Posted by: மீராபாரதி | August 10, 2010

புரட்சிகர கட்சி அரசியலிலிருந்து ஏன் விலகினேன்?

புரட்சிகர கட்சி அரசியலிலிருந்து ஏன் விலகினேன்?

இங்கு நான் எழுதும் அனுபவங்களும் கருத்துக்களும் என்னுடையவை அல்ல. அனைத்தும் பிறருடையது. தர்க்கரீதியாக நிறுபிக்கப்படுபவற்றை அல்லது நம்பத்தகுந்த தர்க்கங்களை ஏற்றுக் கொள்வது என்பது நமது வாழ்வு தொடர்பான புரிதலினடிப்படையிலமைந்தது. மேலும் இதை நீங்கள வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு தங்களது நிறுவனப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட மனதை அருகில் சிறிது நேரம் தள்ளி வைத்துவிட்டு வெறுமையான திறந்த மனதுடன் ஆரம்பிப்பின் எனது கருத்துக்களின் நோக்கத்தை அல்லது கூறவரும் விடயத்தை தங்களால் புரிந்து கொள்ளமுடியும் என நம்புகின்றேன். இதை மட்டுமல்ல எந்த ஒரு விடயத்தையும் தேடும் பொழுதோ அல்லது வாசிக்கும் பொழுதோ இத்தகைய நிலையில் இருப்பது ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கலாம். நாம் வாழும் சமூகம் ஆணாதிக்க சிந்தனைகளால் ஆதிக்கம் பெற்றது. நமது வாழ்வில் மட்டுமல்ல நமது மொழிகளிலும் மிகவும் ஆழமாக இந்த ஆதிக்க சிந்தனைகள் பதிந்துள்ளன. இதிலிருந்து முறித்துக்கொண்டு பொதுவான ஒரு மொழியை உருவாக்கும்வரை இந்த மொழியையே பயன்படுத்த வேண்டியது தவிர்க்கமுடியாதது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

சமூக மாற்றம் இது நமது குறிகோள். ஆனால் சமூகத்தை மாற்ற புறப்பட்ட நமக்கும் சமூகத்திற்க்குமான உறவு குறித்து புரிந்து கொண்டோமா என்பது கேள்விக்குறி.
தனி மனித சேர்க்கையின் ஒரு கற்பனை வடிவமே சமூகம். அதாவது தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் இடைவெளி அதிகம் என்பதை நாம் ஒருபோதும் கவனித்ததில்லை. தனிமனிதர் யதார்த்தமான உண்மை. சமூகம் தனிமனிதரின் பொய்யான கற்பனை. இதன் நீட்சியே நாடு தேசம் என்ற கற்பனைகள் எல்லாம். பொய்யான கற்பனையை உருவாக்குவதற்காக மனிதர் என்ற யதார்த்தமான உண்மையை பழியாக்குகின்றோம். அதன் உள்ளார்ந்த தன்மையை அறியத் தவறுகின்றோம். ஒரு உயிருள்ள மிருகமாகவே மதிக்கத் தவறுகின்றோம். ஆனால் நமது கொள்கைகள் இலட்சியங்கள் எல்லாம் தனிமனிதர்களைக் கவர்ந்து இழுப்பதற்கான அழகான கவர்ச்சியான சொற் கலவைகள். மனிதர்களைவிட இவற்றுக்கு அதிக மதிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்குகின்றோம். இங்குதான் நாம் இன்று எதிர்நோக்கம் பல்வேறு பிரச்சனைகளுக்கமான காரணங்கள் தோன்றுகின்றன.

குடும்பம், சமூகம், தேசம், நாடு, சமயம் என்ற நிறுவனங்களின் உருவாக்கங்கள் மனிதரின் பிரக்ஞையான செயற்பாடுகளை அழித்துவிட்டன. மாறாக தமது சிந்தனைகளை கருத்துக்களை நம் ஆழ் மனதில் உறுதியாகவும் ஆழமாகவும் பதித்துள்ளன. நம் பிரக்ஞையற்ற மனது இதை அறியாமல் புரியாமல் அதன் வழி செயற்படுகின்றது. இன்று மனித செயற்பாடுகள் என்பவை இயந்திரத்தனமானவை. இந்த இயந்திரத்தனமான செயற்பாடுகளின் விளைவே இன்றைய உலகம் எதிர்நோக்கும் கொடூரம். நாம் வாழும் பிரபஞ்ஞத்தில் உண்மையானதும் இயற்கையானதும் இந்த உலகம். மற்றும் இதில் வாழும் தாவரங்களும் விலங்குகளுமே. இதில் மனித விலங்கு மட்டும் தனது பிரக்ஞையால்(?) மற்ற மிருகங்களிலிருந்து விலகி தனித்துவமாக விளங்குகின்றது. இந்தப் பிரக்ஞை எப்பொழுது மங்குகின்றதோ அப்பொழுது மனிதரும் மிருகமாக மாறுகின்றார். நமது பிரக்ஞையின் அளவைப் பொறுத்து நமது மிருகத்தனம் கூடிக் குறைகின்றது. முழுiயான பிரக்ஞையுடைய மனிதரிடமே நாம் உண்மையான வாழ்வை எதிர்பார்க்கலாம்.

இதுகாலவரை நாம் சமூக மாற்றத்திற்காக விஞ்ஞான அனுகுமுறையை மேற்கொள்வதாகவே கூறிவந்தோம். நாம் பின்பற்றியது விஞ்ஞான அனுகுமுறையல்ல. மாறாக ஒரு பைபிளைப்போல. பகவத்கீதையைப்போல, குரானைப்போல சமூகமாற்றத்திற்கான செயற்பாட்டிற்கும் மாக்ஸினதும் லெனினினதும் பத்தகங்களை அப்படியே பின்பற்றுகின்றோம். நமது கொள்கைகளிளோ நடைமுறைகளிளோ பாரிய மாற்றங்களையோ முறிவுகளையோ காணமுடிவதில்லை. கட்சி கட்டும் முறை நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அதேமுறை. புரட்சிகர இராணுவத்தைக் கட்டும் முறையும் அதே பழைமையானது. ஆனால் மக்களினதும் புரட்சிகர சக்திகளினது ஆதரவைப் பெற அடிக்கடி விஞ்ஞானமுறையையே நாம் பின்பற்றுகின்றோம் எனக் கூறிக்கொள்ளத் தவறுவதில்லை. வி;ஞ்ஞான முறை என்றால் என்ன என்பது தொடர்பான நமக்கு விளக்கம் குறைவாக இருப்பினும் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றோம்.

விஞ்ஞான முறை என்பது ஒன்றைக் கண்டுபிப்பதற்கோ அல்லது அடைவதற்கோ பல்வேறு முறைகளை பரிசோதனை ரீதியாக அணுகுவது. ஓவ்வொரு பரிசோதனை அணுகுமுறையும் தவறும் பொழுதும் புதிய பரிசோதனையை அணுகுவது. ஏத்தனை பரிசோதனைகளை மேற்கொள்வது என்பது நாம் எதை விளைவாக எதிர்பார்க்கின்றோம் என்பதிலையே தங்கியுள்ளது. மேலும் குறிப்பிட்ட விளைவைப் பெறுவதற்காக விஞ்ஞானிகள் தம் பரிசோதனையில் உள்ள ஈடுபாடும் அக்கறையும
அவர்களுடைய வாழ்வுமுறையும் மிகவும் முக்கியமாக கவனிக்கத்தக்கது. ஆனால் புரட்சியாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் நாம் நமது நோக்கத்தில் எவ்வளவு ஈடுபாடும் அக்கறையும் கொண்டுள்ளோம் என்பது முக்கியமாக கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

கடந்த நூற்றாண்டு காலமாக சமூகமாற்றத்திற்காக நாம் பின்பற்றியது அடிப்படையில் ஒருமுறையே. பல்வேறு புரட்சிகர போரட்டங்கள் இதுவரை ஒரே அணுகுமுறையில் நடைபெற்றுள்ளன. சகல போராட்டங்களினது வெற்றியும் அவை எதிர்பார்த்ததை அடையவில்லை. அரைகுறையில் முடிவடைந்தன. அல்லது தோல்வியை அடைந்தன. வெற்றி எனக் கூறப்படுபவை ஆட்சிமாற்றம் மட்டுமே. அடிப்படை மாற்றம் என்பது இன்னும் கனவாகவே உள்ளது. ஒரே அணுகுமுறையில் பல்வேறு தடவைகள் தோல்வியை கண்ட பின்பும் மீண்டும் அதே அணுகுமுறையைக் கையாள்வது விஞ்ஞான முறையாகாது. ஆனாலும் நாம் இன்றும் அவ்வாறுதான் கூறுகின்றோம். கட்சியிலிருந்து விலகும் எனது முடிவுக்கு இது ஒரு அடிப்படைக் காரணம். இந்த அடிப்படைக் காரணத்தை அடியொற்றி பல்வேறு காரணங்கள் உருவாகின்றன என்பதை நீங்கள் மேலும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இரண்டாவது முக்கிய காரணம் தனிமனிதர் தன்னைப் பற்றி அறியாமையிலிருப்பதும் பிறரைப்பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பதும். இது பல தவறுகளுக்கு இறுதியில் இழுத்துச் செல்கின்றது. தன்னை அறியாமல் இருப்பதற்கான காரணங்களே பிறரை அறியமுடியாமல் இருப்பதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது. தன்னை அறிந்து கொள்வது என்பது முழமையான பிரக்ஞையில் இருப்பது எனக் கூறலாம். முழமையான பிரக்ஞையில் செயற்படுவதற்கு உள்நோக்கிய தேடலில் ஈடுபடுவது அவசியமானது வெளி நோக்கிய தேடலில் ஈடுபடுவதற்கு எவ்வாறு பரிசோதனை அணுகுமுறையை மேற்கொள்கின்றோமோ அதோபோல் அனுபவ அணுகுமுறையை உள்நோக்கிய தேடலுக்கு கையாளலாம். தனிமனிதர் என்று தனது இயந்திரத்தனமானதும் முகமூடி அணிந்ததுமான வாழ்வை முறித்துக்கொண்டு பிரங்க்ஞைபூர்வமாக வாழ ஆரம்பிக்கின்றாரோ அன்று தனது தன்முனைப்பை (ego) ஆதிகாரத்தின் மீதான ஈர்ப்பை (power possessive) தனது உளவியலை இதுபோன்ற பல விடயங்களில் தன்னைப்பற்றி புரிந்துகொள்ளலாம். இந்தப் புரிதலானது பிறரைப் புரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கலாம். இது தனிமனிதரையும் அவர் உறவுகளை மேன்மைப்படுத்தும் என்றால் மிகையல்ல.

இதற்கு பிரங்ஞை என்றால் என்ன என்பது தொடர்பாக நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானது. நாம் பிரங்க்ஞை பூர்வமாக செற்படுகின்றோம் என்ற சொற்றோடரை மட்டும் பயன்படுத்துவது புரிந்துகொண்டதன் அர்த்தமல்ல.

இந்த சஞ்சிகையின் நோக்கமே பிரக்ஞை தொடர்பான தேடல்.
இதன் மூலம் பிரக்ஞை என்பது என்ன?
எவ்வாறு பிரக்ஞையாக இருப்பது செயற்படுவது?
என்பதை அறிந்துகொள்ளலாம்.

புதிய சிந்தனை தேவைப்படுகின்றது! புதிய சிந்தனையை உருவாக்குவதற்கு முதல் ,!சிந்தனை!,யின் அடிநாதம் என்ன என்பதை புரிந்துகொள்வோம். இதன் அடிநாதத்தைப் புரிந்துகொள்வதற்கு நமது பிரக்ஞை அவசியமானது. முதலில் நாம் முழமையான பிரக்ஞையுடன் வாழப்பழகுவோம். இதன்பின்பே பிரக்ஞையான செயற்பாட்டை முன்னெடுக்கலாம். கற்பனையில் வாழாமல் யதார்த்தமாக வாழப்பழகுவோம். இதற்காக கற்பனை அவசியமில்லை எனக் கூறவில்லை. கற்பனையே யதார்த்தமான வாழ்வாகிவிடக் கூடாது. இரண்டுக்குமிடையில் பிரக்ஞைபூர்வமான புரிதல் இருப்பது அவசியமானது. இதற்கு முடியமனதுடன் இருப்பதை விடுத்து திறந்த ,வெறுமையான மனதுடன் இருக்கப்பழகுவோம்.

ஆன்மீகம் என்பது நமது ஆன்மாவுடன் தொடர்புடையது. இதற்கும் சமய நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை. மாறாக இந்த சமய நிறுவனங்களும் சமூக நிறுவனங்களும் இவற்றின் ஆதிக்கசிந்தனைகளும் நமது ஆன்மாவை கருவிலையே சிதைத்துவிட்டன. இதை அறியாமலே நாம் அடிமைகளாகவே பிறந்து இயந்திரமாக வாழ்கின்றோம். நாம் எம்மைப் பற்றி முதலில் அறிந்து கொள்வதைவிட வெளியைப் பற்றி அறிவதில் ஆர்வமாக இருக்கின்றோம். ஆகவே முதலில் நம்மிலிருந்து ஆரம்பிப்போம்.

நான் இதுவரை பல்வேறு தவறுகளை செய்துள்ளதுடன் தவறுகள் நடைபெறுவதற்கு காரணமாகவும் இருந்துள்ளேன். எனது அரைகுறை பிரக்ஞையின் அல்லது பிரக்ஞையற்ற செயற்பாட்டின் விளைவே இவற்றுக்கு காரணம் என்பதை இன்று நான் புரிந்துகொள்கின்றேன். நான் இதில் எழுதிய விடயமாகட்டும் அல்லது முன்பு எழுதிய விடயமாகட்டும் அனைத்தும் நான் அனுபவித்துப் பெற்ற அறிவல்ல. எல்லாம் கடன் வாங்கி எழுதியவையே. அவை என்னுடையவையல்ல. யார் யாரோ வாழ்ந்து கண்ட உண்மைகள் அல்லது கடன் பெற்று கடன் வழங்கிய அறிவுகள். யாரோ கூறியதை அல்லது எழுதியதை நான் மீள எழுதியுள்ளேன் அல்லது கூறியுள்ளேன். இச் சஞ்சிகையில் எழுதிய அனைத்துவிடயங்களுக்கும் இது பொருந்தும். எனது சொந்த அறிவு என்று ஒன்றுமில்லை. இன்றைய எனது வாழ்க்கைப் பயணம் முதலில் என்னை அறிந்துகொள்வதே.

பிரக்ஞையற்று வாழ்பவர் என்றும் அடிமையே.
அதுவும் தான் அடிமை என்று அறியாத அடிமை.
இது மிகவும் கவலைக்குரியது.
பிரக்ஞையுடன் வாழ்பவர் அனைத்திலிருந்தும் விடுதலையடைந்து
சுதந்திரமாக வாழ்பவர்..

-இது நான் செயற்பட்ட புரட்சிகர கட்சிக்கு 2000ம் ஆண்டு எழுதிய விலகல் கடிதத்தின் திருத்திய வடிவம்

மீராபாரதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: