Posted by: மீராபாரதி | October 31, 2011

பிரக்ஞை – புரியாத புதிரா?- பகுதி இரண்டு…

பிரக்ஞை – புரியாத புதிரா?- பகுதி இரண்டு…

 

ஒரு புறம் பிரக்ஞை அல்லது ஆன்மா தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்ற நிலைப்பாடு (idealism) உடைய இலட்சியவாதிகள் (idealist) மறுபுறம் பருப்பொருளே (matter) எல்லாவற்றுக்கும் அடிப்படை என்கின்ற பொருள்முதல் வாதிகள் (materialist). இவ்வாறான பார்வைகளை ஒரு துருவ (monism) பார்வை அல்லது ஒரு பொருண்மைவாதம் எனக் கூறுவர். இந்த இரண்டு எதிர்முனைகளையும் இணைக்கும் விதமாக, நவீன தத்துவத்தின் பிதாமகர் எனக் கூறப்படுகின்ற பிரஞ்சு தத்துவவியளாலர் டேஸ்காட் (Rene Descartes 1596-1650) என்பவர், மனம் உடல் (mind-body) என்ற இருமை வாதத்தை ஒரு கோட்பாடாக (Dualism) முதன் முதலில் முன்வைத்தவர் எனலாம் (Mishlove,  59; Velmans 14). “நான் சிந்திக்கின்றேன், ஆகவே நான் இருக்கின்றேன்” (I think; therefore I am) என்பது இவரது பிரபல்யமான வசனம். இது ஒருவர் தனது சுய இருப்பை, தனது சுய பிரக்ஞையின் ஊடாக மட்டுமே நிச்சயப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படையாக இருக்கின்றது எனக் கூறுகின்றார் (Velmans 14).  இது மிருகங்ககளுக்கு இல்லை எனவும் ஆகவே மனிதர்கள் மிருகங்களிலிருந்து வேறுபட்ட உயிரினம் என்கின்றார்.

 

மேலும் டேஸ்காட் (Descartes) பிரக்ஞையை மனம் அல்லது ஆன்மாவுடன் அடையளப்படுத்துகின்றார். மனித ஆன்மா அல்லது மனம் என்பது மனித உடலிலிருந்து முற்றிலிரும் வேறுபட்ட பொருளற்ற (non-matter) ஒரு பரிணமானம் எனகின்றார் (Blackmore,  4; Papineau & Selina, 26). ஆனால் இவை இரண்டும் மூளையில் ஒன்றினைகின்றன என்கின்றார்;. அதாவது, குறிப்பாக ஆன்மாவானது  பைனல் கிளான்டினுடுhக (pineal gland) மூளைக்குள் புகுந்து மனித செயற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றது என்கின்றார் (Dennett, 34; Carter; Blackmore,  4; Papineau & Selina, 29). இவ்வாறு பிரக்ஞையை மூளையுடன் இணைப்பதற்கு இவர் அடிப்படையிலையே பொருள்முதல் வாதியாக இருப்பதும் ஒரு காரணமாகும். ஏனனில், பருப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நமது புலன்களில் உருவாக்கும் ஒரு தோற்றப்பாடுதான்,  நாம் பார்க்கின்ற நிறங்கள், கேட்கின்ற சத்தங்கள் மற்றும் மணம் என்பவை என்கின்றார். அதேவேளை, மனிதர்களது மட்டுமல்ல மிருகங்களது மூளையின் செயற்பாடுகளும்  வெறும் இயந்திரத்தனமான செய்றபாடுகள் என இவர் கூறியபோதும், சில மனித ஆற்றல்களை இவ்வாறு இயந்திரத்தனமான பார்வையில் விளங்கப்படுத்த முடியாது எனவும் கூறுகின்றார் (Velmans 12). அதாவது, ஆன்மா அல்லது பிரக்ஞையை விளங்கப்படுத்த முடியாது என்கின்றார். ஆனால் உடலின் செயற்பாட்டை மட்டுமே இயந்திரத்தனமான பார்வையில் விளங்கப்படுத்த முடியும் என்கின்றார்.

 

பிரக்ஞை இருப்பதை புரிந்து அல்லது உணர்ந்து கொள்ளக் கூடிய, சிந்தனைகள், உணர்ச்சிகள், மகிழ்ச்சி, மற்றும் வலிகள் என்பன பருப்பொருளில் உள்ளார்ந்து இருப்பவையல்ல. இது மட்டுமின்றி, பருப்பொருளுக்கிருக்கின்ற தன்மைகளான அளவுகள், உருவங்கள், மற்றும் இயக்கம் என்பனவும் இவற்றுக்கு இல்லை என்கின்றார் டேஸ்காட் (Descartes ) (Papineau & Selina, 27-28).  இவை இவ்வாறு வேறு தன்மைகள் கொண்டிருந்த போதும், மனமும் உடலும்  ஒன்றுடன் ஒன்று கலந்தும் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை நிகழ்த்துவதுடன் (interact) ஒருகினைந்தும் இயங்குகின்றன என்கின்றார். இதுவே நாம் பார்ப்பது, உணர்வது என்பன தொடர்பான தோற்றப்பாட்டை அல்லது மகிழ்ச்சியை, வலியை(நோவை)த் (pain) தருகின்றது (Mishlove, 59; Blackmore,  4). இருப்பினும், டேஸ்காட் (Descartes) இருநிலை கோட்பாட்டுக்கு (Dualism) அமைய பிரக்ஞை என்பது பருப்பொருளற்ற எண்ணங்களால் ஆனதும் உருவமற்றதும் என்கின்றார். மேலும், அவற்றுக்கு பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட இடம் (space) என ஒன்றுமில்லை என்கின்றார் (Velmans, 292).

 

டேஸ்காட்டின் (Descartes) இருமைவாதத்தை இலட்சியவாதிகளும் பொருள்முதல்வாதிகளும் தாக்கினர். இலட்சியவாதிகளான ஜோர்ஜ் பேர்கெலியை (George Berkeley) பொருத்தவரை பருப்பொருட்கள் என ஒன்றும் இல்லை. மனம் மட்டுமே இருக்கின்றது என்கின்றார் (Papineau & Selina 31). இக் கருத்தாக்கமானது ஜோன் ஸ்ட்டுவாட் மில் (John Stuart Mill) மற்றும் பேனாட் ரஸல் (Bertrand Russell) வரை, அதாவது 19ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது (Papineau & Selina, 33). இதற்குப் பின்பும் சிலரால் தொடரப்பட்டது. இவர்களது வாதம் ஒரு கல்லை இரண்டாக பிரிக்கும் பொழுது மீண்டும் இரண்டு கற்களே வருகின்றன. ஆனால் பிரக்ஞையுள்ள மனிதர்கள் மற்றும் மிருகங்களை இரண்டாகப் பிரித்தால் அவ்வாறு அல்ல. ஆகவேதான், இவர்களுக்கு பிரக்ஞை என்பது ஒரு பிரச்சனையல்ல. பருப்பொருட்களே பிரச்சனையானவை. அதாவது, பிரக்ஞையை எவ்வாறு பருப்பொருட்களுடன் இணைப்பது என்பதே இவர்கள் எதிர் நோக்கிய பிரச்சனை. ஆனால் 20ம் நூற்றாண்டில் தத்துவவியலாளர்களும் உளவியலாளர்களும் இலட்சிய வாதத்திற்கு எதிரான தமது நிலைப்பாட்டை நிறுவினர். இதை பார்ப்பதற்கு முதல் பொருள் முதல் வாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதைப் பார்ப்போம்.

 

பொருள்முதல்வாதிகளைப் பொருத்தவரை பருப்பொருட்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே ஒரு அனுபவம் என்பது மூளையிலுள்ள நியூரோன்களால் உருவாக்கப்படுகின்றது. இவை பார்க்கக் கூடியன என்கின்றனர் (Velmans, 292). ஆகவே பிரக்ஞை அல்லது மனம் என ஒன்று சுதந்திரமாக இல்லை என்கின்றனர் (Walker, 163). இதனால் பிரக்ஞை நிலை (Conscious states) என்பது மூளையின் ஒரு பௌதீக நிலை (physical brain states) என்கின்றனர். இதன் நீட்சியாகதான் மனிதர்களது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிககைளை மூளையின் ஒரு நிலையாகவே கருதுகின்றனர். இவர்களது ஆதிக்கமானது இயற்கையை அறிவதில் பிரக்ஞைப+ர்வமான சிந்தனையின் பாத்திரத்தை புறக்கணித்தே வந்தனர். இவர்களைப் பொறுத்தவரை பிரக்ஞை என்பது உடலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கின்றனர் (Papineau & Selina, 118). இவர்களுக்கு பருப்பொருள் என்பது பிரச்சனையான ஒன்றல்ல. ஆனால் எவ்வாறு பிரக்ஞையை பருப்பொருளுடன் இணைப்பது என்பதே இவர்களது கேள்வியாகவும் தேடலாகவும் இருக்கின்றது. ஏனனில், இன்று பிரக்ஞையை இவர்களால் புறக்கணிக்க முடியவில்லை.

 

ஐசக் நீயூட்டனின் (Isaac Newton) பௌதீகவியல் பார்iவியன் படி பருப்பொருளற்ற சக்திகள் இயக்குகின்றன என்பது இருமைவாதத்தை மேலும் வலுவூட்டியது எனலாம்.  ஊதராணமாக புவியிர்ப்பு சக்தி. இதுபோன்று வேறுபல சக்திகளான அணுச் சக்தி, மின்காந்த சக்தி, மற்றும் இரசாயண சக்திகளும் இருக்கலாம் என நம்பப்பட்டது (Papineau & Selina, 68). மறுபுறம் நீயூட்டனின் பிரபஞ்சம் தொடர்பான வெளி (Space), நேரம் (Time), பார்ப்பவர் (Observer) போன்றன தொடர்பான அனுமானங்காளானவை அவரது காலத்தில் புரட்சிகரமானவையாக விளங்கின. அதன் முக்கியத்துவம் பிரக்ஞை தொடர்பான ஆய்வில் இன்றியமைதவையாக இருந்தன. ஆனால் இந்த அனுமானங்கள் குவான்டம் கோட்பாட்டை நிறுவுவதற்கு போதமையானவையாகவும் மட்டுப்படுத்துபவனவாகவும் இருந்தன (Hobson, 122).  மறுபுறம் நீயூட்டனுடன் இணைந்து கல்குலசை (calculus) கண்டுபிடித்த லெபினிஸ் (Wilhelm Leibnitz) பரிணாமடைகின்ற பிரக்ஞையின் அலகு என்ற தத்துவ அடிப்படையை உருவாக்குகின்றார். இதை இவர் மொனாட் (monad) என்றழைக்கின்றார். இந்த மொனாட் என்பது எப்பொழுதும் இருந்தது எனவும் ஒரு போதும் அழிக்க முடியாததும் என்கின்றார். இவரைப் பொறுத்தவரை எல்லாப் பொருட்களும் உயிருள்ளவை என்றும் மொனாட்டினால் (monad) இயங்குபவை என்கின்றார். இதுவே உடலுக்கும் உளவியலுக்குமான தொடர்பை கொண்டுள்ளது என்கின்றார் (Mishlove, 59). இது பிரக்ஞை தொடர்பான ஆய்வில் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

 

குவான்டத்தின் அறிவினால், பாரம்பரிய பௌதீகவியலின்படி வெளி உலகமானது துகள்களால் மட்மே ஆனது எனவும் இந்தத் துகள்கைளைக் கொண்டே உலகத்தை அறியலாம் என்கின்ற கருத்தாதிக்கமானது கைவிடப்பட்டு, பௌதிகவியல் கூறுகளுக்கும் உளவியல் கூறுகளுக்கும் இடையிலான உறவு என்பது விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்கின்றார் அமெரிக்க பௌதீகவியலாளர் ஹென்றி ஸ்டப் (Henry Stap) (Velmans, 18). இதைவிட ரதபோட்டின் (Rutherford) அணு ஒளியின் பாச்சல் மற்றும் மக்ஸ்வெல்லின் (Maxwell) ஒளி அலை தொடர்பான ஆய்வுகளும் பிரக்ஞைக்கும் பரும்பொருளுக்கும் இடையிலான உறவு தொடர்பான ஆய்வை முன்நோக்கி நகர்த்தின என்றால் மிகையல்ல. இவற்றுடன் ஐன்ஸ்டைனின் (Albert Einstein ) புரட்சிகரமான விஞ்ஞான பார்வையான, வெளியும் (Space), நேரமும் (Time), பருப்பொருளும் (Matter), சக்தியும் (Energy), ஒன்றை ஒன்று சார்ந்தவை (Relative) என்ற கோட்பாடும் ஒன்று கலந்தது.  இதனால், ஒருவரின் பார்வையில் இவை மிகலும் சிக்கலான வகையில் தங்கியுமிருக்கின்றன என்கின்ற கூற்றும் பிரக்ஞை தொடர்பான ஆய்வுக்கு வலுச் சேர்த்தன (Walker, 34).

 

பிரக்ஞை தொடர்பான ஆய்வில், 1950 ஆண்டு வெளவ்வாளின் (Bat) தன்மைகள் தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. இது 1970 ம் ஆண்டு அமெரிக்க தத்துவவியலாளர் தொமஸ் நாகெல் (Thomas Nagel) என்பவரால் இது மீண்டும் பிரபல்யமாகியது. இக் கேள்விக்கான பதில்கள் பிரக்ஞை தொடர்பான தேடலின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றன என்கின்றார் பிளக்மோர் (Blackmore, 6). இது 20ம் நூற்றாண்டில் உடலில் நீயுரோல் இணைப்புகளும் மின்காந்த செயற்பாடுகளும் முக்கியமானவை என்பது கண்டறியப்படவும், மற்றும் இரசாயண உணர்வுக் களங்கள் மற்றும் நீயூரோ ரான்ஸ்மீட்டர் போன்ற மூளையின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாகவும் ஆராயப்படவும் ஊந்துசக்தியாக இருந்தன (Papineau & Selina, 72).

 

1960ம் ஆண்டு நரம்பியல் விஞ்ஞானி  பென்ஞமின் லிபெட் (Benjamin Libat) பிரக்ஞை தொடர்பான தனது ஆய்வை மேற்கொண்டார். இவர் மூளையில் மின்னலை அதிர்pவுகளை ஏற்படுதுவதன் மூலம் எவ்வாறு உடல் பாகங்களை இயங்க செய்யலாம் என்றும் அல்லது பார்வை ஏற்படுத்தலாம் என்பன போன்ற ஆய்வுகளை மேற்கொண்டார் (Blackmore, 33). இதன்படி உடலில் ஒரு தாக்கம் ஏற்பட்டடு மூளை இயங்க ஆரம்பித்து சிறிது கணத்திற்கு (இது மிக மிக குறுகிய கணம்) பிரக்ஞை செயற்படுகின்றது என ஆய்வு சொல்கின்றது. ஆனால் இவரது கோட்பாட்டின் படி அவ்வாறான தாமதம் இல்லை என்று கூறுகின்றார். இந்த பரிசோதனை ஆய்வை விஞ்ஞான தத்துவவியளாலருர் கார்ல் பொப்பரும் (Karl Popper) மற்றும் உடல் நரம்பியல் நிபுணருமான ஜோன் ஏக்கல்ஸ் (John Eccles) ஆகிய இருமைவாதிகள் பருப்பொருள் அற்ற மனதில் இருக்கின்ற மாபெரும் சக்திக்கான ஆதாரம் இது என்கின்றனர். இதேவேளை கணிதவியலாளரான ரொஜர் பென்ரொஸ் (Roger Penrose) இதை விளக்குவதற்கு குவான்டம் கோட்பாடு அவசியம் என்கின்றார் (Blackmore, 35).

 

இவான் ஹரிஸ் வோக்கர் (Ean Harris Walker) தனது பிரக்ஞை பற்றிய பௌதீகவியல் (The Physics of Consciousness) என்ற நூலில் ஐன்ஸ்டையின் சூத்திரத்தின் அல்லது விதியின் படி திண்மம் அல்லது பருப்பொருள் (matter) என்பது அடிப்படையிலையே சக்தி (energy) என்பது நிறுபனமானது என்கின்றார். (Walker, 36-37). மேலும் திண்மம் (matter) என்பது பருப்பொருளும் (particiles) அலை (wave) வடிவமும் மட்டுமானதல்ல. மாறாக ஒரிடத்திலிருந்து ஒரிடத்திற்குப் பாய்கின்ற சக்தி வடிவங்கள் என்கின்றார் (Walker, 65> 1268). அடிப்படையில் இந்த சக்தியானது ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது சக்திக் காப்பு விதியாகும் (Velmans 24). மறுபுறம் நீல்போர் (Niels Bohr) வெளிச்சத்தின் தன்மை என்பது பருப்பொருளா அல்லது அலையா என்பது தொடர்பான விவாதத்தில் அது ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்ற ஒன்று என முடிவு செய்தார். இதேவேளை ஹெயின்பேர்க் (Heisenberg) மற்றும் சோர்டிங்கர் (Schrodinger) என்பவர்கள், ஒரு பருப்பொருளின் இடத்தையும் அதன் அலைகளின் சாத்தியத்தையும் அதன் வேகத்தையும் அதன் நிச்சயமற்ற தன்மையினால் அறிமுடியாது என்றார் (Lachman, 133, Walker, 57). இது பௌதிகவியல் விஞ்ஞானத்தில் நடைபெற்ற ஆய்வுகளின் முடிவுகள். இதேபோல் சேதன இராசாயணவியலிலும் பென்சீன் (Benzene) என்ற அடிப்படை மூலக் கூறுகின் அமைப்பானது அறுங்கோணமாகும். இதில் மூன்று ஒற்றைப் பிணைப்புகளும் மூன்று இரட்டைப் பிணைப்புகளும் ஒற்றை விட்டு ஒன்றாக உள்ளன. ஆனால் இந்தப் பிணைப்புகள் நிரந்தரமானவை அல்ல. நிலையற்று மாறிக் கொண்டெ இருப்பனவையாகும். இவ்வாறான ஆய்வுகளின் முடிவானது உண்மையை அல்லது இயற்கையை அல்லது யதார்த்தத்தை நமது தர்க்க மனதினுடாக அல்லது சதராரண பார்வையின் ஊடாக அறியமுடியாது என்பதை விளக்கியது. அதாவது மூளையிலிருக்கின்ற சேர்பல் பிரக்ஞையால மட்டும் அறியமுடியாது என நிறுபனமாகியது. ஏனனில், இதன் செய்ற்பாடானது ஒன்றைப் பிரிப்பதும் ஆய்வு செய்வதுமாகும் (Lachman, 134-5). இவ்வாறான முளையின் சேர்பல் பகுதியின் புரிதலின் மட்டுப்படுத்தலை ஏகிப்தியர்கள் அன்றே புர்pந்திருந்தனர். (Lachman, 136).

 

குவான்டத்தின் அறிவின்படி பிரக்ஞையானது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பருப்பொருட்களுக்கு இடையில் இடைவெளி தேவையானதாக இருந்தது. இந்த இடைவெளியானது குவான்டம் கருத்தியலினால் விளங்கப்படுத்தக் கூடியதான இருக்கின்றது. இதனால் விஞ்ஞானத்தில் குவான்டம் பௌதிகவியலின் கண்டுபிடிப்பானது பிரக்ஞை தொடர்பான அறிதலின் ஒரு பாச்சல் எனக் கூறலாம் என்கின்றனர். மறுபுறம் பிரக்ஞை இந்தக் கண்டுபிடிப்பில் முக்கியமான பாத்திரத்ததையும் வகித்துள்ளது. ஏனனில் குவான்டம் பரிசோதனையில் எவ்வகையான பரிசோதனையைக் கையாள்கின்றோமோ அதற்கமைய போட்டோன்ஸ்pன (Positrins) செயற்பாடானது அலைகளாகவோ அல்லது துகள்களாகவோ தோற்றமளிக்கும். கோப்பகேன் மாநாட்டில் நீல் போரின் (Niels Bohr) குவான்டம் சூத்திரத்தை (Quantum Theory) முன்வைத்தபோது தெளிவாக இரண்டு செயற்பாடுகளை முன்வைத்தார் (Hobson, 123).. ஒன்று பார்பவரில் (Participant) நடைபெறுகின்ற செயற்பாடு. இரண்டாவது பார்க்கின்ற (Observed) இடத்தில் நடைபெறுகின்ற செயற்பாடு. இங்கு பார்ப்பவர் (Observer) என்பது மிகவும் வரிவான ஒன்றாக வரையறுக்கப்பட்டிருந்தது. அதாவது பார்க்கின்ற ஒவ்வவொருவரும் ஒரு மனித முகவராகவும் மற்றும் தொடர்ச்சியாக இயங்குகின்ற பிரக்ஞை (Steam of Consciousness) எனும் ஓட்டத்தைக் கொண்டவர்களாகவும் வரையறுக்கப்பட்டிருந்தனர்;. இவர்கள் தம்மைப் பற்றியும் தமது அறிவைப் பற்றியும் இருவகையான விடயங்களை பகிர்ந்தனர். ஒன்று இவர்கள், தமது மனம், உடல் மற்றும் உபகரணங்களுடன் எப்படி செயற்படுவது எனவும், அதற்காக எவ்வாறு தங்களைத் தயார்படுத்தினர் என்பதும். இரண்டாவது அவர்கள் பெற்ற அறிவிலிருந்து எதை அறிந்து கொண்டனர் என்பது ஆகும். ஆகவே, குவான்டம் விதியின் முக்கியமான தத்துவார்த்த பார்வையானது சுதந்திரமான பார்வையாளர் (Independent Obsever) என ஒருவர் இல்லை எனக் கூறுகின்றது. இதன்; தொடர்ச்சியாகத்தான் இன்றைய பௌதிக விஞ்ஞானிகள் தங்களது அளவீடுகளில் பிரக்ஞை என்பது ஒரு பகுதியாக இருக்கின்றது என்பதை அறிந்துள்ளார்கள் (Walker 48, 52). இருப்பினும் குவான்டம் சூத்திரமானது பிரக்ஞை எவ்வாறு ஒன்றை தெரிவு செய்கின்றது என்பது தொடர்பான விளக்கத்தை தருவதற்கு இன்னும் போதாமையானதாக இருக்கின்றது.

ஒருபுறம் பருப்பொருள், சக்தி, நேரம், வெளி என்பவற்றின் அடிப்படையில் பிரக்ஞை தொடர்பான இவ்வாறான ஆய்வுகள் இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருந்தன. மறுபுறம் உளவியல் அடிப்படையிலும் பிரக்ஞை தொடர்பான தேடலும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்நன. இதை அடுத்த பகுதியில் பார்ப்போம்

 

மீராபாரதி

01.11.2011

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: