Posted by: மீராபாரதி | December 13, 2011

பிரக்ஞையின்மை: பிறப்பின் பின்….பகுதி – 3

பிரக்ஞையின்மை: பிறப்பின் பின்….பகுதி – 3

பிரக்ஞை (consciousness) மற்றும் பிரக்ஞையின்மை (unconsciousness) என்பன பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்பதை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். இவற்றிக்கிடையலான முரண்பாடுகளும், கூட்டுறவும், ஒன்றின் மீதான ஒன்றின் ஆதிக்கமும் மனிதர்களது உளவியலை, மனதை, பல வகைகளில் தாக்கம் செலுத்தி இயங்கச் செய்கின்றது. இதன் விளைவாக மனிதர்கள் தமது இயற்கையான இயல்புக்கு மாறான நடத்தைகளிலும், பழக்கவழக்கங்களிலும் முகமூடிகள் அணிந்து ஈடுபடவே வழிகாட்டுகின்றன. ஆகவே நமது உண்மைத்தன்மையையும் இயற்கையான இயல்பையும் புரிந்து கொள்வதற்கு நமது மூகமுடிகள் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. இந்த முகமுடிகளை நமது பொய்யான மனித ஆளுமைகள் (personality) எனக் கூறலாம். இதை அறிந்து கொள்வதற்கு பிரக்ஞை மற்றும் பிரக்ஞையின்மை என்பன புதிதாக பிறக்கின்ற ஒரு மனிதரில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும் மனிதருக்குள் எவ்வாறு இயங்குகின்றன என்பது தொடர்பான சிக்மன் பிரைட்டின் (Sigmund Freud) விரிவான விளக்கத்தை முதலில்; பார்ப்போம்.

சிக்மன் பிரைட்டே (Sigmund Freud) பிரக்ஞையின்மை தொடர்பான நவீன கருத்தியலின் முக்கியமான மூல கருத்தாவாக இருக்கின்றார். ஆனால் தனக்கு முதலே, கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் பிரக்ஞையின்மையை (unconsciousness) கண்டுபிடித்துவிட்டனர் என்பதே பிரட்டின் நிலைப்பாடு. தான் கண்டுபிடித்தது பிரக்ஞையின்மையை எவ்வாறு விஞ்ஞான முறைமையினுடாக கற்கலாம் என்பதையே என்கின்றார் பிரட் (Macintyre, 47). இருப்பினும் இவரின் பிரக்ஞையின்மை (unconsciousness) தொடர்பான கருத்துக்களே கடந்த பல பத்தாண்டு காலாமாக உளவியலில் துறையில் மட்டுமல்ல சதாரண மனிதர்களது வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துவனவாக இருந்துவருகின்றன. ஆனால் நமது ஐம்புலன்களினால் கிடைக்கின்ற தகவல்களைக் கொண்டு வெளி உலகை எவ்வாறு தவறகப் புரிந்து அறிந்து கொள்கின்றோமோ, அதுபோலவே பிரக்ஞையின்மை (unconsciousness) என்கின்ற நமது உள்ளார்ந்த உளவியல் தன்மை தொடர்பாகவும் தவறாகவே புரிந்திருக்கின்றறோம் என்கின்றார் பிரட்டின் (Macintyre, 65).

மனித உளவியலை குறிப்பாக இருவகையான செயற்பாடுகள் பாதித்து வந்திருக்கின்றன. தொடர்ந்தும் பாதிக்கின்றன. ஒரு புறம் சமூக சட்டங்கள், கலாசரா, பண்பாட்டு அம்சங்காளின் அடிப்படையில் பல்லாயிராம் ஆண்டுகலாமாக கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களும் இதன் தொடர்ச்சியாக மனிதர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளால்  அடக்கப்பட்டவைகள் (Suppressions).  மறுபுறம் இவ்வாறான அடக்குமுறைகளின் விளைவுகளால் நாம் நமகுள்ளே ஒடுக்கியவையுமான  (Repression)  அனைத்துவிதமான, நினைவுகள், விருப்பங்கள், ஆசைகள், பழக்கவழக்கங்கள், நடத்தைகள், உணர்வுகள், உணர்ச்சிகள் என்பனவாகும். இவ்வாறு நாம் அடக்கியவையும் ஒடுக்கியவையும் பிரக்ஞையின்மையுடன் பின்னிப்பிணைந்து நமக்குள் இருக்கின்றன (Macintyre 66> 67> 96; Ellenberger, 210; Chalmers, 13). இவ்வாறு அடக்கப்பட்டவைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவைகளின் விளைவாக உருவானதே மனிதர்களது பிரக்ஞையின்மையான நடத்தைகள், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள். இவை அனைத்தும் மனிதர்களது வாழ்வில் இயற்கையான, இயல்பான வெளிப்பாடுகளாக தோன்றி சதாரணமானவையாக பிரக்ஞையற்று வெளிவருகின்றன (Jung, 172). இதன் விளைவுகள், ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மற்றும் சக மனிதர்களுக்கிடையிலும் புரிந்து கொள்ளமுடியாத பல முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன. இதை நாம் புரிந்து கொள்ள முடியாமைக்கு காரணம் நாம் பிரங்ஞையின்மையாக இருப்பதும் செயற்படுவதுமே என்றால் மிகையல்ல. இந்தளவிற்கு பிரக்ஞையின்மை முக்கியத்துவமாக இருப்பதால் தானே என்னவோ பிரக்ஞையின் (consciousness) தாய் பிரக்ஞையின்மை (unconsciousness) எனக் கூறுகின்றனர் (Jung, 172).

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவர்களது சமூகத்தாலும் இதன் விளைவாக தமக்குத் தாமேயும் அடக்கி ஒடுக்கப்பட்டவைகள் தான் அவர்களது மனதுக்குள் இருக்கின்ற பிரக்ஞையின்மையின் (unconsciousness) பெரும் பகுதியாகும். அதேவேளை அடக்குதல், ஒடுக்குதல் என்பதால் மட்டும் பிரக்ஞையின்மை ஏற்படுவதில்லை. இவை பிரக்ஞையின்மையின் ஒரு பகுதியே என்கின்றார் பிரட் (Freud). உண்மையிலையே பிரக்ஞையின்மை என்பது மிகப் பெரிய இருப்பை மனிதரில்; கொண்டுள்ளது எனவும் கூறுகின்றார் (Freud, 49). இவ்வாறன பிரக்ஞையின்மையானது வட துருவங்களில் உறைந்து போயிருக்கின்ற பனிக்கட்டிகள் போல மனித மனங்களில் ஆழமாக உறைந்து போயிருக்கின்றன என்கின்றார் பிரட் (Macintyre, 98). இவ்வாறு இவை உறைந்துபோயிருந்தாலும் தொடர்ச்சியாக நமது பிரக்ஞையின்மையான (unconsciousness) சிந்தனைகளில் செயற்பாடுகளில் மட்டுமல்ல பிரக்ஞைபூர்வமான (consciousness) சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் கூட தாக்கத்தை செலுத்திக் கொண்டே இருக்கின்றன (Macintyre 66). இதனால்தான் மனிதர்களின் மன அமைப்பும் அதன் செயற்பாடுகளும்  அடிப்படையில் பிரக்ஞையின்மையானது என்கின்றனர் (Macintyre 67). ஆகவேதான் பிரக்ஞையின்மை (unconsciousness) என்பது நாம் புறக்கணிக்கக் கூடிய சதாரண விடயமல்ல என்கின்றனர்.

டேஸ்காட்டின் இருநிலைக் (Dualism) கோட்பாட்டை பிரட் (Freud) புறக்கணித்தபோதும், அக் கோட்பாட்டின் அடிப்படையிலான மனம் (mind) என்பது வேறான ஒன்று என்பதை ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் இது பிரக்ஞைதன்மையால் (consciousness) ஆனதல்ல. மாறாக பிரக்ஞையின்மைதன்மையே (unconsciousness) இங்கு பிரதானமானது என்கின்றார் (Macintyre, 77). மனம் (mind) என்பது ஒவ்வொருவரதும் தனிப்பட்ட (personal) விடயம். இதனால்தான், பிரக்ஞையின்மை என்பது பிரட்டுக்கு மட்டுமல்ல தனக்கும் சந்தேகமில்லாமல் ஒருவரின் தனிப்பட்ட விடயம் என்கின்றார் யங் (Jung). இது ஒருவரது அடக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட விடயங்களையே குறிப்பதாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் பெரும்பாலும் இது மறைவானதாகவும் வெளித்தெரியாததாகவுமே; இருக்கின்றது என்கின்றார் (Jung, 3).

 

மனித, பார்வைகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றில் பிரக்ஞையின்மையின் (unconsciousness) தாக்கம் அதிகமானதாகவே இருக்கின்றன என்கின்றார் பிரட். ஏனனில் நமது பிரக்ஞையின்மையான (unconsciousness) செயற்பாடுகள், நடத்தைகள், பழக்கவழக்கங்கள் என்பது, நம் மனதில் உருவான பல சிக்கலான எண்ணங்களின் பாதிப்புகளினால் ஏற்பட்ட விளைவாக நடைபெறலாம் என்கின்றார். இதேவேளை சில எண்ணங்கள் திட்டமிட்டவகையில் நமது, மனித  பிரக்ஞையிலிருந்து வெளியிலையே இருக்கின்றது என்பதையும் தர்க்கீகத்துடன் விளக்கியுள்ளார். அதாவது ஒரு புறம் குறிப்பிட்ட நமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் நமது பிரக்ஞைக்கு (consciousness) வராது தடுப்பது அல்லது அடக்குவது என்பது பிரக்ஞையின்மையின் (unconsciousness) முக்கியமான தொழிற்படாகும். இதுவே ஒரு மனிதரது நடத்தைகளிலும் பழக்கவழக்கங்களிலும் முக்கியமான தாக்கத்தை செலுத்துகின்றது என்கின்றனர் (Davidson, 19). இந்த அடிப்படைகளில்தான் ஒரு மனிதரது ஆளுமையானது (personality) கட்டமைக்கப்படுகின்றது. இவ்வாறன தாக்கங்கள் எவ்வாறு ஒரு மனிதருக்குள் நடைபெறுகின்றது எனவும் இதனடிப்படையில் மனித ஆளுமைகள் எவ்வாற கட்டமைக்கப்படுகின்றது என்பதையும் பிரட் பின்வருமாறு விளக்குகின்றார்.

 

 

மனித மனதை (mind) மூன்று வகையாக பிரட் (Freud) பிரிக்கின்றார். அதாவது, மனித பிரக்ஞை (consciousness), முன் அல்லது ஆரம்ப பிரக்ஞை (pre-consciousness) , மற்றும் பிரக்ஞையின்மை (unconsciousness). பொதுவாக ஒரு மனிதரது பிரக்ஞை (consciousness)  நிலையை தாங்கிக் கொள்ளமுடியாததாகவே அவரது பிரக்ஞையின்மையின் (unconsciousness) நிலை என்பது இருக்கின்றது. இதேவேளை முன்-பிரக்ஞையின்மை என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டு சமூகத்திற்கு பொருத்தமான வகையில் ஒரளவாவது பிரக்ஞையை உள்வாங்கக் கூடியது. அடிப்படையில் முன் பிரக்ஞையானது (pre-consciousness) பிரக்ஞையின்மைக்கும் (unconsciousness) பிரக்ஞைக்கும் (consciousness) இடையிலான ஒரு வடிகட்டியாக தொழிற்பட்டு பிரக்ஞையின்மையிலிருந்து வருகின்ற அனைத்தையும் வடிகட்டி குறிப்பிட்ட சுழலுக்கு தேவையானதையும் நாகரீக சமூகத்திற்குப் பொருத்தமானவற்றை மட்டும் மனித பிரக்ஞைக்கு கொண்டுவருகின்றது. ஆனால் இவ்வாறான விளக்கம் கூட தான் கூற வருவதை விளங்குவதற்கு போதாமையாக இருப்பதாக பிரட் (Freud) கருதினார் (Brill, 512). இதன் விளைவாக மனதை உளவியலடிப்பைடயில் பின்வருமாறு பிரித்தார்.

 

 

மனதின் இருப்பை, தன்முனைப்பு (ego),  ஈடி (id),  மற்றும் மாபெரும் தன்முனைப்பு (superego) என்ற மூன்று வகையான உளவியல் கூறுகளுக்கு இடையலான தொடர்பாடல் என விளக்கினார். இங்கு தன்முனைப்பு (ego) என்பது மன செயற்பாட்டை ஒழுங்கமைத்து செயற்படுத்துகின்ற ஒன்று என்றார்.  இதில் பிரக்ஞையும் பிரக்ஞையின்மையும் கலந்து இருக்கின்றன. இங்கு பிரக்ஞையான தன்முனைப்பு (conscious ego)  என்பது நமது பார்வைகளையும் மற்றும் மனக் கட்டுப்பாடுகளுடனும் தொடர்பு கொண்டதாக இருக்கின்றது. பிரக்ஞையற்ற தன்முனைப்பு (unconscious ego) என்பது கனவுகளை கட்டுப்படுத்துவதாகவும் சுய அடக்குமுறைகளை செயற்படுத்துவதாகவும் இருக்கின்றது. இவ்வாறு ஒருவரது தன்முனைப்பானது சமூகத்துடன் சமரசம் செய்கின்றது. ஈடி (id) என்பது நமது அடக்கப்பட்ட ஆசைகள், உணர்வுகள் மற்றும் குற்ற உணர்வுகளையும் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டதாக இருக்கின்றது. மாபெரும் தன்முனைப்பு (superego) என்பதே இந்த நாகரிக சமூகத்துடன் பொருந்திப் போகின்ற வகையில் அதன் சமூக மற்றும் மத உணர்வுகளுக்கு என் அனைத்தையும் கவனித்து, மதிப்பிட்டு, இவற்றை மீறுதவற்கான தண்டணையுமம் அளிக்கின்றது. அதாவது ஈடி (id)  என்பது தன்னளவில் அறத்திற்கு அப்பாற்பட்டு (amoral) செயற்படுகின்றது. தன்முனைப்பு (ego)  என்பது அறத்துடன் (moral) செயற்படுவது. மாபெரும் தன்முனைப்பு (superego) என்பது அதியுட்சமானதும் கடுமையாக வறையறுக்கப்பட்டதுமான அறத்தை (hyper-moral) கோரி நிற்பதாகும் என்கின்றார் (Ellenberger,  515-6). இவ்வாறான செயற்பாடுகள் மூலம், நாம் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு ஏற்றவகையில், இவை அனைத்தும் நம்மை ஆதிக்கம் செய்கின்றது.

ஒருவரின் தன்முனைப்புதான் (ego) சுய ஒடுக்குதலுக்கு காரணம் என்கின்றார் பிரட் (Boag, 166). ஒரு விடயம் தனக்கு போட்டியானது அல்லது பொருந்தாதது எனக் கருதும்பட்சத்தில் தன்முனைப்பானது தன்னைப் பாதுகாப்பதற்காக பிரங்ஞையற்று தானாகவே குறிப்பிட்ட விடயத்தை அடக்கி ஒடுக்கிவிடுகின்றது. இதைவிட ஒரு விடயத்தை தனது நினைவில் வைத்திருக்க விரும்பாதபோதும் அதை அடக்கி ஒடுக்கிவிடுகின்றது. அதாவது தன்முனைப்பானது ஒரு மனிதரின் காவலாளியாக செயற்படுகின்றது என்கின்றனர் (Boag 166). நாம், நமது ஆசைகள், உணர்வுகள், எண்ணங்கள் பலவற்றை அடக்கி ஒடுக்குகின்றோம் என்கின்ற அறிவு நமக்கு இருக்கின்றது. அல்லது அதைப் பற்றி தெரிந்திருக்கின்றோம். ஆனால் இது தொடர்பான பிரக்ஞைபூர்வமான அனுபவ அறிவு இல்லாது இருக்கின்றோம். அதாவது அவ்வாறு நடைபெறும் கணத்தில், அதை அனுபவத்தில் அறியாது தவற விடுகின்றவர்களாக இருக்கின்றோம். இதற்கு காரணம் நமது பிரக்ஞையின்மை (Boag 166). ஆகவேதான், இதை அனுபவத்தில் அறிவதற்கு, நாம் பிரக்ஞையுடன் செயற்படவேண்டியது அவசியமாகின்றது. ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

 

உதாரணமாக நம் மனதைக் (mind) கவனிக்கும் பொழுது அதில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த எண்ணங்களை உருவாக்குபவையும் அவற்றுக்கு இடையிலான தொடர்பையும் கொண்டவையாக பிரக்ஞையின்மையே (unconsciousness) இருக்கின்றது என்கின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் நமது மதிப்பீடுகளையும் எண்ணங்கைளையும் உற்பத்தி செய்கின்றவையாக, தீர்மானிக்கின்றவையாக இந்த பிரக்ஞையின்மையானது இருக்கின்றது (Miller, J. G.).. இதனால்தான் நமது நினைவுகள் என்பவை பிரக்ஞையின்மையால் மிகவும் அலைக்கலைக்கப்படுகின்றது. இதேநேரம் பிரக்ஞை (consciousness) என்பது ஒழுங்கமைக்கப்பட்ட நினைவுகளின் அடிப்படையிலையே தீர்மானங்களை எடுக்கின்றது போதும், பிரக்ஞையின்மையைப் போல, பிரக்ஞையும் பல விடயங்களை அடக்கியும் ஒடுக்கியும் சமூகத்திற்கு ஏற்றவகையில் சமரசமாக வாழ மனித வாழ்வை தீர்மானிக்கின்றன என்கின்றனர் (Jung, 282)..

 

மேற்குறிப்பிட்ட மனிதர்களுக்குள்  நடைபெறுகின்ற, அடக்குதலும் (suppression) ஒடுக்குதலும் (repression) என்பது அடிப்படையில் ஒன்றேயானபோதும் இவற்றுகிடையிலான வேறுபாடு என்பது அவை எந்தளவிற்கு பிரக்ஞையுடன் (consciousness) செயற்படுத்தப்படுகின்றது என்பதற்கான வித்தியாசமே என்கின்றனர் (Boag 165> 168). இதில் சுய ஓடுக்குதல் என்பது பிரக்ஞையின்மாயாகவே (unconsciousness) நடைபெறுகின்றது எனவும் ஆனால் சுய அடக்குதல் என்பது பிரக்ஞையுடன் (consciousness) நடைபெறுகின்றது எனவும் கூறுகின்றனர் (Boag 164). அதேவேளை, நமது சுய ஒடுக்குதலும் (repression) அடக்குதலும் (suppression)  மனித பிரக்ஞை செயற்படாது இருப்பதற்கு முதன்மையான அடிப்படைக் காரணிகளாகவும் இருக்கின்றன. ஏனனில், மன விடயங்கைள பிரக்ஞைக்கு வரவிடாது தடுப்பதே இவற்றின் அடிப்படையான பொதுவான செயற்பாடுகள் (Boag, 168). இதேவேளை பிரக்ஞையின்மை…பிரக்ஞை, அடக்குதல்…ஒடுக்குதல்,  மற்றும் உள்…வெளி … போன்ற இவ்வாறான பல பிரிவுகள் உண்மையிலையே தனித்தனி பிரிவுகள் அல்ல. இவை ஒரு கோட்டின் இரு முனைகள் கொண்ட தொடர்ச்சியாகவே (continum) இருக்கின்றது என்பதையும் கூறுகின்றனர் (Boag, 169). இதனால்தான் மேற்குறிப்பிட்டவற்றை, “இது தான்” என உறுதியாக வரைவிலக்கணப்படுத்துவதில் பல சிக்கல்களை ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் தொடர்ச்சியாக எதிர்நோக்குகின்றனர்.

ஒருபுறம், ஜேனட் (Pierre Janet) என்பவரைப் பொறுத்தவரை மனித உளவியல் செயற்பாடுகளை ஒருங்கினைக்க முடியாதளவிற்கு மனிதப் பிரக்ஞையானது (consciousness) பலவீனமானதாக இருக்கின்றது என்கின்றார்.  மறுபுறம் பிரட் (Freud) மனதிற்குள் நடைபெறும் போட்டிபோட முடியாத சில போக்குகளை மனித பிரக்ஞையானது அடக்கிவிடுகின்றளவிற்கு பலமானது என்கின்றார் (Jung, 277). இவை இரண்டுக்கும் ஆதாரமாக பல மனித நடத்தைகளின் உதாரணங்கள் இருக்கின்றன. அதேவேளை  தன்முனைப்பான (ego) செயற்பாட்டை பிரக்ஞையின்மையானது (unconsciousness) மேற்கொள்ளக் கூடியளவிற்கு ஆற்றலுடையதாக இருக்கின்றது. இதன் விளைவாகவே ஒருவர் மனக் குழப்பதற்கு உருவாகின்றார் என்கின்றார் யங் (Jung). இதற்குக் காரணம் பிரக்ஞையின்மையானது ஒருங்கினைக்கப்டாத ஒழுங்கமைக்கப்படாத செயற்பாட்டையே பொதுவாக முன்னெடுக்கின்றமையாகும். இதனால்தான் பொதுவாக மனிதர்கள் முரண்பாடானதும் தன்னிச்சையானதுமான செயற்பாடுகளிலும்  பிரக்ஞையின்றி ஈடுபடுகின்றனர். இது மன நோயளர்களுக்கு மட்டும் பொருத்தமான ஒன்றல்ல. இவ்வாறான ஒரு பாதிப்புக்கு அநேகமாக அனைத்து மனிதர்கள் மட்டுமல்ல குழுக்கள் மற்றும் முழு தேசமுமே உட்பட்டு செயற்பட முடியும் என்கின்றார் யங் (Jung, 278). அதாவது பிரக்ஞையின்மையாக ஒருவர் செயற்படுகின்றார் என்பதை, மனம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரைவிட, சதாரண ஒரு மனிதர் அதிகமாக உறுதிப்படுத்துகின்றார் என்கின்றார் யங் (Jung 280).

 

இதேபோல் மனிதர்களில் எப்பொழுது உணர்ச்சிகள் (emotions) ஆரம்பிக்கின்றனவோ, அப்பொழுது அவர்களின் பிரக்ஞையின்மையின் (unconsciousness) தன்னிச்சையான சுயாதிக்க செயற்பாடும் ஆரம்பிக்கின்றது. ஏனனில் உணர்ச்சிகள் என்பவை உள்ளுணர்வுசார்ந்தவை. அதுவாகவே உருவாகின்றவை. இவற்றின் ஆக்குரோசமான வெளிப்பாடனது பிரக்ஞையின் பகுத்தறிவை குழப்பத்திற்குள்ளாக்கும் என்கின்றார் (Jung 278). ஆகவே, இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் திட்டமிட்டு ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்படுபவையல்ல. இவை சாதாரணமாகவே நடைபெறுகின்ற ஒன்றாகும். ஆனால் இவ்வாறான அன்பு, வெறுப்பு, கோவம், இன்பம், துன்பம் போன்றவை தன்முனைபையும் பிரக்ஞையின்மையையும் தமக்கு விரும்பிய படி செயற்பட வைக்கக் கூடியவை என்பதை நாம் உள்வாங்க வேண்டிய ஒரு சுழலில் வாழ்கின்றோம்.

 

இதேநேரம் பிரக்ஞையின்மையானது பிரக்ஞையுடன் எந்தவிதமான முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தாது கூட்டினைந்தும் செயற்படுகின்றது. இதனால்தான் பிரக்ஞையின்மையின் இருப்பைபற்றி (existence of unconsciousness) நாம் கவனமின்றி இருக்கின்றோம். நாம் நமது உள்ளுணர்வுகளிலிருந்து வெகுதொலைவுக்கு சென்றுவிடுவோமாயின் அப்பொழுது பிரக்ஞையின்மையின் முழுமையான பாதிப்பை தாக்கத்தை அனுபவிக்கலாம் என்கின்றார் யங் (Jung,  282). பிரக்ஞையுடனான இக் கூட்டு என்பது பிரக்ஞையின்மை தன்னுடைய இருப்பை நிலைநாட்டுவதற்காகவே பயன்படுத்துகின்றது. ஆகவேதான் நமது பிரக்ஞையின்மைக்கு, அதாவது நாம் பிரக்ஞையின்மையாக இருப்பதற்கும், அவ்வாறு செயற்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன. அதேபோல் பிரக்ஞையின் செயற்பாடுகளுக்கு நோக்கங்களும் இருக்கின்றன என்கின்றனர் (Macintyre, 86)

பிரட் மனிதர்களை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து அவற்றுக்கிடையாளான முரண்பாடுகளினுடாகவும் மற்றும் அதற்கான காரணங்களை (cause) அறிவதிலுமே அக்கறை செலுத்தினார் (Jung, 609). ஆனால் இதேவேளை பிரட்டின் காலத்தில் இவரது தாக்கத்திற்கு உட்பட்டும் சுயாதினமாகவும் தனிமனித உளவியல் தொடர்பாக ஆராய்ந்த அல்பரட் அட்லரின் (Alfred Adler) ஆய்வுகள், பிரக்ஞையின்மை தொடர்பான ஆய்வில் முக்கியமானவை. இவர் தனிமனித உளவியல் பற்றியே அதிகமாக அக்கறை கொண்டவராகவும்,  மனிதர்களை மனம்-உடல் என ஒன்றினைந்த பிரிக்கமுடியாத ஒன்றாகவும், மற்றும் மனித உளவியல் செயற்பாட்டின் நோக்கங்களை (intentionality) அறிவதிலுமே அக்கறையாக இருந்துள்ளார். குறிப்பாக மனிதகளிடம் உள்ளார்ந்து இருக்கின்ற தாழ்வுச் சிக்கல் (inferiority complex) மற்றும் மற்றவர்களை விட பெரியவராக நினைக்கும் சிக்கல் (superiority complex) தொடர்பான இவரது ஆய்வுகள் முக்கியமானவை (Ellenberger,  604-9).. இவர் பிரட்டை போல மனிதரை புரிந்து கொள்வதற்கு அகக் காரணிகளை மட்டும் ஆராயாது சமூக காரணிகளையும் ஆராய்ந்தமை முக்கியமானது. மேலும் மனிதர்கள் சுயாதினமாக முடிவெடுத்து செயற்படும் ஆற்றல் உள்ளவர்கள் என்றபோதும், சமூகம் அல்லது பிரபஞ்சத்திலிருந்து விடுபட்டு தனித்து இயங்க முடியாது எனவும் இவற்றின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களாவே இருக்கின்றார்கள் என்கின்றார். இதனால், கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல சமூகத்தை மாற்றுவதன் மூலம் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றலுடையவர்களாக மனிதர்கள் இருந்தபோதும், தமது செயற்பாடுகளின் விளைவாக முன்வைக்கப்படும் எதிர் செயற்பாடுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி உள்ளார்கள் (Ellenberger, 610). இவ்வாறன எதிர் செயற்பாடுகளுக்கு தமது மனநிலையைப் பொறுத்து நேரடியாகவே மறைமுகமாகவோ எதிர் வினைக்கு மீள எதிர்வினையாற்றுகின்றார்கள். இவ்வாறு எதிர்வினையாற்றுகின்றமை முடிவின்றி தொடர்ச்சியாக பிரக்ஞையின்மையுடன் நடைபெறுகின்றது.

மேற்குறிப்பிட்ட  பிரக்ஞையின்மை, பிரக்ஞை ஆகியவற்றின் ஆதிக்கம் கொண்ட மன செயற்பாட்டை அல்லது மனித உளவியலை பின்வருமாறு சுருக்கமாக கூறலாம். தனி மனிதர்கள் தமது  இயல்பான தேவைகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொழுது அவை பல்வேறு காரணங்களால் தடைப்படலாம். இது குறிப்பிட்ட மனிதரின் ஆளுமையைப பொறுத்து நிறைவு செய்யப்படும். தனது நோக்கத்தை தனது பலத்தினால் நிறைவு செய்தவர் தான் அறத்தை மீறியதற்காக குற்ற உணர்வில் கஸ்டப்படலாம். பலம் இல்லாதவர் தனது தனது தேவையை நிறைவு செய்யாது அடக்கி ஒடுக்கி விடலாம். ஆனால் இவர்களது இந்த பிரக்ஞையின்மையான செயற்பாட்டின் விளைவை வேறு ஒரு தளத்தில் பிரக்ஞையின்மையுடன் மீண்டும் வெளியேற்றுவார்கள். இவ்வாறு வெளியேற்றுகின்றபோது அதை வெளியேற்றுபவருக்கும் அதை எதிர்நோக்குகின்றவருக்கும் இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது என்பதை அறியாதவர்களாகவே இருப்பர். ஆனால் இப் புதிய தளத்தில் சந்திக்கும் மனிதர்களின் தன்முனைப்புகள் பாதிக்கப்படுமாயின் இவர்களின் பலம் பலவீனத்தைப் பொருத்து இதன் பாதிப்புகள் இன்னுமொரு புதிய தளத்தில் பிரக்ஞையின்மையுடன் மீண்டும் தொடரும். இப்படித்தான் மனித வாழ்வு காரணங்கள் தெரியாத பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு தொடர்கின்றது.

நாம் உலத்திற்கும் பிரக்ஞைக்கும் இடையிலான உறவு பற்றி அறியாமலிருப்பதற்கு காரணம் நாம் பிரக்ஞையற்று இயந்திரத்தனமாக செயற்படுவதனாலாகும் (Lachman, 173). துரதிர்ஸ்டவசமாக பிரக்ஞையின்மை என்பது உண்மையிலையே பிரக்ஞையின்மைதான். ஏனனில் இது தெரியாத அறியதா ஒன்றாகவே இருக்கின்றது (Jung, 287). உண்மையிலையே அறிய முடியாதா? முடியும். ஆதற்கு நாம் நமது பிரக்ஞையின்மை தொடர்பாக வழிப்பாக இருப்பது, அதாவது பிரக்ஞையாக இருப்பதே இவ்வாறன இயந்திரதனமான  பிரக்ஞையின்மையான வாழ்விலிருந்து விடுபடுவதற்கு ஒரு வழி (Lachman, 174). ஆனால் பிரக்ஞையின்மை தொடர்பாக மட்டும் பிரக்ஞையாக இருப்பது போதாது என்கின்றார் யங். இவரைப் பொறுத்தவரை கூட்டுப்பிரக்ஞையின்மை (collective unconsciousness) தொடர்பாகவும் நாம் பிரக்ஞையுடன் (consciousness) இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என்கின்றார். ஆகவே கூட்டுப் பிரங்ஞை தொடர்பாக அடுத்த பகுதியில் பார்ப்போம்.

மீராபாரதி

12.12.11

 

Lachman, G. A secret history of consciousness.

Jung, C.G. (1968). The Archetypes and the Collective Unconscious 2nd ed. vol.9.

Ellenberger,  H. F. (1970). The Discovery of the Unconscious – The Histroy and Evolution of Dynamic Psychiatry.

Davidson, R.The Psychobiology of consciousness.

Macintyre, A.  The unconscious – a conceptual analysis revised edition –1958/2004

Miller, J.G. Unconsciousness. New York: John Wiley and Sons, 1942.

Boag, S.  Repression, Suppression, and Conscious Awareness. Psychoanalytic Psychology, 2010, Vol. 27, No. 2, 164–181

Chalmers, D.J. (1996). Conscious Mind, In Search of a Fundamental Theory.

Brill, A.A. (1995). The basic writing of Sigmund Freud.

Freud, S. (2005). The Unconscious

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: