Posted by: மீராபாரதி | June 17, 2010

பிரக்ஞை: மேற்குலக விஞ்(ஞானி)களின் பார்வையில்….

பிரக்ஞை: மேற்குலக விஞ்(ஞானி)களின் பார்வையில்….

இக் கட்டுரை மேற்குலக விஞ்(ஞானி)கள் பிரக்ஞை தொடர்பாக முன்வைத்த பார்வைளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பிரக்ஞையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக முன்வைத்த கருத்துக்களுக்கான ஆதாரங்களை முடிவில் இணைத்துள்ளேன். இக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இதை எழுத முயற்சிக்கின்றேன். நான் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டபடி நமது வாழ்க்கை ஒரு இயந்திரதனமாகவே நடைபெறுகின்றது. காலை எழுப்புவதிலிருந்து இரவு நித்திரை கொள்தல் வரை இப்படியே செல்கின்றது. மேலும் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு கணங்களிலும்;; நம் கவனத்தை சிந்தனையை செயற்பாடுகளையும் பல்முனை வேலைகளில குவிக்கின்றோம். உதாரணமாக உணவை உட்கொள்ளும் பொழுது மனம் வேலை அல்லது காதலி அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி சிந்திக்கும். கை சாப்பிடும் வேலையை செய்யும். மற்றக் கை இன்னுமொரு வேலையைச் செய்கின்ற அதேவேளை நமது கால்கள் வேறு வேலையை செய்யும். நமது செயற்பாடுகள் எந்த ஒரு நிலையிலும் ஒருமித்த முழுமையான செயற்பாடாக அதாவது நமது உடல் மனம் ஆன்மா என அனைத்தும் ஒன்றினைந்து செயற்படுவதில்லை. மாறாக நம் உடல் மனம் ஆன்மா என ஒவ்வொன்றும் பிரக்ஞையற்று பல திசைகளில் சிதறுண்டு செயற்படுகின்றது. மேலும் ஒவ்வொரு மனிதர்களது பல மனோவியல் மற்றும் தனிநபரது பழக்கவழக்கங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றது. இது தொடர்பாக கடந்த நூற்றாண்டில் இரண்டு முக்கியமான மேற்குலக சிந்தினையாளர்கள் சிறந்த பங்காற்றியுள்ளார்கள். ஒருவர் சிக்மன் பிரைட் (Sigmund Freud). இவர் மனிதரது பிரக்ஞை மற்றும் பிரக்ஞையின்மை தொடர்பாக ஆழமாக ஆராய்ந்துள்ளார். மற்றவர் வில்லியம் ஜெம்ஸ் (William James). இவர் மனிதரது உடல் மனம் ஆன்மா மற்றும் தன்முனைப்பு என்பன தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து கார்ல் யூங் (Carl Jung), அல்பிரட் அல்டர் (Alfred Adler), அபிராகம் மாசலோ (Abraham Maslow), கார்ல் ரொஜர்ஸ் (Carl Rogers) , பெரடிக்ஸ் பெரல்ஸ் (Friedrich Perls) மற்றும் பலர்; பிரக்ஞையின் முக்கியத்துவம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தியதுடன் பல விதமான (புறம் சார்ந்த) விஞ்ஞான ஆய்வுகளையும் செய்துள்ளனர். இவர்களில் சிலர் தங்களது ஆய்வுகளின் அடிப்படையில் மனிதர்களது உடல் மன நல ஆரோக்கியத்திற்கும் உலக அமைதிக்கும் முக்கயமானதும் அவசியமானதுமான சில காரணங்களை முன்வைத்துள்ளனர். இதன்படி மனிதர்கள் ஒவ்வொரு கணமும் எவ்வாறு பிரக்ஞையுடன் அக் கணத்தில் வாழ்வது எனவும் தன்னைப் புரிந்துகொள்வதனுடாகவும் அன்பு செலுத்துவதனுடாகவும் பிற மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் அன்பு செலுத்தவும் வழி உண்டு எனக் கூறுகின்றனர். மேலும் இவ்வாறான ஒரு வாழ்வு நிலை மனிதர்களது ஆரோக்கியமான மேன்மையான படைப்பாற்றலுக்கும் வித்திடுகின்றது என வாதிடுகின்றனர். ஆனால் மனிதர்கள் இவ்வாறு வாழமுடியாது இருப்பதற்கு பல தடைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பிரக்ஞையின்மை ஆகவே சுதந்திரமின்மை, தெளிவின்மை, தெரிவின்மை ஆகவே பொறுப்பின்மை என்பவை முக்கியமானவை. இதை மனிதர்களாகிய நாம் புர்pந்துகொண்டு நம்மை மாற்றும் பொழுது மாற்றம் என்பது நம்மில் மட்டுமல்ல சமூகத்திலும் மாற்றம் நடைபெறும் சாத்தியமுள்ளது.

மனிதர்கள் பிரக்ஞையின்மையாகவே (unconsciousness) பெரும்பாலான நேரங்களில் வாழ்கின்றனர். இந்தப் பிரக்ஞையின்மை என்பது மனிதர்களை பல்வேறு தளங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றது. பொதுவாக ஆதிகாலத்திலிருந்து ஒரு மனிதர் பிறந்ததிலிருந்து இயற்கையுடனும் மனித சமூகத்தின் ஒரு பகுதியாகவுமே வாழ்ந்து வருகின்றார். இதன் மூலும் இந்த மனிதர் இயற்கை தொடர்பான பல நம்பிக்கைகள் மற்றும் தெரியாத ஒன்றைப் பற்றிய பயம் போன்ற உணர்வுகளுடன் வளர்கின்றார். மறுபுறம் தான் வாழும் சமூகத்தின் சட்ட திட்டங்களுக்கும் ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டும் வளர்கின்றார். இவ்வாறு ஆதிகால அல்லது கடந்தகால சிந்தனை ஓட்டங்கள மற்றும் பழக்கவழக்கங்களுடனும் மற்றும் இயற்கையுடனும் சமூகத்துடனும் பிரக்ஞையற்று வாழும் மனிதரையும் அவரது எதிர்கால பரம்பரையையும் தொடர்ந்தும் ஆதிக்கம் செய்து கட்டுப்படுத்துகின்றன. இதைத்தான் சிக்மன் பிரைட்டின் சீடரான கார்ல் யூங் என்பர் கூட்டுப்பிரக்ஞையின்மை (collective unconsciousness) எனக் கூறுகின்றார். இக் கூட்டுப்பிரக்ஞையின்மையில் வரலாற்றுக்கு முந்திய கால மற்றும் கடந்த கால வரலாறுகளும் அக் கால குறியீடுகளும் நம்பிக்கைகளும் இன்றும் மனிதர்களது மனங்களை ஆதிக்கம் செலுத்துகின்றன எனக் கூறுகின்றார். ஊதராணமாக இதன் பாதிப்பை நமது கனவுகளில் காணலாம் என்கின்றார். மேலும் இன்றைய நவீன மின்சார உலகில் இரவுகளில் எல்லாம் மின்விளக்குகளால் மின்னி மின்னி அலங்கரித்துக் கொண்டிருந்தபோதும் இரவைப் பற்றிய ஒருவிதமான பயம் நம்மை அறியமால் நம்மிடம் இருக்கின்றது என்பது நல்ல ஒரு உதாரணமாகும். மேலும் இக் கூட்டுப்பிரக்;ஞையின்மையானது பல்வேறு தளங்களில் மனிதர்களை ஒன்றினைத்து வழிநடாத்துகின்றது. சர்வதேசளவில், ஒரு நாட்டின், தேசத்தின், இனத்தின், மதத்தின், சாதியின் மக்கள் கூட்டங்கள் என ஒரு குழுவாக கட்டிப்போடுவதற்கும் அவர்களை வழிநடாத்துவதற்கும் இந்தக் கூட்டுப்பிரக்ஞையின்மையே அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. இதனால்தான் மனிதர்கள் குழுவாக இருக்கும் பொழுது ஒரு விதமான பழக்கவழக்கத்தையும் தனி ஒருவராக இருக்குபொழுது எதிர்மாறான பழக்கவழக்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

தனிநபரின் பிரக்ஞையின்மையான செயற்பாடானது சமூக தளத்தில் மட்டுமின்றி தனிப்பட்ட தளத்திலும் முக்கியபங்காற்றுகின்றது. தனிமனிதர் மீதான இந்தப் பாதிப்பை சிகமன்ட்; பிரைட் Id, ego, superego எனப் பிரிக்கின்றார். இதில் Id  என்பது நமது கடந்தகால சிந்தனைகளை மட்டுமல்ல சமூக கலாசரா மற்றும் நாகரிக பண்பாட்டம்சங்களுக்கும்  பயந்து அல்லது ஒழுக்கமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதற்காக அடக்கப்பட்ட சுய விருப்பங்களையும் ஆசைகளையும் உணர்வுகளையும் கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரைட் கூறும் பொழுது மனிதர்கள் இது தொடர்பாக பிரக்ஞையற்று இருந்தாலும் மனிதர்களது உணர்வுகளையும் சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களையும் செயற்பாடுகளையும் ஆதிக்கம் செய்வதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன என்கின்றார். மறுபுறம் superego என்பது சமூகத்தின் சட்டதிட்டங்களாலும் கட்டுப்பாடுகளலும் உருவாக்கப்பட்ட இலட்சிய நோக்கத்திற்கமைய மனிதர்களிடமும் உயர்ந்த (பல சந்தர்ப்பங்களில் யதார்த்தத்திற்கு ஒவ்வொத) ஒழுக்கத்தை எதிர்பார்க்கின்றது. ஆனால் சாதாரண ஒரு மனிதர் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்கவேண்டிய தேவையிருக்கின்றது. இந்த வேலையைத்தான் ego செய்கின்றது என்கின்றார் பிரைட். அதாவது யாதார்த்தத்தில் எப்படி வாழ்வது? எதை அடக்குவது? எதை வெளிப்படுத்துவது? என்பதை மனிதர்களுக்கு உணர்த்துகின்ற தீர்மானிக்கின்ற காரணியாக ego செயற்படுகின்றது எனக் கூறுகின்றார். அதாவது சமாதானத் தூதுவராக செயற்படுகின்றது. இதன்மூலம் மனிதர்கள் தமது மிருக உணர்வுகளையும் பாமர தன்மைகளையும் கட்டுப்படுத்தும் அதேவேளை தாம் வாழும் சமூக கலாசாரங்களுக்கு ஏற்ப தமது நியாயமான உணர்வுகளையும் சிந்தனைகளையும் கூட பல சந்தர்ப்பங்கிளல் அடக்கி வாழ்கின்றனர். இவ்வாறன செயற்பாட்டிற்காக பதினொரு வகையான கட்டுப்படுத்தல்களையும் அடக்குதல்களையும் ஒவ்வொரு மனிதரும் மேற்கொள்கின்றனர் என்கின்றார் பிரைட். இதனால்தான் பிரக்ஞையின்மையானது ஒரு மனிதரின் நண்பராகவும் எதிரியாகவும் ஒரே நேரத்தில் செயற்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. இதில் ஒன்று நல்லது என்றோ மற்றது கெட்டது என்றோ யு_ங் கூறவில்லை. மாறாக ஒன்று பிரக்ஞையின் மேல் (above consciousness) தளத்தில் செயற்படுகின்றது. மற்றது பிரக்ஞையின்மையின் கீழ் (below consciousness) தளத்தில் செயற்படுகின்றது என்கின்றார்.

மனிதர்களாகிய நாம் இப் பிரக்ஞையின்மையின் செயற்பாட்டை எப்படி புரிந்து கொள்வது என்பது சிக்கலான ஒரு விடயமே. இருப்பினும் இதிலிருந்து விடுபட்டு பிரக்ஞையுடன் வாழவேண்டும் என்ற அக்கறையும் அர்ப்பணிப்பும் இருக்குமாயின் ஒரு வழியைக் கண்டுபிடிப்பது கஸ்டமான காரியமல்ல. நமக்குலிருக்கும் கடந்த கால சிந்தனைகளையும் பாமர பழக்கவழக்கங்களையும் சமூகத்தால் உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் அடக்கப்பட்ட உணர்வுகளையும் நாம் புரிந்துகொள்வதற்கு நமது மனதைக் கவனித்தல் என்பதுவே இதற்கான முதற் படி. மனம் என்பது இவ்வாறன சிந்தனைகளைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு. நமது உடலில் இயற்கையாக வரும் உணர்வை வெளிப்படுத்தலாமா இல்லையா என்பதை மனம் (mind) தன்னுள்லிருக்கின்ற ஆதிக்க சிந்தனைகள் (thoughts) மூலம் கட்டுப்படுத்துகின்றது. இதேபோல் நமது பழக்கவழக்கங்களையும் (behaviours) கட்டுப்படுத்துகின்றது. இவ்வாறுதான் இந்த சமூகமானது ஒரு மனிதரது சுயத்தை (personality) கட்டமைக்கின்றது. பிரைட்டின் ஆய்வுகளின்படி ஒரு மனிதருக்குள் நடைபெறுகின்றன உள்முரண்பாட்டு (intrapsychic conflicts)   இயக்கமே அம் மனிதரது சுயத்தைக் கட்டமைக்கின்றது என்கின்றார். இதற்கு மாறாக எரிக் எரிசன் (Erik Erikson) என்பர் தனிமனிதரின் சுயத்தை (personality))  தீர்மானிப்பதில் சமூகத்தின் பங்கு முக்கியமானது எனக் கூறுகின்றார். ஆங்கிலத்தில் சுய அடையாளம் (personality) என்பது கீரேக்க நாகரிகத்திலும் இலத்தின் மொழியிலும் பயன்படுத்தப்பட்ட முகமூடி (persona) என்ற அர்த்தத்தை சரியாகவே கொண்டுள்ளது. ஆம் நாம் நமது இயற்கையான சுயமுகத்தை மறைத்து முகமூடிகளுடன் வாழும் மனிதர்கள் என்றால் மிகையல்ல. இதிலருந்து நாம் விடுபட, எந்த சிந்தனை இவ்வாறு நம்மைக் கட்டுப்படுத்துகின்றது?  அந்த சிந்தனை யாருடையது? எங்கிருந்து வருகின்றது? என்பதை நமது மனதை அதாவது சிந்தனை ஓட்டங்களைத் தொடர்ந்தும் அதேவேளை ஆழமாக பிரக்ஞையுடன் கவனிக்கும் பொழுது புரிந்து அறிந்து கொள்ளலாம். இதற்குப் பயன்படுவதுதான் பிரக்ஞை (consciousawareness) என்ற விழிப்புணர்வு தன்மை.

பிரக்ஞை என்பதன் வரைவிலக்கணமானது மேற்குலக ஆய்வாளர்களால் இவ்வாறு சொல்லப்படுகின்றது. அதாவது நமது உலகம் உடல் உணர்வு (ஆன்மா) என்பது தொடர்பான விழிப்பாக இருப்பது பிரக்ஞை (awareness) என்கின்றர். மேலும் கடந்த காலத்தை மறப்பது என்பதை நினைவு கொள்ளல் ஒரு புறமும் மறுபுறம் நிகழ் காலத்தை மறக்காமலிருப்பது என்பதை நினைவு கொள்ளலும் எனவும் கூறுகின்றனர். இதையே பிரக்ஞை என புரிந்துகொள்ளலாம் என்கின்றனர். பிரக்ஞையின் பல்வேறு நிலைகள் தொடர்பாக பல்வேறு விளங்கங்கள் உள்ளன எனக் குறிப்பிடுகின்றார் சார்கர் (Sarkar) என்பவர். மேற்குலகில் இதை எட்டுப்  பிரிவுகளா பிரிக்கலாம் என கோலின் வில்சன் (Colin Wilson) கூறுகின்றார். இந்திய யோகிகள் எழு பிரிவுகளாக பிரிக்கலாம் என்கின்றனர்.  இதில் மனிதர்களது வாழ்வில் பொதுவாக காணப்படுவது நித்திரை கொள்ளல் கனவுகாணல் செயற்படுதல் என்ற மூன்று மட்டுமே என்கின்றர்.

மனிதர் பிரக்ஞையாக இருப்பது அல்லது அதற்குப் தன்னை பயிற்றுவிப்பது எனக் கூறுவது தான் தியானம் என அறியப்படுவது. சுசன் பிளக்மோர் (Sueson Blackmore) என்பர் தனது புத்தகமான பிரக்ஞை: ஒரு அறிமுகம் என்பதில் பிரக்ஞையாக இருப்பதால் மனிதருக்கு கிடைக்கும் முதல் நன்மை அவரது உடலுக்கானது என்கின்றார். அதாவது தன் உடல் என்ன கூறுகின்றது என்பதை உணரும் தன்மை கொண்டவராக மாறுகின்றார். குறிப்பாக தேவையில்லாத சிந்தனைகள் அந்த சிந்தனைகளுடன் சண்டை பிடிக்கமாமலே நம்மை; விட்டு அகற்றுவிடுகின்றன. இதன்மூலம் உடலுக்கு தேவையானளவு அவசியமானளவு முடிந்தளவு உணவை உட்கொண்டு செயற்படுவார். இதன் மூலம் உடல்; ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவிபுர்pகின்றது. ஆனால் இன்றைய நூகரும் கலாசாரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற, பல ஆயிரம் ருபாய்க்களை செலவு செய்து பல்வகையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு அதிக உடற்பயிற்சிகள் செய்து உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவேண்டிய தேவையில்லாது போய்விடுகின்றது. இதுபோன்று சிந்தனைகள் நம்மை ஆதிக்கம் செய்யாது நம்மை விட்டு அகலும் பொழுது நம் உணர்வுகள் தொடர்பான பிரக்ஞை ஏற்பட வாய்ப்பாகின்றது. அதாவது இக் கணத்தில் (now-here) வாழ்வது என பெரல்ஸ் குறிப்பிடுகின்றார். இங்கு மனம் ஒருமித்த ஒரு நிலையில் பிரக்ஞையுடன் இருக்கின்றது எனக் கூறலாம். இதன் அடுத்த கட்டமே அல்லது தளமே நம் ஆன்மாவுடன் ஒன்று கலக்கும் அனுபவத்தை தருகின்றது. இதுவே தன்னை அறிதல் எனும் நிலை (Self actualization) என அபிராம் மாஸ்லோ குறிப்பிடுகின்ற மனிதர்கள் அடையவிரும்புகின்ற அதியுயர் நோக்கங்களில் ஒன்று அல்லது இறுதித் தேவைகளில் ஒன்று ஆகும்.

இவ்வாறான அதியுயர் நிலையை அடைய நமது இறுதிக் காலம் வரை காத்திருக்கத்தேவையில்லை என் பிளக்மோர் குறிப்பிடுகின்றார். ஆவர் மேலும் இதுதொhடர்பாக குறிப்பிடுவது என்னவெனில் நாம் நமது செயற்பாடுகளில் முழுமையான பிரக்ஞையுடன் ஈடுபடுவோமாயின் (Total consciousness) அவ்வாறான ஒரு செயற்பாடு நம்மை பிரக்ஞை (awareness) நிலைக்கு உயர்த்தி விடுகின்றது எனகின்றார். இதையே இருநிலை (duality) கடந்து பிரபஞ்சத்துடன் ஒன்றிக்கும் ஒரு நிலை (beyond duality) என ஆன்மிகத்தில் குறிப்பிடப்படுகின்றது என்கின்றார். பிறவுன் (Barbara Brown) அவர்கள் இதை பார்ப்பவரும் (subject) பார்க்கப்படுகின்றவரும் (object) ஒன்று என உணர்கின்ற நிலை இது எனக் கூறுகின்றார். இக் கட்டான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் பிரக்ஞையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இதனால் தான் அலன் (Allan Hobson) என்பர் குறிப்பிடுகின்றார் பிரக்ஞை என்பது எல்லோருக்கும் சொந்தமானது. ஏல்லோரிலும் இருக்கின்ற ஒன்று. மேலும் பிரக்ஞை என்றால் என்ன அதன் முக்கியத்துவம் மற்றும் ஏன் நாம் பிரக்ஞை தொடர்பாக பிரக்ஞையாகவும் அக்கறையாகவும் இருக்கவேண்டும் என்ற பிரக்ஞையுடன் மனிதர்களை இயங்க ஆரம்பித்துள்ளமை இப்பொழுது நடைபெறுகின்ற ஒரு நேர்மறையான விடயமே என்கின்றார்.

இறுதியாக மனிதர்களில் ஆரோக்கியமான நல்வாழ்விற்காகவும் வளர்ச்சிக்காகவும் மற்றும் உலக சமாதானத்திற்கும் அமைதிக்காகவும் நாம் ஒவ்வொருவரும் முழுமையான பிரக்ஞையுடன் வாழவேண்டிய அவசியம் தொடர்பாக கார்ல் ரொஜர்ஸ் அவரது மகள் நத்தாலியா மற்றும் பெரல்ஸ், அபிராம் மார்ஸ்லொ என்பவர்கள் பல ஆய்வுகள் செய்து அது தொடர்பான பிரக்ஞையை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களைப் பொருத்தவரை மனிதர்கள முழுமையான பிரக்ஞை நிலையில் இருப்பதும் வாழ்வதும் குறிப்பிட்ட ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருக்கின்ற எதிர்மறை செயற்பாடுகளை நேர்மறை செயற்பாடுகளாக மாற்றுவது மட்டுமல்ல அவர்களுக்குள்லிருக்கின்ற ஆரோக்கியமான படைப்பாற்றலையும் வெளிக்கொண்டுவருகின்றது என்கின்றனர். இந்த இடத்தில் தான் பெரடிக் நீட்சே மார்ட்டின் றெய்டர், ஜோன் போல் சார்த்தார் போன்றவர்களின் இருப்பியல்; தத்துவமும்  முக்கியத்துவம் பெருகின்றது. அதாவது முழுமையாக பிரக்ஞையாக இருப்பது என்பது நம்மை உண்மைக்கு அருகாமையில் அழைத்துச் செல்லலும் அதேNவைள சுதந்திரம் (freedom) மற்றும் பொறுப்புணர்வு (responsibility) என்பவற்றின் முக்கியத்துவம் தொடர்பாகவும் வலிறுத்துகின்றனர்.

பிரக்ஞை மற்றும் பிரக்ஞையின்மை தொடர்பான பரந்த ஆழமான ஆய்வுகள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் கடந்த நூற்றாண்டிலையே குறிப்பாக சிக்மன்ட் பிரைட்டின் ஆய்வு முடிவுகளின் பின்பே பரவாலாக வெளிவர ஆரம்பித்தன. மேற்குலகில் ஐபதகரஸ் போன்றோர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இதில் அக்கறை கொண்டிருந்த போதும் அந்தப் பாதையிலான வளர்ச்சி நடைபெறவில்லை. ஆனால் ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் கௌதம சித்தாத்தர் என்ற புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இது தொடர்பான சுய தேடலிலும் தனது மதம் சாரா சுய அனுபவரீதியான அறிவை பகிர்ந்துள்ளார். மேலும் அன்றிலிருந்து இன்றைய காலம்வரை ஜே.கிர்ஸ்ணமூர்த்தி, ஓசோ போன்ற மற்றும் பலரால் பிரக்ஞை தொடர்பான மதம் சாரா அறிவு வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இந்த அறிவானது பெரும்பாலும் ஆன்மிகத்துடனும் மதத்துடனும் இணைந்து வளர்ந்ததால் மதம் சார்ந்த ஒரு வளர்ச்சியாகவே பிரக்ஞை என்பதும் தியானம் என்பது அதை அடைவதற்கான சடங்காகவும் அடையாளங் காணப்பட்டு  வந்துள்ளன. மேலும் இந்த அனுபரீதியான அறிவானது உலகத்தில் பரவாலா ஆதிக்கத்திலிருக்கும்  மேற்கத்தைய விஞ்;ஞான முறையான பரிசோதனை முறைமூலம் அறிதலிருந்து முற்றிலும் வேறுபடுவதாலும் முடிவுகளை தொட்டுணரும் வகையில் நிறுபிக்க முடியாததாலும் மேற்குலம் கூறும் விஞ்ஞான அடிப்படையில் நிறுபிக்க முடியாமையினால் அதன் முக்கியத்துவமானது குறைத்து மதிப்பிடப்பட்டே வந்துள்ளது. இது இன்றைய மனித இனத்திற்கு ஏற்பட்ட மிக துர்ப்பாக்கியமான ஒரு நிலையாகும்.   இதிலிருந்து நாம் மீள்வதற்கு முழுமையான விஞ்ஞான ஆய்வு என்பது அகம் மற்றும் புறம் என இரண்டும் சேர்ந்ததாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதும் இதன் முக்கியத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்வதுமே முதற்படியாகும். இதுவே நாம் பிரக்ஞை (awareness) மூலம் வளர்ச்சி பெறுவதற்கும் ஆரோக்கியமான சமூக மாற்றத்திற்கும் ஆரோக்கியமான பங்களிப்பை கூட்டுப் பிரக்ஞையின்மைக்கு (collective unconsciousness) மாற்றாக கூட்டுப்பிரக்ஞை (Collective Consciousness) மூலம் வழங்கலாம் என நம்பலாம்.

உணர்வோமா???????

மீராபாரதி.

Crhj;Jhiz Ehy;fs;

Allan.H. (1998). Consciousness. Calfornia/ Scientific American Library.

Blackmore. S. ( 2005). Consciousness: A Very Short Introduction. New York/ Oxford University press.

Brown.B. (1980). Super mind – The ultimate energy. Toronto/ Fitz Henry & Whiteside.

Maslow.A. (1998). http://webspace.ship.edu/cgboer/maslow.html

Morin.A. (2006). Levels of Consciousness and Self awareness: A comparison and integration of various neurocognitive views. Consciousness and cognition. Vol 15 issue 2 pages 358-371

Natalie, R. (1993). The Creative Connection: Expressive Arts as Healing
http://www.nrogers.com/pubs2.html

Sarkar.B. (2001). Consciousness – our third eye. http://www.lifepositive.com/Mind/consciousness/human-consciousness.asp.

Wilmer.H. (1994). Understandable Jung: the personal side of Jungian psychology. New York/ Chiron publication.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: