Posted by: மீராபாரதி | August 10, 2010

பிரக்ஞை – தனிமனிதர் – அமைப்புத்துறை – அரசியல்

பிரக்ஞை – தனிமனிதர் – அமைப்புத்துறை – அரசியல்

நண்பர்களுக்கு,

இக் கட்டுரை தனி மனிதர் மற்றும் அவரது பிரக்ஞை தொடர்பாகவும் தனிமனிதர்களின் அமைப்புத்துறை சார்ந்த பங்களிப்புகள் முரண்பாடுகள் தொடர்பாகவும் எதிர்கால அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் இக் கட்டுரையின் சில விடயங்களை உரையாட முற்படுகின்றது. பிரதான விடயத்திற்கு செல்வதற்கு முன் இரு குறிப்புகள்.

இக் குறிப்பிட்ட கட்டுரையை கடந்த வீயூகம் சஞ்சிகை அல்லது அவர்கள் சார்ந்த “மே 18 இயக்கம்” மே மாதம் 22ம் திகதி நடாத்திய கூட்டத்திற்கு முன்பாக எழுதி அனுப்பவேண்டும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் முழுமையாகவும் திருப்தியாகவும் முடிக்கமுடியவில்லை. சில நேரங்களில் சில விடயங்களை சிறிது பின்போடுவது நல்லதே.

இப்பொழுது கட்டுரைக்குச் செல்வோம்.

ஒரு சமூகப் புரட்சியை ஏன் செய்கின்றோம் அல்லது செய்ய விரும்புகின்றோம் எனில் பல்வேறுவிதமான உயர்ந்த நோக்கங்களை அடைவதற்காக என்றால் மிகையல்ல. அதாவது சுரண்டல் அற்ற மற்றும் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் இல்லாத, மனிதர்கள் அனைவரும் சம வாய்ப்புகளுடனும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக ஆனந்தமாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவது என்ற கனவை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கின்றோம். அதற்காக பலர் பல்வேறு விதமான அர்ப்பணிப்புகளை கொடுத்து குறிப்பாக தமது முழு வாழ்வை மட்டுமல்ல உயிரையும் பங்களிப்பாகக் கொடுத்து இந்த நோக்கங்களுக்காக செயற்பட்டுள்ளனர். இவ்வாறன அர்ப்பணிப்புக்களுடன் செயற்பட்டபோதும் புரட்சியை முன்னெடுத்த அல்லது விடுதலைக்காகப் போராடிய எந்த ஒரு சமூகமும் முழுமையாக தமது உயர்ந்த நோக்கத்தை இதுவரை அடையமுடியவில்லை என்பதை வரலாற்றில் மீண்டும் மீண்டும் காண்கின்றோம். இதற்கு காரணங்களாக சிலவற்றை பாரம்பரியமாக கூறிவருகின்றனர். முதலாவதாக முன்வைக்கப்படுவது உறுதியான கோட்பாட்டுத்தளம் இல்லை என்பது. இரண்டாவதாக முன்வைக்கப்படுவது ஒழுங்கான அமைப்புத்துறை இல்லை என்பது. மூன்றாவதாக முன்வைக்கப்படுவது பொருத்தமான அக மற்றும் புறச் சுழல்கள் இல்லை என்பது. இறுதியாக முன்வைக்கப்படும் காரணம் தனிநபர்களின் தன்னியல்புவாத செயற்பாடுகள். இந்தக் காரணங்கள் சமூக மாற்றத்திற்கான போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கவனிக்கப்படடு களையப்படவேண்டிய முக்கியமானதும் தேவையானதுமான காரணங்களே. ஆனால் பல போராட்டங்கள் இவ்வாறான அடிப்படை அம்சங்களைக் கொண்டிருந்தும் தமது நோக்கத்தை ஏன் (குறைந்தது பகுதியளவாவது) அடையமுடியவில்லை என்பது கேட்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி. இதற்குப் பதிலாக கிடைக்ககூடியதும், கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியதும், மேற்குறிப்பிட்ட காரணங்களினடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய குறிப்பான பிரச்சனை என்பது தனிநபர் சார்ந்ததும் அவரது பிரக்ஞை(யின்மை) மற்றும் இப் பிரக்ஞையற்ற தனிநபர்களின் சிந்தனைகளிலிருந்து உருவாக்கப்படும் அமைப்புத்துறை பிரச்சனையுமே நாம் முன்னேற முடியாமல் இருப்பதற்கு தடைகளாக இருக்கின்றன என்றால் தவறல்ல.

முதலாவதாது ஒரு பொதுவேலைத் தளத்தில் செயற்படும் தனிமனிதர்களின் அகப்பிரச்சனைகள் என்பது மிக முக்கியமான தாக்கத்தை குறிப்பிட்ட வேலைத்திட்டத்திலும் அதன் போக்கிலும் ஏற்படுத்துகின்றது. ஆகவே தனிமனிதரின் பிரக்ஞை(யின்மை), சிந்தனை, செயற்பாடு என்பன தொடர்பாக நாம் கருத்தில் எடுத்து பிரக்ஞையுடன் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது. கடந்த காலங்களில் இதற்கு சிறிதளவு கூட முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதே பல விடயங்கள் மற்றும் தவறுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கின்றன என்றே நான் நம்புகின்றேன். ஏனனில்; உயர்ந்த நோக்கங்களுக்காக செயற்படும் ஒவ்வொரு மனிதரும் அடிப்படையில் பிரக்ஞையின்றியே செயற்படுகின்றனர். மனிதரின் பிரக்ஞை நிலை மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பாக நாம் எப்பொழுதும் குறிப்பாக புரட்சிகர செயற்பாட்டுத்தளத்தில் அக்கறைகொள்ளவில்லை என்றே உணர்கின்றேன். இதனடிப்படையிலையும் தொடர்ச்சியாகவுமே அமைப்புத்துறை தொடர்பான பிரச்சனைகளையும் நாம் பார்க்கவேண்டும் என்றே கருதுகின்றேன். இதுவே இரண்டாவது முக்கியத்துவமான பிரச்சனையாக அரசியற் செயற்பாடுகளில் காணப்படுகின்றது. ஏனனில் பிரக்ஞையற்ற மனிதர்களே தாம் செயற்படும் அமைப்புத்துறையை உருவாக்குவதுடன் அதில் ;செயற்படும் அங்கத்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆகவே பிரக்ஞையற்ற தனிமனிதர்களும் அவர்கள் உருவாக்கும் அமைப்புத்துறையும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதவகையில் கலந்துள்ளது. இந்த சிக்கலை புரிந்து கொண்டு, அதன் அடிப்படையிலையே சமூக மாற்றத்தை நோக்கி செயற்படுவதற்கான புதிய கோட்பாடுகள் முன்வைக்கப்படவேண்டும். இதன் மூலமே தனிநபர்கள் மற்றும் அவர்கள் கட்டமைக்கும் அமைப்புத்துறை மீதான முக்கியத்தும் எதிர்காலங்களில் கவனிக்கப்படுவது மட்டுமல்ல அது தொடர்பான அக்கறையும் அதிகரிக்கும். இந்த நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் இந்த உரையாடலை ஆரம்பிக்கின்றேன்.

முதலில் ஐயர் அவர்கள் இனியொரு என்ற இணையத்தள சஞ்சிகையில் எழுதும் தனது போராட்டகால நினைவுகள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பின் பாகம் 17 (http://inioru.com/?p=13191) இல் ஒரு விடயத்தைக் குறிப்பிடுகின்றார். அதாவது அமைப்புக்குள் பல்வேறு விதமான பிரச்சனை வருகின்றது. குறிப்பாக அரசியல் கோட்பாட்டுப் பிரச்சனைகளுக்கு அப்பால் தனிநபர் சார்ந்த முரண்பாடுகளும் மற்றும் தனிநபரின் தலைமைத்துவத்தை நோக்கிய முனைப்பு என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக பல அங்கத்தவர்கள் இரஸ்சிய புரட்சியின்போது லெனின் மற்றும் சீனப் புரட்சியின் போது மாவோ எழுதிய எழுத்துக்களை தேடி வாசிக்கவும் கலந்துரையாடவும் முற்படுவதாக எழுதுகின்றார். இதேவேளை சாபாநாவலன் அவர்களும் இனியொரு சஞ்சிகையில் “முள்ளிவாய்க்கால் தோல்வியின் அடிப்படைகள்” (http://inioru.com/?p=13228) என்ற கட்டுரையில் ஒரு போராட்டம் வெற்றிபெற அல்லது முன்நோக்கிச் செல்ல மூன்று நிபந்தனைகள் இருக்கவேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். ஆதில் ஒன்று புரட்சிகர கட்சி இருக்கவேண்டும் என்பது. ஐயர் அவர்கள் குறிப்பிடுவது போல் ஆயுதப் வழி போராட்ட அமைப்பை அல்லது கட்சி ஒன்றை கட்டும் பொழுது இவ்வாறு கடந்த காலங்களில் செயற்பட்டவர்களின் அனுபவங்களை கருத்துக்களை மற்றும் அவர்கள் முன்வைத்த கோட்பாடுகளையும் சந்தித்த பிரச்சனைகளையும் தேடி வாசிப்பது அவசியமானதும் முக்கியமானதுமான ஒரு செயற்பாடு என்பது மறுப்பதற்கில்லை. அதேபோல் சபாநாவலன் அவர்கள் குறிப்பிடுவது போன்று புரட்சிகர கட்சி ஒன்றின் தேவையும் இன்றியமையாததே. ஆனால் இவ்வாறு கடந்தகால அனுபவங்களை கற்பது மட்டும் போதுமா என்பது முதலவாது கேள்வி? இரண்டாவது கேள்வி நாம் இன்று எதிர்நோக்குவது போன்று லெனினின் எவ்வாறு தனி நபர் தொடர்பான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தார்? மற்றும் அவ்வாறான பிரச்சனைகளைத் தீர்த்தாரா? மூன்றாவது கேள்வி நாவலன் குறிப்பிடுவது போன்று அக மற்றும் புறச் சுழலுடன் புரட்சிகர கட்சி ஆகிய மூன்று காரணங்கள் இருப்பது மட்டும் ஒரு போராட்டம் முன்னோக்கிச் செல்வதற்கோ அல்லது சமூக மாற்றம் ஒன்று நடைபெறுவதற்கோ போதுமானதா? இந்தக் கேள்விகளும் அற்கான பதில்களும் முக்கியமானவை என்றே நான் கருதுகின்றேன்.

நாவலன் தனது கட்டுரையில் குறிப்பிடுவது போன்று இரசிய மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் நடைபெற்ற புரட்சியின் போது அக புற சுழல்களும் புரட்சிகர அமைப்புஃகட்சி இருந்தமையும் புரட்சியை வென்;றெடுக்க சாதகமாக இருந்தது மட்டுமல்ல தலைவர்களும் அச் சந்தர்ப்பத்தை புரட்சிக்கு சாதகமாக பயன்படுத்தியதும் ஒரு காணரம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்தப் புரட்சியின் விளைவுகளும் பயன்களும் பலன்களும் இன்றுவரை நாம் கனவு காண்கின்ற ஒரு சமூகத்தை புரட்சியை முன்னெடுத்தவர்களால் அல்லது அதன் வழிவந்தவர்களால் கட்டிஎழுப்ப முடியாமல் போனதற்கு அல்லது இருப்பதற்கு காரணம் என்ன? இப் புரட்சிகளுக்கு பின்பு பல புரட்சிகள் நடைபெற்றன. உதாரணமாக கியூபா, வியட்நாம், மற்றும் நிக்கிரக்குவா என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த அனுபவங்களை எல்லாம் பெற்றுக் கொண்டு மற்றும் கற்றுக் கொண்டும் இலங்கையிலும் இந்தியாவிலும் பல புரட்சிகர அமைப்புகள் செயற்பட்டன. இன்றும் சில செய்ற்படுகின்றன. இவர்கள் தோல்விகளையே சந்தித்தனர் அல்லது குறிப்பான முன்னேற்றத்தை அடையமுடியவில்லை என்றே கூறவேண்டும். அல்லது அருண்மொழிவர்மன் தனது வலைப்பதிவில் (http://solvathellamunmai.blogspot.com/2010/05/blog-post.html) குறிப்பிடுவதுபோன்று எந்த மனிதர்களுக்காக போராடினார்களோ அவர்களுக்கு எதிரான மனித உரிமை செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளது துரதிர்ஸ்டமானNது. இந்த அனுபவங்களையும் அதிலிருந்து பல பாடங்களையும் கற்பதற்கு வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்ற நிலையில் தான் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது. ஆனால் குறிப்பிட்ட சுழ்நிலையால் பொறுப்பான புரட்சிகர தலைமை ஒன்று இல்லாமையினால் மனிதர்களின் பிரக்ஞையற்ற இயல்பான எதிர்வினை செயற்பாடுகளின் போக்குகளினால் தன்னியல்பாக முன்னெடுக்கப்பட்டதே தமிழ் விடுதலை இயக்கங்களின் பின்னனி எனலாம். இது தொடர்பாக ரகுமான் ஜான் அவர்கள் இனியொருவில் வெளியான “விடுதலைப் போராட்டம்: ஒரு மீள்பார்வை” (http://inioru.com/?p=13298) என்ற தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். இவர் மேலும் ஒன்றைக் குறிப்பிடுகின்றார். அதாவது விடுதலைப் புலிகள் மட்டுமல்ல செயற்பட்ட அனைத்து தமிழ் இயக்கங்களும் மக்கள் விரோத செயற்பாடுகளில் எந்தக் குறையுமில்லாது ஈடுபட்டிருந்தன.

இந்த விடுதலை இயக்கங்களின் அனுபவங்களையும் அவர்களின் தவறுகளையும் புரிந்துகொண்டும் அதிலிருந்து கற்றுக்கொண்டு ரகுமான் ஜான் தலைமையில் உருவானதுதான் தீப்பொறி குழுவும் அதன் அரசியல் கட்சியான தமிழ்ஈழ மக்கள் கட்சி என்பதுமாகும். இவ்வளவு அனுபவங்களைப் படிப்பினைகளைப் பெற்றும் ஒரளவு முன்னேற்றகரமான அரசியல் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டிருந்தும் அர்ப்பணிப்புள்ள அங்கத்தவர்களையும் புலத்திலும் புலம்பெயரிடங்களில் கொண்டிருந்தும், இக் கட்சியினால் இரண்டு வருடங்கள் கூட தாக்குப் பிடிக்கமுடியவில்லை. இவ்வாறு தாக்குப்பிடிக்க முடியாமைக்கான பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நான் உணரும் இரண்டு முக்கியமான காரணங்களை இங்கு முன்வைக்கின்றேன். முதலாவது தனிநபர் மற்றும் அவர்களின் தன்னியல்பான செயற்பாடுகளும் இரண்டாவது அமைப்புத்துறை தொடர்பானது. இந்த இரு பிரச்சனைகளும் இன்று நேற்றல்ல ஆகக் குறைந்தது இரசிய புரட்சி காலத்திலிருந்தே ஒவ்வொரு புரட்சிகர இயக்கங்களுக்குள்ளும் கட்சிகளுக்குள்ளும் நடைபெற்று வருகின்றன. இதற்கான மூலக் காரணம் என்ன? என்ன தவறை மீண்டும் மீண்டும் விடுகின்றோம்? ஏதோ ஒன்று நம் சிந்தனையிலிருந்து விடுபட்டு நிற்கின்றது. அது என்ன? என்பது தொடர்பாக நாம் இப்பொழுது சிந்திக்கவேண்டிய காலமிது. அல்லது மீண்டும் மீண்டும் ஒரே தவறை நாம் விடுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதை நாம் ஒவ்வொருவரும் இக் கணத்தில் புரிந்துகொள்வது நன்மையானது என்பதே எனது புரிதல்.

சோவியத்யூனியனின் உருவாக்கத்தின் பின்பு, ஸ்டாலினின் தனிநபர் செயற்பாடுகள் மற்றும் அவரது சிந்தாந்தப் போக்குகள் காரணமாக தனக்குப்பின்பு ஸ்டாலின் தலைமைப் பொறுப்புக்கு வருவதை லெனின் விரும்பவில்லை என கூறப்படுகின்றது. ஆனால் புரட்சிகர கட்சியின் அமைப்புத்துறையூடாக அவரால் அதை நிறைவேற்றமுடியவில்லை. லெனின் சோவியத்யூனியனின் பதவி ஏற்று குறுகிய ;காலத்திலையே இறந்ததினால் அவர் பதவி மற்றும் அதிகாரத்துவம் தொடர்பாக எந்தளவு பிரக்ஞையுடன் எதிர்காலத்தில் செயற்பட்டிருப்பார்; என எதிர்வு கூறமுடியாது. ஆனால் அதிகாரத்திற்கு வந்த உடனையே மிகவும் முன்னேற்றகாரணமான சட்டங்களை (உதாணமாக அனைவருக்கும் நிலம்) நிறைவேற்றினார். மேலும் அக்காலத்திலையே ஒரின பாலுறவை அங்கிகரித்து சட்டமாக்கியிருந்தார் என அறியமுடிகின்றது. லெனினின் இறப்பின்பின் அனைத்தும் தலைகீழாக மாறின. ஸ்டாலின் நேர்மையான அர்ப்பணிப்புள்ள தலைவராக இருக்கலாம். ஆனால் அவரது அதிகாரத்துவபாதை தான் இறுதியாக சோவியத்யூனியின் உடைவுக்கே வழிகோலியதா அல்லது செயற்கையாக கட்டமைக்கப்பட்ட எதுவும் உடைவது தவிர்க்க முடியாததா என்பது விவாதத்திற்குரியதே. ஆனால்; ஸ்டாலினின் தனிநபர் செயற்பாடுகளினால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளே நம் கவனத்திற்குரியன. இவருக்கு ரொட்ஸ்கியுடனான முரண்பாடு வெறும் கொள்கை கோட்பாடு மட்டுமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. (ஆகவே ஆய்வுக்கு உரிய ஒன்று. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் நான் இதுவரை வாசிக்கவில்லை. அப்படி இருப்பினும் அவை பக்கச் சார்பின்றி எழுதப்பட்டிருக்குமா என்பதும் கேள்விக்குரியது). ஏனனில் தனிமனிதரின் பிரக்ஞையற்ற தன்மை தொடர்பாகவும் இதனடிப்படையில் தன்முனைப்பு பதவி அதிகாரம் போன்றவற்றின் தாக்கங்கள் தொடர்பாகவும் நாம் கவனிக்கவேண்டியவர்களாக உள்ளோம். சீனாவில் மாவோ ஆரம்ப காலத்தில் அதாவது 1949 களில் லெனினைப் போன்று நேர்மையானவராக பொறுப்புள்ளவராக இருந்து பல முன்னேற்றகரமான சட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதில் குறிப்பானது பெண்களது உரிமைகள் தொடர்பானது முக்கியமானவை. ஆனால் லெனினைப்போல் அல்லாது இவர் நீண்ட காலங்கள் பதவியில் இருந்துள்ளார். இதன்மூலம் பதவி மற்றும் அதிகாரம் என்பன இவரை எந்தளவிற்கு அவரை அவரது உயர்ந்த பண்பிலிருந்து கீழ் நோக்கி கொண்டு சென்று சாதாரண மனிதர்கள்போல் பிரக்ஞையற்று செயற்பட வழியமைத்தது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றார். இதனால்தான் மாவோவின் காலத்திலையே துரதிர்ஸ்டவசமாக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையே அதிகாரத்துவமயமான புதிய ஒரு வர்க்கமாக அல்லது சமூகக் குழுவாக இயங்க ஆரம்பித்திருந்தது எனலாம். இப்படி பல நாடுகள் புரட்சிகளின் பின் முன்னேறிய கோட்பாடுகளையும் அமைப்புத்துறையையும்; கொண்டிருந்தபோதும் அதிகாரத்துவமயமாகியதற்கும் தனிமனித ஜனநாயக விரோத போக்குகளுக்கும் சாட்சியாக இருக்கின்றன. இதற்கான அடிப்படைக் காரணமாக இருப்பது இந்தத் தலைவரர்களதும் கட்சி அங்கத்தவர்களதும் பிரக்ஞையற்ற தன்மையும் அதனடிப்படையிலான செயற்பாடுகளும் என்றால் மிகையல்ல. ஆகவே தனிமனிதர்களின் பிரக்ஞையும் இதனடிப்படையில் உருவாகும் பொறுப்புணர்வும் மிகவும் முக்கியமானவை எனக் கருதுகின்றேன்.

மேற்குறிப்பிட்ட புரட்சிகளின் பின் உருவான பிரச்சனைகளிலும்; மற்றும் முரண்பாடுகளிலும்; கவனிக்கப்படாமல் விடுபட்டுப்போன குறிப்பான ஒரு பிரச்சனை தனிநபர் மற்றும் அந்நபரின் பிரக்ஞை(யின்மை) தொடர்பானது என்பது குறிப்பாகவும் ஆழமாகவும் கவனிக்கத்தால் புரிந்துகொள்ளலாம். தனிநபரின் செயற்பாடுகள் மற்றும் அவரின் கருத்துக்கள் தொடர்பான அக்கறையே எப்பொழுதும் கவனத்துக்குரிய பிரதான விடயமாக இருந்து வந்திருக்கின்றது. இதற்கு மாறாக ஒரு தனிநபர் ஏன் ஒருவகையிலையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செயற்படுகின்றார்? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அவ்வாறன ஒரு காரணம் இருப்பின் அதை எப்படி மாற்றலாம்? என நாம் இதுவரை புரட்சிகர அரசியல் தளத்தில் சிந்திக்கவில்லை என்றே உணர்கின்றேன். மாறாக இதற்கான காரணங்களை கோட்பாடுகளிலும் தன்னியல்பான செயற்பாடுகளிலும் அமைப்புத்துறை ஓட்டைகளிலுமே தேடினோம். ஆனால் குறிப்பிட்ட தனிநபரின் பிரக்ஞையின்மையான செயற்பாட்டினாலான ஆதிக்கம் அதனால் உருவான பாதிப்பு போன்றவற்றில் நாம் அக்கறை இல்லாமலும், இவற்றினடிப்படையிலும் பிரச்சனைகளுக்கான காரணங்களையும் தேடவில்லை. ஆகவே இனிவரும் காலங்களிலாவது பாரம்பரிய புரட்சிர சிந்தனை வழிமுறையில் சிந்திப்பதிலிருந்து நம்மை முறித்துக் கொள்ளும் அதேவேளை கடந்தகால அனுபவங்களை கிரகித்துக்கொண்டு புதிதாக சிந்திக்க முயற்சிக்கவேண்டும். இவ்வாறன புதிய சிந்தனையின் அடிப்படையிலையே இனிவரும் காலங்களில் அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் தனிநபர் மற்றும் அமைப்புத்துறை தொடர்பான பிரச்சனைகளை அணுகுவது ஆரோக்கியமாக இருக்கும். இதுவே ஆரோக்கியமான போராட்ட வடிவங்களை கண்டறிவதற்கும் வழிகாட்டும் என உறுதியாக நம்புகின்றேன்.

சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அமைப்புத்துறையானது மிகவும் முக்கியமான இன்றியமையாத கூறாக இருக்கின்றது. இந்த அமைப்புத்துறை என்பது தனிமனிதர்களைக் கொண்ட ஒரு இயந்திரமே. அதாவது தனிமனிதர்கள் இல்லாது அமைப்புத்துறை என்பது உயிரற்ற இயக்கமற்ற ஒரு கற்பனை வடிவம் மட்டுமே. ஆகவே இந்த அமைப்பை இணைக்கும் மனிதர்கள் பிரக்ஞையற்று இருப்பார்களாயின் அமைப்பும் பிரக்ஞையற்று இயந்திரத்தன்மையுடன் உயிர்பின்றியே இயங்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டிய தேவையிருக்கின்றது. மனிதர்கள் பிரக்ஞையுடன் ஒரு அமைப்பில் இயங்கும் பொழுதுதான் அதற்கு மனித முகம் மற்றும் உயிர்ப்பும் கிடைக்கின்றது எனக் கூறலாம். இவ்வாறான ஒரு அமைப்பே சமூக மாற்றத்தை சாத்தியமாக்கக் கூடிய முன்னேற்றகரமான தன்மையைக் கொண்டிருக்கின்றது எனக் கொள்ளலாம். ஆகவே முன்னேறிய கோட்பாடு ஒன்று எந்தளவு முக்கியமோ அதைவிட தனி மனிதர்களின் பிரக்ஞை மிக முக்கியமானது என்பது எனது உறுதியான கருத்து. ஏனனில் கடந்தகாலங்களில் பல அரசியல் இயக்கங்கள் கட்சிகள் முன்னேறிய கோட்பாடுகள் என அவர்களால் கூறப்பட்டவையால் வழிநாடாத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த இயக்கங்களால் தாம் விரும்பியதை அல்லது தமது இறுதிநோக்கத்தை முழுமையாக அடையமுடியாமலே இருந்திருக்கின்றது. இன்றும் அப்படியே தொடர்கின்றது. இதற்கு முக்கிய காரணம் இந்த செயற்பாடுகளில் பங்குபற்றிய மனிதர்கள் பிரக்ஞையற்று செயற்பட்டமையாக இருக்கலாம்.

பிரக்ஞையின் முக்கியத்துவம் அது தொடர்பான நமது புரிதல் மற்றும் எவ்வாறு நமது பிரக்ஞையை மேலும் வளர்க்கலாம் என்பது தொடர்பாக கடந்த முறை நான் எழுதிய கட்டுரையில் “பிரக்ஞை-கோட்பாடு-செயற்பாடு-ஏதிர்கால அரசியல்” (http://www.awakeningawareness.org/) பார்த்தோம். சமூக பிரச்சனைகளில் அக்கறையுள்ளவர்களும் அவற்றை தீர்ப்பதில் ஆர்வமுள்ளவர்களும் செயற்படுகின்றவர்களும் குறிப்பா அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற மனிதர்களும் தமது பிரக்ஞை தொடர்பாக எந்தளவு அக்கறையாக இருக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணரவேண்டியதன் அவசியம் உள்ளது. ஏனனில் பொது செயற்பாடுகளில் கூட்டாக ஈடுபடும் தனிமனிதரின் பிரக்ஞையின்மையானது எந்தளவு தன்னுடன் இனைந்து பணியாற்றும் மனிதர்களையும் இம் மனிதர்களை இணைக்கும் அமைப்புத்துறையையும் சிதைக்கின்றது என்பதை வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் கற்பிக்கின்றது. நம்மிடம் உயர்ந்த கோட்பாடுகள் இருப்பதாக நாமே வரையறுத்துக் கொள்வது மட்டும் நாம் பிரக்ஞையானவர்கள் என்பதை உறுதிப்படுத்தாது என்பதை மீண்டும் மீண்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. ஏனனில் முன்னேறிய கோட்பாடுகளால் வழிநடாத்தப்பட்டவர்கள் என அறியப்பட்ட தலைவர்கள் பலர் உதாரணமாக ஸ்டாலின் மற்றும் மாவோ ஆகியோர் எந்தளவு தனிமனித விரோத செயற்பாடுகள் நடைபெறுவதற்கு தலைமை தாங்கினார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றனர். முன்னேறிய ;கோட்பாடுகளால் வழிநாடாத்தப்பட்ட தலைமைகளே இவ்வாறு பிரக்ஞையற்று செயற்படும் பொழுது பிற்போக்கானதும் மற்றும் வெறும் யாழ்.மையவாத சமூக சித்தாந்தத்தால் வழிநாடாத்தப்பட்ட பிரபாகரன் போன்ற தலைவர்கள் பிரக்ஞையற்று தனது விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிற தலைவர்கள் தமது இயக்கங்களையும் தனிமனித விரோத செயற்பாடுகள் மூலம் வழிநடாத்தியது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அதாவது முன்னேறிய கோடுபாடுகளை உள்வாங்கியவர்களும் சரி உள்வாங்காதவர்களும் சரி இவர்களிடம் இருக்கின்ற பொதுவான தன்மை பிரக்ஞையற்ற தன்மை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இதனடிப்படையில் தனிமனிதர்கள் தொடர்பாக அவர்களது வளர்ச்சி சிந்தனை என்பன தொடர்பாக பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும். இனிவரும் காலங்களில் அமைப்புத்துறையில் மட்டுமல்ல இதற்கு அடிப்படையாகயிருக்கும் ஒவ்வொரு தனிமனிதரும் தன்னளவில் மாற்றத்தை உருவாக்குவது எந்தளவு முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள இது உதவும் என நம்புகின்றேன். ஒரு மனிதரின் வளர்ச்சியை சிந்தனையை செயற்பாடுகளை பல்வேறு காரணிகள் ஆதிக்கம் செய்து கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக ஒரு மனிதரது உடலினுள்; இருக்கின்ற தன்மைகள், ஊளவியல், பெற்றோரின் உயிரணுக்கள், குடும்ப பாரம்பரியங்கள், பரம்பரைகள் என பல்வேறுவகையான உடல் ஊளவியல் சார்ந்த காரணிகளையும் மற்றும் சமயம், கல்வி, சுற்றுச் சுழல் என சமூக புறக் காரணிகளையும்; குறிப்படலாம். இவ்வாறான காரணிகள் எல்லாம் ஒரு தனி மனிதர் மேல் அத் தனி மனிதரின் விருப்பமின்றி மட்டுமல்ல அம் மனிதரின் சுய-பிரக்ஞையின்றியே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வாறனா ஆதிக்கங்கள் தொடர்பாக, ஒருவர் பிரக்ஞையற்று இருக்கும் பொழுது, அம் மனிதரது சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் இந்த ஆதிக்கத்தின் தன்மைகள் பிரக்ஞையின்றி வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது. உதாரணமாக பிரபாகரன் மற்றும் தமிழ் விடுதலை இயக்கங்களினதும் பிற அரசியற் கட்சிகளினதும் தலைவர்களும் இந்தடிப்படைகளிலையே தமது செயற்பாடுகளை பிரக்ஞையின்றியே முன்னெடுத்தனர். இன்றைய தலைவர்களும் அவ்வாறே தொடர்ந்தும் செயற்படுகின்றனர். அதாவது சமூகத்தில் ஏற்கனவே ஆதிக்கத்திலிருக்கும் சித்தாந்தத்தையே பிரதிநிதித்துவப்படுத்துவதால் பிற்போக்குத்தனமாக செயற்பாடுகளையும் பக்கச் சார்பான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றனர்.

இதற்கு மாறாக மறுபுறம் ஒருவர் தானே தேடி கற்கும் சிந்தனைகள் (உதாரணமாக மார்க்ஸிசம்) இறுதியில் அவரையே மத சிந்தனைகள் போல் ஆதிக்கம் செய்கின்றன. இம் மனிதர்களுக்கு இருக்கும் தமது சிந்தனைகளின் மீதான விருப்பமும் நம்பிக்கையும் இச் சிந்தனைகளிலிருந்து விடுபடாதவாறும் புதியனவற்றை தேடாதவாறும் பார்க்காதவாறும் ஒருவகையில் கட்டிப்போட்டுவிடுகின்றன. ஆகவே நல்ல சிந்தனைகளை அல்லது முன்னேறிய கோட்பாடுகளை சமூக அக்கறையுள்ள மனிதர்கள் கொண்டிருந்தபோதும் இவர்களும் முன்னவர்கள் போல் பிரக்ஞையற்றே செயற்படுகின்றனர். உதாரணமாக சண்முகதாசன் மற்றும் விஜய வீர போன்றவர்கள் தமது கோட்பாட்டின் மீது இருந்த நம்பிக்கையினால் தமிழ் பேசும் மனிதர்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறையை புரிந்துகொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களுடைய சித்தாந்தங்கள் அவர்களை தடுத்திருக்கின்றன. இதானால் தமது நம்பிக்கைக்குரிய கோட்பாட்டிற்கமைய சகல அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ;அமைப்பாகி போராடுவதற்குப் பதிலாக தமிழ் பேசும் மனிதர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை இனவாத முத்திரை குத்தி புறம்தள்ளினர்;. இவ்வாறன தம் மீதான சித்தாந்த ஆதிக்கத்திலிருந்து அதன் கட்டுப்பாடுகளிலிருந்தும் முன்னையவர்களும் பின்னயவர்களும் நிச்சயமாக விடுதலை பெறலாம். ஏனனில் இருவருக்கும் சமூகம் மீதான அக்கறையும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற அவர்களது உணர்வும் அர்ப்பணிப்பும் முழுமையானதும் உண்மையானதும் மட்டுமல்ல சந்தேகத்திற்கும ;அப்பாற்பட்டது. குறிப்பாக பின்னையவர்கள் விடுதலை பெறுவதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது. காரணம் வாழுகின்ற சமூகம் சமத்துவற்ற சிலரது நன்மைக்காக இலாபத்தற்காக பலரை சுரண்டி வாழுகின்;ற ஒரு சமூகம் என்ற சுய புரிதலும் மற்றும் சமூக மாற்றம் நடைபெறவேண்டும் என்ற உணர்வும் அதற்காக சுய புரிதலுடன் அமைப்பாகி செயற்படும் தன்மையும் அக்கறையும் இருக்கின்றமையாகும். இவ்வாறன மனிதர்களிடம் மிக்பெரும் குறையாக இருப்பது பிரக்ஞையற்ற தன்மையே என்றால் மிகையல்ல.

ஆகவே இந்தப பிரக்ஞையற்ற மனிதர்களால் உருவாக்கப்படும் கட்சியும் அதனது அமைப்புத்துறையும் எந்தடிப்படையில் இருக்கும் என்பதையும் எவ்வாறு இயங்கும் என்பதையும் நாம் எளிமையாக புரிந்துகொள்ளலாம். சுமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் விடுதலைக்காகவும் கடந்தகாலங்களில் உருவான கட்சியின் அமைப்புத்துறைகள் அவை முன்னேறிய கோட்பாடுகளினால் உருவானவையாக இருந்தபோதும் அல்லது தன்னியல்பு செயற்பாடுகளினால் உருவானபோதும் அல்லது எதிர்வினை செயற்பாடுகளால் உருவானபோதும்; இவற்றுக்கு எல்லாம் ஒரு பொதுவான தன்மை ஒன்று உள்ளது. இவை அனைத்தும் அதிகாரப்படி அமைப்பு முறைக்கு அமையவே கட்டமைக்கப்பட்டுவந்திருக்கின்றன அல்லது வருகின்றன. இந்த அதிகாரத்துவபடி முறைகளானது; நிலப்பிரபுத்துவ அல்லது அரசாட்சி காலத்து கட்டமைப்புகளையும் தன்மைகளையும் அதன் கூறுகளையும் கொண்டியங்குகின்றன எனக் கூறலாம். அதாவது அதிகாரப் படிமுறைகள் கொண்ட அமைப்பாகவே இயங்குகின்றன. இதற்கு வழிகாட்டியாக நமது சமூக அமைப்பில் காணப்படும் பல்வேறு நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, சமயம், அரசாங்கம் என் ஒவ்வொன்றும் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆணாதிக்க அதிகாரத்துவபடி முறைகளினடிப்படையிலையே கட்டமைக்கப்பட்டு இயங்குகின்றன. புலிகள் மற்றும் பிற தமிழ் விடுதலை இயக்கங்கள் போன்று தன்னியல்பாக தோன்றிய அமைப்புகளில் தனிமனிதர்கள் குறிப்பாக ஆண்கள் மட்;டுமே தலைமைப்பதவிகளில் இருந்து அமைப்பை வழிநாடாத்துகின்றனர். முன்னேறிய கோட்பாடுகளினால் உருவான புரட்சிகர அல்லது இடதுசாரி அமைப்புகளிலோ தனிநபர்களுக்குப் பதிலாக குழு ஒன்றே தலைமைப் பொறுப்பை எடுத்து வழிநடாத்துகின்றது. இக் குழுக்களிலும் ஆண்களே அதிகமாக பெரும்பான்மையாக இருக்கின்றனர். இருப்பினும் இவ்வாறான அமைப்புகள் குழுவாக இருப்பது ஆரோக்கியமான முன்னேற்றகரமான வடிவமாக இருந்தபோதும் அக் குழுவே அதிகாரத்துவதன்மைக்கு உட்படுவது தவிர்க்கமுடியாமல் போகின்றது. இவர்களது முன்னேறிய கோட்பாட்டினால் கூட தலைமைக் குழுவானது அதிகாரமயப்படுவதை தடுக்க முடியாது போகின்றது. ஆகவே தவறு கோட்பாடுகளில் மட்டுமல்ல மனிதர்களின் பிரக்ஞையற்ற தன்மையாலும் அதனடிப்படையில் உருவாக்கப்படும் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையிலையே முன்னெடுக்கப்படுகின்ற அமைப்புத்துறையுமே இதற்கு காரணமாக அமைகின்றன எனக் கூறலாம்.

இதிலருந்து நாம் புர்pந்துகொள்ளவேண்டியது என்னவெனில் தனிமனிதரும் அமைப்புத்துறையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பினைந்து இருப்பதுடன் தனது பிரக்ஞையற்ற தன்மையால் பாரம்பரிய தன்மைகளுடனும் சமூகத்தின் பிற்போக்கு சித்தாந்தங்களுடனுமே ஊடாடியே செயற்படுகின்றது. இதிலிருந்து நாம் இன்னும் முறித்துக்கொள்ளவில்லை என்றே உணர்கின்றேன். தொடர்ந்து அமைப்புத்துறை சார்ந்து பாரம்பரிய தன்மையையே பின்பற்றுவதுடன் பேணுபாதுகாத்தும் வருகின்றோம் என்பது துரதிர்ஸ்டானது. இதிலிருந்து நம்மை முறித்துக்கொள்ள நம் ஒவ்வொருவரது பிரக்ஞையின் நிலையையும் வளர்த்து உயர்த்தவேண்டிய தேவையிருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்வதே புதிய படைப்பாற்றலுக்கும் கோட்பாட்டுருவாக்கத்திற்கும் செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.

ஒரு மனிதரின் பிரக்ஞையின்மையும் பிரக்ஞையும் எவ்வாறு அவரை செயற்படவைக்கின்றது என்பதை ஒரு உதராணம் மூலம் பார்ப்பது நல்லது. இதற்கு நமக்குப் பரிச்சயமான (குறிப்பாக ஆண்களின் அனுபவத்தின் அடிப்படையில்) காம உணர்வு தொடர்பான நமது சிந்தனையையும் சுய செயற்பாடுகளையும் உதாரணமாக எடுப்பது பொருத்தமானதாக இருக்கும். காம சக்தி உணர்வு என்பது இயற்கையானது என்பதும் அனைவருக்கும் பொதுவானது என்பதிலும் யாருக்கும் சந்தேகமிருக்காது. ஆனால் அதைப் புரிந்துகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் தான் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றோம். பொதுவாக மனிதர்கள் அனைவரும் பிரக்ஞையற்று இயந்திரத்தனமாகவே வாழ்கின்றோம் என்பதை பல இடங்களில் மீண்டும் மீண்டும் வலிறுத்திக் குறிப்பிட்டுள்ளேன். சமூக சட்டதிட்டங்களுக்கும் கலாசாரங்களுக்கும் அமைய நமது காம சக்தியை அதன் உணர்வை அடக்கி கட்டுப்படுத்தியே வாழ்கின்றோம். பிரக்ஞையற்று வாழும் ஒரு மனிதர் குறிப்பாக ஆண் காம உணர்வால் ஊந்தப்படும் பொழுது இருவழிகளில் அதைக் கையாள்கின்றார். சுமூகத்திற்கு பயமில்லாத அல்லது சாதகமான சந்தர்ப்பம் கிடைத்த ஒருவர் தன் உணர்வை திருப்தி செய்வதற்கு இன்னுமொரு நபரை குறிப்பாக பெண்ணை பலத்காரத்திற்கு உட்படுத்தலாம். இதற்கு மாறாக சமூகத்திற்குப் பயந்தவர் அல்லது சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர் அல்லது தனது சமூக கலாசாரத்தை மதிப்பவர் தனது காம உணர்வை தவறானது என கருதி அல்லது தவறான பழக்கவழக்கம் என்க் கருதி அல்லது சமூக சட்டதிட்டங்களுக்கு எதிரானது என்பதனடிப்படையில் பிரக்ஞையற்று சாதாரணமாக அடக்குவார். இந்த இரு தன்மைகளும் இந்த மனிதர்களுக்கு வேவ்வேறு வழிகளில் பாதகமான போதும் நமது சமூகங்களில் பொதுவாக காணப்படுகின்ற பழக்கவழக்கங்களாகும். இதில் முன்னயது சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்படாதாகும். புpன்னையது பரவலாக சரியான வழிமுறையாக சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சிலர் இவ்வாறன காம உணர்வால் ஊந்தப்படுதம் பொழுது பிரக்ஞையற்றோ அல்லது சுய புரிதலுடன் தனது காம உணர்வை திருப்திப் படுத்த இன்னுமொரு நபரை (இதிலும் பெரும்பாலும் பெண்களே பலிக்காடாக்கள்) மறைமுகமாக அதாவது நேரடியாக இல்லாது சுற்றிவளைத்து இசையச் செய்வார். ஆல்லது அவ்வாறு இசையக் கூடியவாறான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவார். இதுவும் நமது சமூகங்களில் ஓரளவு காணப்படுகின்றது. இவற்றிலிருந்து வேறுபட்டு ஒரளவு பிரக்ஞையுள்ள மனிதர் இவ்வாறன பிரக்ஞையற்ற செயற்பாடுகளை பின்பற்றாது மற்றவரது உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து தனது விருப்பத்தை உணர்வை மற்றவருக்கு தெரிவிக்க விளங்கப்படுத்த முயற்சிப்பார். மற்ற நபரின் முடிவு எதுவாக இருந்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் இந்த மனிதர் கொண்டிருப்பார். இவ்வாறான ஒரு பண்பாடு நமது சமூகங்களில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

முழுமையான பிரக்ஞையுள்ள மனிதர் தனது காம சக்தியை அதனால் ஏற்படும் உணர்வை அதன் உள்ளார்ந்த தன்மையையும் செயற்பாட்டையும் முழுமையாகப் உணர்ந்து புரிந்துகொண்டவராக இருப்பார்;. இதன் விளைவாக தனது பிரக்ஞை மூலம் இச் சக்தியை ஆரோக்கியமான படைப்பாற்றலாக மாற்றுவார். ஆல்லது தனது காதலருடன் உல்லாசமாக அக் கணத்தைக் குழந்தைத்தன்மையுடன் விளையாடிக் கொண்டாடுவார்;. இங்கு ஒருவரின் குழந்தைத்தன்மையான செயற்பாடு என்பதும் அல்லது ஒருவர் குழந்தைத்தனமாக செயற்படுகின்றார் என்பது இருவேறு விடயங்கள் மட்டுமல்;ல மிகக் பெரிய வித்தியாசங்களையும் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான ஒருவருக்கு மற்றவர் என்பது கட்டாயமான அவசியமான தேவையான ஒன்றல்ல. அதாவது மற்றவர் இருப்பதும் இல்லாது இருப்பதும் இரண்டும் ஒன்றே. தனது தேவைக்காக இன்பத்திற்காக மற்றவரில் தங்கியிருக்க மாட்டார். ஆகவே தனது உணர்வை திருப்தி செய்ய மற்றவரை பலாத்காரப் படுத்தவோ மறைமுகமாகப் பயன்படுத்துவோ மாட்டார். இவ்வாறான ஒரு மனிதர் ஆரோக்கிமாகவும் இன்பமாகவும் சுநத்திரமாகவும் தனது வாழ்வை வாழ்வார். இவரது செயற்பாடுகளும் ஆரோக்கியமானதாகவும் படைப்பாற்றல் கொண்டும் விளங்கும். இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அந்த மனிதரின் பிரக்ஞை என்றால் மிகையல்ல.

மேற்குறிப்பிட்டதனடிப்படையில் மனிதர்கள் பொதுவாக முதல் மூன்று பிரக்ஞை நிலைகளிலையே சாதாரணமாக சமூகங்களில் வாழ்கின்றனர். நமது நாளாந்த வாழ்வை ஒவ்வொரு நாளும் திரும்பிப்பார்த்தோமேயானால் நாம் எந்த நிலையில் வாழ்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நமது அரசியல் செயற்பாடுகளையும் இதனடிப்படையில் புரிந்துகொள்ளலாம். மேற்கூறப்பட்டது போல் பிரக்ஞையற்ற முதல் மூன்று வழிமுறைகள் மூலமே நமது அரசியல் செயற்பாடுகள் மற்றும் விடுதலைப்போராட்டங்கள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது சுதந்திர உணர்வுகளை அடக்கி அடிமையாக பிரக்ஞையற்று வாழ்வது. ஆல்லது உணர்ச்சிகளால் ஊந்தப்பட்டு மூர்க்கமாக பிரக்ஞையற்று போராடுவது. ஆல்லது பிரக்ஞையற்று வாழும் மனிதர்களை தமது நோக்கங்களுக்காகப் பிரக்ஞையற்ற மனிதர்கள் பிரக்ஞையற்று பயன்படுத்துவது. இவற்றுக்கு மாறாக மிகச் சில அரசியல் செயற்பாட்டாளர்களே ஒரளவு பிரக்ஞையுடன் செயற்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு மட்டுமே தமது அதிகாரம் பதவி என்பன தொடர்பாகவும் அதன் தாக்கங்கள் தொடர்பாகவும் ஒரளவாவது ஆழமான புரிதல் இருந்திருக்கின்றது எனலாம். இவ்வாறன அரசியல் தலைவர்கள் மிக அரிதாகவே வரலாற்றில் காணப்படுகின்றனர்.

இந்தடிப்படைகளில் நம் மீதான நமது சமூகத்தின் சிந்தாந்த ஆதிக்கத்திலிருந்தும் அதனடிப்படையிலான நமது செயற்பாடுகளிலிருந்தும் நாம் விடுதலை பெறுவது என்பது முதலில் நமது பிரக்ஞையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியது தவிர்க்கமுடியாததாக இருக்கின்றது. அதாவது ஒரு சிந்தனை ஒன்று வெளிவரும் பொழுது அது எங்கிருந்து வருகின்றது யாருடைய சிந்தனை ஏன் வருகின்றது இதனால் யாருக்கு நன்மை என்ன விதமான நன்மை என்பதை பிரக்ஞையுடன் இருக்கின்ற ஒருவர் மட்டுமே இலகுவாகவும் ஆழமாகவும் பன்முகத்தன்மையுடனும் பார்க்க முடியும் எனலாம். இவ்வாறே தனது செயற்பாட்டையும் கண்காணிக்கலாம். இவ்வாறு நமது சிந்தனை செயற்பாடுகள் தொடர்பாக ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பதும் பல்வேறு விதமான ஆரோக்கியமான நூல்களைக் கற்பதும் விவாதிப்பதும் பிற்போக்கான சமூக சிந்தாத்த ஆதிக்கம் நம்மை ஆட்கொள்ளாது பார்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு கணமும் விழிப்பாக இருப்பதற்கும் உதவும் எனலாம். இவ்வாறான பிரக்ஞையுள்ள புரிதலுடன் முன்னெடுக்கப்படும் எதிர் கால அரசியற் செயற்பாடே மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுற்று சுழலையும் பாதுகாப்பதற்குமான பங்பளிப்பை ஒரளவாவது முழுமையாக வழங்கும் எனலாம்.

பொது மனித நலன்கள் வளர்ச்சி உரிமைகள் மற்றும் சமூக மாற்றத்திற்காக செயற்பட விரும்பும் நாம், நமது பிரக்ஞையை அடுத்த கட்டத்திற்கு வளர்ப்பது தொடர்பாக செயற்பட ஆரம்பிப்போமா?

என்னைப் பொறுத்தவரை நமது அடுத்த கட்ட அரசியலுக்கான பயணம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என நான் உறுதியாக நம்புகின்றேன். இதுவே தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைக்கு மட்டுமல்ல அடக்கப்பட்ட உலக மனிதர்களின் விடுதலைக்கும் இயற்கையை பாதுகாப்பதற்கும் மனிதர்களின் ஆரோக்கியமான ஆனந்தமான நல்வாழ்வுக்கும் புதியதொரு வழியைக் காட்டும்.

நன்றி

மீராபாரதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: