமொரு வகைப் படைப்புக்கள் சமூகத்தின் சட்டதிட்டங்களை ஏற்றும் அதன் பிற்போக்கான கலாசார பண்புகளை மீள மீள மதித்தும் வலியுறுத்தியும்  பிரக்ஞையின்மையாகவும் செயற்கையாகவும் உருவாக்கப்படுகின்றவை.  இவ்வாறன படைப்புகளில் சமூக அக்கறை அற்றவையாக இருப்பதால் நமது அக்கறைக்கு உரியவையல்ல. ஆனால் ஒரு சமூகத்தின் மனிதரின் எழுத்தாளரின் மனநிலையை உளவியலை அறிந்து கொள்ள இவற்றைப் பயன்படுத்தலாம்.

மேற்குறிப்பிட்டவற்றை விட மேலும் இரு வகையான படைப்புகள் உள்ளன. ஒன்று,  நம் மனிதிலிருந்த பிரக்ஞையின்மையாக வெளிவருகின்ற சொற்களை பிரக்ஞையுடன் “பஸில்கள்” போல இணைத்து உருவாக்கப்படும் படைப்புகள். இன்று சமூக அக்கறையுடன் வெளிவருகின்ற பெரும்பாலான படைப்புகள் இந்தவகையைச் சேர்ந்தவை எனக் கூறலாம். இரண்டாவது, பிரக்ஞையுடன் படைக்கப்படுகின்ற படைப்புகளும் இருக்கின்றன. இவை எப்பொழுதும் உயர்ந்த ஒரு தளத்தில் இருப்பதுடன் காலங்கள் கடந்தும் வாசகர்களுக்கு வழிகாட்டுகின்றன. இவ்வாறான படைப்புகள் நிகழ்கால சம்பவங்களின் அடிப்படைகளில் படைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வுகளுக்குள் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்பவையல்ல. மாறாக அகமும் புறமும் தனது பிரக்ஞைபூர்வமான பார்வைக்கூடாக அகலமாக விரித்தும் ஆழமாகவும் பார்த்துப் படைக்கப்பட்டவையாகவே இவை இருக்கும். அதனால்தான் அவை, எப்பொழுதோ எழுதப்பட்டதாக இருந்தபோதும், இப்பொழுதும் நமக்கு நெருக்கமாக இருக்கின்றன எனலாம். இவை மனித வாழ்விற்கும் பிரபஞ்ச உண்மைக்கும் நெருக்கமானதாகவும் இருக்கும்.

உதாரணமாக நான் வாசித்த்தனடிப்படையில் வான்கோவின் நட்சத்திரம் தொடர்பாகப் புரிந்து கொண்டதைக் கூறலாம். இங்கு பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்ததாலோ என்னவோ அவரால் நட்சத்திரத்தின் உண்மைத்தன்மையை தனது படைப்பினுடாக அன்றே வெளிக்கொண்டுவரக்கூடியதாக இருந்திருக்கின்றது. அன்று அது ஒரு படைப்பு. புனைவு. ஆனால் காலங்கள் பல கடந்து நட்சத்திரங்கள் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராயந்தபோது அதன் உண்மைத்தன்மைக்கு நெருக்கமாக வான்கோவின் ஓவியமும் இருப்பதாக கூறுகின்றார்கள். இது எவ்வாறு சாத்தியமானது என்பது படைப்பாளியின் பிரக்ஞை நிலையைப் பொருத்தது என்பதே எனது புரிதல். இதேபோல் ரவிந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி படைப்பிற்கு நோபல் பரிசு கிடைத்தபோது நடைபெற்று ஒரு நிகழ்வு இவ்வாறான ஒரு நிலைக்கு ஆதாரமாக இருக்கின்றது. இவ்வாறு நடைபெறுவதற்கான காரணம், ஒரு படைப்பானது விழிப்புநிலையுடனும் பிரக்ஞையுடன் படைக்கப்படுகின்றபோது குறிப்பிட்ட படைப்பில் பன்முகப்பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. இந்தப் பரிமாணங்களின் அடிப்படையில்  குறிப்பிட்ட இலக்கியப் படைப்பின் தரமானது பரந்து விரிந்ததாகவும் ஆழமானதாகவும் இருக்கின்றது. இவற்றை எவ்வாறு நமது வாழ்க்கையில் இணைப்பது என்பதுதான் என் முன்னுள்ள கேள்வியும் தேடலும்.

சதாரணமாக பிரக்ஞையின்மையுடனும் பிரக்ஞையுடன் கலந்தே இன்றைய சிறந்த படைப்புகள் படைக்கப்படுகின்றன. ஏனெனில் பெரும்பாலான படைப்பாளர்கள் இயல்பாகவே பிரக்ஞையின்மையாக வாழ்பவர்கள். மிகவும் அருமையாகவே பிரக்ஞையுடன் வாழ்பவர்களாகவும் சிந்திப்பவர்களாகவும் எழுதுபவர்களாகவும் படைப்பாளர்கள் இருக்கின்றனர். ஆகவே இவர்களது படைப்பில் பிரக்ஞை மற்றும் பிரக்ஞையின்மையின் தாக்கங்கள் பரவலாக இருப்பதைக் காணமுடியும். இவ்வாறான படைப்புகளானது ஒற்றைப் பரிமாணத்திலோ இரட்டைப் பரிமாணங்களிலோ அல்லது சிலவேளைகளில் முப்பரிமாணங்களிலோ படைக்கப்படுகின்றன. இந்தபடிப்படையில் சயந்தனின் குறுநாவலும்(?) மெலிஞ்சியினுடைய சிறுகதைகளின் தொகுப்பும்(?) ஒரளவாவது தமதும், சமூகத்தினதும் மற்றும் அதில் வருகின்ற நிகழ்கள்வுகளினதும் முப்பரிமாண தன்மைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறான ஒரு பார்வையின் அடிப்படையில் இந்த இரு படைப்புகளும் பிரக்ஞையாகவும் பிரக்ஞையின்மையாகவும் உருவாக்கப்பட்ட படைப்புகளாகவே பார்க்கின்றேன். இவ்வாறுதான் படைக்கப்பட்டனவா என்பது கேள்விக்கும் விவாத்த்திற்கும் உரியது.

சயந்தனின் நாவல் தமிழ் பேசும் மனிதர்களின் பிரக்ஞையின்மையில் தற்போதைய சுழ்நிலையில் காணப்படுகின்ற, அதாவது மேலோட்டமான எண்ணங்களை, பிரக்ஞையாகவும் பிரக்ஞையின்மையாகவும் பதிவு செய்த ஒரு படைப்பாக அடையாளம் காணுகின்றேன். இவ்வாறான பிரக்ஞையின்மையின் எண்ணங்களுடன் நாம் மிக இலகுவாக அடையாளம் காணப்படுவோம். ஏனெனில் இவை நமது மனதில் மேல் மட்டங்களில் பிரக்ஞையின்மையாக அலைபாயந்தபடி இருக்கின்ற எண்ணங்கள். ஆகவே இவை மிக இலகுவாக கிளர்ச்சி ஊட்டப்படக் கூடியது. இதனால் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகளை எடுப்பதற்கும் இலகுவானதாக இருக்கின்றன.

உதாரணமாக தமிழ் சினிமாவின் ஜனரஞ்சகமான வியாபாரப்படங்களை சமூக நலன் சார்ந்து சிந்திக்கும் எழுத்தாளர்கள் விமர்சிப்பதுண்டு. ஆனாலும் அதில் வரும் கருத்துக்களும் கதாநாயர்களும் பொது மனிதர்களின் இலட்சிய நாயகர்களாக இலகுவில் ஆகிவிடுகின்றனர்.  இவர்களுடன் இலகுவாக அடையாளங் காணப்பட்டும்விடுகின்றனர். இதேபோல்தான் அரசியலிலும் பொது மனிதர்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலகுவில் மனித மனங்களில் இடம் பிடித்துவிடுகின்றனர்.

ஆனால் சமூக அக்கறையுடன் எடுக்கப்படுகின்ற சினிமாக்களோ அல்லது அரசியல் செயற்பாடுகளோ பொது மனிதர்களின் ஆதரவு நிலையை அவ்வளவு இலுகுவாகவும் விரைவாகவும் பெற்றுவிடுவதில்லை. (இது தொடர்பாக அரசியல் கட்டுரை ஒன்றில் விரிவாக எழுதுகின்றேன்.) இவ்வாறான ஆதரவு நிலையை பொது மனிதர்கள் எடுப்பதை அவர்களது பிரக்ஞையின்மையின் நிலையின் அடிப்படையில் புரிந்துகொள்கின்றேன். ஆனால் சமூக அக்கறை உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் இலக்கிய படைப்பாளிகள் அவ்வாறு பிரக்ஞையின்மையாக செயற்படுவதும் தன்னியல்யாக இழுபடுவதும் குறிப்பான அரசியலுக்காக இலக்கியங்களை எந்த விமர்சனங்களுமின்றி தூக்கிப்பிடிப்பதும் ஆரோக்கியமான ஒன்றல்ல. இதைத்தான் நமது அரசியல் வரலாற்றிலும், 83ம் ஆண்டுகளில் எந்த விமர்சனங்களுமின்றி செய்தோம். இன்று அரசியலில் வெற்றிடம் வந்ததினால், அவ்வாறன ஒரு செயற்பாட்டை இலக்கியத்திலும் எந்த விமர்சனமுமின்றி செய்கின்றோம். இவ்வாறான ஒரு ஆதரவாகவே, சயந்தன், யோ. கர்ணன், மற்றும் தீபச்செல்வன் போன்றவர்களின் படைப்புகளுக்கான, இலக்கிய படைப்பாளர்களதும் அரசியல் செயற்பாட்டாளர்களதும் விமர்சகர்களதும் விமர்சனமற்ற ஆதரவை பார்க்கின்றேன்.

தமது தேவைகளுக்கும் நோக்கங்களுக்கும் ஏற்ப இலக்கியப் படைப்புகளை முன்நோக்கித் தள்ளுவதில் நிகழ்கால அரசியல் ஆதிக்கம் செய்கின்றது என்றே நம்புகின்றேன். ஒருபுறம் இலக்கியத்தை முன்னிறுத்துகின்றவர்கள், இது வெறுமனே சம்பவங்களின் தொகுப்பு எனக் கூறி, அது முன்வைக்கின்ற அரசியலை நிராகரித்துவிடுகின்றனர். மறுபுறும், அரசியலை முன்னிறுத்துகின்றவர்கள், இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி முன்னிலைப்படுத்தும் அதேவேளை இதன் இலக்கிய தரத்தை கவனிக்காது விட்டுவிடுகின்றனர் என்றே தோன்றுகின்றது. அதேவேளை ஒரு இலக்கியத்தில்  முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியலைப் பொறுத்து, தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப அதனை ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். உண்மையிலையே இவ்வாறான தருணங்களில் இலக்கிய புலமைசார் துறையினர் தமது நேர்மையான பார்வைகளை முன்வைப்பது அவசியமானதும் ஆரோக்கியமானதும் எனக் கருதுகின்றேன்.

ஒரு இலக்கியப் படைப்பானது எந்தடிப்படையில் ஒரு நாவலாக குறு நாவலாக சிறுகதைகயாக நினைவுகளின் பதிவுகளாக … சுய சரிதையாக இப்படிப் பல வகைகளில் வரையறுக்கப்படுகின்றது என்பதையும் அல்லது நாவலுக்குள் சிறுகதைகள் வரலாமா? அல்லது சிறுகதைகைளின் தொகுப்பு ஒரு நாவலாகவும் இருக்கலாமா? இவ்வாறான கேள்விகளை எல்லாம் இலக்கிய படைப்பாளிகளும் மற்றும் புலமைசார் துறையினரும் தான் விளக்கவேண்டும். ஆனால், இவ்வாறு காலம் காலமாக அந்தந்த காலங்களில் வாழ்ந்த இலக்கியப் படைப்பாளர்களால் விமர்சகர்களால் இவ்வாறான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் தீர்வுகள்தான் இன்னும் இல்லை.

இலக்கிய அரசியல் அல்லது அரசியல் இலக்கியம் சார்ந்த துறைகளில் காணப்படுகின்ற தூர்ப்பாக்கியமான ஒரு நிலை என்னவெனில், மேற்குறிப்பிட்டவற்றுக்கெல்லாம் பதில் கூறுகிறவர்கள், தமது அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்தே பதில் கூறுகின்றமையாகும். இவ்வாறான சார்பு நிலைகளுக்கு அப்பாற்பட்டு இவர்கள் பதில் கூறினால் அதிலிருந்து வாசகர்கள், நாம், ஒரு புரிதலுக்கு வரலாம். இது வாசர்களை மேலும் வளர்த்துச் செல்லும் என்றே நம்புகின்றேன். அவ்வாறன பதில்கள் கிடைக்கும்வரை, இவ்வாறன படைப்புகளை, அதன் வரையறைகளையும் கடந்து, ஒவ்வொன்றும் அதனதனளவில் ஒரு இலக்கிய படைப்பாக மதிக்கப்படவேண்டும் என்றே கருதுகின்றேன்.

நிகழ்கால அரசியலுக்காக ஒரு படைப்பை பயன்படுத்தும் அதேவேளை படைப்பாளரின் படைப்புத்திறனை மழுங்கடிக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது. ஒரு படைப்பாளரிடமிருந்து மேலும் சிறந்த படைப்புகள் வெளிவரவேண்டுமாயின் அதன் அரசியலும் இலக்கியமும் பிரிக்கப்பட்டே பார்க்கப்படவேண்டும் என்றே நினைக்கின்றேன். அவ்வாறன ஒரு பார்வையையே நிலாந்தன் முன்வைத்திருக்கின்றார். அதாவது சயந்தனின் நாவலின் இலக்கியத் தரம் தொடர்பான விமர்சனத்தை விலத்திவிட்டு அதன் அரசியல் முக்கியத்துவம் தொடர்பாக மட்டும் கதைத்துள்ளார். இதேபோல் இன்னுமொருவர் இதன் அரசியல் முக்கியத்துவத்தை சிறிது தள்ளிவைத்துவிட்டு இதன் இலக்கித் தரம் தொடர்பாக தமது கருத்தை விமர்சனத்தை முன்வைப்பது பயனுள்ளதாக இருக்கும். இந்தடிப்படையில் நிலாந்தனின் நிலைப்பாட்டை மதித்து வரவேற்க்கின்றேன். அதேவேளை இவரைப் போன்று, அரசியல் இலக்கியம் இரண்டிலும் புலமையுள்ளவர்கள் தங்கள் இரு நிலைப்பாட்டிலிருந்தும் விமர்சனங்களை முன்வைத்திருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாகவும் நன்றாகவும் இருந்திருக்கும். இதேபோல் பிற இலக்கிய படைப்பாளிகளும் விமர்சகர்களும் வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக எந்த விமர்சனங்களுமற்று ஒரு படைப்பை உயர்த்திப் பிடிக்காது அதன் நேர் மற்றும் எதிர் மறை பக்கங்கள் தொடர்பான தமது பார்வையை முன்வைப்பது படைப்பாளர்களுக்கு மட்டுமல்ல நம்மைப் போன்ற வாசகர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

நிலாந்தன் குறிப்பிடுவதுபோல் பன்முகத் தன்மைகள் முக்கியமானவைத்தான். ஆனால் அவை வெறுமனே மேற்பரப்பில் மட்டும் இருப்பதால் அதன் உண்மையான தன்மையைப் பெற்றுவிடாது. ஒரு மேற்பரப்பில் பன்முகத்தன்மைகள் எந்தளவு அவசியமோ அந்தளவிற்கு பன்முகத்தன்மை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளார்ந்தும் இருக்க வேண்டும். நிலாந்தன் கூறுவதுபோல் சயந்தனின் நாவல் உண்மைக்கு அருகில் கொண்டு செல்கின்றதுதான். ஆனால் உண்மைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று நடைபெற்ற நிகழ்வு தொடர்பானது.  அவ்வாறான நிகழ்வுகளின் உண்மைத்தன்மைக்கு அருகாமையில் இவை நம்மை அழைத்துச் செல்கின்றமையால் மட்டும் அவை உண்மையாகிவிடா. ஏனெனில் ஒரு நிகழ்விற்கு பன்முக பரிமாணங்கள் உள்ளன. இன்னுமொரு பரிமாணத்தில் அதன் வேறு ஒரு உண்மை புலப்படும். இதை ஒரளவாவது சயந்தன் கொண்டுவர முயன்றிருக்கின்றர் எனக் கூறலாம். இதைவிட இன்னுமொரு உண்மை உள்ளது. அது பிரபஞ்ச உண்மை. இவ்வாறான உண்மைக்கு அருகில் செல்வதற்கான சிறிய ஒரு முயற்சியையாவது மெலிஞ்சியின் படைப்பு ஒரளவாவது செய்திருக்கின்றது எனலாம். மேலும் இவரது படைப்பானது மனதின் இரு தளங்களுக்குள்ளும் ஆன்மாவுடனும் தனது தேடலை விரித்துச் செல்கின்றது. ஆகவேதான் தமிழ் அரசியல் வாசகர்களின் உடனடியாக எதிர்பார்க்கும் தமது அரசியல் பசிக்கு இது திணி போடவில்லை. ஆகவேதான் இது தனக்கான கவனத்தைப் பெறவில்லை எனலாம். இதைவிட இந்த இரு இலக்கிய உருவாக்கங்கள் தொடர்பாகவும் எனது பார்வையை தனித் தனியாக வைத்திருக்கின்றேன்.

இறுதியாக கனடாவில் நிகழந்த சயந்தனின் ஆறாவடு நூல் வெளியீட்டு விழாவில் நிலாந்தனின் சாம்பல் இலக்கியம் தொடர்பாகவும் அவரது கருத்துக்கூறல் தொடர்பாகவும் மாமுலன்  அல்லது வரன் அவர்களும் கட்சுறா அவர்களும் முன்வைத்த விமர்சனங்கள் விமர்சனத்திற்குரியவை. முதலாவது நிலாந்தன் தனது உரையில் வீடு இழந்தவர்களின் மனநிலையை முக்கியத்துவப்படுத்தியதன் மூலம் தனது நிலப்பிரபுத்துவ அடையாளத்தை வெளிப்படுத்தி உள்ளார் என வரன் அவர் மீது முத்தரை ஒன்றைக் குத்தி விமர்சனத்தை முன்வைத்தார். இவ்வாறன முத்திரை குத்தலை அவர் தவிர்த்திருக்கலாம். மற்றும்படி வரன் கூறிய (எங்களைப் போன்ற) வீடற்றவர்களின் மனநிலையையும் குறித்திருந்தால் நல்லதே. அதேவேளை, வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் அகப்பட்டு அதிலிருந்து தப்பி வந்து, சமூக அக்கறை கொண்டு தமது அனுபவங்களையும் புதிய புரிதல்களையும் அவர்கள் மீண்டும் எழுதும் பொழுது வரவேற்று மதிக்கும் பரந்தமனப்பான்மை நமக்கு வேண்டும். அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கும் தருணம் இதுவல்ல. அதற்கான தகுதியும் நம்மிடமுமில்லை. இது அரசியல் சார்ந்த ஒரு விடயம் என்பதால் அரசியல் கட்டுரை ஒன்றில் விரிவாக கதைப்பதே நல்லது. அது சாம்பல் இலக்கியமல்ல…அது சாம்பல் அரசியல் பற்றியே….

மீராபாரதி

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: