Posted by: மீராபாரதி | December 4, 2011

(கூட்டுப்) பிரக்ஞையின்மை – ஒரு (சுய) பரிசோதனை…-பகுதி ஒன்று

(கூட்டுப்) பிரக்ஞையின்மை – ஒரு (சுய) பரிசோதனை…

இனிவரும் காலங்களில் சமூகமாற்றத்திற்கான அரசியலுக்காக தம் தம் துறைகளில் செயற்பட விரும்புகின்றவர்கள் மூன்று வகையான செயற்பாடுகளை கருத்தில் எடுப்பது அவசியமானது என நினைக்கின்றேன். இவை நிபந்தனைகளாக இருக்கவேண்டுமா என்பதைப்பற்றி நாம் ஆராயலாம்.  முதலாவது தமது கடந்த கால கோட்பாடுகள், தத்துவங்கள், மற்றும் செயற்பாடுகள், நடத்தைகள் (பழக்கவழக்கங்கள்) தொடர்பான முழுமையான (சுய) விமர்சனத்;தை முன்வைத்தல். இரண்டாவது சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாட்டை தமது முழுநேர தொழிலாக கொண்டு தம் தம் துறைகளில் செயற்பட தம்மை முழுமையாக அர்ப்பணித்தல்;. மூன்றவாதும் முக்கியமானதும் தமது (கூட்டுப்) பிரக்ஞையின்மை (collective) (unconsciousness)  தொடர்பான புரிதலைக் கொண்டிருப்பதற்கு முயற்சித்தலும் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவதற்காக தமது பிரக்ஞையை (Awareness/ Consciousness) வளர்ப்பதில் அக்கறை செலுத்துவதுமாகும். இவை மூன்றையும் செய்யத் தவறுவோமாயின் நாம் மீண்டும் மீண்டும் ஒரு வட்டத்திலையே சுற்றிக்கொண்டிருப்போம் என்பதை புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். இவை தொடர்பாக அக்கறையற்றும் பொறுப்பற்றும் இருக்கின்ற நமது பண்பானது மீண்டும் புதிய தலைமுறையினருக்கு நம்பிக்யைற்ற ஒரு எதிர்காலத்தையே விட்டுச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பதை, எனது உறுதியானதும் ஆணித்தரமானதுமான நிலைப்பாடும் புரிதலும் எனக் குறித்துக்கொள்ளவிரும்புகின்றேன். இங்கு நமது பிரக்ஞையின்மை மற்றும் கூட்டுப் பிரக்ஞையின்மை என்றால் என்ன என்பதை நான் புரிந்ததன் அடிப்படையில் ஒர் அறிமுகமாக விளக்குவதற்கு முயற்சிக்கின்றேன். நம் மீதான நமது பிரக்ஞையின்மை மற்றும் கூட்டுப் பிரக்ஞையின்மை ஆகியவற்றின் ஆதிக்கத்தை நாம் புர்pந்து கொள்ளாதவரை நாம் நம்மில் மட்டுமல்ல சமூகத்திலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது எனக் கூறினால் தவறில்லை.

பிரக்ஞையின்மை மற்றும் கூட்டுப் பிரக்ஞையின்மை தொடர்பான இந்த பகுதியை ஆரம்பிப்பதற்கு முன்பு, ஒரு (சுய) பரிசோதனை மூலமாக (கூட்டுப்) பிரக்ஞையின்மையை என்ன என்பது தொடர்பான ஒரு அனுபரீதியான புர்pதலை நீங்கள் பெற்றுக் கொள்வது நல்லது. இவ்வாறன ஒரு சுய பரிசோதனையில் இக் கட்டுரைகளை வாசிப்பவர்கள் அனைவரும் பங்குபற்றுவது நல்லது. இந்தப் பரிசோதனையில் வெற்றி தோல்வி என்பதல்ல முடிவு. மாறாக நம்மையும் நமது செயற்பாடுகளையும் மற்றும் நமது பிரக்ஞை(யின்மை) என்பவற்றைப் புரிந்துகொள்தவற்கான ஒரு வழிமுறையே இது. இதைப் புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே இன்றைய நமது உடல், மன, மற்றும் நடத்தைகள் தொடர்பான நிலைகளைப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான நேர்மறையான செயற்பாடுகளை நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் செயற்படுத்தலாம் என்பது எனது புரிதல். இதுவே தொடர்ந்து வரும் நம் வாழ்வின் கணங்களை (எதிர்காலத்தை) ஆரோக்கியமானதாக மாற்றியமைக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. இவ்வாறான பரிசோதனையில் இருக்கின்ற முரண்நகை என்னவென்றால், பிரக்ஞையின்மையை அறிந்து கொள்வதற்காக பிரக்ஞையைப் பயன்படுத்துவதுதான். அதாவது பிரக்ஞை என்பதை அனுபவபூர்வமாக அறிவதற்கு அல்லது உணர்வதற்குப் பயன்படுத்துகின்ற உள்நோக்கிய பார்வையே (introspection) பிரக்ஞையின்மை தொடர்பாகவும் அறிவதற்கு அல்லது உணர்வதற்கு இருக்கின்ற ஒரே வழி. பரிசோதனையடிப்படையில் இது சாத்தியமானதே என்கின்றனர் (Miller, J. G.). இவ்வாறு அறிந்து கொள்வது என்பது ஒரு விஞ்ஞான வழிமுறையே. அதேநேரம் நமது பிரக்ஞையற்ற செயற்பாடுகைள நம்மிலிருந்து விடுவிப்பதற்கும் நாம் பிரக்ஞையாக வாழ்வதற்குமான வழியையும் இச் சுய பரிசோதனை உருவாக்குகின்றது. இப்பொழுது சுய பரிசோதனைக்குச் செல்வோம்.

முதலாவது பரிசோதனை. கையில் கடிகாரம் கட்டுபவர்களுக்கு இது பொருத்தமானது. சிலர் வழமையாக கை கடிகாரத்தை தமது  இடது கையிலோ அல்லது வலது கையிலோ தான் கட்டுவார்கள்;. இப் பரிசோதனைக்காக, ஒரு மாறுதலுக்காக, வழமையான கையில் கடிகாரத்தைக் கட்டாமல் மற்ற கையில் கட்டுங்கள். உதாரணமாக வழமையாக இடது கையில் கடிகாரத்தைக் கட்டும் பழக்கம் உள்ளவர்கள் வலது கையில் கட்டுங்கள். மற்றர்கள் இதன் மறுதலையை செய்யுங்கள். இவ்வாறு ஒரு நாள் காலையில் செய்த பின், அக் கணத்திலிருந்து, அன்று இரவு நித்திரைக்குப் போகுவரை, நேரத்தைப் பார்ப்பதற்கு எத்தனை தரம் கடிகாரம் கட்டியிருக்கும் கையைப் பார்க்காது, வழமையாக எந்தக் கையில் கடிகாரம் கட்டப்பட்டிருந்ததோ அந்தக் கையை நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதைக் கவனியுங்கள். அதாவது, எத்தனை தரம் பிரக்ஞைபூர்வமாக (consciousness) கடிகாரம் கட்டிய கையைப் பார்த்தீர்கள் என்பதையும், பிரங்ஞையற்று (unconsciousness) கடிகாரம் கட்டாத கையை எத்தனை தரம் பார்த்தீர்கள் என்பதையும் கணக்கில் எடுங்கள். இச் சுய பரிசோதனையானது, எமது நாளாந்த வழமையான செயற்பாடுகளில், நாம் எந்தளவு பிரக்ஞையற்று இயந்திரதானமாக செயற்படுகின்றோம் என்பதனை ஆதாரபூர்வமாக நமக்கு புரியவும் வைக்கும்;.

இதேபோல் கடிகாரத்தை கையில் கட்டியிருப்பவர்கள் நேரத்தைப் பார்க்கும் பக்கத்தையும் மாற்றி வைத்து சுய பரிசோதனையில் ஈடுபடலாம். அதாவது சிலர் கடிகாரத்தின் முள்ளுகள் உள்ளங்கையைப் பார்க்கக் கூடிய பக்கத்தில் தெரியும்படியே கட்டியிருப்பர் இருப்பர். இதற்குமாறாக, சிலர் புறக்கைப் பக்கமாக அதாவது கையைத் திருப்பி கடிகார முள்ளுகளைப் பார்க்கும்படியே கட்டியிருப்பர். இப் பரிசோதனைக்காக, இந்தப் பக்கங்களையும் மாற்றிவைத்து செய்து பார்க்கலாம். அல்லது வழமையாக கடிகாரம் கட்டுகின்றவர்கள் ஒரு நாளைக்கு கட்டாமல் இருந்தும் இச் சுய பரிசோதனையை செய்து பார்க்கலாம்;.

கடிகாரம் கட்டுகின்ற பழக்கம் இல்லாதவர்கள் பின்வருகின்ற பரிசோதனையைச் செய்யலாம். காலையில் எழும்பியவுடன் தாம் வழமையாக ஒரு பொருளை எந்த இடத்திலிருந்து எடுக்கின்றோமோ அதை அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு, இரவு நித்திரைக்குப் போவதற்கு முதல், மாற்றிவையுங்கள். காலை எழுந்தவுடன் குறிப்பிட்ட பொருளை எடுப்பதற்கு என்ன செய்கின்றீர்கள் என்பதைக் கவனியுங்கள். இதேபோல் வேலையிலிருந்து விட்டுக்கு வந்தவுடன், வழமையாக என்ன செய்வீர்களோ அதற்காக எந்தப் பொருளைப் பயன்படுத்துவீர்களோ அதில் ஒரு (இட) மாற்றத்தை செய்து விட்டு வேலைக்குச் செல்லுங்கள். மாலை வேலையால் வந்தவுடன் என்ன செய்கின்றீர்கள் என்பதைக் கவனியுங்கள். இப்படி நமது வழமையான செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நாம் பிரக்ஞையின்மையால் எந்தளவு ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளோம் என்பதை சுய பரிசோதனை ஒன்றின் மூலம் புரிந்து உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறன சுய பரிசோதனையில் நாங்கள் எதைச் செய்தாலும் நிச்சயமாக பிரக்ஞையற்று வழமையாக செய்கின்ற செயற்பாட்டைத்தான் செய்வோம். இதேநேரம் தன்முனைப்பு அதிகம் இருப்பவர்கள் தாம் தோற்றகக் கூடாது என்பதற்காக மட்டும் மிகவும் கஸ்டப்பட்டு குறிப்பிட்ட செய்றபாட்டில் குறியாகவும் (concentrate) கவனத்துடனும் (attentive) இருந்து புதிய மாற்றத்தை பின்பற்றிக் கவனிப்பார்கள். ஆனால் இருவருக்கும் இவ்வாறு தமது செய்பாடுகளை தாமே கவனிப்பது ஒரு புதிய அனுபவமே என்றால் மிகையல்ல. ஏனனில் பிரக்ஞையற்று செய்பவர் தான் எந்தளவு பிரக்ஞையற்று இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளுவார். மற்றவர்கள் தமது பிரக்ஞை தொடர்பான குறுகிய நேர அனுபவத்தைப் பெறுவார்கள்.

இதேபோல் இன்னுமொரு பரிசோதனையை முயற்சித்துப் பாருங்கள். நாம் வழமையாக பேருந்திலோ புகையிரதத்திலோ பயணம் செய்பவர்கள். இவ்வாறு பயணம் செய்யும் பொழுது ஆண் பயணிகள் தாம் எவ்வாறு இருக்கையில் பிரக்ஞையற்று இருக்கின்றோம் என்பதை பிரக்ஞையுடன் கவனியுங்கள். நமது கால்களை அகல விரித்துக் ;கொண்டு அதிகாரத்துவத்துடன் வீற்றிருப்போம். இவ்வாறு நாம் இருப்பது என்பது நமது பிரக்ஞையின்மையில் ஆண்டாண்டு காலமாக புதைந்திருக்கின்ற ஆணாதிக்க மனோபாவம்தான் என்றால் மிகையல்ல. இதனைத்தான் நாம் பிரக்ஞையற்று நமது இருக்கின்ற நடத்தையுடாக வெளிப்படுத்துகின்றோம். இதே பயணி ஒரு பெண் ஆக இருப்பின் நீங்கள் எப்படி இருக்கையில் இருக்கின்றீர்கள் என்பதைக் கவனியுங்கள். வழமையாக இரண்டு கால்களையும் ஒடுக்கிக் கொண்டு பதுங்கி இருப்பதைக் கவனியுங்கள். இது பெண்களுக்கு பல்லாண்டு காலமாக ஊட்டப்பட்ட அவர்கள் மீது கட்டமைக்கப்பட்ட பெண்ணடிமைத்தன பண்புகள். இதைத்தான் அவர்கள் பிரக்ஞையற்று வெளிப்படுத்துகின்றார்கள். இவ்வாறன நடத்தைகளைதான் உண்மையிலையே நமது அசாதாரண பண்புகள் எனக் கூறுகின்றனர். ஆனால் நாம் இவற்றைத்தான் சாதாரண பண்புகளாகவே ஏற்று உணர்ந்து பின்பற்றுகின்றோம். ஆகவே இவ்வாறு பயணிக்கும் பொழுது, தாம் வழமையாக எப்படி இருக்கின்றோம் என்பதை பிரக்ஞையுடன் கவனிக்கும் ஆணும் பெண்ணும், தமது பிரக்ஞையற்ற நடத்தைகளில் பழக்கவழக்கங்களில் ஒரு மாறுதலை செய்யுங்கள். இந்த மாறுதல் என்பது உடனடியாக மறுமுனைக்குச சென்று எதிர்வினையாற்றுவதல்ல. அதாவது ஆண்கள் காலை ஒடுக்கியும் பெண்கள் கால்களை விரித்தும் இருப்பதல்ல. மாறாக நமக்கு உரிய இருக்கையின் வெளியில் அதன் அளவிற்கு ஏற்ப நமது கால்களை அதிகாரத்துவத்துடன் விரிக்காமலும் அடிமைத்தனத்துடன் ஒடுக்காமலும் சதாரணமாக இருக்க பிரக்ஞையுடன் முயற்சித்துப் பாருங்கள். இவ்வாறான ஒரு முயற்சியில் நமக்குள் ஏற்படும் மாற்றத்தை பிரக்ஞையுடன் கவனியுங்கள்.

மேற்குறிப்பிட்ட பரிசோதனையைப் பின்பற்றியவர்கள் மேலும் கொஞ்சம் ஆழமான பரிசோதனையில் ஈடுபட அடுத்த சுய பரிசோதனையைச் செய்யலாம். முதலாவதாக சதாரணமாக தம்முள்ளே வந்;துபோகின்ற தமது மூச்சை ஒரு நிமிடமாவது பிரக்ஞைபூர்வமாக கவனியுங்கள். இவ்வாறு கவனிக்கும் அந்த ஒரு நிமிடப் பொழுதில் கூட நமது கவனம் மன எண்ணங்களால் திசை திருப்பப்படுவதைக் கவனியுங்கள். நாம் பிரக்ஞையற்று மன எண்ண ஓட்டங்களின் பின்னால் செல்வதைக் கவனியுங்கள். இரண்டாவதாக தமது மன எண்ணங்கள் மற்றும் உடல் உணர்வுகள் தொடர்பான பரிசோதனையைச் செய்யலாம். ஊதராணமாக நாம் ஒருவரைப் பார்த்தவுடன் பாலியல் ரீதியாக கவரப்படுகின்றோம் எனின் அக் கணத்தில் நம் மனதிற்க்குள் ஏற்படுகின்ற எண்ணங்களையும் உடலுக்குள் உருவாகின்ற உணர்வுகளையும் கவனியுங்கள். இதேபோல் வேறு இன, மத, சாதியைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டபின் நம் மனதில் உருவாகின்ற எண்ணங்களைக் கவனியுங்கள். இவ்வாறன எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் என்ன நடைபெறுகின்றது என்பதைக் கவனியுங்கள். அல்லது நாம் பிரக்ஞையற்று என்ன செய்கின்றோம் என்பதைக் கவனியுங்கள். இவ்வாறன மன எண்ணங்கள் மற்றும் உடல் உணர்வுகள் எல்லாவற்றையும், குறிப்பிட்ட சூழல், கலாசாரம், பண்பாடுகளுக்கு ஏற்ப பிரக்ஞையற்று உடனடியாக அடக்கி ஒடுக்கி விடுவோம். இது  நமக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள். அதாவது தனிப்பட்ட இரகசியங்கள். ஆனால் துரதிர்ஸ்டவசமாக இவை தொடர்பான பிரக்ஞை நமக்கு வழமையாக இருப்பதில்லை. ஆனால் இவ்வாறு கவனிக்கும் பொழுது மட்டுமே உணர்ந்து புரிந்துகொள்ளலாம்.

இதன் மறுதலைதான் கூட்டுப்பிரக்ஞையின்மை. இது அனைவருக்கும் தெரிந்த செயற்பாடு. அதாவது நாம் தனிமையில் இருக்கின்ற போது செய்யாத விடயங்களை கூட்டாக இருக்கின்றபோது எந்தவிதமான தயக்கமுமின்றி பிரக்ஞையற்று கூட்டாகச் செய்வோம். ஊதாரணமாக பொதுக் கூட்டங்களிலும் மற்றும் விளையாட்டுக் களங்களில் கூச்சல் போடுவது சண்டையிடுவது ஆடுவது பாடுவது என்பவையாகும். இவை நமது பொதுவான இயல்பையும் மீறி பெரும்பாலும் கூட்டாக இருக்கின்ற பொழுது மட்டுமே வெளிப்படுகின்ற நமது பிரக்ஞையற்ற செயற்பாடுகளாகும். நமது (கூட்டுப்) பிரக்ஞையின்மை தொடர்பாக விரிவாக மேலும் பல விடயங்களை இனிவரும் கட்டுரையில் பார்ப்போம்.

நாம் பிரக்ஞையுடன் வாழ்வதற்கு, முதலில் நாம் பிரக்ஞையற்று வாழ்கின்றோம் என்பதை அறிந்து புரிந்து உணர்ந்து கொள்வது முக்கியமான ஒன்றாகும். இவ்வாறான ஒரு புர்pதல் சமூகமாற்றத்தை நோக்கிய அரசியல் செயற்பாட்டில் மிகவும் அவசியமானதாகும். அப்பொழுதுதான் கடந்தகால அல்லது பழைய தவறுகளை மீளவும் வீடாது, மிகக் குறைந்த தவறுகளை அல்லது புதிய தவறுகளை மட்டுமே விட்டுக்கொண்டு ஆரோக்கியமான செயற்பாடுகளுடன் முன்னேறிச் செல்லாம்.

இறுதியாக மேற்குறிப்பிட்ட சுய பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த அனுபவங்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். ஆனால் இப் பரிசோதனையில் கிடைத்த அனுபம் என்பது முக்கியமானது. இவ்வாறன பரிசோதனையை தொடர்ச்சியாகவும் மீண்டும் மீண்டும் செய்வோமாயின் நாம் பிரக்ஞையற்று இயந்திரமாக செயற்படுவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு பிரக்ஞையுடன் வாழ்வதற்கான வழியை உருவாக்கும்.

மீராபாரதி

01.12.2011

Advertisements

Responses

  1. i want to test myself… can you give self experiment question in TAMIL
    more


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: