Posted by: மீராபாரதி | April 26, 2011

கனேடிய தமிழ் சிந்தனை வட்டம் : விவாதக்களம் ஒரு பார்வை

கனேடிய தமிழ் சிந்தனை வட்டம் : விவாதக்களம் ஒரு பார்வை

வெள்ளிக்கிழமை!- 23-04-2011
சிறிய மழைத்துறல்…கடந்த சில நாட்களைப் போல அல்லாது…சிறிது வெப்பமான நாள்….
இவ்வாறான நாட்களுக்காக குளிர்காலம் முடிந்தவுடன் கனேடியர்கள் ஏங்குவதும்…அவ்வாரும் பொழுது ஆனந்தக் கூத்தாடுவதும்; வழமை….
அவ்வாறான ஒரு நாளில் கனேடிய தமிழ் சிந்தனை வட்டம் “இன்றைய சிறிலங்காவில் (இலங்கையல்ல) தமிழ் மக்களின் எதிர்காலமும் அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்திருந்தது. இதில் கனடாவில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகளை கேட்பதற்கும் அவர்களுடன் கலந்துரையாடுவதற்குமான சந்தர்ப்பத்தையும் வழங்கியிருந்தது. இவ்வாறான ஒரு முழு நாள் நிகழ்வை ஒழுங்கு படுத்துவதும் பேச்சாளர்களை வரவழைப்பதும் என்பது மிகவும் கடினமாக வேலையே. அதுவும் எந்தவிதமான அரசாங்க அல்லது புலி ஆதரவு அற்ற (?) அமைப்புகளுக்கு இவ்வாறான பணி அதிகப்படி கடினமானது என்றால் மிகையல்ல. அந்தவகையில் இதை ஒழுங்குபடுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  இந்த நிகழ்வு தொடர்பான சிறிய குறிப்பு இது. இந் நிகழ்வு மூன்று அரங்குகளாக நடைபெற்றது. ஒவ்வொரு அரங்கின் இறுதியிலும் கருத்தை கேட்டவந்தோர் கேள்வி கேட்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்கள் நடுநிலையானவர்கள்(? ) என்பதனாலும் பிரச்சனைகளை மக்கள் சார்ந்து பார்ப்பவர்கள் என்பதனாலும் இவ்வாறான கூட்டங்களுக்கு செல்வது எனது வழமை. ஆனால் இவர்கள் ஒழுங்குபடுத்திய இன்றைய கூட்டம் வழமையானதிலிருந்து வேறுபட்டது மட்டுமல்ல என்னளவில் மிக முக்கியமானது. ஏனனில் கனடாவிலுள்ள புலிகளின் அரசியலை பின்பற்றுகின்றவர்களின் அரசியல் பேச்சை முதன்முதலாக கேட்க செல்கின்றேன். ஏனனில் கனடாவில் சிறிலங்கா அரசாங்கம் சார்ந்து ஒரு அமைப்பும் மற்றும் புலிகளின் தலைமைக்கும்; அதன் அரசியலுக்கும் விசுவாசமான பல அமைப்புகளும் நடாத்தும் கூட்டங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் இதுவரை நான் சென்றதில்லை. (பி;கு.2000ம் ஆண்டுக்கு முன்பு அன்றைய எனது அரசியல் நிலைப்பாட்டினால் இவ்வாறான ஒரு அமைப்பு (முழக்கம் பத்திரிகை) நடாத்திய ஒரோ ஒரு கூட்டத்திற்கு மட்டுமே சென்றிருக்கின்றேன்.)

ஏந்த நிகழ்வுகளுக்கும் கூட்டங்களுக்கும் குறித்த நேரத்திற்கு செல்லவேண்டும் என விரும்புகின்றவர். அதேபோல் ஒழுங்குபடுத்தும் நிகழ்வுகள் குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகவேண்டும் எனவும் எதிர்பார்ப்பவர். ஏனனில் குறிந்த நேரத்திற்கு வந்தவர்களை மதிக்கவேண்டும் என விரும்புகின்றவர். ஆனாலும் இவ்வாறன கூட்டங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்காத கடந்த கால அனுபவமும் மற்றும் வீட்டாருடன் சமரசம் செய்யவேண்டிய நிலையிலும், ஒன்பது மணிக்கு விட்டிலிருந்து வெளியேறினால் போதும் என ஏற்கனவே எனக்குள் நான் முடிவு செய்திருந்தேன். ஏனனில் கூட்டம் 9.30க்குத் தான் எப்படியும் ஆரம்பிப்பார்கள் என நினைத்திருந்தேன். இந்த நேரத்திற்கு வெளிக்கிட்டதற்கே விட்டில் நக்கலடி நடந்தது என்பது வேறுவியடம். இருந்தபோதும். போதும் 9.30க்கே விட்டிலிருந்தே அவசர அவசரமாக பயணமானேன். ஆயினும் புதினைந்து நிமிடங்களில் ஸ்காவுரோ சிவிக் சென்டரில் நான் நிற்றேன். அங்கு ஒன்றும் ஆரம்பம் ஆகவில்லை என்பதைக் கண்டபோதுதான் “அப்பாடா” என ஒரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.; கவிஞர் சுல்பிகா என்ற பேச்சாளரும் ஒழுங்கமைப்பாளர்களும் பார்வையாளர்கள் சிலரும் மட்டுமே வந்திருந்தனர். ஒருவாறு நிகழ்வு 10.30க்கு ஆரம்பமாகியது. இதன் பின்பே ஒவ்வொரு பேச்சாளர்கள் வந்தனர். கருத்தைக் கேட்க வந்தவர்களில் அதிகமானோர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமல்ல புதிய முகங்களாகவும் இருந்தன. வழமையாக வருகின்ற சில முகங்களையே காணக்கிடைத்தது. பல முகங்களைக் காணக்கிடைக்கவில்லை. இதைவிட ஒவ்வொரு அமைப்பினதும் சில ஆதரவாளர்கள் தமது எதிர் தரப்பை (கேள்விக்கனைகளால்) தாக்குவதற்கு வந்திருந்தனர். இப்பொழுதெல்லாம் வழமையான பாணி தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்; என்ற புதிய ஞானோதயம் பிறந்திருக்கின்றது. வரவேற்க்கப்படவேண்டிய வியடம். ஆனால் அரசியல் மட்டும் மாறாது பழயை அரசியலே தொடர்கின்றது. இவ்வாறான கூட்டங்களுக்கு ஏன் அதிகமானவர்கள் வருவதில்லை. இந்தக் கூட்டங்களில் நம்பிக்கையில்லையா? அல்லது அவர்களுக்கு பொறுப்புணர்வும் பங்களிப்பு செய்யும் நோக்கமும் இல்லையா? கலை நிகழ்வுகளுக்கும் தென்னிந்திய நச்சத்திர இரவுகளுக்கு மண்டபம் நிறைந்த காட்சிகளாக நிகழ்வுகளாக இருப்பது மட்டும் ஏன்? இவ்வளவு கஸ்டப்பட்டு அரசியல் கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் ஒழுங்குபடுத்தி என்ன பயன்? கருத்துக்கள் பரவலாக சென்றடையாதே? இதைப ;பற்றி இனிவரும் காலங்களில் சிந்திக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

நிகழ்வை ஆரம்பித்தவர் போராட்டம் முடிவுற்று இரண்டு வருடங்கள் ;ஆகிவிட்டன என்றும் அதுவரையான அரசியல் என்பது உணர்ச்சி பூர்வமான கதைகளும்; பேச்சுக்களும் கொண்டதாகவும் மற்றவர்களை குறைகூறுவதையுமே வழமையாக கொண்டதாகவே இருந்தது எனவும் குறிப்பிட்டார். ஆகவே இவ்வாறன போக்கை கைவிட்டு நமது குறைகளை நாம் கதைப்பதுடன் அவற்றைக் களைந்து கனடாவிலிருக்கின்ற 70,00 -100, 000 புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களை நல்லமுறையில் பயன்படுத்தவும் வேண்டும் என குறிப்பிட்டார். இதில் மூன்று விடயங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களுக்கு விடை கொடுப்பது என்பதும் பிறரைக் குறைகூறுவதைவிட நமது குறைகளை கவனிப்பதும் களைவதும் என்ற புதிய வழி ஆரோக்கியமான நேர்மறைவழி என்றால் மிகையல்ல. இது வரவேற்புக்குரியது. ஆனால் பிரச்சனைக்குரிய இரண்டாவது விடயம் என்னவெனில் போராட்டம் முடிவுற்றது என கூறுகின்றமை. முள்ளிவாய்க்காலில் நடந்தது தமிழ் பேசும் மக்களின் போராட்டம் முடிவற்றதல்ல. விடுதலைப் புலிகளின் தலைமை முன்னெடுத்த ஒரு வழிப் போராட்டமே; முடிவுக்கு வந்துள்ளது. மேலும் அவர்கள் முன்னெடுத்தது மட்டும்ல்ல தமிழ் பேசும் மக்களின் போராட்டம். ஏனனில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்கள் தொடர்ந்தும் பல்வேறு இனத்துவ பொருளாதார சாதிய பெண்ணியப் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுப்பதால் போராட்டங்கள் பெரியளவில் இல்லாவிட்டாலும் சிறியளவில் பல்வேறு வழிகளில் தொடர்கின்றன. இது தவிர்க்க முடியாது. மூன்றாவது முக்கியமான விடயம் இப்பொழுதும் “மக்களை எப்படி பயன்படுத்துவது” என்பது பற்றி சிந்திப்பது கவலைக்குரியது மட்டுமல்ல விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது ஆகும். மக்களை மந்தைகளாக கருதி தொடர்ந்தும் பயன்படுத்துவது என்றடிப்படையில் நோக்குவது எதிர்;மறையான போக்காகும். ஆகவே இவ்வாறான கலந்துரையாடல்கள் பொதுமனிதர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கி விடுத்லைக்கான போராட்டத்தில் தமது பங்கை அல்லது நிலையை புரியவைப்பதுதான் நோக்கமாக இருக்கவேண்டும். ஆவ்வாறன ஒரு விழிப்புணர்வை இந் நிகழ்வில் கருத்துக் கூறிய சுல்பிகா, ரகுமான்ஜான், மற்றும் சேரன் ஆகிய மூவரும் ஆற்றியிருந்தனர். பொன். பாலராஜனும் ஒரளவு குறிப்பிடத்தக்கவர் ஆனால் விமர்சனத்திற்கு உட்பட்டவர் என்பதால் மேற்குறிப்பிட்ட மூவருடனும் சேர்க்கவில்லை. இந்த நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட கருத்துரைகள் நூலுருவில் வெளிவர இருப்பதால்; முக்கியமான விடயங்கள் என நான் கருதுவதை இங்கு மிக சுருக்கமாக முன்வைக்கின்றேன்.

கவிஞலும் காலநிதியுமான சுல்பிகாவின் உரை முக்கியமானது. இவர் தனது உரையை நான்கு பகுதிகளாக பிரித்திருந்தார்.  ஒன்று பிரச்சனைகளை தெளிவாக வரையறுப்பது. இரண்டு அந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பது. மூனறு அதை நோக்கிச் செல்வதற்கு எந்தவிதமாக அனுகுமுறைகளை மேற்கொள்வது. நான்கு அதற்காக இருக்கின்ற சுழ்நிலையை எவ்வாறு சீர்செய்வது என்பதாக பிரித்திருந்தார். சமாதான முயற்சிகளை குழப்பியதில் இருதரப்பிற்கும் குறிப்பிட்டளவு பங்களிப்பு இருப்பதுடன் முழுமையான அர்ப்பணிப்புடன் இருவரும் பங்காற்றவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும் சமாதான முன்னெடுப்புக்களில் பலமான பலவீனமான அம்சங்களும் உள்ளன எனவும் ஆனால் சர்வதேரீதியாக அரசாங்கத்திற்கே ஆதரவு நிலை இருப்பதாகவும் கூறினார். மறுபுறம் தமிழ் தேசிய போராட்ட தலைமைகள் பிற சிறுபான்மை இனங்கள் தொடர்பாக மேற்கொண்ட அனுகுமுறையானது “வரலாற்று தவறு” மட்டுமல்ல போராட்டத்தின் நியாயத்தன்மையை சர்வதேச அளவில் குறைத்துள்ளது என சுட்டிக்காட்டினார். மேலும் சிங்கள மக்களிடம் இருக்கின்ற இனவாத சிந்தாந்த மேலாதிக்கத்தை எவ்வாறு இ;ல்லாமல் செய்வது என்பதும் அவர்களது மனசாட்சியை தட்டி எழுப்புவது முக்கியமான ஒன்று எனவும் குறிப்பிட்டார். இவரது உரை விரைவில் நூலுருவில் வருவது முக்கியமானது. ஏனனில் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பான நடைமுறை அனுபவம் சார்ந்த தனது கருத்தை மிகவும் ஆணித்தரமாகவும் விரிவாகவும் அழகாகவும் முன்வைத்தார். சபையோர் அதிகநேரம் இவருக்கு ஒதுக்கும்படி கூட்ட ஓருங்கினைப்பாளரைக் கேட்டுக்கொண்டமை இவரது உரையின் முக்கியத்துவத்தை உணர்த்தபோதுமானதாகும்.

வியூகம் ஆசிரியர் குழுவில் உள்ளவரும் மே 18 இயக்கத்தை சேர்ந்தவருமான ரகுமான்ஜானினது கருத்துரையும் முக்கியமானது. நமது போராட்டம் முள்ளிவாய்க்காலில் நசுக்கப்பட்டதற்கு காரணம் மக்களை நம்பாது நடைபெற்ற போராட்டம் எனக் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தையும் அதன் தலமையையும் முள்ளிவாய்க்கால்வரை கொண்டு சென்றவர்கள் இன்றும் உள்ளார்கள் என்றும் அவர்கள் மக்கள் முன் என்ன நடந்தது என்பதை கூறுவது மிகவும் முக்கியமானது எனவும் மிகவும் அழுத்தமாக கூறினார். இந்தப் போராட்டமானது மக்களை நம்பாது தமிழக பிழைப்புவாத தலைவர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் மற்றும் சர்வதேச நாடுகளையும் நம்பியே முன்னெடுக்கப்பட்டதால் தோல்வியை சந்தித்தமைக்கு இன்னுமொரு காரணம் என்றார். தமிழக தலைவர்கள் முதலில் தங்களது மக்களுடைய பிரச்சனைகளை முதன்மைப்படுத்திப் போராட்டடும். தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை அவர்கள் தீர்மானிக்காது அப்போராட்டத்தை ஈழ மக்கள் முன்னெடுக்கும் பொழுது ஆதாரவு அளிக்கின்ற சக்தியாக மட்டும் இருபதே ஆரோக்கியமானதும் சரியான பங்களிப்பும் என்றார்.  மேலும் போராட்டம் என்பது முடிந்துவிடவல்லை எனவும் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தவண்ணமே உள்ளனர் என்றார். ஆகவே நாம் சரியான அரசியலை முன்னிலைப்படுத்தி செயற்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

கவிஞரும் பேராசிரியருமான சேரனின் உரை பல விடயங்களில் முக்கியத்துவமானது. ஓன்று சர்வதேசத்தின் இரட்டைத்தன்மையை விள்க்கியமை. ஒரு புறம் அரசாங்கங்கள் தாம் மனித உரிமைகளை காப்பதாகவும் அதை மதிப்பதாகவும் ஏற்று மனித உரிமைகளுக்கான ஜ.நா சாசனத்தில் கையெழுத்து வைத்திருக்கின்றனர். மறுபுறம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றுடனும் கையெழுத்து வைத்துள்ளமையானது மனித உரிமை மீறல்;களுக்கும் சுரண்டல்களுக்கும் நடைபெற வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். இது அரசாங்களின் இரட்டைத்தன்மைய வெளிப்படுத்துகின்றது. இரண்டாவது புலம் பெயர்ந்த மக்கள் மற்றும் புலம் பெயர்க்கப்பட்ட மக்கள் என்பவற்றுக்கிடையிலான வித்தியாசத்தை குறிப்பிட்டார். தொடர்ந்தும் பல்வேறு புலம் பெயர்க்கப்பட்ட மக்களின் புலம் பெயர் அரசியல் என்பது இன்றைய காலங்களில் மிக முக்கியமான தாக்கத்தையும் மாற்றத்தையும் சர்வதேசளவில் ஏற்படுத்தியுள்ளமை கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று என்றார். ஆகவே புலம் பெயர்க்கப்பட்ட மக்கள் தாம் வாழ்கின்ற புலம் பெயர் நாடுகளில் அரசியல் பங்களிப்பு செய்வது பரஸ்பரம் தாம் பிறந்த நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் நன்மையானது என வலியுறுத்தினார். ஆனால் இது எந்தவகையிலும் பிறந்த நாட்டின் அரசியலை புலம் பெயர்ந்த மக்களோ அல்லது அவர்களது அமைப்புகளோ திர்மானிப்பதாகவோ வழிநடாத்துவதாகவோ இருக்கக் கூடாது எனவும் மாறாக ஆதரவு நிலையிலையே இருக்கவேண்டும் எனவும் கூறினார். மேலும் அமைப்புகளிடம் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்றார். குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்ததை நாம் ஏற்றுக்கொள்வதே தொடர்ச்சியான செயற்பாட்டுக்கு ஆரோக்கியமானது என்பதை உறுதியாக வலியுறுத்தினார். மேலும் நாம் ஒருவரின் ஒற்றை அடையாளத்தை அல்ல பன்முக அடையாளத்தையே முதன்மைப்படுத்தவேண்டும் என்றார்.

நாடு கடந்த தமிழிழத்தின் சபாநாயகர் பொன். பாலாராஜன் அவர்கள் ஜ.நா இலங்கை அரசாங்கம் மற்றும் புலிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவேண்டும் எனவும் இலங்கையின் தமிழ் தேசத்தின் அரசியல் மற்றும் அதன் செய்ற்பாடுகள் தொடர்பாக புலமும் நாடு கடந்த தமிழிழ அரசாங்கமும் ஆதரவு நிலையில் மட்டுமே செயற்படலாம் எனவும் தமிழ் தேசத்தின் அரசியலை புலம் தீர்மானிக்கவோ ஆதிக்கம் செலுத்தவோ முடியாது எனவும் குறிப்பிட்டார்.  இது நாடு கடந்த தமிழிழ அரசாங்கத்தின் முக்கியமான புதிய அரசியல் நிலைப்பாடாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளதுடன் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுமாகும்.  இவ்வாறான மாற்றம் என்பது இவர்களது செயற்பாட்டிலும் இருக்கவேண்டும். உதாரணமாக போரின் இறுதியில் நடந்த விடயங்கள் தொடர்பாக தமிழ் பேசும் மனிதர்கள் முன் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாவர்கள். இதை இவர்கள் செய்யாதவரை இந்த அரசியல் மாற்றம் என்பது வெறும் மேடைப்பேச்சாக மட்டுமே இருக்கும்.

பாலராஜன் அவர்களின் இன்னுமொரு கூற்று கவனிக்கத்தக்கது. அதாவது சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு சர்வதே பிரதிநிதி இருப்பதுபோல் சர்வதேசளவில் தமிழர்கள் சார்பாக கதைப்பதற்கு அமைப்போ பிரதிநிதிகளோ இல்லை எனக் குறிப்பிட்டார். ஆகவே நாடு கடந்த அராசங்கம் புலம் பெயர்ந்த மக்களால் பலப்படுத்தப்படுவது முக்கியமானது என்றார். இவர் குறிப்பிடுவது முக்கியமானது எனினும் ஆவ்வாறான ஒரு பிரதிநிதி அல்லது அமைப்பு இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியலை முன்னிலைப்படுத்துவதால் அங்குள்ள பிரதான அமைப்பின் கீழ் செயற்படுவதுதான் முறையானது. ஆனால் நாடு கடந்த அரசும் மற்றும் புலி சார்பு அமைப்புகளும் சுயமாக அதாவது களத்தில் இருக்கின்ற மக்களுடன் எந்தவிதமான தொடர்பும் அற்றே செயற்படுவது ஆரோக்கியமற்றது மட்டுமல்ல அந்த மக்களை சர்வதேசளவில் பிரதிநிதித்துவப்படுத்துவும் இவர்களால் முடியாது.

இவர்களைத் தவிர கனேடிய மனித உரிமைகள் அமைப்பு சார்ந்து பேசிய குணா நாகலிங்கம் மற்றும் கனடிய தமிழர் தேசிய அவை தலைவர்  மோகன் ராமகிர்ஸ்ணன் ஆகிய இருவரும் தமது அமைப்பின் குறுகிய கால நீண்ட கால வேலைத் திட்டங்களை தொடர்பாகவே தமது கருத்துக்களையும் மனித உரிமைகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை முதன்மைப்படுத்தி செயற்படுதல் என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.

 தமிழ் படைப்பாளிகள் களம் சார்பாக பேசிய நக்கீரனும், முன்னால் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் மற்றும் எந்த அமைப்புகளும் சாராது தனிப்பட பேசிய நேரு குணரட்னமும் புலிகளின் வழமையான அரசியலையே முன்வைத்து பேசினர். இவர்கள் கூறியதில் புதிதாக ஒன்றும் இருக்கவில்லை. புலிகளின் அரசியல் சார்ந்;து புலத்தில் வருகின்ற பத்திரிகைகளில் வருவதையே இங்கும் இவர்கள் கூறினர்.  மேலும் மேற்குறிப்பிட்ட மூவரும் புலித் தலைமைகளின் அரசியலையே தொடர்ந்தும் பின்பற்றுவதால் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கும், இறுதியாக என்ன நடந்தது என்பதற்கும், மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக ஜ.நா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் பதில் கூற கடமைப்பட்டவர்களாவார்கள். இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மௌனமே இவர்களிடமிருந்து பதிலாக கிடைத்தது. இதற்கான பதிலை மக்கள் முன்வைக்காதவரை இவர்கள் முன்னெடுக்கும் அரசியல் என்பது வலுவற்றதும் பயனற்றதுமாகவே இருக்கும். இது தொடர்பாக இவர்கள் அதிகம் கவனம் செலுத்தவேண்டி உள்ளது. அல்லது வெறும் காலம் கடத்தும் பிழைப்புவாத அரசியலாகவே இருக்கும்.

இறுதியாக இவர்களிடம்  இன்றைய கனடிய சுழலில் கனடா வாழ் புலம் பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் எனவும் இது தொடர்பாக தாங்கள் சார்ந்த அமைப்பின் நிலைப்பாடு என்ன எனவும் கேட்கப்பட்டது. இதற்கு பொன்.பாலாராஜன் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தான் பழமைவாதக் கட்சியின் அங்கத்தினர் என்றும் ஆனால் இந்தமுறை அவர்களுடைய தேர்தல் விளம்பரத்தையும் குடிவரவாளர்களுக்கு எதிரான சட்டமூலத்தையும் எதிர்ப்பதால் அவர்களுக்;கு வாக்களிக்கப்போவதில்லை என்றார். நக்கீரன் அவர்கள் தான் வழமையாக என்டி.டி.பி கட்சிக்கு வாக்களிப்பதாகவும் தொடர்ந்தும் அவர்களுக்கே வாக்களிக்கப்போவதாகவும் ஆனால் லிபரலும் பழமைவாதக் கட்சிக்கும் இடையில் குறுகிய வித்தியாசம் இருக்கின்ற இடங்களில் லிபரலுக்கு வாக்களிக்குப்படியும் கேட்டுக்கொண்டார். நேரு இது ஜனநாயகத் தேர்தல் என்றும் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தான் மக்களுக்கு கூற முடியாது எனவும் தனது பழைய புலி அரசியலை மறந்து ஜனநாயக வாதிபோல் கதைத்தார். யாருக்கு வாக்களிப்பது நல்லது என இறுதிவரை இவர் கூறவில்;லை. இவர்களால்தான் முன்பு கனேடிய புலம் பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்களை தலைமை தாங்கி வழிநடாத்திய புலி சார்பு நிலைப்பாடு கொண்ட பெரும் தலைவர்கள். ஆனால் இந்த முவரும் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டனர். இந்தத் தேர்தல் தொடர்பாக தமது அமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை ஒருவரும் கூறவில்லை. இதுதான் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்திலும் புலம் பெயர் அமைப்புகளிலும் இருந்த இருக்கின்ற பாரிய பிரச்சனை. தமிழ தேசிய அரசியல் மட்டுமே; இவர்களது அரசியல். அதாவது தமிழ் ஈழம், புலிகள், சிறிலங்கா அரசாங்கம், இந்தியா மற்றும் சர்வதேசம். இதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பதுதான் இவர்களது தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியல். இந்த அமைப்புகளுக்கு என்று உறுதியான ஒரு அரசியல் நிலைப்பாடு இல்லை. ஆகவே இவ்வாறான புலம் பெயர்க்கப்பட்ட தேசங்களில் தேர்தல்கள் வரும் பொழுது இந்த அமைப்புகள் மௌனமே தமது நிலைப்பாடாக கொண்டுள்ளனர். ஏனனில் அமைப்புகளுக்குள் பல்வேறு கட்சி சார்ந்தவர்கள் இருக்கின்றார்கள். ஆகவே அமைப்பைக் கட்டிக்காப்பதற்காக புலத்தின் அரசியலை கைவிட்டுவிடுகின்றனர். இது முக்கியமான ஒரு தவறு என்பதை புர்pய மறுக்கின்றர். ஓவ்வொரு அமைப்புக்கும் பொதுவான ஒரு அரசியல் நிலைப்பாடு இருப்பதே ஆரோக்கியமானதும் பலமானதுமாகும்.

குறிப்பிட்ட புலம் பெயர் நாட்டுக்கும் சுழலிற்கும் ஏற்ப எவ்வாறான அரசியல் நிலப்பாட்டை எடுப்பது எனவும் மக்களை அந்த அரசியல் அடிப்படையில் விழிப்புணர்வை உருவாக்குவது என்பது தொடர்பாகவும் அன்று மட்டுமல்ல இப்பொழுதும் பிரக்ஞையற்றவர்களாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் வெற்றிபெருகின்றவர்களோடு ஒட்டி உறவாடி தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் தமது அரசியலை கோட்டை விட்டுவிடுகின்றனர். இதற்கு நல்ல சான்று கனடாவிற்கு வந்த காலத்திலிருந்து என்.டி.பிக்கு ஆதரவளிக்கின்றவர் எனக் கூறிய நக்கீரன் அவர்கள் பின்வருமாறும்  கூறினார். அதாவது அடுத்தமுறை லிபரல் கட்சி வென்றால் பொப்ரே தான் வெளிவிகார அமைச்சராக வருவார். ஆகவே அவரை எதிர்ப்பது: நல்லதல்ல என்றாhர். இது தான் இவர்களின் அரசியல்.

இறுதியாக நக்கீரன் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பொப் ரே அவர்கள் தமது தேர்தல் பிரச்சார பேச்சை நடாத்;துவதற்காக இடை நிறுத்தப்பட்டார். இவ்வாறு நக்கீரனது பேச்சை இடைநிறுத்தி பொப்ரேயை பேச வைத்ததது தவறு என்று சபையோரால் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான எதிர்ப்பு பொப்ரேக்கு எதிரானதல்ல. பொப்ரே சிறிலங்கா மற்றும் புலிகளது பிரச்சனையில் நடுநலையானவராக இருந்தபோதும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை மனித மற்றும் அரசியல் உரிமைகளுக்கு ஆதரவானவர். ஆனால் இவரது கட்சி அவ்வாறானதல்ல என்பது வேறுவிடயம். ஆகவே இவரது தேர்தல் பிரச்சராத்திற்கு இடம் கொடுத்தமையானது வெள்ளையினத்திற்கான நமது அடிமைத்தனப் பண்பையே; வெளிப்படுத்துகின்றன. ஏனனில் அதுவரை சபையோரின் கேள்விக்கான நேரம் மிகவும் இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டது. மேலும் நாம் தேர்தல் பிரச்சார பேச்சைக் கேட்க விரும்பியிருந்தால் குறிப்பிட்ட கட்சியின் கூட்டத்திற்கு சென்றிருக்கலாம். இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கவேண்டிய தேவை  இல்லை. இத் தவறை சுட்டிக்காட்டியபோது, கனேடிய தமிழ் சிந்தனை வட்டத்தின் சார்பில் முரளிதரன் நடாராஜா இத் தவறுக்கான பொறுப்பை ஏற்று சபையில மன்னிப்பு கேட்டார். இதுதான் ஒரு தலைமைக்கு அழகு.

மீராபாரதி
26.04.2011

Advertisements

Responses

  1. எனது கவனக்குறைவால் மிக முக்கியமான ஒரு விடயத்தை தவறவிட்டுவிட்டேன்.
    சிலர் இக் குறிப்பை வாசித்த பின் அது தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டுவந்ததால் இங்கு பதிவிடுகின்றேன்.
    நாடு கடந்த தமிழிழத்தின் சபாநாயகர் பொன். பாலாராஜன் அவர்கள் ஜ.நா இலங்கை அரசாங்கம் மற்றும் புலிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவேண்டும் எனவும் இலங்கையின் தமிழ் தேசத்தின் அரசியல் மற்றும் அதன் செய்ற்பாடுகள் தொடர்பாக புலமும் நாடு கடந்த தமிழிழ அரசாங்கமும் ஆதரவு நிலையில் மட்டுமே செயற்படலாம் எனவும் தமிழ் தேசத்தின் அரசியலை புலம் தீர்மானிக்கவோ ஆதிக்கம் செலுத்தவோ முடியாது எனவும் குறிப்பிட்டார் என சுட்டிக்காட்டப்பட்டமையால் இங்கு மீள் பதிவிடுகின்றேன்.
    ஏனனில் இது நாடு கடந்த தமிழிழ அரசாங்கத்தின் முக்கியமான புதிய அரசியல் நிலைப்பாடாகவே பார்க்கப்படவேண்டியுள்ளதுடன் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுமாகும்.

  2. thamil sinthanai vaddam’s photo album: Apr23

    https://picasaweb.google.com/100031405986236942157/SinthanaiVaddamApr23?authkey=Gv1sRgCKeCxfic1NXQuQE&feat=email#


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: