Posted by: மீராபாரதி | May 8, 2010

பிரக்ஞை-கோட்பாடு-செயற்பாடு-ஏதிர்கால அரசியல்

பிரக்ஞை-கோட்பாடு-செயற்பாடு-ஏதிர்கால அரசியல்

 

இலங்கை தமிழ் பேசும் மனிதர்களின் வாழ்வில் இன்று நான்கு விதமான அரசியல் போக்குகள் நிலவுகின்றன என பொதுவாகவும் மேலோட்டமாகவும் கூறலாம். முதலாவது இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழ் பேசும் மனிதர்கள் அரசியல் மீது ;நம்பிக்கையற்று அதிலிருந்து விலகியிருப்பது ஒரு போக்கு. இரண்டாவது அரசுடன் இணைந்து போதலுடன் இராணுவம் தமிழ் பிரதேசங்களிலிருப்பதே நல்லதும் பாதுகாப்பானதும் என நம்பும் போக்கு. மூன்றாவது போக்கு கடந்தகால செயற்பாடுகள் தவறுகள் தொடர்பாக விவாதங்கள் சுயஃவிமர்சனங்கள் என்பவற்றை முன்னெடுக்காமல் அவற்றுக்கு முகம் கொடுக்காமல் மீண்டும் தன்னியல்பான அரசியற் செயற்பாடுகளை மட்டும் முன்னெடுப்பது. நான்காவது போக்கு சுயவிமர்சனமும் செய்யலாமல் எந்தவிதமான அடிப்படை செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் எழுதுவதிலும் விவாதிப்பதிலும் பிறரை விமர்சிப்பதிலும் மட்டுமே தம் நேரத்தை வீரயம் செய்து கொண்டு இருப்பது. இறுதி இரண்டு போக்குகளும் பெரும்பான்மையாக புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களிடமும் தமிழகத்திலும் காணப்படுகின்றது. முதலாவது மூன்றாவது நான்காவது போக்குகளுக்கு இடையில் ஆழமான புரிதலும் அடிப்படையான ஒரு உடன்பாடும் ஏற்படாதுவிடின் இரண்டாவது போக்கு மேலோங்குவதற்கான சாத்தயங்கள் அதிகமாகவே இன்றைய சூழலில் இருக்கின்றன. முதலாவது போக்கை மாற்றியமைப்பதற்கு மூன்றாவதும் நான்காவது போக்குகளுக்கிடையிலையே ஆரம்ப புரிதலும் உடன்பாடும் ஏற்படவேண்டியது அவசியமான தேவையாக உள்ளது. ;இவை தொடர்பாக பார்ப்பதற்கு முன்பு கவனத்தில் எடுக்கப்படாமலிருக்கும் அடிப்படை பிரச்சனையான பிரக்ஞை மற்றும் மனிதர்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட சமூக மேல் மற்றும் கீழ் கட்டுமானம் இவற்றுக்கடையிலான உறவு என்பன தொடர்பாக பார்ப்பதே மேற்கொண்டு எந்தக் கோட்பாட்டின் சிந்தனையின் அடிப்படையில் எவ்வாறு செயற்படப்போகின்றோம் என்பதை திர்மானிப்பதற்கு உதவிபுரியும். இக் கட்டுரையயை எந்தவிதமான ஆய்வுகளின் ஆதாரங்களின் அடிப்படையிலும் இங்கு நான் முன்வைக்கவில்லை. மாறாக இதுவரை நான் கற்றவற்றிலிருந்தும் அவற்றை நான் புரிந்து கொண்டுள்ளதன் அடிப்படையிலுமே எனது கருத்தை முன்வைக்கின்றேன். ஆகவே பல கருத்துக்கள் எனக்கு சொந்தமானவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றுக்கான ஆதாரங்களை என்னால் வழங்க முடியாமைக்காக வருந்துகின்றேன். மேலும்  வீயூகம் சஞ்சிகையின் முதலாவது இதழில் வெளிந்த சில கருத்துக்களை விமர்சனத்துடன் விவாதிக்கவும் முயற்சிக்கின்றேன். ஏனனில் புலிகளை முடக்கியபின்னர் அல்லது தோற்கடித்தபின்னர் அல்லது அழித்த பின்னர் வெளிவந்த ஒரு ஆரோக்கியமான விமர்சனப்பார்வை கொண்ட சஞ்சிகை வீயூகம் என்றால் மிகையல்ல. அதேவேளை என்னைப் பற்றிய ஒரு சுயவிமர்சனத்தையும் என்னுக்குள் உணர்கின்றேன். நானும் எந்தவிதமான ஆரோக்கியமான செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் வெறும் கீபோட்எழுத்தாளராக மாறி சுய திருப்திக்காக எழுதிக்கொண்டும் விமர்சித்துக் கொண்டுமிருக்கின்றேனா என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது. ஆனாலும் எனது உள்ளுணர்வு  எழுதத்துண்டுகின்றது. ஆகவே தொடர்ந்தும் எழுதுகின்றேன். மறுபுறம் இவ்வாறு எழுதுவதை இடைநிறுத்திவிட்டு சுயமாற்றத்திற்கா தனிமனித மாற்றத்திற்கா தொடர்ந்தும் ஈடுபடு அல்லது செயற்படு எனவும் உள்ளுணர்வு கூறுகின்றது. உறுதியான முடிவு எடுக்க முடியாது என் உள்ளுணர்வின் முரண்பாட்டையும் இங்கு முன்வைக்கின்றேன். எனது எழுத்துக்களை வாசிக்கும் நண்பர்களின் கருத்துகளை இது தொடர்பாக அறியவிரும்புவதில் ஆர்வமாக இருக்கின்றேன்.

 

பிரக்ஞை என்பது என்ன?

 இந்தக் கேள்விக்கு வீயூகம் சஞ்சிகையானது பின்வருமாறு எழுதுகின்றது. பிரக்ஞை என்பது முதலில் தான் யார், எப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் செயற்படுகிறார், என்ன விதமான நடவடிக்கைகளை, என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கிறார் என்பது பற்றிய தெளிவான சிந்தனையைக் கொண்டிருப்பதாகும்.எனவும் அரசியலில் சமூகமாற்றத்திற்காக எவ்வாறு சமூகத்தை தர்க்கடிப்படையில் பகுப்பாய்வு செய்து அரசியல் திட்டம் மற்றும் மூலோபாயம் தந்திரோபாயம், ஊழியர் கொள்கைஎன்பவற்றை வரைவதே உயர்ந்தபட்ச பிரக்ஞையின் வெளிப்பாடுஎன குறிப்பிட்டுள்ளனர் (பக். 85). மேலும் மூன்றாவது பக்கத்தில் தன்னியல்புவாத செயற்பாட்டை பிரக்ஞையற்ற செயற்பாடாக சரியாக இனங்கண்டபோதும் பிரக்ஞை என்பது என்ன என்பதை சரியான அர்த்தத்தில் புரிந்துகொண்டார்களா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. ஏனனில் இவர்களைப் பொருத்தவரை தர்க்கரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்கள் கோட்பாடுகளின் அடிப்படையில் முனைவைக்கப்படும் செயல்திட்டம் என்பதே பிரக்ஞையின் அடிப்படையிலையே உருவாகின்றது என வரையறுக்கின்றனர். ஆனால் இவ்வாறன ஒரு செயற்பாட்டை மனிதர்கள் பிரக்ஞையற்றும் ஆற்றலாம் என்பதை புரிந்துகொள்வது அவசியமானது.; வீயூகம் இதைப் புரிந்துகொண்டதா என்பது சந்தேகமாகவே உள்ளது. பிரக்ஞையாக இருப்பது என்பது தான் யார்  எப்படிபட்ட நிலைமைகளின் கீழ் செயற்படுகின்றார் என்பதை பற்றிய தெளிவான சிந்தனையைக் கொண்டிருப்பதற்கும்என இவர்கள் குறிப்பிடுவதற்கும் மேலாக தான் கொண்டிருக்கும் சிந்தனை தொடர்பாகவும் பிரக்ஞையாக இருப்பது என்பதே சரியாக இருக்கும். அதாவது பிரக்ஞை என்பது தான் யார் என்ற சிந்தனையைக் கொண்டிருப்பதல்ல மாறாக தான் யார் என்பதை அனுபவத்தில் அறிவதற்கும் பயன்படும் வழியே பிரக்ஞை. அதாவது பிரக்ஞையாக இருப்பதாலும் செயற்படுவதாலும் வாழ்வதாலும் மனிதர்களுக்கு கிடைக்கப்பெறும் பல நன்மைகளில் மிக முக்கியமான ஒன்று தான் யார் என்பதை உணர்வதும் அறிவதாகும். இந்த வழியானது ஆனமீகவியலுடன் தொடர்புபட்டிருப்பதால் துரதிர்ஸ்வசமாக மத நிறுவனங்களால் கட்டுண்டுபோய்யுள்ளது. எனது புரிதலிலும் பார்வையில் பிரக்ஞை என்பது தன்னையும் தனது சிந்தனையையும் மற்றும் சுற்றுசுழலையும், எந்தவிதமான சமூக சிந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு, முழுமையாக புரிந்துகொள்வதற்கு ஒரு அடிப்படையாக நம் உடலிலும் ஊளவியலிலும் இணைந்து ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது வளர்ச்சி என்று கூறலாம். அதாவது ஒரு வகையில் இது இன்றைய மனிதரில் அவசர அவசியமாக ஏற்படவேண்டிய ஒரு அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி எனக் கூறலாம். ஏனனில் மனிதர்கள் பெரும்பாலும் நமது நாளாந்த செயற்பாடுகளை பிரக்ஞையற்று இயந்திர மனிதர்கள் போன்றே முன்னெடுக்கின்றார்கள்(றோம்). செயற்படுகின்(றார்கள்)றோம். நமது சிந்தனைகளும் இதற்கு விதிவிலக்கானவையல்ல. சிந்தனைகளின் அடிப்டையிலான செயற்பாடுகளும் செயற்பாடுகளினடிப்படையில் உருவாகும் புதிய சிந்தனைகளும் நமது பிரக்ஞைபூர்வமான தன்மையால் நடைபெறுவதில்லை. மாறாக ஏற்கனவே நமக்குள் சமூகத்தால் சுழலலால் கலாசாரத்தால் மற்றும் உடற் கூறுகளாலும் அதன் வளர்ச்சியாலும் ஊட்டப்பட்ட கருத்தாதிக்கத்தின் வழியில் பிரக்ஞையற்று ஒரு வகையான இயந்திரதன்மையுடனே அனைத்தும் நடைபெறுகின்றன. இது காதல் செய்வதில் ஆரம்பித்து, காமத்தை புரிந்துகொள்ளாது மேற்கொள்ளும் உடலுறவும், அதனுடாகா உருவாகும் குழந்தையும், கற்கும் கல்வியும், செய்யும் வேலையும், நிறைவேற்றும் பொறுப்புகளும் கடமைகளும், உறவாடும் உறவுகளும் என தொடர்ந்து இறுதியாக மனிதரின் இறப்பும் அவ்வாறே நடைபெறுகின்றது. அதாவது ஒரு மனிதரின் வாழ்வில் தொடர்புள்ள அனைத்தும் எந்தவிதமான பிரக்ஞையற்றும் இயந்திரதன்மையுடனே அவருடைய முழுவாழ்வும் நடைபெறுகின்றன என்றால் மிகையல்ல. மேலும் நாளந்த வாழ்வில்கூட காலையில் நித்திரைவிட்டு எழும்பியதிலிருந்து இரவு நித்திரைக்கு செல்லும்வரை செய்யும் கடமைகளான காலைக்கடன்கள், உண்ணல், ஊடுத்தல் என ஒவ்வொரு செயற்பாடுகளும் மற்றும் இரவு நித்திரை கொள்ளளும் அனைத்தும் பிரக்ஞையற்று இயந்திரத்னமாகவே நடைபெறுகின்றன. இவ்வாறு கடந்தகாலங்களில் வாழ்ந்த மனிதர்களால் கட்டமைக்கப்பட்டதே நாம் வாழும் சமூகத்தின் இன்றைய மேல் மற்றும் கீழ் கட்டுமானங்கள், அதன் சமூக நிறுவனங்கள் மற்றும் இவற்றுக்கிடையிலனா (உருவாக்கப்பட்ட) உறவுகள். அதேவேளை இக் கட்டுமானங்கள், உறவுகள் தொடர்பான நமது விமர்சனப் பார்வையும் மீண்டும் கடந்தகால சிந்தனையின் அடிப்படையில் பிரக்ஞையற்றே பார்க்கப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. இதனால்தான் இவ்வாறன சமூக மற்றும் தனிமனிதப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இடைக்காலத் தீர்வுகளாகவே மட்டுமே பெரும்பாலும் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதுள்ளது. ஏனனில் மீண்டும் சில ;காலங்களில் அதே பிரச்சனைகள் வேறு வழிகளில் புதிய முகங்களுடன் வருகின்றன. ஆகவே இப் பிரக்ஞையின் அடிப்படை என்னவென்று நாம்; புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது.

 

இந்த பிரபஞ்சம் அடிப்படையில் இரு கூறுகளால் ஆனது. ஓன்று பருப்பொருள் மற்றது சக்தி. இந்த இரண்டும் இல்லை எனில் இந்த பிரபஞ்சமே இல்லை எனக் கூறலாம். இதனடிப்படையில் மனிதர்களாகிய நாம் பார்ப்பவற்றை மூன்று வகையாகப் பொதுவாகப் பிரிக்கலாம். ஓன்று பொருள் அதாவது நீர் மண் கல் மலைகள் என நம் கண்ணுக்குத் தெரிவனவும் மற்றும் கண்ணுக்குத் தெரியாக வாயுக்களும். இவை அடிப்படையல் உயிரற்ற பருபொருட்களாக தெரிந்தபோதும் மனிதக் கண்ணுக்குப் புலப்படாத இயக்கம் மற்றும் சக்தி என்பவற்றைக் கொண்டு இருக்கலாம் அல்லது கொண்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இது தொடர்பான பிரக்ஞை (awareness) இந்தப் பருப்பொருட்களுக்கு இல்லை என நம்பப்படுகின்றது. அதாவது இவை பிரக்ஞையற்ற (unawareness) பருபொருட்களாகும். இரண்டாவது மிருகங்கள். இவையும் பருபொருட்கள் மற்றும் சக்தி என்பவற்றால் உருவாக்கப்பட்டவையும் மனிதக் கண்ணுக்கு புலம்படும் இயக்கத்தையும் கொண்டுள்ளன. இவற்றுக்கு தம் உருவாக்கம் தொடர்பான பிரக்ஞை (awareness) இல்லை என்றபோதும் உள்ளுணர்வுடன் கூடிய ஆனாhல் பிரக்ஞையற்ற (unconsciousness)  இயந்திரத்தனமான செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர் என நம்பப்படுகின்றது. இதுவே மிருக நிலை என்கின்றோம். மிருகங்களிலிருந்து மனிதர்கள் அடிப்படையில் வேறுபடுவது மனிதர்கள் பயன்படுத்துக்கூடியவாறு இருக்கின்ற அவர்களது பிரக்ஞையே (consciousness or awareness). ஆனால் சாதரணமாக மனிதர்கள் இதனை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. பொதுவாக அதிகூடியது ஒரு விதமான பிரக்ஞையையே (1% of consciousness or awareness) தமது வாழ்வில் பயன்படுத்தி செயற்படுகின்றனர் என அறியப்;படுகின்றது. அதாவது மனிதர்கள் குறிப்பிட்ட சில கணங்கள் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து பெரும்பாலும் தொன்னுற்றி ஒன்பது வீதம் மிருக நிலையிலையே அதாவது எந்தவிதமான கவனமுமற்று பிரக்ஞையுமற்று ( unconsciousness) இயந்திர நிலையிலையே செயற்படுகின்றனர். இதனால்தான் போலும் பல சந்தர்ப்பங்களில் மனிதர்களிடம் மிருகத்தனமான செயற்பாடுகள் சாதாரண செயற்பாடுகளாக பிரக்ஞையற்று வெளிவருகின்றன. மேலும் இந்தவிதமான மனிதரின் இயந்திர வாழ்வு நிலையில், தமது சமூக ஆதிக்க கருத்துக்களின் சித்தாந்தங்களின் தாக்கத்தற்கும் உட்படுத்தப்பட்டே இம் மனிதர்களது பார்வைகள் மற்றும் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. அதாவது நமது பார்வைகள் கருத்துக்கள் சமூக சூழல் கலாசார மற்றும் உடலியல் பாதிப்புகளுக்கு உட்பட்டு மட்டுமல்ல பிரக்ஞையின்றியும் வெளிவருகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமானது. ஆகவே இவற்றிலிருந்து வெளிவந்து எவ்வாறு முழுமையான பிரக்ஞையுடன் அதாவது நூறு வீத பிரக்ஞையுடன் அதன் முழு ஆற்றலையும் பயன்டுத்தி ஒவ்வொரு கணமும் செயற்படுவது அல்லது அவ்வாறு பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் எவ்வாறு படிப்பயாக முன்னேறுவது என்பதை புரிவதற்கு பிரக்ஞையின் பல்வேறு படிநிலைகளைப் புரிந்துகொள்வது பயனுள்ளது.

 

முதலவாது நாம் புரிந்துகொண்டுள்ள பிரக்ஞை (consciousness) என்பது தன்னிலிருந்து மற்றவற்றைப் பார்க்கும் ஒரு நிலையாகும். இவ்வாறு பார்க்கும் நிலையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது சாதராண மனிதர்களின் சாதாரணமான பிரக்ஞையற்ற பார்வை (unconsciousness view). இதன் போது ஒரு பொருளை அல்லது கருத்தை அப்படியே உள்வாங்குவது மற்றும் அதனடிப்படையில் பார்ப்பதும் மதிப்பிடுவதும் (perception and judgment) சுhதரண பழக்கமாக இருக்கின்றது.; பெரும்பாலும் சமூகத்தில் ஆதிக்கத்திலுள்ள கருத்துக்களை பொதுவாக மனிதர்கள் இவ்வாறுதான் உள்வாங்குகிவதும் வெளிப்படுத்துவதும் சர்வசாதாரண நிகழ்;வாகின்றது. இந்த மனிதர்களின் பிரக்ஞையற்ற நிலையால் அவர்களிடம் இலகுவாக ஆதிக்கத்திலுள்ளவர்களால் திணிக்கப்படுகின்றது. இவ்வாறன ஆதிக்கத்திற்கு உட்பட்ட மனிதர்களது மனமே மனிதர்கள் மீதான முழுமையான கட்டுப்பாட்டை உருவாக்கி அவர்களைப் பிரக்ஞையின்றி வாழ வழிநடாத்துகின்றது. இவர்கள் பார்ப்பது அறிவது எல்லாம் இந்த கட்டுப்பட்ட மனதினுடாகவே (conditional mind) வடிகட்டப்பட்டு நடைபெறுகின்றது. ஆகவேதான் மனிதர்கள் உண்மை நிலையை அறிவதிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றார்கள்.

 

இரண்டாவது ஒரு பொருளை நோக்கிய கவனிப்பாகும் (concentration). இது ஒரு பொருளைக் குறித்து நம் மனதை ஒருநிலைப்படுத்தும் பிரக்ஞை (conscious with concetration) எனலாம். அதாவது இங்கு பார்ப்பவரே மையப்பொருளாக இருப்பதுடன் அவரது மனமும் செயற்படுகின்றது. ஆகவே இவ்வாறு பார்ப்பவர்; அவரது சமூக கட்டமைப்பு அல்லது கட்டுப்பாட்டிற்க்கு அமைய உருவாக்கப்பட்ட தனது மனதிற்கு ஏற்பவே பார்க்கப்படும் பொருட்கள் தோன்றுகின்றன அல்லது நிர்ணயிக்கப்படுன்றன. அதாவது ஒரு மனிதரின்மனம் தான் வாழும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு அந்த மனமானது ஒரு நெறிப்படுத்தப்பட்ட கண்ணாடி ஊடகமாக (சமூகக் கண்ணாடியாகப் அறிமுகப்படுத்திய நண்பருக்கு நன்றிகள்) பயன்படுகின்றது. இதனால்தான் மனிதர்கள் ஒரு பொருளின் உண்மைத்தன்மையை பாhக்கவோ அறியவோ முடியாதிருக்கின்றனர். இதிலிருந்து சிறிது வேறுபட்டு இன்னுமொருவர் தான் பார்ப்பவற்றை கவனமாகப் (concentration)  சிறிது பிரக்ஞையுடன் (consciousness) ஆனால் தர்க்கரீதியாக (logical) பார்க்கலாம் (consciousconcentration with logic). ஆனால் இங்கும் பார்ப்பவரே மையப் பொருளாக இருக்கின்றார். அதாவது இவ்வாறன பார்வையில் எல்லாம் அடிப்படையாக இரு நிலைத்தன்மைகளே (duality) காண்ப்படுகின்றன. ஏனனில் பார்ப்பவர் மையமாக இருந்தபோதும் தன்னிலை பற்றி மறந்தவராகவே பிரக்ஞையற்றே (unawareness) பொதுவாக இருப்பார். இந்த நிலையில் காணப்படும் வேறுபாடு என்வெனில் தன்னைச் சுற்றியிருக்கும் பொருற்களை கருத்துக்களை மட்டும் தன்னிலை மறந்து விமர்சனபூர்வமாக பார்க்கின்றார் என்பதாகும். இவர்களே சமூகத்தில் காணப்படுகின்ற பெரும்பாலான சமூக விமர்சகர்கள் புரட்சியாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என்றவரையறைக்குள் வாழ்கின்ற  முன்னேறிய பிரிவினர்” “இடதுசாரிகள்” “மார்க்சியவாதிகள்” “பெரியாரிஸ்டுக்கள்எனக் கூறலாம். இப் பார்வைகளிலிருந்தெல்;லாம் வேறுபட்டது முழுமைமயாக பிரக்ஞையின் நிலையில் பார்ப்பது.

 

பிரக்ஞை என்பது பார்ப்பவரும் பார்க்கப்படும் ஒரு நிலையே பிரக்ஞை (awareness) நிலையாகும். அதாவது இரு நிலைத்தன்மைகளைக் (duality) கடந்த ஒரு நிலை. இந்த நிலையில் மனம் என்பது வெறுமையாக இருக்கும் அல்லது அவ்வாறு இருப்பதற்கு பழக்கப்படுத்தியிருக்கவேண்டும். அதாவது சமூக கட்டுப்பாடுகளைக் கடந்து இருக்கவேண்டும். இது பிரக்ஞையின் (consciousconcentration) ஆரம்ப நிலையிலிருந்த மிகவும் மாறுபட்ட ஒரு பிரக்ஞை நிலையாகும் (consciousawareness). மிகப் ஞானிகள் தத்துவஞானிகள் பெரும்படைப்பாளிகளும் மற்றும் விஞ்ஞானிகளும் தமது கவனமான நோக்குடன் (concentration)  மற்றும் பிரக்ஞையான (consciousness) செயற்பாடுகளுடன் தம் பரிசோதனைகளில் முழுமையான (total)  ஈடுபாட்டுடன் முழுநேரமும் இருப்பதானால்தான் சில கணங்களில் அவர்கள் பிரக்ஞையுடன் (awareness) தமது இரு நிலை தன்மையைத் (duality) கடந்து பிரபஞ்சத்துடன் ஒன்றினையும் பொழுது பிரபஞ்சத்தின் சில உண்மைகளை உணரவும் அறியவும் காணவும் இதன் மூலம் சிறந்த படைப்புகளையும் கண்டுபிடிப்புக்களையும் தரமுடிகின்றது.  இதனால் தான் நேர்மையான படைப்பாளிகள் அல்லது விஞ்ஞானிகள் தமது படைப்புகளுக்கோ கண்டுபிடிப்புகளுக்கோ உரிமைகோருவதில்லை. தாம் இதை வெளிப்படுத்திய ஒரு கருவி என்று மட்டுமே கூறுகின்றனர். அதனால்தான்; இவர்களது இந்தப் படைப்புகள் கண்டுபிடிப்புகள் எல்லாம் காலம் கடந்தும் வாழ்கின்றன. ஆனால் இந்த மனிதர்களுக்கு இவ்வாறு நடைபெறுவதோ அல்லது இருப்பதோ இயல்பான வாழ்வு நிலையல்ல மாறக அவாகள் வாழ்வில் சில கணங்களில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு நிலை. ஆதனால்தான் மறு கணங்களில் சாதாரண மணிதர்களாக வாழ்கின்றனர். உதாரணமாக அணுவிக் சக்தியைக் கண்டுபிடித்த நிலை இவ்வாறான இருநிலைத் தன்மையைக கடந்த நிலை எனக் கூறலாம். அதேநேரம் இந்த அணுச்சக்தியை மனித நல்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தேவைகளுக்கும் ஆரோக்கயமான படைப்பாற்றாலுக்குப் பயன்படுத்தாமல் அழிவுச் செயற்பாடான அணுகுண்டு தயாரிப்பதற்கும், தயாரித்ததை தேவையின்றிப் பயன்படுத்துவதற்கும் செயற்பட்டதும் சாதாரண மனிதரின் பிரக்ஞையற்ற இயந்திர நிலை எனலாம். விஞ்ஞானிகள் மீண்டும் விழிப்புற்று பிரக்ஞையுடன்  தமது முட்டாள்தனமான முடிவு தொடர்பாக அறிந்து புரியும் பொழுது இவர்களது கட்டுப்பாடுகளை மீறி பிரக்ஞையேயற்ற மனிதர்களான அரசியல் தலைவர்களின் கைகளுக்கு, அவர்களின் அதிகாரத்திற்கு கண்டுபிடிப்புக்களானது சென்றுவிடுகின்றது. உதாரணமாக அணுகுண்டைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லாதபோதும் தமது பிரக்ஞையற்ற செயற்பாட்டின் மூலம் அதைப் பயன்படுத்தி இரண்டு இலட்சம் மனிதர்களை ஒரே நாளிலும் பல இலட்சம் மனிதர்களை இதன் விளைவாலும் தொடர்ச்சியாக கொன்றார்கள். இவ்வாறா அழிவு செயற்பாடுகளிலிருந்து விடுபடுவதற்கு முழுமையான பிரக்ஞை நிலைக்கு நம்மை வளர்க்க, மனிதர்களாகிய நாம், நம்மை மாற்ற வேண்டும். ஆகக் குறைந்தது சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டு செயற்படும் மனிதர்களாகவது முதலில் இதில் அக்கறை செலுத்தவேண்டும். இவ்வாறன மாற்றத்தை நம்மில் ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியானதும் முழுமையான ஈடுபாடு கொண்டதுமான தியான பயிற்சி அவசியமானது என்பதை காலம் தாழ்த்தாது புரிவது நன்மையாகும்.

 

தியானம் என்பது இதுவரை சமய நிறுவனங்களால் கூறப்பட்டு மனிதர்களாலும்; நம்பப்பட்டு வந்ததுபோல் தியானம் செய்வது சாதராண குடும்பவாழ்வைத் துறந்து துறவரம் போவதோ அல்லது காமத்தை மறந்து பிரமச்சாரியத்தைக் கடைபிடிப்பதோ அல்ல. இவ்வாறு எல்லாம் கூறப்பட்டதற்கு காரணம் பிழைப்புவாத சமய நிறுவனங்களின் இருக்கின்ற அவர்களது பொய்மைகள் தொடர்பான பயமே. ஏனனில் சாதாரணமாக மனிதர்கள் தாம்பத்திய குடும்ப வாழ்வையோ காமத்தையே இலகுவாக விடமுடிவதில்லை. (ஏன் விடவேண்டும்?). ஆனால் தியானம் செய்வதாக இருந்தால் இவற்றை துறக்க வேண்டும் என மத நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வந்திருக்கின்றனர். இதனால்தான பெரும்பாலும் மனிதர்கள் தாம் வாழ்ந்து முடிந்ததாக கருதும் தமது 50 அல்லது 60 வயதுகளின் பின்பே தியானம் போன்ற விடயங்களில் அக்கறை கொள்வது மட்டுமல்ல அந்தக ;காலமே இவ்வாறான செயற்பாடுகளுக்கு பொருத்தமான வயது என நம்;புகின்றனர். மேலும் தியானத்தை தமது வாழ்வாக கொண்டவர்கள் தொடர்பாக மதிப்பும் மரியாதையும் வழங்குகின்றனர். ஆனால் தியானம் என்பது மனிதர்களின் பிரக்ஞையை படிப்படியாக அதிகரிப்பதற்கான வளர்ப்பதற்கான நாளத்தம் செய்யப்படும் ஒரு பயிற்சி முறை என்பதை மனிதர்கள் மறந்து விடுகின்றனர். மதங்களோ மறைத்து விடுகின்றது. மனிதர்கள் தாம் செய்யும் எந்த ஒரு செயற்பாட்டையும் பிரக்ஞையுடன் செய்வதற்கு முயற்சிப்பது அல்லது பழகுவதே தியானப் பயிற்;சிகள் என எளிமையாக கூறலாம். இந்;தப் பயிற்சியால் அடையப்படும் அதியுயர் நிலைதான் இருநிலையும் கடந்த (beyond duality) மற்றும் மனமும் கடந்த (beyond mind or no-mind) முழுமையான பிரக்ஞை (total awareness) நிலை எனலாம். இவ்வாறன பிரக்ஞை நிலையானது மனிதர்களது ஊடலிலும் குறிப்பாக அவர்களது முளையிலும் மற்றும் அவர்களது ஊளவியலும் ஏற்படும் அடிப்படையான ஒரு மாற்றத்தினால் உருவாவதாகும். இவ்வாறன ஒரு பிரக்ஞை நிலையை மனிதர்களாகிய நாம் அல்லது முன்னேறிய பிரிவினர்எனக் கூறுபவர்கள் அல்லது பிரக்ஞையுடன் செயற்படுகின்றோம் எழுதுகின்றோம் (நான் உட்பட) எனக் கூறுகின்றவர்கள் அடைந்தோமா (அடைந்தார்களாக) என்பதே எனது கேள்வி? இவ்வாறான அவசியமான முன்னேறிய நிலையை அடையமுடியாமலிருந்பதற்கான காரணம் என்ன? தடையாக இருப்பது என்ன?

 

பிரக்ஞையின் முக்கியத்துவத்தை அதன் உள்ளார்ந்த தன்மையை நன்மையை நாம் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பது நமது ஐரோப்பிய தர்க்கவியல் சிந்தனைமுறையின் ஆதிக்கமும் மறுபுறம்; கீழைத்தேய தத்துவத்தை அதாவது ஆன்மீகயலை மத நிறுவனங்களுடன் இணைத்து புறக்கணிப்பதுமாகும். ஐரோப்பிய தர்க்கவியல் சிந்தனையின் எதிர்மறை விளைவு என்னவெனில் நாம் பார்க்கப்படுகின்றவரை (object) எளிதில் எதிரியாக (உயிரற்ற பொருளாகா) வரையறுத்து அழிக்கலாம் அல்லது கொலை செய்யலாம். கீழைத்தேய முறையின்படி இருநிலை கடந்து பார்க்கும் பொழுது பார்ப்பவரையும் (subject) பார்க்கும்; நிலை ஏற்படுகின்றது. இதனால் பார்க்கப்படுகின்றவரை (object) எளிதில் எதிரியாக்க முடியாது. ஏனனில் தன்னிலிருந்து இன்னுமொரு மனிதரை பிரித்துப் பார்க்க முடியாத நிலை தோன்றுகின்றது. பொருள் முதல் வாதத்திற்கும் கருத்து முதல் வாதத்திற்குமான முரண்பாடு இங்கு தான் ஆரம்பிக்கின்றது. பொருள் முதல் வாதிகளோ தாம் கண்களால் காண்பதை மட்டுமே தர்க்கவீயல் அடிப்படையில் உண்மை என்கின்றனர். இதிலிருந்தே மனித உறவுகளையும் சமூக கட்டுமானங்களையும் பார்க்கின்றனர். இதற்கு மறுபுறம் கருத்துமுதல் வாதிகளோ மனிதர் கட்டமைத்த சமூகத்தின்; மேல் மற்றும் கீழ் கட்டுமானங்களை புறக்கணித்து மனிதரை இணைக்கும் அடிப்படையாக சக்தியை (அதாவது பிரபஞ்ச இயக்கம், சக்தி, மூச்சு, அல்லது பிரக்ஞையின் அடிப்படையில் மட்டுமே) பார்க்கின்றனர். இதனால்தான் இவர்கள் இருவரும் இணையமுடியாத இரு துருவங்களில் இருக்கின்றனர். ஆனால் யதார்த்தமானது இதற்கு இடைப்பட்ட ஒரு நிலையிலையே அதாவது நடுநிலையாகவே இருக்கின்றது எனலாம். அதாவது ஒரு அணுவின் நிலையைப் போன்று, ஒரு கணம் பருப்பொருளாகவும் மறு கணம் சக்தியாகவும் மாறி மாறி தோன்றுகின்ற நிலையிலையே பிரபஞ்சத்தின் அணைத்தும் இயங்குகின்றன. இதனால்தான் ஐரோப்பிய தர்க்கவியலினடிப்படையிலான தத்துவங்களால் மனித வாழ்வின் ஆழங்களை புரியமுடிவதில்லை. இந்தடிப்படையில் உருவான மார்க்ஸியம், இதனால்தான் மனித வாழ்வை மாற்றுவதற்கான முழுமையான தத்துவமாக இல்லாது இருக்கின்றது எனலாம். ஏனனில் இது சமூக கட்டுமானங்களையும் அவற்றுக்கிடையிலான உறவையும் அதாவது இயங்கியலையும் புரிந்துகொண்டளவிற்கு தனி மனிதர்களை அவர்களுக்குள் நடைபெறும் இயக்கத்தை புரிந்து கொள்ளவில்லை அல்லது அதற்கு முயற்சிக்கவில்லை. மாறாக முழுமையான சமூக மாற்றம் தனி மனிதரை மாற்றும் என நம்பிவிட்டனர். ஏனனில் அனைத்துப் பிரச்சனைக்குமான காரணம் கீழ் கட்டுமானத்திலையே இருக்கின்றது எனற நம்பிக்கைதான். இதனால்தான் வீயூகம் சஞ்சிகையானது இந்த இரண்டு வகையான ஜபொருளாதார அடித்தளம் அதாவது; கீழ்கட்டுமானம் மற்றும் சிந்தாந்தம் அரசியல் போன்ற மேல் கட்டுமானம்ஸ அம்சங்களினதும் பரஸ்பர செயற்பாட்டின் விளைவாக, இந்த இரண்டு கூறுகளதும் இயங்கியல் உறவின் விளைவாகவே சமூகத்தைப் புரிந்துகொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.எனக் கூறுகின்றது. இந்தப் புரிதலானது பாதியளவிலான ஒரு உண்மையே என்பதை மார்க்ஸயவாதிகள் இன்றுவரை புரியாததுதான் மார்க்ஸையும் மார்க்சியத்தையும் கடந்து செல்லமுடியாதவாறு தடுக்கின்றது. ஏனனில் இவர்களைப் பொருத்தவரை பொருளாதார அடித்தளத்தை அதாவது கீழ் கட்டுமானத்தையும் மேல் கட்டுமானமான சித்தாந்தம் மற்றும் அரசியலையும் வரிசைக்கிரமாமாகவோ சமாந்தரமாகவோ மாற்றுவதினுடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்புகின்றனர். இந்த நம்பிக்கையானது மார்க்ஸ் கூறியபடி, “இறந்துபோன தலைமுறையினரின் மரபு, உயிருள்ளவர்களின் மூளையை ஒரு அமுக்கு பேய்போல அமுக்கிக் கொண்டிருக்கும்” ( நன்றி ஜமாலன் முகப்பு புத்தகம்). மார்க்ஸின் கூற்றினடிப்படையில் இன்றைய மார்க்ஸியவாதிகளை மார்க்ஸின் சித்தாந்தம் அமுக்கிக்கொண்டிருக்கின்றது என கொள்வதில் தவறில்லை. இவ்வாறன பாதிப்புகளை அல்லது தடைகளை களைவதற்கு கௌதம சித்தாத்தர் (புத்தர்) தனது சீடர்களுக்கு ஒரு வழி கூறுகின்றார். அதாவது சீடர்களின் பயணப் பாதையில் தடையாக தான் (கௌதம சித்தாத்தர்) இருந்தால் தன்னை தயக்கமின்றி கொன்றுவிட்டு சீடர்கள் தங்கள் பயணத்தை தடையின்றி தொடருங்கள் என்கின்றார். புத்தர் அகிம்சையை அல்லவா போதித்தவர் பின்பு எப்படி இப்படி அவர் கூறியிருப்பார் என நாம் சிந்திக்க முனைவது இதன் நேரடி அர்த்ததினாலையே. உண்மையிலையே அவர் கூறியது தியானம் செய்யும் பொழுது சீடர்களின் மனதில் தான் வந்தாhல் என்பதாகவே நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதுபோலவே மார்க்ஸ் ஒரு ஆரம்பம் மட்டுமே. மற்றும்படி சமூகத்தின எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவர் சர்வரோக நிவாரணியல்ல. அவ்வாறு கருதுவோமாயின் மனதி முன்னேற்றத்திற்கு அவரை தடையாக நாமே உருவாக்கியவர்களாவோம் என்பதை என்று புரிந்துகொள்கின்றோமோ அன்று மார்க்ஸையும் கடந்து நாம் செல்லலாம்.

 

மார்க்ஸின் தத்துவம்; என்பது ஒரு பகுதி அல்லது அரைவாசி உண்மை என்பதை புரியத்தவறியதே இன்றுவரை தாம் விரும்புகின்ற சமூக மாற்றத்தை அடையமுடியாது மார்க்ஸியவாதிகள் தடைபட்டிருக்கின்றமைக்கு காரணமாக கூறலாம். ஏனனில் இந்த கீழ் கட்டுமானங்களும் மேல் கட்டுமானங்களும் தானாக உருவாகவில்லையே. மாறாக வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய இக் கட்டுமானங்களை வாழுகின்ற மனிதர்கள் காலோட்டத்திற்கு ஏற்ப சமரசங்கள் செய்துகொண்டு பாதுகாத்தும் கொண்டும் பயன்படுத்துகின்றனர். ஆகவே மனிதர்களும் அவர்களது ஊளவியலும் இந்த இரு கூறுகளிலும் அதாவது மேல் மற்றும் கீழ் கட்டுமானங்களில் முக்கியமான தாக்கத்தைத் தொடர்ந்தும் ஆற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே நாம் புரிந்துகொள்ளவேண்டியது சமூமாற்றமானது மூன்று தளங்களில் நடைபெறவேண்டும் என்பதே. முதலாவது தனிமனிதரளவிலும் இரண்டாவதும் கீழ் கட்டுமானம் மூன்றாவதும் மேல் கட்டுமானம் என்றப்படையில் நடைபெறவேண்டியது எனலாம். தனிமனிதரளவில் நடைபெறவேண்டிய மாற்றமானது மற்ற இரண்டுக்கும் சமாந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறவேண்டிய ஒன்று எனவும் கூறலாம். மற்ற இரு கட்டுமானங்களிலும் நடைபெறவேண்டிய மாற்றமானது சுழ்நிலையைப் பொருத்து ஒன்றின் பின் ஒன்றாகவோ அல்லது சமாந்தரமாகவோ நடைபெறலாம். ஆனால் சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்ற ஒவ்வொருவரும் தமது தனிமனிதரில் ஏற்படவேண்டி மாற்றத்தையும் அதற்கான தமது பங்களிப்பை வசதியாக மறந்துவிட்டு தம்மை சுற்றியிருப்பதை மாற்றுவதில் மட்டுமே அக்கறை கொள்கின்றனர்;. இந்தத் தவறுதான் சோவியத்தின் விழ்ச்சிக்கும் சீனாவின் கம்யூனிச முதலாளித்துவத்திற்கும்கீயூபாவின் தனிநபர் ஆதிக்கத்திற்கும் வித்திட்டது அல்லது ஒரு காரணமாகவும் இருக்கின்றதோ என சந்தேகிக்க அல்லது கேள்விகேட்கத் தோன்றுகின்றது. ஏனனில் கார்ல் மார்க்ஸ் தனிமனித மாற்றம் தொடர்பாக ஒன்றும் எழுதவில்லைபோலும். இதனால்தான் மார்க்ஸியவாதிகளுக்கும் இதில் அக்கறை இல்லாது வசதியாக மறந்துவிட்டனர் அல்லது அக்கறையின்றி இருக்கின்றனர். நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரம பாகுவிடம் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டார். தங்களது வீட்டு விலாசத்தில் சாதியின் பெயர் உள்ளதே இது தாங்கள் கூறும் சமூக மாற்றத்திற்கு எதிராக உள்ளதே என்றும். ஏன் அதை நீக்கக் கூடாது எனவும் கேட்டிருந்தார். அதற்கான பதிலாக விக்கிரமபாகு, சமூக மாற்றத்தின் பின் அதாவது சோசலிச ஆட்சியில் அதன் தேவையிருக்காது என்றும் அப்பொழுது அது நீக்கப்படும் எனவும் ஆனால் தற்பொழுது கடிதப் போக்குவரத்துக்கு இலகுவானதாக பிரபல்யமான அடையாளமாக இருப்பதால் அது தேவைப்படுகின்றது என அர்த்தமில்லாத ஓரு பதிலை அளித்திருந்தார். இப்படித்தான் பல மார்க்ஸிய கம்யூனிஸவாதிகளின் தத்துவமும் பொதுவாழ்வும் தனிப்பட்ட வாழ்வும் வேறுவேரானதாகவே இருந்துவந்தருக்கின்றது. இவ்வாறனா இரட்டைவாழ்வு முறை எந்தவகையிலும் சமூக மாற்றத்திற்கு வழிகோலாதது மட்டுமல்ல இவ்வாறன செயற்பாட்டாளர்கள் தாம் முன்மாதிரியாக இருந்து வாழாமல் செயற்படாமல் இருப்பது பொது மனிதர்களிடம் நம்பிக்கையீனத்தையே தொடர்ந்தும் உருவாக்கும். ஆகவே சமூக மாற்றத்திற்காக செயற்படும் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாழ்விலும் தாம் கூறும் இலட்சிய சமூகத்தின் அடிப்படைகளுக்கு ஏற்ப குறைந்தபட்ச மாற்றத்தையாவது ஏற்படுத்துவதே பொது மனிதர்களுக்கு அவர்களது கூற்றுகள் மற்றும் செயற்பாட்டுக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.

 

இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டே எதிர்காலத்திற்கான கோட்பாட்டை நாம் உருவாக்கவேண்டும். ஆனால் வீயூகம் சஞ்சிகை அல்லது அதில் செயற்படும் மனிதர்கள் அவ்வாறான ஒரு நம்பிக்கையைத் தரவில்லை என்றே உணர்கின்றேன். புலிகள் இயக்கத்தை அதன் தலைவரை விமர்ச்சித்தளவிற்கு (இது தேவையான போதும்) தாம் சார்ந்து இயங்கிய கடந்தகால அமைப்புகளையோ தம்மையோ விரிவாக தமது முதல் சஞ்சிகையிலையே விமர்சிக்காமல் விட்டது அவர்களது நேர்;மையின்மையே காட்டுகின்றது எனலாம். இதற்கு காரணம் நான் மேலே குறிப்பிட்ட பிரக்ஞையின்மையே. அதாவது தன்னைத்தவிர்த்து தனக்கு வெளியிலிருக்கும் பிற அனைத்தையும் மட்டுமே கவனத்தில் கொள்வதுதான் காரணம். கோட்பாடு அவசியமானதுதான். ஆனால் இக் கோட்பாடின் அடிப்படையானது மரபுவாதபோக்கிலிருந்து தன்னை முறித்துக்கொண்டால் மட்டுமே புதிய ஒரு பாதை நோக்கி பயணிக்க முடியும். மேலும் செயற்பாட்டில் அக்கறையின்றி கோட்பாட்டில் மட்டும் அக்கறைகொள்வது புலிகளின் அல்லது அவர்களின் பெயரால் முன்னெடுக்கப்படும் நாடுகடந்த அரசாங்கம் போன்ற செயற்பாடுகளினால் அடிபட்டுபோகும் அல்லது பயன்படுத்ப்படும் சாத்தியங்களையே அதிகம் ஏற்படுத்தும் எனலாம். கடந்தகாலங்களில் வீயூகம் சஞ்சிகை செயற்பாட்டாளர்கள் தீப்பொறியாகவும் மற்றும் உயிர்ப்பு சஞ்சிகையினுடாகவும் கோட்பாட்டுக்கான செயற்பாட்டுத் தளத்தில் மட்டுமே தமது பத்து வருடங்களிலும் அக்கறை செலுத்தியிருந்தனர். அதாவது இவர்களது செயற்பாடு என்பது கோட்பாட்டு உருவாக்கமாக மட்டுமே இருந்தது. இவர்கள் அமைப்புத்துறைசார்ந்தும் மற்றும் நடைமுறை அரசியலிலும் பங்குபற்றாமல் பங்களிக்காமல் செயற்படாமல் இருந்ததன் விளைவே கட்சியாக பரிணமித்தபின் இரு வருடங்கள் கூட தாக்குபிடிக்க முடியாமல் கட்சி(யை) கலைந்(த்)த துன்பகரமான நிகழ்வு நிகழ்ந்தது. இதற்கு காரணமாக அமைப்புத்துறைசார்ந்ததும் மற்றும் நிகழ்கால அரசியல் சார்ந்தும் நடைமுறை செயற்பாட்டு அனுபவமின்மை என கூறுவது தவறல்ல என்றே உணர்கின்றேன். ஏனனில் கோட்பாடும் செயற்பாடும் சமாந்தரமாக அல்லது ஆகக் குறைந்தது ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி பயணம் செய்யயும் பொழுதே நமது கோட்பாடுகள் சரியா என அனுபவத்தில் பரிட்சித்துப்பார்த்து அதற்குரிய மாற்றங்களை உருவாக்கி பழைய கோட்பாடுகளை சரிசெய்து அல்லது தேவையான புதிய கோட்பாடுகளை   உருவாக்கிக் கொண்டு முன்செல்லவும்  தொடர்ந்துசெயற்படவும் வழிசெய்யும். ஆனால் இப்பொழுதும் கடந்தகால தவறையே வீயூகம் செய்கின்றது என எண்ணவேண்டியுள்ளது. இது புலிகளின் அல்லது அவர்களது சிந்தனையின் அடிப்படையில் செயற்படும் அரசியலும் மற்றும் அரசாங்க சார்பு அமைப்புகள் பலமடைவதற்குமே மீண்டும் வழிசமைக்கும். குறிப்பாக நாடுகடந்த அரசாங்கம் விடுதலையை பெற்றுத்தருமா இல்லையா என்பது கேள்விகுறியானபோதும் அவர்கள் தொடர்ந்து அரசியல் ரீதியில் இவ்வாறு செயற்படுவதற்கான ஒரு சட்ட ரீதியான அங்கீகாரத்தை ஆகக் குறைந்தது சர்வதே அளவிலாவது பெற்றுக்கொடுக்கலாம். இவர்களது இவ்வாறன செயற்பாடுகள் மனித விடுதi;லயை சமூக மாற்றத்தை உ;ண்மையாக நேசிப்பவர்களுக்கு பாதகமானதே. ஆகவே கோட்பாட்டுடன் எழுதுவதுடன் விமர்சிப்பதுடன் பின்னுட்டங்கள் இடுவதுடன் மட்டும் நிற்காது, இவற்றை மட்டுமே தமது செயற்பாடுகளாக வரையறுத்துக் கொள்ளாது இவற்றுக்குச் சமாந்தரமாக சமூக மற்றும் அரசியல் தளத்தில் செயற்படுவதற்கான தேவையை உணரந்து செயற்படவேண்டிய தேவை இன்று இருக்கின்றது. அதற்கான முக்கியமான ஒரு காலகட்டம் இது எனலாம்.

 

வீயூகம் சஞ்சிகைக்கு  எதிர்மாறாக கோட்பாடு தொடர்பான எந்தவிதமான அக்கறையுமின்றி நாம் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் ஏற்பதை ஏற்கமுடியாது, வெட்கத்தில், அவமானத்தில், எதிர்வினையாற்றுகின்றனர் குறிப்பாக புகலிடத்தில் வாழும் புலி ஆதரவாளர்கள். இவர்களது பல செயற்பாடுகள் மிகச் சிறுபிள்ளைத்தனமானது. இவர்களுக்கு உண்மையிலையே விடுதலையில் சுதந்திரத்தில் மற்றும் சமூக மாற்றத்;தில் அக்கறை இருக்குமாயின் தமது கடந்த கால அதாவது 30 வருட கால செயற்பாடுகளையும் கடுமையாகவும் முழுமையாகவும் எந்தவிதமான பக்க சார்புமன்றி தலைமைகள் உட்பட சுயவிமர்சனத்திற்கும் மற்றும் விமர்சனத்திற்கும் உட்படுத்த(ப்பட)வேண்டும். போராட்டத்தை தோல்விக்கு கொண்டு சென்றதற்கான காரணங்களை அறிந்து தமிழ் பேசும் மனிதர்கள் முன் வைக்கவேண்டும். தமது தவறுகளை பொது மனிதர்கள் முன் முன்வைத்து அதற்காக பொது மன்னிப்பு கேட்கவேண்டும். குறிப்பாக அரசியற் தவறுகளுக்கும் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தமைக்கும் மற்றும் குழந்தைப் போராளிகளை உருவாக்கியமைக்கும், பொது மனிதர்களுக்கு எதிரான மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாட்டிற்கும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா என்பதை தமிழ் பேசும் மனிதர்களுக்கு உத்தியோகபூர்வமாக பிரிவடைந்திருக்கும் புலிகளின் ஒவ்வொரு பகுதியும் அறிவிக்கவேண்டும். கிளிநொச்சி பிடிபட்டபோதே இராணுவத்தோல்வியை நோக்கிச் செல்கின்றோம் என்பதை புரியாது தொடர்ந்தும் அரசியல் தோல்வியை நோக்கி போராட்டத்தை கொண்டு சென்றதற்கும், மேலும் பொது மனிதர்களையும் இழுத்துக்கொண்டு கடற்கரை வெளிநோக்கி சென்ற தமது தவறானதும் முட்டாள்தனமான தந்திரோபயாத்திற்கான விளக்கங்களை தமிழ் பேசும் மனிதர்கள் முன்வைக்கவேண்டும். இப்படி எல்லாம் ஏன் நடந்தது என்பதை அறிந்தர்வர்கள் பலர் தளத்திலும் புலத்திலும் இருக்கின்றனர். ஆனால் அதைக் கூறுவதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. இதனால்தான் தமது தவறுகளை மறைப்பதற்காக நாடு கடந்த அரசாங்கம் என்றும் வட்டுக்கோட்டை தீhமானத்தை மீள வலியுத்தல் என்றும் அல்லது மீள் உறுதிப்படுத்தல் என்றும் பல்வேறு செயற்பாடுகளையும் தமது தவறுகளை மறைப்பதற்கும் அவற்றிலிருந்து தமிழ் பேசும் மனிதர்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும்  முன்னெடுக்கின்றனர். அதாவது மனிதர்களை மீண்டும் மீண்டும் தவறாக வழிநடாத்துகின்றார்கள் என்றே தோன்றுகின்றது. மேலும் புகலிட மனிதர்களிடம் பெற்ற பணத்திற்கு எந்த பதிலும் கூறாது பொறுப்பற்று இருப்பதுடன் புதிய செயற்பாடுகளுக்காக எந்தவிதமான பொறுப்புணர்வுமின்றி மனிதர்களிடம் பணம் கேட்கின்றனர். புகலிடங்களில் பொதுமனிதர்கள் எழுச்சிக்கொண்டு வீதிகளில் இறங்கிய இக் கட்டான பிரச்சனையான காலகட்டங்களில் அவர்களை சரியாக வழிநாடாத்தாது ஓழிந்து கொண்டது மட்டுமல்ல ஈழத்தில் வாழும் மனிதர்களைப் பற்றி எந்த அக்கறையுமின்றி புலிக்கொடிகளை ஏந்தி புலித்தலைவர்களுக்காக குறிப்பாக தமது தேசிய தலைவரை மட்டும் காப்பாற்ற புகலிட மனிதர்களை துண்டியது எந்தவகையில் நியாயமானது. இப்படி ஈழத்தில் வாழும் மற்றும் புகலிடங்களில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களது பல கேள்விகளுக்கு புலிகளைச் சேர்ந்தவர்கள் உண்மையான நேர்மையான பதிலை அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இவர்களது நாடுகடந்த அரசாங்கம் சர்வதேச உலகத்தின் ஐனநாயக அரசியலில் ஒரு முன்மாதிரியாக இருந்து ஒரு தாக்கத்தை கூட எதிர்கால அரசியலில் ஏற்படுத்தலாம். ஆனால் தமிழ் பேசும் குறிப்பாக ஈழத்தில் வாழும் பொதுமனிதர்களது வாழ்வில் மாற்றம் ஏற்படுமா? மாற்றத்தை ஏற்படுத்துமா? சமூக மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்குமா? என்பதெல்லாம் பதிலில்லாத கேள்விகள்.  மேலும் நாடுகடந்த அராசங்கத்தில் பெண்களதும் இளையவர்களதும் பிரதிநிதித்துவம் 20 வீதமே. இது அடிப்படையில் பராம்பரிய ஆணாதிக்கத்தின் அடிப்படையிலான பிரதிநிதித்துவமே. ஆகவே இவர்களது இந்த பதிலிள்ளாத கேள்விகளாலும் பொறுப்பற்ற தன்மையாலும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட கோட்பாட்டுத்தளத்தில் கட்சி ஒன்று உருவாக்கப்படவேண்டிய தேவையிருக்கின்றது. நாடு கடந்த அரசாங்கம் தவிர்க்க முடியாத யதார்த்தமாக எதிர்காலத்தில் நிலவும்; பொழுது அதில் இக் கட்சியானது பங்குபற்றுவதன் மூலம் பிற்போக்கு சக்திகளதும் மற்றும் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் செயற்படும் சக்திகளிடமிருந்தும் பொது மனிதர்களை விடுவிக்க முயற்சிக்கலாம்.  இவ்வாறன புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக ஏற்கனவே சிறு கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன்.

 

 

புதிய கட்சி அல்லது அமைப்பானது உலகம் தழுவியளவில் வாழுகின்ற தமிழ் பேசும் மனிதர்களை பிரதிநிதித்துகின்;ற அவர்களது மனித நலன்களிலும் முன்னேற்றத்திலும் அவர்கள் வாழும் சுழலலில் அக்கறையும் கொண்ட பொதுவான ஒரு கட்சியாக இருக்கவேண்டும். சுமூக மாற்றத்தை பல தளங்களில் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பரந்துபட்ட பன்முகத்தன்மைவாய்ந்த கோட்பாட்டை உருவாக்கவேண்டும். குறிப்பாக மார்க்ஸியம் பெண்ணியம் தலித்தியம் சுழலியல் (மதம்சார) ஆன்மீகவியல்…..என பரந்துபட்ட விரிவான பன்முகத் தன்மையைக் கொண்டதாக இருக்கவேண்டும். அங்கத்துவத்தில் பிரதிநிதித்துவத்தில் பெண்களை சரிசமமாக் கொண்ட அதாவது 50க்கு 50 வீதமாகக் கொண்ட செயற்பாட்டுக்குழுக்கள் உருவாக்கப்படவேண்டும். குறிப்பிட்ட ஒவ்n;வாரு தலைமுறைக்கும் தேவையான முறையான பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும். இவ்வாறன அடிப்படைகளில் உருவாக்கப்படும் தலைமைக் குழுக்கள் தாம் வாழும் நாடுகளில் கட்சியின் பொதுப் பெயருடன் குறிப்பிட்ட நாட்டின் பெயரையும் இணைத்து கட்சியை அல்லது அமைப்பை சட்டரீதியாகப் பதிவு செய்யலாம். இலங்கை இந்தியா மற்றும் ;புலம் பெயர் நாடுகளில் இவ்வாறான கட்சி அல்லது அமைப்பை பதிவு செய்து அந்தந்த நாடுகளின் அரசியலில் பங்குபற்றி அதன் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை பொதுவான பிரச்சனைகளுக்கா அனைவரும் இணைந்து குரல் கொடுத்தும செயற்படலாம்.

 

சுமூகத்தில் அக்கறைகொண்டவர்களும் சமூகமாற்றத்திற்காக ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புகின்றவர்களும் பிரக்ஞையுடன் உடனடியாக செயற்படவேண்டிய காலமிது. அல்லது சீமானின் தலைமையில் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கங்களைப் போன்றவையும் மற்றும் எதிர்வினை மற்றும் எதிர்ப்பு செயற்பாடாக முன்னெடுக்கப்டும் நாடு கடந்த அரசாங்கம் போன்றவையும் தமிழ் பேசும் மனிதர்களையும் அவர்களது நியாயமான போராட்டங்களையும் மீண்டும் மீண்டும் தவறான வழியில் கொண்டுசெல்வதை யாராலும் தடுக்கமுடியாது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு பிரக்ஞை எவ்வளவு முக்கியமானது மற்றும் அது என்ன என்றும் இக் கட்டுரையில் விளக்க முயன்றுள்ளேன். தொடர்ந்தும் அமைப்புத்துறை, கோட்பாடுகள், மற்றும் செயற்பாடுகள் என்பன தொடர்பாக வீயூகம் சஞ்சிகையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்  எனது பார்வையை இனிவரும் கட்டுரைகளில் முன்வைக்க முயற்சிக்கின்றேன். இவற்றை அறிவதற்கு முதல் பிரக்ஞை பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளோமா? நமது பிரக்ஞையின் நிலையை அதிகரிக்க வளர்க்க முயற்சிக்கவேண்டும். முயற்சிப்போமா?

நன்றி

மீராபாரதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: