Posted by: மீராபாரதி | September 6, 2010

பிரக்ஞை: துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்

பிரக்ஞை: துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்

தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழ்கின்றவர்கள் இன்று பல்வேறு தளங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருப்பதுடன் பின்தங்கிய நிலையிலும் உள்ளார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. இவர்களது வாழ் நிலை மற்றும் மனநிலை என்பன மிகவும் பாதிப்படைந்து கவலைக்கிடமாகவும் நம்பிக்கையிழந்தும் காணப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச சமூகங்கள் மற்றும் இந்திய சிறிலங்கா அரசாங்கங்கள் இம் மனிதர்களுக்கு நம்பிக்கையளிக்களிக்கின்ற எந்தவிதமான செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் இம் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளும் புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களும் குறிப்பாக புலம் பெயர் விடுதலைப் புலிகளின் தலைமைகளும் மற்றும் பிற இயக்கத் தலைமைகளும் கூட இவர்கள் மீது அக்கறையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் தமது உயிரைக் கொடுத்து வேலை செய்கின்றளவிற்கு அறிக்கைகள் மட்டும் விடுகின்றார்கள். உண்மையில் ஒவ்வொருவரும் எரிகிற வீட்டில் கூரையைப் பிடுங்குவதுபோல் தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கஸ்டங்கள் முரண்பாடுகளில் குளிர்காய்வதுடன் தமது கட்சிகள்; அல்லது அமைப்புகள் இயக்கங்கள் என்பவற்றையே உறுதியாக நிலைநிறுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்குமே முயற்சிக்கின்றனர். இதன்மூலம் தமது அதிகாரங்களை பெறுவதற்கும் தக்கவைப்பதற்கும் பதவிகளைக் காப்பாற்றுவதற்கும் மட்டுமல்ல மேலும் மேலும் அவர்களிடம் பணம் கறப்பதற்கும் அதைப் பெருக்குவதையுமே நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காகவே இதுகால வரையான தமிழ் பேசும் மனிதர்களின் சமூக அரசியல் சுழல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் அவ்வாறே நடைபெற்று வருகின்றன. இதற்காக அண்மைக் காலங்கள்வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் போராட்டம், வீரம், துணிவு, வெற்றி மற்றும் துரோகி….என்பன போன்று பல. இன்று துரோகி என்பது பரவலாகவும் மற்றும் சரணாகதி, சரணடைதல், சமாதானம் போன்ற சொற்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே துரோக அரசியல், சரணாகதி அரசியல், சரணடையும் அரசியல், சமாதான அரசியல் என்பவற்றின் பண்புகள் மற்றும் அதன் சாதக பாதக அம்சங்கள் தொடர்பாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அப்பொழுதுதான் நாம் அவற்றை விளங்கிக்கொண்டு முன்நோக்கி செயற்பட முடியும். மேலும்; இதுகாலவரை நாம் எவ்வாறன அரசியலை முன்னெடுத்தோம் என்றும் இனி எவ்வாறன அரசியலை முன்னெடுக்காலாம் எனவும் ஆராயவும் சிந்திக்கவும் முடியும்.

இன்று விடுதலைப்புலிகள் ஆகக் குறைந்தது இலங்கையிலாவது ஒரு அமைப்பாக சக்திவாய்ந்தவர்களாக இல்லை. அவர்களது இருப்பு இல்லை என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தபோதும், உண்மையான யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்வதே முன்நோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தொடர்ந்தும் புலிகளது தலைமையையும் அவர்களது கடந்தகால செயற்பாடுகளையும் விமர்சிப்பது என்பது பயனற்றது. ஆனால் புலம் பெயர் சுழலில் வாழுகின்ற புலிகளின் தலைமைகள் பலர் இன்றும் செயற்படுகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாரகன் இல்லாதபோது இவர்களுக்கு இடையிலான பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதுடன்; தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. ஆகவே இவ்வாறு இவர்கள் தமக்குள் பதவி அதிகாரம் மற்றும் முக்கியமாக பணத்திற்காக இழுபறிப்படுவதும் சண்டைபிடித்து ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும் ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. ஏனனில் இவர்களின் அடிப்படை அரசியல் தமிழ் பேசும் மனிதர்களின் தேசிய விடுதலைக்கான அரசியலை பெயரளவிலும் பிரச்சாரளவிலும் முதன்மையானதான கொண்டிருந்தார்கள். இவ்வாறன அரசியலைப்; பயன்படுத்தி தமிழ் பேசும் மனிதர்களிடம் பெருமளவான பணத்தை வசூலித்து பின் அவர்கள் மீதே அதிகாரத்தை பிரயோகித்தும் அடக்கியும் வந்தமையே புலித்தலைமையின் கடந்தகால அரசியல் வரலாறு. இன்று இவ்வாறு தமக்குள் பிளவுபட்டிருக்கும் புலிகள் குறிப்பாக புலம் பெயர் புலித் தலைமைகள் ஒவ்வொரும் ஒவ்வொரு பாதைகளில் அதாவது எதிர்எதிர் பாதைகளில் தமது குறுகிய நலன்களுக்காகவும் நோக்கங்களுக்காக தொடர்ந்தும் செயற்படுகின்றனர். ஆகவே புலித் தலைமையின் கடந்தகால ;செயற்பாடுகளை விமர்சனக் கண்ணோடு நோக்குவதன் மூலம் அவர்களின் ஆரம்ப காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான செயற்பாடுகளிலிருந்து நாம் பாடங்கள் கற்பது பயனுள்ளதாகும். அதேவேளை புலம் பெயர் புலிகளின் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்;ச்சியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதும் முக்கியமானதாகும். ஏனனில் ஏற்கனவே பலவழிகளில் நசிந்துபோயிருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை தமது குறுகிய நலன்களுக்காக இவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தாமலிருப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்கள் உதவும். மேலும் கடந்தகால வரலாற்றை பக்கச் சார்பற்றவகையில்; கற்பதே, நாம் மேற்கொண்டு ஆரோக்கியமான சிந்தனைகள் செயற்பாடுகள் மூலம் முன்நோக்கிச் செல்வதற்கு உதவும்;.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய “துரோக அரசியல்” என்பது தொடர்பான நாம் தெளிவான ஒரு பார்வையைக் கொண்டிருக்கவேண்டும். ஆயுதப்போராட்டக் காலங்களில் குறிப்பாக புலிகளின் தனிச்சையான ஆதிக்கமிருந்தபோது இச் சொல்லும் அதனடிப்படையிலான செயற்பாடும் மிகப் பிரபல்யமாகவும் இருந்தது. இதற்கு முன்பு பாராளுமன்ற அரசியலிலும் இச் சொல் பயன்படுத்தப்பட்டபோதும் ஆயுதப்போராட்டத்தின்போதுதான் “துரோக அரசியல் செய்பவர்கள்” என்பவர்கள் கொலைசெய்யப்பட்டு அழிக்கப்படுமளவிற்கு வளர்ந்து ஒரு அரசியல் செயற்பாடாக கட்டமைக்கப்ட்டது. தனி நபர் நலன்களுக்காக, தமது பதவிகளைக் காப்பதற்காக, தனிப்பட்ட குரோதங்களுக்காக, கருத்துமுரண்பாடுகளுக்காக என பல உள்மனக்; காரணங்களுக்காக அரசியல் என்ற முகமுடி அணிந்து அரசியல் காரணங்கள் பல கூறி துரோகி என்ற பட்டமளித்து பல மனித உயிர்களை ஒவ்வொரும் இயக்கங்களும் கொலை செய்தன.. இதன் தாக்கத்தால் பயத்தால் பல மனிதர்கள் தாம் துரோகி பட்டம் பெறக்கூடாது என்பதற்காகவே ஆதரவாளராக செயற்பட்டனர் அல்லது நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு மௌனிகளாக இருந்தனர். இவ்வாறுதான்; தமிழ் பேசும் சமூகத்தில் “துரோகி” என கட்டமைக்கப்பட்ட சொல்லினால் ஏற்பட்ட மிகமோசமான எதிர்விளைவுகள் ஆரம்பமாகின. அதாவது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் போராட்ட இயக்கங்களுக்கு சார்பாகவோ ஆதரவாகவோ இல்லாது சிறிலங்காவின் சிங்கள கட்சிகள் சார்ந்து அல்லது இடதுசாரி கட்சிகள் சார்ந்து செயற்படுகின்றவர்களுக்கு இயக்கங்களால் துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின் போராட்டமானது புலிகளின் தலைமையால்;; ஏதேச்சதிகாரத்துடன் முன்னெடுக்கப்பட்டபோது புலிகளுக்கு எதிரானவர்கள் அதாவது புலிகளைப் போலவே தமிழ் தேசிய விடுதலைக்காகப் போராடியதாக கூறிய பிற தமிழ் இயக்கங்கள்; உட்பட அனைவரும் “துரோகி” என முத்திரை குத்தப்பட்டு கொத்துக்கொத்தாக சுடப்பட்டும் எரிக்கப்பட்டும் குண்டுகள் வைத்தும் அழிக்கப்பட்டனர். அதாவது தமிழ் பேசும் மனிதர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது புரிந்துணர்வினடிப்படையில் பல்வேறு தளங்களில் வழிகளில் முனைப்புடன் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடன் செயற்பட்ட பலர் புலிகளின் அரசியலை ஏற்கவில்லை அல்லது உடன்படவில்லை என்ற ஒரு காரணத்திற்காகவே “துரோகி”யாக முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கே இந்த நிலைமை எனின் புலிகளை விமர்சித்தவர்களது நிலை தொடர்பாக நாம் புரிந்துகொள்ளலாம். இதன் விளைவாக, “துரோக அரசியல்” செய்பவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனை என்பது தமிழ் பேசும் மனிதர்களின் சமூகத்திலிருந்த கொஞ்சநஞ்ச ஐனநாயக விழுமியங்களையும் இறுதியாக குழித்தோண்டி புதைத்தது. அதாவது புலிகளின் அரசியலுக்கு மாற்றான அனைத்து அரசியல் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது அல்லது புலிகளின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிற ;இயக்கங்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக இந்திய இராணுவம் இருந்த காலத்தில் இவர்களது அதிகார அடாவடித்தனம்; புலிகளின் சதாரண அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொது மனிதர்களுக்கு எதிராகவும் மிகவும் மோசமான முறையில் நடாத்தப்பட்டது. இதனால் அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக நடைபெறவேண்டிய ஆரோக்கியமான போராட்டத்தில், கனவு கண்ட புதிய சமுதாயத்தில் இருக்கவேண்டிய சகல ஐனநாயக விழுமியங்களும் பன்முகத் தன்மைகளும் அனைத்து இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என்பவற்றால் இல்லாது செய்யப்பட்டது. இதற்காக பொறுப்பு ஏற்கவேண்டியது சமூகப் பிரக்ஞை கொண்டு ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.

புலிகளின் ஆதிக்கம் இல்லாது போனதற்குப் பின்பான இன்றைய சுழலில் துரோகி என்றால் என்ன அது யார் என்பதற்கான வரைவிலக்கணம் விளக்கம் அளிக்க முடியாதளவு சிக்கலாக்கியுள்ளது. அதாவது புலிகளின் அங்கத்தவர்களுக்கு எதிராகவே இன்று இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக இன்று புலிகள் இயக்க அங்கத்தவர்கள் தமக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி “துரோகி” என அழைக்குமளவிற்கு “துரோகி” என்ற சொல் மிகவும் மலினப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு தளத்திலும் புலத்திலும் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களின் செயற்பாடே காரணமாக இருக்கின்றது. இதற்கு போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து மாத்தையா வரை தொடர்ந்து பின் அண்மைக் கால உதாரணமான கருணா மற்றும் பிள்ளையான் தொடங்கி இன்றைய கே.பி மற்றும் நெடியவன் வரை இது பரந்து இருக்கின்றது எனக் கூறினால் மிகையல்ல. புலிகளின் அரசியல் பார்வையில் பிரபாகரனின் இறுதி முடிவு கூட “துரோக அரசியல்” எனவே கருதப்படவேண்டியுள்ளது. ஏனனில் தன்னுயிரைக் காப்பாற்ற சரணடைய முயன்றுள்ளார். ஆல்லது சயனைட் அருந்தாது தப்பிக்க முனைந்துள்ளார். ஆனால் என்ன நடந்தது என்பது அவருக்கும் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் புலிகளால் கட்டமைக்கப்பட்ட பிரகாரனின் விம்பம் இறுதிநேரத்தில் உடைபட்டது என்பது மட்டும் உண்மையானது என்பதை இன்று பலர் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான “அரசியல் துரோகி” களுக்கு தண்டனை என்ன?

பொது மனிதர்களுக்கு எதிராகவும் ஐனநாயக மறுப்பு கொண்ட அரசியல் செயற்பாடுகளிலும் ஒருவர் ஈடுபடுவாரானால் அவருக்கான அதிகபட்ச தண்டனை என்பது நிச்சயமாக மரண தண்டனையாக இருக்கக் கூடாது.. மரண தண்டனை என்பது அகராதியிலிருந்தே எடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது எனது உறுதியாக நிலைப்பாடு ஆகும். ஏனனில் எனது செயற்பாடு பேச்சு எழுத்து என்பவற்கு மாறான அல்லது எதிரான ஒரு மனிதரின் செயற்பாட்டுக்காக பேச்சுக்காக எழுத்திற்காக அவரது உயிரை எடுப்பது என்பது ஐனநாயக விரோதம் மட்டுமல்ல காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான செயற்பாடாகும். ஒருவருக்கான தண்டனை என்பது அவரை ஆரோக்கியமான வழிகளில் நேர்மறை மனிதப் பண்புகளுடன் மாற்றுவதற்கான வழிவகையாக இருக்கவேண்டுமேயொழிய அவரையே அழிப்பதாக இருக்கக்கூடாது. ஏனனில் காலோட்டத்தில் ஒருவர் மீது குத்தப்படும் எதிர்மறை முத்திரை என்பது நேர்மறை முத்திரையாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் வாழ்வில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இது ஆரோக்கியமான முன்னேற்றமான மாற்றமா என்பது சிந்தனைக்கு உரியதாக இருக்கலாம். ஏனனில் ஒருவர் தனது எல்கை;குட்பட்ட அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்பவே தான் எதிர்நோக்கும் சூழலைப் புரிந்துகொள்வதுடன் அதனடிப்படையில் செயற்;படுவார்.

உதாரணமாக இன்று தமிழ் தேசிய அரசியலில் இருக்கின்ற முக்கியமான தலைவர்கள் சிலர் அல்லது பலர் முன்பு பல்வேறு இயக்கங்களில் போராளிகளாக இருந்தவர்கள். அந்த இயக்கங்கள் புலிகளினால் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டபேர்து இவர்களுக்கு துரோகி பட்டம் வழங்கப்பட்டது. காலமாற்றத்தின் பின் இவர்கள் புலிகளுடன், அவர்களின் ஆயுதப்போராட்டத்தின் மீது; நம்பிக்கை வைத்து, அல்லது வேறு வழி ஒன்றுமில்லை என அதில் இணைந்து, அல்லது அவர்களது அரசியலுக்குள் சரணாகதி அடைந்து, அல்லது மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர் பட்டங்கள் என பல காரணங்களுக்காக புலிகளின் அரசியலை பின்நாட்களில் முன்னெடுத்தனர் அல்லது முன்னெடுக்கின்றனர். இவ்வாறு புலிகளால்; துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பலர் பிற்காலங்களில் மாமனிதர் நாட்டுப்பற்றாளர் என புலிகளின் தலைiமையால் அலங்கரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் நடைபெற்றதுண்டு. அதேவேளை மிகச் சிறந்த போரளிகள் என் புலிகளால் பொது மனிதர்களால் போற்றப்பட்ட பலர்; துரோகிகள் என குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை பெற்றவர்களும் உண்டு. ஆகவே காலம் ஒருவரை பலவாறு மாற்றுகின்றது. புலித்தலைமையை அன்று போற்றிய அரசியல்வாதிகள்; பலர், புலிகளின் ஆதிக்கம் இல்லாத இன்றைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களிடம் மீண்டும் அரசியல் சரணாகதி அடைந்துள்ளனர் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம்.

ஆகவே ஒருவரை துரோகி என்பது சர்வதிகாரமாகவும் சமூகத்திலிருக்கின்ற ஐனநாயக பண்புகளை வழிகளையும் முடுவதாகவுமே இருக்கும். ஒவ்வொருவருக்கும் மற்றவர்களது ஐனநாயக உரிமைகளை பறிக்காதவரை மறுக்காதவரை தான் விரும்பும் அரசியலை தனது வழிகளில் செய்வதற்கான தார்மீக உரிமை இருக்கின்றது. இதை ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும். இங்கு துரோகம் எனப்படுவது சார்பு நிலையானது மட்டுமே. இதில் யார் சரி பிழை என்பதை எதிர்கால வரலாறு மட்டுமே தீர்மானிக்கும். ஆகவே ஒருவரது அரசியலை துரோக அரசியல் என முத்திரை குத்துவதைக் கைவிட்டு அவரவர் பாதையில் அடக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் விடுதலைக்கான தமது பங்களிப்பு, பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து செயற்படுவதே சரியான நிலைப்பாடாக இருக்கும். மேலும் மனித நலன்களுக்கா செயற்பட விரும்புகின்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டியதும் அறிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் யார் அடக்கப்பட்ட மனிதார்களின் சார்பாக, அவர்களின் விடுதலைக்காக, சமூக மாற்றத்திற்கா உழைக்கின்றார்கள் என்பதே. இதைப் புரிந்துகொள்ளாதவரை, “துரோக, சரணகதி, சரணடைதல், சமாதான” அரசியல் என்ற பல முத்திரைகளை பிறர் மீது குத்தி குறுகிய பார்வையையும் செயற்பாட்டையுமே நாம் கொண்டிருக்க முடியும். ஒருவர் தனது சிந்தனை மற்றும் தான் செய்யும் செயற்பாடு என்பவை அடக்கப்பட்ட மனிதர்கள் அரசியல் சமூக அபிலாசைகளை உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற பிரக்ஞை இருக்கும் பொழுது மட்டுமே அவர் அம் மனிதர்கள் சார்ந்து தனது அரசியலை தான் விரும்பிய வழிகளில் முன்னெடுக்கின்றார் எனலாம். இவ்வாறன பிரக்ஞையில்லாதவர் தனது அற்ப சொற்க நல்ன்களுக்காக சரணாகதி அரசியலையே முன்னெடுப்பார். இருப்பினும் என்ன அரசியலை முன்னெடுப்பது என்பது ஒருவரது தெரிவு. ஆதைப் பற்றி நாம் நமது அரசியலின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமை மட்டுமே நமக்குள்ளது.; நமக்கு எதிரான அரசியல் செய்கின்றார் என்பதற்காக அவர்களது உரிமைகளை மறுப்பதோ அடக்குவதோ அழிப்பதோ அல்லது மரண தண்டணை விதிப்பதோ நமத உரிமையல்ல. இது நாம் கனவு காணும் சமூகத்திற்கு எதிரான, ஐனநாயகத்திற்கு எதிரான, தனிமனித உரிமைக்கு எதிரான செயற்பாடாகவே இருக்கும். ஆகவே “துரோக அரசியல்” என்ற சொல்லுக்கும் நாம் விடை கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

சரணாகதி அரசியல் என்பது தமது சொந்தப் புத்தியிலும் பலத்தில் நிற்காது, தாம் அல்லது அடக்கப்பட்ட மனிதர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கும்; அவற்றுக்குத் தேவையான முடிவுகள் தீர்வுகள் என்பன தொடர்பாக அரசாங்கத்திடம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் முழுமையாக விட்டுவிடுவதுடன் தம்மையும் அவர்களிடம் முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கூறுவதை எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாது ஏற்பதும் என்பதாகக் கூறலாம். உதாரணமாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் அதனது தலைவர்களும் தமது அதிகாரங்களிலும் பதவிகளிலும் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். ஏனனில் இவர்களது அரசியல் செயற்பாடுகள் தமிழ் பேசும் மனிதர்களது அரசியல் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் உறுதியாக இலங்கை இந்திய மற்றும் சர்வதேச அரசாங்கங்களிடம் முன்வைப்பதாகவோ அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பாதாகவோ தெரியவில்லை. ஏனனில் யார் ஆட்சியிலில் அல்லது அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்களிடம் ஒவ்வொருமுறையும் அவர்கள் முன்வைக்கும் முடிவுகளுக்கும் தீர்வுகளுக்கும் அற்ப சலுகைகளுக்கும் தாம் சரணாகதி அடைவதுதான் இவர்களது பிரதான அரசியலாக என்றும் இருந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களது அரசியலை ஒவ்வொருமுறையும்; குழிதோண்டிப் புதைப்பதாகவே இவர்கள் வரலாறு இருக்கின்றது. இதில் இரண்டுவிதமான போக்குகள் உள்ளன. ஒன்று இலங்கையில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு, இந்திய ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதாரணமாக அன்றிலிருந்து இன்றுவரையான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இன்றைய தமிழ் தேசிய கூட்டணி வரையிலான கட்சிகளின் அரசியலும்;; அதன் தலைமைகளினதும் அரசியல் போக்கும் மரபும் இவ்வறானதாகவே உள்ளது. இரண்டாவது போக்கு இலங்கையில் ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதராணமாக தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிரானவர்களது கட்சிகளின் கூட்டணி அரசியல் இந்த வகைக்குள் அடங்கும். இந்த வகைக்குள் முன்னாள் புலிகளின் தளபதிகள் இருப்பதுதான் இன்றைய முரண்நகை. இந்த முன்னால் புலிகளின் தளபதிகள், இன்று பேசும் அரசியலை கேட்டால் இவர்களா புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் என ஆச்சரியப்படவைக்கின்றது. அந்தளவிற்கு அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ளார்கள். இவர்களது பழைய மொழியில் இதுதான் “துரோக அரசியல்”. இவ்வாறு இவர்களது அரசியல் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம் புலிகள் இயக்கத்தில் இருந்த அரசியல் இன்மையா அல்லது ஒவ்வொரு தனிபர்களிடம் இருந்த அவர்களது சொந்த அரசியல் அறிவின் பற்றாக்குறையும் சாதிய பிரதேச வர்க்க நிலைப்பாடுமா என்பது நம் சிந்தனைக்குரிய விடயம்.

ஆனால் இந்திய இலங்கை அரசாங்கங்கள் தமக்குள் முரண்பாடுகள் இருந்தபோதும் தமக்கிடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஒரு ஆழமான உறவை;; வைத்துள்ளார்கள். இதனால்தான் இலங்கை இந்திய ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்கும் நல்ன்களுக்கும் ஏற்ப பயன்படுத்தும் அரசியலாக தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் என்பது சுதந்திரத்திற்கு முன்வு இருந்து இப்n;பாழுது வரை இருக்கின்றது. இது தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை மிகவும் துரதிர்ஸ்டமானது. மறுபுறம் இவர்களது மொழியில் பார்த்தால், சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்களின் அரசியலின் அடிப்படையில், அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலின் அடிப்படையில், புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் என ஒவ்வொருவரும் முன்னெடுத்த முன்னெடுக்கின்ற அரசியல் என்பது அடக்கப்பட்ட பொது மனிதர்களுக்கு எதிரான “துரோக, சரணாகதி அரசியல்” என்றால் மிகையல்ல. இதற்காக இவர்களுக்கு துரோகி பட்டம் அளித்து மரண தண்டடை அளிப்பதல்ல அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலை முன்னெடுப்பவர்களின் பொறுப்பு. மாறாக இவர்களது பொறுப்பான பணியானது, அடக்கப்பட்ட மனிதர்களிடம் இவ்வாறான சுய நல பிழைப்பு அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அடக்கப்பட்ட பொதுமனிதர்கள் இவ்வாறான அரசியல்வாதிகளைக் புரிந்துகொண்டு புறக்கணிக்குமளவிற்கு பிரக்ஞை கொண்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் செயற்படவேண்டும்.

இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்ததைவிட யுத்த காலத்தில் அதாவது புலிகள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் புலிகளின் தலைமையிடம் சரணாகதி அடைந்தவர்கள் தான் மேற்குறிப்பிட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப்போல மனித உரிமை, ஐனநாயகம் கதைத்த மேலும் பலர் இவ்வாறு புலிகளிடம் சரணாகதியடைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இதற்கு காரணம் அன்று புலிகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட அதீத நம்பிக்கை ஐதீகங்கள் மயக்கம் மற்றும் பிம்பங்கள் என்பனவாகும். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட கருத்தாதிக்கத்தால் அல்லது அவர்களது வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவாக அதில் மயக்கமடைந்து அவர்களது பிற்போக்கான அரசியல் செயற்பாடுகளையும் ஐனநாயக வீரோத போக்குகளையும் மறந்து அவர்களை ஏற்றுக்கொண்ட பலர் இன்றுவரை மீண்டும் விழித்து எழவில்லை என்பது கவலைக்கிடமானது. இதில் பல கலாநிதிகள் பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்களும் அடக்கம் என்பதும் இன்றுவரை இவ்வாறன புலம் பெயர் புலித்தலைமைகளுக்காக குரல் கொடுப்பதும் செயற்படுவதும் தமிழ் தேசிய அரசியலில் ஒரு துர்ப்பாக்கியமான நிகழ்வாகும். இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்கள் தமது; அரசியல் உரிமைகளைப் வெறவேண்டுமாயின் இவ்வாறான சரணாகதி அரசியலுக்கு முதலில் முற்றுபுள்ளி வைக்கவேண்டியது அவசரமான அவசியமான செயற்படாகும். அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்கான, அவர்களின் நல்வாழ்வுக்கா, சமூக மாற்றத்திற்கான அரசியலை, தமக்கிருக்கும் ஜனநாயக வழிகளில் உறுதியுடனும் வெளிப்படையாகவும் முன்வைத்து பல்வேறு வழிகளில் செயற்படுவதனுடாக தமது நோக்கத்தை பிரக்ஞையுள்ள அரசியற் செயற்பாட்டாளர்கள் அடையலாம். இதுமட்டுமல்ல இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமது ஐனநாயக எல்லைகளை மேலும் பரந்தளவில் விரிவாக்கிக்; கொண்டு முன்னே செல்லலாம். இன்றைய சுழலில் இவ்வாறன செயற்பாடுகளை இலங்கை இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேசளவில் ஒருக்கிணைத்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதின் போக்கில் கட்டமைக்கப்பட்ட “துரோக மற்றும் சரணாகதி அரசியல்” தொடர்பான சொல்லாடலானது சரணடைதல் என்பது தொடர்பான எதிர்மறையான ஒரு கருத்தாதிக்கத்தை நமக்குள் விதைத்துள்ளது. தனிப்பட்ட முறையில் ஒரு மனிதராக எந்த ஒரு இராணுவத்திடமும் நான் சரணடைவது என்பது என்னாhல் சிந்திக்கவோ நினைத்துப் பார்க்கவோ முடியாத ஒரு விடயம். இதற்கு சரணடைவது வெட்ககேடானது என்பதல்ல முக்கியமான காரணம். மாறாக சரணடைதலின் பின் முகம் கொடுக்கவேண்டிய அல்லது அனுபவிக்கவேண்டிய சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களை கற்பனை செய்யும் பொழுது அதை ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவே முடியாது என உணர்வதே முக்கிய காரணம். இருப்பினும் இறப்பதா சரணடைவதா என இரு தெரிவுகள் என் முன்னால் இருக்கும் பொழுது சரணடைவதையே தெரிவு செய்வேன். ஏனனில் நாம் போராடுவது எனது வாழ்வையோ பிற மனிதர்களது அதாவது புரட்சியாளர்கள் எதிரியாக கருதும் அரசாங்கத்திடம் அடியாளாக பணத்திற்காக வேலை செய்யும் இராணத்தினரின் வாழ்வை கூட அழிப்பதற்கல்ல. மாறக ஒவ்வொரு மனிதர்களதும் அவர்கள் வாழும் சமூகத்தினதும் வாழ்வை மேம்படுத்துவதற்கே நமது ஒவ்வொரு போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் மிகையல்ல. ஆகவே சரணடைவதன் மூலம் தொடர்ந்து வாழ்வதற்கான முடிவை எடுப்பதே சரியானது என்பதே எனது நிலைப்பாடு. இவ்வாறு சரணடையும் முடிவை எடுக்கும் பொழுது முன் திட்டமிடலுடன் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பாதுகாப்பை பெற முடியுமாயின் அது நிச்சயமாக சாதகமான ஒரு விடயமே. ஏனனில் இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது சித்திரவதையிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக இது இருக்கும். இரண்டாவது ஒரு அரசியல் கைதியாக போராட்டத்தை தொடர்வதற்கும் இது வழி செய்யலாம். இதன் மூலம் நாம் தொடர்ந்தும் ஒரு மனித உயிரை காப்பாற்றுவதும் அவர் வாழ்வை பாதுகாப்பதும் மட்டுமல்ல போராட்டத்தையும் வேறு தளங்களில் முன்னெடுத்துச் செல்ல முனையலாம்;. ஆகவே சரணடைவது என்பது ஒன்றும் வெட்கப்படவேண்டிய விடயமல்ல. அது மிகவும் துணிகரமான முடிவே என்றால் மிகையல்ல. ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சரணடைதல் என்பது இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படாமை இறுதியாக புலிகளின் தலைமையே தன்னைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு கொண்டு வந்தவிட்டது மனிதாபிமானடிப்படையில் கவலைக்குரிய விடயமே.

விடுதலைப் புலிகளின் தலைமையானது தமது இராணுவரீதியான செயற்பாட்டுக்குள்தான் தமது அரசியலை உள்ளடக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனாhல்தான் போராட்டத்தில் இராணுவ ரீதியாக ஏற்படும் தோல்வி என்பதை தமது அரசியல் ரீதியான தோல்வியாகவும் கருதினர். ஆனால் நிச்சயமாக அப்படி சிந்திக்கவோ அல்லது இருந்திருக்கவோ வேண்டிய அவசியமில்லை. ஏனனில் இரண்டும் முற்றிலிலும் இரு வேறு விடயங்கள் மட்டுமல்ல இராணு அல்லது ஆயுத வழி செயற்பாட்டின் தேவை என்பது பிரதான அரசியல் செயற்பாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய கால தேவைக்காக பயன்படுத்தப்படும் ஒரு பகுதியான செயற்பாடு மட்டுமே. ஆனால் புலிகளின் தலைமை, ஒரு போராட்டத்தின் ;பகுதிச் செயற்பாடையே, போராட்டத்தின் பிரதான செயற்பாடாக கருதி மதித்து முன்னெடுத்தனர். இது தொடர்பாக கிளிநொச்சி பிடிபடுவதற்கு முன்பு, “இராணுவ தோல்வியா? அரசியல் தோல்வியா” என ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதை எனது வலையில் பார்க்கலாம். பல நேரங்களில் புலிகளின் தலைமை இவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கத் தவறிவிட்டனர். புலிகளின் தலைமையானது தமதுஇறுதிக் கணங்களில் அரசியல் ரீதியாக சரணடைவது, இராணுவ ரீதியாக சரணடைவது, தமது நல்ன்களுக்காக சரணடைவது என மூன்றையும்; ஒன்றுடன் ஒன்று குழப்பியதன் விளைவே அவர்களுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியமான முடிவுக்கு காரணம் எனலாம். அதாவது இவர்கள் இராணுவ ரீதியாக சரணடைதல் என்பதை தமது அரசியலையே சரணடைய செய்யும் சரணாகதி அரசியலாகவும் நினைத்தமையே இன்றைய நிலைமை ஏற்ப்படக் காரணமாகவுள்ளது என்றால் மிகையல்ல.; கிளிநொச்சி பிடிபட்ட போது கூட சரணடைதல் என்பதை புலிகள் அரசியல் ரீதியான தோல்வியாக கருதாது தற்காலிக இராணுவ ரீதியான தோல்வியாகவும அதற்கான சரணடைதலாகவும் புரிந்து செயற்பட்டிருப்பார்களேயானால் இறுதிக ;காலங்களில்; குறிப்பாக பொது மனிதர்களுக்கும் கீழ் நிலை போராளிகளுக்கும் ஏற்பட்ட கொடுரமான நிலையைத் தவிர்த்திருக்கலாம். ஏனனில் குறிப்பிட்ட சுழ்நிலையைப் பொறுத்து, உதாரணமாக அதிகமான இழப்புகளை கொடுக்கப்போகின்றோம் எனக் கருதும் பட்சத்தில், அதாவது முதலில் பொது மனிதர்களது உயிரையும்; பின் நமது உயிரையும் பாதுகாக்;கும் நோக்கத்துடன் மற்றும் அடுத்த கட்டத்திற்கு தமது அரசியல் செயற்பாட்டைக் கொண்டு செல்வதற்குமான ஒரு தந்தர உபாயம் என இவ்வாறான இராணுவ சரணடைதலைக் கூறலாம்.; மாறாக இது ஒருவரது அல்லது இயக்கத்தினது அல்லது கட்சியினது அரசியலையோ அதன்; கொள்கைகளையோ சரணடையச் செய்வதாகவோ அல்லது நீர்த்துப்:போவச் செய்வதாகவோ அல்லது சரணாகதி அரசியலாகவோ இவ்வாறன சரணடைதல்கள் செயற்பாடுகள் ஏற்படுத்;தாது அல்லது கருதப்படமாட்டாது என்பதை அன்று புலிகளின் தலைமை புரிந்திருக்கவில்லை.

நாம் வாழும் காலத்தில் பல உதாரணங்கள் இருக்கின்றன. உதராணமாக அனைவரும் அறிந்த இரண்டு பிரபல்யமான தலைவர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் நெல்சன் மன்டேலா. மற்றவர் பிடல் காஸ்ரோ. இவர்கள் இருவரும் தம்;மை அடக்கிய இராணுவத்தால் பிடிப்பட்டவர்கள். இராணுவத்தில் பிடிபடுவதற்கு பதிலாக அவர்கள் அன்றே இறந்திருக்கலாம். அவ்வாறு அன்றே சண்டையிட்டு இறந்திருந்தால் என்ன பயன்? நிச்சயமாக அவர்களது உயிர் இருந்திருக்காது. போராட்டத்திற்கு என்ன நடந்திருக்கும் என எந்த விதமான எதிர்வும் கூறமுடியாது. ஆனால் அவர்கள் பிரச்சனைகளுடன் வாழ்ந்தார்கள். வாழ்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர்கொண்டு எவ்வாறு தமது போராட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லலாம் என சிந்தித்தவர்கள். செயற்பட்டவர்கள். நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தாவாரே போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றவர். பிடல் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற தனது பிரபல்யமான சொற்பொழிவை தனக்கு எதிரான அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் ஆற்றி அதை நாமும் கற்பதற்கு புத்தகமாக தந்தவர்.

இலங்கையிலும் இவ்வாறு பல உதாரணங்கள் இருந்தபோதும் தமிழ் தேசிய அரசியலில் தங்கத்துரை குட்டிமணி என்பவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் கைது செய்யப்பட்ட பின் ஒவ்வொரு முறையும் அவர்கள் நீதிமன்றத்தில் பேசியது அன்றைய சுழலில் முக்கியமான ஒரு போராட்ட அனுகுமுறையாக இருந்தது. அதாவது தம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தமது நோக்கத்தற்காக பயன்படுத்தினார்கள். இவ்வாறன ஒரு செயற்பாடே இவர்கள் வாழ்வானது. இது பொது மனிதர்களிடம் எழுச்சியை உருவாக்குதுடன் போராட்டம் தொடர்பான ஒரு விழிப்புணர்வையும் பரந்துபட்டளவில் ஏற்படுத்துவதற்கு ஊடகங்களினுடான இலவசமான பிரச்சாரத்திற்கும் வழிவகுத்தது எனக் கூறலாம். சிலர் இதற்கு எதிரான கருத்தாக, “பிரபாகரன் பிடிபட்டிருந்தால் அல்லது சரணடைந்திருந்தால் ரோகண வீஜயவீரவைக் கொன்றது போல் கொன்று இருப்பார்கள்” என்று கூறலாம். இது உண்மையானது மட்டுமல்ல அவ்வாறுதான் இறுதியில் நடந்தது. இருப்பினும் பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக இனி சண்டை பிடித்து வெல்லமுடியாது என உணர்ந்த நேரத்தில் சரணடையாது ஆகக் குறைந்நது மீண்டும் காட்டுக்குள்ளாவது சென்றிருந்தால் அனைவரும் அல்லது குறைந்த இழப்புகளுடன் தப்பித்திருக்கலாம். அனால் அதைக் கூட செய்யாது பல்லாயிரக்கணக்கான மனிதர்களும் இளம் போராளிகளும் அநியாயமாக இறப்பதற்கு அல்லவா புலிகளது தலைமையின் பிடிவாதமான அல்லது அவர்கள் எதையோ எதிர்பார்த்த அல்லது யாருக்காகவோ காத்திருந்த முடிவுகள் வித்திட்டது. இந்தத் தவறு எதனால் ஏற்பட்டது? இவ்வாறான தவறுகளுக்கு இன்று இருக்கின்ற புலிகளின் தலைமைகளில் யார் பொறுப்பாக பதில் கூறக் கூடியவர்கள்? கே.பி யா? நெடியவனா? உருத்திரகுமாரனா? ஆல்லது வேறு யாருமா? ஆல்லது இந்த பொறுப்புகளை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு தொடர்ந்தும் பிழைப்புவாத, பணம் உழைக்கும், நாட்களைக் கடத்தும் அரசியலையா தொடரப்போகின்றார்கள்? தமிழ் பேசும் மனிதர்களே எப்பொழுது இவர்களை நோக்கி நாம் கேள்வி கேட்பது? இறுதி போரில் இறந்தவர்கள் தொடர்பாக இவர்களது பொறுப்பு என்ன?

புலிகளின் தலைமை பொது மனிதர்களுக்காகத் தான் போராடினார்கள் எனின் அவர்களைக் காப்பாற்றுவதற்காக அநியாய அழிவுகளை தடுப்பதற்காக கிளிநொச்சி பிடிபடப்போகும் தறுவாயில் அல்லது பிடிபட்ட பின்பு கூட தமது ஆயுதங்களை மௌனிக்க செய்திருக்கலாம். ஆந்த நேரம் சரணடையும் முடிவு எடுக்கப்பட்ருந்தால் அது ஆரோக்கியமான உறுதியான தொலைநோக்குள்ள ஒரு அரசியல் முடிவாகவும் பல மனித உயிர்களைப் பாதுகாத்ததற்குமான முடிவாக இருந்திருக்கும். ஆனால் இறுதிக் கணங்களில் முள்ளிவாய்க்காளில் வைத்து தமது ;ஆயுதங்களை மௌனிக்கச் செய்து சரணடைந்தது என்பது பொது மனிதர்கள் மற்றும் கீழ் நிலைப் போராளிகளின் உயிர்களை எந்தவiகியலும் மதியாத அதைப் பற்றிய அக்கறையில்லாத தம்;மை அதாவது புலிகளின் தலைமைகளின் உயிரை மட்டுமே காப்பாற்ற எடுத்த ஒரு கேவலமான சுயநல முடிவாகவே இருக்கின்றது என்பது வெளிப்படையான ஒரு உண்மை. இவ்வாறான ஒரு முடிவு பிழை என நான் கூறவில்லை. ஆனால் காலம் தாழ்த்திய ஒரு முடிவு மட்டுமல்ல சுயநலம் சார்ந்ததுமாகும். ஏனனில் அப்பொழுதுதான் அவர்களுக்கு தாம் இனி தப்பப் போவதில்லை என்பதை உணர்ந்ததுடன் தம் உயிரின் முக்கியத்துவமும் அதைப் பாதுகாக்கவேண்டிய தேவையையும் உணர்ந்தார்கள். ஆனால் அதுவரை பிற மனிதப் போராளிகள் தம்மைத்தாமே தற்கொலை செய்தும் சண்டையிட்டும் தம்மைப் பாதுகாக்கப் போராடி இற்ந்தபோது அவர்கைள மாவீரர்களாக போற்றிய தலைவர்களுக்கு அவர்களது உயிர் பெரிதாக தெரிவில்லை. மேலும் பல போராளிகளை சிறையிலிருந்தபோது கூட தற்கொலை செய்யத் துண்டினார்கள். அப்பொழுதெல்லாம் சரணடைதல் பற்றி சிந்திக்கவில்லை. சமாதானம் பேசவில்லை. ஏனனில் இறந்தது நானல்லவே…யாரோ ஒருவர். வேறு மனிதர். மேலும் பொது மனிதர்கள் இறப்பதைப் பற்றிக் கூட புலிகளின் தலைமைக்கு எப்பொழுதும் கவலை இருக்கவில்லை. குழந்தைகள் படும் வேதனை பற்றிய உணரவில்i;ல. ஏனனில் தம்மை அவர்களில் ஒருவராக உணரவில்லை. நாம் நமது தேசம் என உணர்ந்தது, “வாழும் மனிதர்களையல்ல” மாறாக அந்த மனிதர்கள் வாழ்ந்த மண்ணையும் அந்த மண்னை சுற்றியிருந்த நீர் வளத்தையுமே. இல்லையெனில் உண்மையிலையே இந்த பொது மனிதர்கள்மீது அக்கறை இருந்திருக்குமாயின் கிளிநொச்சி பிடிபட்டபோதே தொடர்ந்தும் சண்டைபிடிக்காது போராளிகளையும் பொது மனிதர்களையும் அவர்களது உயிர்களையும் காப்பாற்றுவதற்கான முடிவை எடுத்திருப்பார்கள்.

புலிகளின் தலைமை இறுதிக்கணங்களான அந்த நேரம் சரணடைய எடுத்த முடிவு என்பது இராணுவ ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் எந்த வலுவுமில்லாததாக இருந்தது. யாரோ கூறியதுபோல் எல்லோரையும் கிண்டல் செய்யும் “ஒரு பகிடி”யான முடிவே அது என்றால் மிகையல்ல. இதன் அர்த்தம் அப்பொழுது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை இலங்கை ;அரசாங்கத்தின்; அனுசரணையுடன் அவர்களது இராணுவம் கொன்றதை நியாயப்படுத்துவதுமல்ல. அவர்கள் அவ்வாறு தமது உயிரைக் காப்பாற்ற எடுத்த முடிவை தவறு என கூறுவதுமல்ல. ஆனால் இரண்டு விடயங்கள் கவனத்திற்குரியது. ஓன்று சரணடைதல் தொடர்பான முடிவு எடுக்கப்ட்ட நேரமும் அதற்கான சுழலும் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியலை வலுவிலக்கச் செய்துள்ளதே இங்கு கவனத்திற்கு உரிய விடயமாகும். இரண்டாவது விடயமாக கவனிக்கப்படவேண்டியது. புலிகளின் தலைமைகள் தமது உயிர் பாதுகாப்பாக இருக்கும் வரை பல்லாயிரக்கனக்கான பொது மனிதர்கள் இளம் போராளிகள் தற்கொலை படையணிகள் இறப்பதை வியாபாரம் செய்து கொண்டாடிய போதும் மற்றும் துரோகி என பட்டமிழைக்கப்பட்ட வேறு அரசியல் கருத்துக்கள் கொண்ட மனிதர்கள் என்பவர்களையும் தாம் கொன்று தெருதெருவாக விசியபோதும் மனித உயிர் பற்றிய கரிசனை இல்லாமல் இருந்தது மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உரிய ஒரு விடயமாகும். திலிபன் குமரப்பா புலேந்திரன் உடன் இறந்த மற்ற ஒன்பது போராளிகளினதும் உயிர்களை மட்டுமல்ல இன்னும் பல்லாயிரக்கனக்கான போராளிகளினதும் பொது மனிதர்களினதும் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்களது விடுதலைக்காக பல வழிகளில் புதிய ஆரோக்கியமான முறைகளில் போராடியிருக்கலாம். ஆனால் இறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக தற்கொலை செய்ய நிர்ப்பந்திக்கப் பணிக்க அல்லது அவ்வாறு செய்யப் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஏனனில் தலைமையின் உயிர் மட்டும் பாதுகாப்பாக இருந்நது. ஆந்த உயிர் இறக்கவில்லை. இறந்தது எல்லாம் யாரோ ஒருவரின் உயிர். எனது கேள்வி சந்ததேகம் என்னவெனில் பல போராளிகளது தேவையில்லா மரணங்களை பல சந்தர்ப்பங்களில் தவிர்த்திருக்கலாம் என்பதே. என்னைப்பொறுத்தவரை எல்லாவற்றையும் விட மனித உயிரே உயர்ந்தது. ஆனால் தமிழ் இயக்கங்கள் குறிப்பாக புலிகளின் தலைமை வழிநாடாத்திய அரசியலோ உயிர்களை மிகக் கேவலமாக அற்பமாக மதிக்கும் அரசியல் என்றால் மிகையல்ல. ஆகவே இறுதி நேரத்தில் தமது உயிரைப் காப்பதற்காக மட்டும் சரணடையும் முடிவை எடுத்தது அவர்களது பார்வையில் “துரோகச் செயல்” தான். ஆனாhல் இது துரோகமா இல்லை என யார் தீர்மானிக்கப்போகின்றார்கள். இவ்வாறு கட்டாயமாகத் தீர்மானிக்கவேண்டும் என்பதல்ல இக் கட்டுரையின் நோக்கம். நமது போராட்டத்தின் அதைத் முன்னெடுத்த தலைமையின் பண்பை புரிந்துகொள்வதே முக்கியமானது. துரதிர்ஸ்வசமாக நமது போராட்டமும் போராடிய இயக்கங்களும் அடக்கப்பட்ட மனிதர்களுக்காகப் போரடவில்லை. அவர்களின் பெயரால் தமது அதிகாரத்திற்காகவே போராடினார்கள் என்றால் மிகையல்ல.

இவ்வாறு புலிகளின் தலைமை தொடர்பான அவர்களது சிந்தனைகள் செய்ற்பாடுகள் தொடர்பான ஆரோக்கியமான ஒரு விமர்சன பார்வையை முன்வைத்தோமேயானால் நாம் நிறையவே கற்ற முடியும். மாறாக நமது தேசிய தலைவரின் பாதையில் தொடர்ந்தும் செய்ற்படுவதாக கூறும் புலம் பெயர் புலிகளின் அமைப்புகளான நாடு கடந்த அரசாங்கமும் மற்றும் ஒவ்வாரு நாட்டிற்கான புலம் பெயர் புலிகளின் போலி ஜனநாயக சபைகளும் இவற்றுக்கான பதில்களை முன்வைக்கவேண்டும். கடந்தகால தவறுகள் மற்றும் பொது மனிதர்களின் சந்தேகங்கள் கேள்விகள் ஒவ்வொன்று தொடர்பாகவும தமது நிலைப்பாடுகளை பதில்களை முன்வைக்கவேண்டும். இவர்கள் இவ்வாறு செய்யாது விட்டுவிட்டு தொடர்;ந்தும் செயற்படுவார்களாயின் தமிழ் பேசும் மனிதர்களை மீண்டும் மீண்டும் முட்டாளாக்கும் பயன்படுத்தும் செயற்பாடே இவர்களுடையதாகும். இந்த அமைப்புகளிலிருந்தும் அதன் சார்பாகவும் பொது மனிதர்களிடம் பங்களிப்புக்காக குறிப்பாக பணத்திற்காக அணுகும் நபர்களிடம் பொது மனிதர்கள் தமது கேள்விகளை சந்தேகங்களைக் கேட்கவேண்டியது கட்டாயமாகும். மேற்குறிப்பிட்ட சந்தேகங்கள் கேள்விகள்; போன்றவற்றை இந்த இயக்கங்களுக்குப் பங்களிப்பு செய்த மனிதர்களாவது அறியமுடியாமலிருப்பதற்கு;, தமிழ் பேசும் மனிதர்களது அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகளின் கட்சிகளின் அரசியலில் வெளிப்படையற்றதன்மையும் பொது மனிதர்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய கடப்பாட்டு உணர்வும் இல்லாமை முக்கியமான காரணங்கள் எனக் கூறலாம். இதானால் இத ;தலைமைகள் கூறுவது அனைத்தும் இறுதியானதும் வேதவாக்குமானது. பொது மனிதர்களும் இவற்றை வேதவாக்காக மதித்தார்களே ஒழிய அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. விமர்சிக்கவுமில்லை. விளக்கம் கேட்கவுமில்லை. அதற்கான சந்தர்ப்பத்தையோ சுழலையோ புலிகளின் தலைமையோ பிற இயக்க அல்லது கட்சிகளின் தலைமைகளோ உருவாக்கவுமில்லை. தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப் போராட்ட அரசியல் காவு கொடுக்கப்பட்டதற்கு இவ்வாறான பண்புகளும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல..

நம் உயிர் அது கொண்ட உடல் இந்த பிரபஞ்சத்;தில் சுதந்தரமாகவும் சகல உரிமைகளுடன் ஆரோக்கியமான ஒரு சமூகத்தில் வாழ்வதற்கான போராட்டமே நமது அடிப்படை அரசியல் செயற்பாடுகளுக்கான காரணம் என்றால் மிகையல்ல். ஆகவே நமது உடலை பாதுகாக்கவேண்டியதே முதன்மையான நோக்கமாக இருந்திருக்கவேண்டும். மனிதர்கள் நடாத்தும ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொருவரும் விடுதலையடைந்து சுதந்திரமாக ஆனந்தமாக சம உரிமைகளுடன் வாழ்வதுதான். ஆகவே போராட்டம் என்பதே வாழ்வுடன் இணைந்ததுதான். மாறாக வாழ்வை செயற்கையாக கொலை செய்து இறப்பதன் மூலம் தொலைப்பதல்ல. இதனால் எந்தப் பயனும் யாருக்குமில்லை. ஆகவே சமாதான அரசியல் பேசலாம்.; சமாதான அரசியல் என்பது தமிழ் பேசும் மனிதர்களது அரசியலையே சரணடையச் செய்யுவிடும்; சரணாகதி அரசியல் அல்ல. ஆனால் இன்று பலராலும் பேசப்படுகின்ற சமாதான சக வாழ்வு அரசியல் என்பது தான் சரணாகதி அரசியலே. தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் இது காலவரை அவற்றுக்காக இழக்கப்பட்ட உயிர்களையும் இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் அடகுவைத்துவிட்டு அவர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கின்றனர். சிலநேரங்களில் இந்த அரசாங்களின் செயற்பாடுகளுக்குப் பயந்து பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்றளவில் தான் இன்றைய தமிழ் பேசும் அரசியல் வாதிகள் இருக்கின்றனர். இதற்குமாறாக நமது உரிமைகள் அரசியல் அபிலாசைகளையும் அடிப்படை மனித கௌரவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக் கொண்டே சமாதான அரசியல் பேச வேண்டும். இவற்றை விட்டுக் கொடுத்து பேசப்படும் சமாதான அரசியல் என்பது “பூச்சியத் தீர்வே”. ஆனால் இவ்வாறான அரசியல் பேசுவதற்கு ஆகக் குறைந்தது தமிழ் தேசிய போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தமிழ் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்குள் உறுதியான ஒற்றுமை அவசியமாகும். ஆகவே சில வேண்டுகோளை முன்மொழிவுகளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
முதலாவது இன்றுள்ள ஒவ்வொரு தமிழ் கட்சிகளதும் இயக்கங்களதும் கடந்தகால தலைமைகள் தவறு இழைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரது கைகளிலும் இரத்தக் கறைகள் உள்ளன. ஆகவே இவர்கள் அனைவரும் தங்கள் கட்சியையும் இயக்கங்களையும் கலைப்பதே அரோக்கியமானதும் பயனள்ளதுமாகும். இவ்வாறு கலைத்துவிட்டு ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நின்று செயற்படுவோமானால் நிச்சயம் வெற்றி கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இவ்வாறான ஒரு அரசியல் கட்சியை இலங்கை இந்தியா சிறிலங்கா வடக்கு கிழக்கு பிரதேசம் மற்றும் சர்வதேச அடிப்படையில் உருவாக்குவது சிறந்தது.

புலம் பெயர் தேசங்களில் தமிழ ;தேசிய அரசியலைப் பயன்படுத்தி தன்னிச்சையாக அரசியலில் ஈடுபடுகின்றனவர்களை ஒருங்கினைத்து ஒரு அரசியல் கட்சி சார்பாக பிரதிநித்துவப்படுத்துவது பலம் மிக்கதும் பயனள்ளதுமாகும். அல்லது இவ்வாறான அரசியல் கட்சி சார்ந்து பிரதிநிதிகளை தேர்தல்களில் நிறுத்துவதன் மூலம் சர்வதேச ரீதியாக நமது அரசியல் கோரிக்கைகளை ஐனநாயக ரீதியில் பலமாக முன்வைக்கலாம்.

சுpறிலங்காவில் சிங்களம் பேசுகின்ற மனிதர்களுடன் குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களின் சகல உரிமைகளையும் குறிப்பாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்கின்ற முற்போக்காளர்களுடன் கூட்டுறவு அடிப்படையில் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதும் தேசிய விடுதலை போராட்டம் வெல்வதற்கான சாத்தியத்தை கொடுக்கும். சிங்களம் தமிழ் பேசும் மனிதர்களுக்கு இடையில் ஆழமான புரிந்துணர்வும் உறுதியான ஒன்றினைந்த செய்ற்பாடும் ஏற்படவில்லை எனின் வெற்றி என்பது கஸ்டமானதே.

நம்பிக்கையுடன்
நட்புடன்
மீராபாரதி

Advertisements

Responses

  1. I agree with some of them and disagree with aswell,i would like to discuss with u about this article.

  2. வெறும் ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த சரண் அடைதல் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது…

  3. வெறும் புலிகள் எதிர்ப்பு கோசங்களும் கட்டுரைகளும் எழும்பி வந்து தமிழர்களுக்கு தீர்வை வாங்கி தந்துவிடப்போவதில்லை

  4. 30 வருடம் போராடிய புலிகளை சாடுவதை விடுத்து இரண்டு வருடங்கள் ஆகப்போகும் இந்த காலமும் இதை விட்டு வெளியிலை யாரும் இன்னும் வரவில்லை


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: